திண்ணையில் திரு.செல்வன் ‘இந்து வளர்ச்சி விகிதத்தை அழித்த மன்மோகன் சிங்’ என்றகட்டுரை எழுதியிருந்தார், தலைப்பைப் பார்த்ததும் எதோ வீண் பழி கட்டுரை என்றே நினைத்து,படிக்கத் துவங்கிய எனக்கு, சில பல ஆச்சரியங்கள் காத்திருந்தன. இந்திய அரசியல் தெரியாதஎனக்கு, இவை ஆச்சரியங்கள் தாம். இதோ ஆச்சரியங்கள் சில,
1. 1960-1992 வரை ஒரே வடிவமைப்பில் வந்த அம்பாசிடர் கார். 32 ஆண்டுகள், பல நாடுகள் ஆட்டோமொபைல் துறையில் அசுர வளர்ச்சி அடைந்த இந்த காலகட்டத்தில், நாம் ஒரே மாடல் கார்களையே செய்து கொண்டிருந்திருக்கிறோம்.
2. உணவுப் பஞ்சத்தை தீர்க்க உணவு இறக்குமதி செய்வதை விட்டு, மக்களை திங்கட்கிழமை தோறும் உபவாசம் இருக்கச்சொன்ன, பிரதம மந்திரி, மொரார்ஜி தேசாய்.
3. ஆசிய விளையாட்டு போட்டியை இந்தியா நடத்த வாய்ப்பு வந்த பொழுது அதை ஆடம்பரம் என்று மறுத்த, மொரார்ஜி தேசாய்.
4. கம்ப்யூட்டர் இறக்குமதி, தொலைதொடர்பு துறையில் முன்னேற்றம் என்று ராஜீவ் அரசு முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருந்த போது, 1985 மே தினத்தை கம்ப்யூட்டர் எதிர்ப்பு தினமாக அறிவித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.
5. பெட்ரோல் இறக்குமதி செய்ய காசில்லாமல், உலகின் எந்த நிதி நிறுவனமும் கடன் தர மறுத்த பின், ரிசர்வ் வங்கியில் இருந்த தங்கத்தை பாங்க் ஆப் இங்கிலாந்திடம் அடகு வைத்து கடன் பெற்ற சந்திரசேகர் அரசு.
தங்கம் மீட்கப்பட்டதா என்று தெறியவில்லை.
சரி, இதில் இந்து வளர்ச்சி விகிதத்தை எவ்வாறு மன்மோகன் சிங் அழித்தார்?கட்டுரை பேசுகிறது,
“இந்து வளர்ச்சி விகிதம்” என குறிப்பிட காரணம் அப்போதைய கிழக்காசிய டைகர் எகானமி நாடுகளின் வளர்ச்சி விகிதம் தான்.தென்கிழக்கு ஆசிய நாடுகள்(பவுத்தம்) அசுர வேகத்தில் பாய்ந்து முன்னேறின.மேற்கத்திய நாடுகள்(கிறிஸ்துவம்) பெரும் வளர்ச்சி அடைந்தன.பெட்ரோல் காசு இஸ்லாமிய நாடுகளை பெரும் செல்வந்தர்களின் நாடாக்கியது.இப்படி அனைத்து மத நாடுகளும் அசுர வேகத்தில் முன்னேற, இந்தியா தேவ வேகத்தில்(இந்து வளர்ச்சி விகிதத்தில்) முன்னேறியதால் இவ்வளர்ச்சி விகிதத்தை “இந்து வளர்ச்சி விகிதம்” என கிண்டலாக பொருளாதார நிபுணர்கள் குறிப்பிட்டனர்.சோஷலிச செக்யூலரிஸ்டுகள் கொண்டு வந்த வளர்ச்சி விகிதம் அப்படி(##)….
1991ல் நரசிம்மராவ் ஆட்சிக்கட்டிலை ஏறினார்.மன்மோகன் சிங் நிதி அமைச்சரானார்.1992 ஜூலையில் இந்திய வரலாற்றை மாற்றி அமைத்த அதிநவீன பட்ஜெட்டை அறிமுகப்படுத்தினார்.சிங் பட்ஜெட்டை படிக்க படிக்க பங்கு சந்தை குறியிட்டு எண் விஷம் போல் ஏறியது.இடதுசாரிகளின் ரத்த அழுத்தம் அதை விட அதிக வேகத்தில் ஏறியது.சிங் பட்ஜெட்டை படித்து முடித்ததும் பொருளாதார நிபுணர்கள் ஆனந்தக்கண்ணீர் வடித்தனர்.புதிய இந்தியா 1992ல் பிறந்தது.
வளர்ச்சி அடைந்த புதிய வல்லரசின்,மக்கள் நலன் பேணும் நல்லரசின் விதைகள் அன்று மன்மோகனாலும்,நரசிம்மராவாலும் விதைக்கப்பட்டன.நாரயணமூர்த்தி,ஆசிம் பிரேம்ஜி போன்றவர்களை உருவாக்கி,பல கோடி இளைஞர்களின் வாழ்வில் ஒளிவிளக்கை ஏற்றிவைத்தார் மன்மோகன்.மன்மோகன் ஏற்றிய ஒளிவிளக்கை சிதம்பரமும்,ஜஸ்வந்த் சிங்கும்,யஷ்வந் சின்காவும் அதன் பின் மீண்டும் சிதம்பரமும் அணையாமல் கொண்டு சென்றனர்.
1992 பட்ஜட்டை படைத்ததற்காக மன்மோகனை இடதுசாரிகள் இன்னும் மன்னிக்கவில்லை.”வேலை செய்தால் தான் சம்பளம்” என்று சொல்லிவிட்டாரே என்று கோபம் அவர்களுக்கு.”உழைப்பவனுக்கு தான் உயர்வு,சுறுசுறுப்பானவனுக்கு தான் முன்னேற்றம்,சோம்பேறிக்கு ஆப்பு” போன்ற கொள்கைகளை கொண்டு வந்ததால் புதிய பொருளாதார கொள்கையே பிடிக்காமல் போய்விட்டது காம்ரேடுகளுக்கு.
‘இந்து வளர்ச்சி விகிதத்தை’ ஒழித்துக்கட்டி, நவீன இந்தியாவை படைத்த பாரதத்தின் புதிய கடவுளான மன்மோகனுக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தினாலும் நாம் அவருக்கு பட்ட நன்றிக்கடன் தீராது.”