ஆயிரம் கால் இலக்கியம் – 4

கடவுளுக்கு பாரபட்சம் அதிகம். இல்லையென்றால் ஒருவருக்கு நன்றாக பாடும் திறன், சிலருக்கு நச்சென்று கதை, அழகாக கவிதை எழுதும் திறன், சிலருக்கு நாட்டியத்திறமை, சிலருக்கு நுண்அறிவென்று வகைக்கு ஒன்றாக பிரித்துக்கொடுப்பாரா என்ன? அதனால் தான் உலகம் ரசிக்கும் படியாக இருக்கிறதோ? அதிலும் இந்த தபூ ஷங்கர் விசயத்தில் கடவுளுக்கு ரொம்பத்தான் தாராளம். கற்பனா சக்தியை அள்ளி அள்ளி வாரி வாரிக் கொடுத்திருக்கிறார். அவர் மட்டும் ஏன் இப்படி எழுதுகிறார்? பையன்கள் கிரீட்டிங் கார்டு கடைகளில் ஆங்கிலத்தில் நல்ல வாசகங்களைத்தேடி நேரத்தை வீணடிக்காமல் தபூ சங்கரின் படைப்புகளை ஒரு முறை வாசித்தால் உடனடிப்பலன் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

‘என்னை எங்கு பார்த்தாலும்
ஏன் உடனே நின்று விடுகிறாய்?’
என்றா கேட்கிறாய்.

நீ கூடத்தான்
கண்ணாடியை எங்கு பார்த்தாலும்
ஒரு நொடி நின்று விடுகிறாய்

உன்னைப் பார்க்க உனக்கே
அவ்வளவு ஆசை இருந்தால்
எனக்கு எவ்வளவு இருக்கும்!

‘போதும் பார்த்தது
கண் பட்டுவிடப்போகிறது’ என்றாய்
ச்சே…ச்சே..உன்னைப் பார்த்தால்
என் கண்களாவது பட்டுப் போவதாவது
துளிர்த்துக்கொண்டல்லவா இருக்கின்றன.


கரையில் நின்றிருந்த உன்னைப் பார்த்ததும்
கத்தி விட்டன கடல் அலைகள்…
‘கோடான கோடி ஆண்டுகள்
எம்பி எம்பிக் குதித்து
கடைசியில் பறித்தே விட்டோமா
நிலவை’ என்று.


தான் வரைந்த ஓவியத்தை
கடைசியாக ஒரு முறை
சரி செய்யும் ஓவியனைப் போல்
நீ ஒவ்வரு முறையும்
உன் உடைகளை சரி செய்கிறாய்


காற்றோடு விளையாடிக் கொண்டிருந்த
உன் சேலைத் தலைப்பை இழுத்து
நீ இடுப்பில் செருகிக்கொண்டாய்
அவ்வளவுதான்…
நின்றுவிட்டது காற்று.


ஹ்ம்ம்ம்ம்…டூ லேட் டா முத்து.
***
ஜெயமோகன் கடைசியில் இருக்கும் முடிச்சு தான் கதையை சிறுகதையாக்குகிறது என்றார். ஒரு வகையில் சரிதான். ஆனால் கண்டிப்பாக ட்விஸ்ட் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை என்று சில கதைகள் சொல்கின்றன. கதை சொல்லும் விதம் மிக மிக புதிதாக இருந்தால் ட்விஸ்ட் எதற்கு? அப்படியொரு கதை சில வருடங்களுக்கு முன் படித்தேன். ராஜா வல்லாரை கேப்சூல்ஸ் சாப்பிட்டு என் ஞாபகசக்தியைக் கூட்டிக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த முறையும் எழுதியவரின் பெயரோ, வெளியான புத்தகமோ நினைவில் இல்லை. தெரிந்தவர்கள் துப்புக் கொடுக்கவும்.

ஒரு கதையாசிரியர் கதை எழுதுவதற்காக நாற்காலி, பேனா, நோட்டுப் புத்தகம் சகிதமாக மொட்டை மாடியில் வந்து அமர்கிறார். கதை எழுத ஆரம்பிக்கிறார். அவர் எழுதிக்கொண்டிருக்கும் கதையில் ஒரு மரம் இருக்கிறது. மரத்தை சுற்றியே கதை பிண்ணப்பட்டிருக்கிறது. அவர் தினமும் வந்து எழுதிக்கொண்டிருக்கும் போது, ஒரு காகம் வந்து மொட்டைமாடியில் உட்கார்ந்து கரைந்து கொண்டிருக்கிறது.

ஒரு நாள் ஆசிரியர் எழுதிக்கொண்டிருக்கும் பொழுது அந்த காகம் ஆசிரியரை நெருங்கி, தனக்கு கூடு கட்ட இடமில்லையென்றும், தன்னை கதையில் இருக்கும் மரத்தில் கூடு கட்டிக்கொள்ள அனுமதி தருமாறும் கேட்கிறது காகம். முதலில் மறுத்த ஆசிரியர், பிறகு காகம் கெஞ்சுவதைப் பார்த்து, சரியென்று சொல்கிறார். தான் கதை எழுதுவதற்கு இடைஞ்சலாக கரைந்து கொண்டிருக்கக் கூடாது என்றும் கண்டிசன் போடுகிறார். காக்கை ஒத்துக்கொள்கிறது. கதை வளர்கிறது. காக்கைக்கும் குஞ்சுகள் உண்டாகின்றன. குடும்பமாக அந்த மரத்தில் கூடு கட்டி சந்தோசமாக வசித்து வருகிறது.

ஆசிரியர் கதையை முடிக்கப் போகிறார். கதைப்படி, கதையில் வரும் மரம் வெட்டப்படவேண்டும். அதனால் ஆசிரியர் காக்கையிடம் முன்பே எச்சரிக்கை செய்து விடுகிறார். கூட்டை காலி செய்யும் படியும் கேட்டுக்கொள்கிறார். காக்கை மறுக்கிறது. ஆசிரியர் மரத்தை வெட்டியே தீர வேண்டும் என்று பிடிவாதமாக இருக்க, காக்கை கோர்டிற்குப் போகிறது. நீண்ட வழக்குக்குப்பிறகு மரத்தை வெட்டக்கூடாது என்று காக்கைக்கு சாதகமாக தீர்ப்பு சொல்லப்படுகிறது. காக்கை சந்தோஷமாக அந்த மரத்தில் இருக்கும் கூட்டிலே தன் வாழ்க்கையைக் கழிக்கிறது.

ஆசிரியர் மரத்தை வெட்ட முடியாததால் கதையை முடிக்கமுடியாமல் தவிக்கிறார். இனி காக்கைக்கு தான் எழுதும் கதைகளில் இருக்கும் மரங்களில் கூடு கட்ட இடம் தரக்கூடாது என்று திடமான முடிவு எடுக்கிறார் என்று முடிகிறது கதை.

என்ன கதை இது என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள்? ஆகா என்ன அழகான கதை இது என்று சிலாகிப்பவர்களும் இருக்கிறார்கள். கதையை மட்டுமே ஆசிரியர் கூறியிருக்கிறார், அதை எதோடுவேண்டுமானாலும் ஒப்பிட்டுப்பார்த்து புரிந்து கொள்வது வாசகனின் திறமை. கதையைப் படித்து புரிந்துகொள்ள வேண்டுமா? ஒரு கதையை பாடப்புத்தகம் போல வாசிக்க வேண்டுமா? என்றால் ஆம் தான். கதை ஆசிரியரிடத்தே முடிவதைக்காட்டிலும் வாசகனிடம் முடிவதே சிறப்பு. ஆசிரியரின் கதைகளில் வாசகனுக்கும் பங்கு வேண்டும். அது தான் சுவை. கவிதை போல.

மற்றொரு காக்கை சம்பந்தப்பட்ட கதையை கணையாழியில் படிக்க நேர்ந்தது. யார் எழுதியது என்று மறந்து விட்டது.

பாட்டி வடை சுட்ட கதையிலிருந்து ஆரம்பிக்கிறார் ஆசிரியர். (போன பகுதியில் காக்கை வடைசுட்ட கதையைப்பற்றி அடுத்த பகுதியில் பார்ப்போம் என்று சொல்லியிருந்தேன்.) அப்புறம் அந்த கதையில் நமக்கு தெரிந்த ட்விஸ்டைக் கொடுக்கிறார். அதாவது, காக்கை வடையைத்தூக்கிக் கொண்டு மரத்திலமர்ந்து கொள்கிறது. வடையை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது, நரியார் வந்து காக்கையே உன் குரல் மிக அழகாக இருக்கிறது, ஒரு பாடல் பாடேன் என்கிறது. புகழ்ச்சிக்கு மயங்கிய காக்கை பாட வாயைத்திறக்கிறது, பிறகு உஷாராக, வடையை வாயிலிருந்து எடுத்து காலில் வைத்து கொண்டு பாட்டு பாடுகிறது. ஏமாற்றத்தால் (காக்கையின் பாடலாகக்கூட இருக்கலாம்) நரி ஒடிவிடுகிறது.

அப்புறம் ஆசிரியர் யோசிக்கிறார். காக்கை-நரி கதை அப்புறம் என்னவாயிற்று? காக்கை வடையைத்தின்று விட்டு என்ன செய்தது? காக்கையிடம் ஏமாந்த நரி என்ன செய்தது?

யோசித்துக்கொண்டிருக்கும் பொழுது, “பெரும்பாலும் குழந்தைகளின் கதைகளை பெரியவர்களே எழுதியிருக்கிறார்கள். அந்த கதைகளிலெல்லாம் குழந்தைகள் வெளியே நின்று கொண்டிருக்கின்றனர் என்கிறார். உண்மைதானே? குழந்தைகளின் உலகம் வேறு. பெரியவர்களின் உலகம் முற்றிலும் வேறு. அதெப்படி குழந்தைகளின் கதைகளை பெரியவர்கள் எழுதலாம்? எழுதினால் அது குழந்தைகளுக்கு ஏற்றார் போல இருக்குமா? குழந்தைகளிடம் கதை கேட்டுப் பாருங்கள். அவர்கள் கதை மிக மிக புதிதாக, மிகவும் கற்பனை மிகுந்ததாகவும் இருக்கும். யானைக்கு மாடு போல கொம்பு இருக்கும். குதிரைக்கு யானைத்தந்தங்கள் இருக்கும். என் அக்கா மகளுக்கு யானை பிடிக்காது. பயம். எனவே அவளின் கதைகள் அனைத்திலும் வில்லன்கள் யானையாக இருக்கும். அது பாட்டி வடைசுட்ட கதையாக இருந்தாலும் அங்கே நரிக்குப் பதிலாக யானைதான் காக்கையை வம்புக்கிழுத்துக்கொண்டிருக்கும்.

நமது கற்பனை எல்லைக்குட்பட்டது. எது சாத்தியம் எது சாத்தியமில்லை என்பது நம்க்கு தெரியும். ரெஸ்ட்ரிக்டட் இமேஜினேஷன். குழந்தைகளின் உலகம் எல்லைகள் அற்றது. வானமற்றது.

யோசித்துக்கொண்டிருந்தவர், ஒரு ஆசிர்வதிக்கப்பட்ட நாளில் – எனக்கு இந்த இரு சொற்கள் பிடித்திருக்கிறது. என்வே அதையே பயன்படுத்திக்கொள்கிறேன் – அந்தரத்தில் முடிவில்லாமல் தொங்கிக்கொண்டிருக்கும் காக்கா-நரி கதையின் அடுத்த பகுதி கிடைக்கிறது.

எங்கே நரி வடையைப் பிடுங்கிவிடுமோ என்று பயந்த காகம் வேகவேகமாக தின்றது. வேகவேகமாக தின்றதில் காகத்திற்கு விக்கல் வந்து காடெல்லாம் தண்ணீருக்காக அலைகிறது. எங்கும் தண்ணீர் பஞ்சம். கடைசியாக ஒரு குடத்தில் தண்ணீர் மிக மிக அடியில் கிடப்பதைப் பார்க்கிறது. ஆனால் அந்தோ பரிதாபம், காக்கைக்கு எட்டவில்லை. சுற்றும் முற்றும் பார்க்கிறது. உடனே அதற்கு ஐடியா ஒன்று தோன்றுகிறது. பானைக்கு அருகில் இருக்கும் கற்களை எடுத்து ஒன்றொன்றாய் பானையில் போடுகிறது. கற்கள் நிரம்பியதால் தண்ணீர் மேலே வருகிறது. ஆனந்தமாய் குடித்து செல்கிறது காக்கை.

எப்படி கோர்க்கிறார் பாருங்கள்?

சரி, காக்கையிடம் தோல்வி கண்ட நரியார் அப்புறம் என்ன செய்தார்? ஹோல்ட் ஆன். நீங்கள் யோசியுங்கள். ஆசிரியரின் மனப்போக்கையும் கதை(!?)ப் போக்கையும் அறிந்திருக்கிறீர்கள் அல்லவா? ம். நீங்கள் யோசித்தது சரியா என்று பார்க்கலாம்.

காக்கையிடம் தோல்வி கண்ட நரி, ஏமாற்றமுடன் செல்கிறது. அப்படி செல்லும் பொது, ஒரு திராட்சைத்தோட்டத்தைப் பார்க்கிறது. (எத்தனை பேர் கரெக்டாக யோசித்தீர்கள்) அந்தோ பரிதாபம். திராட்சைப் பழங்கள் எல்லாம் மிக உயரத்திலிருக்கின்றன. நரி எம்பி எம்பி குதித்துப் பார்க்கிறது. திராட்சை சிக்கவேயில்லை. எட்டவேயில்லை. சோர்ந்துபோன நரி, சீ.சீ. இந்த பழம் புளிக்கும் என்று சென்று விடுகிறது.

இன்ட்ரஸ்டிங் இல்ல? இந்த கதையின் இறுதியில் திருப்பம் எதற்கு? மிகப் புதுமையான முயற்சியே கதையை தூக்கி நிறுத்தும். நம்மை கட்டிப்போடும்.

சரி. திராட்சைப்பழம் கிடைக்காத நரி என்ன செய்தது? வயிறு முட்ட தண்ணீர் குடித்த காக்கை அப்புறம் என்ன செய்தது? நமக்கென்ன தெரியும், மிகுந்த புத்திக்கூர்மையால் ஐ.ஐ.டியில் கூட சீட் கிடைத்து படித்து அல்லது ஸ்ட்ரைக் செய்து கொண்டிருக்கலாம்.

விகடனில் வந்த ஒரு நிமிட கதை ஒன்று. கதை ஒரு நிமிடம் என்றாலும் என்னை ஒரு 20 செகண்டாவது யோசிக்கவைத்தது.

பீரோவில் எதையோ தேடிக்கொண்டிருந்தபோது, ரகசிய அறைக்குள் இருந்த அந்த டைரி என் கையில் கிடைத்தது. எடுத்து ஆர்வமாகப் புரட்டினேன்.
ஜனவரி 1: புத்தாண்டு. என்னைப்பொறுத்த மட்டும் இது புத்துணர்ச்சி ஆண்டு. காரணம் இன்று தான் கவிதா என்கிற என் தேவதையை முதன் முதலாகச் சந்தித்தேன்..
ஐயோ. இது அவர் டைரியே தான். படபடக்கும் இதயத்தோடு மேலும் புரட்டினேன்.
ஜூலை 5: இன்று எனக்கு மிகக் கொடுமையான நாள். அப்பா அம்மா பேச்சை மீற விரும்பாமல், அவர்கள் பார்த்த மாப்பிள்ளையையே கல்யாணம் செய்துகொள்ள முடிவெடுத்து விட்டாளாம் கவிதா.
செப் 21: இன்று அவளுக்கு திருமணம். டைரியை அழகாகப் பேக் செய்து எடுத்துப் போய், அவள் கையிலே பரிசாக…
‘கவிதா..கவிதா’ என்று குரல் கொடுத்தபடி என் கண்வர் வருவது தெரிய, சட்டென்று அந்த டைரியை மீண்டும் அந்த ரகசிய அறைக்கு உள்ளேயே வைத்து பூட்டினேன்.

பிறகு ஒரு மிக நகைச்சுவையான கதை ஒன்றை உயிர்மையில் படிக்க நேர்ந்தது. பொதுவாக டெக்ரானில் – எங்கேயிருக்கிறது என்று கேட்காதீர்கள், நானும் ஜியோகிராபியில் ரொம்ப வீக் – யுத்தம், ஈரானின் இலக்கியவளம், கொலம்பியாவின் குழம்பிய பெண் கவிஞர் என்று சற்றும் சம்பந்தா சம்பந்தமில்லாமல் இலக்கியத்தொண்டு செய்து கொண்டு வரும் உயிர்மை, வித்தியாசமாக ஒரு நல்ல சிறுகதையைப் பிரசுரத்திருந்தது. நாஞ்சில் நாடன் எழுதியிருந்தார். கதையின் பெயர் “கதை எழுதுவதின் கதை”.

கதை என்று ஒன்றே இல்லாததுதான் கதையின் சிறப்பு. கதைக்கு மஞ்சள் கரு, வெள்ளைக்கரு, ஹேர்பின் பெண்ட் எல்லாம் வேண்டுமென்று கேட்பவர்கள் கண்டிப்பாக படிக்கவேண்டிய கதை. கதை கேட்கும் பத்திரிக்கைகளையும், கதை எழுதுபவர்களையும் சாடு சாடு என்று சாடியிருக்கிறார். ஜெயமோகன், கதையில் எங்க வந்தார் என்று தான் எனக்கு புரியவில்லை. ஜெயமோகனைப் போட்டு புரட்டி எடுத்திருக்கிறார்,நாஞ்சில் நாடன். இதைப்பற்றி அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

(தொடரும்)

பிற பகுதிகள்:

 

4 thoughts on “ஆயிரம் கால் இலக்கியம் – 4

  1. முத்து வாசிப்பனுபவம் தொடர்ந்து வாசிக்க மாறும். காதல் கவிதைகள் தேடியலைந்த காலம் உண்டு. அப்புறம் எல்லாம் வழக்கமாகி விட்டது. சேலை, கடல், நிலா, அழகு, கண்ணாடி , வானம்,மலர் என்ற தருணங்கள் மட்டுமே சித்தரிக்கப்படுகின்றன. எல்லோரும் இதையே சொல்கையில் இட்லி, தோசை போல் ஆகி விடுகிறது. விருப்பம் இல்லாமல் இல்லை, ஆனால் வெகுவான ருசிப்பேதும் இருப்பதில்லை. எப்போதாவது ஒன்றிரண்டை ரசிக்க முடிகிறது.

    Like

  2. நிர்மல் : ம்..ம்.. உண்மைதான். உங்களுக்கு கல்யாணமாகிவிட்டதா? :))) கல்யாணம் ஆனாலும் ஆகாவிட்டாலும் காதல் கவிதைகள் என்றென்றும் இனிமையானவை இல்லையா? //என் கண்கள் துளிர்த்துக்கொண்டல்லவா இருக்கின்றனஎன்ன அழகான வரிகள். காதலி அம்பேல். இப்பொழுது இளங்கலை காதலியல் என்று எழுதிக்கொண்டிருக்கிறார் தபூஷங்கர். நீங்கள் சொல்வது போல இட்லி தோசையாக இல்லாமல் அறிவியல் சார்ந்த உவமைகளை அள்ளி வீசுகிறார்.மொ.மூ: தாங்க்ஸ். (உனக்கு நான் தாங்க்ஸ் சொல்ல வேண்டியதிருக்கிறது பார்!)

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s