எஸ்.ராமகிருஷ்ணனின் நெடுங்குருதியைப் படித்தவர்களுக்கு சந்ததி சந்ததியாக தவழ்ந்து செல்லும் கதைக்களம் நினைவில் இருக்கலாம். எனக்கு நெடுங்குருதியை வாசிக்கும் பொழுது சற்று அலுப்பே மேலிட்டது. என்னடா இது கதை அனுமார் வால் போல நீண்டு கொண்டே செல்கிறது என்று. ஆனாலும் ஆசிரியரின் எழுத்து என்னை கட்டிப்போட்டிருந்தது. வெயில் அவன் கால்களைப்பிடித்து ஏறிக்கொண்டிருந்தது என்று வாசிக்கும் பொழுது நானும் வெயிலாக மாறி நாவலைச்சுற்றி படர்ந்து கொண்டிருந்தேன். எஸ். ராமகிருஷ்ணனின் வாக்கியங்கள் தமிழ் இலக்கியத்திற்கு புதியவை.
அதே போன்றதொரு சந்ததி கதை தான் The Glass Palace. Blurb ல் மூன்று சந்ததியினரின் கதை என்று போட்டிருக்கிறார்கள். ஆனால் என்னைப்பொருத்தவரை இது ஐந்து சந்ததியினரின் கதை. ராஜ்குமாரின் அம்மா, ராஜ்குமார், ராஜ்குமாரின் மகன்-நீல், நீலினுடைய மகள் ஜெயா, ஜெயாவின் அமெரிக்காவில் படிக்கும் மகன் என ஐந்து சந்ததியினரின் கதை இது.
பர்மாவில் தொடங்கி, இந்தியாவின் ரத்னகிரியில் தவழ்ந்து, மலேசியாவை நோக்கி படர்ந்து, பிறகு கல்கத்தாவில் கால் பதித்து மறுபடியும் பர்மாவிலே முடியும் கதை The Glass Palace. 540 பக்கங்கள் கொண்ட இந்த நாவலில் அத்தியாயங்கள் தோறும் The Glass Palace இன் சுவடுகளை தேடிக்கொண்டேயிருந்தேன். அது கடைசி அத்தியாயங்களில் தெரியவருகிறது.
நாவல் தோறும் ஒரு கடினமான இறுக்கம் நம்மை கதையுடன் பிணைக்கிறது. மனிதர்களை மிகுந்த கவனத்தோடு ஆராய்ந்திருக்கிறார். மிகத்துள்ளியமாக கதாப்பாத்திரங்களை செதுக்கியிருக்கிறார். 550 பக்கங்களிலும் ஒரு கதாப்பாத்திரம் பயணிக்க வேண்டுமெனில் அந்த கதாப்பாத்திரம் எவ்வளவு வலிவோடு இருக்கவேண்டும். அவ்வளவு வலிவோடு இருக்கிறார் கதையின் நாயகன் ராஜ்குமார்.
ஏகாதிபத்தியமும், அடக்குமுறையும் பலவாறு நாவல் தோறும் விவாதிக்கப்படுகின்றது. இந்திய சுதந்திரப்போராட்டத்தில் காந்தியின் வழி சரியா அல்லது நேதாஜியின் வழி சரியா என்ற விவாதம் நன்றாக இருந்தது. இந்திய வீரர்கள் ஆங்கிலேயர்களால் பிற நாடுளின் சுதந்திர போராட்டத்தை அடக்க பயன்படுத்தப்பட்டது விவாதிக்கப்படுகிறது. இந்திய வீரர்களை கைக்கூலிகள் என்றழைப்பது சரியா? இந்திய இராணுவத்தில் இருக்கிறார்கள் ஆனால் இங்கிலாந்திற்காக சண்டைபோடுகிறார்கள். இந்தியாவிற்காக சண்டையிட்டால் அது தேசப்பற்று. இங்கிலாந்திற்காக சண்டையிட்டால் அது தொழில் தானே. விசுவாசம் என்ற ஒற்றைச் சொல்லே அவர்களது விழிகளை கட்டிப்போட்டிருந்திருக்கிறது, நேதாஜி வரும் வரை.
இந்திய வீரர்களின் சுதந்திர தாகம் உணர்ச்சிவசப்பட வைக்கிறது. அதுவும் மலேசிய வாழ் இந்தியர்கள் (குறிப்பாக தமிழர்கள்) , இந்தியாவை ஒரு முறை கூட பார்க்காமல், போராட்டத்தில் தீவிரமாக இறங்குவது மெய்சிலிர்க்கவைக்கிறது. அவ்வாறான தேசப்பற்று இன்னும் நம்மில் யாருக்கேனும் ஒட்டிக்கொண்டிருக்கிறதா என்பது ஐயமே! பர்மாவின் அடக்குமுறையும், ஜப்பானின் காலனியலிசமும், இங்கிலாந்தின் ஏகாதிபத்தியமும் கூட விரிவாக ஆராயப்படுகின்றன. பர்மாவின் மன்னர் நாடு கடத்தப்பட்டு தன் மனைவியுடனும் மகள்களுடனும் இந்தியாவில் குடிவைக்கப்படுகின்றனர். மன்னருக்கும், ராணிக்கும் இன்னும் கம்பீரம் இருக்க, மகள் வண்டியோட்டுபவனுடன் சேர்ந்து அவன் குடிசையிலே இருக்கிறாள். எல்லோரும் மனிதர்களே. எனக்கு ராஜா என்பார் மந்திரி என்பார் ராஜ்ஜியம் இல்லை ஆள பாடல் நினைவுக்கு வந்தது, கூடவே பல்புக்கு கீழே ஆடிக்கொண்டிருக்கும் ரஜினியும்.
ஏதேச்சையாகப் படித்தேன் என்று சொல்ல முடியாது. செந்தில் தன்னுடைய ப்ளாகில் ஒருமுறை இந்த நாவலைப் பற்றி பதிவு செய்திருந்தார். அதற்கப்புறமே தேடிப்பிடித்து படித்தேன். செந்திலுக்கு நன்றி. நாவல், ஒரு உணர்ச்சிக்குவியல்.
அமிதவ் கோஷ் ஒரு அற்புதமான எழுத்தாளர் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை. அமிதவ்கோஷின் மற்றொரு நாவலான the hungry tide ஐ பார்த்து வைத்திருக்கிறேன்.
இந்த நாவலை படித்து முடித்த கையோடு Jon McGregor எழுதிய so many ways to begin என்ற நாவலை வாசிக்க ஆரம்பித்தேன். என்னவோ பிடிப்பு ஏற்படவில்லை. 15 பக்கங்கள் மட்டுமே படித்துவிட்டு நூலகத்தில் ரிட்டன் செய்து விட்டேன்.
சிறிது நாட்களுக்குப் பிறகு Mary Lawson எழுதிய The Other Side Of The Bridge கிடைத்தது. “பாலத்தின் அந்தப் பக்கம்” என்று தான் முதலில் நான் நினைத்தேன். ஆனால் உண்மையில் இது “பாலத்தின் அடிப்புறம்” என்று தான் மொழிபெயர்க்கப் படவேண்டும். நாவல் படித்துக்கொண்டிருந்த பொழுது இதை தமிழில் மொழிபெயர்த்தால் என்ன என்ற எண்ணம் என் மனதில் ஓடிக்கொண்டேயிருந்தது. 270 பக்கங்களைக் கொண்ட ஒரு நாவலை தமிழில் மொழிபெயர்ப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.
நான் சில நகைச்சுவைப் படங்கள் பார்க்கும் போது வாய்விட்டு சிரித்திருக்கிறேன். உதாரணத்திற்கு பஞ்சதந்திரம்: “அப்படியே தட்டிக்கொடுத்து ஒரு கத சொல்லு ராம்” “ம்..ம்…ஒரு ஊர்ல ராம் ராம்னு ஒரு கேனயன் இருந்தானாம்…” “ஓ காமெடி ஸ்டோரியா…” இந்த வாக்கியங்களை எப்பொழுது கேட்டாலும் சிரிப்பு வரும். காரணம் வாக்கியங்கள் மட்டுமல்ல, இந்த காட்சியை கண்டவர்களால் மட்டுமே நன்றாக இரசித்து சிரிக்க முடியும். வாக்கியங்களை கேட்டவுடன், தேவயாணியும் கமலஹாசனும் கண்ணில் தெரிந்தால் தான் முழுமையாக ரசிக்க வாய்ப்பிருக்கிறது. சிரிக்கவைப்பது என்பது சினிமாவில் எளிது. ஒரு நாவலைப் படித்து, படிக்கும் பொழுது கண்ணில் நீர் வரும் அளவிற்கு சிரிக்க வைப்பதென்பது மிகவும் கடினம்.
Mary Lawson அதை செய்திருக்கிறார். நாவல் தோறும் நகைச்சுவை இழையோடிக்கொண்டிருக்கிறது என்பதை விட சில இடங்களில் வெடிச்சிரிப்புக்கும் பஞ்சமில்லை. ஒரு இரவு, இந்த நாவலை வைக்க மனமில்லாமல், சிரித்துக்கொண்டே படித்துக்கொண்டிருந்தேன். என் பக்கத்தில் படுத்திருந்த சரவணன் நிமிர்ந்து, நிமிர்ந்து பார்த்தார். பிறகு என் சிரிப்பு சத்தம் தாங்க முடியாமல் காதில் இயர் போனை வைத்துக்கொண்டு தூங்கிவிட்டார். மறுநாள் முறைத்தபடி இருந்தார். நான் என்ன செய்யமுடியும். அடக்கமுடியாத மற்ற இரண்டோடு சிரிப்பையும் சேர்த்துக்கொள்ளுங்கள். என்னால் சிரிப்பை அடக்கவே முடியாது. முடியும் என்றும் தோன்றவில்லை. மேலும் ஏன் அடக்கவேண்டும்?
விளைவுகள். கிடக்கிறது போங்கள்.
இதனால் இதை ஏதோ நகைச்சுவை நாவல் என்று எண்ணி விடாதீர்கள். மனிதர்களை சுற்றிலும் குடும்ப கட்டமைப்புக்குள் சுவையாக பின்னப்பட்ட நாவல் இது. மனிதர்களின் மனங்கள் குரங்கு. ஜெயமோகன் காடு நாவலில் சொல்லியிருப்பார் : தனிமை கிடைத்தவுடன் மனம் அதையே செய்யத்துடிக்கிறது. செய்துமுடித்தபின் ஒரு வெறுமை படர்கிறது என்பார். உண்மையே.
சில விசயங்களை செய்யக்கூடாது என்று நினைப்போம். ஆனால் மனம் அதை நோக்கியே பயணிக்கும். அழகி படத்தில் சயாஜி சிண்டே பார்த்திபனின் வீட்டில் இரவு குடித்து விட்டு வாந்தி எடுத்து வைத்திருப்பார். மறுநாள் காலை எழுந்து, சே எப்படி இந்த நாத்தத்த குடிச்சேன். இனிமே உன்ன செத்தாலும் தொடமாட்டேன் என்று சொல்லிக்கொண்டே கழுவி விட்டுக்கொண்டிருப்பார். அன்றைய இரவில் மறுபடியும் குடிப்பார். சொல்லிக்குற்றமில்லை. நாம் மனிதர்கள். ரோபோக்கள் அல்ல. ஆனாலும் சிலர் மனித குணத்தை விடுத்து மனதைக் கட்டுப்படுத்தி எந்த சூழ்நிலையிலும் ஒரே மாதிரி வாழ்கிறார்கள். அவர்களை தெய்வம் என்றும் சில சமயம் தெய்வ மச்சான் (நன்றி: கமலஹாசன்) என்றும் போற்றுகிறோம். ரோபோக்கள் தெய்வங்களா?
இளவயதில் ஒருவனைப் பார்த்து காதலுற்று அவன் அழகில், பேச்சுத்திறமையில் தன்னையே பறிகொடுத்து அவனது குழந்தையை தன்னில் சுமக்கிறாள் ஒரு பெண். ஆனால் அவனோ ஊரை விட்டே ஓடிவிடுகிறான். அவள் அவனுடைய அண்ணனை திருமணம் செய்து கொள்கிறாள். நாட்கள் ஓடுகிறது. பதினைந்து வருடங்கள் கழித்து ஓடியவன் திரும்ப வருகிறான். அடிமனதில் அவன் மேல் இருந்த காதல் வெறுப்பையும் மீறி, சூழ்நிலையையும் மீறி, மெல்ல மெல்ல மேலெழும்புகிறது. குழந்தையை கொடுத்துவிட்டு ஓட்டம் பிடித்த ஒருவனுடன் 15 வருடங்கள் கழித்து காதல் மீண்டும் துளிர்க்குமா? அதுவும் கணவன் இருக்கும் போது? இது சாத்தியமா? என்று எண்ணத்தோன்றுகிறது. சில சமயம் உண்மை பொய்யை விட பயங்கரமானதாகவும் நம்ப முடியாததாகவும் இருக்கும். சந்தேகமெனில் நக்கீரனையோ, ஜூவீயையோ ஒரு முறை திரும்பிப்பாருங்கள். நம் நாட்டிலே நடப்பதைப் பார்க்கலாம். இது சரியா தவறா என்ற விவாதம் ஒரு புறம் இருக்கட்டும். சரியென்றும் தவறென்றும் சொல்ல நாம் யார்? மனிதர்கள் சூழ்நிலைக்கைதிகள் என்பது தானே உண்மை. என் பிசிக்ஸ் வாத்தியார் சொல்லுவார் : ஒருத்தன (ஒரு மாணவனை) பற்றி முழுமையாக அறிந்து கொள்ள்வேண்டுமென்றால் அவனை அவனது நெருக்கமான நண்பர் குழுவோடு விட்டு பார்க்கவேண்டும். சூழ்நிலைகள் மனிதர்களை புறட்டிப்போட்டுவிடும்.
அண்ணன் தம்பிக்கு இடையேயான சிறுவயது நிகழ்ச்சிகள் மிகுந்த நகைச்சுவையாக இருந்தது. போரின் அவலங்களும், போரில் ஊனமுற்றவர்கள் படும் கொடுமைகளும், போர்கைதிகளின் நாட்டை இழந்த வருத்தமும், அகதி வாழ்க்கையும் மனதை நெருக்குகின்றன. போர் செய்வது, இராணுவத்தில் சேர்வது என்பது ஒரு வேலையா – Profession – அல்லது அதில் தேசப்பற்று ஏதும் இருக்கிறதா என்பது கேள்விக்குறி. கிட்டத்தட்ட profession ஆகிக்கொண்டு வரும் இந்த பணியில் கைதிகளாகப் பிடிக்கப்படுபவர்களின் நிலை?
நெஞ்சை உருக்கும் ஒரு சம்பவம் இந்த நாவலில் உண்டு. கதையில் வரும் அண்ணனின் (ஆர்த்தர்) நண்பன் ஒருவன் (கார்ல்) இராணுவத்தில் சேர்ந்து உலகப்போரில் பங்கு பெற்று கால் கைகளை இழந்து ஊருக்கு திரும்புகிறான். தினமும் ஆர்த்தர் அவனைப் பார்க்கப் போவான். எப்பொழுதும் அவர்களுக்கு இடையில் மவுனத்தை தவிர வேறு மொழி இருக்காது. நீண்ட நேரம் அப்படியே அமர்ந்திருப்பார்கள். ஒரு நாள் ஆர்த்தர் அவனைப் பார்க்கச் செல்லும் போது, கார்ல் தனக்கு எட்டாத தூரத்தில் இருக்கும் self இல் இருக்கும் துப்பாக்கியை எடுத்து தான் படுத்திருக்கும் கட்டிலுக்கு அருகில் இருக்கும் மேஜை மேல் வைக்கச்சொல்கிறான். யோசித்த ஆர்த்தரிடம், “எனக்கு போய் எடுப்பதென்பது சிரமம், கீழே விழுந்து சிரமப்பட்டு தவழ்ந்து போய் எடுப்பதற்குள் வெளியே சென்றிருக்கும் அம்மா வந்துவிடுவார்கள், இந்த உதவியை மட்டும் செய்” என்கிறான். ஆர்த்தர் நீண்ட யோசனைக்கு பின் வேக வேகமாக போய் துப்பாக்கியை எடுக்கிறான். அவன் வேகத்தைப் பார்த்த கார்ல் அவசரமில்லை அம்மா வருவதற்கு இன்னும் சிறிது நேரம் ஆகும் என்கிறான். துப்பாகியை எடுத்து மேஜைமேல் வைத்து விட்டு புறப்படும் ஆர்த்தரிடம் “பரவாயில்லை இன்னும் நேரமிருக்கிறது. உனக்கு கொடுத்த காபியை குடித்துவிட்டு போகலாம்” என்கிறான் கார்ல். ஆர்த்தர் மெதுவாக அமர்ந்து நிதானமாக காபியைக் குடித்துவிட்டுப் போகிறான்.
போர் எப்பொழுதும் Treaty யுடன் முடிவடைவதில்லை. அதன் அவலம் தலைமுறைதோறும் தொடர்ந்துகொண்டேயிருக்கிறது இல்லையா?
அதற்கப்புறம் Gathering The Water என்ற நாவலை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அடுத்த பதிவில் தண்ணீரை சேகரிக்கலாம்.