ஆயிரம் கால் இலக்கியம் – 3

 

‘சிறுகதை’ என்ற சொல் short story என்ற ஆங்கிலச் சொல்லின் மொழிபெயர்ப்பு. இச்சொல்லை வைத்து சிறுகதை என்ற வடிவத்தை புரிந்துகொள்ளக்கூடாது. இது சிறுகதை என்ற வடிவம் உருவாகி வந்த ஆரம்ப நாட்களில் போடப்பட்ட ஒரு பொதுப்பெயர் மட்டுமே.

அதாவது சிறுகதை என்றால் ‘சிறிய கதை’ அல்ல. எல்லா சிறிய கதைகளும் சிறுகதைகள் அல்ல. சிறுகதை என்பது ஒரு தனித்த இலக்கியவடிவம். அதற்கு தனியான வடிவச்சிறப்புகள் உண்டு.

சிறிய கதைகள் பலவகை. உதாரணகதைகள் நீதிக்கதைகள், உருவகக் கதைகள், நிகழ்ச்சித்துணுக்குகள் எல்லாமே சிறிய கதைகள்தான்.

பள்ளியில் காக்கா வடை சுட்டது போன்ற நீதிக்கதைகளை நாம் படித்திருப்போம். ஏசுகிறிஸ்து, ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்ற மகான்கள் நிறைய உதாரணக்கதைகளை சொல்லியிருக்கிறார்கள். பஞ்சதந்திரக்கதைகள் ஈசாப் குட்டிக்கதைகள் போல பலவகையான உருவகக் கதைகளை நாம் கேட்டிருப்போம்.

இவை ஏதும் சிறுகதைகள் அல்ல.

புதுமைப்பித்தன் முதல் சுஜாதா வரையிலான எழுத்தாளர்கள் எழுதும் சிறுகதைகளுக்கும் இவற்றுக்கும் முக்கியமான ஒரு வேறுபாடு உண்டு. அதுதான் சிறுகதையின் அடையாளம்.

அது என்ன?

அதை கதையின் முடிப்பில் உள்ள ‘திருப்பம்’ என்றும் சொல்லலாம். இதை ஆங்கிலத்தில் ‘twist’ என்று சொல்கிறார்கள்.

அதாவது ஒரு சிறிய கதையை சிறு கதையாக ஆக்குவது திருப்பம்தான். ‘சிறுகதை என்றால் இறுதியில் திருப்பம் உள்ள சிறிய கதை’ என்று எளிமையாக வரையறை செய்யாலாம்.

-சிங்கப்பூரில் ஜெயமோகன் சிறுகதைப்பட்டறையில் பேசியது.

காக்கா வடை சுட்ட கதையை சமீபத்தில் கணையாழியில் படிக்க நேர்ந்தது. அதில் என்ன படிக்கவேண்டியதிருக்கிறது என்கிறீர்களா? அடுத்த பகுதியில் இதைப் பார்ப்போம்.

ஜெயமோகனின் நிறைய கதைகள் சுஜாதாவின் கதைகளைப் போல அதிரடித் திருப்பம் கொண்டிராது. ஆனால் ஒரு மெல்லிய திருப்பம் கண்டிப்பாக இருக்கும். சில சமயங்களில் அது மிகுந்த நகைச்சுவையாக இருக்கும். சில சமையங்களில் மிக மெல்லிய மனஅதிர்வைக்கொடுக்கும். ‘ தேவகி சித்தியின் டைரி ‘ யைப் போல. ஜெயமோகன் சிறுகதைத் தொகுப்பை படிக்க எடுத்த பொழுது, கதை-பக்கம் (index) வரிசையில், தேவகி சித்தியின் டைரிதான் என் கண்களை சட்டென்று கவர்ந்தது. சித்தி டைரியில் என்ன எழுதியிருப்பார் என்ற எண்ணம் கூட காரணமாக இருக்கலாம்! ஆனால் பெரும்பாலும் இவ்வகையான வாக்கியத் தலைப்புகள், அதிலும் மர்மம் மிகுந்த தலைப்புகள், பலரது கவனத்தைக் கவரும். கௌதம் எழுதிய ‘ ஒரு நண்பனின் நிஜம் ‘ தலைப்பை போல.

தேவகி சித்தி ஒரு கூட்டுக் குடும்பத்தில் வாக்கப்பட்டு அவருகிறாள். அந்த குடும்பத்தில் அப்பா, அம்மா, இரண்டு மகன்கள் உண்டு. தேவகிச் சித்தி இரண்டாம் மகனுக்கு மணமுடிக்கப்பட்டு அந்த வீட்டிற்கு வருகிறாள். தேவகி சித்தி பட்டணத்தில் படித்தவள். திருமணத்திற்கு பிறகும் வேலைக்கு சென்று கொண்டிருப்பவள். ஒரு பெண் சொந்தக்காலில் நிற்பது, இன்னொரு – சொந்த காலில் நிற்காத – பெண்ணிற்கு பெரும்பாலும் பிடிப்பதில்லை. இருவருமே அடிமைகளாக இருந்துவிட்டால் சந்தோஷம் தான்! அந்த வீட்டில் சும்மா இருக்கும் மூத்த மருமகளுக்கு தேவகிச் சித்தியைக் கண்டாலே பிடிப்பதில்லை. அதிலும் குறிப்பாக தேவகி சித்தி டைரி எழுதி வருவது அவர்களுக்கு மிகுந்த எரிச்சலைத் தருகிறது. சித்தி டைரி எழுதிக்கொண்டிருக்கிறாள் என்ற விசயத்தைக் கண்டுபிடிப்பது மூத்த மருமகளின் மூத்த மகன். முதல் பேரன்.

தேவகிச் சித்தி அந்த டைரியில் என்ன எழுதியிருப்பாள் என்று அனைவரின் – முதல் மருமகள், அப்பா (மாமனார்), அம்மா(மாமியார்) – தலையையும் குடைகிறது. அவள் இல்லாத நேரங்களில் அவள் அறையை சோதனை போடுகிறார்கள். டைரி கிடைக்கவில்லை. அன்று தேவகிச்சித்தி டைரியை பீரோவில் வைத்து பூட்டி சாவியை கைப்பையில் போட்டுக் கொண்டு போய் விடுகிறாள். டைரி கிடைக்காததைக் காட்டிலும் அவள் சாவியை கைப்பையில் போட்டுக்கொண்டு போனது அவர்களுக்கு மிகுந்த எரிச்சலைத் தருகிறது.

அன்று மாலை முதல் மகன் வந்தவுடன் முதல் மருமகள் டைரி பேச்சை எடுக்கிறாள். பிரச்சனை அலசப்படுகிறது. முதல்-மகன் முதலில் இது ஒரு பிரச்சனையா என்று நினைத்தவர், பிறகு அப்பா அம்மாவின் நிர்பந்தத்தால் தன் தம்பியை – தேவகி சித்தியின் கணவன் – அழைத்து விசாரனை செய்கிறார். தேவகிசித்தியின் கணவன் முதலில் இதை எப்படி அண்ணா அவளிடம் கேட்பது என்று தயங்கி பிறகு குடும்பத்தின் நிர்பந்தத்தால், தேவகியை அழைத்து டைரியைப் பற்றி கேட்கிறார். அவர் தேவகிசித்தியை ‘தேவு’ என்று அழைப்பது குறிப்பித்தக்கது.

தேவகிச்சித்தியும் டைரியை சபை முன்னர் எடுத்துக்காட்டுகிறாள். அப்பா (மாமனார்) அதை அனைவரின் முன்னால் வாசித்துக்க்காட்டச் சொல்கிறார். தேவகி பதறுகிறாள். வாசிக்கக் கூடாது என்று அடம் பண்ணுகிறாள். அது என்னுடையது. அதை யாருக்கும் காட்டமாட்டேன் என்கிறாள். மற்றவர்கள் – சித்தியின் கணவன் உட்பட – கோபம் அடைகின்றனர். ஒன்றும் இல்லையென்றால் வாசித்துக்காட்டவேணிடியது தானே. சித்தி சாமி மேல் சத்தியமாக அதில் ஒன்றும் இல்லை என்றும், வாசிக்கமட்டும் வேண்டாம் என்றும் சொல்கிறாள். முதல் மருமகள் அதற்குள் சித்தியிடமிருந்து லாவகமாக டைரியைப் பிடுங்கிவிடுகிறாள். தேவகி வெறி கொண்டார்போல ஓடிச்சென்று அவளிடமிருந்து பிடுங்கி, சமையலறைக்குள் சென்று கதவைச்சாத்திக்கொள்கிறாள். உள்ளிருந்து மண்ணென்ணெய் வாசனையும்,கருகிய வாசனையும் வருகிறது. அனைவரும் கலவரமடைந்து கதவைத்தட்டுகிறார்கள். சிறுது நேரத்திற்கு பின்னர் சித்தி மதுவாக கதவைத்திறந்து கொண்டு வெளியே வருகிறாள். டைரி எரிந்து சாம்பலாகக் கிடக்கிறது. தேவகியின் கணவர் கடுங்கோபத்திற்குள்ளாகிறார். தேவகியை கடுமையான வார்த்திகளால் திட்டுகிறார். அவளைக்கொண்டுபோய் அவளது தந்தையின் வீட்டில் விட்டு விடுகிறான். யார் யாரோ வந்து சமாதானம் செய்கின்றனர்.

இந்த கதையைச் சொல்லிக்கொண்டு வந்த கதை சொல்லி – முதல் பேரன் – இவ்வாறு முடிக்கிறான்:

தேவகிச்சித்தியை சித்தப்பா விவாகரத்து செய்துவிட்ட விசயம் அவர் மூன்று வருடம் கழித்து மறுமணம் செய்து கொண்ட பொழுது தான் தெரியவந்தது.”
கதை சொல்லியைப் போலவே, டைரியில் என்ன எழுதப்பட்டிருந்தது என்பது கடைசிவரை எனக்கும் தெரியாமலே போனது. மறுமுறை ஜெயமோகனை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் கேட்க வேண்டும். அவருக்கு மட்டும் தெரியுமா என்ன?

‘looking into ones diary is looking into ones bathroom’ என்று யாரோ சொன்னதாய் ஞாபகம். ஆனால் கூட்டுக்குடும்பத்தில் யார் கண்ணிலும் படாமல் வைத்திருக்கமுடியுமா என்ன? இதை எழுதிக்கொண்டிருக்கும் பொழுதுதான் தமிழகத்தில் டைரி எழுதும் பழக்கம் எப்பொழுதிலிருந்து இருந்திருக்கிம் என்ற எண்ணம் தோன்றியது. மொழி எப்பொழுது எழுத்து வடிவம் பெற்றதோ அப்பொழுதிலிருந்து இருந்திருக்கவேண்டும். திருக்குறள் கூட திருவள்ளுவரின் டைரிக்குறிப்பாக இருக்கலாம். எனக்கு போன வருடம் வரை டைரி எழுதும் பழக்கம் இருந்தது. இப்பொழுது விட்டுவிட்டேன்.

சமீபத்தில் சுஜாதாவின் சிறுகதையொன்று குமுதத்திலே வெளிவந்திருந்தது. மிகவும் நன்றாக இருந்தது. கொடுத்த ஒரு டாலர் அந்த ஒரு கதைக்கே தகும்.

கதை சொல்லுபவர் அழுக்கு சட்டையும், அழுக்கு பேண்ட்டும், அறுந்த ரப்பர் செருப்புமாய் டோன்ட் கேர் பார்ட்டி. பீச்சில் உட்கார்ந்து புத்தகம் படிப்பது வாடிக்கை. அவர் தினமும் , ஒரு பணக்காரர் – தோரனையிலே தெரிகிறது, காரில் வந்து இறங்குவதும், டிரைவர் வந்து கதவைத்திறக்கும் வரையில் உள்ளேயே அமர்ந்திருப்பதுமே சொல்கிறது – வாக்கிங் வருவதைப் பார்க்கிறார். தினமும் ஒரே மாதிரியாக காரை விட்டு இறங்கி, ஒரே அளவு தூரம் நடந்து, ஒரே பெஞ்சில் உட்கார்வதே வழக்கம். ஒரு நாள் அவர் வாக்கிங்முடித்து விட்டு பெஞ்சில் வந்து உட்காரும் பொழுது நம்ம அறுந்த ரப்பர் செறுப்பு ( இனி அ.ர.செ) அதே பெஞ்சில் உட்கார்ந்து வெகு உன்னிப்பாய் ஒரு புத்தகத்தைப் படித்துக்கொண்டிருக்கிறது. செல்வந்தருக்கு மிகுந்த எரிச்சலாகப் போய்விடுகிறது. அ.ர.செ யின் தன்னுடன் பொருந்தாத தோற்றம் ‘உச்’ கொட்ட வைக்கிறது. ‘உச்’ கேட்ட அ.ர.செ பெஞ்ச் என்ன இவன் பாட்டன் சொத்தா என்று எங்கேயும் போகாமல் அங்கேயே உட்கார்ந்து கொள்கிறது. அன்று மட்டுமல்ல, அடுத்த நாளும் அதே பெஞ்சில் வேண்டுமென்றே வந்து உட்கார்ந்து கொள்கிறது. செல்வந்தர் அடுத்த பெஞ்சை ட்ரைப் பண்ணிப்பார்க்கிறார். அது கொஞ்சம் தூரமாக இருக்கிறது. இன்னும் கொஞ்ச தூரம் நடக்க வேண்டும். வேறு வழியில்லாம அதே பெஞ்சில் அ.ர.செ யுடன் உட்கார்ந்து கொள்கிறார். முதலில் கடுமையாக முகத்தை வைத்துக்கொண்ட செல்வந்தர், பிறகு புன்னகைக்க ஆரம்பிக்கிறார். அவர்களுக்குள் இனம்புரியாத நட்பு உருவாகிறது. அடுத்த சில நாட்களில் அ.ர.செ வரவில்லையென்றால், எங்கே இன்னும் காணோம் என்று தேடாஅரம்பித்துவிடுகிறார் செல்வந்தர்.

ஒரு நாள், செல்வந்தரும், அ.ர.செ யும் பெஞ்சில் உட்கார்ந்திருந்த பொழுது, மற்றொரு கார் வந்து நிற்கிறது. டிரைவர் இறங்கிவந்து ‘அம்மா பணம் கேட்டார்கள்’ என்கிறான். அதான் நிறைய கிரடிட்கார்டுகள் வைத்திருப்பார்களே. எங்கே தொலைத்தார்களாம் என்று நக்கலாக கேட்கிறார் செல்வந்தர். கிரடிட் கார்டு முடிந்து விட்டது என்றும் இப்பொழுது அம்மா 30,000 ரூபாய் கேட்கிறார்கள் என்கிறான். கோபமடைந்த செல்வந்தர் கொடுக்கமுடியாது போ என்கறு சொல்லி அனுப்பிவிடுகிறார்.

பிறகு அருகில் அமர்ந்திருக்கும் அ.ர.செயிடம் அந்த அம்மா தன் மனைவி என்றும் . தன் மனைவியும் மனனும் சரியான பணப்பேய்கள் என்றும் சொல்கிறார். அ.ர.செ. பணம் கேட்டால் குடுத்துவிடவேண்டியது தானே, உங்ளிடம் தான் நிறைய இருக்கிறதே என்கிறது. அவளாக வந்து கேட்டிருந்தால் கொடுத்திருப்பேன் என்கிறார் செல்வந்தர். பணம் ஒரு பிரச்சனையில்லை என்றும் தான்னிடம் நிறைய சொத்துக்கள் இருக்கின்றதென்றும், பினாமி பேரிலும் நிறைய சொத்துக்கள் இருக்கின்றதென்றும், எங்கெங்கே என்னெவென்ன இருக்கிறது என்ற விபரங்களையும் கூறுகிறார். சொத்தின் மேலேயே தன் மனைவிக்கும் மனனுக்கும் ஆசை என்றும் கூறுகிறார். அ.ர.செ, அப்படியென்றால், உங்க மகனையும், மனைவியையும் பழிவாங்க உங்க வரிப்பணத்தை கட்டிவிடுங்கள். உங்கள் பாதி சொத்துக்கள் குறைந்துவிடும். மனைவிவும், மகனும் திருந்துவதற்கு வாய்ப்பிருக்கிறது என்றும் சொல்கிறது. கோபமடைந்த செல்வந்தர் அனைவரும் ஒழுங்காக வரி கட்டுகிறார்களா? நான் மட்டும் ஏன் நான் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை வரியாக கட்ட்வேண்டும் என்றும் சொல்கிறார்.

கடலை வண்டி வருகிறது. அ.ர.செ. செல்வந்தருக்கு கடலை வாங்கிக்கொடுக்கிறது. முதலில் மறுத்த செல்வந்தர் பிறகு இதையும் எப்படியிருக்கிறதென்று பார்த்து விடுவோமே என்று வாங்கிகொண்டு, கடலைக்கு பணம் கொடுக்க 1000 ரூபாய் நோட்டை எடுக்கிறார். சிரித்துக்கொண்டே அ.ர.செ யே கடலைக்கு பணம் கொடுத்துவிடுகிறது. கடலை சாப்பிட்டுக்கொண்டே செல்வந்தர், உங்களுக்கு என்ன ஜாலிதான், பிக்கல் பிடுங்கல் இல்லாம இங்க வந்து புத்தகத்த தூக்கிவச்சுக்கிட்டு உட்கார்ந்திடுறீங்க என்கிறார். அதற்கு அரசெ, என் பாடு உங்களுக்கென்ன தெரியும்? நான் கவர்மெண்ட் வேலையில இருக்கிறவன். பாதி மாசத்திலே சம்பளம் தீர்ந்து போய் விடுகிறது. அதற்கப்புறம் பெண்டாட்டியிடம் தான் கேட்க வேணிடியிருக்கிறது என்றும் சொல்கிறது.

செல்வந்தர் கவர்மெண்ட் வேலையா என்று அறுந்த செருப்பையும், கிழிந்த சட்டையும் பார்த்துக்கொண்டே கேட்கிறார். அரசெ , நம்ப முடியலையா? அறுந்த செருப்பை பார்க்கறீங்களா? வேலைக்காக வேஷம் போடவேண்டியதிருக்கிறது. நான் சென்ட்ரல் போர்ட் எம்ப்ளாயி. இன்கம்டாக்ஸ் டிவிசனல் டைரக்டராக இருக்கிறேன். வருகிறேன், என்று சொல்லிக்கொண்டே எழுந்து செல்கிறது.

நீங்கள் இந்த முடிவை முன்கூட்டியே யூகித்திருந்தீர்கள் என்றால் அது முற்றிலும் என்னுடைய தவறே. சுஜாதா சற்றும் யூகத்திற்கு இடம் தராமல் கதையை நகர்த்திச் சென்றார்.

அதே வார விகடனில், நான் இரசித்த ஹி.ஹி.கூ.

தம்மடிச்சா கேன்சராம்
தண்ணியடிச்சா அல்சராம்
கூல்டிரிங்க்ஸ் பூராம்
பாய்ஸ்சனாம்
கொழாப்புட்டு தின்னுபுட்டு
குந்திக்கடா கோவிந்து

மற்றொரு கதை: இதை நான் கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு முன்னர் படித்ததென்று நினைக்கிறேன். திடீரென்று இந்த நொடியில் தான் நினைவுக்கு வந்தது. குமுதத்தில் வந்தது.

ஆஸ்பத்திரியில் ஒருவர் மயக்க நிலையிலிருந்து கண் விழிக்கிறார். எழுந்தவர் தன் மனைவியையும் மகனையும் எங்கே என்று தேடுகிறார். நர்ஸ் இவர் கண்விழித்ததைப் பார்த்து, இதோ உங்கள் குடும்பத்திற்கு தகவல் கொடுக்கிறேன் என்று சொல்லு சென்று விடுகிறாள். சரி என்று இவர், மேசையில் இருக்கும் வார இதழை எடுக்கிறார். அதில், இந்த படத்திற்கு அப்புறம் ரஜினி அரசியலில் குதிப்பாரா? வீரப்பனை பிடித்து விடுவோம் என்று அதிரடிப்படை சபதம். காவேரி பேச்சுவார்த்தைக்கு மந்திரிகள் டெல்லி பயணம் என்று அனைத்தையும் ஒன்று விடாமல் படிக்கிறார்.

சிறிது நேரத்தில் அவர் மனைவி உள்ளே வருகிறாள். மனைவியைப்பார்த்தது மெலிந்து விட்டாள் என்று நினைத்துக்கொள்கிறார். அவள் பின்னாலேயே வாலிபன் ஒருவன் வருகிறான். அவனைப்பார்த்து சும்மா சிரித்துவிட்டு, ‘நம்ப பையன் சுகு எங்கம்மா?’ என்று தன் மனைவியைப்பார்த்து கேட்கிறார். மனைவி உடனே ‘இவன் தான் நம்ப பையன்’ என்று வாலிபனைக் காட்டுகிறாள். ‘நீங்க கோமாவுல இருந்த இந்த பத்து வருசத்தில தடிமாடு மாதிரி நல்லா வளர்ந்திட்டான்.’ என்கிறாள். அவர் அதிர்ந்து போய் வார இதழைப் பார்க்கிறார்.

இப்பொழுது, பத்து வருடங்களாகியும் செய்திகள் மாறாமல் இருக்கின்றன என்று சொல்லமுடியாதுதான். சரியா?

(தொடரும்)

13 thoughts on “ஆயிரம் கால் இலக்கியம் – 3

  1. நிர்மல் : வருகைக்கு நன்றி. ஜெயமோகன் கதை பிடிக்கவில்லையா? மொ.மூ: எழுத்து திறமையா? உனக்கு நக்கல் ஜாஸ்தியாயிடுச்சு.eddie: thanks. exchange links?!

    Like

  2. ஜெயமோகன் கதையை சுருக்கமா சொல்ல முடியாது. கதையின் மொழி போயிடும். லயிப்பு இருக்காது. வாசிச்சாதான் தெரியும். அதான் ஒன்னும் சொல்லலை.மதி கந்தசாமி டார்த்தினியம் பத்தி எழுதினதை படிச்சிங்களா? அனுபவிச்சி சொல்லியிருக்காங்க.

    Like

  3. நிர்மல் : இதுவரை இல்லை. நீங்கள் சொன்னபிறகு தான் மதி கந்தசாமியின் டார்த்தீனியம் பற்றிய பதிவைப் பார்த்தேன். படிக்கவேண்டும். நீங்கள் சொல்வது உண்மைதான் ஜெயமோகன் கதைகள் சுருக்கமாக சொன்னால் அதற்குரிய சுவை இருக்காது தான். மாடன் மோட்சம் கதையை அடுத்த பகுதியிலோ அல்லது அதற்கடுத்த பகுதியிலோ எழுதலாம் என்றிருக்கிறேன். கொஞ்சம் சிரமம் தான்.

    Like

  4. மதி ஏற்கனவே மாடன் மோட்சத்தை வலைத்தளத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்

    Like

  5. நிர்மல்: மதி ஜெயமோகனின் தீவிர ரசிகரோ? சரி நான் பல்லக்கை கொண்டு வருகிறேன். சிங்கப்பூரில் ஜெயமோகன் பேசிக்கொண்டிருந்த போது தனது புதிய நாவலான ‘கொற்றவை’ பற்றி சொன்னார். முழுவதும் உவமைகளாலே எழுதியிருப்பதாகக் கூறினார். நீங்கள் படித்தாயிற்றா? இந்த முறை இந்தியா போகும் போது வாங்க வேண்டும்.

    Like

  6. நிர்மல்: நன்றி! :)முத்து: ஜெயமோகனின் தீவிர இரசிகையெல்லாம் இல்லை. சொல்லப்போனால் இரசிகையே இல்லை. 🙂 இணையத்தில் படித்த அவரது இலக்கிய அரசியல் காரணமாக அவரது புனைவுகளைப் படிக்கும் ஆர்வம் இருந்ததில்லை. மரத்தடியில் அவரின் கேள்வி-பதில் நிகழ்ச்சியை நடாத்தியபோது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் சொன்ன பதில்கள் சுவாரசியமாக இருந்தன. ஒரு நாள், கொற்றவையைப் புரட்டிப் பார்த்து 150 பக்கம் வரை படித்தேன். எனக்குப் பிடித்த கோணங்கியின் நடையில் இருந்தது. கோணங்கியைப் பற்றி அவர் மரத்தடியில் சொன்னதும் நினைவுக்கு வந்தது. இன்னொரு நாள், மாடன்மோட்சம் படிக்கக் கிடைத்தது. பிறகு, அவருடைய சிறுகதைத் தொகுப்பையும் குறுநாவல் தொகுப்பையும் டொராண்டோ நூலகத்திலிருந்து எடுத்தேன். டார்த்தீனியம் படித்தபிறகு எழுத நினைக்கவில்லை. but, just had to get it out. அதனால் அந்த இடுகை. நிர்மல், குறிப்பிட்டிருக்கும் விஷ்ணுபுரம் படிக்கலாம் என்றிருக்கிறேன்.கொற்றவை பற்றி இரண்டு பதிவர்கள் எழுதியிருக்கிறார்கள்.சித்தார்த்: http://angumingum.wordpress.com/2006/02/02/kottravai_parahttp://angumingum.wordpress.com/2006/02/07/kottravai2http://angumingum.wordpress.com/2006/02/17/kottravai_3சன்னாசியின் விரிவான விமர்சனம்:http://dystocia.weblogs.us/archives/228

    Like

  7. ஊருக்கு போகும் போதுதான் வாங்க வேண்டும். குமரி கண்டம் பற்றிய விவரிப்புகள் வருகிறதாம். கற்பனையோ,நிஜமோ குமரி கண்டம்மீது ஆர்வம் உண்டு. படித்து பார்க்கலாம் என்று உள்ளேன்.கடைசியாக பின் தொடரும் நிழலின் குரல் படித்தேன்.ஏழாம் உலகமும் வாங்கலாம் என்று உள்ளேன்

    Like

  8. மதி கந்தசாமி: இரசிகையா? நான் இரசிகனென்றல்லவா நினைத்துக்கொண்டுள்ளேன்.வருகைக்கு நன்றி. இலக்கிய அரசியல்? முன்பு கணையாழியிலோ, காலச்சுவரிலோ அவரது காடு நாவலை போட்டு புரட்டியெடுத்திருந்தனர். வெகு காலம் கழித்து இப்பத்தான் காடு நாவலைப் படிக்க வாய்ப்புக்கிடைத்தது. அவர்கள் அந்த பத்திரிக்கையில் சொன்னதில் ஒன்றைக்கூட என்னால் ஒப்பிட்டுப் பார்க்கமுடியவில்லை. மற்றபடி அவரது இலக்கிய அரசியல் பற்றி நான் ஒன்றும் அறியேன் பராபரமே! விஷ்ணூபுரம் நான் இன்னும் படிக்கவில்லை.

    Like

  9. நிர்மல்: குமரிக்கண்டம்? எது கற்பனை? எது நிஜம்?. நான் ஏழாவது உலகம் படித்திருக்கிறேன். படிப்பது மிகவும் கடினம். ஒரு சில இடங்களில் வாழ்க்கை மீது மிகுந்த எரிச்சல் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. உடையாரை ஒரே மூச்சில் படித்து முடித்த என் நண்பர் ஒருவர் இந்த மிக சிறிய நாவலை பாதி மட்டுமே படித்துவிட்டு திரும்ப கொடுத்துவிட்டார். வாழ்க்கையின் நெகடிவ் சமாச்சாரம் தான் இந்த நாவல். பாலாவின் “நான் கடவுள்” இந்த நாவலின் ஒரு பகுதி என்று கேள்விப்பட்டேன். உண்மையா?

    Like

Leave a comment