இன்சிடென்ட்ஸ் – 6

து ஒரு குளிர்ந்த டிசம்பர் மாதத்து இரவு. தலையில் டைட்டாக அம்மா கட்டிவிட்டிருந்த மப்ளருக்குளிருந்து என் அண்ணனுக்கு நான் டாட்டா காட்டிக்கொண்டிருந்தேன். காலை மூன்று மணிக்கு முன் சக்கரத்தில் எழுமிச்சை நசுக்கி பஸ் புரப்பட்டது. ஒன்பதாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பதினோறாம் வகுப்பு, பணிரெண்டாம் வகுப்பு என சுற்றுலாவுக்கு வந்திருந்த மாணவ மாணவிகள் எல்லாம் குதூகலமாக இருந்தனர். நானும் தான். எனக்கு இது தான் முதல் தொலைதூர சுற்றுப்பயணம். அதுவும் முதல் முறையாக வீட்டை விட்டு ஐந்து நாட்கள் பிரிந்திருக்கப்போகிறேன்.கொஞ்சம் சந்தோஷமாகவும் ரொம்ப வருத்தமாகவும் இருந்தது.

என்னதான் சொல்லுங்கள்,அதிகாலை நேரப் பஸ் பயணம் போல சுகமான பயணம் வேறு இருக்கிறதா? மன்னிக்கவும், ஒரு கவிதை ஞாபகம் வருகிறது.

அதி காலை நேரம்
ஜன்னலோரப் பயணம்
தலைக்கோதிச் செல்லும் காற்றில்
உன் கைவிரல்கள்
சிலிர்த்தது காது மடல்

நான் மற்றும் எனது உயிர் நண்பன் சூரியமோகன் (தற்போது டொரொன்டோவில் MBA படித்துக்கொண்டிருக்கிறான்) மற்றும் பிற பணிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் எல்லாம் கடைசி இருக்கையில் உட்கார்ந்திருந்தோம். எனக்கு படிக்கட்டுக்கு பக்கத்திலிருக்கும் சீட். எனக்கு பக்கத்தில் சூர்யா. காற்று மிகவும் குளிராக இருந்தது. காது மடல்கள் ஜில்லிட்டிருந்தது. கண்ணாடியில்(நான் அப்போது கண்ணாடி அணிந்திருப்பேன். இப்போ லென்ஸ்) பனி மூட்டம். ச்சே. இனிமேல் கண்ணாடி வாங்கும் போது வைப்பர் வைத்து வாங்கச்சொல்லவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.படிக்கட்டுக்குப் பக்கத்திலிருக்கும் சீட்டில் உட்கார்வதில் நன்மை என்னவென்றால்: காற்று அதிகமாக வீசும். தீமை? காற்று மிக அதிகமாக வீசும்.

ஏதோ சாமி பாட்டு ஓடிக்கொண்டிருந்தது. பிறகு வீரா படப்பாடல்கள். கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட என்று எஸ்.பி.பி கொஞ்சிக்கொண்டிருந்தார். நான் கேர்ல்ஸ் ஏரியா பக்கம் அத்துமீறி நுழைந்து, சில நொறுக்குத்தீனிகள் கைப்பற்றிக்கொண்டு வந்தேன். முருகு, இதென்ன ரஜினி பாட்டு மாதிரியே இல்ல என்றாள். கொஞ்சம் டீசிங், கொஞ்சம் கத்தல், கொஞ்சம் பாடல், கொஞ்சம் சண்டை என்று ஆரம்ப உற்சாகம் கொஞ்சம் கொஞ்சமாக வடிந்து அனைவரும் சாந்தி நிலையை அடைந்துவிட்டிருந்தனர். என்ஜினின் ஓசையும், அவ்வப்போது க்ராஸ் செய்யும் பேருந்துகளின் வெளிச்சத்தையும், ஹிஸ்டரி மேடத்தின் குரட்டை ரீங்காரத்தையும் தவிர வேறு எந்த சத்தமும் இல்லை.

கண்விழித்துப் பார்த்த போது சூர்யா படிக்கட்டு கதவில் உட்கார்ந்திருந்தான். கொஞ்சம் விடிந்திருந்தது. சுப்பிரமணியசுவாமி திரைப்படத்திலிருந்து பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக மாணவியரிடம் அசைவு தெரிந்தது. பிரின்ஸி நல்ல உறக்கத்திலிருந்தார். இதை உறுதி செய்தாயிற்று என்று சூர்யா கண் ஜாடை காட்டினான். நானும் சென்று அவனுடன் படிக்கட்டு கதவில் உட்கார்ந்து கொண்டேன். தென்காசிக்கு சிறிது தூரமே என்று மைல்கல் சொன்னது.

ஏதேதோ எங்களைத் தெரியாத கிராமங்கள் எங்களை கண்டுகொள்ளாமல் கடந்து சென்றன. சில கிராமங்களின் பெயர்கள் விசித்திரமாக இருந்தன. ஊர்களில் அந்த அதிகாலையிலும் விழித்து ஏதோ வேலையாக ரோட்டில் நடந்து கொண்டிருந்த மக்கள் எங்கள் டாட்டாவை வெறித்து பார்த்தபடியே மேலும் தங்கள் நடையை துரிதப்படுத்தினர். டாட்டா காட்டேன்டா சொட்டத்தலையா என்றான் சூர்யா. இது காதில் விழுந்ததாலோ என்னவோ சிலர் போனால் போகிறது என்று பதில் டாட்டா காட்டினர். இது அனைத்தையும் வைத்தகண் வாங்காமல் வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்தார் ஆயா. நான் கே.ஜி. படித்ததிலிருந்து அவர் தான் ஆயா. நல்ல பாசமானவர். ஆனால் மோசமானவர் (சாரிடா சிவா, உன் டயலாக்கை கடன் வாங்கிக்கிட்டேன்) கேஜியிலிருந்து பணிரெண்டாம் வகுப்பு வரை ஒரே பள்ளியில் தான் படித்தேன். நான் பணிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் வாங்கும் வரையிலும் என் பள்ளி என் மீது அதீத பாசம் வைத்திருந்ததாய் தான் உணர்ந்தேன். அதற்கப்புறம் இரண்டு ஆண்டுகள் கழித்து என் பள்ளிக்கு ஏதோ வேலையாக சென்றிருந்த போது, புது பிரின்ஸி இருந்தார், அவர் என்னைப்பார்த்து ஹ¥ ஆர் யு? என்று கேட்டபோது தான் காலம் எப்படிப்பட்ட கோட்டைகளையும் மண் மேடாக்கிவிடும் என்பதை நம்பத்தொடங்கினேன்.

“சாமின்னா சுப்பிரமணிய சாமிதான் நம்ம சாமிதான்..சாமி இங்க கட்டிக்கிட்ட மாமி தான் ரெண்டு மாமி தான்” பாடல் பலமாக ஒலித்துக்கொண்டிருந்தது.நான் சூர்யமோகனிடம் ஏதோ கேட்க நினைத்து அவனை அழைத்தேன். ஆயா ஒழுங்கா ரெண்டு பேரும் சீட்ல உட்காருங்கடா என்றார். நாங்கள் முடியாது முடியாது என்று சொல்லிக்கொண்டே வந்தோம். சட்டென்று அவர் பிரின்சியை கூப்பிட்டுவிட்டார். பிரின்சி திரும்பி முறைத்து தன் பெரிய கண்களை உருட்டி கெட் டவுன் பாய்ஸ் என்று சொல்ல, நாங்கள் வேறு வழியின்றி சீட்டில் வந்து உட்கார்ந்தோம், ஆயாவை முறைத்துக்கொண்டே. பஸ் ஒரு ரைட் டர்ன் எடுத்தது.

அவ்வளவுதான். ஏதோ ஒரு கனமான பொருள் மீது பஸ் மோதியது போன்ற ஒரு சத்தம். ரோட்டில் பெரிய பாறை ஏதும் கிடந்ததா என்ன? ஒரே கூக்குரல்கள். முன்னால் அமர்ந்திருந்த ஹிஸ்டரி மேடம் ஜீஸஸ் ஓ ஜீஸஸ் என்று கத்துவதும், இன்னும் பிறர் ஐயோ அம்மா என்று அலறும் சத்தம் காதுகளில் விடாமல் ஒலித்துக்கொண்டிருந்தது. பஸ் குடிபோதையில் திளைத்துக்கொண்டிருக்கும் குடிமகன் போல இங்கும் அங்கும் அலைந்து கொண்டிருந்தது.நாங்கள் பின் சீட்டில் அமர்ந்திருந்ததால் முன்னால் என்ன நடந்தது என்று தெரியவில்லை. கூச்சலும் குழப்பமும் கொடைக்கானலின் கடும் பனிமூட்டம் போல எங்களைச் சூழ்ந்திருந்தது. திடீரென்று பஸ் படிக்கட்டு இருந்த பக்கம் டபக்கென்று சாய்ந்தது. பிடிமானம் ஏது இல்லாமல் குழப்பத்திலும், பயத்திலும் நின்றிருந்த நான் பக்கத்திலிருந்த கம்பியில் மோதினேன். சக்கரம் ஏதோ சகதியில் அமிழ்ந்தது போல இருந்தது.
கூக்குரல்கள் மேலும் அதிகரித்தது. நாங்கள் எங்கள் வகுப்பு நண்பர்களைத் தேடினோம். அனைவரும் எழுந்து நின்றிருந்ததால் யார் யார் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.
அப்பொழுதுதான் பின்னால் திரும்பிப்பார்த்தோம். கொஞ்ச தூரத்தில் ஒரு சிட்டிபஸ் பாதிமட்டுமே நின்று கொண்டிருந்தது.

எங்கள் பஸ் ரைட் டர்ன் எடுத்தப்பொது அங்கு நேர் ரோடு ஒன்றும், உடனடியாக ஒரு லெப்ட் டர்ன் ஒன்றும் இருந்திருக்கிறது. லெப்ட் டர்னில் முக்கால் வாசி உள்ளேயும் கால் வாசி பாகம் நேர் ரோட்டிலுமாக காலை நேரத்து பாதி தூக்கத்தில் இருந்திருக்கிறது சிட்டிபஸ். காலை நேரமானதால் பஸ்ஸில் நிறைய கூட்டம் இல்லை. ஒரே ஒரு துரதிர்ஷ்டவசமான ஆள் தவிர.

பள்ளத்தில் இறங்கிய பஸ் அப்படியே நின்று கொண்டிருந்தது. அது ஒன்றும் பெரிய பள்ளம் இல்லை தான். ஆனால் மேலும் கீழிறங்கினால் பஸ் கவிழ்ந்து விடும் அபாயம் இருக்கிறது. ஹிஸ்டரி மேடம் முன்னால் எங்கள் மாணவ மாணவிகளுக்கு ஒன்றும் ஆபத்து இல்லை என்றார். ஒரே ஒரு பெண்ணிற்கு மட்டும் சற்று அடி. டிரைவருக்கு பலத்த அடி. ஸ்டியரிங் வீலில் மாட்டிக்கொண்டார் அவர். டிரைவர் அன்று மிக அழகாக எங்களைக் காப்பாற்றியிருக்கிறார். பஸ்ஸில் மோதிய எங்கள் பஸ் நிதானம் இழந்து ரோட்டின் ஓரத்தில் இருந்த ஒரு மிகப்பெரிய புளியமரத்தை குறி வைத்து சென்றிருக்கிறது. இலாவகமாக டிரைவர் எங்களைக் காப்பாற்றியிருக்கிறார்.

இப்பொதைக்கு ஒன்றும் பயமில்லை என்றதும் நாங்கள் தேடியது எங்கள் உயிர் நண்பர்களையும் நண்பிகளையும் 🙂 தான். அவர்கள் பத்திரமாக இருந்தனர், கண்கள் நிறைய பயத்தோடு. கதவைத்திறக்க முயற்சித்தோம். முடியவில்லை. மணலில் புதைந்திருக்கிறது.

பி.கு: பெயர்கள் மாற்றப்பட்டிருக்கிறது.

(தொடரும்)

2 thoughts on “இன்சிடென்ட்ஸ் – 6

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s