இன்று காபி இடைவேளையில்,( சரி, காபி என்பதற்கு தமிழில் என்ன? கொட்டை வடி நீர் என்பதுதான் சரியா? அதுவே சரி என்றாலும் அது வாக்கியம் மாதிரியல்லவா இருக்கிறது?) என் நண்பர் ஒருவர், இரண்டு காபிகள் வாங்கி மூன்று பேர் பகிர்ந்து கொள்ளும் யோசனையில், கஞ்சத்தனம் இல்லை, அந்தக் காபியை ஒருவர் குடிக்க முடியாது,ஒரு காலி டம்பளர் கேட்டார், அப்பொழுதுதான் எனக்கு டம்பளருக்கு தமிழில் என்ன பெயர் என்ற விபரித எண்ணம் தோன்றியது.
காபி வாங்கிக்கொண்டு நாற்காலியில் (தமிழ் பற்றி என்பதால் முடிந்தவரை தமிழில் எழுதலாம் என்று முடிவு செய்திருக்கிறேன்) வந்து அமர்ந்ததும், என் நண்பர்களிடம் நான் கேட்ட கேள்வி ‘டம்பளருக்கு தமிழில் என்ன?’ என்பது தான். என்னை விசித்திரமாகப் பார்த்த நண்பர், சற்றும் யோசிக்காமல், கிளாஸ் என்றார். கிளாஸ் என்பது ஆங்கில வார்த்தை என்பது அவருக்கு புரியாமல் போனது. எனக்கு லியோனியின் பேருந்து நிலைய நகைச்சுவை (பஸ் ஸ்டாண்ட் ஜோக்) தான் நினைவுக்கு வந்தது. அவர் பல நேரங்களில் உண்மை நிலையையே கூறியிருக்கிறார்.
என் மற்றொரு நண்பர் கிண்ணம் என்றார். கிண்ணம் என்றால் சற்று அகலமான, ஹெமிஸ்பியர் (இதற்கு தமிழில் என்ன என்று என்னுடன் தங்கியிருக்கும் மற்ற ஐந்து நபர்களிடம் கேட்டு, நிறைய யோசித்தலுக்குப் பிறகு, அரைக் கோலம் என்று கண்டுபிடித்தார், என் நண்பர் ஒருவர். மற்ற ஒரு தமிழ் வழிக் கல்வி பயின்ற நண்பருக்கு இறுது வரைப் புலப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது!) வடிவிலான ஒன்று தானே. டம்பளர் அப்படி அல்லவே. சற்றே சிலிண்டரிக்கல் வடிவமாயிற்றே. மற்றொரு நண்பர் கோப்பை என்றார். ஒரு வகையில் கோப்பையும் கிண்ணமும் ஒன்று தான். மலேசியாவில் உலகக் கோப்பையை உலகக் கிண்ணம் என்றே சொல்லுவார்கள். எங்களுக்கு ஏனோ அது சிரிப்பையே வரவலைக்கும்.
மற்றொரு நண்பர், நிறைய யோசித்து விட்டு, ஏதோ கமலஹாசன் படத்தில் வரும், அவரை எடுத்து வரச்சொல்லுவார்கள், என்னவென்று தான் வரமாட்டேன் என்கிறது, என்றவர், தீவிர சிந்தனைக்குப் பிறகு, உதட்டைப் பிதுக்கினார்.
பிறகு போனி என்று வைத்துக்கொள்ளலாம் என்றார். போனி சிலிண்டிரிக்கல் வடிவில் அல்லவா இருக்கும்? டம்பளரின் கீழ்வட்டம் மேல் வட்டத்தை விட குறுகியிருக்குமே?.
இப்படியாக எங்களது அன்றைய விவாதம், சட்டமன்றக் கூட்டத்தொடர் போன்று முடிவுக்கு வராமல் அல்லது பயன் பெறாமல் நிறுத்தப்பட்டது.இன்று வரை தடையங்கள் ஏதும் இல்லாத கொலைக்கேஸ் போலவே மர்மம் நிறைந்ததாக இருக்கிறது. தெரிந்தவர்கள் துப்புக் கொடுக்கவும்.
இந்த விவாதத்தில் சற்றும் பங்கெடுக்காத, என் தோழி ஒருத்தி, அல்மாரிக்கு தமிழில் என்னவென்று கேட்டுத் தொலைத்தாள்.எத்துனை முயன்றும் என் சிற்றறிவுக்கு எட்டாமல் போகவே, என் தந்தையாரின் உதவியை நாடினேன். அவர் யோசித்துச் சொல்கிறேன் என்று கூறிவிட்டு, நீண்ட ஆராய்ச்சிக்குப் பிறகு, ‘பொருள் காப்பகம்’ என்று கூறினார். இதுவும் வாக்கியம் போலவே உள்ளது, இது பெயர்ச் சொல் அல்லவே?
சற்று யோசித்துப் பார்த்தோமேயானால், தமிழில் பல சொற்கள், வழக்கிழந்து அல்லது சேர்க்கப்படாமல் உள்ளது புரியும். இலக்கியங்களை தமிழ் பொதுஜனம் கிட்டத்தட்ட மறந்தே போய் விட்டது எனலாம். தமிழ் நாட்டின் மிகப் பெரிய பொழுதுபோக்கான அல்லது முதலமைச்சர்களின் கல்லூரிகளான, சினிமாவில், இலக்கியம் என்பது உப்புப் பெறாத செயல் ஆகிவிட்டது உண்மை. நீண்ட நாட்களுக்குப் பின் நிறைய தெளிவான தமிழ் சொற்களைப் பயன்படுத்திய சினிமா ‘தம்பி’ மட்டுமே என்று நினக்கிறேன்.
இதை அச்சுப் பண்ணிக் கொண்டிருக்கும் பொழுது, (புரியாதவர்களுக்கு, டைப் செய்து கொண்டிருக்கும் பொழுது) என் நண்பன் ஸ்பூன் என்பதற்கு தமிழில் என்ன என்றான். தொடர்ந்து போர்க் என்பதற்கு தமிழில் என்ன என்றான். பட்டியல் நீள்கிறது.
இந்த் எண்ணங்களுக்கும் தமிழ் கட்டாயப் பாடச் சட்டத்திற்கும் ஒரு சம்பந்தமும் இல்லையென்று நான் சொன்னால் நீங்கள் நம்பித்தானாகவேண்டும்.