டிசம்பர் 3 1984
அது ஒரு குளிர்ந்த இரவு. போபால் நிசப்தத்தில் மூழ்கியிருந்தது. பலர் குளிருக்கு இதமாக வீட்டுக்குள் முடங்கிக் கிடந்தனர். அந்த இரவில் யார் முழித்திருக்கப்போகிறார்கள்? அந்த இரவுக்கு அப்புறம் யார் முழித்திருக்கப்போகிறார்கள்? 70 ஏக்கர் பரப்பளவு கொண்ட மிகப்பெரிய பூச்சிமருந்து தயாரிக்கும் தொழிற்சாலை யூனியன் கார்பைடு இந்தியாவில் என்றைக்கும் போல இரவு பணி துரிதமாக நடந்துகொண்டிருந்தது.
நடுஇரவுக்கு மேல் திடீரென்று பெரும் குழப்பம் ஏற்படப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது.மெத்தில் ஐசோ செனேட் (MIC) யூனிட்டில் வேலை பார்க்கும் ஒரு நபர் என்றைக்கும் இல்லாத ஒரு அமானுஷ்ய சூழ்நிலை ஏற்பட்டிருப்பதை அறிகிறார்.. E610 என்றழைக்கப்பட்ட டேங்கில் அழுத்தம் மிக வேகமாக உயர்ந்து கொண்டே சென்றது. E610 இல் தான் கொலைகார திரவம் : MIC இருந்தது. அவன் பார்த்துக்கொண்டேயிருக்கும் போது, அழுத்தம் சட சட வென்று உயர்ந்து அபாய எல்லையைத் தாண்டியது.
ஆபரேட்டருக்கு செய்தி போனது. அதிக வெப்பத்திலும், அழுத்தத்திலும் MIC திரவ நிலையிலிருந்து ஆவியாகி டேங்கை விட்டு வெளியேறிவிடும் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். அவர் அவருடைய மேலதிகாரிக்கு உடனே தகவல் அனுப்பினார். தொலிற்சாலைக்குள் அபாய எச்சரிக்கை ஒலித்தது. ஊழியர்கள் E610 க்கு விரைந்தனர். ஆனால் நிலமை கைமீறி விட்டது என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். டேங்கின் அருகேகூட யாரும் செல்ல முடியாதபடி டேங்கின் வெப்பநிலை அதிகரித்திருந்தது. தண்ணீர் தெளித்து வெப்பத்தை தனிக்க முயன்றனர், ஆனால் ஒன்றும் உபயோகமில்லை.
நாற்பது அடிக்கு எட்டடி இருந்த அந்த மிகப்பெரிய டேங்கின் சில பகுதி பூமிக்கு அடியே இருந்தது. மேலே சிமென்ட் கான்கிரீட் போடப்பட்டிருந்தது. நாற்பது டன் MIC அதில் அடைக்கப்பட்டிருந்தது – அலாவுதீனின் பூதம் போல – அது வெளியே வர துடித்துக்கொண்டிருந்தது. 0 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் வைக்கப்பட வேண்டிய திரவம் 250 டிகிரியை செல்சியஸை தொட்டுவிட்டது. டேங்க் மிகப் பயங்கரமாக அதிர ஆரம்பித்தது. கான்கிரீட் உடைய ஆரம்பித்தது. ஊழியர்கள் இடத்தை விட்டு தப்பியோடினர்.
ஆனால் அதற்குள்ளாக சேப்டி வால்வ் உடைந்து, விஷவாயு 70 அடி பைப்பில் வெளியேறியது. அது பிறகு Gas Scrubber க்கு செல்லும். பொதுவாக இது அவ்வளவு பயங்கரமாக, அபத்து விளைவிக்கக்கூடியதாக இருந்திருக்காது. ஏனென்றால் ஸ்க்ரப்பரில் வெளியிடப்படும் காஸ்டிக் சோடா (Caustic) குழம்பு MIC இன் விசத்தன்மையை நீக்கியிருக்க வேண்டும்.ஆனால் துரதிர்ஷ்டமான அந்த இரவில் ஸ்க்ரப்பர் வேலை செய்ய வில்லை. பராமரிப்புக்காக (maintainance) அது நிறுத்தப்பட்டிருந்தது.
மேலும் விஷத்தன்மையும், நச்சுத்தன்மையும் கொண்ட வாயுக்களைத் தயாரிக்கும் இவ்வாறான தொழிற்சாலைகளில் பல்வேறு வகையான பாதுகாப்பு ஏற்பாடுகள் வகுக்கப்பட்டு தயாராக வைக்கப்பட்டிருக்கும், ஆபத்தை எதிர்பார்த்து. ஆனால் UCIL லில் இருந்த ஐந்து வகையான பாதுகாப்பு வழிகள் அனைத்தும், அந்த இரவு வேலை செய்யவில்லை.
நன்றாக உறக்கத்திலிருந்த போபால் மக்களுக்கு தெரியாமல், அடர்த்தியான வெள்ளை விஷ வாயு காற்றில் அமைதியாக பரவிக்கொண்டிருந்தது. திங்கட்கிழமை, அதிகாலை 12:20 மணியிலிருந்து காலை இரண்டு மணி வரை, டேங்க் E610 தொடர்ச்சியாக நச்சுத்தன்மை கொண்ட வாயுவை சந்தோஷமாக வெளியேற்றிக்கொண்டிருந்தது.
ஊழியர்களுக்கு இந்த மாதிரி ஆபத்தான சூழ்நிலைகளில் எவ்வாறு செயல்படவேண்டும் என்று முன் கூட்டியே சொல்லித்தரப்பட்டிருந்தது. அவர்களுக்கு விஷ வாயு மேகங்களுக்கு எதிர் திசையில் ஓட வேண்டும் என்று நன்றாகத்தெரியும். எனினும் போப்பால் மக்களுக்கு கொஞ்ச நேரம் ஒன்றும் தெரியாது, ஏனென்றால பொது அபாய எச்சரிக்கை காலை ஒரு மணிக்கு அப்புறம் தான் – அதுவும் சில வினாடிகள் மட்டுமே – ஒலித்தது. கடைசியாக இரண்டு மணிக்கு மேல் தான் அபாய மணி முழு வீச்சில் ஒலித்தது. ஆனால் அதற்குள்ளாக பாதி போப்பால் மக்கள் ஓட ஆரம்பித்திருந்தனர்.
பைப்பிலிருந்து வாயு மிக அதிகமான வேகத்தில் வெளியேறிக்கொண்டிருந்தது. முதலில் இரவு மிகுந்த அமைதியாக, காற்று இல்லாமல் தான் இருந்தது. ஆனால் விதி வலியது. சீக்கிரமே ஒரு மெல்லிய காற்று 12 கி.மீ வேகத்தில் வடகிழக்காக வீசத் தொடங்கியது. அது விஷவாயுவை தொழிற்சாலைக்கு அருகே மிக நெருக்கமாக குடியிருந்த மக்களை நோக்கி நகர்த்தியது, மேலும் அதற்குப் பிறகு ரெயில்வே லைனை ஒட்டியும், பழைய போபாலை நோக்கியும் கொண்டு சென்றது.
போப்பாலுக்கு வரும் முக்கிய பிரமுகரின் வருகைக்காக ரெயிவேஸ்டேசனில் காத்துக்கொண்டு பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்தார் ஸ்டேசன் மாஸ்டர். அவர் அபாயத்தை உணர்ந்து போப்பாலை நோக்கி வந்து கொண்டிருந்த ரெயில்களை நிறுத்துவதற்கு விரைந்தார். ஆனால் லக்னௌவ்-பாம்பே விரைவு ரெயில் போப்பாலை நோக்கி வந்து கொண்டிருந்தது. அதிகாலை 1:10 மணிக்கு, அந்த ரயில் போப்பாலை வந்தடைந்தது. ரயில் பயணிகள் ரெயில்வே ஸ்டேசனில் நிரம்பியிருந்த விஷ வாயு புகை மண்டலத்தில் காலடி எடுத்துவைத்தனர்.
என்றைக்குமில்லாமல் அன்றைக்கு மிகவும் குளிராக இருந்தது. வெப்பநிலை 12 டிகிரி செல்சியசுக்கும் 15 டிகிரி செல்சியசுக்கும் நடுவே ஊசலாடிக்கொண்டிருந்தது. ஏற்கனவே புகைபடிந்திருந்த காற்று மண்டலம், விஷ வாயு ஆவியாகமல் தடுத்துக்கொண்டிருந்தது. மேலும் விஷவாயு காற்றை விட இரண்டரை மடங்கு அதிக எடை கொண்டதாக இருந்தது. அதனால் அது சற்று தாழ்வாகவே பரவிக்கொண்டிருந்தது. தரைக்கு மிக பக்கத்தில் தவழ்ந்து கொண்டு சத்தமின்று குடிசைகளுக்குள் நுழைந்துகொண்டிருந்தது.
நன்றி: Suroopa Mukherjee
(தொடரும்)
மிகவும் அருமையாக இருக்கிறது முத்து. தொடருங்கள். இந்தப் புத்தகத்தைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். நேரமெடுத்தாலும், முழுப் புத்தகத்தையும் மொழிபெயர்க்க முயன்றால் நன்றாகவிருக்கும்.-மதி
LikeLike
நல்ல பதிவு
LikeLike
மதி: வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி. முழுப் புத்தகத்தையும் மொழிபெயர்க்க முயற்சிக்கிறேன்.நிர்மல்: நன்றி.
LikeLike