கதம்பம்

சென்ற சில நாட்களாக – வாரங்களாக – நான் இரசித்த கவிதைகள், ஜோக்குகள்,பாடல்கள் போன்றவை. நீங்கள் படித்திருக்கலாம்.

ஒரு காதல் கவிதை :

தங்கத்தின் மதிப்பு லண்டனிலும்
வைரத்தின் மதிப்பு நெதர்லாந்திலும்
மதிப்பிடப்படுவதாக
செய்திகள் சொல்கின்றன
ஆனால். இரண்டின் மதிப்பும்
நிர்ணயிக்கப்படுவது
உன் கழுத்தில் தான்

விகடனில் வந்த ஒரு கேள்வி:

“நாங்கள்லாம் மொத ஷோவே பார்த்துட்டம்ல!” ங்கிறதைக் காட்டுறதுக்காகவே, தியேட்டர்ல முன் ஸீட்ல உட்கார்ந்துக்கிட்டு ‘டக்குன்னு குத்திருவான் பாரேன்’, ‘அடுத்த ஸீன்ல இருக்குடி இவனுக்கு ஆப்பு’ ‘பாட்டு போடப்போறாய்ங்கடா’ன்னு ஸீனுக்கு ஸீன் டிரெய்லர் ஓட்டி டார்ச்சர் பண்றானுங்களே முந்திரி பக்கோடா காதருங்க..இந்த இம்சை ஏன்டா?

மற்றொரு கேள்வி:

லவ்வருக்கு போன் பேசுற பூரா பூனைப் பயலுகளும் ‘அப்புறம் அப்புறம்’ ங்கிறதை மட்டுமே ஆயிரத்தெட்டு தடவை யூஸ் பண்றானுங்களே. வொய்? வொய்? ராத்திரி எட்டு மணிக்கு மேலே பொண்ணுங்க எந்த கால் பேசினாலும் ஹஸ்கி வாய்ஸ்லயே பேசுறாங்களே, வொய்மா வொய்?

அரசியல்ல இதல்லாம் சகஜமப்பா!

ஒரு கொரளு: ஒரு வெளக்கம்.

கவ்வையால் கவ்விது காமம் அதுஇன்றேல்
தவ்வென்னும் தன்மை இழந்து

யாராச்சும் நீ லவ்ஸ் வுட சொல்லோ நாலு ஜெனம் சத்தய்ச்சினுதான் போவும், அது ரப்ச்சர் கெடியாதும்மே! லவ்ஸ¤க்கே அதாம்மே கிரிகிரி!

மெய்யாலுமா?

மற்றொரு குபீர் சிரிப்பு செய்தி : தினமலரில் வந்தது!! ஆனாலும் தினமலருக்கு நக்கல் ஜாஸ்திபா!

மற்றொரு யோசிக்கவைத்த கவிதை:

கை இல்லாமல்
கால் இல்லாமல்
உறுப்புகள் கோரப்பட்டு
மனுசங்க இருக்காங்க
வயிறு இல்லாத மனிதன்
இல்லவே இல்லை

சிந்தனை புதிது. என் தோழி ஒருத்தி இதெல்லாம் கவிதையாடா? என்றாள். அழகாக இருந்தால் எல்லாமே கவிதைதான், இல்லையா?

சமீபத்தில் கேட்ட சினிமா பாடலொன்று என் மனதை மிகவும் பாதித்தது. மிகுந்த சமூக பொறுப்புணர்வோடு பாடிக்கொண்டுவந்த கவிஞர், திடீரென்று இவ்வாறு சொல்லுகிறார்.

பாடல் : என்னம்மா தேவி ஜக்கம்மா
படம் : தம்பி

யார் எழுதியது என்று தெரியவில்லை.

விவசாயம் செய்யுன்னா
வேணான்னு சொல்லுறான்
வெளிநாடு போயித்தான்
ஒட்டகம் மேய்க்கிறான்

என்ன வார்த்தைகள் இவை? இதற்குப்பெயர் சமூகப்பொறுப்புணர்வா? நக்கலும் நையாண்டியும் அல்லவா மேலோங்கி நிற்கிறது? விவாசாயம் நல்ல வருமானம் தருகின்ற தொழிலாக இருந்தால் யார் அதை விட்டுவிட்டு ஒட்டகம் மேய்க்கப்போகப்போகிறார்கள்? விவாசயம் முக்கியமானது, நான் கடைசி வரை விவாசயம் மட்டுமே செய்துகொண்டிருப்பேன் என்று சொல்லிக்கொண்டு கூல் சட்டியை ஏந்திக்கொண்டிருக்கலாம் தான். நீங்கள் (சினமாக்காரர்கள்) என்ன செய்வீர்கள்? நெய்வேலியில் கருப்புசட்டை அணிந்து கொண்டு ஊர்வலம் போவீர்கள், பிறகு, அப்புறம்? உலக சினிமாவில் முதல் முறையாக என்று துபாய் பாலைவனத்தில் அதே ஒட்டகங்களோடு – கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் பைஜாமா குர்தா சகிதம் – டூயட் பாட போய்விடுவீர்கள். பிறகு கூல் சட்டியை யார் நிறப்புவது? நீங்கள் சினிமாக்காரர்கள். காதல் கத்தரிக்காய் வெண்டைகாய் என்று அரைத்த மாவையே அரைத்து மக்களை ஏமாற்றிக்கொண்டு இருங்கள். வெளிநாட்டில் உட்கார்ந்து, சொந்த பந்தம் மனைவி மக்கள் என்று அத்தனையும் விட்டு தம்முடைய அடுத்த சந்ததியினராவது நன்றாக இருக்கவேண்டும் என்று உழைத்து – கவனிக்க, உழைத்து – கொண்டிருக்கும் மக்களின் புண்பட்ட மனதை மேலும் மேலும் ரணமாக்காதீர்கள். உங்களுக்கு புண்ணியமாய் போகட்டும்.

மற்றுமொரு பாடல், சித்ரா மிக அருமையாக பாடியிருக்கிறார்.
படம்: பொய்.

என்ன தொலைத்தாய்
எதனைத் தொலைத்தாய்

தமிழைத் தொலைத்த
தலைமுறை போலே
தண்ணீர் தொலைத்த
தமிழகம் போலே
வருடம் தொலைத்த
வாலிபன் போலே
கருணையைத் தொலைத்த
கடவுளைப் போலே

வீரம் தொலைத்த
வாளைப்போலே
ஈரம் தொலைத்த
நிலத்தைப் போலே
கிழக்கு தொலைத்த
சூரியன் போலே
எல்லை தொலைத்த
தேசம் போலே

என்ன தொலைத்தாய்
நீ
எதனைத் தொலைத்தாய்?

இங்கே பாடலைக்கேளுங்கள்.

என்னுடைய ரோடங்கும் நயாகராக்கள் என்ற பதிவின் கருத்தை(!) ஒட்டிய
கவிதை ஒன்றை இந்த வார தீராநதியில் படிக்க நேர்ந்தது.

ஒரு மின்னல்

சமதரையிலிருந்து
மூன்றடி உயர்த்தித்தான் கட்டினேன்

சுவர்களில்
இட்டு வைக்கும் எச்சங்களைத்
தினமும் துடைத்து அள்ளுகிறேன்

சிறுமழை பெய்யினும்
தேங்கும் நீரில் வீடு தெப்பம்

எல்லாப் புறமும்
பசும்பாசிக் கொடிகள் ஏறுகின்றன
கிறுக்கல் வடிவ நீர்ப்பூச்சிகள்
எப்போதும் வீட்டையே சுற்றுகின்றன

இரவெல்லாம்
தவளைகள் கத்தித் தொலைக்கின்றன

இன்று அதிகாலை
கதவைத் திறந்தபோது
வாசலில் தலைவைத்துச்
சுகமாய்த் தூங்கி கொண்டிருந்தது
அந்த பாம்பு

சலனத்தில்
அது ஒரு மின்னலெனச்
சற்றே புரண்டு படுக்கையில்
என்க்கு புரிந்தது

அதன் வீட்டுக்குள் எனதுவீடு

.

-பெருமாள்முருகன்

8 thoughts on “கதம்பம்

  1. எனக்கு மட்டும் இத்தனை ரசிக்கத்தக்க எண்ணவைக்கும் மேட்டர் கிடைத்தால், ஒரு வாரத்தையே ஒப்பேத்துவேன். நீங்க ஒரே பதிவில் பல சிந்தனைகளை எழுப்ப வைக்கும் சங்கதிகளை அடிச்சுட்டுப் போறீங்க… நன்றி.

    Like

  2. நிர்மல் : வருகைக்கு நன்றி. பெருமாள்முருகன் எனக்கு இப்பொழுது தான் அறிமுகம். இது தான் முதல் கவிதை. தீராநதியில் வெளியான அவருடைய மற்றொரு கவிதையும் நன்றாக இருந்தது. நீங்கள் இவருடைய வேறு கவிதைகள் படித்திருக்கிறீர்களா?பூஸ்டன் (பூஸ்ட்) பாலா: நன்றி பாலா. சோம்பேறித்தனம் தான் காரணம் :). ஒரே பதிவில் போட்டு விட்டால் அடுத்து வேற யோசிக்கலாம் என்ற நினைப்பு தான். நீங்கள் மொத்தம் எத்தனை பதிவுகள் வைத்திருக்கிறீர்கள்? யாகூ 360 யில் கூட நீங்கள் ஆக்டிவாக பதிவு செய்கிறீர்கள். உங்கள் ஆர்கைவில் வந்து உங்களுடைய “எஸ். ராமகிருஷ்ணனின் கதாவிலாசம்” – லிங்க் கொடுத்ததாக ஞாபகம் – பற்றிய பதிவைத் தேடிக்கொண்டிருந்தேன். கிடைக்கவில்லை.ஆராதனா: வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.மூர்த்தி: வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி. பிரகாஷ்: வருகைக்கு நன்றி. அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை பிரகாஷ், படிப்பதை அவ்வப்பொழுது குறிப்பெடுத்ததும், இமேஜ் பைலாக சேவ் செய்ததும் உதவியது. பாராட்டுக்கு மிக்க நன்றி. மீண்டும் வருக.

    Like

  3. கதம்பம் மணமணக்குது. படிக்க விறுவிறுப்பு. சொல்லியிருக்கும் கருத்துகளும் கூட. குறிப்பாக அந்த வெளிநாட்டில் ஒட்டகம் மேய்க்க்கிறதைப் பற்றிச் சொல்லியிருப்பது.

    Like

  4. நன்றி ராகவன். பூக்களைத் தொடுத்தது மட்டுமே என் வேலை. மற்றபடி எப்பொழுதும் போல் நறுமணம் பூக்களுக்கே சொந்தம்.

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s