1
என் தோழி ஒருவர் (பள்ளி, கல்லூரி முழுவதும் ஆங்கில வழி கல்வி பயின்றவர். பயின்று கொண்டிருப்பவர்), ஒரு நாள் பேசிக் கொண்டிருக்கும் பொழுது, தான் தமிழ் நாவல்கள் (அல்லது தமிழ் இலக்கியம் சார்ந்த எதுவாயினும்), அதிகம் படிப்பதில்லை, ஏன் படிப்பதையே நிறுத்திவிட்டேன் என்றும் சொன்னார். காரணம் புரியாமல் ஏன் என்று விழித்த எனக்கு, பதிலேதும் கூறாமல், ‘என்னமோ பிடிப்பதில்லை. அதனால் படிப்பதில்லை’ என்றார்.
பிறகு அவரே, சிறிது நேரம் கழித்து, எனது விழிக்கு (அல்லது முழிக்கு) பதில் சொல்லும் விதமாக, காரணங்களை சொன்னார்.
அவர் வைத்த காரணங்களில், மிக முக்கியமான ஒன்று, தமிழில் பலதரப்பட்ட, பலவகையான தளங்கள், பின்புழம் (Background) இல்லையென்பதே. தளங்கள் என்றால், இன்னும் தெளிவாக எனக்கு புரியவைக்கும் பொருட்டு, Fiction, Science-Fiction, Fantasy, Historical-Fiction, Facts in Fiction, racing thriller (Like Prison escapes), horror,non-fiction, என்று வகைப்படுத்தினார். மேலும் தமிழில், எல்லோரும் ஒரே மாதிரி தான் எழுதுகிறார்கள், குறைந்தபட்சம் ஒரே மாதிரியான கதைக் கருவைத்தான் வைத்திருக்கிறார்கள் என்றார். புத்தகத்தின் அட்டையைக் கிழித்து விட்டால், அனைத்து புத்தகமும் ஒரே ரகம் என்றார்.
lord of the rings, harry potter போல தமிழில் ஒரு fantasy இல்லாதது ஏன்? war of the worlds போன்ற science fiction னும், the seventh secret போன்ற சரித்திர புனைவு கதையோ, Da Vicni Code போன்ற Historical-fiction னும், the eleventh commandment, shantaram, code to zero போன்ற racing-thriller ரும், Jurassic Park, State Of Fear போன்ற நாவல்களும் தமிழில் ஏன் இல்லை என்பதே அவரது வாதம். பலதரப்பட்ட தளங்களுக்காக மட்டுமே அவர் இந்த நாவல்களை குறிப்பிட்டார். இதை விட நல்ல நாவல்கள் இருகின்றதென்பதே உண்மை.
பலதரப்பட்ட தளங்கள் இல்லை என்ற வாதத்தை ஒத்துக் கொள்ளலாம், ஆனால் முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாது. நாவல்களை நான் பொழுது போக்கிற்காக மட்டுமே படிக்கின்றவன் (கவனிக்க, இலக்கிய வளர்ச்சிக்காக அல்ல!), என்ற பொழுதிலும், எனக்கு கடந்த 10 வருடங்களாக (சில நேரங்களில்) பொழுது போகாமல் இருந்திருக்கிறது.
தவிர, இரு வேறு இலக்கிய தளங்களை ஒப்பிடுவதென்பதே தவறு. ஏனென்றால், அவர்களது (ஆங்கில) வாழ்க்கைத் தளம் வேறு, நமது வாழ்க்கைத் முறையே வேறு. அப்படியே எடுத்துக் கொண்டாலும், கிரேக்க மொழியில் இருக்கும், கற்பிதங்கள் (Myth)/ கதைகள் போன்றதொரு தன்மை ஆங்கிலத்தில் கூட இல்லை. ஆனால் அதற்கினையான, ஏன் அதற்கும் மேலும், கற்பிதங்களும்/கதைகளும் தமிழில் உண்டு. ஆங்கில இலக்கியத்தை மட்டும் (கிரேக்க/இலத்தின்/ரோமானிய இலக்கியங்களை தவிர்த்து) இயங்க சொன்னால், பல தளங்களை அங்கே பார்பதென்பது அரிதாகிவிடும். இலக்கியம் ஒன்ற ஒன்றே இருக்குமா என்பதே சந்தேகம் தான்.
இங்கே நான் இரு தளங்களை, நான் ஒப்பிட்டு பார்க்க நினைக்கவில்லை. ஏன், ஒப்பிட்டு பார்க்கவும் முடியாது. ஏனென்றால், இரண்டு விசயங்களை ஒப்பிட வேண்டுமென்றால், இரண்டு விசயங்களையும் அறிந்திருக்க வேண்டும். ஒரு விசயத்தை மட்டும் வைத்துக் கொண்டு, மற்றொரு விசயம் தெரியாமல் (அல்லது அரை குறையாக தெரிந்தோ) வாதிடுவது அல்லது ஒப்பிடுவது என்பது, வீண் சச்சரவிற்கே வழிவகுக்கும். எனக்கு இரு விசயமும் முழுவதுமாக தெரியாது (அப்படி தெரிந்தவர்கள் யாரவது இருப்பார்களா என்பதும் சந்தேகமே!), என்பது என் பலவீனம். எனவே இதுவரை நான் படித்த சிறுகதைகள்/கதைகள்/கவிதைகள்/கட்டுரைகள்/நாவல்கள் போன்றவற்றைப் பற்றி மட்டுமே எழுதலாம் என்று நினைக்கிறேன். விமர்சனம் அல்ல. என் பார்வை, அல்லது நான் அறிந்து கொண்டது என்று வைத்துக் கொள்ளலாம். பார்வைகள் வேறுபடும் என்பது விதி.
என் இலக்கிய ஆர்வம் (அல்லது பொழுதைப் போக்குவது) என் அம்மாவிற்கு, நூலகத்திலிருந்து, ரமணிச்சந்திரனையும், சாண்டில்யனையும் எடுத்துவருவதிலிருந்து ஆரம்பித்தது. நான் சாண்டில்யன் அவ்வளவாக படித்ததில்லை (கடல் புறா மட்டுமே படித்திருக்கிறேன்) ஆனால் ரமணிச்சந்திரன் தான் நான் முதன் முதலாக படிக்க ஆரம்பித்தது. நான் படிக்க ஆரம்பித்த பொழுது (பாட புத்தகம் அல்லாத புத்தகங்கள்), குமுதம் ஒரு ஆபாசப் பத்திரிக்கையாகவே கருதப்பட்டது. இன்றளவும் அது அப்படியே இருக்கிறது. சமூகம் மட்டுமே முன்னேற்றம் கண்டுவிட்டது.
ஆனந்த விகடன், சினிமா செய்திகளுக்கே முன்னுரிமை தருகிறது என்றாலும், அதில் சில முக்கிய நல்ல விசயங்கள், அன்றிலிருந்து இருந்து வந்திருக்கின்றன. ஹாய் மதன் ஒரு எடுத்துக்காட்டு. இருந்தும், மதன் சில வேளைகளில் ‘சிம்ரன்/திரிஷா/சினேகா’ இவர்களில் யார் சிரிப்பழகி என்ற சமூக பொறுப்புள்ள சில கேள்விகளுக்கும் பதில் அளித்து மக்களின் தீர்க்க முடியாத சந்தேகங்களை தீர்த்து வைத்திருக்கிறார். நான் சில சமயங்களில் ஆச்சரியப்பட்டிருக்கிறேன், யார் இந்த மாதிரி கேள்விகளை, எழுதி அனுப்புகிறார்கள்? ஏன் அவர்களுக்கு இது போன்றொரு சந்தேகம் வந்ததென்று. ஆனாலும், மதன் ஒரு அளவிடமுடியாத “அறிவுக் களஞ்சியம்” என்பதை நான் சொல்லத்தேவையில்லை. நான் பார்த்து வியக்கும் மனிதர்களில் அவரும் ஒருவர்.
விகடனில் வரும் தொடர்கதைகள் மிகப் பிரபலம். தொடர்கதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். வாரா வாரம், இந்த வாரம் என்ன நடந்திருக்கும், என்ன நடக்கும் என்று ஆர்வத்தோடு படிக்கும் அழகே தனிதான். அதில் தான் விறுவிறுப்பு. ஒரு நாவலை எடுத்து ஒரே மூச்சில் படித்து வைப்பதைக் காட்டிலும் (நான் ஒரே மூச்சில் முதன் முறையாக படித்த நாவல் ‘காஸனோவா 99’ என்ற ‘என்டமூரிவீரெந்திரநாத்‘ கன்னடத்தில் எழுதி அதை ‘சுசீலா கனகதுர்கா’ தமிழில் மொழிபெயர்த்தது), வாரம் முழுவதும் காத்திருந்து, புதன் கிழமை வந்தவுடன் (விகடன் முன்பெல்லாம், எனக்கு தெரிந்த “முன்பு”, புதன்கிழமைதான் வரும்), வீட்டிற்கு வந்தவுடன், கதையைப் படிப்பதென்பது தனி சுகம் தான். இன்றும் தினத்தந்தியில் வரும் கண்ணித்தீவையே வீடாமல் படிப்பவர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில், நாங்கள் சிறுவர்களாக இருந்த பொழுது, சிறுவர்மலரில், கார்ட்டூன் தொடர்களை (பெரும்பாலும் சரித்திர கதைகளே. கடைசிப்பக்கத்தில் பேய் பள்ளியை விடாமல் பல வாரங்கள் படித்துக்கொண்டு வந்தது நினைவிலிருக்கிறது) விரும்பி படித்திருக்கிறோம். விடுமுறை நாட்களில், அப்பொழுதெல்லாம் எங்கள் வீட்டில் பேப்பர் வாங்க மாட்டார்கள், பக்கத்து வீட்டில் சென்று தான் “கடன்” வாங்க வேண்டும். அதுவும் உடனே கிடைக்காது. அதெப்படி கிடைக்கும், நமக்கா வாங்குகிறார்கள்? ஆனாலும், வெள்ளிக்கிழமை ஆகி விட்டால் மனது அங்கேயே இருக்கும், அந்த பக்கத்து வீட்டு ‘அவ்வா’ காலை 11 மணிக்குத்தான் தருவார்கள். அதுவரை பொறுத்திரு மனோகரா. அதிலும் பேப்பர் கடன் வாங்கும் பொழுது, சிறுவர்மலர் கூடவே வராது, தனியாக கேட்டுத்தான் வாங்கவேண்டும். ஜாக்கிரதை. சில சமயங்களில் அவ்வாவின் பேத்தி (எங்களை விட குறைந்த வயது தான்) கொடுக்க கூடாதென்று அடம் பன்னும். எங்களுக்கு கோபம் கோபமாக வரும். கொடுத்தால் தான் என்ன? கடித்தா தின்னப் போகிறோம்! ஆனாலும் பேத்தி அழகாகவே இருக்கும். ச்சோ ச்சுவீட்.
இப்பொழுது வரை, கடைசியாக வந்த கவியரசு வைரமுத்துவின் “கருவாச்சி காவியம்” வரை நான் தொடர்கதைகளின் ரசிகன். கருவாச்சி காவியம், மிகச் சிறந்த கதை. கதை சாதரணக்கதையாக இருந்தாலும், வைரமுத்துவின் வைர வரிகள், சில சமயங்களில் முல்லென நெஞ்சில் தைக்கும், சில இடங்களில் ரோஜாவென தடவிச்செல்லும், சில சமயங்களில் வெங்காயமென (உதாரணத்திற்கு மன்னிக்கவும்) கண்களில் நீர் வரவழைக்கும். வாழ்க்கையை முழுவதுமாக அதன் வைராக்கியத்தோடு சொன்னார் வைரமுத்து. முன்பெல்லாம் ஹாய் மதனையே நான் விகடனில் முதலில் படிப்பேன், கருவாச்சி காவியம் வந்து கொண்டிருந்த பொழுது, அதுதான் முதலில். இப்பொழுது, ஓ பக்கங்கள்.
முன்பெல்லாம் தொடர்கதைகள் 2 அல்லது 3 இருக்கும், குமுதத்திலும் சரி, விகடனிலும் சரி. ஆனால் இப்பொழுது ஒன்று வருவதே அபூர்வமாகிவிட்டது. மக்கள் ஒரு வாரம் காத்திருத்தலை விரும்பவில்லையா என்ன? அப்படியெல்லாம் இல்லை, நாடகங்களை, இம்மி இம்மியாக வருடந்தோரும், ஏன் ஒரே நாடகத்தை வாழ்க்கை முழுவதும் கூட நாங்கள் பார்க்கிறபொழுது, தொடர்கதைகளை படிக்க மாட்டோமா என்ன? (நாடகங்களைப் பற்றி பிறிதொருமுறை பேசுவோம்)
இப்பொழுது, சில முக்கிய இலக்கியவாதிகள் (ஞாநி, ஜெயமோகன், அ.முத்துலிங்கம், எஸ்.ராமகிருஷ்னன், சாருநிவேதிதா(!!). சாருநிவேதிதாவின் இலக்கிய தொண்டு பின்னால் விவரிக்கப்படுகிறது) சில பொதுஜன/வெகுஜன/இலக்கிய இதழ்களில் தங்கள் பதிவுகளை (கிட்டத்தட்ட blogging தான்) நிகழ்த்தி வருகின்றனர். கவிஞர் வாலியின் ‘வாரந்தோரும் வாலி’ யும் பதிவுதான். வைரமுத்துவின் “கொஞ்சம் தேனீர் நிறைய வானம்” கூட ஒரு கவிதைப் பதிவே. வாரந்தோரும் blog. இந்த வகையாராக்களுக்கு, மதன் தான் முன்னோடி என்று நினைக்கிறேன். அல்லது சுஜாதாவாகவோகூட இருக்ககூடும். “வந்தார்கள் வென்றார்கள்” அல்லது “கற்றதும் பெற்றதும்” முன்னோடியாக இருக்கக்கூடும். கற்றதும் பெற்றதும் விகடனில் மறுபடியும் வரத்தொடங்கியிருக்கிறது சந்தோசம். சுஜாதாவின் பகுதியில் ‘எ.பி.க’ எனக்கு மிகவும் பிடிக்கும். கற்றதும் பெற்றதும் ஒரு perfect blogging.
எஸ்.ராமகிருஷ்னனின் முதலில் “துணையெழுத்து“, பின் “கதாவிலாசம்“, பின் இப்பொழுது “தேசாந்தரி” மிக நன்றாக இருந்தன. இருக்கின்றது. கதாவிலாசம் மிக மிக அருமையான ஒரு தொடர். பின் விகடன் பிரசுரத்தில் புத்தகமாக வெளிவந்தது. கிட்டத்தட்ட எல்லோர் வீட்டிலேயும் இருக்கவேண்டிய புத்தகம் அது என்று நினைக்கிறேன். கதைகளின் விலாசம் தான் அது. தலைப்பிற்கே பலமுறை அவரைப் பாராட்டலாம். பல எழுத்தாளர்களை (மௌனி, ஆ.மாதவன்), பல கதைகளை எனக்கு அறிமுகப் படுத்தியது கதாவிலாசம் தான். கதைகளை விடவும், கதைகளுக்கு முன், எஸ்.ராமகிருஷ்ணன் சொல்லும், அந்தக் கதைக்கான, பொருத்தமான ஒரு சம்பவம், மிக அழகாக இருக்கும். நெகிழ்ச்சியாகவும் இருக்கும். அதில் என் மனதில் நின்ற கதையும்,முன்னுரையும், புலிவேசம் என்ற கதையினுடையது. இப்பொழுது தேசாந்தரியில் கங்கை கொண்ட சோழபுரத்தை அழகாக விவரித்திருந்தார். “கோயிலில் நுழைந்தவுடன் காலத்தின் கண்ணுக்குத் தெரியாத பல கைகள் நம்மை வரவேற்பது போலிருந்தது” என்பது அவர் வடிக்கும் வார்த்தை சிற்பத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு. வெயிலை ஏன் அவர் எப்பொழுதும் பிடித்துக் கொண்டிருக்கிறார் என்பது ஆச்சரியம். “வெயில் நீண்டுகொண்டே போனது” என்றோ அல்லது “வெயில் கால்களை பிடித்து அவனுள்ளே ஏறிக்கொண்டிருந்ததென்றோ” அவர் எப்பொழுதும் வெயிலை குறிப்பிடுவார். அவரது “நெடுங்குருதி“யிலும் (பெயரைப் போலவே மிக நீண்ட நாவல்) ஆங்காங்கே வெயிலைக் காணலாம். முஸ்தாபாவில் ‘கதாவிலாசம்’ புத்தகம் பார்த்தேன், 19$, அப்படியே வைத்துவிட்டேன். மதுரை செல்லும் பொழுது, இலக்கிய பண்னையில் வாங்கிக் கொள்ளாலம்.
பின் ஜெயமோகனின் “வாழ்விலே ஒரு முறை” (குமுதத்தில் வந்ததென்று நினைக்கிறேன்), ஞானியின் “ஓ பக்கங்கள்” (நல்ல informative வாக இருக்கின்றது. சென்ற வாரம் வந்த வீட்டு மனை விற்பது தொடர்பான ஒன்று நன்றாக இருந்தது. இட ஒதுக்கீடு தொடர்பான அவரது புதிய வாதம் சிந்தித்தற்குரியது) சாருநிவேதிதாவின் “கோணல்” பக்கங்கள் (தலைப்பு பொருத்தம் தான்), ப்ரியா கல்யாணராமனின் “கோயில்கள்” தொடர்பான தொடர் (தலைப்பு எனக்கு சரியாக ஞாபகம் இல்லை) போன்றவையும் நன்றாகவே இருந்தன. ப்ரியா கல்யாணராமன் “ஜாக்கிரதை வயது பதினாறு” என்ற தொடர்கதையை முடித்தவுடன் கோயில்கள் பற்றி எழுதினார் என்று நினைக்கிறேன். பாவவிமோசனம்?
“ஜாக்கிரதை வயது 16” ஹிட் தொடர் தான். இதை ஆதரித்தவர்கள் (மக்கள் தான்) ஏன் “பாய்ஸ்” திரைப்படத்தை ஆதரிக்கவில்லை என்பது எனக்கு இன்றளவும் புரியாத ஒன்றாக இருக்கிறது.
(தொடரும்)
Good start.
LikeLike
where’s the 2nd part? – mondha mooki
LikeLike
எண்டமூரி வீரேந்திரநாத்தின் பணம் என்ற நாவல் குங்குமத்தில் தொடர் கதையாக வந்தது. எந்த வருஷமென நியாபகம் இல்லை. அற்புதமான கதை.சாவியில் வரும் மலையாள பேய்க் கதைகளும் விறுவிறுப்பாய் இருக்கும்.எழுதியவர் பெயர் மறந்துவிட்டது.
LikeLike
எண்ணம் எனது: வருக. என்டமூரி வீரேந்திரநாத் எழுதிய காசனோவா 99,துளசி, மீண்டும் துளசி, அந்தர் முகம் போன்ற நாவல்கள் படித்திருக்கிறேன். மிக நன்றாக இருக்கும்.
LikeLike
நன்றாக எழுதி இருக்கிறீர்கள். எப்படிப் படிக்காமல் விட்டேன் என்று தெரியவில்லை. மற்ற பாகங்களையும் படித்துவிட்டு வருகிறேன்..
LikeLike
நானும் ஒரு புத்தக புழு தான்.. தினமலர் ‘சிறுவர் மலர்’ இல் தொடங்கி ராணி காமிக்ஸ், ராஜேஷ் குமார், சுபா, பட்டுகோட்டை பிரபாகர், கல்கி, சாண்டில்யன், எண்டமூரி என்று இன்றும் வாசித்து கொண்டிருக்கிறேன். சக நண்பர்களே கீழ் கண்ட புத்தகங்களில் ஏதேனும் உங்களிடம் அல்லது உங்கள் நண்பர் வட்டங்களில் இருந்தால் எனக்கு ஒரு பிரதி வேண்டும். இந்த புத்தகங்களை ரொம்ப நாட்களாக தேடிக்கொண்டு இருக்கிறேன். தொடர்புக்கு vikram.chennai@gmail.com . இவை எல்லாம் எண்டமூரி அவர்களின் படைப்புகள் – மொழி பெயர்ப்பு சுஷீலா கனகதுர்கா. (இவரை பற்றி ஏதேனும் தகவல் தெரியுமா உங்களுக்கு?).1. அக்னி சாகரத்தின் அலைகள்2. முள் பாதை 3. பர்ணசாலை 4. பணம் மைனஸ் பணம்5. புஷ்பாஞ்சலி 6. அஷ்டவக்ரன் 7. லேடீஸ் ஹோச்டேல் 8. ஒரு ராதாவும் இரண்டு க்ரிஷ்ணர்களும் 9. துளசி தளம் 10. மீண்டும் துளசி 11. வர்ண ஜாலம் 12. நாட்டிய தாரா 13. த்ரில்லேர் இவை எல்லாம் நான் படித்து ரசித்த புத்தகங்கள்
LikeLike
மேலே குறிப்பிட்ட நாவல்களில் முள்பாதை,புஷ்பாஞ்சலி, நாட்டியதாரா இவற்றை எழுதியவர் எண்டமூரி அல்ல. தெலுங்கு வாசகர்களுக்கு நடுவில் நாவல்ராணி என்று பெயர் பெற்ற யத்தனபூடி சுலோசனாராணி. அதே போல் அக்னிசாகரத்தின் அலைகளை தெலுங்கில் எழுதியவர் கொம்மனாபள்ளி கணபதிராவ்.முள்பாதையின் புதிய மொழிபெயர்ப்பு அல்லயன்ஸ் கம்பெனி, மைலாப்பூர் அவர்கள் வெளியிட்டு உள்ளார்கள். Ph.044 24641314. மேற்கொண்டு விவரம் தேவைப்பட்டால் tkgowri@gmail.com தொடர்புகொள்ளவும்.இன்னொரு correction எண்டமூரி கன்னட எழுத்தாளர் அல்ல. தெலுகு. காஸநோவா 99 மொழிபெயர்த்தது சுசீலா கனகதுர்கா அல்ல. கௌரி கிருபானந்தன்.
LikeLike
சிறு திருத்தம். எண்டமூரி வீரேந்திரநாத் கன்னட எழுத்தாளர் அல்ல. தெலுங்கு எழுத்தாளர். காஸநோவா 99 தமிழில் மொழிபெயர்த்தது சுசீலா கனகதுர்கா அல்ல. கௌரி கிருபானந்தன்.
LikeLike