அந்த பிளாஸ்டிக் டம்ளர்
விருந்தொன்றில் நீர் பருக
உபயோகிக்கப்பட்டது.
பிறகு கொஞ்சம் தேநீர்.
மறைவிடத்தில் கழுவப்பட்டு
மறுபடியும் நீர், தேநீர், பாயசமென
சுழன்ற அது எச்சிலைகளோடு எறியப்பட்டது.
விளையாட்டு சிறுவர்கள்
தன் சிறுநீர் துளிகளை
அதில் வழியச் செய்தனர்.
காற்றின் கருணையால்
பெருநகர வீதிகளை கடந்து
காடு மலையென அலைந்து திரிந்தது
கொடும் பசிகொண்ட நாயொன்று
அதை முகர்ந்து பார்த்துவிட்டுப் போனது.
மரணமிலா இழிவாழ்வால்
துவண்டிருந்த அதை,
அதை போலவே காடுகளில்
அலைந்து திரியும்
சற்றேறக் குறைய பைத்தியம் எனப்பட்ட
ஒருவன் தொட்டு தூக்கினான்
சுனைநீரால் நீராட்டினான்.
அவனால் கொஞ்சம்
மதுரசம் ஊற்றப்பெற்ற அது
சாபம் நீங்கி
பொற்கலயமானது.
–இசை, கணையாழியில் இருந்து.