காந்தம் : நாவல் (1)

காந்தம் : நாவல்

பாகம் 1 : கிழக்கு

1953

1

ஏட்டையா போலீஸ் ஸ்டேஷனை விட்டு ரோட்டில் இறங்கி, வெகுதூரம் நடந்துவிட்டிருந்த போதும், உடன் வந்த காண்ஸ்டபிளிடம் ஒரு வார்த்தை கூட பேசாதது விசித்திரமாக இருந்தது. குளிருக்கு இதமாக காதுகளை சுற்றிலும் மப்ளரால் கட்டியிருந்ததால் கூட இருக்கலாம். குளிர் இன்று மிக அதிகமாக இருந்தது. ஏட்டையா கால்சட்டைப் பையை துலாவி, பீடிக்கட்டு ஒன்றை எடுத்து, ஒரு பீடியை வாயில் வைத்துக்கொண்டார். சட்டைப்பையில் துலாவி தீப்பெட்டியை எடுத்து, பீடியை பற்ற வைத்துக்கொண்டார். தீக்குச்சியின் நெருப்பு முகத்திற்கு இதமாக இருந்தது. மிகவும் இரசித்து முதல் இழுப்பை இழுத்துக்கொண்டார். புகையை வெளியே விடும் பொழுது மட்டும் ஏனோ வானத்தைப் பார்த்துக் கொண்டார். அவர் விடும் புகை நட்சத்திரங்களை சென்றடையுமா என்ன? இல்லை வெளியேறும் புகை தன்னை மெதுவாக நட்சத்திரங்களுக்கு அருகே அழைத்துச் செல்கிறது என்றும் நினைத்துக்கொண்டிருக்கலாம். ‘அண்ணே’ என்ற ஹெட்காண்ஸ்டபிளின் குரல் கேட்டு, மறுபடியும் கால்சட்டைப் பையைத் துலாவினார்.

ரோடெங்கும் இருவரின் லத்தி ஓசை மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது. அவர்கள் எரிச்சான்பட்டியை அடையும் போது மணி இரவு ஒன்பதை எட்டிவிட்டது. ‘அண்ணே கீழத்தெருவுக்கு இப்படி குறுக்கே போகலாம்’ என்றார் காண்ஸ்டபிள். அனையபோகும் பீடியை சாலையின் ஓரம் எறிந்தார் ஏட்டையா. வறண்டு போய், புதர் மண்டிக்கிடந்த குழாயடியில் படுத்துக்கொண்டிருந்த செவலை நாயொன்று விழித்துக்கொண்டு ‘கர்’ என்றது. இருவரின் லத்திகளையும் பார்த்து பின் வாங்கியது. அங்கிருந்த வேறு சில நாய்களும் தூங்கியிருக்கவில்லை. மேகமில்லாத வானத்தையே வெறித்துக்கொண்டு சோகமாய் படுத்துக்கிடந்தன.

அந்த தெருவின் கடைசிக் கூரை வீட்டின் முன் வந்து நின்றார் ஏட்டையா. அங்கொன்றும், இங்கொன்றுமாய் மனிதர்கள் வெளியே, அந்த குளிரிலும் படுத்துக்கிடந்தனர். தூரத்தில் ஊளையிடும் நாய்களின் ஓசையின்றி வேறு சத்தங்கள் இல்லை. வீட்டின் கூரைக் கதவு சாத்தப்பட்டிருந்தது. காண்ஸ்டபிள் இருமுறை கதவைத் தட்டிவிட்டு, பின் ‘செல்லம்மா’ என்று கூப்பிட்டார். கதவு சாத்திதான் வைக்கப்பட்டிருந்தது. பதில் இல்லாததால் மறுபடியும் ‘செல்லம்மா’ என்றார் காண்ஸ்டபிள், இந்த முறை கொஞ்சம் சத்தமாக. உள்ளே யாரோ எழுந்து உட்காரும் சத்தம் சன்னமாக கேட்டது, காண்ஸ்டபிள் தன் காலுக்கு கீழே உடைந்து கிடந்த மண்சட்டியையே வெறித்துக்கொண்டிருந்தார். சிதிலங்களில் மண் மட்டுமே அப்பிக்கிடந்தது. யாரோ மெதுவாக நடந்து வந்து கதவைத்திறந்தார்கள்.

மிகவும் ஒடிசலான நிறைமாத கர்பினி பெண் ஒருத்தி நின்று கொண்டிருந்தாள். சேலையால் முகத்தை துடைத்துக்கொண்டு, கண் விழித்து மிகவும் சிரமப்பட்டு பார்த்து, அடையாளம் கண்டுகொண்டபின் ,’ஐயா நீங்களா? என்னங்கையா இந்த நேரத்தில?’ ‘செல்லம்மா, உன் கிட்ட ஒரு விசயம் சொல்லனும், உன் புருஷன் மாணிக்கம் வீட்ல இருக்கானா?’ ‘ஆமாங்கையா வீட்ல தான் இருக்காரு. தூங்கிட்டு இருக்காருய்யா. இன்னைக்கு எங்கையும் போகல’ ‘ம்..ம்.. சரி. இன்னைக்கு அவன எங்கையும் போக வேணாமுன்னு சொல்லு. இன்னைக்கு கெடுபிடி அதிகம். சுட்டுத்தள்ள உத்தரவு வந்திருக்கு. அதையும் மீறி உன் புருஷன் போனான்னா, என்னால காப்பாத்த முடியாது. நான் சொல்லவேண்டியத சொல்லிட்டேன். இனி உன்பாடு’

செல்லம்மா எதுவும் பேசாமல் ஏட்டையாவையே பார்த்துக்கொண்டிருந்தாள். பிறகு மெதுவாக ‘சரிங்கைய்யா போகாம பார்த்துக்கிறேன்’ என்றாள். ‘எத்தனை மாசம்?’ ‘இன்னும் ஒருவாரத்தில ஆயிடும் போல இருக்குங்கய்யா’ என்றாள் பெரிதாக இருந்த வயிற்றைத் தடவிக்கொண்டே. ‘சரிம்மா நாங்க வாறோம்!’ ‘அண்ணே, கொஞ்சம் தண்ணி குடிச்சிட்டு…’ என்றவள் முடிக்காமல் தரையைப் பார்த்தாள். ஏட்டையா சிரித்துக் கொண்டு, காண்ஸ்டபிளோடு தெருவில் இறங்கி நடந்தார், கால் சட்டைப்பையைத் துலாவிக்கொண்டே.

செல்லம்மா வெகு நேரம் அவர்கள் இருவரையும் பார்த்துக்கொண்டே நின்றாள். பிள்ளை அழும் சத்தம் கேட்டு வீட்டிற்குள் வந்தாள். சின்னவள் ராணி எழுந்து உட்கார்ந்து அழத்தொடங்கியிருந்தாள். பெரியவன் குமாரும், செந்திலும் தூங்கிக் கொண்டிருந்தனர். மாணிக்கம் சற்று தள்ளி படுத்திருந்தான். ‘என்னம்மா பசிக்குதா?’ ராணி ‘ம்..ம்..’ என்று தலையாட்டினாள். செல்லம்மா அவளை வாரி அனைத்து தூக்கிக் கொண்டாள். கண்ணத்திலும், நெற்றியிலும் மாறி மாறி முத்தமிட்டு, இடுப்பில் வைத்துக்கொண்டாள். மூலையில் இருந்த மண் பானையை துலாவி, கொஞ்சம் தண்ணீர் எடுத்து ராணிக்கு கொடுத்தாள். முதலில் மறுத்து தலையாட்டிய ராணி, பிறகு கொஞ்சம் குடித்து விட்டு, அம்மாவின் தோழில் சாய்ந்து கொண்டு கண்களை மூடிக்கொண்டாள்.

ராணியை மடியில் போட்டு தட்டிக்கொடுத்துக் கொண்டே, செல்லம்மா உட்கார்ந்திருந்தாள். ராணி தூங்கிவிட்டிருந்தாள். மண் சுவற்றில் முருகன் படம் தொங்கிக்கொண்டிருந்தது. செல்லம்மா கண்கொட்டாமல் முருகனையே வெறித்துக்கொண்டிருந்தாள். கண்ணீர் பெருகி வழிந்துகொண்டிருந்தது. மாணிக்கம் நன்றாக உறங்கிக்கொண்டிருந்தான்.

ராணியை தரையில் போட்டுவிட்டு தானும் படுத்துக்கொண்டாள் செல்லம்மா. ராணியின் அழகு முகத்தியே வெகு நேரம் பார்த்துக்கொண்டிருந்தவள் சட்டென்று தூங்கிப்போனாள்.

சிறிது நேரம் கழித்து, மாணிக்கம் மெதுவாக எழுந்து உட்கார்ந்தான். முருகன் அழகாக சிரித்துக்கொண்டிருந்தான்.

(தொடரும்)

4 thoughts on “காந்தம் : நாவல் (1)

  1. //பீடியை பற்ற வைத்துக்கொண்டார். தீக்குச்சியின் நெருப்பு முகத்திற்கு இதமாக இருந்தது. மிகவும் இரசித்து முதல் இழுப்பை இழுத்துக்கொண்டார். //சுகமான அனுபவம் முத்து.ஒரு மலரும் நினைவா தெரியுதுகான்ஸ்டபிளுக்கும், ஏட்டையாவுக்கும் என்ன வித்தியாசம்?

    Like

  2. நிர்மல்: வருகைக்கு நன்றி. சுகமான மலரும் நினைவா? எனக்கு இல்லை நிர்மல். நான் புகைபிடிப்பதில்லை. பிடித்ததில்லை. நீங்கள் புகைபிடிப்பதை நிறுத்தியாச்சா? புகை உடலுக்கு பகை. :))//கான்ஸ்டபிளுக்கும், ஏட்டையாவுக்கும் என்ன வித்தியாசம்?என் அறிவுக்கு எட்டியபடி, ஏட்டையா வயதான காண்ஸ்டபிள். அதாவது சர்வீஸ் அதிகமுள்ள காண்ஸ்டபிள். காண்ஸ்டபிளை விட ராங்கில் மூத்தவர்.

    Like

  3. //புகைபிடிப்பதில்லை. பிடித்ததில்லை. //good.:-)//நீங்கள் புகைபிடிப்பதை நிறுத்தியாச்சா//நிறுத்தியாகி விட்டது

    Like

Leave a comment