இன்சிடென்ட்ஸ் – 2

 

கனவுகள் சில சமயங்களில் பயங்கர ரியாலிஸ்டிக்காக இருப்பதை நினைத்து நான் பல முறை ஆச்சரியப்பட்டிருக்கிறேன். உதாரணமாக நான் +2 முடித்து, இன்ஜினியரிங் காலேஜ் முடித்து, இந்தியாவில் 2 வருடம் மாவரைத்து இட்லி சுட்டு, மலேசியாவில் இரண்டு வருடம் அதே மாவை அரைத்து தோசை சுட்டு, பிறகு சிங்கப்பூரில் அதே மாவை அரைத்து வடைசுட்டுக்கொண்டிருக்கிறேன். ஆனால் நான் பரிட்சையில் பெயிலாகி விட்டு, ஐயோ என்னடா இது பெயிலாகிவிட்டோமே இப்ப என்ன செய்றது என்று மிக தீவிரமாக வருத்தப்பட்டு கொண்டிருப்பது போன்று கனவுகள் வரும். சில சமயம் அது மிகவும் தத்ரூபமாக இருக்கும். அழுகை அழுகையாக வரும். கனவிலிருந்து விழித்த பிறகு, அப்பாடா நாம் பெயிலெல்லாம் ஆக வில்லை, நாளை சாப்பாட்டிற்கு ஒரு வேலை இருக்கிறது என்று உணரும் போது ஒரு நிம்மதி;சந்தோஷம் வரும் பாருங்கள், அடா..அடா. 12B போன்று, நடக்காத ஒன்று நடந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று உணர்ந்து கொள்வதற்கு கனவுகள் மிகவும் உதவியாக இருக்கின்றன, இல்லையா?

இன்னொரு மிகுந்த ஆச்சரியமான விசயம் கனவில் கிடைக்கும். நாம் ஒரு விசயத்தை பல நாட்கள் மறந்தே போயிருப்போம். ஏன் பல மாதங்கள் கூட ஆகியிருக்கலாம். ஆனால் அந்த விசயம் (உங்கள் பள்ளித் தோழியாகவோ, தோழனாகவோ கூட இருக்கலாம்!) ஒரு நாள் ஒரு மின்னலைப் போல திடீரென்று கனவில் தோன்றும். நாம் கனவிலிருந்து விழித்து பேந்த பேந்த விழித்துக்கொண்டிருப்போம். இது எப்படி சாத்தியமாகிறது? நாம் நீண்ட நாட்கள் மறந்திருந்த விசயத்தை ஏன் மூளை புதுப்பிக்க நினைக்கிறது? நம் நினைவில் இல்லாத பல விசயங்களை மனம் அசை போட்டுக்கொண்டேயிருக்கிறது என்பது மட்டும் புலனாகிறது.

தூக்கம் மிக மிக புதிரானது. அது நம்மை சில மணி நேரங்கள் இந்த உலகத்தை விட்டே பிரித்து விடுகிறது. எழுந்தால் தான் நிச்சயம். பேசிக்கொண்டிருக்கும் போதே குறட்டை விடும் நபர்களைப் பார்த்திருக்கிறேன். எந்த இடத்தில் எப்பொழுது படுத்தாலும் தூங்கிவிடும் நபர்களும் இருக்கிறார்கள். சில நாட்கள் சும்மா ஒன்றும் விரிக்காமல் தலைக்கு கையை வைத்துக்கொண்டு தூங்கிவிடுகிறோம். சில நாட்கள் மெத்தை, ஏசி, கஜல் பாடல் என்று படுத்தாலும் இன்சோமேனியாக்காக இருக்கிறோம். பக்கத்தில் குறட்டை விடும் நண்பனையே பொறாமையாக பார்க்கிறோம்.

நான் மலேசியாவில் இருக்கும் பொழுது ஒரு நீண்ட நாள் முடிந்து மிகுந்த அலுப்புடன் வந்து படுத்து விட்டேன். பக்கத்து அறையில் ஒரு நண்பரும் அவர் மனைவியும் படுத்துக்கொண்டிருக்கிறார்கள். நான் நன்றாக தூங்கிவிட்டேன். திடீரென்று செல் போன் ஒலிக்கவே திட்டிக்கொண்டே எடுத்தேன். என் மேனேஜர் தான் கால் பண்ணியிருந்தார் (திட்டினது சரிதான் என்று நினைக்கிறீர்களா?). எடுத்த எடுப்பிலே அவர் என்ன முத்து எதுவும் ஆகலையே நல்லாயிருக்கேல்ல என்றார். எனக்கு கோபம் தலைக்கேறியது. யோவ். நட்ட நடு ராத்திரியில கால் பண்ணி இது என்னையா கேள்வி என்றேன் கோபமாக. அவர் அடடே உனக்கு விசயமே தெரியாதா, KL முழுதும் நில நடுக்கம், அது தான் கேட்டேன் என்றார். ஒன்றும் இல்லை நாம் நன்றாகத்தானே இருக்கிறேன் என்றேன். ஜாக்கிறதை. கவனமாக இரு என்றார். எனக்கு அதுக்கப்புறம் தூக்கம் கலைந்து விட்டது. எழுந்து டீவியை ஆன் செய்து பி.பி.சி யைப் பார்த்தேன். உண்மைதான். ப்ளாஷ் நியூஸில் கே.எல் லில் நிலநடுக்கம் என்று ஓடிக்கொண்டிருந்தது. எனக்கு சந்தேகம் வரவே, எழுந்து சட்டை அனிந்து கொண்டு லிப்ட் எடுத்து கீழே சென்ற பொழுதுதான் நான் உணர்ந்து கொண்டேன். கீழே, ரோட்டில் எங்கள் கோண்டோமினியத்தில் இருக்கும் என்பது ப்ரஸண்ட் மக்கள் சலசல என்று பேசிக்கொண்டு அந்த அர்த்த ராத்திரியில் நின்று கொண்டிருந்தனர். தொடர்ந்து சில நிமிடங்களில் அமெரிக்காவிலிருக்கும் என் அண்ணனிடமிருந்து கால். அப்புறம் அறையில் ஒன்றுமே தெரியாமல் தூங்கிக்கொண்டிருந்த அந்த அப்பாவி நண்பரை எழுப்பி விசயத்தை சொன்னேன். யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம். பேந்த பேந்த விழித்துக்கொண்டு இரண்டும் வந்ததுகள். உண்மையிலே பூகம்பம் வந்ததென்று வைத்துக்கொள்ளுங்கள், யார் எழுப்பி சொல்வார்கள்? அங்கே செல் போன் வேலை செய்யுமா?

என் நண்பன் ஒருவன் இருக்கிறான், பக்கத்தில் பிபாசாவே ஆடிக்கொண்டிருந்தாலும் கவலையே பட மாட்டான். வந்து படுத்தவுடன் தூங்கிவிடுவான். விளக்கு எரிந்தாலும், பாடல் சத்தமாக ஒலித்தாலும் (நான் வேண்டுமென்றே லேப்டாப்பில் பாடலை சத்தமாக ஒலிக்க செய்வேன்) கவலையே படமாட்டான். நன்றாக இழுத்துப்போர்த்திக்கொண்டு, சம்மனங்கால் போட்டுக்கொண்டு (?! எப்படி இவனால் முடிகிறது என்று நான் நிறைய நாட்கள் யோசித்ததுண்டு!) தூங்குவான். அதனால் அவன் சம்மன சாமியார் என்றும் அழைக்கப்படுகிறான். ஆனால் ஒன்றே ஒன்று. அவன் தூங்கிய பிறகு அவனை மிக மிக மெதுவாக அழைத்து தான் எழுப்ப வேண்டும். இல்லையேல் தடால் புடால் என்று அடித்து பிடித்து எழுந்து நம்மையே பயமுறுத்துவான். பிறகு உங்களுக்கு சாபம் தான்.

முதல்நாள் திருச்சி, மறுநாள் கோவில்பட்டி அடுத்த நாள் போடி என்று பிரயாணம் செய்து விட்டு எங்கள் வீட்டு மொட்டை மாடியிலிருக்கும் ரூமில் கதவைப் பூட்டிக்கொண்டு படுத்துவிட்டேன். வெளியே மொட்டை மாடியில் என் குடும்பத்தினர் படுத்திருக்கின்றனர். தூங்கிய நான் என்ன நினைத்தேனோ தெரியவில்லை கதவை தட தடவென்று அடித்து கதவைத்திறங்கள் கதவைத்திறங்கள் என்று சத்தம் போட ஆரம்பித்துவிட்டேன். அப்புறம் வெளியிலிருந்த என் அண்ணன் மிகவும் சத்தமாக டேய் நீ தான் தாழ் போட்டிருக்க நீதான் திறக்கனும் என்று சொன்னவுடன் தான் நான் நினைவு திரும்பி, அட ஆமால்ல (வடிவேலு போல சொல்லவும்), என்று நினைத்து கதவைத்திறந்து கொண்டு “பேக்கு” மாதிரி விழித்துக்கொண்டு வெளியே வந்தேன். என் நான்கு வயது அக்கா மகள் மாமா சாமிய கும்பிட்டு திருநீர் பூசிட்டு தண்ணீ குடிச்சிட்டு தூங்குங்கள் என்றது தான் மிக மிக கேவலம். நீண்ட நேரம் என் அண்ணன் ஏன்டா அப்படி கத்தின ஏன்டா அப்படி கத்துன என்று கேட்டுக்கொண்டேயிருந்தார். நான் பதிலே சொல்லவில்லை. தெரிந்தால் தானே சொல்வதற்கு! பக்கத்து வீட்டாருக்கெல்லாம் கேட்டிருக்கிறது. மறுநாள் மானம் போய்விட்டது.

(தொடரும்)

7 thoughts on “இன்சிடென்ட்ஸ் – 2

  1. நல்ல இருக்கு உங்களின் இந்த தொடர்!டிசம்பர் 25, 2004நான் என் நண்பர்கள் அனைவரும் பெசன்ட் நகர் பீச்சுல உக்காந்து பேசிகிட்டு இருந்தோம். அரை போதைல ஒருத்தன் சொன்னான் டேய் மச்சி இந்தியால மட்டும் பூகம்பம் வரதுக்கு வாய்ப்பே இல்ல, குறிப்பா சென்னைக்கு எந்த காலத்திலும் சின்ன பூகம்பம் கூட வராதுன்னு உளறினான். மறுநாளே சுனாமி வந்துருச்சி,

    Like

  2. தூக்கம் வரும் நேரம் எங்க டெரஸ் பக்கமா ஒரு கறுப்பு உருவம் கீழேயிருந்து எறிவரும்.நான் குய்யோ முறையோனு கத்துவேன்.ஒண்ணும் நடக்காது. லைட் போட்டா ஓடிப் போயிடும்.நல்ல வேளை உங்களுக்கு இந்த அனுபவம் இல்லியே?:-)0

    Like

  3. வள்ளி : என்னது கறுப்பு உருவமா? ஏது இன்னைக்கு தூக்கம் வராது போலிருக்கிறது! அது சரி. அதென்ன “குய்யோ முறையோ”? ஏன் குய்யோ முறையோ என்று கத்துகிறீர்கள்? ஐயோ அம்மா என்று கத்த வேண்டியது தானே. யாராவது காப்பாற்றவாவது வருவார்கள். நீங்கள் குய்யோ முறையோ என்று கத்தினால் ஏதோ நீங்கள் சமீபத்திய சத்தியராஜ் படத்து பாடலைப் பாடுகிறீர்கள் என்று நினைத்து காப்பாற்ற வராமல் சும்மா இருந்து விட வாய்ப்பிருக்கிறது. மேலும், அந்த கருப்பு உருவம் ஒன்றும் புரியாமல் விழித்து, ஏதோ மந்திரம் போடுகிறீர்கள் போல என்று நினைத்துத்தான் ஓடியிருக்கிறது, என்று நினைக்கிறேன். லைட்டைப்போட்டதற்காக அல்ல என்பது என் திட்டவட்ட கருத்து.

    Like

  4. முத்துவின் அர்த்தராத்திரி கனவுகள்னு படம் எடுக்கலாம் போல இருக்கே.;-)எங்களுக்கு ஒரு நண்பன் இருக்கிறான்.தொலைகாட்சியை உற்று பார்க்க ஆரம்பித்தால் தூங்கி விடுவான். அப்படி ஒரு வரம் வாங்கி வந்திருந்தான்.அவனுக்கு வேண்டப்பட்ட பெண் தமிழ் படம் பார்க்க வர இவன் தூங்காமல் படம் பார்க்க பட்ட கஷ்டம்மறக்க முடியாது. நாங்கள் படத்தை விட்டு விட்டு அவனைதான் பார்த்துக் கொண்டிருந்தோம்;-)

    Like

  5. தம்பி: வருகைக்கு நன்றி. பூகம்பம் என்றவுடன் எனக்கு ஞாபகம் வருவது, சென்னையில் வந்த பூகம்பம் தான். அதை தான் ஷங்கர் பாய்ஸ் திரைப்படத்தில் கூறியிருப்பார். அந்த பூகம்பம் வந்த போது தாமஸ் மவுண்டில் நான் என் நண்பர்களோடு உட்கார்ந்து கொண்டு அரட்டையடித்துக்கொண்டிருந்தேன். கட்டிலில் சாய்ந்திருந்த எனக்கு ஏதோ அதிர்வது போல இருந்தது, என் நண்பனும் என்னை பார்த்தான், நாங்கள் மியூசிக் சிஸ்டத்தால் தான் அதிர்கிறது என்று நினைத்துக்கொண்டோம். சிறிது நேரம் கழித்து நண்பனின் அம்மா பாத்திரம் உருளுது என்று கத்திய பிறகு தான் பூகம்பம் வந்ததே எங்களுக்கு தெரிந்தது.நிர்மல்: >>முத்துவின் அர்த்தராத்திரி கனவுகள்னு படம் எடுக்கலாம் போல இருக்கேஎனக்கு டைட்டில் பிடிக்கவில்லை. ஏதோ வில்லங்கமான படம் போல இருக்கிறது.:))>>தொலைகாட்சியை உற்று பார்க்க ஆரம்பித்தால் தூங்கி விடுவான்ஹா? தொலைக்காட்சியை பார்த்தால் உறங்குகிறாரா? கொடுத்து வைத்தவர். பாழாய்ப்போன சீரியல்களைப் பார்ப்பதற்கு தூங்குவது பெட்டர். என்ன டெக்னிக் என்று கேட்டு சொல்லுங்களேன். அப்படியாவது இந்த இடியட் பாக்ஸிலிருந்து தப்பிக்க முடிகிறதா என்று பார்க்கலாம்.

    Like

  6. :)நல்ல ஜாலியான தொடர் முத்து!எனக்கும் இப்படித்தான் எக்குத்தப்பா கனவு வரும் :))http://kappiguys.blogspot.com/2006/07/blog-post_22.html

    Like

  7. கப்பி பய : வருகைக்கு நன்றி. என்னது இந்திய திரையுலகமே உங்கள் கனவை குத்தகைக்கு எடுத்திருக்கிறது. சினிமா பார்ப்பதைக் குறைத்துக்கொள்ளவேண்டும் என்பது மட்டும் தெரிகிறது.

    Like

Leave a comment