குறட்டை கோவிந்தன்
உண்மையைச் சொல்லவேண்டும் என்றால் எனக்கு ஒரு நாளும் கனவில் திரிஷாவோ, சினேகாவோ அல்லது அட்லீஸ்ட் சரோஜாதேவியோ கூட வந்ததில்லை. ஏன் என்றும் சில நாள் நான் மிக சீரியஸாக யோசித்திருக்கிறேன். அதற்காக எனக்கு கனவே வராது என்பதும் உண்மையல்ல. நான் நிறைய கனவு காண்கிறவன். ஆனால் என் கனவுகள் எல்லாமே என்னை பயமுறுத்துபவை. திரில்லர் படங்கள் தோற்கும் போங்கள். சில நாட்கள் நான் யாரையாவது குத்தி கொலை செய்து விட்டு ஓடிக்கொண்டிருப்பேன். போலீஸ் என்னை துரத்திக்கொண்டிருக்கும். சில நாட்கள் ஏதேனும் மிருகங்கள் என்னைத் துரத்திக்கொண்டிருக்கும். சிங்கம், புலி முக்கியமாக நாய். நான் ஏன் நாயைக் கண்டால் பயப்படுகிறேன் என்றும் தெரியவில்லை. ஆனால் இந்த நாயைக் கண்டு பயப்படும் கும்பலில் நான் மட்டும் தனியாக இல்லை என்பது என் நண்பன் நாங்கள் எப்பொழுதும் பயன் படுத்தும் பாதையை விட்டு வேறு பாதையை திடீரென்று உபயோகப்படுத்தியபோது தெரிந்து கொண்டேன். ஏன் என்று கேட்டதற்கு வழியிலிருக்கும் ஒரு வீட்டில் புதிதாக நாயொன்று வாங்கியிருக்கிறார்கள் என்றான். இத்தனைக்கும் அந்த நாயை கேட் போட்டு அடைத்து வைத்திருப்பார்கள். ஒரு நாள் போல ஒரு நாள் இருக்காது என்று போனஸாக அறிவுரை வழங்கினான். சரிதான்.
முன்பெல்லாம் வெள்ளிக்கிழமைகளில் ஒலியும் ஒளியும் வரும். தெருவில் நடந்தால் வீட்டிற்குப்போகும் வரையில் ஒரு பாட்டு கூட மிஸ் ஆகாது. அனைத்து வீடுகளிலும் ஒலியும் ஒளியும் ஓடிக்கொண்டிருக்கும், கதவு வேறு திறந்திருக்கும், டீவி கரெக்டாக வாசலுக்கு நேரே இருக்கும். நாம் டீவி பார்த்துக்கொண்டும் பாடல் கேட்டுக்கொண்டும் ஜாலியாக நடக்கலாம். ஆனால் இதில் ஒரு டிஸ்அட்வாண்டேஜ் இருக்கிறது. எப்படி என்கிறீர்களா? இப்படி நாம் பெராக்கு பார்த்துக் கொண்டே நடக்கும் போது வழியில் ஹாயாகப் படுத்துக்கிடக்கும் நாயை நறுக்கென்று மிதித்துவிட வாய்ப்பிருக்கிறது. நாயும் கோபத்தில் நாம் போட்டுக்கொண்டிருக்கும் புது பேண்டையும், கொஞ்சம் சதையையும் லபக்கென்று கடித்துவிட வாய்ப்பிருகிறது. அப்படித்தான் நடந்தது அன்று. நாயைச் சொல்லி குற்றமில்லை புது பேண்ட் என்று நாய்க்கு எப்படித்தெரியும். அப்பொழுது தான் ஏன் இப்படி கதவைத்திறந்து போட்டுக்கொண்டு டீவி பார்க்கிறார்கள் என்று எரிச்சல் எரிச்சலாய் வரும். அதனால் தானே நாம் பெராக்கு பார்த்துக்கொண்டு நாயை மிதிக்கவேண்டிய சூழ்நிலை வந்தது. மதுரை கவர்மெண்ட் ஆஸ்பத்திரியில் சென்று தொப்புளை சுத்தி 6 ஊசி தான் போட்டுக்கொண்டேன். விடாக்கண்டன் டாக்டர் நான் ஊசி போட யோசித்தபோது பக்கத்து அறையைக்காட்டி – அந்த அறை பூட்டப்பட்டிருந்தது, கம்பி ஜன்னல் வைக்கப்பட்டிருந்தது – இந்த அறையில் தான் நாய் கடித்து ஊசி போடாமல் நாய் மாதிரியே ஆகிவிட்ட மனிதன் குரைத்துக் கொண்டு இருக்கிறான் என்றார். சத்தமில்லாமல் ஊசி போட்டுக்கொண்டேன். அந்த அறையைக்கடந்து வந்த போது திரும்பிப் பார்க்ககூட மனசு வரவில்லை.
அன்றைய இரவிலும் இப்படித்தான் நாயொன்று என்னை விடாமல் துரத்திக்கொண்டே வந்தது, கனவில் தான். பயங்கர உறுமல் சத்தம் வேறு. கர் புர் என்று. சன் டீவியில் முன்பு மர்மதேசம் தொடர் வந்த போது டைட்டிலில் ஒரு நாய் குரைக்குமே நினைவிருக்கிறதா? நாய் பார்ப்பதற்கு பயங்கரமாக இருந்தது. நல்ல கருப்பாக. திடகாத்திரமாக. கடித்தால் அரைக்கிலோவோ ஒருகிலோவோ நிச்சயம் லாஸ் ஆக வாய்ப்பிருக்கிறது. அடுத்த ஒரு சில மாதங்களுக்கு பிட்னஸ் கிளப் போகத்தேவையில்லை. ஒரு வழியாக தப்பித்து நினைவு லோகத்திற்கு வந்தேன். பக்கத்திலிருந்த பாட்டிலில் தண்ணீர் குடித்துக்கொண்டேன். அப்பொழுதும் கர் புர் என்ற சத்தம் கேட்டது. கனவிலே எழுந்து தண்ணீர் குடித்துக்கொண்டிருக்கோமா? அவ்வளவு ரியாலிஸ்டிக்கான கனவா? எந்த மடையனாவது நாய் துரத்திக்கொண்டிருக்கும் போது, சாவகாசமாக தண்ணீர் குடித்துக்கொண்டிருப்பானா? கிள்ளிப்பார்த்துக்கொண்டேன். நினைவுதான். அப்புறம் கர் புர் சத்தம் மட்டும் எங்கிருந்து வருகிறதாம்? அப்பொழுதுதான் என் நண்பன் என் பக்கத்திலே உறங்கிக்கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது.
யாராக இருந்தாலும் “நீங்கள் குறட்டை விடுகிறீர்கள்” என்று சொன்னால் உடனே கோபம் தான் படுகிறார்கள். என் நண்பன் மட்டும் விதி விலக்கா என்ன? நான் ஒன்றும் குறட்டை விட மாட்டேனாக்கும் என்று மார்தட்டினான். ஆனால் நான் அவனைப்போல டுபாகூர் 1943 ஆம் வருசத்து செல்போன் வைத்திருக்கிறேன் என்று நினைத்துக்கொண்டான். அங்கே தான் சிறு தவறு நடந்து விட்டது. என்னிடம் பிடிஏ இருக்கிறது. நைசாக அவன் தூங்கும் போது அவனுடைய மூக்கிற்கு மிக அருகில் – எனக்கு சந்தேகம் வேறு வந்துவிட்டது. சத்தம் மூக்கிலிருந்து வருகிறதா அல்லது வாயிலிருந்து வருகிறதா என்று. இன்னும் சந்தேகம் தீர்ந்த பாடில்லை – பிடிஏவை வைத்து சத்தத்தை ரெக்கார்ட் செய்து விட்டேன். “மாட்னடா நீயி” – பழம்பெரும் நடிகர் அசோகன் போல சொல்லவேண்டும் – என்று சொல்லிக்கொண்டேன். என்னுடைய இயர் போனில் அதை ரீப்ளே செய்து பார்த்ததில் டால்பி டிஜிட்டலும், டி ஹச் எக்ஸ¤ம் தொற்றது போங்கள். அவ்வளவு துள்ளியம். கேட்பவர்கள் டைனோசர் வருகிறதோ என்று கூட நினைத்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறது.
ஆதாரம் காட்டிய போது என்ன செய்ய முடியும். என்னடா பன்றது எனக்கு குறட்டை வருகிறதே, நான் என்ன செய்ய என்று பாவமாய் மூஞ்சியை வைத்துக்கொண்டான். இலவசமாக டிப்ஸ் சில சொன்னான். அதாவது அவன் தூங்கும் போது அவனுடைய பெட்டைப்பிடித்து இழுக்க வேண்டும். அப்படிச்செய்தால் குறட்டை நின்று விட வாய்ப்பிருக்கிறது என்றான்.
அன்றைய இரவு அந்த டெக்னிக்கை கையாண்டேன். பலன் இருந்தது. ஆனால் ஜஸ்ட் ஒன் மினிட் தான். மறுபடியும் உறுமல். நான் என்ன இரவு முழுதும் பெட்டை ஆட்டிக்கொண்டேவா இருக்க முடியும். ஒரே சீராக குறட்டை வரும் பட்சத்தில் பழக்கமாகிவிடும். ஆனால் வேறு வேறு பிட்ச்களில் விதம் விதமாக குறட்டை விட்டால் என்னதான் செய்யமுடியும்? சில சமயம் பூனை கத்துவதைப்போன்று சத்தம் வரும். சில சமயம் யானை பிளிறுவதைப் போல. ஐயோ யானைக்கூட்டத்தில் மாட்டிக்கொண்டோமே இப்ப எப்படித் தப்பிப்பது? என்று சீரியசாக நான் கனவில் திங்க் செய்திருக்கிறேன்.
ஒரு நாள் சத்தம் தாங்காமல் பெட்டை வேகமாக் நான் ஆட்டிவிட, முழித்துக்கொண்ட என் நண்பன் கோபம் வந்த விசுவாமித்திரனாக மாறி “உனக்கு என்னய விட பல மடங்கு சத்தமா குறட்டை விடுற பொண்டாட்டி தான்டா கிடைப்பா” என்று சாபம் வேறு கொடுத்தான். மறுநாள் அவன் நாக்கை தரோவாக செக் செய்து விட்டேன், கரி நாக்கு ஒன்றும் இல்லையாம். இருந்தாலும் கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது.
நான் இந்தியாவில் வேலை செய்த பொழுது என்னுடன் வேலை செய்த நண்பர் ஒருவருக்கு குறட்டை விடும் பழக்கம் இருந்தது. நைட் வேலை செய்யவேண்டும் என்றால் தொலைந்தோம். கிடைக்கும் சில மணி நேரத்தை தூங்கலாம் என்று நினைத்தால், குறட்டை சுத்தமாக கெடுத்துவிடும். அவருக்கு டெக்னிக் வேறு. அவரைத் தொட்டால் குறட்டை நின்று விடும். ஆனால் சில நிமிடத்தில் மீண்டும் தொடரும். நீங்கள் கையை அவர் மேலேயே வைத்துக்கொள்ளலாமே என்று ஸ்மார்டாக சிந்தித்தால் அதெல்லாம் வேலைக்காகாது. தட்டிக்கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும். நாம் எப்படித் தூங்குவது? கவலைப்படாதீர்கள் தட்டிக்கொடுத்துக்கொண்டே தூங்குவதற்கு பழகிக்கொண்டு விடலாம். சித்திரமே கைப்பழக்கம்.
அவர் சாப்பிட்டு விட்டு ஆபீஸ் வந்ததும் சில நேரங்களில் தூங்க ஆரம்பித்து விடுவார். நாம் தூங்கும் போது நமது மூளை விழித்தேயிருக்கிறது என்பதில் யாருக்கேனும் சிறு ஐய்யப்பாடு இருக்குமேயானால் நீங்கள் அவரைத் தான் முதலில் பார்க்க வேண்டும். ஹாயாக கம்ப்யூட்டரின் முன் சேரில் அமர்ந்து கொண்டு தலையை சேரில் சாய்த்துக்கொண்டு விட்டத்தைப் பார்த்து கண்களை மூடித் தூங்கிக்கொண்டிருப்பார். பக்கத்தில் சென்று நின்றோமேயானால் உடனே மௌசைப்பிடித்திருக்கும் கை மட்டும் வேக வேகமாக அசையும். வேலை செய்கிறாராம்.
மதியம் ஆபிசில் தூங்குவதைக்கூட பொருத்துக்கொள்ளலாம். ஆனால் தூங்கி குறட்டை விடுவது டூ மச் இல்லையா? அதையும் அவர் செய்தார். அதுவும் எங்கள் பாஸ் உடன் இருக்கும் போது. என்ன தெனாவெட்டு? இப்பொழுது கெச்.சி.எல் லில் ஹாயாக குறட்டை விட்டுக்கொண்டிருக்கிறார். ஹெச்.சி.எல் கவர்மெண்ட் ஆபீஸ் போன்றது என்று என் நண்பர்கள் சொன்னபோது நான் நம்பவில்லை.
😉
LikeLike
நிர்மல்: __/__
LikeLike