இரத்தவைரம், போர்வைரம், சர்ச்சைக்குரிய வைரம் – blood diamond. போர் (புரட்சி) பிரதேசங்களில் இருக்கும் சுரங்கங்களில் எடுக்கப்படும் வைரங்கள் அங்கே நடைபெறும் போருக்கு பண உதவி பெறுவதற்கோ அல்லது ஆயுத உதவி பெறுவதற்கோ வெளிநாட்டினருக்கு இரகசியமான முறையில் தவறான வழியில் விற்கப்படுகின்றன. இவ்வாறான வைரங்கள் பிளட் டைமன்ட் என்றழைக்கப்படுகின்றன. இவ்வாறான சர்ச்சைக்குரிய வைரங்களை நாம் வாங்கும்போது, நம்மையும் அறியாமல் உலகத்தில் எங்கோ, எந்த மூலையிலோ போரையோ, புரட்சியையோ, அதரிக்கிறோம் என்பது உண்மை. நாம் வாங்கிய வைரத்தில் விலையில் அங்கே குடும்பங்கள் பிரிக்கப்படுகின்றன. குழந்தைகள் துப்பாக்கிகளைப் பிடிக்கின்றன. படுகொலைகள் நடக்கின்றன. ஒரு சந்ததியே அழிந்து கொண்டிருக்கிறது.
லியார்னோடோ டீ கேப்ரியோ மற்றும் ஜெனிபர் கனோலி நடித்து தற்போது வெளிவந்திருக்கும் பிளட் டைமண்ட் ஆஸ்காருக்கு நாமினேட் செய்யப்பட்டிருக்கிறது. சியாரா லியோனில் 1990 இல் நடந்த புரட்சியில் தொடங்குகிறது படம். Revolutionary United Front (RUF), அங்கே ஆண்டு கொண்டிருக்கும் அரசை தூக்கியெறிய போர் செய்கிறது. போருக்கு பணம், ஆயுதம் பெற பிளட் டைமன்டை உபயோகிக்கிறது.
ஆரமத்தில் சாலமனின் குடும்பம் பிரிகிறது. மீன் தொழில் செய்யும் சாலமனுக்கு தன் மகனை படிக்கவைத்து மிகப்பெரிய டாக்டராக்க வேண்டும் என்ற ஆசை. கனவு இருக்கிறது. RUF கையில் கிடைத்தவர்களை சுரங்கத்தில் வேலை செய்ய பிடித்துக்கொண்டு செல்கிறது. சாலமன் குடும்பத்தைப் பிரிகிறான். ஆற்றுப் படுகையில் மணலோடு மணலாக சேர்ந்திருக்கும் வைரங்களைத் தனித்தனியே பிரித்து எடுக்கவேண்டும். அது தான் வேலை. வைரம் கிடைத்தால் அங்கே காத்துக்கொண்டிருக்கும் சிறுவனின் கையில் கொடுக்க வேண்டும் அவன் ஓடிச் சென்று அங்கே அமர்ந்திருக்கும் தளபதியிடம் கொடுப்பான். வைரத்தை ஒழித்துவைக்க முயன்றால் கும்பிபோஜனம் தான். சாலமன் மிகப் பெரிய பிங்க் கலரில் இருக்கும் வைரம் ஒன்றைப் பார்க்கின்றான். காலுக்கடியில் மறைத்து வைத்துக்கொண்டு பாத்ரூம் செல்வதாக கூறி தனியாக வந்து குழிதோண்டிப் புதைத்துக்கொண்டிருக்கும் போது தளபதி வந்து விடுகிறான். வைரத்தைக்கொடுக்கச் சொல்லி அவன் கேட்டுக்கொண்டிருக்கும் போது இராணுவம் வந்து விடுகிறது. தளபதி குண்டடி படுகிறான். சாலமன் வைரத்தை வேறு இடத்தில் ஒழித்து வைக்கிறான். இராணுவம் எல்லோரையும் பிடித்துக்கொண்டு போகிறது.
ஜெயிலில் டீகேப்ரியோ (ஆர்ச்சர்) வைரக்கடத்தலில் பிடிபட்டு இருக்கிறான். குண்டடிபட்ட தளபதி ஜெயிலில் எல்லோர் முன்னிலையிலும் சாலமனைப் பார்த்து உன்னிடம் தானே வைரம் இருக்கிறது. எங்கே ஒழித்து வைத்திருக்கிறாய் என்று கேட்கிறான். சாலமன் இல்லை என்று சாதித்து எங்கே வைத்திருக்கிறேன் காட்டு என்று ஆடை முழுவதையும் அவிழ்த்துக்காட்டுகிறான். ஆர்ச்சர் சாலமனிடம் வைரம் இருக்கவேண்டும் என்று திடமாக நம்புகிறான்.
ஆர்ச்சர் ஜெயிலை விட்டு வெளியேறி தனக்கிருக்கும் கான்ட்டாக்ட்ஸ் மூலம் சாலமனை வெளியேகொண்டுவருகிறார். ஜெனிபர் கனோலி (மேடி) பத்திரிக்கை ஆசிரியர். மேடி, ஆர்ச்சரிடம் எப்படி வைரங்களை விற்பாய், யாருக்கு கொடுப்பாய், யாருக்கெல்லாம் இதில் பங்கிருக்கிறது என்ற விபரங்களை கேட்டபடி இருக்கிறார். ஆர்ச்சர் ஏதோ கதைகளைக்கூற, மேடி தனக்கு ஆதரங்கள் வேண்டும், பேங்க் அக்கவுண்ட்ஸ் வேண்டும் என்கிறார்.
மேடிக்கு ஆதாரங்கள் வேண்டும். ஆர்ச்சருக்கு வைரம் வேண்டும். சாலமனுக்கு குடும்பம் வேண்டும். முக்கியமாக டாக்டராகப்போகும் (இன்னும் பள்ளி சென்று கொண்டிருக்கும்) மகன் வேண்டும்.
சாலமனின் மகன் அவனது (எஞ்சிய) குடும்பத்தில் இருந்து பிரிக்கப்படுகிறான். குண்டடிபட்ட தளபதி அவனை அழைத்து அவனிடம் துப்பாக்கியை குடுத்து, சுடுவதற்கு பழகிக்கொடுக்கிறான். ஏராளமான சிறுவர் ஆர்மியுடன் அந்த சிறுவன் சேர்க்கப்படுகிறான். அவனுக்கு கஞ்சா போன்ற பழக்கங்களைக் கத்துக்கொடுக்கிறான். சிறுவன் படிப்பையே மறக்கிறான். யாரைப்பார்த்தாலும் சுட்டுக்கொல்கிறான்.
ஆர்ச்சர் சாலமனிடம் அவனது குடும்பத்தை கண்டுபிடித்து கொடுப்பதாகவும் அதற்கு கைமாறாக தனக்கு வைரம் இருக்கும் இடத்தைக் காட்ட சொல்கிறான். மேடியிடம் வைர வியாபாரத்தின் தலைகளையும், அவர்களது பேங்க் அக்கவுன்ட் நம்பர்களையும் ஆதாரத்துடன் கொடுக்கிறான். மேலும் அவர்களது வைரங்களை வாங்கும் மிகப்பெரிய இங்கிலாந்து வைரக்கம்பெனியின் பெயரையும் கொடுக்கிறான்.
தவறான பிளட் டைமன்ட்கள் கடத்தப்பட்டு – மலைகளில் உயிருள்ள செம்மறியாடுகளின் தோல்களில் வைரங்கள் பதுக்கப்பட்டு கடத்தப்படுகின்றன – இந்தியாவில் பாம்பேயில் சுத்தீகரிக்கப்பட்டு நல்லவைரங்களோடு சேர்க்கப்படுகின்றன. பின்னர் இங்கிலாந்தின் வைரக்கம்பெனியின் சுரங்க அறைகளில் பதுக்கப்படுகின்றன. பதுக்கப்படுவதன் மூலம் வைரப்பற்றாக்குறை ஏற்படுத்தப்பட்டு, விலை குறையவே குறைவதில்லை.
ஆர்ச்சர் மேடியின் உதவியுடன் சாலமனின் குடும்பத்தைக்கண்டுபிடிக்கிறான். எங்கோ கேம்பில் இருக்கிறார்கள். குடும்பத்தைப்பார்த்து சந்தோஷப்பட்ட சால்மன் மகனைக்காணாமல் வேதனை அடைகிறான். போர் ஓயும் வரை குடும்பத்தை கொடுப்பதில்லை என்று இராணுவம் திட்டவட்டமாக கூறிவிடுகிறது.
இவர்கள் திரும்பும் வழியில் வேறொரு காட்டுவாசி(அல்லது புரட்சி) கும்பலிடம் மாட்டிக்கொள்கின்றனர். மேடி சமயோஜிதமாக போட்டோவுக்கு போஸ் கொடுக்கச்சொல்லி தப்பிப்பது அழகு. அந்த கும்பல் இவர்களை தங்கள் தலைவரிடம் அழைத்துச் செல்கிறது. அங்கே தலைவர் reformation செய்துகொண்டிருக்கிறார். அதாவது போரில் மனநிலை பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுத்து, அவர்களை அரவணைத்துச் செல்கிறார். சாலமன் தன் மகனை ஆவலோடு தேடுகிறான். இல்லை.
அவர்களை எல்லைக்கப்பால் கொண்டுபோய் விட தலைவர் மறுநாள் காரில் கூட்டிச்செல்கிறார். எதிரே சிறுவர் கூட்டம் ஒன்று துப்பாக்கிகளை ஏந்திக்கொண்டு இவர்களை வழிமறித்துக்கொண்டு நிற்கிறது. ஆர்ச்சர் துப்பாக்கி எடுக்கவும் தலைவர் இல்லை இல்லை துப்பாக்கி வேண்டாம் இவர்கள் சிறுவர்கள் என்கிறார். அவர்களிடம் அன்பாக பேசுகிறார். சாலமன் சிறுவர்களின் பால்வடியும் முகங்களை பாசமாகப் பார்க்கிறான். தனது மகனை நினைத்துக்கொள்கிறான். பேசிக்கொண்டிருந்த சிறுவர்கள் சடசடவென்று திடீரென சுட ஆரம்பிக்கின்றனர். தலைவர் சுடப்படுகிறார். ஆர்ச்சர் சட்டென் வண்டியைக்கிளப்பி தப்பிக்கிறான்.
ஆர்ச்சரும் சாலமனும் வைரத்தைத்தேடி பயணம் புறப்படுகின்றனர். வழியில் சாலமன் போர் படைகளையும் அதில் இருக்கும் தன் மகனையும் பார்க்கிறான். தன்னையும் அறியாமல் கத்திவிடுகிறான். புரட்சிப்படை பார்த்துவிட ஓடி மயரிலையில் உயிர் தப்பிக்கின்றனர். மறுநாள் ஆர்ச்சர் இவ்வாறு இன்னொரு முறை செய்தால் நானே உன்னை கொன்றுவிடுவேன் என்கிறான்.
மறுநாள் சாலமன் ஆர்ச்சர் சொன்ன பாதையில் செல்லாமல் நேற்று இரவு புரட்சிப்படை சென்ற பாதையில் செல்கிறான். ஆர்ச்சர் எத்துனை சமாதனப்படுத்தியும் கேட்காமல் அவன் செல்கிறான். போரில் பாதிக்கப்பட்ட கிராமம் ஒன்றை அவர்கள் கடந்து செல்கையில் ஒரு பெரியவர் சாலமனை அனுகி, டீ கேப்ரியோவைக் காட்டி – வெள்ளைக்காரன் என்று நினைத்துக்கொண்டு – சொல்கிறார், “இங்கே, இந்த கிராமத்திலே எண்ணெய் வளமும், வைரங்களும் இல்லை என்று சொல்லு. இல்லையென்றால் இந்த இடத்தையே சுடுகாடு ஆக்கி விடுவார்கள்”
அங்கே மகன் இல்லை. சில நாட்கள் பயணத்திற்குப்பின் சாலமன் வைரத்தை தான் ஒழித்து வைத்த இடத்தை அடைகிறான். அங்கு வழக்கம்போல வைரம் தோண்டப்படுகிறது. இரவு சாலமன் தன் மகனை அங்கு பார்க்கிறான். மகனோ சாலமனை அடையாளம் தெரியாமல் குழம்புகிறான். கத்துகிறான். வர மறுக்கிறான்.
பின்னால் சாலமன் வைரத்தை எடுத்தபிறகு நடக்கும் சண்டையில் சாலமனின் மகனின் கையில் துப்பாக்கி கிடைக்கிறது. அவன் தன் தந்தையையே குறிவைக்கிறான். சாலமன் தன் மகனிடம் உன் தந்தை தான் நான். உனக்கு அன்பான அம்மா இருக்கிறார். அழகான தங்கை இருக்கிறாள். நீ படித்து டாக்டராகப்போகிறாய். நான் உன் அப்பா என்று அழுதுகொண்டே அந்த சிறுவனுக்கு புரியவைக்கிறார்.
இந்த இடம் தான் படத்தின் கரு. அமைதியான அழகான கனவுகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் குடும்பங்களை இந்த ப்ளட் டைமன்ட்ஸ் எப்படி சிதைக்கிறது பாருங்கள். ப்ளட் டைமன்ட்ஸ் இல்லையென்றால், அவர்களால் கடத்த இயலவில்லை என்றால், எங்கிருந்து ஆயுதம் வாங்குவது? எங்கிருந்து போரைத் தொடர்வது? தொடர்ந்து போர் செய்வதால் இலட்சியங்கள் நிறைவடையலாம். ஆனால் இலட்சியங்கள் யாருக்காக? சில தனிப்பட்ட நபர்களின் இலட்சியங்களுக்காக மொத்த மக்களின் இலட்சியங்களை அழிக்கலாமா?
வைரங்கள் வாங்கும் போது கவனம் தேவை. ப்ளட்டைமன்ட்களை தடுப்பதற்காக கிம்பர்லி ப்ராஸஸ் ஏற்படுத்தப்பட்டது. இப்பொழுது 99 விழுக்காடு வைரங்கள் நல்ல வைரங்கள் என்று சொல்லப்படுகிறது. ஆனால் மீதமிருக்கும் ஒரு விழுக்காடும் மிக அதிகமே.
எனவே நம்மால் முடிந்த வரை வைரங்கள் வாங்கும் போது அவை ப்ளட்டைமன்டாக இல்லாமல் பார்த்துக்கொள்வது அவசியம். சிலரது கனவுகளைக் காப்பாற்றலாம்.
ஏற்கனவே ஆஸ்கார் தவறவிட்ட டிகேப்ரியோ இந்த முறை வாங்குவாரா?
//லியார்னோடோ டீ கேப்ரியோ மற்றும் ஜெனிபர் கனோலி நடித்து தற்போது வெளிவந்திருக்கும் பிளட் டைமண்ட் ஆஸ்காருக்கு நாமினேட் செய்யப்பட்டிருக்கிறது.//இன்னும் ஆஸ்கருக்குப் பரிந்துரை செய்யப்படவில்லை. கோல்டன் க்ளோபைச் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். நேற்றைக்கு முடிந்த விருது வழங்கல் விழாவில் ப்ளட் டயமண்டுக்கு விருது கிடைக்கவில்லை. ஆனால், ‘த டிபார்டட்டுக்கு’ மார்ட்டின் ஸ்கொர்செசேவுக்குக் கிடைத்தது. கோல்டன் க்ளோப் சிறந்த நடிகர் விருது ஃபாரஸ்ட் விட்டேகருக்குக் கிடைத்தது. ஆஸ்கர் பரிந்துரைகள் வரும் செவ்வாய், ஜனவரி 23 அன்றுதான் வெளியாகும்.மற்றபடிக்குக் கொஞ்சம் சுய விளம்பரம். ;)த டிபார்ட்டட்: http://mathy.kandasamy.net/movietalk/2006/12/26/blood-diamond-2006ப்ளட் டயமண்ட் (திரைப்படம் குறித்து..): http://mathy.kandasamy.net/movietalk/2006/10/08/the-departed-2006ப்ளட் டயமண்ட் பாதிப்பில் ப்ளட் டயமண்டுகள் பற்றி (வெட்டி ஒட்டியதுதான்): http://mathy.kandasamy.net/musings/2006/12/27/610-மதி
LikeLike
நேற்று இரவுதான் இந்த படத்தைப் பார்த்தேன்[இப்போது அலுவலகத்தில் உறக்கம் ;)]கதையின் போக்கு யூகிக்க முடிந்தாலும் சிறப்பாக எடுத்திருந்தார்கள். டீ கேப்ரியோ,டிஜீமொன் ஹொன்சூவின் நடிப்பு வெகு அருமை!!இறுதியில், டானி மாடியுடன் தொலைபேசியதும் படத்தை முடித்திருக்கலாமோ என்று தோன்றியது..
LikeLike
முத்து,நான் அவ்வளவாகத் திரைப்படங்கள் பார்ப்பதில்லை. ஆனால் உங்களின் பதிவைப் பார்த்த பின் இப் படத்தைப் பார்க்க ஆவலாக இருக்கிறது. நல்ல விமர்சனம். மிக்க நன்றி.
LikeLike
மதி: மன்னிக்கவும். கேல்டன் குளோபைத்தான் தவறாக ஆஸ்கார் என்று சொல்லிவிட்டேன். சுட்டிக்காட்டியதிற்கு நன்றி. உங்கள் சுட்டிகளை வாசிக்கிறேன். departed நான் பார்க்கவில்லை. மிஸ் செய்து விட்டேன். கண்டிப்பாக டிவிடி வந்ததும் பார்க்கவேண்டும்.கப்பிபய: நீங்களும் நம்ம கேசு தானா? நீங்கள் சொல்வது போல் செய்திருக்கலாம் தான், ஆனால் சாலமனுக்கு நியாயம் கிடைத்து, அவன் குடும்பத்தை அவனுடன் இணைத்து, தவறான வழியில் வைரம் வாங்கிக் கொண்டிருந்தவர்களை அடையாளம் கண்டுபிடித்தபிறகு தான் நமக்கு ஒரு மன நிறைவு கிடைக்கிறது என்பதும் உண்மை. கடைசி மேடியும், ஆர்ச்சரும் பேசிக்கொள்வது எனக்கு அவ்வளவாக டச்சிங்காக இல்லை. ஏனென்றால் இங்கு சில காட்சிகளை வெட்டி விட்டார்கள் :(வெற்றி: வருகைக்கு நன்றி. கண்டிப்பாக பாருங்கள். உங்கள் பதிவுகளின் மூலம், தமிழ் ஈழ மக்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை உலகுக்கு காட்டுங்கள்.
LikeLike