புதுமைப்பித்தனின் ‘செல்லம்மாள்’ கதையை இன்று மறுபடியும் படித்தேன். புதுமைப்பித்தன் கதைகளை விமர்சிக்கும் தகுதி எனக்கு இருக்கிறதா இல்லையா என்பது வேறு விசயம், ஆனால் புதுமைபித்தனின் கதைகளை சிலாகிக்கும் உரிமை எனக்கு உண்டு.
புதுமைப்பித்தனின் சிறுகதைகளில் எனக்கு மிகவும் பிடித்தமான சிறுகதை இதுதான். புதுமைப்பித்தன் மிகப் பெரிய கதை சொல்லி இல்லை என்று சிலபேர் வாதிடலாம். ஆனால் அவர் மிகச்சிறந்த எழுத்தாளர். அவரைப் போல் நாட்டு நடப்புகளை கதையோடு இணைத்து சொன்னவர்கள் இல்லை என்றே சொல்லலாம். நாட்டு நடப்புகளை நையாண்டியோடும் மனவருத்தத்தோடும் மிக எளிதாகச் சொல்லிவிடுவார். சாதாரண வாசிப்பாளர் அதை கண்டுகொள்ளாமல் கடந்து செல்வதற்கும் வாய்ப்பு உள்ளது.
செல்லம்மாள் கதை மிக ஆழமான ஒரு காதல்கதை. ஒரு மிகச்சிறிய துணிக்கடையில் வேலை செய்யும் ஒருவருக்கும்நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாக கிடக்கும் அவருடைய மனைவிக்கும் இடையேயானகாதலைச் சொல்லும் கதை இது. காதலைச் சொல்லிக்கொண்டிருக்கும் பொழுது பிற விசயங்களையும்புதுமைப்பித்தன் கதை போகும் போக்கிலே நம் மனதில் விதைக்கிறார்.
கதையின் நாயகனின் வேலையைப் பற்றிச் சொல்லும் போது, வேலையை, வயிற்றுப் பிழைப்பின் நிலைகளம் என்று கூறுகிறார். வயிற்றுப் பிழைப்பின் நிலைகளம், உண்மைதான் அல்லவா?
கதையின் நாயகன் சந்தித்த வாழ்க்கையை சொல்லும் போது, ‘அவர் ஏறிய சிறுசிறு மேடுகள்யாவும் படிப்படியாக இறங்கி கொண்டே போகும் பள்ளத்தின் கோளாறுகளேயாகும்’, என்று அருமையாக கூறிவிடுகிறார்.
மேலும் ‘ஒரு கஜம், அரக்கஜம், பட்டு, பழுக்கா, சேலம், கொள்ளே காலம், பாப்லின், டுவில்-என்றெல்லாம் பம்பரமாக வயிற்றுக் கடவுளுக்கு லக்சார்ச்சனை செய்து கொண்டிருந்தார்’ என்று சொல்கிறார்.
மனைவியின் நோய்க்கு டாக்டரைக் கூப்பிடப் போன நாயகன் டாக்டர் கிடைக்காமல், டாக்டரின் வீட்டின் முன் விலாசம் எழுதி வைத்து வருகிறார். இவர் வீட்டுக்கு வந்த சில நேரத்திற்கெல்லாம் டாக்டர், நாயகனின் வீட்டைத் தேடிக் கண்டுபிடித்து வந்துவிடுகிறார். அதை, ‘ அதே சமயம் ஒரு ரிக்ஸா வந்து நின்றது. ‘ஸார், உள்ளே யார் இருக்கிறது?’என்று குரல் கொடுத்துக் கொண்டே கைப்பெட்டியும் வறுமையுமாக டாக்டர் உள்ளே வந்தார்’ என்கிறார்.
வைத்தியம் முடித்து டாட்டர் புறப்படும்பொழுது, ‘ இந்த ரிக்சாகாரனுக்கு ஒரு நாலணா கொடுங்கள்’ என்று சொல்லிக்கொண்டேவண்டியில் ஏறிக் கொண்டார். மடியில் இருந்த சில்லறை மனித மாட்டின் மடிக்கு மாறியது’ என்கிறார்.
கதையைப் படித்து விட்டு சிறிது நேரம் யோசித்துக் கொண்டிருந்தேன், அவருக்குப் பெயர் பொருத்த மாகத்தான் இருக்கிறது.