சமீபத்தில் கணையாழியில் இந்தக் கவிதையினை படிக்க நேர்ந்தது.
பூமிக்கு அந்தப்பக்கம்
போயஸ் விமானம் ஏறிப்
போயிருக்கும் துணைவருக்கு
என் உள்ளூர்ச் செய்தி மடல்
மின்னஞ்சலில்
இறகுத் தொடல் விரல் நோகாமல்
பறக்கும் ஒளியிழைப்பதிவுகளில்.
அங்கு குளிர் மழையா
இங்கு ஏறுவெயில்.
காவிரியில் கன்னடமும் இல்லை
கன்னித்தமிழும் இல்லை
சாயச்சாக்கடைக் கழிவு மட்டும்.
ஆலையிலும் அரிசிவிலை எற்றம் தான்.
பருப்பு விலை குறையவில்லை.
அம்மாவுக்குக் கண்புரையாம்
சர்க்கரை அதிகம் இரத்தத்தில்
சில ஆயிரம் போதுமாம் சிகிச்சைக்கு.
நாங்கள் வழக்கம்போல் இருக்கிறோம்.
வரும்போது வாருங்கள்
அன்புக் காதலரே
கவிதை வார்க்க
மனசுக்குள் ஊற்றில்லை
இறக்கைகளைத் தொலைத்துவிட்டேன்.
வந்தென்னைப் பறக்கவிடுங்கள்
எதிர்நோக்கி நோன்பிருக்கும் உங்கள்
கோதை நாச்சியார்.
-இரா. மீனாட்சி