எதுவும் எழுதக்கிடைக்காவிட்டால் நான் கவிதை எழுதலாம் என்று நினைப்பதுண்டு. அதனாலேயே நான் இன்று வரை கவிதை எழுதத் தலைப்படவில்லை. ஆனால் கவிதைகள் நிறையப் படிப்பதுண்டு. படித்துவிட்டு புரியாமல் விழிப்பதும் உண்டு. பெரும்பாலும் கணையாழி, தீராநதி போன்ற இதழ்களில் வரும் கவிதைகள் என்றைக்குமே எனக்குப் புரிவதில்லை, அன்றும் சரி, இன்றும் சரி. சில சமையம் நமக்கேன் வீண் வம்பு என்று நான் விலகிச்செல்வதும் உண்டு. ஆனால் இன்று பல புதிய கவிஞர்கள் எழுதும் கவிதைகளே சில சமையங்களில் புரிவதில்லை. சில சமையம் படித்துவிட்டு நான் மிகுந்த எரிச்சல் பட்டதும் உண்டு.
அவ்வாறான வேளைகளில் ஆபத்பாந்தவனாக வருபவன் என் அறை நண்பன் மட்டுமே. அவனுக்கு புரிகிறதோ இலலையோ, சரியோ தவறோ, கவிதை சொன்ன அடுத்த நொடி எதேனும் ஒரு விளக்கம் கண்டிப்பாகத் தருவான். விளைவுகளைப் பற்றி அவன் யோசிப்பதேயில்லை, தற்கால கவிஞர்களைப் போல.
சில சமையம் அவனுக்கும் புரியாமல் போவதுண்டு. அப்பொழுதெல்லாம் கவிஞர்கள் என் நண்பனின் கடுங்கோபத்திற்கு ஆளாவார்கள். சில சமையம் மிகுந்த எரிச்சலாகி, அவன், இது என்னடா கவிதை, நான் சொல்கிறேன் பார், என்று உடனே எடுத்துவிடுவதுண்டு. பல சமையம் எனக்கு தவறு செய்து விட்டோமோ என்று தோனுவதுமுண்டு. சில சமையங்களில் சில் நல்ல சிரிக்கத்தக்க கவிதைகளை அவன் சொல்வதுமுண்டு.
ஒரு நாள் நான் எங்கோ படித்த கவிதை எத்தனை முயன்றும் அவனுக்கு புரியாமல் போகவே, கடுங்கோபத்துக்குள்ளாகி, நானும் எழுதுகிறேன் பார் என்று சபதம் போட்டு, மறுநாள் அலுவலகம் சென்று, கவனிக்க, அலுவலகம் சென்று, முதல் வேளையாக ஒரு கவிதை(??) எழுதி எனக்கு மின்னஞ்சல் அனுப்பினான். அந்த கவிதை உங்கள் பார்வைக்கு,
அரும்பு மீசை
காலைக் கதிரவன் ஜன்னல் வழியே சீண்டினான்,
அவன் எழுந்து அன்ன நடை போட்டான்,
கண்ணாடி முன் சென்று அவன் முகத்தைப் பார்த்தான்,
ஏதோ ஒரு மாற்றம் தெரிந்தது,
பூமியில் இருக்கும் சிற்றெறும்பை
வானத்தில் இருந்து பார்த்ததைப் போல்
சிறியதாய் ஏதோ சில அவன் மூக்கின் கீழே
மற்றும் உதட்டின் மேலே
தெரிந்தது ஒன்று
அவன் அதைக் கண்டதும்
நீண்ட நாள் மழைக்காக காத்திருந்த விவசாயி
பெய்த சிறு மழை துளிகளை
கண்டதை போல களிப்புற்றான்
இந்த வரியை டைப் செய்து முடிக்கும் பொழுது, ‘இது என்ன, கடவுளே! புரியாது கடவுளே!’ என்ற புதுப்பேட்டையில் வரும் பாடல் எனது மடிக் கணினியில் ஒலித்துக்கொண்டிருந்தது, முற்றும் எதிற்பாராத ஒன்று, அதற்கு நான் பொறுப்பும் அல்ல. அன்று முதல் அவனது பெயரின் முன் கவிஞர் என்ற அடை மொழியை இனைத்தே அழைக்கிறோம்.
மற்றொரு நாள் நானும், எனது நண்பர்களும் இந்தக் கவிதையைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்த பொழுது, கவிஞர், கடுங்கோபத்துக்குள்ளாகி, இன்னொரு கவிதை சொன்னார். அது,
கடலில் எழுவது கடலலை
ஆனால் அங்குள்ள
இளைஞர்கள் போடுவதோ கடலை
சபை மரியாதை கருதி இந்தக் கவிதை? சிறிது மாற்றி எழுதப்பட்டிருக்கிறது. அதற்கப்புறம் கவிஞர், அவருடைய கவிதைகளுக்கு, தனி ப்ளாக் ஆரம்பிக்கப்போவதாக,கூறியிருக்கிறார்.
மற்றொருநாள், என் இன்னொரு நண்பர் ஒருவர், எங்கள் இருவரையும், எதிரும் புதிரும், என்று குறிப்பிட, அடுத்த மைக்ரோ செக்கண்ட், ‘ஏன் எதிரும் பொதரும்னு சொல்லவேண்டியதுதானே?’ என்றான். நான் கொஞ்சம் நீண்ட தலைமுடி தற்பொழுது வைத்திருக்கிறேன் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
கவிதைகள் பிழைத்துப் போகட்டும், விட்டு விடுங்கள் கவிஞரே!