புதுமைப்பித்தன் தன் சிறுகதைகளில் என்றைக்குமே எந்த இலக்கணங்களையும் கடைப்பிடித்ததில்லை. சொல்லப்போனால் இலக்கணங்கள் அனைத்தையும் உடைத்தெரிந்த முதல் எழுத்தாளர் அவர் எனலாம். இதைத்தான் எழுத வேண்டும் இதை எழுதக்கூடாது என்று ஏதேனும் இருக்கிறதா என்ன? அனைத்துமே எதார்த்தம் தான். ஆனால் எல்லா எதார்த்தங்களையும் சொல்லமுடியுமா? பிரபல இயக்குனர் மகேந்திரன் கூட காட்டக்கூடாத சில எதார்த்தங்களைத் தான் காட்டித் தவறு செய்ததாக ஒத்துக்கொண்டிருக்கிறார். எல்லோருக்கும் ஒரு லிமிட், பிரேக்கிங் பாய்ன்ட் இருக்கிறது. அந்த வட்டத்துக்குள்ளே (சிலருக்கு சதுரம்!) தான் அனைவரும் இருப்போம். சிலருக்கு டயாமீட்டர் அதிகமாக இருக்கிறது. சிலருக்கு துரதிர்ஷ்டவசமாக வட்டத்தின் மையப்புள்ளியும் வட்டமும் ஒரே அளவாக இருக்கிறது. குளோபலைசேஷனால் விரிந்து வரும் இந்த உலகத்தில் எதுவும் தவறில்லை. எதுவும் சரியில்லை. ஒரு நாடு தனது நாட்டில் தூக்குத்தண்டனையை ரத்து செய்கிறது. தூக்குதண்டனை தவறு என்கிறது. தனது கட்டுப்பாட்டுக்குள் (அல்லது மேற்பார்வையின் கீழ்) இருக்கும் மற்றொரு நாட்டில் தான் சிறைப்பிடித்த கைதிக்கு தூக்குத்தண்டனை வழங்குகிறது. அந்த வீடியோ அனைவரது கைகளிலும் கிடைக்கும் வகையில் பார்த்துக்கொள்கிறது. எது சரி? எது தவறு? ஓரினச்சேர்க்கை தவறு என்று சிலர் நினைக்கலாம். வாதாடலாம். ஏன் நானும் அப்படித்தான். ஆனால் சிவபாலனின் பதிவில் ஒருவர் இட்ட பின்னூட்டம் என்னை யோசிக்க வைத்தது. “ஒரு வேளை நமது மகனோ மகளோ இந்தத் தவறை செய்தார்கள் என்றால், இந்த ஒரு தவறுக்காக அவர்களை நாம் வெறுத்து ஒதுக்குவோமா?” அவரவருக்கு அவரவர் நியாயங்கள். நம் குடும்பம், குழந்தைகள், உறவினர்கள், சாதி சனங்கள் என்று வரும்போது நியாயங்கள் ஊமையாகின்றன. சுயநலமே விஞ்சி நிற்கிறது.
புதிமைப்பித்தன் இவ்வாறு கூறுகிறார்:
“….இலக்கியத்தில் இன்னதுதான் சொல்ல வேண்டும், இன்னது சொல்லக்கூடாது என ஒரு தத்துவம் இருப்பதாகவும், அதை ஆதரித்துப் பேசுவதாகவும் மனப்பால் குடித்துக்கொண்டிருக்கலாம். உண்மை அதுவல்ல; சுமார் இருநூறு வருஷங்களாக ஒருவிதமான சீலைப்பேன் வாழ்வு நடத்திவிட்டோம். சில விஷயங்களை நேர் நோக்கிக் பாக்கவும் கூசுகிறோம். அதனால் தான் இப்படிச் சக்கரவட்டமாகச் சுற்றி வளைத்துச் சப்பைக்கட்டு கட்டுகிறோம்.குரூரமே அவதாரமான ராவணனையும், ரத்தக்களறியையும், மனக் குரூபங்களையும், விகற்பங்களையும் உண்டாக்க இடம் இருக்குமேயானால், ஏழை விபசாரியின் ஜீவனோபாயத்தை வர்ணிப்பதாலா சமூகத்தின் தெம்பு இற்றுப்போய் விடப்போகிறது? இற்றுப்போனது எப்படிப் பாதுகாத்தாலும் நிற்கப்போகிறதா? மேலும் இலக்கியம் என்பது மன அவசத்தின் எழுச்சிதானே? நாலு திசையிலும் ஸ்டோர் குமாஸ்தா ராமன், ஸினிமா நடிகை சீத்தம்மாள், பேரம் பேசும் பிரமநாயகம் – இத்யாதி நபர்களை நாள் தவறாமல் பார்த்துக்கொண்டிருந்து விட்டு, இவர்களது வாழ்வுக்கு இடமளிக்காமல், காதல் கத்தரிக்காய் பண்ணிக்கொண்டிருப்பது போன்ற அனுபவத்துக்கு நேர் முரணான விவகாரம் வேறு ஒன்றும் இல்லை. நடைமுறை விவகாரங்களைப் பற்றி எழுதுவதில் கௌரவக் குறைச்சல் எதுவும் இல்லை”
– புதுமைப்பித்தன் கட்டுரைகள், 1954
இதில் எனக்கு ஒன்றோடு உடன்பாடு இல்லை – அது இராவணனை குரூரமே அவதாரமானவன் என்றது. இராவணன் குருரமே அவதாரமானவனா?
புதுமைப்பித்தனின் கதைகளில் எனக்கு ரொம்பப்பிடித்தமான கதை இது. அவரது கதைகள் பெரும்பாலும் படித்த பிறகு சிறிது நேரம் யோசிக்க வைக்கும். அவரது கதைகளில் எனக்கு மிகவும் பிடித்தமான அம்சம் அவரது கதைகூறும் விதம். நரேடிவ் ஸ்டைல். கதையை கதையாக சொல்ல மாட்டார். கதைகளைவிட நம்மைச் சுற்றிப் பினைந்திருக்கும் சமூக அவலங்களே கதைகள் தோறும் நிறைந்திருக்கும். சமூக அவலங்களை கிண்டல் கலந்து சொல்லுவதால் அவர் நிறைய நபர்களின் விமர்சனங்களைப் பெற்றார். இன்றைக்கும் தமிழ் இலக்கிய சூழலில் அதிகம் விமர்சிக்கப்பட்டவர் புதுமைப்பித்தனே. பதிலுக்கும் இவரும் சலைத்தவரில்லை. எல்லோரையும் போட்டுத்தாக்குவார். நமது வருத்தப்படாத வாலிபர் சங்கம் போல. அனைவராலும் – இன்றைக்கும்- மிகச்சிறந்த நாவலாசிரியராக மதிக்கப்பட்ட கல்கி அவர்களைக்கூட இவர் விட்டுவைக்கவில்லை. தவறு (?!) எங்கிருந்தால் என்ன?
எதிலும் ஒரு நையாண்டியை எளிதாக புகுத்திவிடக்கூடியவர் அவர். பல சமயங்களில் ஐந்து பக்க கதையில் மூன்று பக்கம் தாண்டிய பிறகும் கூட கதைக்கு வந்திருக்கமாட்டார். இந்தக்கதையிலும் அப்படியே. பொன்னகரத்தைப்பற்றியே இரண்டு பக்கங்களுக்கு சொல்லிக்கொண்டிருக்கிறார். பிறகு சட்டென்று கதைக்கு தாவுகிறார். அவரைப்பொருத்தமட்டில் சுகம் துக்கம் இரண்டிலும் ஒரு விரக்தியான ஹாஸ்யம் கலந்திருக்கும். இந்தக் கதையில் அவர் சொல்ல எடுத்துக்கொண்டிருக்கும் கருத்து கற்பு. கதையின் பெயர்: பொன்னகரம்.
முருகேசன் ஜட்கா வண்டி (அந்தக்காலத்து குதிரை வண்டி) ஓட்டுபவன். அவன் மனைவி அம்மாளு, அவன் தம்பி, அவன் தாயார் அனைவரும் உயிர்வாழ்வது முகேசன் ஜட்கா வண்டி ஓட்டி சம்பாதிக்கும் பணத்தில் தான். அம்மாளுவும் ஏதோ கூலி வேலைக்கு போகிறாள். அவர்கள் வசிப்பது பொன்னகரம் எனப்படும் ஒரு சேரி. அந்த சேரியை புதுமைப்பித்தன் வர்ணிப்பதே (!) மிக அழகு.
ஒரு நாள் முருகேசன் குடித்துவிட்டு ஜட்கா ஓட்டியதில் ஜட்கா கவிழ்ந்து முருகேசனுக்கும் குதிரைக்கும் பயங்கர அடி. முருகேசனுக்கு உள் காயம். அவன் குடித்திருந்ததால் காயம் அவனுக்கு வலிக்கவில்லை. அம்மாளு ஏதோ அரைத்து வீகக்த்திற்குப் பூசியபின்னர் தான் முருகேசன் கொஞ்சமாவது பேசினான். அவனுக்கு பால் கஞ்சி வேண்டுமாம். அம்மாளுவுக்கு கூலி போட இன்னும் நாட்கள் இருக்க பால் கஞ்சிக்கு ஏது பணம்?
இனி புதுமைப்பித்தனின் வரிகள்:
அம்மாளு தண்ணீர் எடுக்க வருகிறாள்.
‘கும்’மிருட்டு. பஞ்சாங்கத்தின் படி இன்றைக்கு சந்திரன் வர வேண்டும். ஆனால் அது மேகத்தில் மறைந்துகொண்டால் முனிசிபாலிடி என்ன செய்ய முடியும்?
எப்பொழுதும் போல் இரைச்சல் தான். ஒருவாறு தண்ணீர் பிடித்தாகிவிட்டது. திரும்பி வருகிறாள்.
சந்தின் பக்கத்தில் ஒருவன். அம்மாளுவின் மேல் ரொம்ப நாளாகக் கண் வைத்திருந்தவன்.
இருவரும் இருளில் மறைகிறார்கள். அம்மாளு முக்கால் ரூபாய் சம்பாதித்துவிட்டாள். ஆம். புருஷனுக்கு பால் கஞ்சி வார்க்கத்தான்.
என்னமோ கற்பு, கற்பு என்று கதைக்கிறீரக்ளே! இது தான், ஐயா, பொன்னகரம்!
நல்ல வேளையாக தமிழ் குடிகளைத் தாங்கிக் கொண்டிருப்பவர்கள் இந்தக் கதையினைப் படிக்கவில்லை. இல்லையேல் புதுமைப்பித்தனுக்கு சொர்க்கத்திற்கு சம்மன் அனுப்பியிருப்பார்கள்.
நிர்மல் ஒருமுறை எனக்கு பின்னூட்டம் அளிக்கும் போது “ஜெயமோகனின் கதைகளை சுருக்கமாகக் கூறமுடியாது” என்றார். உண்மைதான். ஜெயமோகனின் கதைகளையே சுருக்கமாக கூறமுடியாது என்றால், புதுமைப்பித்தனின் கதைகளை, கண்டிப்பாக முடியவே முடியாது.
அவரது நக்கலையும், நையாண்டியையும் ரசிப்பதற்கே, கதையைப் படிக்கலாம். இந்தக் கதையில் சில:
அவர் பொன்னகரத்தை விவரிக்கும் போது:
-வழி நெடுகச் சேற்றுக் குழம்புகள். சாலையோரமாக ‘முனிசிபல் கங்கை’ -அல்ல, யமுனை தானே கறுப்பாக இருக்கும்?
-பொன்னகரத்துக் குழந்தைகளுக்கு மீன் பிடித்து விளையாடுவதில் வெகு பிரியம். அந்த முனிசிபல் தீர்த்தத்தில் மீன் ஏது? எங்கிருந்த பணக்கார வீடுகளிலிருந்தோ, சில சமயம் அழுகிய பழம்,ஊசிய வடை; இத்யாதி உருண்டு வரும்.
-ரயில்வே தண்டவாளத்தின் பக்கத்தில் விளையாடுவதில் என்ன ஆனந்தமோ? வேலி இருக்கத்தான் செய்கிறது.போகக்கூடாது என்ற சட்டம் குழந்தைகளுக்கு தெரியுமா? “போனால்” தான் பெற்றோருக்குத் தான் பாரம் கொஞ்சம் ஒழிந்ததே! குழந்தைகள் தான் என்ன, ‘கிளாக்ஸோ’ ‘மெல்லின்ஸ் பூட்’ குழ்ந்தைகளா, கம்பி இடையில் போக முடியாமல் இருக்க? புகைந்தோடும் அந்த இரும்பு நாகரிகத்திற்கு, வரிசையாக நின்று “குட்மார்னி’ சார்!” என்று கத்துவதில் ரொம்ப ஆனந்தம் அவர்களுக்கு. அது தான் அவர்களுக்கு கிடைக்கும் ஆரம்பக்கல்வி.
-எல்லாரும் ஏகதேசக் குடியர்கள் தான். ‘டல் ஸீஸ’னில் பசியை மறக்க வேறு வழி? பசி, ஐயா, பசி! ‘பத்தும் பசி வந்திடப் பறந்துபோம்’ என்று வெகு ஒய்யாரமாக உடம்பில் பிடிக்காமல் பாடுகிறீரே, அங்கு நீர் ஒரு நாள் இருந்தால் உனக்கு அடிவயிற்றிலிருந்து வரும் அதன் அர்த்தம்!
மற்றொரு கதை : ஒரு கொலை அனுபவம்.
புதுமைப்பித்தன் கொலைக் கதைகள் எல்லாம் எழுதியிருக்கிறாரா என்று படிக்கத்தொடங்கிய எனக்கு ஏமாற்றம். புதுமைப்பித்தனின் திரில்லர் முயற்சி. பல புதுமைப்பித்தன்கள் கதையில் அருகிறார்கள். குத்திக்கொல்கிறார்கள். புதுமைப்பித்தன் கனவிலிருந்து முழிக்கிறார். பக்கத்தில் எழுதுகோல், காகிதம். துப்பறியும் நாவல் எழுத முயற்சிசெய்து தூங்கியிருக்கிறார். பிறகு சலிப்போடு சொல்கிறார்.
-துப்பறியும் நாவல் எழுதுவது என்றால் லேசா? தூக்குதண்டனை இல்லாமல் ஆடக்ளைக் கொல்ல வேண்டும். பிறகு துப்பறிவோனாகக் கண்டுபிடிக்க வேண்டும். அப்பப்ப? அந்த தொழில் நமக்கு வேண்டாம். மானுடன் ஓடிக்கொண்டு நாயுடன் துரத்த என்னால் முடியாது!!
புதுமை பித்தன் கலக்கி இருக்கிறார்.கடவுளும் கந்தசாமிபிள்ளையும் என்ற கதை இவர் எழுதியது என நினைக்கிறேன்.அது தவிர புதுமைபித்தன் பற்றிய வேறு அறிமுகம் எனக்கு கிடையாது.அழகாகய் அவரை குறித்து எழுதியுள்ளீர்கள். தொடருங்கள்
LikeLike
கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும் புதுமைப்பித்தன் எழுதியதுதான். புதுமைப்பித்தன் சிறுகதைத்தொகுப்பு இப்பொழுது நிறைய பதிப்புகளில் வெளிவந்திருக்கிறது. புதிமைப்பித்தனின் கட்டுரைத்தொகுப்பும் நன்றாக இருக்கும். ஆ.இரா. வெங்கடாசலபதி இரண்டு புத்தகங்களையும் தொகுத்திருக்கிறார். மேலும் புதுமைப்பித்தன் சில குறுநாவல்களையும், இரஷ்ய மொழிபெயர்ப்பு நாவல் ஒன்றையும் எழுதியிருக்கிறார். கண்டிப்பாக படியுங்கள். வருகைக்கு நன்றி நிர்மல்.
LikeLike