ஓசியாக கிடைக்கிறதே என்று கண்ட படத்தையும் வாங்கிப்பார்த்தால் இப்படித்தான் ஆகும். போன சனிக்கிழமை ஸ்டே “stay” என்ற படத்தின் டி.வி.டி கிடைத்தது. IMDB யில் ரேட்டிங் பார்த்ததில் 6.8 என்றிருந்தது. அப்பொழுதே உசாராகியிருந்தால் இந்த பதிவை நீங்கள் படிக்கும் அவசியமேற்பட்டிருக்காது. பொதுவாக imdb யில் ஐந்து மதிப்பெண்களுக்கு மேல் குடுத்திருக்கிறார்கள் என்றால் கண்டிப்பாக அந்த படத்தைப் பார்க்கலாம். ஏழு, எட்டு, ஒன்பது என்றால், உஷார் : புரியாமல் போக வாய்ப்பிருக்கிறது. அவர்களே, என்ன இது புரியமாட்டேன் என்கிறது; பேசாமல் நல்ல மார்க்கை கொடுத்துத்தொலைப்போம்; நமக்கேன் வீணவம்பு என்று மார்க்களிக்கிறார்கள் என நினைக்கிறேன். Twelve Monkeys போல. சத்தியமாக எனக்கு Twelve Monkeys படம் புரியவில்லை. ஒரு நண்பன் -அவன் நிறைய ஆங்கில சினிமா பார்ப்பவன்; என் பதிவுகளை படிப்பவர்களுக்கு; குறட்டை கோவிந்தன், வேட்டையராஜா, சம்மன சாமியார் – என்னிடம் “அப்படியா புரியவில்லையா?? கொடு பார்ப்போம்” என்றான். நானும் அவனும் ஒரு ஞாயிற்றுக்கிழமை மதியம் Twelve Monkeys – டூ மன்கீஸ் சீயிங் டுவல்வ் மன்கீஸ் : என்று கவிதை எழுதுபவர்கள்; பரவாயில்லை பிழைத்துப்போங்கள்! -பார்ப்பதற்கு உட்கார்ந்தோம்.
அவன் சோபாவில் உட்கார்ந்திருந்தான். நான் கீழே உட்கார்ந்திருந்தேன். நான் இந்த முறையாவது புரிகிறதா பார்க்கலாம் என்று படத்தில் மூழ்கிவிட்டேன். ஒரு இடத்தில் எனக்கு இந்தமுறையும் புரியாமல் போகவே: என்னடா இது என்று அவனைத் திரும்பிப்பார்க்க; அவன் நன்றாக தூங்கிக்கொண்டிருந்தான். குட். படத்தில் கடைசியில் ட்விஸ்ட், சஸ்பென்ஸ் என்று இருப்பதெல்லாம் ஓகே தான். ஆனால் கடைசியில் இருக்கும் ட்விஸ்டை பார்ப்பதற்கு; படத்தின் கடைசி வரைப் பார்க்கவேண்டுமே-தூக்கம் அல்லது குறட்டை வராமல்!
12 monkeys போல இல்லையென்றாலும், “ஸ்டே” கொஞ்சம் நல்லாவே இருந்தது. எடுத்த விதமும், கதை சொல்லப்பட்ட விதமும், நவோமி வாட்ஸ¤ம் (த ரிங், கிங் காங்) அழகு!
முதலில் ஒரு கார் ஆக்ஸிடென்ட் ஆவது காட்டப்படுகிறது. வித்தியாசமாக. அதாவது, உள்ளே உட்கார்ந்து ட்ரைவ் செய்பவரின் கண் பார்வைக்கு எப்படித்தெரியுமோ, அப்படி. பிறகு ஒரு மனிதன் கவிழ்ந்து எரிந்து கொண்டிருக்கும் காருக்கு அருகே உட்கார்ந்திருக்கிறான். அந்த காரில் பயணித்தவனாக இருக்கவேண்டும். சும்மாவே உட்கார்ந்திருக்கிறான். பிறகு எழுந்து சென்று விடுகிறான்.
ஒரு சைக்யாட்ரிஸ்ட் இருக்கிறார். அவருக்கு கை நரம்புகளை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற காதலி இருக்கிறாள். ஒரு நாள் பென் (ஆக்ஸிடென்ட் ஆன காரில் இருந்தவர்) சைக்யாட்ரிஸ்டை பார்க்க வருகிறார். சைக்யாட்ரிஸ்ட் அவரிடம் கேள்விகள் சில கேட்க, அவர் பதில் அளிக்க மறுக்கிறார். பிறகு இன்றைக்கு கடும்புயல் வரும் என்று சொல்கிறார். வானம் மிகத்தெளிவாக இருக்கிறது. பிறகு தான் தற்கொலை செய்துக்கொள்ளப்போவதாக சொல்கிறார். சைக்யாட்ரிஸ்ட் ஏன் தற்கொலை செய்துகொள்கிறாய்? எப்பொழுது செய்துகொள்ளப்போகிறாய் என்று கேட்கிறார். ஏன் என்பதற்கு பதிலலிக்காமல் அடுத்த சனிக்கிழமை செய்துகொள்ளப்போகிறேன் என்று பென் சொல்லிவிட்டு சென்றுவிடுகிறான். அவன் சொன்னமாதிரியே அன்றைக்கு கடும் புயல் வருகிறது.
வீட்டில் சென்று காதலியிடம் பென்னைப்பற்றி சொல்கிறார் சைக்யாட்ரிஸ்ட். காதலி மீண்டும் தற்கொலைக்கு முயற்சிசெய்வாளோ என்ற சந்தேகம் அவருக்கு இருக்கிறது. மீண்டும் பென் தன்னைப்பார்க்க வரமாட்டான் என்று தன் காதலியிடம் சொல்ல, காதலி, இல்லை பென் கண்டிப்பாக வருவான் என்கிறாள்.
சைக்யாட்ரிஸ்ட்டும், ஒரு கண் தெரியாத நபரும் செஸ் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். சைக்யாட்ரிஸ்ட் கண் தெரியாத நபரிடம் ஒரு வெட்டிங் ரிங்கை எடுத்து காண்பிக்கிறார். கண் தெரியாத நபர் அதை தொட்டுப்பார்த்து விட்டு, சைக்யாட்ரிஸ்டின் காதலி இப்பொழுது எப்படி இருக்கிறாள் என்றும் வேகமாக திருமணம் செய்து கொள்ளுங்கள் என்றும் சொல்கிறார். அப்போது பென் அங்கே வருகிறான். கண் தெரியாத நபரைப்பார்த்ததும், பென், அவர் தனது தந்தை என்றும், அவர் நீண்ட நாட்களுக்கு முன் இறந்து விட்டார் என்றும் சொல்கிறான்.
சனிக்கிழமை நெருங்கிக்கொண்டிருக்கிறது. பென்னுக்கு ஒரு காதலி இருக்கிறாள். அவள் பெயர் அதீனா. அதீனா ஒரு ஹோட்டலில் வெய்ட்ரஸாக இருக்கிறாள். ஒரு நாள் சைக்யாட்ரிஸ்ட் கையில் வெட்டிங்ரிங் இருப்பதைப் பார்த்து, பென், அது தான் தன் காதலிக்கு வாங்கின வெட்டிங் ரிங் என்று சொல்கிறான். சைக்யாட்ரிஸ்ட் இல்லை அது தன்னுடையது என்றும் அவர் பென்னிடமிருந்து திருடவில்லையென்றும் கூறுகிறார். பென் நம்பிக்கையில்லாமல் அவரைப் பார்த்தபடியே இருக்கிறான். அப்பொழுது ஒரு பலூன் வைத்திருக்கும் சிறுவனும் , சிறுவனின் அம்மாவும் அவனைக்கடந்து செல்கின்றனர். அந்த பையன்: அம்மா, (பென்னைப் பார்த்து) இவன் சாகப்போகிறானா? என்று கேட்கிறான். அவனுடைய அம்மா: இல்லை அவன் பிழைத்துவிடுவான் என்கிறாள். (அதானே எதற்கு சம்பந்தாசம்பந்தமில்லாமல் திடகாத்திரமாக நின்று கொண்டிருக்கும் ஒரு நபரைப் பார்த்து ஒரு சிறுவன் ஏன் இப்படி கேட்கவேண்டும் என்ற கேள்வி எனக்கும் எழாமலில்லை!)
அடுத்த சில நாட்கள் பென்னைக் காணவில்லை. சைக்யாட்ரிஸ்ட் அவனைத்தேடிக்கொண்டு அவன் வீட்டு அட்ரஸை தேடிக்கண்டுபிடித்து அங்கே செல்கிறார். அங்கே பென்னின் அம்மா இருக்கிறார். அவர் சைக்யாட்ரிஸ்டைப் பார்த்ததும் அன்புடன்: வா மகனே என்று அழைக்கிறார். சைக்யாட்ரிஸ்டும் உண்மையை அறிந்துகொள்வதற்காக மகனாகவே (பென்னாகவே) காட்டிக்கொள்கிறார். அங்கே ஒரு நாய் இருக்கிறது. பேசிக்கொண்டிருக்கும் போதே பென்னின் அம்மாவின் நெற்றியில் இரத்தம் ஒழுக ஆரம்பிக்கிறது. சைக்யாட்ரிஸ்ட் அவரிடம் ஏன் இரத்தம் ஒழுகுகிறது என்றும் ஹாஸ்பிட்டலுக்கு செல்லலாம் என்றும் அழைக்கிறார். அதற்கு அவள் வேண்டாம் உனக்கு சாப்பாடு தயாரிக்கிறேன் என்று சொல்லி சமையலரைக்கு போகிறாள். சைக்யாட்ரிஸ்ட் நிர்பந்திக்கவே, நாய் சைக்யாட்ரிஸ்டை கடித்துவிடுகிறது.
சைக்யாட்ரிஸ்ட் கையில் கட்டுப்போடப்பட்டு உட்கார்ந்திருக்கிறார். போலீஸ் வந்து என்ன நடந்தது என்று கேட்கிறார். சைக்யாட்ரிஸ்ட் தான் பென்னின் வீட்டிற்கு சென்றதாகவும். அங்கே அவளுக்கு இரத்தம் ஒழுகிக்கொண்டிருப்பதாகவும். உடனடியாக காப்பாற்றவேண்டும் என்று கூறுகிறார். ஆனால் போலீஸோ தான் பென்னின் அம்மாவின் பள்ளித்தோழன் என்றும் பென்னின் அம்மாவின் இறுதிச்சடங்கிற்கு தான் சென்றிருந்ததாகவும் சொல்கிறார். (என்ன தலை சுற்றுகிறதா? சும்மா கதை கேட்பதற்கே இப்படியென்றால். சனிக்கிழமை இரவு 12 மணிக்கு படம்பார்த்த எங்களுக்கு எவ்வளவு எரிச்சலாக இருந்திருக்கும்?)
கையில் கட்டுடன் வீட்டிற்கு செல்கிறார் சைக்யாட்ரிஸ்ட். அவருடைய காதலி அவர் கதவைத்திறக்கும் முன்னர் கதவைத்திறந்து விடுகிறாள். இந்த காட்சி நிறைய முறை “ரிப்பீட்டு” ஆகிறது. அவர் கதவைத் திறக்கிறார், காதலி எங்கே இரவெல்லாம் சென்றிருந்தீர்கள் என்கிறாள். திறக்கிறார். எங்கே இரவெல்லாம் சென்றிடுந்தீர்கள். றக்கிறார். இரவெல்லாம் சென்றிருந்தீர்கள். க்கிறார். சென்றிருந்தீர்கள். அதை தொடர்ந்து சைக்யாட்ரிஸ்ட் படுக்கைக்கு வந்து படுக்கும் வரை காட்சிகள் மீண்டும் மீண்டும் காட்டப்படுகின்றன. ஒரே வசனம் ரிப்பீட் செய்யப்படுகிறது.
மறுநாள் காலை சைக்யாட்ரிஸ்ட் எழுந்திருக்கும் முன் காதலி கிளம்பி வெளியே சென்றுவிடுகிறாள். சைக்யாட்ரிஸ்ட்டும் வீட்டிற்கு வெளியே வரும்பொழுது அங்கே பென் உட்கார்ந்திருக்கிறான். இருவருக்கும் வாக்குவாதம் வருகிறது. சைக்யாட்ரிஸ்ட் பென்னிடம் : நீ உன் அம்மா இறந்துவிட்டார் என்றாய் ஆனால் நான் அவளைப் பார்த்தேன். தலையில் இரத்தம் சொட்டிக்கொண்டிருந்தது. உன் நாயைக்கூடப் பார்த்தேன் அது என்னைக் கடித்துவிட்டது- என்கிறார். அதற்கு அவன் மறுத்துவிட்டு, அதெப்படி சாத்தியம் என் அம்மாவை நான் தானே சுட்டுக்கொன்றேன் என்கிறான். நான் சிறுவனாக இருக்கும் போதே எங்களுடைய நாய் இறந்துவிட்டது நான் தான் புதைத்தேன் என்றும் சொல்கிறான். இருவருக்கும் வாக்குவாதம் வர, இருவருக்கும் ஒரே வாக்கியங்களை ஒரே சமயத்தில் பேசிக்கொள்கின்றனர். பிறகு பென் போகிறான். சைக்யாட்ரிஸ்ட் அவனைத்தடுக்க, அவன் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, சென்றுவிடுகிறான்.
சைக்யாட்ரிஸ்ட் பென்னின் காதலி ரெஸ்டாரென்டில் தான் வேலை செய்கிறாள் என்று தெரிந்து கொண்டு அவளைத்தேடி ஒவ்வொரு ரெஸ்டாரென்டாக ஏறி இறங்குகிறான். எந்த ரெஸ்டாரண்டிலும் அவள் இல்லை. கடைசி ரெஸ்டாரென்டில் சைக்யாட்ரிஸ்ட் பென்னின் காதலியை (அதினா) பற்றி விசாரித்து விட்டு அவள் இல்லை என்றவுடன் சோர்வாக உட்கார்ந்து டீ சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார். அப்பொழுது ஒரு வெய்ட்ரஸ் சைக்யாட்ரிஸ்ட்டிம் வந்து, அதினாவை ஏன் தேடுகிறீர்கள் என்கிறாள்.
ஒருவழியாக அதீனாவை தேடிக்கண்டுபிடித்துவிடுகிறார் சைக்யாட்ரிஸ்ட். அங்கே அவள் நாடக ரிகர்சலில் இருக்கிறாள். நாடகம் முடிந்ததும் சைக்யாட்ரிஸ்ட் அவளிடம் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு பென் பற்றி விசாரிக்கிறார். அவள் அவரை சுழல் படிகள் கொண்ட பாதாளத்திற்கு அழைத்துச் செல்கிறாள். (சுழல் படிகள் சுழலுகிறதோ இல்லையோ நம் தலை சுழல்கிறது) படிகளில் வேகமாக இறங்கிக்கொண்டிருந்த சைக்யாட்ரிஸ்ட் தடுமாறி கீழே விழுந்து விடுகிறார் (விழட்டும் நன்றாக வேண்டும்). காதலிக்காக வாங்கி வைத்திருந்த ரிங் (பென் தன்னுடையது என்று சொன்னது) கீழே விழுந்து விடுகிறது. தடவி தடவி ரிங்கை எடுக்கிறார். அதீனாவை காணவில்லை. மீண்டும் படிகளில் ஏறி மேலே வருகிறார். அங்கே முன் பார்த்த அதே காட்சி அதே வசனத்துடன் நாடக ஒத்திகை நடந்து கொண்டிருக்கிறது. (அட போங்கப்பா!)
பென் ஒரு புத்தக கடைக்கு அடிக்கடி போவான் என்கிறாள் அத்தீனா. பென்னை தான் காதலிக்கவில்லை என்றும் கூறுகிறாள். சைக்யாட்ரிஸ்ட் பென்னைத்தேடிக்கொண்டு அந்த புத்தகக் கடைக்கு போகிறார். புத்தகக் கடைகாரருக்கு பென்னை ஞாபகம் இருக்கிறது. மேலும் அவர், பென் தான் படிக்கும் புத்தகங்களுக்கு பணம் கொடுக்க முடியாததால் ஒரு படம் வரைந்து கொடுத்திருக்கிறான் என்கிறார். அந்த அழகிய படத்தை சுவற்றில் மாட்டி வைத்திருக்கிறார். படத்தில் பிரபல் எழுத்தாளர் (அல்லது ஓவியர். எனக்கு மறந்துவிட்டது!) இருக்கிறார். அப்பொழுது தான் சைக்யாட்ரிஸ்ட்டுக்கு நினைவுக்கு வருகிறது, அவருடைய காதலியும் அந்த படத்திலிருப்பவரின் ரசிகை என்று.
தன் காதலிக்கு போன் செய்து அந்த படத்திலிருப்பவரைப்பற்றி கேட்கிறார் சைக்யாட்ரிஸ்ட். அவள் அவர் தற்கொலை செய்து கொண்டதாக சொல்கிறாள். விபரமாக : அவர் ஒரு சனிக்கிழமை தனது இருபத்தி ஒன்றாவது பிறந்தநாளின் இரவில் ஒரு பாலத்தில் (அந்த பிரிட்ஜ் அவர்கள் வசிக்கும் நகரத்திலே இருக்கிறது) துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார் என்றும் சொல்கிறாள்.
பென்னுக்கும் அது இருபத்தியொன்றாவது பிறந்த நாளே. சைக்யாட்ரிஸ்ட் அந்த பாலத்தை நோக்கி ஓடுகிறார். சைக்யாட்ரிஸ்ட்டின் காதலியும் பாலத்திற்கு வருகிறார். அங்கே பென் அவர்கள் முன்னாலேயே துப்பாக்கியால் சுட்டுக்கொள்கிறான்.
கார் விபத்து நடக்கிறது. டயர் வெடித்து கார் நிலை குப்புற விழுகிறது. கார் ஓட்டிக்கொண்டுவந்த பென் நிலை குப்புற விழுகிறான். தலையில் பலமாக அடிபடுகிறது. காரில் இருந்த பென்னின் அப்பா, அம்மா மற்றும் காதலி அந்த இடத்திலே உயிரை விடுகிறார்கள். பென்னிற்கு மட்டுமே கொஞ்சம் உயிர் இருக்கிறது.
பென்னிற்கு பின்னால் கார் ஒட்டிக்கொண்டுவந்த சைக்யாட்ரிஸ்ட் (அவர் சைக்யாட்ரிஸ்ட் அல்ல. ஒரு சாதாரண மருத்துவர்) விபத்தை பார்த்து, பதறியடித்துக்கொண்டு காப்பாற்ற வருகிறார். பென்னுக்கு தைரியம் சொல்கிறார். பென் அரை மயக்கத்தில் அவரைப்பார்க்கிறான்.
இன்னொரு காரில் அந்தப்பக்கம் வந்த சைக்யாட்ரிஸ்ட்டின் காதலி (சைக்யாட்ரிஸ்ட்டின் காதலியே அல்ல. அவள் வேறு யாரோ! ) யும் பென்னை காப்பாற்ற முயற்சி செய்கிறாள். பென் அரைமயக்கத்தில் இருவரையும் பார்க்கிறான்.
படத்தில் போலிசாக வந்தவர், அந்த கூட்டத்தில் இருக்கிறார். படத்தில் வரும் மற்ற கதாப்பாத்திரங்கள் (பலூன் வைத்திருக்கும் பையனும்,அம்மாவும் கூட்டத்தில் இருக்கிறார்கள். அந்த பையன்: அம்மா, இவன் சாகப்போகிறானா? என்று கேட்கிறான். அவனுடைய அம்மா: இல்லை அவன் பிழைத்துவிடுவான் என்கிறாள்)
எல்லாம் – அதீனா இருக்கும் ரெஸ்டாரன்டை சொன்ன மற்றொரு வெயிட்ரஸ்- கூட்டத்திலே இருக்கின்றனர்.
ஆம்புலன்ஸ் வந்து பென்னை தூக்கிக்கொண்டு செல்கின்றனர். அவன் இன்னும் சாகவில்லை. (அவனை ஆம்புலன்ஸில் தூக்கி வைக்கும்போது அவன் பார்வையில் தெரியும் கட்டிங்கள் சாட்சி). பிறகு அவனுக்கு உதவிய இருவரும் (டாக்டர் மற்றும் இன்னொரு பெண்) காபி சாப்பிட செல்கின்றனர்.
நான் புரிந்துகொண்டது :
எல்லாம் மாயை. illusion. கார் ஆக்ஸிடன்டில் அடிபட்டு சாகப் பிழைக்க கிடக்கும் பென்னின் ஆழ் மனது, தான் வாழ்க்கையில் சந்தித்த நிகழ்வுகளையும், நினைத்து வைத்திருந்த கற்பனைகளையும் ஒன்றாக சேர்த்து, அதற்கு, நிஜ வாழ்க்கையில் தற்பொழுது உதவிக்கொண்டிருக்கும் டாக்டரையும், உடன் இருக்கும் ஒரு பெண்ணையும், ஹீரோ, ஹீரோயினாக வைத்து ஒரு குழப்பமான நிகழ்ச்சி பின்னலை ஏற்படுத்திக்கொள்கிறது. அதே மனது, டாக்டரை தானாகவும் சில இடங்களில் -சைக்யாட்ரிஸ்ட், பென்னின் அம்மாவைப் பார்க்கப்போகும் போது, பென்னின் அம்மா சைக்யாட்ரிஸ்ட்டை பென்னாக நினைத்து பேசுவது, பென்னும் சைக்யாட்ரிஸ்ட்டும் பேசிக்கொள்ளும் போது இருவரும் ஒரே வாக்கியங்களை பயன்படுத்துவது – எண்ணிக்கொள்வது தான் விசித்திரம்.
மாயா மாயா எல்லாம் மாயா. சாயா சாயா எல்லாம் சாயா. வேறு வகைகளில் படத்தைப் புரிந்தவர்கள், ப்ளீஸ் என்னன்னு கொஞ்சம் சொல்லுங்க!
I like RottenTomatoes perspectives more than IMDB 🙂Stay
LikeLike
இந்த வாரம் பாத்திட்டு சொல்லறேன்.முத்து mohaland drive அப்படினு ஒரு படமிருக்கு. அவசியம் பாருங்க. மனம்தெளிவாகி(!) விடும்
LikeLike
இந்த வாரம் thank you for not smoking படம் dvd வருது. நல்ல காமிக்கா சிகரேட் இன்டஸ்ட்ரிஸ் பற்றி சொல்லி இருக்காங்களாம்,
LikeLike
நிர்மல்: வாங்க சார்.mohaland drive?! பார்க்கிறேன். thankyou for not smokin?. canes festival போனதே அந்த படம் தானே? நானும் இன்னும் பார்க்கவில்லை. dvd கிடைத்தால் பார்க்கிறேன்.பாலா: rottentomatos ரொம்ப ஓவராக இருக்கிறதே. stay க்கு 26 மார்க் கொடுத்திருக்கிறார்கள்!! பாஸாவாது ஆகக்கூடிய படம் தான் அது.
LikeLike