குப்பையைக் கிளறுவது கோழியல்ல

திருப்பூர் நண்பர் ஒருவர் சொன்ன தகவல் ஒன்று அதிர்ச்சியாக இருந்தது. “கோவை, ஈரோடு, திருப்பூர் போன்ற மாவட்டங்களில் மூடப்பட்ட பல ஆலைகள் திறக்கப்பட்டு, இப்போது ஜரூராக நடந்துகொண்டு இருக்கிறது. அவற்றில் நூற்றுக்கணக்கான சிறுமிகளைக் கொண்டுவந்து பணியில் அமர்த்தியுள்ளார்கள். மூன்று வருட ஒப்பந்தம். மிகவும் மோசமான உணவோடு, அடிப்படை வசதிகூட இல்லாத இடங்களில் அந்தக் குழந்தைகள் தங்கவைக்கப்படுகிறார்கள். தவிர, அந்த மூன்று வருடமும் அந்தச் சிறுமிகள், ஆலைக்கு வெளியே எங்கும் செல்ல முடியாது. இந்த மூன்று வருடச் சிறை வாழ்க்கை முடிந்து, அவர்கள் வீட்டுக்குப் போகும்போது, கையில் 30,000 ரூபாயும், திருமணம் செய்துகொள்ளத் தாலியும் கொடுக்கிறார்கள். இந்த நவீன குழந்தைக் கொத்தடிமைத் தொழிலுக்கு ‘சுமங்கலி’ என்று பெயரும் வைத்துள்ளார்கள் ” என்று வேதனையோடு குறிப்பிட்டார் அந்த நண்பர்.

“தல வாரிப் பொட்டுவெச்சு பள்ளிக்கூடம் போக நின்னேன்
மல போல தட வந்தது. ஏ…அம்மாவே தட மேல தட சொன்னது…”
பள்ளிக்கூடம் செல்ல முடியாத ஒரு குழந்தையின் ஏக்கம் தொக்கி நிற்கிற இந்தப் பாடல் வரிகள் மனதைப் பிசைகின்றன.

சாலைகளின் ஓரத்தில் நடந்து செல்லும்போதோ, ஓட்டலில் சாப்பிடும் போதோ, உறவினரின் வீட்டுக்கு விருந்துக்குப் போகும்போதோ, சிக்னலுக்காக வாகனத்தில் காத்திருக்கும்போதோ நீங்கள் கவனித்திருக்கலாம்..கலையாத கனவுகளோடும், தீராத ஏக்கங்களோடும், இளம் வயதுக்கே உரிய சந்தோஷத்தைத் தொலைத்துவிட்ட விழிகளோடும், குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்புச் சுமையோடும் ஜீவனற்று நடமாடிக்கொண்டு இருக்கும் பலப் பல குழந்தைகளை.

அரசியல் சட்டத்தின் அடிப்படையில் பார்த்தால், வேலைக்கு அமர்த்தப்படுகிற 14 வயதுக்குட்பட்ட அனைவருமே குழந்தைத் தொழிலாளர்கள்தான். பஞ்சு ஆலைகள், கண்ணாடித் தொழிற்சாலைகள், சுரங்கங்கள் என்று அந்த எந்த ஒரு அபாயகரமான தொழில்கள் எவை எவை என்பதை இன்னும் நம்முடைய சட்டங்கள் வரையறுத்துச் சொல்லவில்லை. அதனால் விதவிதமாக அரசாங்கத்தை ஏமாற்றிக் குழந்தைகளைத் தொழிலில் அமர்த்தும் கொடுமை நடந்துகொண்டு இருக்கிறது.

விடுதிகள், உணவகங்களில் மட்டுமல்ல வீட்டு வேலைக்குக்கூடச் சிறுவர்களை அமர்த்துவது குற்றம்தான்.

இந்தியாவில் உள்ள குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை ஒரு கோடிக்கும் அதிகம் என்கிறது ஒரு புள்ளிவிவரம். தமிழகத்தில் மட்டும் 6 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைத் தொழிலாளர்கள் இருப்பதாக ஒரு கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.சி.மேத்தா ஒரு தீர்ப்பில் ‘குழந்தைகள் வேலைக்கு அமர்த்தப்படுவது தெரிந்தால், அமர்த்தியவரைக் கைது செய்து, அவரிடமிருந்து 20,000 ரூபாய் அபராதம் வாங்கி, அரசாங்கமும் இன்னொரு 20,000 ரூபாய் போட்டு, அந்தக் குழந்தையின் பெற்றோருக்கு வேலை கொடுக்க வேண்டும். அப்படி வேலை கொடுக்க முடியாவிட்டால், இன்னும் 5,000 ரூபாய் போட்டு, 18-வயது வரை அந்தக் குழந்தைக்கு உதவ வேண்டும்’ என்று ஒரு டிரஸ்ட் துவங்கச் சொன்னார். அது என்ன ஆயிற்று என இன்று வரை யாருக்கும் தெரியாது.

20.8.06 விகடன் இதழிலிருந்து.

சுஜாதா குறிப்பிட்ட கவிதை ஒன்று எனக்கு ஞாபகம் வருகிறது,

குப்பையைக்
கிளறுவது கோழியல்ல
கோணிப்பையுடன் சிறுவன்.

தீர்வு?

நான் சென்னையில் இருக்கும் பொழுது நான் மற்றும் எனது நண்பர்கள் அசோக், நவநீதன், சிவா, கெம்பு மற்றும் எனது அலுவலக நண்பர்கள் சிலர் சேர்ந்து ஸ்பீட் என்ற ஒரு அமைப்பு தொடங்கினோம்.
SPEED – Society for Poverty Eradication and Educational Development. நாங்கள் ரெஜிஸ்டர் செய்யவில்லை. ஆனால் மாதா மாதம் உறுப்பினர்கள் அனைவரும் கொஞ்சம் பணம் போடுவோம். மே மாத இறுதியில் அந்த பணத்தை மொத்தமாக திரட்டி படிப்பதற்கு பணமில்லாத குழந்தைகளுக்கு உதவியிருக்கிறோம்.

இரண்டு வருடம் மட்டுமே ஒழுங்காக செயல்படுத்தினோம். அடுத்து அவரவருக்கு அவர் அவர் கஷ்டங்கள், வேலைகள் மற்றும் டி.வி.டி கள்.

நான் இதை செய்து கொண்டிருப்பதை அறிந்து (நான் சொல்லாமலே) எனது CTO என்னை அவர் அறைக்கு அழைத்து, உடனடியாக ரூ.1000 கொடுத்தார். எனது சக அலுவலர் நான் இந்த திட்டத்தை விளக்கிக்கொண்டிருக்கையில், சட்டென்று நல்ல திட்டம் முத்து, இந்தா என்னுடைய இந்த மாத கட்டணம் என்று ரூ. 100 எடுத்துக்கொடுத்தார்.

மக்கள் என்றைக்குமே உதவுவதற்கு தயாராகத்தான் இருக்கிறார்கள். தங்களால் முடிந்தவரை உடவிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களை ஒருங்கினைத்து – தண்ணீருக்கு அணை போல – செயல்படுத்தத் தான் முடியவில்லை. [இதுவும் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை]

சரி. குழந்தை படிப்பதற்கு பணம் கட்டியாகிவிட்டது. அவர்களின் தலையில் இருக்கும் குடும்ப பாரத்தை எப்படி இறக்கிவைப்பது? அடுத்தகட்ட பிரச்சனையும் இருக்கிறது.

அரசாங்கத்திற்கு மட்டும் தான் அக்கறை வேண்டுமா? குழந்தைகளின் மீதான நமது அக்கறை அவ்வளவுதானா?

3 thoughts on “குப்பையைக் கிளறுவது கோழியல்ல

  1. //சாலைகளின் ஓரத்தில் நடந்து செல்லும்போதோ, ஓட்டலில் சாப்பிடும் போதோ, உறவினரின் வீட்டுக்கு விருந்துக்குப் போகும்போதோ, சிக்னலுக்காக வாகனத்தில் காத்திருக்கும்போதோ நீங்கள் கவனித்திருக்கலாம்..கலையாத கனவுகளோடும், தீராத ஏக்கங்களோடும், இளம் வயதுக்கே உரிய சந்தோஷத்தைத் தொலைத்துவிட்ட விழிகளோடும், குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்புச் சுமையோடும் ஜீவனற்று நடமாடிக்கொண்டு இருக்கும் பலப் பல குழந்தைகளை.//அய்யகோ! படிக்கும் போதே நெஞ்சு பதைக்கிறதே. கலைஞர் அரசு இச் சிறுவர்களுக்கு நல்வாழ்வளிக்க நல்ல திட்டம் தீட்டி நடைமுறைப்படுத்த வேண்டும். சும்மா, இலவச தொலைக்காட்சி போன்ற விளம்பர அரசியலை விடுத்து, தமிழர்களின் எதிர்காலச் சந்ததிகளை வாழவைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க கலைஞர் முன் வரவேண்டும்.

    Like

  2. முத்து!எனக்கும் இந்த ஆதங்கம் நிறைய உண்டு. இந்த விஷயம் நிறைய பத்திரிக்கைகளில் வந்து எல்லோரையும் வருந்தசெய்த விஷயம். ஆனால் சட்டசபையில் ஒருவர் கூட கவனத்திற்கு கொண்டு வந்ததாக நினைவில்லை.

    Like

  3. வெற்றி, கடைசிப்பக்கம் : வருகைக்கு நன்றி. இளமையில் வறுமை கொடிது என்று வகைப்படுத்தினார் ஔவையார், ஆனால் அதனினும் கொடிது இளமையில் கல்வி மறுக்கப்படுவது. மழைக்கு ஒதுங்கவில்லையெனினும் உணவிற்காகவாது ஒதுங்குங்கள் என்றார் காமராசர், அவரது திட்டம் இன்றளவும் அப்படியே இருக்கிறது, எந்த முன்னேற்றமும் இல்லாமல். இன்னும் கரும்பலகையும், சாக்பீசும் ஏன் ஆசிரியர்களே இல்லாத பள்ளிகள் நிறைய இருக்கின்றன. அரசு கல்வி நிறுவனங்களில் இலவச முட்டை மட்டும் பத்தாது, தனியார் நிறுவனங்களின் தரம் வேண்டும். சற்று கடினம் தான். திட்டங்கள் வளர்ச்சியடைய வேண்டுமா இல்லையா? சத்துணவிலே நின்று கொண்டிருந்தால் எப்படி? முறையிடுவது எளிது, தீர்வு கடினம்.

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s