கவிதைகளும் குழந்தைகளும் ஒன்று தானோ? குழந்தைகளை நாம் பல காரணங்களுக்காக ரசிக்கிறோம், ஆனால் அதே அளவு காரணங்களுக்காக வெறுக்கவும் செய்கிறோம். வெறுப்பதற்கு காரணங்கள் இருந்தும், நாம், முடிவில் குழந்தைகளை ரசிக்கவே செய்கிறோம்.
‘கவிதைகளைக் கண்டால் ஓடி விடு’ என்று என் மூளை என்னை எச்சரித்தாலும், மனம் கவிதையைக் கண்டவுடன் படிக்கவே சொல்கிறது. பிறகு சிக்கலில் ஆழ்த்துகிறது.
கவிதைகள் ஏன் இப்படி இருக்கின்றன? எத்தனை முறைப் படித்தாலும் ஏன் புரிந்துகொள்ள முடியவில்லை? கவிதைகளைப் படித்து புரிந்துகொள்ள, எங்காவது, பாடத்திட்டம் (Course) இருந்தால் சேர்ந்தாவது படித்துத் தொலைக்கலாம். ‘நாலு மூலை புத்தகம்’ என்றொரு கவிதையைப் படித்தேன். கடற்கறய் எழுதியிருக்கிறார். தீராநதியில் பிரசுரமாகியிருந்தது.
நாலு மூலை புத்தகம்
நாலு மூலைகள் இருக்கும் புத்தகத்தின்
ஐந்தாவது மூலையை ஞாபகத்தின் குறிப்பாக
மடித்திருந்தேன். சர்வ சங்கடங்களுக்கும்
பரிகாரம் சொல்லும் கிளியொன்று அதில்
எந்நேரமும் பறந்தவாறே இருக்கும்.
கிளி, பச்சை இறகில் ஒளிரும் எதிற்காலத்தை
ஒரு சிறு நெல்லில் ஒளித்து வைத்திருந்தவன்
புத்தகத்தின் 49ஆம் பக்கத்தைக் கிழித்து,
கொண்டுபோய் விட்டான்.
அதில்தான் எப்போதும் பறக்கும்
கிளியின் இன்னொரு சிறகிருக்கிறது.
ஒரு ஞாயிற்றுக்கிழமை மதியம், நல்ல மதிய உணவிற்குப் பிறகு, தீராநதியில், ஆ
.முத்துலிங்கம் பக்கம் படித்துவிட்டு, இவரால் எப்படி அனைத்து இலக்கிய இதழ்களிலும் ஒரே நேரத்தில் எழுத முடிகிறது, என்று வியந்து கொண்டிருந்த பொழுது, இந்த கவிதை கண்ணில் பட்டது. ஒரு முறை/இரு முறை/…10 முறை. ஒன்றும் புரியவில்லை.
“நாலு மூலைகள் இருக்கும் புத்தகத்தின் ஐந்தாவது மூலையை” புத்தகத்திற்கு ஏது ஐந்தாவது மூலை? இது உவமையாக இருக்கும் பட்சத்தில், கவிஞர் எதை உவமைப் படுத்த முயல்கிறார், புரபொசர் ரவீந்தரன், புத்தகத்தின் மையப்பகுதி என்றார். என் நண்பன் அதை, நாம் புத்தகம் படிப்பதினால் கிடைக்கும் அறிவுக் களஞ்சியம் (repository) என்றான். அறிவுக் களஞ்சியம்! அதற்கப்புறம் “கிளியொன்று அதில் எந்நேரமும் பறந்தவாறே இருக்கும்” கிளியாவது புத்தகத்தில் பறப்பதாவது? கார்ட்டூன் கிளியாக இருக்குமோ? புத்தகம் காமிக் புத்தகமோ? அதற்கப்புறம் சுத்தம். பிளாக் ஹோல். “புத்தகத்தின் 49ஆம் பக்கத்தைக் கிழித்து, கொண்டுபோய் விட்டான்” அது என்ன 49 ஆம் பக்கம்?
விவாதம் முற்றுப் பெறவில்லை. அதாவது ஒரு முடிவு கிடைக்கவில்லை. கடைசியில், ரவீந்திரன், “புரிவது ஒரு பொருட்டல்ல” என்றார். “யாரை யார் புரிந்து கொண்டோம். என்னை நீ புரிந்து கொண்டாயா? இல்லை உன்னை நீ புரிந்து கொண்டாயா? முதலில் உன்னை நீ புரிந்து கொண்டாயா?” என்று சொன்னார்.
இவ்வாறு யாரேனும், விவாதத்தில் பங்கெடுத்துக் கொண்டிருந்தவர், பேசத் தொடங்கினால், விவாதத்தை முடித்துக்கொள்ள வேண்டும் என்பது விதி.
தீராநதியோ, கணையாழியோ, உயிர்மையோ, காலச்சுவடோ தாங்கள் வெளியிடும் கவிதைகளுக்கு ஒரு “கோனார் நோட்ஸ்” போட்டால், அதே இதழில் கடைசிப் பக்கங்களில், என்னைப் போன்று ஞான சூன்யங்களும், கவிதைகளைப் படித்து புரிந்துகொள்வோம்.
அதே இதழில், ‘சொந்தம் ஆனால் அந்நியம்’ என்ற, கோவாவைச் சேர்ந்த மீனா காகோட்கர், எழுதி, அதை தமிழில் திலகவதி மொழிபெயர்த்த சிறுகதை மிக அருமையாக இருந்தது.
பிகு:
யாருக்கேனும் மேலே குறிப்பிட்ட கவிதைக்கு விளக்கம் தெரியுமானால், கண்டிப்பாகச் சொல்லவும்.
முத்து,புத்தகத்தின் ஒரு பக்கத்தை (மூலையை ) மடித்து புக் மார்க் செய்கிறோமெ, அதுவாக (ஐந்தாவது) இருக்குமோ அப்புறம் அதிலே இன்னோரு புக் மார்க் கிளியாக இருக்கலாம். அது கீழே விழுந்து காணோமால் போயிருக்கலாம்.
LikeLike
நன்றி மனு. சரி. அதற்கப்புறம் நெல் எங்கேயிருந்து வந்தது? நெல்லில் எதிர்காலத்தை எதற்காக ஒளித்து வைக்க வேண்டும். அதற்கப்புறம், புத்தகத்தின் 49ஆம் பக்கத்தை ஏன் கிழித்து செல்ல வேண்டும். அது என்ன 49 ஆம் பக்கம். 48 என்றால் கூட ஒத்துக் கொள்ளலாம் (என் கல்லூரி பதிவு எண் : ரோல் நம்பர் ஹி..ஹி..). எது எப்படியோ, கவிதைகள் நம்முடைய கற்பனை வளத்தை பெருக்குகின்றன. எப்பொழுதும் அவிழ்க்கப்படாத அல்லது அவிழ்க்க இயலாத முடிச்சாக இருப்பதினால் தான், கவிதைகள் சுவையாக இருக்கின்றனவென்று நான் நினைக்கிறேன். ஒரு குறிப்பிட்ட விசயத்தை, நேராக சொல்வதென்றால் கவிதைகள் எதற்கு, உரைநடையே போதுமே என்ற கருத்தை நான் ஒத்துக்கொள்கிறேன். ஆனால், ஒரு படைப்பின் 50 விழுக்காடாவது நமக்கு புரியவேண்டுமா இல்லையா?
LikeLike