லாலிபாப்:
அப்பொழுது நான் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அரைப்பரிட்சை லீவு. அரைப்பரிட்சை என்று சொல்ல முடியாது. அது முழுப் பரிட்சை தான். என்னென்றால் ஒன்பதாம் வகுப்பு பாடங்கள் முழுவதையும் பாதி வருடத்திலே முடித்துவிட்டு, பிற்பகுதியில் – ஜனவரி முதல் ஏப்ரல் வரை – பத்தாம் வகுப்பு பாடங்கள் படிக்க திட்டம். லீவில் டூர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திருமங்கலத்தில் ஆரம்பித்து குற்றாலம் சென்றுவிட்டு அப்புறம் தென்காசி வழியாக நாகர்கோவில், கண்ணியாகுமரி சென்று, பின்னர் மார்த்தாண்டம் வழியாக திருவணந்தபுரம் செல்வதாக ப்ளான்.
எங்க ஸ்கூல்ல அப்பப்ப டூர் போவோம். அதாவது வருடம் ஒரு முறை கண்டிப்பாக டூர் நிச்சயம். ஒரு நாள் டூர். பக்கத்துல எங்கனாச்சும் கூட்டிட்டு போவாங்க. மீனாட்சி அம்மன் கோவில், நாயக்கர் மகால், திருப்பரங்குன்றம் கோவில், பழமுதிற்சோலை, வைகை டேம், வெராகனூர் டேம் எல்லாம் போயிருக்கோம். முக்கால் வாசி தடவ வைகைடேம் தான் கிடைக்கும். அதனால என்னென்ன இடம் அங்க இருக்குங்கறது அத்துப்படி. ஆனா கடைசி முறை காலேஜ் படிக்கும் போது ஒரு தடவ போனோம். கொஞ்சம் மாற்றம் இருந்தது. ஆனா முதல் தடவ போன போது நடந்த சம்பவங்களும், கடைசி தடவ போனபோது நடந்த சம்பவங்களும் மனசுல ஆழமா பதிஞ்சிருச்சு.
முதல் முறை நான் வைகை டேம் போனபோது நான் ஐந்தாவது படித்துக்கொண்டிருந்தேன். அப்போவே கேங்கிஸம் எங்க கிளாஸில இருந்தது. என்னுடைய கேங் ரொம்ப பெரியது. எதிரணியில் இருந்த சொர்ப்ப எண்ணிக்கையான ஐந்து நபர்களைத்தவிரவும், எப்பவுமே ஒரு குரூப் சமநிலையா இருக்கும்ல அவைங்களையும் விட்டுட்டு பாத்தா, அத்தன பேரும் நம்ப குரூப் தான்.
எங்க குரூப்பில் நானும், கவின் தீபக் (இப்பொழுது எம்.பி.ஏ முடித்துவிட்டு மிக பெரிய சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்க்கிறான்) லீடர்ஸ். கவினும் நானும் நல்ல நண்பர்கள். சேர்ந்து படித்த ஏழு வருடங்களும் பிரிந்ததேயில்லை. அப்புறம் அவன் பாய்ஸ் ஹையர்செகண்ட்ரி போயிட்டான். நான் எங்க ஸ்கூல்லயே இருந்திட்டேன். அப்புறம் எங்களுக்கு அடுத்தபடியாக பக்ருதீன் அலி அகமத், காளி ராஜேஸ் மற்றும் மணிகண்டன். இதில் காளி ராஜேஸ¤ம் மணிகண்டனும் இப்பொழுது திருமங்கலத்தில் பலசரக்கு கடை வைத்திருக்கிறார்கள். பக்ருதீன் பி.எஸ்.சி படித்துவிட்டு வேலை செய்து கொண்டிருக்கிறான்.
எதிரணியில் முக்கியஸ்தர்கள் மணிக்குமார் (இப்ப டாக்டர்), கணேஷ் (இவன் என்னுடன் காலேஜிலும் படித்தான். இப்ப பெரிய MNC ல வொர்க் பண்றான்) மற்றும் செண்பக குமார். எனக்கு சிரிப்பு தான் வருகிறது. மணிக்குமாரும், கணேசும் அமைதியானவர்கள். என்ன திட்டினாலும் பேசாம இருப்பாய்ங்க. “மேடம் கிட்ட சொல்லி கொடுத்திருவேன் பாய் (BOY)” அப்படீன்னு சொல்றத தவிர வேற ஒன்னும் சொல்லபாட்டாய்ங்க. அதுலயும் மணிக்குமாரும், கணேசும் எனக்கும் கவின் தீபக்கும் தான் படிப்பில் போட்டி இருக்கும். கவினும் நானும் மணிக்குமாரும் நண்பர்கள் தான். கணேஷ¤டன் தான் எப்பொழுதும் சண்டை நடக்கும். கணேசும் மணிக்குமாரும் நண்பர்கள் என்பதால் மணிக்குமார் கணேசுக்கு சப்போர்ட். அதனால் எங்களுடன் பேச மாட்டான். சென்பககுமார் அடியாள்.
செண்பககுமாருடன் நீங்க பேச முடியாது. சட்டுன்னு அடிச்சுபுடுவான். நிறைய தப்பு பண்ணி மாட்டிக்குவான். ஒன்னு நல்லா படிக்கணும் இல்லைன்னா எல்லாருக்கும் தெரியறமாதிரி தப்பு பண்ணக்கூடாது. இது ரெண்டும் அவன் பண்ண மாட்டான். மேடம் கிட்ட அவன் வாங்குற அடி கொஞ்சம். அதும் ஹிஸ்டரி மேடம் இருக்காங்களே, கைய திருப்பி வெச்சு, ஸ்கேல வெர்டிக்கலா வெச்சுக்கிட்டு போடுவாங்க பாருங்க அடி. நான் வாங்குனதேயில்ல. அடி வாங்குறவைங்கல பாத்தாலே போதுமே. ஆனா அது எதயும் பாத்து நம்பக் கூடாது. சில பேரு ஓவர் ஆக்டிங் கொடுப்பாய்ங்க. அது எனக்கு பிற்காலத்துல டியூசன் எடுக்கும் போது தான் தெரிஞ்சது. அவன செம்மரியாடுன்னு தான் கூப்புடுவோம். பேரு ஏன் அப்படி வந்ததுன்னு தெரியாது. ஆனா அவன் செம்மாறியாடு தான். சும்மா அவன் இங்கிட்டு அங்கிட்டு போகும் போது செம்மரியாடு மாதிரி கத்தி கடுப்பேத்துவாய்ங்க நம்ம ஆளுக. அவனுக்கு தான் கை கொஞ்சம் நீளமாச்சே. உடனே அடிக்க கை ஓங்குவான். அவ்வளவு தான் மேடம் என்ன செண்பக குமாரு அடிச்சுட்டான்னு ஆரம்பிச்சுடுவாய்ங்க. அன்னிக்கு அவன் மேடம்கிட்ட வாங்குற அடியெல்லாம் கொஞ்சம்.
மறுநாள் அவனோட அம்மாச்சி ஸ்கூலுக்கு வந்து தொரத்தி தொரத்தி கம்பு ஒன்னு வெச்சுக்கிட்டு அடிக்கும் பாருங்க. கண்கொள்ளா காட்சியாயிருக்கும். (அப்பங்க!) ஆனா அவனோட அம்மாச்சி ஸ்கூல இருக்குறவரைக்கும் தான் அழுகாச்சியெல்லாம். அவங்க அந்தப்பக்கம் போன உடனே அடி வாங்குனதயே மறந்துடுவான். அது வைரம் பாஞ்ச கட்டை.
ஒரு லாலிப்பாப்புக்காக சண்டை போட்டோம் நானும் மணிக்குமாரும். மணிக்குமார் மேல எனக்கு கொஞ்சம் கோபமாவேயிருக்கும். எனக்கு போட்டி அவன் தான். ஆனா எட்டாத தூரத்தில இருப்பான். பிடிக்கவே முடியாது. இப்ப இங்கிலீஸ்ல ஒரு போயம்(poem) இன்னக்கி நடத்துறாங்கன்னு வெச்சுக்குங்க, நடத்தி முடிச்ச அடுத்த நிமிசமே கடகடன்னும் சொல்லுவான் அந்த போயத்த. நமக்கு இருளடச்ச மாதிரி ஆயிடும். என்னடா நமக்கு இன்னும் வாசிக்கவே தெரியல அதுக்குள்ள இவன் கடகடன்னு ஒப்பிக்காரானேன்னு. வைகை டேமுக்கு டூர் போறதுன்னு முடிவாச்சு. டூர் போகும் போது ஸ்கூல் வேன்ல மணிக்குமாருக்கு ஒரு லாலிப்பாப் கொடுத்தேன்.
டேம்ல ஏதோ சண்டையில செண்பககுமாரா நொக்கி எடுத்துட்டாய்ங்க பக்ருவும் காளியும். இதனால மணிக்குமார் என்கூட பேச மாட்டேன்னுட்டான். எனக்கு கோபம் கோபமா வந்திடுச்சு. அப்படீன்னா என்கிட்ட வாங்குன லாலிப்பாப்ப கொடுடான்னு கேட்டேன். எப்படி கொடுப்பான். அததான் சாப்பிட்டுட்டானே. வைகை டேம்ல அந்த காலத்துல – நான் அஞ்சாவது படிக்கும் போது- கண்டிப்பா லாலிபாப் கிடைக்காது.
அன்னைக்கு சீசா விளையாடும் போது செண்பககுமார வலுகட்டாயமா கூப்பிட்டு அந்தப்பக்கம் உக்காரவெச்சாய்ங்க. அவனுக்காவது புத்தி வேணாம். நம்பல எதுக்குடா கூப்பிடுராய்ங்கன்னு? டக் ஆப் வார் மாதிரி இந்தப்பக்கம் நாங்க அந்தப்பக்கம் அவிங்க. நல்ல விளையாடிட்டு இருந்தப்ப, டக்குன்னு எங்க பக்கம் நாங்க இறங்கிட்டோம். மேல இருந்த அவிங்க டமால்ன்னு (சில பேரு சத்தம் கேட்டுச்சான்னு கேப்பீங்க, ஆமா கேட்டுச்சு) விழுந்தாய்ங்க. அதுல செண்பககுமாரு கால் உடஞ்சு இரத்தம் வந்திடுச்சு. டூர் பேக்கப்.
ஸ்கூலுக்கு வந்தப்பிறகு முதல் வேலையா மணிக்குமார் எனக்கு லாலிப்பாப் வாங்கிக்கொடுத்தான். அதற்கப்புறம் அவனுடன் நான் பேசவேயில்லை. அதெப்படி லாலிப்பாப்ப திரும்பக் குடுக்கலாம்? அவன் ஆறாவது வகுப்புக்கு வேற ஸ்கூல் போய்ட்டான்.
ரொம்ப நாளைக்கு அப்புறம், நான் பண்ணிரெண்டாவது பரிட்சை முடித்து, excel entrance coaching கிளாஸ் (இப்பத்தான் நுழைவுத்தேர்வு கிடையாதே, அவங்க பிசினெஸ் என்ன ஆகும்?) சேர்ந்தப்போ (அரசரடி, செவன்த் டே அட்வெண்டிஸ்ட்), என்னுடைய கிளாஸ்ல எனக்கு முன்னால இருந்த ரோவில் மணிக்குமார் உட்கார்ந்திருந்தான். சிரித்துக்கொண்டோம். அவன் சென்னையில் எம்.ஜி.ஆர் மெடிக்கல் காலேஜில் எம்.பி.பி.எஸ். படித்தான்.
கடைசியாக என்னுடைய BE மூன்றாவது வருடத்தில், கொடைக்கானலில் இருந்து வரும் வழியில் வைகை டேம் சென்றோம். ஸ்கூல் படிக்கும் போது நிறைய தடவை சென்றிருந்தாலும் ஒரு சுதந்திரம் இருக்காது. கூடவே மேடம் இருப்பாங்க. எங்க போனாலும் க்யூவில தான் போகனும். காலேஜில ஒரு சுதந்திரம் இருந்தது. டேம் மேலே ஏறினோம். படிகள் அழகாக இருந்தது. மேலே ஏறி அலை அடிக்கும் ஒரு சரிவில் கல்லின் மீது உட்கார்ந்து அந்த சின்ன அலைகளையே வெறித்துக்கொண்டிருந்தேன் ரொம்ப நேரம். என்னுடைய ப்ரண்டுக்கும் எனக்கும் பேச்சு வார்த்தை இல்லாத நேரம். கொடைக்கானலிலே சண்டை வந்து விட்டது. ஈகோ. படிகளில் இறங்கிக்கொண்டிருந்தோம். என்னுடைய நண்பர் வட்டாரம் என்னுடன். அவளுடைய தோழிகள் அவளுடன், எனக்கு பின்னே. சட்டென மழை சடசடவென பிடித்துக்கொண்டது. எல்லோரும் பஸ்ஸை நோக்கி ஓடினர். நான் ஓடவில்லை. என் நண்பர் வட்டாரம் ஓடி விட்டது. அவள் ஓட வில்லை. அவளுடைய நண்பர் வட்டாரம் ஓடிவிட்டது. இருவரும் வழி நெடுக நனைந்து கொண்டே நடந்து வந்தோம், பஸ் ஏரும் வரை. ஈகோ சட்டென் கரைந்தது, செக்கச்செவப்பாய் தரையில் கரைந்து ஓடிக்கொண்டிருந்த மணலைப் போல.
எனக்கு இப்பவும் வைகை டேம்னா சட்டுன்னு நினைவுக்கு வருவது : அந்த twisted circular stairs. முதன் முதலாக சின்ன வயதில் பார்த்து மனதில் படிந்த அந்த ஞாபகம் இன்னும் அப்படியே இருக்கிறது.
காளி ராஜேஸ் (ஸ்கூல்) பாக்கத்தான் அடாவடியான ஆளு. ஆனா பயங்கர ரொமான்டிக் பேர்வழி. எங்க கிளாஸ்ல ஒரு பொண்ணு இருந்தது. அவ ரொம்ப அழகு. என்னுடைய பார்ட்னர் அவ. பார்ட்னர்னா அவகிட்டத்தான் ஒப்பிக்கனும், எழுதிக்காட்டனும். ஒரு நாள் இந்த காளி ராஜேஸ் என்ன பண்ணான் தெரியுமா? அவகிட்ட போய் லவ் லெட்டர் கொடுத்துட்டான்! என்ன கிளாஸ் படிச்சிட்டு இருந்தோம்னு நினைக்கிறீங்க? நாலு.
அந்தப்பொண்ணு அழ ஆரம்பிச்சுடுச்சு. அவங்க அப்பா கிரிமினல் லாயர் வேற. எங்களுக்கு செம கோபம் அது எப்படி அவன் கொடுக்கலாம்? அவன் மேல அவங்க அப்பா கேஸ் போட்டாலும் போடுவாருன்னு நாங்க சொன்னதுல பய பயந்துட்டான். ஒரு வாரம் கிளாஸ¤க்கே வரல.
கடைசியில கேரளா டூர் பத்தி ஒன்னுமே சொல்லலியே? அடுத்த இன்ஸ்டால்மென்ட் ப்ளீஸ். கை வலிக்குது, டைப் பண்ணி.
பின்குறிப்பு: பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
eppdinga ellathaiyum njaabakam vachu, azhaka porumaiyaa sooperaa solringa… wow!
LikeLike
உண்மையாவா? பாலாஜி என்னவெச்சு எதும் காமெடி கீமடி பண்ணலையே?
LikeLike