இந்த பதிவை எழுதவேண்டிய நிலை வந்துவிட்டதை நினைக்கும்போது கொஞ்சம் சங்கடமாகத்தான் இருக்கிறது. காலங்கள் மாறிக்கொண்டேயிருக்கின்றன. மனிதர்களும் காலத்திற்கேற்றார்போல் தம்மை மாற்றியமைத்துக்கொள்கின்றனர். நடை, உடை, பேச்சு, கலாச்சாரம் என்று காலப்பெருஞ்சுழலில் இவையாவும் பெரிய மாற்றத்தைக் கண்டிருக்கின்றன. குகைகளில் வாழ்ந்து திரிந்து தன் மனம்போன போக்கில் வாழ்ந்து வந்த மனிதன் பிற்பாடு என்ன நினைத்தானோ தெரியவில்லை தன்னை நெறிப்படுத்தத் தொடங்கினான். விதிகள் வகுக்க ஆரம்பித்தான். ஒருவனுக்கு ஒருத்தி என்றான். தீங்கு செய்யலாகாது என்றான். பிறன்மனை நோக்காமை என்றான். அடுத்தவரை துன்புறுத்தினால் தண்டனை என்றான். விலங்குகள் போல இருந்த மனிதன் எதற்காக பிற்பாடு தனக்கு தானே விதிகளை வகுத்துக்கொண்டான்? அவன் என்ன கேனையனா?
கலாச்சாரம் என்ற ஒன்று எவ்வாறு பிறந்தது? எதற்காக உருவாகிறது? எவ்வாறு மாற்றம் அடைகிறது? நாம் உடுக்கும் உடை, பேசும் பேச்சு, பயிலும் பொழி, உண்ணும் சாப்பாடு, வணங்கும் தெய்வம் என்று எத்தனையோ விசயங்களில் கலாச்சாரம் மாறுபட்டிருக்கிறது. தமிழ் வெண்பா இயற்றிக்கொண்டிருந்த நாம் இன்று ஆங்கிலம், ஜெர்மனி, ஜாப்பனீஷ் என்று வகைக்கு ஒன்றாக படிக்கிறோம். பள்ளியில் கூட தமிழுக்கு பதிலாக சான்ஸ்க்ரீட் எடுத்து படிப்பவர்கள் இருக்கிறார்கள். இது வேறு. இது சர்வைவல் ஆப் த பிட்டஸ்ட். இது மனிதன் தன்னை இந்த உலகத்தில் இருத்திக்கொள்ள செய்யவேண்டியது. வரவேற்கத்தக்க ஒன்று. இவ்வாறன விசயங்களில் மாற்றம் தேவை. ஆனால் கலாச்சாரத்தின் ஆணிவேரிலே மாற்றம் தேவையா? ஒருவனுக்கும் ஒருத்தி என்பது போய், இப்பொழுது ஒருவனுக்கு ஒருவன் என்றும், ஒருத்திக்கு ஒருத்தி என்று ஆகும் நிலை அவசியம் தானா? அதை ஆதரிக்க சட்டம் தேவையா?
ஓரினச்சேர்க்கையை ஊக்குவிக்கக்கூடாது என்பது தான் அனைவரது நோக்கமாகவும் இருக்கும். ஆனால் ஒரினச்சேர்க்கையை ஆதரிப்பது போல சட்டம் இயற்றினால் அது ஊக்குவிப்பது இல்லாமல் வேறு என்ன? பாசிவிப்பதா? என்னங்கைய்யா இது? ஷியாம் பெனேகல், அருந்ததிராய், விக்ரம் சேத் பரிந்துரைசெய்திருக்கிறார்கள். நிறைய ஆங்கில நாவல்கள் வாசிப்பார்கள் போலும். வாசித்துவிட்டு போகட்டும். தவறில்லை. அதற்காக நாவலில் படித்த கதைகளை எல்லாம் பரிந்துரை செய்ய வேண்டுமா என்ன? சரி அப்படியே பரிந்துரை செய்தாலும் நாம் யோசிக்கவேண்டுமா இல்லையா? மேற்கத்திய எக்கனாமியை பின்பற்றுவது தவறில்லை. அவர்களைப் போல ஓட்ஸ் சாப்பிடுவதில் பிழையில்லை. அவர்களைப்பார்த்து, கொழுத்தும் மெட்ராஸ் வெயிலில் கோட்சூட் அணிந்து கொண்டால்கூட பரவாயில்லை. வெஸ்டர்ன் டாய்லெட்டில் உட்கார்ந்து கொண்டாலும் தப்பில்லை. ஆனால் கலாச்சாரத்தையும் வருஙகால சந்ததியினரையும் அடியோடு பாதிக்கும் ஒரு விசயத்தை நாம் விதைக்கலாமா?
சிலர் இந்த சட்டம் ஓரினச்சேர்க்கையாளர்களை அடையாளம் கண்டுகொள்ள உதவும் என்றும் அதன் மூலம் அவர்களை திறுத்தலாம் என்றும் பாஸிட்டிவாக யோசிக்கின்றனர். புல்ஷிட். இந்தியாவிலிருக்கும் மக்கள்தொகைக்கு இவர்கள் எங்கிருந்து திறுத்துவார்கள்? இல்லை இது போன்று திறுத்திய வரலாறு ஏதேனும் இருக்கிறதா? மது அருந்துவதை சட்டபூர்வமாக்கி என்னாவாயிற்று? எத்தனை பேர் மது அருந்துவதை நம்மால் தடுக்கமுடிந்தது? சட்டம் என்ற ஒன்று கொண்டுவந்துவிட்டால் அதை வாபஸ் பெறுவது என்பது இயலாத காரியம். இப்பொழுது யாரும் மது அருந்தக்கூடாது என்றொரு சட்டம் கொண்டுவரவேண்டும் என்றால் அதை நினைத்துக்கூட பார்க்கமுடியாது. ஏற்கனவே அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும் இந்த ஓரினச்சேர்க்கை பழக்கம் சட்டபூர்வமாக்கி விட்டால் பரம்பொருள் போல ஆகிவிடவும் வாய்ப்பிருக்கிறது. சிகரெட்டை போல. விக்ரம் சேத்துக்கு என்ன கவலை? வழக்கம்போல பக்கம் பக்கமாக எழுதி உலகின் மிகப்பெரிய புத்தகம் எழுதியவர் என்ற லிஸ்டில் மேலும் முன்னேறப்பார்ப்பார்.
இதில் மனித உரிமை பிரச்சனை வேறு. மண்ணாங்கட்டி. ஓரினச்சேர்க்கை மனித உரிமையா? எந்த ஊரில் சொன்னார்கள்? அமெரிக்காவிலா? நீங்கள் எங்கிருக்கிறீர்கள்? என்னது அத்திப்பட்டியிலா? பிறகென்ன போய் நாளைய சாப்பாட்டிற்கு என்ன வழி என்று பாரும். இல்லை உங்கள் அத்திப்பட்டி, மேப்பில் இன்னும் இருக்கிறதா என்று மற்றொருமுறை பார்த்து உறுதி படுத்திக்கொள்ளும். நினைப்பதெல்லாம் செய்தால் அதற்குப்பெயர் மனித உரிமையா? அதற்கு டெபனிஷன் வேறு. எந்த உயிரும் மற்றொரு உயிருக்கு தீங்கு ஏற்படுத்தாமல் வாழ உரிமையிருக்கிறது என்று. ஒரு மனிதன் நிர்வானமாய் இருந்தால் அதில் ஏதேனும் மற்றவருக்கு கெடுதி இருக்கிறதா? பிறகு ஏன் அது தடை செய்யப்படுகிறது? இது மனித உரிமையில்லையா? இங்கே மட்டும் கலாச்சாரம் கூரையைப்பொத்துக்கொண்டு டபக் என்று விழுகிறதோ? மது அருந்துவது மனித உரிமையா. மது அருந்திவிட்டு அந்த போதையில் நீ மற்றொரு மனிதனின் உரிமையில் தலையிடவில்லையா? மது அருந்திவிட்டு லாரியை ரோட்டில் ஒட்டாமல் ரோட்டை விட்டு கீழே மணலில் உனக்கு பயந்து கஷ்டப்பட்டு ஸ்கூட்டர் ஓட்டிக்கொண்டிருக்கும் மனிதனை பத்திரமாக சொர்கத்திற்கு அனுப்பிவிட்டு நீ ஆலமரத்தின் கிளையில் லாரியை பார்க் செய்ய ட்ரை பண்ணதில்லையா? குடிப்பது உரிமைதான். அதனால் மற்றவர்களுக்கு மறைமுகமாக தீங்கு ஏற்படுகிறதா இல்லையா? அப்பொழுது உங்கள் டெபனிஷன் தவறாகிறதே. மதுவாவது பரவாயில்லை கவர்மெண்ட் பிச்சை எடுக்காமல் காலம் தள்ள உதவுகிறது. மிஞ்சிபோனால் ஒரு தனி மனிதனையோ, அல்லது ரோட்டில் ஸ்கூட்டர் ஓட்டும் அப்பாவி மனிதனையோ, அல்லது ஒரு குடும்பத்தையோ தான் பாதிக்கும். இந்த ஓரினச்சேர்க்கை நம் சந்ததியினர் அனைவரையுமல்லவா பாதிக்கும். கலாச்சாரத்தை வேரோடு அழிக்குமே.
ஒவ்வொரு மனிதனுக்கு, ஒரு சமுதாயத்துக்கும், நாட்டுக்கும், ஏன் விலங்குக்கும் கூட ஒரு தனித்துவம் – ஐடன்டிட்டி – இருக்கிறது. அது தான் நமது அடையாளம். அதை எக்காரணத்தைமுன்னிட்டும் நாம் தொலைத்துவிடக்கூடாது. சிங்கம் என்றால் கர்ஜிக்கத்தான் வேண்டும். பிடரியில் முடி இருக்கத்தான் செய்யும். அது மனிதனைப்பார்த்து கிராப் வெட்டிக்கொண்டு ஹேர் கலரிங்கும் செய்து கொண்டால் நன்றாகவா இருக்கும். மேற்கத்தியனரின் கலாச்சாரமும் வாழ்க்கைமுறையும் வேறு. நீ இதற்கு சட்டம் வைத்திருக்கிறாயா? ஓகே. குட். அவ்வளவுதான். எங்களுக்கு இது சரிப்படாது. நாங்கள் ஓரினச்சேர்க்கையை தடுக்க என்ன செய்யலாம் என்று நாங்களே யோசித்துக்கொள்கிறோம். நமக்கு யோசிக்கத்தெரியாதா? எதற்கெடுத்தாலும் அமெரிக்காவிலிருந்து கட், காப்பி, பேஸ்ட் தானா? நாங்கள் – சாப்ட்வேர் மக்கள் – பரவாயில்லை.
இது கலாச்சாரத்திற்கு மட்டுமல்ல. இயற்கைக்கே விரோதமானது. தெரியாமலா இயற்கை ஆணையும் பெண்ணையும் படைத்தது. அல்லது கடவுள் மறுப்புக்கொள்கை உள்ளவர்களுக்கு. Evolution என்றால், தன் தேவைக்காகத்தானே ஆணாகவும், பெண்ணாகவும் evolve ஆனோம். தேவையில்லையென்றால் ஆண் முட்டும் தானே பரிணாமவளர்ச்சி அடைந்திருப்பான். திருவள்ளுவர் மிகப்பெரிய அறிவாளி என்று உலகமே ஒத்துக்கொள்கிறது. அவர் காமத்துப்பாலைப்பற்றி விரிவாக எழுதியிருக்கிறார். அங்கே எங்காவது ஓரினச்சேர்க்கை வருகிறதா? இல்லை நமது புராணங்கள் எதிலும் இவ்வாறு வருகிறதா? இப்ப மட்டும் என்ன அவசியம் பொத்துக்கொண்டு வந்தது? இதிலும் குலோபலைஷெசனா? சுதந்திரமா? இப்படி படிப்படியாக கட்டுப்பாடுகளை இழந்து கொண்டுவந்தால் நாம் மறுபடியும் சுதந்திரமான விலங்குகளாகத்தானே ஆவோம்? நமக்கும் ஐந்தறிவு விலங்குக்கும் என்ன வேறுபாடு?
ஓரினச்சேர்க்கையாளர்களை ஒதுக்கிவிட முடியாது. அதற்காக அதை சட்டமாக்கவும் கூடாது. தண்டனையில்லையேல் குற்றம் பல்கிப்பெருகி ஆலவிருட்சமாக வளர்ந்துவிடும். ஏன் கொலையை குற்றம் என்று சொல்கிறோம்? அதற்கு அதிகபட்சத்தண்டனை வழங்குகிறோம்? குற்றம் என்பதால் தான் கொலையை செய்ய மனிதன் தயங்குகிறான். இல்லையென்றால் என்னடா என் மீசையைப்பார்த்தாடா சிரிக்கிற என்று கத்தியை சொருகிவிட்டு சாதாரணமாக செல்வான் மனிதன்.
அடக்குமுறைகளாலும் சட்டத்திட்டங்களாலும் பயத்தினாலும் தான் மனிதன் மனிதனாக இன்று வரை இருந்துவந்திருக்கிறான். அப்படி அவசர அவசரமாக சட்டமாக்க இதென்ன அடிப்படை பிரச்சனையா? இந்தியாவில் உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம், குடிக்க தண்ணீர், படிக்க கல்வி – கன்னடத்திலோ, தமிழிலோ அல்லது லத்தீனிலோ, அதுவல்ல பிரச்சனை – அனைவருக்கும் கிடைக்கிறதா?பிறகு, இந்த சட்டத்திற்கு என்ன அவசரம்? இல்லை உங்களுக்கு பொழுது போகவில்லையா? பொழுது போகவில்லையென்றால் சாக்பீஸில் கோடு போட்டு தாயம் விளையாடுவது தானே? ஏன் காமோ சோமோ – என்ன அர்த்தம் என்று கேட்காதீர்கள் ப்ளீஸ் – வென்று என்னத்தையாவது செய்துகொண்டிருக்கிறீர்கள்?
நன்றி: சிவபாலன்.
ஒரினச்சேர்க்கையை சட்டபூர்வமாக்க கோருவது ஆணுக்கு ஆண் அல்லது பெண்ணுக்கு பெண் பாலியல் ரீதியில் உறவு கொண்டு அலைய வேண்டும் என்பதற்காக அல்ல,தவிரவும் ஒரினச்சேர்க்கை என்பது இன்றைக்கு நேற்றைக்கல்ல உலகமும் மனித உயிர்களும் தோன்றிய காலத்திலேயே இந்த வேரு பட்ட உடல் பழக்கம் இருந்து வந்திருக்கிறது.ஆணாதிக்க சமூக அமைப்பு தன் கொடுங்கரங்களால் இத்தகைய மாற்று பாலியல் தேடல்களை ஒடுக்கியே வந்திருக்கிறது காரணம் ஆண்களுக்கு எப்போதுமே லெஸ்பியன்ஸ் எதிரிகள்தான் ஏனென்றால் கூடி வாழ விரும்பும் இரு பெண்கள் தெரிவு செய்யும் வாழ்க்கை ஆண்களுக்கு எதிரானது என்று ஒவ்வொரு ஆணும் நம்புகிறான்.ஒரினச்சேர்க்கை குடும்பம் என்கிற அமைப்பை சிதைக்கிறது இப்படி குடும்ப அமைப்பு சிதறுவது சொத்துரிமையை பேணும் சாதி ஆதிக்க ஆண்களுக்கு ஆபத்தானது என்பதால்தான் நீங்கள் பதறுகிறீர்கள்.இந்திய தண்டனைச் சட்டத்தின் 370-வது பிரிவு ஒரினச்சேர்க்கையை தடை செய்கிறது.விரும்பி ஒரினச்சேர்க்கையில் ஈடு படுவோர் மீது சட்டம் தன் வன்முறையை பிரோகப்படுத்துகிறது.அத்தோடு நில்லாமல் அரவாணிகள் போன்றோர் மீதும் ஒரினச்சேர்க்கை என்கிற அடிப்படையில் பல தண்டனைகள் ஒழுக்கத்தின் பெயரால் வழங்கப்படுகிறது.மூன்றாம் பாலினம் குறித்த அச்சம் உங்களிடம் இருக்கிறது நண்பரே?மற்றபடி கலாசாரம் என்பதெல்லாம் பண்ணைகளும் அதிகார வர்க்கத்தினரும் அடிமைகளை ஒடுக்க தனக்கு தோதாக மக்களை பயமுறுத்த கொண்டு வந்தவைகள்தான் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.ஏனென்றால் ஆதிக்க சாதி காலாசாரம் வேறு ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களின் கலாச்சாரம் என்பது வேறு.தமிழ் கலாசாரம் என்கிற ஒற்றை அடையாளத்தையோ பொது ஒழுக்கம் என்கிற ஒற்றை அடையாளத்தையோ மக்கள் மீது திணித்து விட முடியாது….arulezhilan.blogspot.com
LikeLike