த நைட் லிசனர்

இந்த பதிவை எழுதத்தொடங்கும் முன் எனக்கு த நைட் லிசனர் என்பதை –தமிழார்வ மிகுதியால்; இராகவனின் சொல் ஒரு சொல் பதிவுகளைப் படித்ததால் கூட இருக்கலாம் – தமிழில் மொழி பெயர்த்தாலென்ன என்கிற விபரீத எண்ணம் தோன்றியது. இரவில் கவனிப்பவன் என்றால் வேறுவிதமான அர்த்தம் –மன்னிக்கவும்– தோன்றுவதாக அடியேனுக்கு படுகிறது. இரவு கவனிப்பாளன். சில தமிழகராதியில் – நீ ஏன் இப்படி அகராதித்தனம் பண்ணுகிறாய் என்று நீங்கள் கேட்பது எனக்கு கேட்காமலில்லை – தேடியதில் “லிசனர்” என்பதற்கு உற்று கேட்கிறவர் என்கிற அர்த்தம் கிடைத்தது. மொத்தமாய் : இரவில் உற்றுக்கேட்பவர் – என்னை முரைத்தால் நான் என்ன செய்ய முடியும்; அப்படித்தானே அர்த்தம் வருகிறது!– நான் ஆட்டைக்கு வரலப்பா.

ராபின் வில்லியம்ஸ் படங்கள் எனக்கு பிடிக்கும். அவரது படங்கள் முன்பெல்லாம் நகைச்சுவையாக இருந்தது. இப்பொழுது மர்மம் நிறைந்ததாக இருக்கிறது. ஒன் அவர் போட்டோ, த பைனல் கட், இன்சோம்னியா. இப்பொழுது த நைட் லிசனர். நகைச்சுவை என்றால் புகுந்து விளையாடும் ராபின் வில்லியம்ஸ், சீரியஸ் ரோல் என்றால் மிகவும் சோகமாகி விடுகிறார். இரண்டு வருடங்களுக்கு முன் நடந்த ஆஸ்கார் விழாவில், ராபின் வில்லியம்ஸ் அனைவரையும் மேடையில் கலாய்த்தது உங்களுக்கு நினைவிருக்கும்.

கேப்ரியல் நூன் (ராபின் வில்லியம்ஸ்) ஒரு ரேடியோ ஷோ நடத்துபவர். அவரது நிகழ்ச்சி இரவு 11:00 மணியிலிருந்து – 12:00 மணி வரைக்கும் இடம்பெறும். இரவில் கதை சொல்வார் கேப்ரியல். ஒரு நாள் அவரது நண்பர் கேப்ரியலிடம் ஒரு மனுஸ்க்ரிப்ட் கொடுக்கிறார். அது ஒரு கதை. பீட் என்கிற பதினான்கு வயது சிறுவன் எழுதிய கதை. அவன் தனது பெற்றோர்களால் உடலாலும் மனதாலும் துன்புறுத்தப்பட்டு அவர்களிடமிருந்து தப்பித்த எய்ட்ஸ் நோயாளி. பிறகு ஒரு தெரபிஸ்ட் (டோனி) அவனைத் தத்தெடுக்கிறாள். இப்பொழுது அந்த சிறுவனுக்கு அவளே பாதுகாவலர். அவள் பொறுப்பில் இருக்கும் பொழுதுதான் அந்த சிறுவன் இந்த கதையை எழுதியிருக்கிறான்.

கேப்ரியல் கதையை படித்து முடிக்கிறார். அவருக்கு பதினான்கு வயது சிறுவன் இதை எழுதினானா என்று நினைக்கிற பொழுது ஆச்சரியமாக இருக்கிறது. அவன் இவ்வாறு எழுத நேர்ந்ததை – அவன் பட்ட துன்பங்களை- நினைக்கும் போது பாவமாகவும் இருக்கிறது. புத்தகத்தை வெளியிட விரும்புகிறார் கேப்ரியல். தன்னுடைய நண்பரிடம் அவனது போன் நம்பர் வாங்கி அவனை தொடர்பு கொள்கிறார்.

கேப்ரியலுக்கும் அந்த சிறுவனுக்கும் நட்பு மலர்கிறது. கேப்ரியல் அந்த சிறுவனுக்கு தந்தை ஸ்தானத்தில் ஒருவர் தேவைப்படுகிறார் என்பதை அறிந்து அவனிடம் மேலும் அன்பு செலுத்துகிறார்.

ஒரு நாள் பீட்டிற்கு உடம்பிற்கு முடியாமல் போகிறது. அவனை ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்கிறாள் டோனி. போனின் இந்த விசயத்தை கேள்விப்பட்ட கேப்ரியல் மிகுந்த சோகம் அடைகிறார். அந்த சிறுவனை பற்றி முழுமையாக தெரியாமல் இருக்கும் பொழுது, ஏன் இப்படி கேப்ரியல் மிகுந்த வருத்தமாக இருக்கிறார் என்று நினைத்து கேப்ரியலின் நண்பர்கள் வருத்தமடைகின்றனர். மேலும் அந்த சிறுவன் உண்மையிலே இருக்கிறானா என்று கேள்வி எழுப்புகின்றனர். மேலும் கேப்ரியலின் நண்பர் ஒருவர், கேப்ரியல், டோனி மற்றும் பீட் தொலைபேசியில் (ஸ்பீக்கர் போனில்) பேசும் போது கேட்டுக்கொண்டிருக்கிறார். அவர் கேப்ரியலிடம் : பீட் மற்றும் டோனியின் குரல் ஒரே மாதிரி இருக்கிறது என்றும் கொழுத்திப்போடுகிறார். கேப்ரியலிடம் அந்த சிறுவனின் படம் (போட்டோ) ஒன்று இருக்கிறது. தொலைபேசி எண் இருக்கிறது. வீட்டு அட்ரஸ் இருக்கிறது.

பீட்டிற்கு உடம்பு சரியாகின்றது. கேப்ரியலை கிரிஸ்துமஸ் பார்ட்டிக்கு அழைக்கிறாள் டோனி. கேப்ரியலும் அவர் நண்பரும் இணையத்திலும் மற்ற ரெக்கார்டிலும் பீட் பற்றி தேடுகின்றனர். பீட் டின் அடையாளமே கிடைக்கவில்லை. (அத்திப்பட்டியைப் போல!) கேப்ரியலுக்கு சந்தேகம் வருகிறது. டோனியின் தொலைபேசி எண் வேலை செய்யவில்லை.

கேப்ரியல் அந்த அட்ரஸை தேடிச் செல்கிறார். (விமானப்பயணம் மற்றும் பனி கொட்டும் வழியில் கார் பயணம்). நீண்ட பயணத்திற்குப்பின் அவர் தேடிவந்த முகவரி ஒரு ரீட்டையில் ஷாப். அங்கு வீடே இல்லை.

அந்த ஊரிலே லாட்ஜ் எடுத்துத் தங்குகிறார். தற்செயலாக ஹோட்டலில் இருந்து பார்க்கும் பொழுது பீட் அடிக்கடி சொல்லும் லைட்டால் செய்யப்பட்ட நட்சத்திரம் தெரிகிறது. இரவென்றும் பார்க்காமல் அங்கே செல்கிறார். அது ஒரு வாட்டர் டேங்கின் வெளிப்புறத்தில் பிரகாசமான் மின் விளக்குகள் பொருத்தப்பட்ட ஸ்டார் வடிவ விளக்கு. அங்கே உள்ள வீட்டிற்கு அவர் செல்ல முற்படுகிற பொழுது அந்த வீட்டிலிருந்து நாய் குரைக்கிறது. கேப்ரியல் பயந்து ஓடி விடுகிறார்.

மறுநாள் காபி ஷாப்பில் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது, தடித்த கண்ணாடியால் (அந்த பக்கம் உட்கார்ந்திருப்பவரின் உருவம் மட்டுமே மிக மங்கலாகத் தெரியும்) மறைக்கப்பட்டு அந்த பக்கம் உட்கார்ந்திருக்கும் ஒரு பெண்ணின் குரல் கேட்கிறது. அது பரிச்சயமான குரலாக இருக்கிறது. அந்த பெண்ணும் இவரைப் பார்ப்பது சற்று மங்கலாகத் தெரிகிறது. அந்த பெண் புறப்படும் வரை காத்திருந்து, அவளைப் பின் தொடர்கிறார். அவள் பார்வை இழந்தவள். கூடவே ஒரு நாயிருக்கிறது. அவள் நேற்று பார்த்த நட்சத்திரத்திற்கு எதிரான வீட்டிற்கே போகிறாள். இவள் தானா டோனி என்கிற சந்தேகத்தில் வீட்டிற்கு வெளியேயே மறைவாக நின்று கொண்டிருக்கும் கேப்ரியலை, வாசலில் நின்று திரும்பி, ‘ஒரு ஹலோ சொல்லமாட்டியா கேப்ரியல்” என்கிறாள் டோனி.

கேப்ரியல் வீட்டில் தேடிப்பார்க்கிறார். பீட் இல்லை. அவனது படுக்கை மட்டுமே வெறுமையாக இருக்கிறது. கேப்ரியல் பீட் எங்கே என்று கேட்கவும், டோனி அவனுக்கு உடம்புக்கு ரொம்பவும் முடியாமல் போய் விட்டது என்றும் ஹாஸ்பிட்டலில் இருக்கிறான் என்றும் சொல்கிறாள். கேப்ரியல் நாளை சென்று பீட்டை பார்க்கலாமா என்று கேட்க, சரி போகலாம் என்கிறாள் டோனி. டோனி தானும் கேப்ரியலின் ரசிகை என்றும், ஒரு முறை தொட்டுப்பார்த்துக்கொள்ளலாமா என்றும் கேட்கிறாள்.

கேப்ரியல் மறுபடி மறுபடி பீட்டைப் பற்றி விசாரிக்க, டோனி, உங்களுக்கு சந்தேகமா? புத்தகம் வெளியிடுவதில் பிரச்சனையா என்று கேட்கிறாள். கேப்ரியல் ஆமாம் எனவும், மிகுந்த ஆத்திரம் கொண்டவளாக உன்னை நாளைக்கு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல மாட்டேன் என்றும் இனி மேல் இங்கு வரத்தேவையில்லை என்றும் சொல்கிறாள். கதவை மூடிவிடுகிறாள்.

கேப்ரியல் அந்த ஊருக்கு அருகிலிருக்கும் ஆஸ்பத்திரிக்கு சென்று பீட்டைத்தேடுகிறார். அங்கிருக்கும் மற்ற அனைத்து மருத்தவமனைக்கும் சென்று தேடுகிறார் எங்கும் பீட் இல்லை.

மறுநாள் கேப்ரியல் கண்ணாடியை உடைத்துக்கொண்டு டோனியின் வீட்டிற்குள் நுழைகிறார். எங்கும் பீட் இல்லை. அவர் தேடிக்கொண்டிருக்கும் பொழுது போலீஸ் வந்துவிடுகிறது. போலிஸில் அனைத்து விசயங்களையும் விவரித்து, வெளியே வரும் பொழுது, டோனி நின்று கொண்டிருக்கிறாள். பீட் நேற்றிரவு இறந்து விட்டான் என்று சொல்கிறாள். கேப்ரியல் நம்ப மறுக்கிறார். பொய் சொல்கிறாய் என்கிறாள். அவள் ரோட்டில் உட்கார்ந்து இல்லை இல்லை என்று கத்துகிறாள். ஒரு ட்ரக் வருகிறது. கேப்ரியல் அவளை எழுந்து வருமாறு சொல்ல, அவள் கைதூக்கி விடச்சொல்கிறாள். கேப்ரியல் கைதூக்கிவிட முயற்சிக்கும் போது, டோனி கேப்ரியலை அழுத்தமாகப் பிடித்துக்கொண்டு கொலை செய்ய முயற்சிக்கிறாள்.


கேப்ரியல் திரும்பி வந்து விட்ட பொழுதும் டோனி விடாமல் போனில் அழைத்துக்கொண்டேயிருக்கிறாள். ஒரு நாள் தான் தங்கியிருக்கும் லாட்ஜுக்கு கடைசி ஒருமுறை வரச்சொல்லுகிறாள். கேப்ரியல் லாட்ஜுக்கு செல்கிறார். படியேறி அவள் ரூமை நோக்கி செல்லும் போது, டோனி ரூமிலிருந்து வெளிப்படுவதைப் பார்த்து ஒளிந்து கொள்கிறார். டோனி படியிரங்கும் முன், கேப்ரியலை நன்றாக உற்றுப்பார்த்து (கருப்பு கண்ணாடி அணிந்திருக்கிறாள்) செல்கிறாள்.

கேப்ரியல் ரூமுக்கு உள்ளே நுழைந்து ஒரு வீடியோ கேசட் இருப்பதைப் பார்க்கிறார். அதில் பீட் படுத்திருக்கும் படம் ஓடிக்கொண்டிருக்கிறது. போன் அழைக்கிறது. பீட் பேசுகிறான். தான் டோனிக்காக ஏர்போர்டில் காத்துக்கொண்டிருப்பதாகவும், உங்களிடமிருந்து என்னைக்காப்பாற்றவே டோனி தான் இறந்துவிட்டதாக சொன்னாள் என்றும் சொல்கிறான்.

சில நாட்களுக்கு பிறகு டோனி ஒரு ப்ளாட்டைப் பார்த்துக்கொண்டிருக்கிறாள். அவளுக்கு நன்றாக கண் தெரிகிறது. ப்ளாட்டை சுற்றிக்காட்ட வந்த ஏஜென்ட் கேட்கிறாள், “How exactly did your son lost his legs?”

சேர்க்கப்பட்டது:
நான் புரிந்துகொண்டது:

டோனி கேப்ரியலின் தீவிர ரசிகை. கேப்ரியலின் அன்பையும், இரக்கத்தையும் கவனிப்பையும் பெற அவள் பீட் என்கிற சிறுவனை கற்பனை செய்து கொள்கிறாள். அவ்வாறே போனில் பேசுகிறாள். இரண்டு குரல்களில். கேப்ரியல் நேரடியாக தேடிக்கொண்டு வந்தவுடன், பீட் ஆஸ்பத்திரியில் இருக்கிறான் என்று பொய் சொல்கிறாள். கேப்ரியல் ஆஸ்பத்திரியில் தேடியலைந்த பீட் அங்கு இல்லை என்று கேள்வி எழுப்பிய போது, பீட் இறந்துவிட்டான் என்கிறாள். அவளுடைய முயற்சி கேப்ரியலிடம் செல்லுபடியாகாததால், வேறு இடத்திற்கு ஜாகையை மாற்றி, தன் மகனுக்கு கால் போய்விட்டதாகவும், அவனை ஆஸ்பத்திரியில் வைத்திருப்பதாகவும் அக்கம் பக்கம் உள்ளவர்களிடம் கூறிக்கொண்டிருக்கிறாள்.
இது உண்மைச் சம்பவம் என்றும் அந்த பீட் என்ற சிறுவனின் ஐடன்டிட்டி இன்று வரை நிரூபிக்கப் படவில்லையென்றும் படம் முடிந்தவுடம் போடுகிறார்கள். இருந்தால் அவனுக்கு 28 வயது இருக்குமாம். பீட்டு அப்பீட்டாயிட்டியேபா!

3 thoughts on “த நைட் லிசனர்

  1. உங்கள் விமர்சனத்திற்கு எனது வலைப்பதிவில் ஒரு இணைப்புக் கொடுத்துள்ளேன்..நன்றி..

    Like

  2. இந்தப் பதிவுக்குச் சொல் ஒரு சொல்தான் ஊக்கமா 🙂 மிக்க நன்றி.சில சொற்களை நேரடியாக மொழிமாற்றம் செய்ய முடியாது. இணையாகத்தான் சொற்களைத் தேட வேண்டும். இரவுக் கலைஞன் என்று கூடச் சொல்லலாம். ஆனால் படத்தின் கதைக்குப் பொருத்தமாக இல்லையே. ரேடியோ மாமான்னு பேர் வைக்கலாம். தப்பில்லை.ராபின் வில்லியம்ஸ் எனக்கும் பிடிக்கும். முன்பெல்லாம் நகைச்சுவையாக நன்றாக நடிப்பார். இப்பொழுது இப்படி. ஏனிப்படி!கதை கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது. கடைசியில் என்னதான் சொல்ல வருகிறார்கள்?

    Like

  3. ராகவன் : ரேடியோ மாமா? ஹா..ஹா.ஹா..பெர்பெக்ட் டைமிங். என்னுடைய பார்வையை பதிவிலே சேர்த்திருக்கிறேன் பாருங்கள். வருகைக்கு நன்றிமயூரேசன் : வருகைக்கு நன்றி. இணைப்புக்கும் நன்றி.

    Like

Leave a Reply to Mayooresan Cancel reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s