காந்தியடிகள் இப்பொழுது இருந்திருந்தால் எப்படி இருந்திருப்பார் என்றொரு குறும்படம் youtube இல் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடியது. மெகாஹிட். அந்த படத்திற்கு பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும் இலவச விளம்பரம் அளித்தன. நானும் பத்திர்க்கையில் வெளியான செய்தியைப் பார்த்துத்தான் இணையத்தில் தேடிக் கண்டுபிடித்தேன். பார்த்தேன். ரசித்தேன். இந்திய மக்கள் youtube இல் இருந்து அந்தப் படத்தை நீக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தினர்.
அந்தப் படத்தில் காந்தி அழகாக சண்டை போட்டார் (என்ன இருந்தாலும், தமிழ் சினிமாவில் வரும் , ஒரே குத்தில், அடியாள் பறந்து, பின், பல்டி அடித்து, பிறகு தலைகுப்புற டாடா சுமோவின் கார் கண்ணாடிகளை உடைத்துக் கொண்டு விழுவதைப் போல அழகாக இல்லை!). இரண்டு கவர்ச்சியான பெண்களுடன் (இருந்தாலும், சீனா தானா பாட்டுக்கு நடனம் ஆடிய பெண்ணை விட அதிகமாகவே உடை அணிந்திருந்தனர். பெப்சி உங்கள் சாய்சில் ஒரு முறை ஒரு பெண் இந்தப் பாடலை விரும்பிக்கேட்டார், உமாவும் சிரித்துக்கொண்டே உங்களுக்கு வழங்குறோம்ங்க என்று சொன்னதை நான் இங்கு நினைவுகூற விரும்புகிறேன். மேலும், சென்ற வருடம் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில், மாணவர்கள் நடனமாட நிறைய ஆசிரியர்கள் இந்தப் பாடலைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.) ஜாலியாக கைகோர்த்துக்கொண்டு வலம் வருகிறார். மெசின் துப்பாக்கியைப் பயன்படுத்தி பார்ப்பவர்களையெல்லாம் சுட்டுத் தள்ளுகிறார். இறுதியில் “he is back. but this time he is crazy” என்று முடிகிறது படம்.
எனக்கு ஏனோ கோபம் வரவில்லை. யாரும் கோபப்படக் கூடாது என்று நான் சொல்லவில்லை. சிலருக்கு கோபம் வரத்தான் செய்தது. பொறுமையாக உண்மை நிலவரத்தை ஆராய்ந்து பார்த்தால் கோபப்படத்தேவையில்லை என்பது புரியும். அந்த வீடியோவின் பின்னூட்டத்திலே, சிலர் காந்தியின் அருமை பெருமைகளை எடுத்துக் கூறி, வீடியோ போஸ்ட் செய்தவரை தகாத வார்த்தைகளில் திட்டியிருந்தார். காந்தியின் அருமை பெருமைகளை உணர்ந்தவர் எப்படி தகாத வார்த்தைளில் மற்றொருவரைத் திட்டுவார்?
உண்மையைச் சொல்லுங்கள் காந்தீயக் கொள்கைகளை நாம் முழுவதுமாக – அட்லீஸ்ட் சிலவற்றையாவது – நாம் கடைப்பிடிக்கிறோமா? நம்மைச் சுற்றிலும் காட்டப்படும் சினிமாவில் அவ்வளவு வன்முறையையும் ஆபாசத்தையும் வைத்துக்கொண்டு, Ghandi-II படத்தைப் பார்க்கும் போது ஏன் கோபம் வருகிறது? நம்மில் எத்தனைபேர் சத்தியசோதனை படித்திருக்கிறோம்? எத்தனை பேர் படித்துவிட்டு அவர் வழியில் நடந்திருக்கிறோம்? அல்லது நடக்க முயற்சித்திருக்கிறோம்?
உண்மையிலே காந்தி இந்த நூற்றாண்டில் இருந்திருந்தால் என்ன சொல்லியிருப்பார்? “என் சிலைகளை அகற்றுங்கள். உங்கள் வீடுகளில் நீங்கள் மாட்டியிருக்கும் என்னுடைய புகைப்படங்களை தயவு செய்து அகற்றிவிடுங்கள். விளம்பரப் பலகைகைளில் இருக்கும் என் பெயர்களை (எங்கேயாவது இருக்கிறதா என்ன? நான் விளம்பரப் பலகைகளில் ரஜினிகாந்த், விக்ரம், விஜய், மும்தாஜ், நமீதா போன்றோரின் படங்களைத்தான் பார்த்திருக்கிறேன்) தூக்கியெறியுங்கள். என்னை உங்கள் மனதில் மட்டுமே நிறுத்துங்கள். என் வழியையும், கொள்கைகளையும் கடைப்பிடியுங்கள்” என்பார் என்கிறது லகே ரகோ முன்னாபாய் எம்.பி.பி.எஸ்.
காந்தியைப் பிடிக்காத நிறைய நபர்கள் இருப்பார்கள். இருக்கிறார்கள். கேட்டால் ஏதேதோ காரணம் சொல்லுவார்கள். அவர் அரசியல் சார்ந்து எடுத்த முடிவுகளைப் பற்றி விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் அவருடைய கொள்கைகள்? காந்தீயம்?
கூர்காவிடம் அறை வாங்கிய முன்னா, தனது நண்பனிடம், காந்தி ஒரு கண்ணத்தில் அறைந்தால் மறு கண்ணத்தைக் காட்டு என்றிருக்கிறார், நான் இன்னொரு கண்ணத்தைக் காட்டினால், அவன் அறைய மாட்டான் பார், என்று சொல்லி மறு கண்ணத்தைக் காட்டுகிறான். கூர்க்கா மறு கண்ணத்தில் ஓங்கி இன்னும் பலமாக மற்றொரு அறை விடுகிறான். இப்ப முன்னாவுக்கு காந்தீயம் மறந்து விடுகிறது. கூர்க்காவை அடித்து நொறுக்கிறான். நண்பனிடம், இரண்டாவது அறைக்கு அப்புறம் என்ன செய்யறதுன்னு காந்தி சொல்லல என்கிறான்.
காந்தீயக் கொள்கைகளுக்கு, எங்கயாச்சும், இந்த அவசர உலகில் இடம் இருக்கிறதா என்ன? மேலும் காந்தீயம் அவசியம் தானா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.
எனது வீட்டு வாசலில் ஒருத்தன் தினமும் பான் போட்டு எச்சில் துப்பி வைக்கிறான், நான் என்ன செய்யட்டும் என்று ஒருவர் கேட்க்கிறார். அதற்கு காந்தி – அல்லது காந்தி சொல்கிறார் என்ற illusion இல் முன்னாவே சொல்கிறார் – அவன் ஒவ்வொருமுறை துப்பும் போதும் அவனது முகத்தைப் பார்த்து பனிவாக சிரித்து விட்டு அவன் முன்னாலேயே அவன் துப்பிய பான் எச்சிலைக் கழுவுங்கள் என்கிறார். புகார் செய்த அந்த நபரும் அவ்வாறே செய்ய, கொஞ்ச நாளில் பலன் தெரிகிறது. எச்சில் துப்புபவர் சில நாட்களில் திருந்தி விடுகிறார். மன்னிப்பும் கேட்கிறார். எவ்வளவு நாளில் அந்த நபர் திருந்துவார் என்பது சொல்லமுடியாது. அது மாறுபடும். ஆனா திருந்துவார் என்பது நிச்சயம் என்பது படத்தின் கருத்து.
இது அஹிம்சை. நமது பணிவில் திக்குமுக்காடிப்போகும் எதிராளி “இவன் ரொம்ம்ம்ம்ம்ப நல்லவனா இருக்கான்டா” என்று வேறுவழியில்லாமல் அவனே திருந்திவிடுவது. ஆனால் இதில் மற்றொரு விசயமும் நடக்கும். எச்சில் துப்புபவன் மேலும் இரண்டு மூன்று பான் நபர்களை அழைத்து வந்து இங்கே இலவசமாக துப்பிக்கொள்ளலாம், உடனே க்ளீன் செய்து விடுவார்கள் என்று பெருமையாக நம்மைப் பார்த்து சொல்வதற்கும் வாய்ப்பிருக்கிறது. ஆனால் ஒன்று, அவர்கள் துப்ப துப்ப நாம் இன்முகத்தோடு அவர்களைப் பார்த்து சிரித்துக்கொண்டே அவர்கள் முன்னிலையில் க்ளீன் செய்ய வேண்டும். பொறுமை வேண்டும். அதைவிட தைரியம் வேண்டும்.
இதே போன்றொதொரு சம்பவத்தை எடுத்துக்கொள்ளலாம். வீட்டுச் சுவற்றில் போஸ்டர் ஒட்டுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம், அவர்கள் முன்னிலையிலே அவர்களைப் பார்த்து சிரித்துக்கொண்டே கருணானிதியையோ, ஜெயலலிதாவையோ, இராமதாசையோ, திருமாவையோ கிழித்தெரிய நம்மால் முடியுமா? இங்கு நாய்கள் தான் அசுத்தம் செய்யும் என்னும் வரிகளை எழுத்துக்கூட்டி படித்துக்கொண்டே சிறுநீர் கழிக்கும் நபர்கள் முன்னிலையிலே (of course அவர்கள் முடித்தபிறகு!) கழுவிவிட நமக்கு பொறுமை இருக்கிறதா? அப்படி பொறுமையாக கழுவி விடத்தான் வேண்டுமா? வெளி நபர்களிடம் பொறுமையாக இருப்பதை விட்டுத்தள்ளுங்கள், வீட்டிலிருக்கும் நபர்களுடன், நம் இரத்த சொந்தகளுடன், நமது உடன்பிறப்புக்களுடன், நமது பெற்றோருடன் நாம் பொறுமையாக இருக்கிறோமா?
உண்மையை ஒப்புக்கொள்ளுவதற்கு தைரியம் வேண்டும். உண்மையைச் சொல்லப்போனால்- அதற்குத்தான் நிறைய தைரியம் வேண்டும். மறைப்பதும் சொல்லாமல் இருப்பதும் பொய் சொல்லுவதற்கு சமம்தான். “உண்மையைச் சொல்லிவிட்டு, மனநிறைவோடு கம்பீரமாக தைரியமாக இரு” என்கிறார் காந்தி. முடியுமா? எல்லா சந்தர்ப்பத்திலும் அது முடியுமா? காந்தி சிறு வயதில் தான் வீட்டில் திருடியதை நினைவுகூர்கிறார். பிறகு தனது தந்தையிடம் தான் திருடியதை ஒத்துக்கொண்டு இரவு முழுவதும் அவரது படுக்கைக்கு பக்கத்தில் உட்கார்ந்து அழுததையும் கூறுகிறார். முன்னா ஆர்வமாக “உங்கள் தந்தை உங்களை மன்னித்தாரா?” என்று கேட்க, காந்தி சிரித்துக்கொண்டே, “ம்ம்..கொஞ்ச நாள் பிடித்தது.” என்று சொல்கிறார்.
ஒரு சூழ்நிலையில் முன்னா தனது ஆருயிர் நண்பன் சர்க்யூட்டை அறைந்து விட, சர்க்கியூட் தனிமையில் அழுகிறான். காந்தி முன்னாவிடம் : “அவனிடம் சென்று மன்னிப்பு கேள்” என்கிறார். முன்னா இதெல்லாம் தேவையேயில்லை என்று நினைக்கிறான். ஆனால் காந்தி : “அறைவது சுலபம். ஆனால் அதற்கு மன்னிப்பு கேட்பது மிகவும் கடினம். அதற்குத்தான் தைரியம் அதிகம் வேண்டும். செய்து பார்” என்கிறார். நண்பனை அறைந்து விட்ட மனப்புழுக்கத்தில் இருந்த முன்னா அவனிடம் சென்று மன்னிப்பு கேட்ட பின்னர், மனதின் பாரம் குறைந்து, இருவரும் மீண்டும் -எந்த சொல்லப்படாத மனசங்கடமும் இல்லாமல் – நண்பர்களாகின்றனர்.
உறவுகளுக்குள் நிறைய விசயங்களை நாம் செய்வதில்லை. We take everything for granted. உதாரணமாக மன்னிப்பு கேட்பது. மன்னிப்பு என்பது “என்னை மன்னித்து விடு” என்று தான் கேட்க வேண்டும் என்றில்லை. மனைவியை ஓங்கி அறைவிட்ட கணவன், சிறிது நேரத்தில், அவளிடம் சென்று “என்னடா செல்லம் கோபமா?” என்று கேட்டால் கூட போதும். மன்னிப்பு கேட்பதிலும் தவறில்லை இல்லையா? மனைவியிடம் மன்னிப்பையும் சேர்த்து கேட்பதால், போனசாக ஏதும் கிடைக்கவாய்ப்பிருக்கிறதே!
இதில் கவனிக்க பட வேண்டிய ஒரு விசயமும் இருக்கிறது. சும்மா சும்மா மனைவியை அடித்து விட்டு, பிறகு மன்னிப்பு கேட்பதில் எந்த காந்தீயமும் இருப்பதாகத் தெரியவில்லை. மன்னிப்பு என்றால் : தவறை உணர்ந்து கொண்டேன் என்று அர்த்தம். தவறை உணர்ந்து கொண்டால் அதை திரும்ப செய்யலாமா? சாரி கேட்பது இப்பொழுதெல்லாம் பேசனாகி விட்டது. சாரி கேட்பது காந்தீயம் இல்லை, தவறை உணர்ந்து மறுபடியும் செய்யாமலிருப்பதே காந்தீயம். திருடியதை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்ட காந்தி அதற்குப்பிறகு திருடவேயில்லை என்பதை கவனிக்கவேண்டும்!
அடுத்து பொய் சொல்லாமல் இருத்தல். உண்மையை ஒத்துக்கொள்ளுதல். முன்னா ஒரு ரவுடி. ஆனால் தனது காதலியிடம் தான் ஒரு புரபொசர் என்று சொல்லி ஏமாற்றுகிறார். வில்லன், முன்னாவிடம் இந்த விசயத்தை அவளிடம் சொல்லிவிடுவேன் என்று மிரட்டுகிறார். முன்னா காந்தியிடம் என்ன வழி என்று கேட்க: “அவன் சொல்வதற்கு முன்னால் நீ அவளிடம் உண்மையைச் சொல்லிவிடு. பிறகு அவனிடம் நீ பயப்படத்தேவையில்லை. தைரியமாக நீ உன் போராட்டத்தை தொரலாம்” என்கிறார். உண்மைதான். உண்மையைச் சொல்லிவிட்டு தைரியமாக போராட்டத்தை தொடராலாம். ஆனால் காதலி? நீயும் அவளும் உண்மையாக காதலிக்கும் பட்சத்தில் உங்கள் காதல் கண்டிப்பாக ஜெயிக்கும், ஆனால் நீ உனக்கு உணமையாக இரு என்கிறார். அவர் சஞ்சய தத் என்பதால் அவரது காதல் உண்மை சொல்லியும் ஜெயித்தது, நமக்கு?
ஆனால் காதல் ஜெயித்ததா இல்லை மன்னாங்கட்டியானதா என்பதல்ல முக்கியம். இரவு தூங்கப்போனால் எந்த குற்ற உணர்வும் இல்லாமல் நிம்மதியான தூக்கம் வர வேண்டும். அப்படி வரவில்லையென்றால் என்ன வாழ்ந்து என்ன பிரயோஜனம்? குற்ற உணர்வில்லாமல் நிம்மதியாக குரட்டை விட ஒரே ஒருவரால் தான் முடியும்: அவர் தனக்கு தானே உண்மையாக இருப்பவர்.
மூடநம்பிக்கை. வில்லனின் மகளுக்கு வில்லன் பொய் சொல்லி திருமணம் ஏற்பாடு செய்கிறார். அதாவது, ஜாதகப்படி மகள் திருமணம் செய்துகொண்டு போனால், கணவன் இறந்து விடுவான் என்கிறார், பையனின் ஜோசியர். இதைக்கேட்டவுடன் வில்லன் சமயோஜிதமாக அவள் பிறந்த நேரத்தை மாற்றி பையன் வீட்டாரை ஏமாற்றி விடுகிறார். இந்த விசயம் மகளுக்கு, திருமணத்திற்கு முதல் நாள் தான் தெரியவருகிறது. அவள் இதை ஒத்துக்கொள்ளாமல், நேரே சென்று பையனின் தகப்பனிடம் உண்மையைச் சொல்லிவிடுகிறாள். அவர் திருமணத்தை நிறுத்தி விடுகிறார். முன்னா வந்து சமாதானப்படுத்துகிறார். ஜோசியரும் உடன் இருக்க, பையனின் தந்தை ஜோசியர் சொல்வதைக்கேட்டு திருமணம் நடக்கவே நடக்காது என்கிறார். முன்னா அவரிடம் வாதாடுகிறார். சுற்றிலும் மக்கள் நின்று கொண்டு வேடிக்கை மட்டுமே பார்க்கின்றனர். இரு வீட்டாரும் நல்ல படித்து உயர்ந்த நிலையில் இருப்பவர்களே. திருமணத்துக்கு வந்தவர்களும் உயர்மட்டத்தில் இருப்பவர்களே. அப்பொழுது முன்னா ” படிப்பறிவில்லாத ரவுடியான எனக்கு புரிவது கூட உங்களுக்கு புரியவில்லையா” என்று அங்கே நின்று சும்மா வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மக்களைப் பார்த்து கேட்கிறார். வாஸ்து, பெயர்மாற்றம், மோதிரக்கல், ஜாதக தோஷம் என்று எத்தனை நம்பிக்கைகளில் படித்த நாமே சிக்கி வெளிவர இயலாமல் தவித்துக் கொண்டிருக்கிறோம். எப்பொழுது விடிவு?
ஒருவன் தனது தந்தையில் ஆயுட்கால சேமிப்பான ஏழு லட்ச ரூபாயை பங்கு சந்தையில் தொலைத்து விடுகிறான். தற்கொலைக்கு முயற்சி செய்யும் அவனிடம் : “முதலில் உன் தந்தையின் அறைக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்று உண்மையைச் சொல். பிறகு எப்படியாது அந்த பணத்தை அவருக்கு திருப்பிக்கொடுப்பேன் என்று உறுதி கொடு” என்கிறார் காந்தி (முன்னா). அதற்கு அவன் “அதற்கு நான் செத்தே போய்விடுவேன்” என்கிறான். “இத்தனை நாள் உன்னைச் சுமந்த உன் தந்தை இனி உன் சவப்பெட்டியையும் சுமக்க வேண்டுமா” என்கிறார். “பணத்தை எப்படி திருப்பி தருவேன்? மிகப்பெரிய தொகை அல்லவா அது?” என்கிறான் அவன். அதற்கு முன்னா ” அது மிகவும் எளிது. சிக்கனமாக இரு. இரண்டு மடங்கு வேலைசெய். பணத்தை மிக விரைவில் திருப்பிக்கொடுத்து விடலாம்” என்கிறார்.
சிக்கனம். கஞ்சத்தனமாக இல்லாமல் சிக்கனமாக இருப்பது மிகப்பெரிய குணங்களில் ஒன்று. கஞ்சமாக இருப்பவர்களையும், ஊதாரியாக இருப்பவர்களையும் நிறைய பார்க்கலாம். சிக்கனமாக இருப்பவரை காண்பது தான் கஷ்டம். சிக்கனமாக இருந்தாலே நிறைய பிரச்சனைகளை சமாளிக்கலாம் இல்லையா? சிக்கனம் என்பது பணத்தில் மட்டும் இல்லை, நாம் செலவழிக்கும் எல்லாவற்றிலும் தான், நேரத்தை சேர்த்து, அன்பை விடுத்து.
இன்று நமது இரத்தத்தோடு கலந்து விட்ட ஒன்று லஞ்சம். ஒரு அரசு ஊழியர் (ஆசிரியர்!) பென்சன் பணம் தரப்படாமல் இழுத்தடிக்கிறார் மற்றொரு அரசு ஊழியர். சம்பந்தப்பட்ட அதிகாரி லஞ்சம் கேட்கிறார். ஆசிரியரோ குடுக்கும் நிலையில் இல்லை. காந்தி ஒரு வழி சொல்கிறார் அது : அந்த ஆசிரியர் அந்த அதிகாரியின் அலுவலகத்திற்கு சென்று தனது கண்ணாடி, காது கேட்பதற்கான மெசின், சட்டை, பனியன், பேண்ட், ஜட்டி, செறுப்பு என்று அனைத்தையும் அங்கேயே -ஒவ்வொன்றுக்கும் விலை சொல்லி – கழட்டி கொடுப்பது. லஞ்சம் கேட்டவரை வெட்கி தலைகுனிய வைப்பது. லஞ்சம் கேட்டவர் இதற்கெல்லாம் வெட்கப்பட்டால் எப்போதோ லஞ்சம் ஒழிந்திருக்காதா?
நாம் நிர்வாணப் போராட்டம் நடத்தினால் போலீஸ் பிடித்து சென்று விட வாய்ப்பிருக்கிறது, கவனம். நிர்வாணப் போராட்டம் தான் என்றில்லை, வேறு ஏதாவது அஹிம்சை வழியில் போராடுவது. போராடு, ஆனால் எக்காரணம் கொண்டும் லஞ்சம் கொடுக்கக் கூடாது என்கிறார். முடியுமா? இன்றைய சூழலில் சாத்தியமா? அதிகாரத்தில் இருக்கும் பெண்களும் கூட கூச்சமின்றி லஞ்சம் கேட்கும் நிலையில், நாம் லஞ்சம் கொடுக்காமல் இருந்தால் நாம தானே பின் தங்கிவிடுவோம்? நமது வேலையல்லவா நின்றுபோகும்? இந்தியன் தாத்தாவுக்கு அரசு ஆஸ்பத்திரியில் நடந்த கொடுமையை நினைத்துப் பாருங்கள். உண்மையில், அது போன்று யாருக்கும் நடக்கவில்லை என்று சொல்லமுடியுமா? பிணத்தை உறவினரக்ள் எடுத்து செவதற்கு கூட லஞ்சம் கேட்கும் உலகம் இது. அப்படியிருக்க நாம் மட்டும் லஞ்சம் கொடுக்கமாட்டேன் என்று அடம்பிடித்தால் என்ன சாதித்து விடப்போகிறோம்?
எல்லோரும் அடிமைப்பட்டுத்தானே கிடக்கிறார்கள், நாம் மட்டும் அடிமை தனத்துக்கு எதிராக குரல் கொடுத்து என்ன சாதித்து விடப்போகிறோம் என்று அன்றைய சுதந்திரப்போராட்ட வீரர்கள் (எல்லா தியாகிகளின் தியாகமும் ஒன்றே. காந்தியின் தியாகம் தான் உயர்ந்தது என்றோ, நேதாஜியின் தியாகம் தான் உயர்ந்தது என்றோ சொல்லமுடியாது. இவ்விரு தலைவர்களின் தியாகத்திற்கு கொடிகாத்த குமரினின் தியாகம் எவ்வகையிலும் குறைந்ததில்லை. கொடிகாத்த குமரினின் தியாகத்திற்கு, போராட்டத்தால் நாடு கடத்தப்பட்டு எங்கோ செக்கிழுத்து யாருக்கும் தெரியாமல், யாராலும் அறியப்படாமல் இறந்து போன ஒவ்வொருவரின் தியாகவும் குறைந்ததல்ல!) நினைத்திருந்தால் நமக்கு சுதந்திரமே கிடைத்திருக்காது. அவர்கள் தங்கள் உடமைகளை, உயிர்களை தியாகம் செய்தார்கள். அதைவிட குறைந்த சில தியாகங்கள் செய்ய நாம் முன் வந்தால் சாதிக்கலாம். எதையும் அவ்வளவு எளிதாக மாற்றிவிட முடியாது. போராட்டம் வேண்டும். தொடர்ந்து போராட வேண்டும்.
ஹிந்தி திரைப்பட உலகம் ஒரு பக்கம் பாதாளத்தில் சென்று கொண்டிருந்தாலும், மறுபக்கம் பிரமிக்க வைக்கிறது. சுவதேஸ், ரங் தே பசந்தி போன்ற படங்கள் சில எடுத்துக்காட்டுகள். முன்னாபாயில் எவ்வளவு வாழ்க்கைக்கு தேவையான நல்ல விசயங்கள் இருக்கின்றன. அதை ஏற்றுக்கொள்வதும் நிராகரிப்பதும் நம்மிடம் இருந்தாலும், இதை தைரியமாக சொல்வதற்கு நிறைய நம்பிக்கை வேண்டும். அதுவும் இன்றைய திரைப்பட சூழலில் இது போன்ற படங்கள் தான் ஆரோக்கியமான நாளைய சினிமா எதிர்காலத்துக்கு ஆக்சிஜன். இப்படத்தின் வெற்றி மேலும் பல நல்ல படங்களின் முயற்சிக்கு தூண்டுகோலாக இருக்கும்.
இந்த படத்தின் தமிழாக்கத்தில் -கண்டிப்பாக தமிழாக்கம் செய்யவேண்டும்- ரஜினியோ, கமலோ ( கமலுக்கு காந்தீயத்தில் நம்பிக்கை இருக்கிறதா என்று தெரியவில்லை. எனக்கு காந்தீயத்தில் நம்பிக்கை இல்லை என்று அவர் மறுக்க முடியாது. நடிக்கத்தானே சொல்கிறார்கள். அவர் நடிகர் தானே?) – நடித்தால் மக்களை எளிதாக சென்றடையும் என்று நினைக்கிறேன். காந்தீயக் கொள்கைகள் மறுபடியும் நினைவு கூறப்படும். இதனால் பெரிய மாற்றம் வரும் என்று எதிர்பார்க்க முடியாது, ஆனால் அட்லீஸ்ட் 0.000000001% மக்களையாவது யோசிக்க வைத்தால், அது பெரிய -மிகப் பெரிய -வெற்றி. உதாரணத்திற்கு என்னிடம் ஏற்பட்டிருக்கும் மாற்றம் போல. அதுக்காக நான் காந்தியவாதியாகி விட்டேன் என்று அர்த்தம் இல்லை. முதலில் நீண்ட காலமாக தொடாமல வைத்திருக்கும் Louis Fisher எழுதிய Biography Of Ghandhiயைப் படிக்கவேண்டும் என்று முடிவு செய்திருக்கிறேன்.
மாற்றம் ஏற்படலாம். ஏனென்றால் மாற்றம் என்ற ஒன்றே என்றைக்கும் மாறாத ஒன்று.
வந்தேமாதரம்.
நன்று!
LikeLike
nice one muthu
LikeLike
படித்து முடித்ததும் ஓரிரு னிமிடங்கல் கனினித்திரையையே வேறித்டுப் பார்த்த வண்ணம் உட்கார்ந்திருந்தேன்.எவ்வளவு வன்முறை எழுத்துலகில் இன்ரு!இதற்கு ஒரே காரணம், காந்தீயம் மறந்த, காந்தீயத்தில் நம்பிக்கை இழந்த பதிவர்கள் நிறைந்திருக்கும் இக்கால கட்டத்தில், இவையெல்ல்லாம் எண்னிப் பார்க்கக் கூட முடியாத ஒரு கானல் நீராகப் போனதின் சோகம் மனதை வந்து பலமாகத் தாக்கியது.இப்பதிவை யாராவது கமலுக்கோ, ரஜினிக்கோ அனுப்பி வைத்தால் மகிழ்வேன்!மிக்க நன்றி ஐயா!
LikeLike
நானும் இந்த்ப் படத்தை தேடிப் பிடித்து சமீபத்தில் DVD-ல் பார்த்தேன் (மொழி புரியாது – ஆங்கில சப்டைட்டில்களுடன் தான்). எனக்கென்னவோ, சரியாக ரீமேக் செய்தால் தமிழர்கள் வரவேற்பார்கள் என்றே தோன்றுகிறது.
LikeLike
நாமக்கல் சிபி: வருகைக்கு நன்றிநிர்மல்: Thanks Nirmal.sk: வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. எழுத்துலகில் வன்முறை இருக்கத்தான் செய்கிறது. ஒருவரை ஒருவர் தயிர்வடை இலக்கியவாதி என்பதும், டூரிஸ்ட் கைட் இலக்கியவாதி என்று சொல்வதையும் என்னவென்று சொல்வது? அவரவருக்கும் அவரவர் எல்லைகள், உனக்கு எல்லை இல்லை என்றால் ஓகே, நீ பெரிய புரட்சியாளர் தான், அதுக்காக மற்றவர்களை கேலி செய்வது எந்த விதத்தில் நியாயம்? சரிதானே sk.தெனாலி: கண்டிப்பாக தமிழில் ரீமேக் செய்தால் நன்றாக இருக்கும். எல்லோருக்கும் மெசேஜ் ரீச் ஆகும். செய்வார்களா பார்ப்போம். எனது கவலை : காந்தீய சிந்தனைகளை படம் பிடிக்கும் போது, பிசினஸ் ஆக வேண்டும் என்பதற்காக நமீதா டான்ஸைச் சேர்க்கக்கூடாது என்பதே.
LikeLike