கிணறு – சிறுகதை

மே, 14, 1993.

‘அண்ணா, எப்பண்ணா போவ?’ கேட்டான் என் தம்பி பிரகாஷ். மதிய உணவு முடித்து, அனைவரும் சிறிய உறக்கத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தனர். நான் மதியங்களில் தூங்குவதில்லை. அதிலும் குறிப்பாக விடுமுறை நாட்களில். எங்களுக்கு, விடுமுறை நாட்கள் தோறும் காளியம்மன் கோவில் திடலில் கிரிக்கெட் ஆடியே தீரவேண்டும். விளையாடி விட்டு வீட்டுக்கு வரும் வேளையில் அப்பா இருந்தால் நிறைய திட்டுகள் வாங்க வேண்டிவரும். பரவாயில்லை விளையாட்டிற்காக பெற்றுக் கொள்ளலாம். எங்கள் குழுவில் மொத்தம் ஒன்பது பேர். கணேஷ், செல்வா, ஆனந்த், சரவணன், ராஜன், பிரதாப், சிவா மற்றும் நான். +2 தேர்வு எழுதிவிட்டு கல்லூரிக் கனவுகளோடு இருக்கிறாம். இன்று தான் தேர்வு முடிவுகள் வெளியாயின. சரவணனைத் தவிற அனைவரும் தேர்ச்சிபெற்றுவிட்டோம். சரவணன் தவறியது எங்களுக்கெல்லாம் ஆச்சரியமே.’பொருடா, அப்பா தூங்கப்போகட்டும்’ என்று என் தம்பிக்கு பதில் கூறினேன். ‘அண்ணா, நானும் இன்னைக்கு வரவா? நேத்து மாதிரி இன்னைக்கும் நீச்சல் பழகித்தருவியா?’

காளியம்மன் கோவில் திடல் ஊருக்கு ஒதுக்குப் புறமாக வயல் வெளி சூழ மிக அழகாக அமைதியாக இருக்கும். மனித நடமாட்டம் அதிகமாக இராது. ஊரைவிட்டு வெளியேறி மசூதியைத் தாண்டி, மிகுந்த நாற்றத்தோடு ஒரு நத்தையைப் போல ஊர்ந்து கொண்டிருக்கும் குண்டாற்றின் சிறிய பாலத்தைக் கடந்து, வன்னான் பாறையில் இறங்கி, கணுக்கால் அளவுத் தண்ணீரில் நடந்து, பாறைகளில் ஏறி, இறங்கி, காளியம்மன் திடலுக்குச் செல்லும் ஒற்றையடிப் பாதையில் ஏறும் இடத்தில் கிணறு ஒன்று இருக்கிறது. நாயக்கர் கிணறு என்று அதற்குக் பெயர். எங்களுக்குத் தெரிந்த வகையில் இது தான் இந்த வட்டாரத்திலே பெரிய கிணறு. எனக்கு நினைவு தெரிந்து கிணற்றில் தண்ணீர் வற்றியது கிடையாது. மழைக் காலங்களில் நல்ல ஆழமானதாக இருக்கும். நாங்கள் விளையாடிவிட்டு இந்தக் கிணற்றில் தான் குளிப்பது வழக்கம்.கிணற்றில் இறங்குவதிற்கு கிணற்றின் பக்கவாட்டுச் சுவர்களில் பதிக்கப்பட்ட கற்களால் ஆன படிகள் உண்டு. ஆனால் பல சமயங்களில் நாங்கள் இறங்குவதில்லை, கிணத்துமேட்டிலிருந்து ஒரே ‘சொர்க்’ தான்.

‘ம்ம்..ஆனால் உன்னை இன்னைக்கு அம்மா விடமாட்டாங்கன்னு நினைக்கிறேன்’ சொல்லிமுடித்ததும் அம்மாவின் குரல் கேட்டது ‘பிரகாஷ், இங்க வந்து படு’. அவன் என்னை ஏக்கமாகப் பார்த்துக்கொண்டே, ‘அம்மா, நான் அண்ணாவோடு கிரிக்கெட் ஆடப் போறேன்’, என்று சொன்னான். ‘வந்தேன், அடி பிச்சுருவேன், கிரிக்கெட் ஆடப் போறேன்னு கிணத்துல நீச்சப் பழகியிருக்க, ராத்திரியெல்லாம் ஒரே கத்தல்! ஒழுங்கா வந்து படு!’ அம்மாவின் அதட்டலுக்குப்பயந்து, எழுந்து சென்றான் பிரகாஷ்.

ராஜாவின் வீட்டில் எங்கள் குழு கூடியது. சரவணனைத் தவிற அனைவரும் ஆஜர். பாஸாகிவிட்ட சந்தோஷம் அனைவரின் முகத்திலும் தெரிந்தது.ராஜாவின் வீடுதான் கிரிக்கெட் மட்டை, ஸ்டம்ப்,பேட் வைக்கப்படும் இடம். ஆளுக்கு ஒன்றைக் கையில் எடுத்துக் கொண்டு போருக்குச் செல்வதைப் போன்று காளியம்மன் திடலை நோக்கி நடக்கத் தொடங்கினோம்.சிரித்துப் பேசிக் கொண்டே வந்தவர்கள் ஏனோ சரவணனின் வீட்டைக் கடக்கும் பொழுது மட்டும் மிகுந்த அமைதியைக் கடைப்பிடித்தோம்.

மணி ஆறைத் தொட்டு விட்டது. பொழுது சாயத்தொடங்கு வெகு நேரமாகிவிட்டது. ஆனால் யாரும் கலைப்படைந்ததாய்த் தெரியவில்லை. கிரிக்கெட்டில் இது ஒரு வசதி. கால்ப் பந்தைப் போலவோ, ஹாக்கியைப் போலவோ, கூடைப்பந்தைப் போலவோ ஆட்டம் முழுவதும் ஓடிக்கொண்டிருக்கத் தேவையில்லை. ராஜா கீழே குணிந்து கொள்ள அடுத்த ஆட்டத்திற்கு, பேட்டிங் வரிசை, அவன் முதுகில் விரல்களால் எண்கள் காண்பித்து கேட்கப்பட்டது. நான்தான் முதலாவதாக பேட் செய்ய வேண்டும். எனக்கு ஸ்பின் ஆடப் பிடிக்கும். எங்கள் குழுவிலேயே நன்றாக ஸ்பின் பவுலிங் செய்பவன் சரவணன் மட்டுமே. அவன் வராதது எனக்கு ஏக்கத்தையே அளித்தது. ஏனோ ஆட்டத்தில் கவனம் இல்லாது இரண்டாவது பந்திலே கிளீன் போல்டு ஆகினேன்.

இருள் கவியத் தொடங்கிய போது நாங்கள் ஆட்டத்தை முடித்துக் கொண்டு நாயக்கர் கிணற்றை நோக்கி நடந்தோம். ஏனோ எப்பொழுதும் இருக்கும் உற்சாகம் இன்று இல்லை. மற்றவர்கள் ‘பை’ சொல்லிக் கிளம்ப, நானும் ராஜாவும், செல்வாவும், ஆனந்தும் மட்டுமே மிஞ்சினோம். ராஜாவும், செல்வாவும் ‘சொர்க்’ அடிக்க, நானும் ஆனந்தும் படிகள் வழியே இறங்கினோம். தண்ணீர் வெதுவெதுப்பாக இருந்தது.

தண்ணீரில் இறங்கிய உடன் உற்சாகம் தானாக வந்து தொற்றிக்கொண்டு விடுகிறது.சிறிது நேரத்திற்குப் பிறகு, ஆனந்த் கையில் மணலை வைத்துக் கொண்டு ‘இதோ பார் நான் தரையைத் தொட்டுவிட்டேன்’ என்று ஆர்பாட்டம் செய்துகொண்டிருந்தான். செல்வா பதிலுக்கு நானும் எடுத்துவருகிறேன் பார் என்று தண்ணீருக்குள் பாய, ‘யார் முதலில் மணல் எடுத்து வருகிறார்கள்’ என்ற போட்டி ஆரம்பமாகியது. எற்கனவே மணல் எடுத்து வந்திருந்ததால், ஆனந்த், எங்கள் தண்ணீ கோர்ட்டின் நீதிபதியாக நியமிக்கப்பட்டான்.கல் படியில் அவன் உட்கார்ந்து கொள்ள, நாங்கள் மூவரும் தண்ணீருக்குள் பாய்ந்தோம்.

தண்ணீருக்குள் மூழ்கியிருக்கும் பொழுது, உலகப் பேரிரைச்சல்களிடமிருந்து விடுபட்டு மனம் அமைதிகொள்ளவே செய்கிறது. நான் தான் முதலில் வந்தேன். ஆனந்த் 110 எண்ணியிருந்தான். 130இல் செல்வா வந்து சேர்ந்தான். 150 வரையில் ராஜா வரவில்லை. 160 ஆயிற்று. நாங்கள் மூவரும் நிசப்தமாக தண்ணீரில் எழும் சிற்றலைகளையே வெறித்துக் கொண்டிருக்க, தாடலென்று மூச்சிரைக்க தண்ணீரிலிருந்து வெளிப்பட்டான் ராஜா. நாங்கள் ஹே வென்று சொல்லிவைத்தார் போல் கத்தினோம். ராஜா தட்டுத் தடுமாரி படியில் வந்து உட்கார்ந்தான். அவன் முகம் வெளிரியிருந்தது. கைகளும் கால்களும் நடுங்கியவன்னம் இருந்தன. மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க மலங்க மலங்க விழித்துக் கொண்டு இருந்தான். கையில் மணல் இல்லை. எங்களைப் பார்த்து ஏதோ சொல்ல வந்தவன் வார்த்தை கிடைக்காமல் திக்கித் திணரிக் கொண்டிருந்தான். ‘டேய்..ட்…ட்..டேய்..கீ..கீ…கீழே..கீழே..ப்..ப்..பொ..பொணம் டா’ என்று சொல்லி அழ ஆரம்பித்துவிட்டான். நாங்கள் விக்கித்து விட்டோம். ‘டேய்..ராஜ்..எதையாவது பார்த்து பயந்திருப்ப! செடி கொடியாக இருக்கும்!’ என்றான் செல்வா. ‘இல்..இல்லடா…நான் பார்த்தேன்..கால்..வி..விரல் தெரிந்..தது!’ அவன் சொல்வதை முற்றிலும் நாங்கள் நம்பவில்லையென்றாலும், சற்று பயமாகத்தான் இருந்தது. செல்வா, ‘டேய்..நாம போய் பார்த்துட்டு வருவமா?’ என்றான்.நான் சரியென்றேன். ராஜ் தடுத்தும் நாங்கள் கேட்கவில்லை.

பயத்துடன் முங்கு நீச்சல் அடிப்பது மிக மிக கடினம். தண்ணீருக்கு அடியில் நிலவும் அசாதாரண அமைதி மேலும் பயத்தை அதிகரித்தது. செல்வாவின் இருதயம் துடிப்பது கூட எனக்கு கேட்பது போல இருந்தது. திரும்பி விடலாம் என்று நினைத்த பொழுது, அதோ சுமார் ஐந்தடி தூரத்தில் புதர்களுக்கு நடுவே கால்விரல்கள் தெரிந்தன.ஒரு நிமிடம் கண்கள் சுழல ரத்த ஓட்டம் அதிகரித்தது. இருதயம் 1000 மீட்டர் ஒட்டப்பந்தயத்தில் ஒடிக்கொண்டிருந்தது.சிவப்புச் சட்டையும் தெரிந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் நின்றுகொண்டிருந்த என்னை செல்வா கையை பிடித்து இழுத்து சுயநினைவுக்குக் கொண்டுவந்தான்.

மேலே வந்து பார்த்தால் ஆனந்தும், ராஜும் சட்டை,பேண்ட்களை மாட்டிக் கொண்டு தயாரக நின்றுகொண்டிருந்தனர். நாங்கள் வேக வேகமாக படிகளில் ஏறினோம். நடுக்கத்தால் படிகள் முன்பைவிட வழுக்குவதாகவேபட்டது. மேலே ஏறி கைகள் நடுங்க பேண்ட்களை போட்டுக் கொண்டோம்.யாரும் யாருடனும் பேசிக்கொள்ளவில்லை. வழிநெடுக அமைதி. பிரியும் பொழுது, ‘யார்கிட்டையும் சொல்லாதீங்க’ என்றேன், எதோ சொல்லவந்த செல்வா, ஒன்றும் சொல்லாமல் தலையை மட்டும் ஆட்டினான்.

வீட்டிற்குள் நுழையும் பொழுது அப்பா வந்திருந்தார். ஏனோ ஏதும் கேட்கவில்லை.துண்டை எடுத்து தலை துவட்டிக் கொள்ளும் பொழுது ‘அம்மா காப்பி வெச்சிருக்காடா,உன்னை சரவணனின் அம்மா தேடிட்டுப் போனாங்க’ என்றார். நான் காபியை ஒரெ மடக்காகக் குடித்துவிட்டு, சரவணன் வீட்டிற்குச் சென்றேன்.

சரவணனின் அம்மா மட்டுமே இருந்தார்கள்.’சரவணன் உன்கூட விளையாட வந்தானாப்பா?’ என்றார்கள். ‘இல்லையே ஆன்ட்டி, ஏன்?’ ‘மதியத்தில இருந்து காணல அதான்.நாம போய்த் தேடிட்டு வருவமா?’ ‘எங்காவது ப்ரண்ட்ஸ் வீட்டில இருப்பான் ஆன்ட்டி. நீங்க இருங்க, நான் போய்ப் பார்த்துட்டு வாரேன்’ ‘இல்லப்பா. நானும் வாரேன். அப்படியே அவங்க அப்பாவுக்கும் போன் போடனும்’ சரவணனின் அப்பா ராஜ்காட்டில் இருக்கிறார். நான் சைக்கிளை மிதிக்க, பின்னால் சரவணின் அம்மா ஏறிக்கொண்டார்கள்.

எனக்குத் தெரிந்த வீடுகளிலும், சரவணின் உறவுக்கார வீடுகளிலும் தேடினோம். நேரம் செல்லச் செல்ல சரவணனின் அம்மாவிற்கு கவலை பன் மடங்கு அதிகரித்தது போல இருந்தது. எனக்கும் ஒன்றும் புரியவில்லை. ‘சரவணன் எங்கு பொயிருப்பான்?’ ‘தம்பி, அப்படியே கலாஷ் பாத்திரக்கடை பக்கத்திலிருக்கும் சந்தில் அவனுடைய சித்தப்பா வீடு இருக்கிறது, அங்கும் பாத்துட்டுப் போலாம்’ என்றார்கள். சரவணின் அம்மா எற்கனவே பாதி அழுது கொண்டிருந்தார்கள்.

சரவணின் சித்தியும் சித்தப்பாவும் சரவணனின் அம்மாவைத் தேற்ற முயற்சி செய்து கொண்டிருந்தார்கள். அதுவரை அழாமல் இருந்த அவர்கள் அழத்தொடங்கினார்கள். நான் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தேன். ஆறிப்போனக் காப்பியைக் குடித்துவிட்டு நாங்கள் புறப்பட்டோம். சித்தப்பாவும் உடன் வந்தார்.

மேலும் சில இடங்கள் தேடிவிட்டு, உசிலம்பட்டி ரோட்டில் இருக்கும் போலீஸ் ஸ்டேசனை சோர்வுடனும் இனம் புரியாத ஒரு உணர்வுடனும் கடக்கையில், சித்தப்பா,’ மதனி, நீங்களும் தம்பியும் இங்கன நில்லுங்க, நான் போய் ஏட்டையா கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு வந்திடறேன்!’ என்று சொல்லிவிட்டு சைக்கிளுக்கு ஸ்டாண்ட் போட்டு விட்டு சித்தப்பா சென்றார்.

நாங்கள் இருவரும் அமதியாக நின்று கொண்டிருந்தோம்.லாரி ஒன்று புழுதி வாரி இரைத்துச் சென்றது.. சரவணனின் அம்மாவின் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டேயிருந்தது.ஸ்டேஷனை விட்டு வெளியே வந்த சித்தப்பா, ‘மதனி, சரவணன் காலையில் என்ன டிரஸ் போட்டிருந்தான்?’ என்றார். சரவணின் அம்மா சிறிது யோசனைக்குப் பின் விசும்பலோடு, ‘பச்சைப் பேண்ட்….சிவப்புச் சட்டை’ என்றார்கள்.

நான் நிலை தடுமாறினேன். சைக்கிள் பிடியிலிருந்து விடுபட்டு கீழே விழுந்தது.பேருந்து ஒன்று சத்தமாக ஹாரன் அடித்துக் கொண்டு எங்களுக்கு மிக அருகில் சென்றது.நாயொன்று விடாமல் குறைத்தது. எனக்கு முழுவதுமாகத் திடம் இழந்துவிட்டதைப் போன்று ஒரு உணர்வு. வியர்த்து வழிந்தது.குடலைப் பிரட்டியது. சித்தப்பா வந்தவுடன் மூவரும் மிக அமைதியாக வீடு வந்து சேர்ந்தோம்.

அங்கே சரவணன் நின்று கொண்டிருந்தான். அவன் கூடவே சற்று பருமனான, மீசை அடர்த்தியாக வைத்துக்கொண்டு ஒருவர் நின்று கொண்டிருந்தார்.நான் அனைத்து கடவுள்களுக்கும் நன்றி சொல்லிக்கொண்டிருந்தேன்.சரவணின் அம்மா வேகமாக ஓடிச்சென்று, சரவணனின் பக்கத்தில் இருந்தவரை ‘வாங்கண்ணே!’ என்று சொல்லிவிட்டு, சரவணனை ஓங்கி ஒரு அரை விட்டார்.

நான் வீட்டிற்கு வந்து சைக்கிளிற்கு ஸ்டாண்ட் போட்டுவிட்டு, உள்ளே நுழைந்தேன். ஏனோ மனம் பஞ்சு போல இலகுவாகிவிட்டிருந்தது. உள்ளே அம்மா அழுதுகொண்டிருந்தார்கள்.என்னைப் பார்த்ததும் ‘தம்பியைப் பார்த்தியாடா?’ என்றார்கள். ‘ஏன் என்னாச்சு?’ என்றேன். ‘சாயங்காலத்திலிருந்து காணல. அப்பா தேடப் போயிருக்கார்’ என்றார்கள்.

எனக்கு சுரீர் என்றது. ‘என்ன சட்டை போட்டிருந்தான்?’ என்றேன். என்னை ஒரு நிமிடம் மவுனமாகப் பார்த்துவிட்டு, பின் ‘ஏன், அவன் எப்போதும் போடுவானே, காலர் இல்லாத சிகப்பு டீசர்ட்.அதுதான்!’ என்றார்கள்.
நான் வீதியில் இறங்கி நாயக்கர் கிணறை நோக்கி தலை தெறிக்க ஓடிக் கொண்டிருந்தேன். நாய்கள் என்னைப் பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன.
**

4 thoughts on “கிணறு – சிறுகதை

  1. Nice Story Mr.Muthu. I’ve been reading some of your stories for the quiet past. Your description of every scene is appreciable. You have a wonderful creative sense. All the best for your future creations. Expecting more from you. Keep rocking !

    Like

  2. Nice works by you Mr.Muthu. I’ve been reading some or your stories and reviews for the recent past. Your way of description interests me a lot and you have a wonderful creative sense. Keep Rocking

    Like

  3. மிக நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.தொடர்ந்து நிறைய எழுதுங்கள்.

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s