நூறு

என்னோட நூறாவது பதிவுங்க இது. அதுக்கென்ன இப்ப? அப்படீன்னு கேட்டாக்க நான் என்ன சொல்றது? அது வந்து, நான் வலைப்பூ (blog க்கு அது தானே தமிழ்ல பேரு?) ஆரம்பிச்சு ரெண்டு வருஷம் ஆச்சு.ஆரம்பிச்சது என்னவோ பிப்ரவரி 2005. ஆனா சீரியஸா பதிவு செய்ய ஆரம்பிச்சது மே 2006 ல இருந்துதான். முதல்ல படித்த கவிதைகள், செய்திகள் அப்புறம் நகைச்சுவைத் துணுக்குகள்ன்னு தான் கட்-காபி பேஸ்ட் செஞ்சுகிட்டிருந்தேன். திடீர்னு ஒரு நாள் விதிகள் அப்படீங்கற பதிவு போட்டேன். அது நான் சொந்தமா எழுதினது. மீரா ஜாஸ்மீன் பற்றிய பதிவு அது. அப்பவெல்லாம் என்னோட ரூம் மேட்கிட்ட தான் முதல்ல வாசிச்சு காமிப்பேன். அவனும் அரைத் தூக்கத்தில கேட்டுட்டு ஓகேடா நல்லாயிருக்குன்னு சொல்லிட்டு அடுத்த நிமிசமே குரட்டை விட ஆரம்பிச்சுடுவான். அதுக்கப்புறம் சில நாளில் அவன் வேறு வீட்டுக்கு சென்று விட்டான். அவன் வீட்டைக்காலி செய்ததற்கு நான் எழுதிய பதிவுகளை, கதைகளை வாசித்துக்காட்டி அவனை கொடுமைப்படுத்தியது தான் காரணம் என்ற வதந்தி நிலவி வருகிறது. நம்பிவிடாதீர்கள். விதிகளை எதேச்சையாக திண்ணைக்கு அனுப்ப அவர்கள் பிரசுரம் செய்து விட்டார்கள். அது ஒரு தூண்டுகோல்.

நான் சென்னையிலிருக்கும் போதே ரெண்டு மூன்று கதைகள் எழுதியிருக்கிறேன். ஒரு குறு நாவல் போன்ற ஒன்றையும் எழுதியிருந்தேன். மேலும் பள்ளியில் படிக்கும் போது சில நாடகங்கள் எழுதி இயக்கியிருக்கிறேன். அதையெல்லாம் பிளாக்கில் போட்டால் என்ன என்ற எண்ணம் தோன்றியது. உங்களை விட்டால் வேறு யார் அதையெல்லாம் படிக்கப்போகிறார்கள்!?. தமிழில் டைப் செய்வது தான் சற்று சிரமான காரியமாக இருந்தது. நான் எழுதிய எல்லா கதைகளையும் ஒரு வழியாக அரங்கேற்றம் செய்தேன். ரொம்ப நாளைக்கு அப்புறம் தான் தமிழ்மணம் பற்றிய தகவல் கிடைத்தது. அப்புறம் தேன்கூடு.

என்னுடைய தோழி ஒருவர் தான் அப்போ என் பிளாக்குக்கு டெடிகேட்டட் ரீடர். இப்பவும் தான். ஒரு நாளைக்கு ரெண்டு மூணு தடவ ப்ளாக்கு போய்விடுவார். நான் என்ன குப்பை பதிவு செஞ்சாலும் நல்லா இருக்குடான்னு சொல்ற ஒரே ஜீவன். Thanks காள்யா. இந்த நூறாவது பதிவை உனக்கு டெடிகெட் செய்யறேன்.

கொஞ்சம் சோர்வா, கண்டிப்பா பதிவு செஞ்சுதான் ஆகனுமான்னு இருக்கறப்போ தான் thepreciouss.blogspot- கிருத்திகாவின் அறிமுகம் கிடைத்தது. எனக்கு தெரிந்தவரையில் அவ்வளவு அருமையான ஆங்கிலத்தில், அவ்வளவு அழகான இந்திய ஆங்கில பதிவை நான் பார்த்ததில்லை. என்னோட inspiration அவர் தான். அவரிடமிருந்து தான் blog சம்பந்தமாக நிறைய கற்றுக்கொண்டேன். ஏனோ இப்பொழுது அவர் பதிவதில்லை. Harry Potter படிக்கும் ஆர்வம் எனக்கு அவரிடம் இருந்து தான் வந்தது. இப்பொழுது ஐந்தாவது புத்தகம் படித்துக்கொண்டிருக்கிறேன். மிக விரைவில் Harry Potter பற்றிய ஒரு பதிவிட வேண்டும்.

அப்புறம் தேன்கூட்டின் சிறுகதைப் போட்டிகள். கதை எழுதுவதையே மறந்திருந்த பொழுது தான் தேகூட்டின் சிறுகதைப் போட்டி பற்றிய அறிமுகம் கிடைத்தது. உடனே என்னுடைய அசட்டு மனிதர்கள் கதையை அனுப்பினேன். பின்னூட்டங்கள் சில வந்தது. அதற்கப்புறம் தேன்கூட்டின் போட்டிக்காகவே கதைகள் எழுத ஆரம்பித்தேன். ஒரு விதமான encouragement அது. பரிசு கிடைக்குதா இல்லையா என்பது பெரிதல்ல. நான் இதுவரை முதல் பத்தில் கூட வந்ததில்லை என்பது வேறு விசயம். ஆனால் என்னாலும் கதை எழுத முடியும் என்பதை எனக்கு உணர்த்தியது தேன்கூடு. அப்படி நான் தேன்கூட்டுக்கு அனுப்பிய கதைகளில் எனக்கு பிடித்தமான கதை காடனேரி விளக்கு. ஏனோ நிறைய பேர் புரியவில்லை என்று சொல்லிவிட்டார்கள். 😦

அப்புறம் யார் எழுதியது என்று மறந்துவிட்டது: train ல தொங்கிக்கிட்டே போற ஒருவருடைய கதை -தேன்கூடு பரிசு போட்டியில் வெளியானது- எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. அந்தக்கதை பரிசு வாங்கியது என்று நினைக்கிறேன். நான் ரசித்த பதிவுகளும் கதைகளும் நிறையவே இருக்கின்றன. அதைப்பற்றியே ஒரு பதிவிட வேண்டும் என்று ரொம்ப நாட்களாக நினைத்துக்கொண்டிருக்கிறேன். ஆனால் இப்போ தேன்கூடு போட்டியை நிறுத்திவிட்டது, கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது. கதை எழுதுவதற்கு டாபிக் யார் கொடுப்பா?. தேன்கூடு போட்டிக்கு அனுப்பிய ஒரு கதையை – தொலைவு – ரெவ்யூ செய்து போஸ்டன் பாலா 3.5 outof 4 போட்டிருந்தார். அது கதை எழுதுவதற்கு மிகப்பெரிய உந்துதலாக இருந்தது. நிறைய நம்பிக்கை அளித்தது. Thanks Bala.

ஆயிரம் கால் இலக்கியம் என்ற தொடர் கிருத்திகாவுடன் debate செய்ததால் வந்த விளைவே. நான் எழுதிய current incidents பற்றிய பதிவுகளில் எனக்கு பிடித்தது: சிற்பிகளும் சிலைகளும் அப்புறம் கேட்பதற்கு உரிமையில்லை. சிற்பிகளும் சிலைகளும் என்ற பதிவு நான் எழுதிய உடன் எங்கள் வீட்டிலிருந்து தான் எனக்கு முதல் எதிர்ப்பு வந்தது. அரசியல் எழுதாதே என்று. எங்க அண்ணன் advice மேல advice. அதற்கு இணையாக என்னை திட்டி வந்த ஒரு பின்னூட்டம். அதை பிரசுரிக்க முடியவில்லை :). ஆனால் எனக்கு சந்தோசமே, பின்னூட்டமே இல்லாமல் இருந்த போது அட்லீஸ்ட் திட்டாவது கிடைக்கிறதே. ரொம்ப மோசமான வார்த்தைகளால் திட்டு கிடைத்தது ஆழ்வார் படம் பற்றிய விமர்சனப் பதிவின் போது தான். டாக்டர் ராமதாஸ் அவர்கள், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வாரம் சனி,ஞாயிற்றுக்கிழமைகளில் தான் சினிமா பார்க்க அனுமதிப்போம் என்று ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். சும்மா ஜோக்குகாகத்தான் சொன்னார் என்று நினைத்திருந்தேன். ஆழ்வார் படத்தின் விமர்சனத்துக்கே கெட்டவார்த்தைகளால் திட்டும் மக்கள் இருக்கும் இந்நாட்டில் அவ்வாறான சட்டம் கொண்டுவந்தால் தேவலையோ என்று கூட எண்ணத்தோன்றுகிறது.

கவிதைகள் எனக்கு பிடிப்பதில்லை. காதல் கவிதைகளைத்தவிர. :)) அது மட்டும் தாங்க புரியுது. அப்படியிருந்தும் ஒரு சில நேரங்களில் சில விபரீத முயற்சிகள் செய்துபார்ப்பேன். அவ்வாறான ஒன்று – ஒன்றே ஒன்று – தான் ரோடெங்கும் நயாகராக்கள் பதிவு. கவிதைகள் எழுதி உங்களைப் படுத்தாமல் இருக்க முயற்சிக்கிறேன். 🙂

ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் மற்றும் புதுமைப்பித்தன் தான் இன்றைய தமிழ்இலக்கிய bloggerகளின் கருப்பொருள் மற்றும் உருப்பொருள். இவ்வர்கள் இல்லையென்றால் நிறைய பேருக்கு என்ன எழுதுவது என்றே தெரியாது. நானும் அதற்கு விதிவிலக்கல்ல. அ.இரா. வெங்கடாசலபதி தொகுத்தருளிய புதுமைப்பித்தன் சிறுகதைத் தொகுப்பு எனக்கு நிறைய help செய்திருக்கிறது. புதுமைப்பித்தனின் கட்டுரையிலிருந்து சுட்ட கருத்து தான் நான் எழுதிய அமுதத்தை இட்டாள் என்ற சிறுகதை. என் பிறந்தநாள் அன்று பணிரென்டு மணிக்கு எழுதி முடித்தேன். கேக் வெட்டி கொண்டாடி விட்டு போஸ்ட் செய்தேன். நான் சென்னையிலிருக்கும் போது பாதி எழுதி முடிக்காமல் விட்ட கதை காந்தம். ஆனால் இப்பொழுது அது காணாமல் போய்விட்டது. மறுபடியும் முதலிலிருந்து எழுதிக்கொண்டிருக்கிறேன். ஒரு தொடர்கதையாகப் பதிவு செய்திருக்கிறேன். யார் முழித்திருக்கப்போகிறார்கள் என்ற போப்பால் டிராஜடி பற்றிய தொடரை எப்படியாவது இன்னும் சில வாரங்களில் முடித்துவிட முயற்சிக்கிறேன்.

ஜெயமோகனால் தான் மதி கந்தசாமியின் அறிமுகம் கிடைத்தது. ஒரு பின்னூட்டத்தில் மதியைப்பற்றி நிர்மல் குறிப்பிட்டிருந்தார். என்னைத் தொடர்ந்து பின்னூட்டங்கள் மூலம் encourage செய்துகொண்டிருப்பவர்கள். Thanks Nirmal and Mathy.

போஸ்டன் பாலா போன வருடத்தின் சிறந்த பதிவுகளில் ஒன்றாக குரல்வலையைத் தேர்வு செய்திருந்தார். எவ்வளவு பெரிய encouragement தெரியுமா அது? மதியும் கூட குரல்வலையைப் பற்றி சொல்லியிருந்தார். Thanks again Bala and Mathy.

அவ்வப்போது என் இடுகைகளை கில்லிக்கு கொடுக்கும் பிரகாஷ்க்கும் நன்றிகள். மேலும் என்னை பின்னூட்டங்களின் மூலம் encourage செய்து கொண்டிருக்கும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். உங்கள் encouragement வரும் பதிவுகளிலும் கிடைக்கும் என்று நம்புகிறேன். 🙂 மேலும் நான் நவம்பர் டிசம்பரில் அதிகம் பதிவு செய்யாமல் இருந்தபோது, என்னை வற்புறுத்தி பதிவு செய்ய வைத்த சிவாவுக்கும் நன்றிகள். (மொதல்ல அவனக்கண்டுபிடிச்சு உதைக்கனும்டா..ன்னு நீங்க யோசிக்கிறீங்கதான?)

மேலும் ஒரு பதிவு கூட விடாமல் அத்தனையையும் படித்து விட்டு கருத்து சொல்லும் எனது கலீக்ஸ் சரவணன், சுதா மற்றும் ராம்கிக்கும் நன்றிகள். எனது பழைய ரூம் மேட் அஸ்வினுக்கு -பாவம்ங்க அவன். எத்தனநாள் கண்ணுமுழித்து என் கதைகளைக் கேட்டிருப்பான்னு நினைக்கிறீங்க- ஸ்பெசல் நன்றிகள்

எண்ணற்ற எழுத்தாளர்கள் உருவாவதற்கு களம் அமைத்துக்கொடுத்திருக்கும் Blogger மற்றும் அவர்களை மற்றவர்களுக்கு அறிமுகம் செய்ய பேருதவியாக இருக்கும் Aggregators: thamizmanam மற்றும் தேன்கூடுக்கு எனது நன்றிகள்.

நான் டைப் செய்ய உதவும் முரசு எடிட்டருக்கும் அதை யுனிகோடாக மாற்ற உதவும் சுரதாவுக்கும் நன்றிகள். எல்லாமே free of cost. Thanks to the technology.

Once Again, Thanks All.

 

16 thoughts on “நூறு

 1. முத்து,நூறாவது இடுகைக்கு வாழ்த்துகள்!சுவாரசியமான, சுகமான வாசிப்பனுபவத்தைக் கொடுப்பதற்கு நன்றி! ஊக்குவிக்கிறேன் என்று சொல்லி உக்குவித்தமைக்கும் நன்றி முத்து. :)அடுத்து வரும் இடுகைகளை எதிர்பார்க்கிறேன். முக்கியமாக, போபால் தொடர்.வாழ்த்துகளுடன்,மதி

  Like

 2. blogக்கு வலைப்பதிவு என்ற பெயர், வலைப்பூ-வை விட கொஞ்சம் நல்ல பெயர் என்பது என்னுடைய கருத்து. தமிழில் வலைப்பதிவுகள் வரத் தெ?டங்கிய 2003இல் இதைப்பற்றி நிறைய விவாதங்கள் வந்தன. நாம் தமிழர்கள் எதையுமே கவித்துவமாக்காம இருக்க மாட்டோமில்லையா. அந்த வகையில் உருவான பெயர்தான் வலைப்பூ. weblogs aka blogs என்பதற்கு ஈடான தமிழ்ப்பெயர் வைக்கவேண்டும் என்று பலரும் முயன்றபோது ‘வலைப்பூ’ என்ற பெயர் சன்பிரான்சிஸ்கோவில் வாழும் மு.மணிவண்ணன் சொன்ன பெயர் அது. ஆனால், கவித்துவப் பாதையில் செல்லவேண்டாம் என்று அப்போது வலைபதிந்துகொண்டிருந்த நண்பர்கள் முடிவு செய்து பயன்படுத்தத் தொடங்கிய பெயர்தான் ‘வலைப்பதிவு’. வலைப்பதிவு என்ற பெயரை உருவாக்கி அதனுடைய பல வடிவங்களையும் – உதா: blog-வலைப்பதிவு, blogging- வலை பதிவது, blogger – வலைப்பதிவாளர் என்று விரிவாக ஆராய்ந்தவர் பெயரிலி என்ற இரமணீதரன் கந்தையா. அவருடைய வலைப்பதிவில் இதுபற்றி எழுதிய இடுகை கிடைத்தால் இங்கே சேர்க்கிறேன். தமிழ்வலைப்பதிவுகளுக்கென்று தொடங்கிய யாகூ குழுமத்திலும் இதுபற்றிய விவாதம் (அப்போது) நடந்தது. சுட்டி வேணும்னா தர்ரேன்.-மதி

  Like

 3. மதி, நா.கண்ணன் தலை கூட உருண்ட மாதிரி நினைவு :-). முத்துவுக்கு வேணான்னா பரவாயில்லை, எனக்குக் குடுங்க, பழைய சுட்டிகளை..முத்து… வாழ்த்துக்கள். இன்னும் கொஞ்சம் ப்ளீசிங்கான டெம்ப்ளேட்டுக்கு மாத்துங்களேன்.

  Like

 4. கோவி. கண்ணன்: வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிஜீவன் (?!) : சரிடாமதி: போப்பால் தொடரை எழுதிக்கொண்டிருக்கிறேன். கண்டிப்பாக முடித்து, போஸ்ட் செய்கிறேன். எனக்கும் வலைப்பூ என்ற பெயர் ஏதோ சரியாக இல்லாதது போல இருந்தது. அது என்ன வலைப்பூ? வலைப்பதிவு என்பது எக்ஸ்ட்ரா பிட்டிங் இல்லாமல் அழகாக இருக்கிறது இல்லையா? கண்டிப்பாக சுட்டி தாருங்கள் மதி. ப்ரகாஷ்: டெம்ப்ளேட் மாத்தவா? ரொம்ப கடியான ஜாப் அது. எப்படின்னாலும் blogger2 க்கு மாத்துவேன். அப்போ சேர்ந்து மாத்திடறேன். வருகைக்கு நன்றி ப்ரகாஷ்.பாலா: நன்றி பாலாநிர்மல்: நன்றி நிர்மல்.

  Like

 5. முத்து,100 க்கு வாழ்த்துக்கள். ஆயிரங்கால் மண்டபம் மிகவும் ரசித்துப்படித்த ஒன்று!உங்கள் பதிவுகளை தவறாமல் படித்துவிட்டு பின்னூட்டமிடாமல் செல்லும் “கயவர்”கள் லிஸ்டில் என்னையும் சேர்த்துக்கொள்ளுங்கள்! 🙂

  Like

 6. நினைச்சேன்!அரைத்தூக்கத்துல பலபதிவுகளை படிச்சுட்டு தவறா “ஆயிரங்கால் மண்டபம்” னு தவறா அடிச்சுட்டமோன்னு!! மண்டை குடைய வந்து பார்த்தால் அதேதான்!தவறுக்கு மன்னிக்க! ஆயிரங்கால் இலக்கியம் என மாற்றி வாசிக்கவும்! இப்போ மணி 1:21AM. இனி நான் எங்கத்த தூங்கி…

  Like

 7. 100க்கு வாழ்த்துக்கள். எப்படி உங்கள மிஸ் பண்ணினேன்னு தெரியல. நல்லா எழுதுறீங்கண்ற பொறாமையா?:))இனி தொடர்ந்து படிக்கிறேன்.ஈ தமிழில் பரிந்துரைத்த பாபாவுக்கு நன்றி.

  Like

 8. இளவஞ்சி: ச்சோ சுவீட். கமெண்ட் அடித்து விட்டு அதை சரிபார்த்து தவறை திருத்துக்கொள்ள மீண்டும் வந்ததற்கு. ஆயிரம்கால் இலக்கியம் பிடிக்குமா? *blush*சிறில் அலெக்ஸ்: நல்லா எழுதறனா? தாங்க்ஸ் சிறில்.சிவா: தாங்க்ஸ் டா

  Like

 9. நூறுக்கு வாழ்த்துக்கள் முத்து. அமானுஷ்ய தொடர் ஏதோ எழுதிகிட்டிருந்தீங்கன்னு பயந்து இந்தப் பக்கம் வராமயே இருந்திட்டேன்.. 🙂 நூறை இப்போ தான் பார்த்தேன் 🙂

  Like

 10. நாமக்கல் சிபி: வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.பொன்ஸ்: அமானுஷ்ய தொடரா? நான் அதெல்லாம் எழுதலீங்க்கா. சில சிறுகதைகள் மட்டுமே தான் எழுதியிருக்கிறேன்க்கா.

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s