சோழ சாம்ராஜ்ஜியத்தின் பின்னனியில் புனையப்பட்ட நாவலில் – பொன்னியின் செல்வனாகட்டும் அல்லது உடையார் ஆகட்டும் – சோழப்பேரரசின் வலிமையும், பெருமையும், சிறுமை – இருக்குங்கால் – யும் அறியப்படும். குடும்ப வியாபரம் சம்பந்தமான நாவல்களில் வியாபாரமும், குடும்பத்தால் ஏற்படும் சிக்கல்களும், குடும்பத்தால் சிக்கல்கள் தீர்வதையும் காணலாம். துறவியர் சம்பந்தமான நாவல்களில் அவர்களது தன்னைப் புறக்கனித்தலை -self denial – அறிந்துகொள்ளலாம். துப்பறியும் நாவல்களில் சகட்டுமேனிக்கு திருப்பங்கள் – யூகிக்க முடிந்ததோ, யூகிக்க முடியாததோ – இருக்கலாம். மென்பொருள் சார்ந்த நாவல்களில் என்ன இருக்கலாம்? லன்டன், மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, தாய்லாந்து, மசாஜ்பார்லர்கள் மற்றும் ஒன்றிற்கு மேற்பட்ட காதல்கள்??!!!
மூன்றுவிரல் நாவலைப் பற்றி நான் பல முறை கேள்விப்பட்டிருக்கிறேன். தமிழில் மென்பொருள் துறையை பின்புலமாக கொண்ட முதல் புனைவு நாவல் என்றும் சொல்லக்கேள்விப்பட்டிருக்கிறேன். வாசிக்கும் வாய்ப்பு சமீபத்தில் தான் கிட்டியது. ஒரே மூச்சில் வாசித்துவிடும் நாவல் அல்ல இது. விடாமல் நம்மை படிக்கச்சொல்லும் மர்மங்கள் நிறைந்ததல்ல. முடிச்சுகள் இல்லை. ஆனால் கதாசிரியரின் பறந்து விரிந்த நகைச்சுவை திறன் இருக்கிறது. பல வாக்கியங்கள் பல அர்த்தங்கள் தொனிந்தவை : டபுள் மீனிங்?! – புதுமைப்பித்தன் இயல்பு நிலையைச் சொல்வதில் தவறில்லை என்றிருக்கிறார் – அவை சட்டென்று நம்மை மெல்லிய புன்னகை சிந்த வைப்பவை. ஒரு யூத் ·புல்லான நடை. சுஜாதாத்தனம். அது தான் நம்மை படிக்கத்தூண்டுகிறது. அதே சமயம், மென்பொருளை நிறைய சேர்க்காமல், அனைவரும் படிக்கவேண்டும் என்று நினைத்து எழுதியிருக்கிறார். ஹீரோ மென்பொருள் வல்லுநர். அவ்வளவே. கதையில் டெக்னிக்கல் சமாசாரம் ரொம்ப குறைவு. சிங்கில்டன் கிளாஸ் – singleton class – கிளையன்ட் சைன் ஆப், யூ.எம்.எல், புரபோசல் என்று ஆங்காங்கே நம்ப மேட்டர்.
என்னை மறந்து சிரித்த இடம் :
நம்ப ஹீரோ லண்டன் வந்து ஒருவாரம் ஆகிவிட்டது:
வந்த ஒரு வாரத்தில் தெருவோர முத்தம், ரயிலுக்குக் காத்துக் கொண்டிருக்கும்போது முத்தம், ரயில்பெட்டி முத்தம், டாக்சிக்குள் முத்தம், டெலிபோன் கூண்டுக்குள் முத்தம், கே.எப்.சி. யில் கோழிக்கறி சேர்த்த பர்கருக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு குறுந்தாடி முதலாளி சிலையின் மேல் சாய்ந்தபடிக்கு அவசர முத்தம் என்று சகலமான உதட்டு ஒத்தடங்களையும் பார்த்து இச்சென்று சத்தம் எங்கேயாவது கேட்டால் போய்யா புண்ணாக்கு என்று வேலையைத் தொடரப்பழகிபோயிருந்த சுதர்சனுக்கு…..
நீங்கள் சிரிக்கவில்லை என்றால் அதற்கு நான் என்ன செய்யமுடியும் சொல்லுங்கள்?. பெரும்பாலும், வெளிநாட்டுக்கு செல்லும் எல்லா இளைஞர்களுக்கும் இந்த அனுபவம் இருக்கும் என்று நினைக்கிறேன்.
மற்றொரு இயல்பான நகைச்சுவை,
கண்ணாத்தா சுதர்சனின் டீம் மெம்பர்.
கண்ணாத்தா அவனுக்கு முன்னால் ஒரு கத்தைக் காகிதத்தை பரப்பிக்கொண்டு உட்கார்ந்தாள்.
‘சுதர்சன் உனக்கு கல்யாணமா? எப்போ?’
‘நீ ஒரு தப்பும் இல்லாம கோட் எப்ப எழுதறியோ அதுக்கு அடுத்த நாள்’
‘இந்த ஜென்மம் முழுக்க நீ பிரம்மச்சாரியா இருக்க வேண்டியதுதான்’
எச்சரிக்கை : கதை மற்றும் முடிவும் சொல்லியிருக்கிறேன்.
லண்டன் செல்லும் -மென் பொருளை கொடுத்துவிட்டு, க்ளையன்டிடம் கையழுத்து வாங்கி வரவேண்டும் -நம்மூர் மென்பொருள் வல்லுநர், சுதர்சன், அங்கே ஒரு பெண்ணை -சந்தியா -பார்த்து, பார்த்தவுடன் லவ்வத்தொடங்குகிறார். அவளும் லண்டனின் செயர்கைத்தனம் மற்றும் அம்மா, வளர்ப்பு அப்பாவின் நிராகரிப்பால், இவனைக்கண்டவுடன் ஒட்டிக்கொள்கிறார். அவள் இந்தியா வரவேண்டும் என்று ஆசைப்படுகிறாள்.அவளும் நன்றாக படித்துவிட்டு நல்ல வேலையிலிருப்பவள் தான்.
தற்செயலாக விமானத்தில் உடன்பயனிக்கும் நண்பர் ஒருவர், தான் ஆரம்பிக்கபோகும் புது மென்பொருள் அலுவலகத்திற்கு சுதர்சனை அழைக்க, சுதர்சனும் ஒத்துக்கொள்கிறார். சந்தியாவுக்கும் அதே அலுவலகத்தில் வேலை கிடைத்துவிடுகிறது. சுதர்சன் இந்தியா திரும்பியிருக்கையில், அவனுடைய பெற்றோர்கள் அவனுக்கு சொந்தத்திலே ஒரு பெண்ணைப் பார்க்கிறார்கள். அவளும் வீட்டில் வளைய வருகிறாள். சுதர்சனை அவளுக்கு நிறைய -லிப் கிஸ் அடிக்கும் அளவிற்கு – பிடிக்கிறது. சுதர்சனுக்கும் தான். ஆனால் சந்தியா வேறு மனசாட்சியாய் பயமுறுத்துகிறாள். தலைக்கு மேல் முட்டை பல்பாயிருந்து மிரட்டுகிறாள். சுதர்சன் சந்தியாவைப்பற்றி சொல்லாமலே தாய்லாந்து கிளம்புகிறான். சந்தியாவும் தாய்லாந்து வரவேண்டும் என்பது ஏற்பாடு.
தாய்லாந்தில் புராஜெக்ட் மென்னியைப்பிடிக்கிறது. வீட்டில் பார்த்தபெண்ணிற்கு இவன் சரியாக பதில் சொல்லாமல் நழுவுவதை அறிந்து; அவள் தீர்மானமாய் கேட்கிறாள். அவளிடம் சந்தியாவைப்பற்றி சொல்லிவிடுகிறான். அவள் அழுகிறாள். பிறகு இன்னொரு மென்பொருள் வல்லுநருக்கு மணமுடிக்கப்பட்டு அமெரிக்கா செல்கிறாள்.
சுதர்ஷன் டீம் லீடராக இருக்கிறான். சுதர்சனின் டீமில் கண்ணாத்தா என்றொரு பெண் இருக்கிறாள். இருவரும் நண்பர்களாகப் பழகுகின்றனர். கண்ணாத்தா அறிமுகம் செய்யப்படும் பொழுதே நமக்கு -எனக்கு- சுதர்சன் இவளைத்தான் மணமுடிக்கப் போகிறான் என்று தெரிந்துவிடுகிறது. தாய்லாந்து வருவதற்கு முன் சந்தியா வேலை நிமித்தமாக அமெரிக்கா போக வேண்டிய நிர்பந்தம் உண்டாகிறது. அங்கே world trade center தகர்க்கப்பட்ட சம்பவத்தில் பலியாகிறாள். இந்த ஒரு இடம் மட்டுமே யாரும் எதிர்பாறாதது. மிக மெல்லிய ஆனால் அதிர்வைத்தரும் ஷாக். நன்றாக இணைத்திருக்கிறார்.
சில நாட்கள் பித்து பிடித்தார்போல் திரியும் சுதர்ஷன், பிறகு வீட்டிற்கு சொல்லாமல் கண்ணாத்தாவைக் கரம் பிடிக்கிறான்.
அமெரிக்காவுக்கு செல்கிறான். மறுபடியும் புரோகிராமராக. முடிவு தான் எனக்கு பிடிக்கவில்லை.
புரோகிராமராக சென்றவன் சிறிது நாட்களில் வேலை இழக்கிறான். மேலும் பல நாட்கள் வேலைக்கு மனு போடுகிறான். வேலை கிடைத்தபாடில்லை. பிறகு ஒரு நாள் தனக்கு வீட்டில் பார்த்த பெண்ணை பார்க்கிறான். அவள் ரெஸ்டாரெண்ட் ஒன்று வைத்திருக்கிறாள். அவளுடைய ரெஸ்டாரெண்டில் சாம்பார் ஊற்றிக்கொண்டு காலத்தை கழிக்கிறான்.
கன்ட்ரோல் – ஆல்ட் – டெலீட் போட்டு வாழ்க்கையை முதலிலிருந்து தொடங்கலாம் என்ற கனவோடு.
ctrl-alt-del : மூன்று விரல்.
கரு: [இதுவாகத்தான் இருக்கவேண்டும்]
வாழ்க்கை நிற்காது. அவ்வப்போது சண்டித்தனம் செய்யும்.
கன்ட்ரோல்-ஆல்ட்டர்-டெலீட்.
திரும்ப இயக்கம்.
ஏதேதோ இழந்து போயிருக்கலாம். ஆனால் என்ன? முதலில் இருந்து தொடங்கவேண்டியது தான்.
ஜாலியாக படிக்கலாம். இளமையாக இருக்கிறது.
புத்தக விபரம்:
பெயர் : மூன்று விரல்
ஆசிரியர் : இரா. முருகன்
வெளியீடு : சபரி பப்ளிகேஷன்ஸ்
விலை: ரூ. 145
வழக்கமான காதல் கதையில்லாமல் நடைமுறை காதல் கதையாய் போகும் போல
LikeLike
சபரியில் போட்டது தீர்ந்து போய் இப்பொழுது கிழக்கு பதிப்பகம் வாயிலாக இரண்டாம் பதிப்பு வெளிவந்துள்ளது. நீங்கள் கொடுத்துள்ள அட்டைப்படம் கிழக்கின் வழியாக வந்த வெளியீட்டின் அட்டைப்படம். விலை ரூ. 150.
LikeLike
சபரி : வருகைக்கு நன்றி. நான் இன்டர்நெட்டில் மூன்றுவிரலின் படம் தேடியபொழுது இது தான் கிடைத்தது. ஆனால் நான் படித்த புத்தகத்தின் அட்டைப்படம் வேறு மாதிரி இருக்கிறதே என்று நினைத்துக்கொண்டே தான் பதிவு செய்தேன். சந்தேகத்தை தீர்த்து வைத்தீர்கள். நன்றி.நிர்மல் : வருகைக்கு நன்றி. வழக்கமான காதல் கதைபோல் இல்லைதான். ஆட்டோகிராப் ரகம். இயல்பு தானே.
LikeLike
பத்ரி மன்னித்து விடுங்கள். சபரி பப்ளிகேசன்சையே நினைத்துக்கொண்டு, உங்களை சபரி என்று தவறாக கூறிவிட்டேன்.
LikeLike