காந்தம்

(தொடர்கதை)

 

2

மாணிக்கம் ஓசையின்றி கதவைச் சாத்தினான். பனிகாற்று சில்லென்று அவன் முகத்தைத் தாக்கியது. குளிருக்கு இதமாக கைகளை சூடு பறக்க தேய்த்துக்கொண்டான். தோளில் கிடந்த துண்டை எடுத்து காதோடு சேர்த்து தலையில் கட்டிக்கொண்டான்.மண்ணோடு மண்ணாகத் தேய்ந்து மீதமிருக்கும் ஒற்றை மண் படியில் உட்கார்ந்தான். தெரு வழக்கத்தைவிட மிகவும் அமைதியாக இருப்பதாக உணர்ந்தான். வானம் சுத்தமாக இருந்தது. நட்சத்திரங்கள் தெளிவாக இவனைப் பார்த்து கண்சிமிட்டின.

கைலியின் சுருட்டில் குடித்துவிட்டு வைத்திருந்த பாதிக்கும் குறைவான மீதி பீடியை எடுத்து பற்றவைத்தான். உடனே தொற்றிக்கொண்டு வந்த இருமலை சிரமப்பட்டு அடக்கிக்கொண்டான்.தூரத்தில் எரிந்து கொண்டிருந்த தெருவிளக்கின் வெளிச்சத்தில் பனி புகையாய் படர்ந்து கொண்டிருந்தது. இன்னும் தூரத்தில் மொட்டை மலை ஒற்றை மின் விளக்கு மங்களாகத் தெரிந்தது. நேரம் பீடிப் புகையாய் காற்றில் கரைந்தது. உள்ளடங்கிய மிகச் சிறிய கண்கள் வானத்தில் எதையோ தேடிக்கொண்டிருந்தன.

அணைந்து போன பீடியைக் கீழே போட்டுவிட்டு மாணிக்கம் எழுந்து வீட்டின் பின்புறம் சென்றான். முட்கள் மண்டிய புதர் குளிரில் நனைந்திருந்தது. மாணிக்கம் மெதுவாக முட்களை அப்புறப்படுத்தினான். பின் மண் தரையை தோண்ட ஆரம்பித்தான். உள்ளிருந்து சிறிய மண் பாணையை எடுத்து வெளியே வைத்தான். மண் பானை அழுக்கடைந்த ஒரு துணியினால் மூடப்பட்டிருந்தது. தோண்டிய மண்ணை குழியில் அடைத்து முட்களை அதன் மேல் வைத்துவிட்டு பானையை எடுத்துக்கொண்டு வீட்டின் முன்பக்கத்துக்கு வந்தான். தோளிலிருந்த பானையிலிருந்து சலக் சலக் என்ற ஓசை அவன் காதுகளுக்கு மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தது.

வீட்டின் முன்னால் அமர்ந்திருந்த செல்லாமவைப் பார்த்து மாணிக்கம் ஒரு கணம் திடுக்கிடவேசெய்தான். வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்த செல்லம்மா,”யோவ்..இன்னிக்கு எங்கயும் போகவேணாம்னு ஏட்டையா சொல்லிட்டு போயிருக்காருய்யா. எங்கயும் போகவேணாம்யா. உன் செல்லம்மா சொல்றேன் கேளுய்யா” என்றாள். கண்களினோரம் ஈரம் கசியத்தொடங்கியிருந்தது. தோளிலிருந்த மண் சட்டியை கீழிறக்காமல் சிறிது நேரம் பேசாமலிருந்தான் மாணிக்கம். பின்னர் “எத்தன நாளைக்குத்தான் நீங்க பசியோட இருப்பீங்க? நெறமாசக்காரி உன்ன எத்தன நாளைக்கு பட்டினி போடுவேன். சோர்ந்து சோர்ந்து அடிவயித்த பிடிச்சிக்கிட்டு சுருண்டு கெடக்குற பிள்ளைகள என்னால பாக்க முடியலத்தா. இன்னிக்கு பாண்டி கண்டிப்பா வாங்கிறேன்னும் சொல்லியிருக்கான். போய்கொடுத்துட்டு காசோட வாரேன் புள்ள. நாளைக்காவது அடுப்பபத்தவைக்கலாம். ஒன்னும் பயப்படாத. எனக்கு ஒன்னும் ஆகாது. குளிருல ரொம்ப நேரம் வெளியில உக்காராத உள்ள போ படுத்துக்க. ராணி முழிச்சுக்கிட்டா பாரு” என்று சொல்லிவிட்டு வேகமாக நடக்க ஆரம்பித்தான் மாணிக்கம்.

தூரத்தில் இருட்டில் மறையும் வரை இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்த செல்லம்மாவின் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டேயிருந்தது.

***
மந்தைக்கு வந்த மாணிக்கம் தூரத்தில் பானையை வைத்துவிட்டு, தலையில் கட்டியிருந்த துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டு, கம்பி கதவுக்குள் சிறைப்பட்டிருந்த காளியம்மனை பார்த்து இரு கைகளையும் தலைக்கு மேல் தூக்கி கும்பிட்டான். சித்தம் கலங்கிய பைத்தியக்காரனைப்போல அவன் வாய் ஏதேதோ முனுமுனுத்துக்கொண்டேயிருந்தது. உதடு துடித்துக்கொண்டேயிருந்தது. சிறிய எண்ணெய் விளக்கில் காளியம்மன் மிகவும் மங்கலாகத்தான் தெரிந்தார். இவன் விசும்பலைக் கேட்டதாலோ என்னவோ சுவற்றிலிருந்த பல்லி முழித்துக்கொண்டு காளியம்மனை எழுப்பத்தொடங்கியது.

மந்தையைக் கடந்து தார் ரோட்டைக் க்ராஸ் செய்யும் போது அங்கிருந்த இலைகளை பெரிதும் உதிர்த்து விட்ட காய்ந்து போன வேப்பமரத்தில் கட்டிப்போடப்பட்டிருந்த வண்டி மாடுகள் சேர்ந்தார்ப்போல் மாணிக்கத்தைத் திரும்பிப்பார்த்தன. மாணிக்கம் ஒத்தயடிப்பாதையை ஓட்டமும் நடையுமாக கடந்து ஊரணியை அடைந்தான். அங்கிருக்கும் பாழடைந்த பிள்ளையார் கோவிலின் மூலையில் உரங்கிக்கொண்டிருந்த சித்தன் ஒருவன் திடீரென எழுந்து உட்கார்ந்தான். பின் ஏதோ புரியாத பாஷையில் வரம் தந்து விட்டு மீதி உறக்கததை தழுவிக்கொண்டான்.

நேரம் நத்தையைவிட மிக மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது. பாண்டி வருகிறார் போல் தெரியவில்லை. நிலாவைப் பார்த்தான். அது எனக்கு ஒன்றும் தெரியாது என்பது போல அமைதியாக இவனை பார்த்துக்கொண்டிருந்தது. பாதி உடைந்த நிலையிலிருந்த பிள்ளையார் எனக்கு எல்லாம் தெரியும் என்று ஒற்றைக்கண்ணில் தெரிவித்தார். வற்றிப்போன ஊரணியிலிருந்த காய்ந்து போன இலைச்சறுகுகள் மெல்லிய காற்றில் அசைந்து ஒரு விதமான பீதியை உண்டாக்கும் ஓசையை எழுப்பிக்கொண்டிருந்தன. அந்த குளிரிலும் மாணிகத்தின் நெற்றி வியர்த்திருந்தது. இப்பொழுது முற்றிலும் தேவைப்படாத தலைக்கட்டை அவிழ்த்து முகத்தைத் துடைத்துக்கொண்டான். குழந்தைகளின் வாடிய முகத்தை நினைத்துக்கொண்டான், பாண்டி வேகமாக வந்தால் தேவலை என்று நினைத்துக்கொண்டான்.

தூரத்தில் புதர் அசையும் சத்தமும் காலடியில் சருகு மிதிபடும் சத்தமும் கேட்டது. மிக லேசான விசில் சத்தம் ஒன்று கேட்டது. மாணிக்கம் சட்டியைக் கையில் பிடித்துக்கொண்டு புதரின் அருகில் சென்று அதே போன்றதொரு விசில் அடித்தான்.

சிறிது நிசப்தத்திற்குப் பிறகு, “அண்ணே, நான் பாண்டியோட மச்சான் முத்து.” என்றொரு குரல் கேட்டது. அடையாளம் கண்டுகொள்ள முயன்ற மாணிக்கத்திடம், முத்து ரகசியமாக, சன்ன குரலில் பேசினான்: “பாண்டி மாமா இன்னக்கி வரமுடியல. நல்ல காய்ச்சல் தூக்கி தூக்கி போட்டது. அதனால அக்கா என்ன அனுப்பிச்சது.” என்றான்.

“நீ..உன்ன..ம்..ம்ம்..பாண்டிக்கு இப்போ எப்படி இருக்கு?” என்றான் மாணிக்கம். “நல்லாயிருக்காருண்ணே. வாங்க என்கூட. என்கிட்ட பணம் இல்ல. மலைக்கு பின்னால் போய் வாங்கிக்கொடுக்கறேன்” என்றான் முத்து.

“மலைக்கு பின்னாலையா?. நான் அங்கெல்லாம் போக மாட்டேன்ப்பா. நீ போய் கொடுத்துட்டு வந்திடு. நான் நாளைக்கு கூட பணம் வாங்கிக்கறேன்” என்றான் மாணிக்கம். நடக்க ஆரம்பித்த மாணிக்கம், திரும்பி, சரிப்பா “நானும் வாரேன்.” என்றான்.

இருவரும் சேர்ந்து நடக்க ஆரம்பித்தனர். இப்பொழுது மீண்டும் குளிரெடுக்கத்தொடங்கியது. இருவரின் காலடி சத்தங்களையும் தூரத்தில் கேட்கும் நாய்களின் குரைப்புகளையும் தவிர வேறு எந்த சத்தமும் இல்லை. முத்து நடையைத் துரிதப்படுத்தினான்.

“அண்ணே நீங்க இந்த புதருக்கு பின்னால உக்காந்திருங்க. நான் வந்து விசில் சத்தம் கொடுத்தா மட்டும் வெளியில் வாங்க. நான் கொஞ்ச நேரத்தில வந்திடறேன்” என்று சொல்லிவிட்டு கணப்பொழுதில் ஓட்டமும் நடையுமாக ஓடி மறைந்தான் முத்து.

இரவுப்பூச்சிகளின் இடைவிடாத ரீங்காரம் சூழ்நிலையை மேலும் கலவரப்படுத்தியது. மாணிக்கம் ஒரு சாரப்பாம்பு பக்கத்துப்புதரில் சுருண்டு படுத்திருப்பதைப் பார்த்தான். ஏனோ அவனுக்கு ஒட்டிய அடி வயிறுடன் படுத்துக்கிடக்கும் செந்தில் தான் ஞாபகத்துக்கு வந்தான். மாணிக்கம் “நாளைக்கு சோறாக்கிடலாம்” என்று நினைத்துக்கொண்டான்.

தூரத்திலிருந்த இடிந்த மண் மேட்டில் அசையாமல் உட்கார்ந்திருந்த ஆந்தை ஒன்று மாணிகக்த்திடம் ஏதோ சொல்ல நினைத்து பிறகு ஒன்றும் சொல்லாமல் அவனையே வெறித்துக்கொண்டிருந்தது.

***
திடீரென்று யாரோ ஓடி வரும் சத்தம் கேட்கவே மாணிக்கம் உஷாரானான். எழுந்திருக்கலாமா என்று யோசித்தான். கொஞ்ச தூரத்திலிருந்த புதரிலிருந்து ஒருவன் எழுந்து ஓடினான். துப்பாக்கி சத்தமும், அலறல் சத்தமும் கேட்டது. மேலும் காலடியோசைகள் கேட்டது. மாணிக்கம் எழுந்திருக்கவில்லை. போலீஸ் விசில் சத்தமொன்று மிக அருகில் கேட்கவே மாணிக்கத்தின் இதயம் துடிப்பை அதிகரித்தது. மாணிக்கம் இருந்த இடத்திலே உரைந்தான்.

தடிமனான லத்தி ஒன்று அவன் தோளில் தட்டியது. புதருக்கு அந்தப்பக்கம் கனத்த பூட்ஸ் கால்கள் தெரிந்தன. “எந்திரிடா” என்ற கடுமையான குரல் ஒன்று ஒலித்தது.

(தொடரும்)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s