ஊசியை வைத்துக் கிணறு தோண்டு

எழுதுவது, என்று சொன்னவுடன், என் நினைவுக்கு வருவது, நாவலோ, கதையோ, கவிதையோ அல்லது இலக்கியமோ அல்ல. அது ஒரு மனிதனைப்பற்றியது. ஒரு அறைக்குள், தன்னந்தனியே, அந்த அறையின் நிசப்தத்தில் தன்னைத்தானே அடைத்துக்கொண்டு, தன்னையும், தன்னுள் ஏற்படும் நிழல்களையும் வைத்து ஒரு உலகத்தை – வார்த்தைகளால் ஆன உலகத்தை, தன் உலகத்தை- உருவாக்குகிறவனைப் பற்றியது. எழுத்தாளன் என்பன் வருடக்கணக்கில் பொறுமையாக, மிகப் பொறுமையாக காத்திருந்து, தன்னுள் இருக்கும் இன்னொருவனை – இன்னொரு உலகத்தை – அறிந்து கொள்ள முயல்பவன். அந்த உலகமே அவனை எழுத்தாளனாக்கும். அவன் அவனாக மட்டுமே இருக்கும் உலகம் அது. அந்த எழுத்தாளன் – அல்லது பெண் எழுத்தாளர் – டைப்ரைட்டரையோ, அல்லது கம்ப்யூட்டரையோ அல்லது பேனாவை உபயோகப்படுத்தியோ – நான் கடந்த 30 வருடங்களாக செய்துகொண்டிருப்பதைப்போல- எழுதலாம். அவன் எழுதும்போது காபியோ, டீயோ குடிக்கலாம் அல்லது சிகரெட் புகைக்கலாம். சில சமயங்களில் எழுந்து ஜன்னல் வழியாக தெருவில் விளையாடிக்கொண்டிருக்கும் சிறுவர்களைப் பார்க்கலாம். இல்லை இன்னும் அதிர்ஷ்டக்காரன் என்றால் மரங்களையோ, இயற்கைக்காட்சியையோ ரசிக்கலாம். இல்லை வெறுமனே சுவற்றை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கலாம். அவன் கவிதையோ, நாவலோ, நாடகங்களோ எழுதலாம் – என்னைப்போல.மிதைத்தவிர மற்ற பிற வித்தியாசங்கள் அவன் தனிமையில் உட்கார்ந்து, தன்னைத்தானே நோக்கும், அந்த சிரமமான; மிக முக்கியமான நிகழ்ச்சிக்குப் பின்னே தான் நடக்கும். எழுதுவது என்பது தன்னைத்தானே பார்க்கும் அந்த பார்வையை வார்த்தைகளாக மாற்றுவது. அவன் அவனுள்ளே சென்ற பிறகு பிறக்கும் அந்த புதிய உலகத்தை ஆழ்ந்து படிப்பது : நிதானமாக, பொறுமையாக, மனநிறைவுடன் சந்தோஷமாக.

பல நாட்களாக, பல மாதங்களாக, பல வருடங்களாக, என் மேஜையில் உட்கார்ந்து, காலியாக கிடக்கும் என் எழுதப்படாத பக்கங்களில் சிறிது சிறிதாக – ஒரு பாலத்தையோ அல்லது கோவிலையோ, செங்கல் செங்கலாக ரசித்து செதுக்குபவர்களைப் போல -வார்த்தைகளைக் கோர்க்கும் போது, நான் என்னுள் இருக்கும் இன்னொருவனை உணர்ந்துகொண்டதாக உணர்வேன். எழுத்தாளர்களான எங்களுக்கு வார்த்தைகளே செங்கற்கள். நாங்கள் அவற்றை எங்கள் கைகளில் ஏந்திக்கொண்டு, அவைகளுக்குள்ளான உறவுகளை உணர்ந்து, தொலைதூரத்திலிருந்து பார்த்து, மிக அருகில்; எங்கள் விரல்களைக்கொண்டோ, பேனா முனைகளைக்கொண்டோ வருடிக்கொடுத்து, சரசமாடி, எடையிட்டு, இங்கும் அங்கும் மாற்றியிட்டு அழகுபார்த்து, வருடக்கணக்கில், பொறுமையாக, நம்பிக்கையுடன், எங்கள் உலகத்தை சிருஷ்டிக்கிறோம்.

எழுத்தாளனுடைய ரகசியம் மனவெழுச்சி – அது எங்கிருந்து கிடைக்கிறது என்பது புதிராகவே இருந்தாலும்- அல்ல, அது அவனுடைய பொறுமை மற்றும் பிடிவாத குணம். அந்த அழகிய துருக்கிய பழமொழி – ஊசியை வைத்துக் கிணறு தோண்டு – எழுத்தாளர்களை மனதில் வைத்து சொல்லப்பட்டது என்றே நினைக்கிறேன்.

– சமீபத்தில் இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்ற துருக்கிய எழுத்தாளர் ஓரன் பாமுக் நோபல் பரிசு பெற்றபிறகு பேசியது. என்னால் முடிந்தவரைக்கும் தமிழ் படுத்தியிருக்கிறேன்.

முழுமையான உரையை இங்கே காணலாம்.

3 thoughts on “ஊசியை வைத்துக் கிணறு தோண்டு

  1. மொழியாக்கம் மாதிரியே தெரியவில்லை. அருமையான கருத்துக்கள் இயல்பாக இருக்கு.

    Like

  2. முத்து,நன்றாக மொழிபெயர்த்திருக்கிறீர்கள். ஏதேனும் படைப்புகளை மொழிபெயர்க்க முயற்சிக்கலாமே? எங்களுக்குப் வாசிக்க விசயம் கிடைக்கும். :)ஒர்ஹான் பாமுக்-இன் Istanbul: memories and the city இப்போது வாசித்துக் கொண்டிருக்கிறேன். மிகவும் சுவாரசியமாக இருக்கிறது.

    Like

  3. பாலா: வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி. மதி: பாராட்டுக்கு நன்றி. மொழிபெயர்க்க எனக்கும் ரொம்ப நாளாக ஆசைதான். சரியான படைப்பைத் தேடிக்கொண்டிருக்கிறேன். உங்கள் மனதில் இதை மொழிபெயர்க்கலாம் என்ற எண்ணம் ஏதேனும் இருந்தால் சொல்லுங்கள். இப்பொழுது: போபால் பேரழிவைப் பற்றிய ஒரு சிறு பகுதியை மொழிபெயர்த்துக்கொண்டிருக்கிறேன்.Istanbul : Memories and the city யைப் பற்றி அ.முத்துலிங்கம் சொல்லக்கேள்விப்பட்டிருக்கிறேன். எப்படி இருக்கிறது?

    Like

Leave a comment