இன்று நூலகத்தின் குறிப்பு (Reference Section) பகுதியில் புத்தகங்களை, எந்தவித நோக்கமும் இல்லாமல், பார்த்துக்கொண்டிருந்த பொழுது, புதுமைப்பித்தனின், ஆ.இரா.வெங்கடாசலபதி, தொகுத்த கட்டுரைத் தொகுப்பு ஒன்று கிடைத்தது. அவரே தொகுத்த புதுமைப்பித்தனின் கதை தொகுப்பு ஒன்று என்னிடம் உள்ளது. சமீபகாலமாக நான் புதுமைப்பித்தனிடம் ஈர்க்கப்பட்டு அல்லது கவரப்பட்டு, வருவதற்கு இது தான் காரணம். புதுமைப்பித்தனைப் படித்தப் பிறகு, இன்று வரை நான் படித்து புகழ்ந்துவந்த தமிழ் எழுத்தாளர்களை கொஞ்சம் மறுபரிசீலனை செய்ய வேண்டியுள்ளது.
புதுமைப்பித்தனின் கட்டுரைத் தொகுதியைப் புறட்டும் பொழுது, குலோப்ஜாமுனுடன் காதல் / பாரதியும் போலீசும் என்ற கட்டுரைகளை வாசித்தேன். மிகுந்த நையாண்டியும் அதே சமயத்தில் உண்மை நிலவரத்தையும் ஒருசேர கொடுப்பதில் அவருக்கு நிகர் அவர்தான். 1933இல் வெளிவந்த இந்த கட்டுரைகள் கிட்டத்தட்ட 70 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்றைய சூழ்நிலைக்கும் பொருந்துவதாகவே உள்ளது. காலம் மாறவில்லையா?’தெரியாததைப் பற்றி சொல்வதுதான் அறிவுடைமை’ என்று தற்காப்பிற்காக சொல்லிவிட்டு கட்டுரையை ஆரம்பிக்கிறார். காதல் அவருக்கு தெரியாதா? தெரியவில்லை. 1940களில் தமிழ்நாட்டில் இருந்துகொண்டு ஸ்டாலினைப் பற்றி கட்டுரை எழுதியவருக்கு, ‘காதல்’ பற்றி தெரியாதென்பது, கிட்டத்தட்ட, முட்டாள்தனம் தான். காதலை மிகவும் அனுபவித்தவர் என்பதை அவருடைய ‘செல்லாம்மாள்’ கதையைப் படித்தவர்கள் உணரலாம்.
வெகுஜனங்களுக்கு புரிய வேண்டும் என்றால் அவர்களுக்கு தெரிந்த விசயத்தைக் கொண்டு விளக்க வேண்டும் என்று காதலை விளக்க குலாப்ஜாமுனை தேர்வு செய்திருக்கிறார். காதலிப்பவனுக்கு உலகில் எல்லாமும், எல்லாப் பொருளும் தன் காதலியாகவே தெரியுமாம். கம்பன் இராமன் மேல் கொண்ட தீராத காதலினால் தான் இராமனை கல்லும், மண்ணும், மண்ணாங்கட்டியும் காதலித்ததாக எழுதியிருக்கிறார் என்றும் கம்பன் மீது பாய்கிறார். தீராநதியில் சிறிது நாளைக்கு முன்னர் இராமனையும் சீதையையும் வைத்து, பின் நவீநத்துவத்தால் பாதிக்கப்பட்ட, திடுக்கிடும் கதை ஒன்று படித்தேன். இராமனையும் சர்சைகளையும் பிரிக்கமுடியாது.
‘காதல் செய்யும் பொழுது, நாம் காதலிக்கும் பொருளும் நம்மை பதிலுக்கு காதலிக்க வேண்டும்’ என்ற உண்மை விதியை முன்வைக்கும் புதுமைப்பித்தன், பிறகு, ‘இது குலாப்ஜாமுன் விசயத்தில் சாத்தியமில்லை’ என்று சொல்கிறார். உண்மைதான்.
பாரதியும் போலீசும் [வேறு தலைப்பினல் கூட இருக்கலாம்] என்ற கட்டுரையைப் படித்துக் கொண்டிருந்த பொழுது என்னையும் அறியாமல் சிரித்துவிட்டேன். அருகே அமர்ந்து ‘தமிழ் இலக்கிய வரலாறு’ படித்துக் கொண்டிருந்த ஒருவர் என்னை விசித்திரமாகப் பார்த்தது வேறு கதை. உண்மையில் பாரதியார் போலீசுக்கு நண்பரா? அதில்லை விசயம். புதுமைப்பித்தனின் நையாண்டியின் உச்சக்கட்டம் இந்தக் கட்டுரையைக் கூறலாம். பாரதியை கரைத்துக் குடித்தவர் என்றும் எடுத்துக்கொள்ளலாம்.
பாரதியின் சில வரிகளை மட்டும் எடுத்துக் கொண்டு, அதை அன்றைய போலீசுடன் [ஏன் இன்றைய போலீசுடன்] ஒப்பிட்டுள்ளார். ‘கோல் கொண்டு வாழ்’ என்ற பாரதியின் வரிகளை போலீசின் கைத்தடியுடன் ஒப்பிடுகிறார். மேலும் ‘ரௌத்திரம் பழகு’ ‘(பிறர்) துன்பத்தை மற’ இதில் பிறர் என்பது அவரே இணைத்துக் கொண்டது போன்ற ஆதாரங்களை காட்டுகிறார். இவ்வாறு போலீசை ஆதரித்தே கவிதையினை எழுதியிருக்கிறார் என்கிறார். சரி, நான் எதற்கு சிரித்தேன், ‘நையப் புடை’ என்ற பாரதியின் வரிகளை படித்தபொழுது. நையாண்டித் திலகம் தான் நமது புதுமைப்பித்தன்.
**
சன் டீவியில், செவ்வாய் தோறும் ஒளிபரப்பாகும் ‘டாப் டென்’ நிகழ்சியின் மறு ஒளிபரப்பில், சேரனின் ‘தவமாய் தவமிருந்து’ படத்தை தழுவி நிகழ்ச்சியை வடிவமைத்திருந்தனர். சேரன் எத்தனை தவமிருந்து படத்தில் வரும் ‘அப்பா’ கதாப்பத்திரத்தை படைத்திருப்பார் என்று தெரியவில்லை, ஆனால் இந்த நிகழ்ச்சியில் வந்த ‘அப்பா’வை குடிகாரனாகவும், பல பெண்களிடம் தொடர்பு வைத்திருப்பவனாகவும் காட்டியிருக்கிறார்கள். சிரிப்பிற்காகத் தான். நகைச்சுவை மட்டும் தான்.
சேரன் இந்த நிகழ்ச்சியைப் பார்த்து சிரிப்பாரா என்று தெரியவில்லை, ஆனால் இந்தப் படத்தை மிகவும் ரசிக்கும் என் நண்பன் ஒருவன், மிகுந்த சோகத்தோடு அல்லது கோபத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான். சத்தியராஜ் ஒரு படத்தில், விஜய்யின், ‘எங்கம்மா உங்கம்மா நம்ம சேர்த்துவப்பாளா?’ (கண்றாவி!) என்ற பாடலை கேலி செய்திருப்பார், அதற்கப்புறம் விஜய்யின் அந்தப் பாடலைப் பார்க்கும் பொழுதெல்லாம் சத்தியராஜ் ஆட்டம் தான் நினைவுக்கு வருகிறது. தொடர்ந்து சிரிப்பும் வருகிறது. பின் தொடரும் சிரிப்பின் குரல்?
‘தவமாய்த் தவமிருந்து’ படம் எனக்கும் பிடித்த படம்தான். ஆனால் நான் மட்டும் தான் நிகழ்ச்சி முழுவதும் சிரித்துக் கொண்டிருந்தேன். அந்தப் படத்தை மறுபடி பார்க்கும் பொழுது, டாப் டென் நிகழ்ச்சி ஞாபகம் வருமா என்று தெரியவில்லை.
ஒரு கதையை எழுதி அதில் மக்கள் மனதில் என்றென்றும் நிற்கும் கதாப்பாத்திரங்களை படைத்து தெளிந்த திரைக்கதையையும் இனிய இசையும் சேர்த்து அதை வெற்றிப்படமாக கொடுப்பதென்பது மிகக் கடினமான விசயம். அதை சேரன் செய்துகாட்டியிருந்தார். ம்ம்..ஏனோ சிலருக்கு வாழ்க்கை மிகக் கடினமாகவும், சிலருக்கு மிக எளிதாகவும் இருக்கிறது.
**