பருத்தி வீரன்

லிட்டில் இன்டியாவிலிருந்து யூசூன் போவதற்கு 857 பஸ் எடுத்தால் கண்டிப்பாக முக்கால் மணி நேரம் ஆகும். எனக்கு இப்பொழுதெல்லாம் பஸ்ஸில் தூக்கம் வருவதில்லை. உடன் வரும் நண்பரும் செல் போனையே கட்டிக்கொண்டு அழுபவர். SMS அடித்தே ஓய்ந்த கைகள் அவரது கைகள். ஒரு முறை அவருடன் பீச்சுக்கு சென்றிருந்த பொழுது கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் நான் என்ன செய்வதென்று தெரியாமல் கடலில் விடாது அடித்து கொண்டிருக்கும் அலைகளையும், வானத்தில் நிமிசத்துக்கு ஒரு முறை (அல்லது இரு முறை) தரை இறங்கிக்கொண்டிருக்கும் விமானங்களை எண்ணிக்கொண்டிருந்தேன், அவர் நான் அருகின் அமர்ந்திருப்பது தெரியாமல் ஹாயாக தனது ஆஸ்திரேலிய நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தார். பேசி முடித்து விட்டு சாரி முத்து என்று மட்டும் சொன்னார். எனவே இந்த முறை சற்று உஷாராக ஆனந்த விகடன், ரிப்போர்ட்டர் மற்றும் இந்தியா டுடே வாங்கிக்கொண்டேன். முக்கால் மணி நேரம் பொழுது போக வேண்டுமே.

நாங்கள் யூசினில் பருத்தி வீரன் படம் பார்க்கச் சென்றோம். முதலில் அமீருக்கு HatsOff. அவரது மௌனம் பேசியதே படமே அப்பொழுது வந்து கொண்டிருந்த குப்பைகளுக்கு (தமிழன், ஜெமினி) மத்தியில் ஒரு அழகான கவிதை. கடைசி டிவிஸ்ட் ஒரு surprise. ராம் பத்தி நான் சொல்லத்தேவையில்லை.

பருத்திவீரன் மற்ற இரண்டு படங்களையும் தூக்கி அல்லேக்காக சாப்பிட்டு விட்டது. எதார்த்தமான காட்சிகளால் படம் நம்மைக் கட்டிப்போடுகிறது. மதுரைத் தமிழ் வசனங்கள் ஆகட்டும், பாடல்கள் ஆகட்டும், பாடல் பாடும் நாட்டுப்புற கலைஞர்கள் ஆகட்டும், பின்னனி இசை ஆகட்டும், நடிகர்கள் (பிரியாமணி, சரவணன் மற்றும் கார்த்தி) எல்லோரும், யுவனின் ரீரெக்கார்டிங் என்று அனைத்தும் மிகச்சரியாக அழகாக அமைந்திருக்கின்றன. well done. படத்தின் முதல் பாதி கெட்ட அலம்பல். மதுரைக்குசும்பு ஒவ்வொரு ப்ரேமிலும் இருக்கிறது.

நான் இன்றிரவு சாப்பிடவில்லை. படத்தின் பாதிப்பு என்னிடம் இன்னும் இருக்கிறது. தியேட்டரிலே அழுது விட்டேன் (மகாநதிக்கப்புறம் நான் தியேட்டரில் அழுத படம் இது). தியேட்டரை விட்டு வந்ததும் என்னை முத்தழகு என்று அழைத்த நண்பர் ஒருவர் செமத்தியாக என்னிடம் வாங்கிக்கட்டிக்கொண்டார். எப்படி இவரால் இப்படி ஒரு படத்தைப்பார்த்து விட்டு வந்து காமெடி பண்ண முடிகிறது என்று எனக்கு சத்தியமாக தெரியவில்லை.

அந்த நண்பர் சொன்னார் : முத்து, திஸ் இஸ் ஜஸ்ட் எ சினிமா, சோ டேக் இட் ஈஸி. சினிமா தான். பிம்பம் தான். ஆனால் மனது கேட்கமாட்டேன் என்கிறதே. முத்தழகு (பிரியாமணி) “என்னைத் தூக்காதடா தூக்காதடா” என்று கதறும் போது -அதை நினைக்கும் இந்த நொடி கூட- நெஞ்சு வெடித்து விடுவது போல இருக்கிறதே. துக்கம் தொண்டையை அடைக்கிறதே. நான் நினைத்ததெல்லாம் ஒன்று தான் : படத்தில் காட்டப்பட்டது போன்ற சம்பவம் எங்காவது கண்டிப்பாக நடந்திருக்கும். அந்த பெண்ணும் அவரது காதலும் கண்டிப்பாக கதறியிருக்கும். அவரை நினைத்து தான் எனக்கு அழுகை வந்தது. அந்த சம்பவத்தை நினைத்து தான் மனது கிடந்து அடித்துக்கொள்கிறது. ஏன் இப்படி நடக்கிறது? ஏன் இப்படி நடக்கிறது?

படத்தில் இப்படித்தான் முடிவு இருக்கப்போகிறது என்றூ யூகித்தவுடன் நான் என் நண்பனிடம் போய்விடலாமடா என்று கேட்டேன். அவன் கொஞ்ச நேரம் பொருடா என்றான். அப்புறம் கொஞ்ச நேரத்தில் அவன் எழுந்து போய்விட்டான். நான் கடைசி வரை படத்தைப் பார்த்து விட்டு தான் வந்தேன். வரும் வழியிலெங்கும் நாங்கள் ஒருவருக்கு ஒருவர் ஏதும் பேசிக்கொள்ளவில்லை. வீட்டுக்கு வந்தும் ஏதும் பேசாமல் இருக்கவே, வீட்டிலிருந்த படம் பார்க்காத மற்றொரு நண்பர் ஏன் எல்லோரும் இப்படி இடி விழுந்தது போல உட்கார்ந்திருக்கிறீர்கள் என்று கேட்ட பிறகு தான் நாங்கள் படத்தை பற்றி பேச்சு எழுந்தது. படத்தின் தாக்கம் அப்படி.

ஒரு பெண் சாகக்கிடக்கிறாள் என்று தெரிந்து எப்படி நான்கு நபர்களால் அவள் கற்பழிக்கப்படுகிறாள்? அவர்களின் மனிதாபிமானம் எங்கே போனது? அதிலும் ஒருவன் கற்பழிப்பதற்கு ஆய்த்தமாகிற பொழுது, மற்றொருவன் பக்கத்திலிருந்து நாய் போல பார்த்து, ஒரு தடவ என்று அவளை முத்தமிட்டு செல்ல எப்படி முடிகிறது? படம் தான் என்று ஒதுக்கி தள்ளிவிட முடியவில்லை. இது போன்ற சம்பவங்கள் நடக்கவில்லையா என்ன?

இந்த வார ரிப்போர்ட்டரில் கூட இது போன்ற ஒரு சம்பவம் காவல் நிலையத்திலே நடந்திருந்ததாக செய்தி வந்திருந்தது. கற்பழிக்கப்பட்டவர் பதினைந்து வயது பெண்ணிற்கு தாய். நம்மில் மனிதாபிமானம் வற்றிக்கொண்டே போகிறதா? மனசாட்சி என்ற ஒன்று இல்லாமலே போகிறதா? மிருகங்கள் தானா நாம்? அதிலும் படத்தில் அந்த பெண் கதறுகிறாள்: என்ன விட்டுங்கடா. எனக்கு நாளைக்கு கல்யாணம்டா என்கிறாள். எவ்வளவு தைரியமான பெண் அவள். அவளுக்கு தான் வீரன்(கார்த்தி) மீது எவ்வளவு காதல்? சிறு வயதிலிருந்து அவனைக்காதலித்து. அப்பாவை, அம்மாவை வெட்டிப்போட்டு விட துணிந்து, தற்கொலைக்கு முயன்று, வீரனிடமும் அப்பாவிடமும் அடிவாங்கி வீரனின் மனதில் நுழைந்து அவனது காதலை பெற்று அது நிறைவேறும் போது கற்பழிக்கப்பட்டு இறப்பது எவ்வளவு கொடூரம்? வீரனிடம்: “உன் பாவம் எல்லத்தையும் அவைங்க என் கிட்ட இறக்கி வெச்சுட்டு போயிட்டாய்ங்கடா” என்று சொல்லும் போதும் “டேய் என்ன காணாப்பொணமா ஆக்கிடுடா” என்று கதறும் போதும் இந்த உலகத்தில் வாழ்வதற்கான அர்த்தங்கள் மிகவும் குறைந்து போய்விட்டதைப்போன்றே தோன்றுகிறது. மனிதர்கள் அனைவரும் நல்லவர்களாக வெளித்தோற்றத்திற்கு தோன்றலாம். ஆனால் இளவஞ்சி சொன்னதைப் போல ” மனிதர்களின் குணம் சூழ்நிலைகளுக்கு தகுந்தது போல மாறும்” என்பது உண்மை என்றே தோன்றுகிறது. மனிதனாக இருந்தவன் கண நேரத்தில் கொடுரமான மிருகம் ஆகிவிடுகிறான்.

அதனால் தான் சர்வசாதரணமாக படித்துக்கொண்டிருக்கும் பெண்களை பஸ்ஸ¤க்குள் வைத்து எறித்து விட துணிகிறோம். எவ்வளவு திமிர் இருந்தால் பஸ்ஸ¤க்குள் பெண்களை வைத்து எறித்திருப்பார்கள்? அவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கியதில் ஏதேனும் தவறு இருக்கிறதா என்ன? விகடனில் ஞானி சொல்லியிருக்கும் (ஆரசியல் சார்ந்த) கருத்துக்களை ஏற்றுக்கொள்ளவே முடியாது. சொல்லப்போனால் : விஜயகாந்த் சொன்னது போல அரபு நாட்டில் கொடுக்கப்படும் தண்டனைகள் போல கொடுக்கவேண்டும்.

பருத்தி வீரன் படத்தில் வந்த லாரி டிரைவர்கள் என் கைகளில் கிடைத்தால் நான் வேறு மாதிரியான தண்டனை வழங்குவேன் (எனக்கு அதிகாரம் இருக்கும் பட்சத்தில்). அவர்களைக் கொல்லக் கூடாது. நந்தாவில் கொடுப்பதைப் போன்ற தண்டனை அவர்களுக்கு கொடுக்கவேண்டும். வாழ்நாள் பூராவும் அவர்கள் தாங்கள் செய்த கொடுரத்தை நினைத்துப் பார்த்து கொண்டேயிருக்கட்டும். அவர்கள் திருந்துவதற்கு சான்ஸ் தரக்கூடாதா என்று புல்ஷிட் மனித உரிமை மண்ணாங்கட்டி பேசுபவர்களுக்கு: அது தான் கொடுத்திருக்கிறோமே. உயிரை விட்டு வைத்திருக்கிறோமே. அவர்கள் வாழட்டும். செத்துக்கொண்டே வாழட்டும்.

சாரு நிவேதிதா சொல்வது போல் இங்கு தான் பள்ளிக்குழந்தைகளை ரேப் செய்த ஆசிரியர்கள் transfer மட்டும் பெற்றுக்கொண்டு தப்பித்துக்கொள்ளலாம். அடுத்த பள்ளிக்கூடத்தில் குழந்தைகளே இல்லையா என்ன? கேட்டால் : ஜனநாயகம். மண்ணாங்கட்டி.

இங்கு பத்திரிக்கைகள் செய்யும் கொடுமையும் டூ மச். ரிப்போர்ட்டரில் விபச்சார புரோக்கர் பிரசாத்தின் detailed பேட்டி வந்திருந்தது. அவர் ஏதோ corporate CEO ரேஞ்சுக்கு தனது தொழில் நுணுக்கங்களை சொல்லிக்கொண்டிருந்தார். இவர்களும் துருவி துருவி “உங்களை புதிதாக தொடர்பு கொள்பவர்கள் எப்படி தொடர்புகொள்ளலாம்” என்று மிக முக்கியமான கேள்விகளை கேட்டிருந்தார்கள். அவர் படு கேஸ¤வலாக கூலாக பதில் சொல்லிக்கொண்டுருந்தார். “என்னிடம் வராத நடிகைகளே இல்லை” என்ற தலைப்பு வேறு. (நான் ரிப்போர்ட்டரை வாங்கவில்லை என்னுடன் வந்த நண்பர் தான் வாங்கினார். நான் பிரசாத்தின் பேட்டியை படிக்கவில்லை. என் நண்பர் படித்து விட்டு அதிர்ச்சிக்குள்ளாகி என்னிடம் காட்டினார்.) கண்ணி கழியாத பெண்கள் எப்பொழுதும் என் கைவசம் இருப்பார்கள். VIPகள் கேட்டவுடன் நான் அனுப்பிவைத்து விடுவேன் என்கிறார். இந்த கொடுமையை எங்கே போய் சொல்வது. இதை இவ்வளவு detailed ஆக பத்திரிக்கை வெளியிட வேண்டுமா என்ன?

இன்னொரு புறம் தாலி சாமியார் (அவர் பெண்கள் போல தாலி, வளையல்கள், மிஞ்சி என்று போட்டுக்கொண்டிருக்கிறார்), சாக்கடை சாமியார் என்று ஏகத்துக்கும் சாமியார்கள். எத்தனை சாமியார்கள் கைது செய்யப்பட்டாலும், மக்கள் மீண்டும் மீண்டும் ஏதோ ஒரு சாமியாரிடம் ஆசிர்வாதம் வாங்க காத்துக் கிடப்பதைப் பார்க்கும் போது கோபமே வருகிறது. பாவமாகவும் இருக்கிறது. மக்களை குறை சொல்லுவதா (கண்ணி கழியாத பெண்கள் கேட்கும் VIP. சாகப்பிழைக்க கிடக்கும் பெண்ணை நான்கு நபர்கள் சேர்ந்து ஒன்றன் பின் ஒருவராக ரேப் செய்வது. காக்கும் கடமையில் இருப்பவர்களே கற்பை சூரையாடுவது. பாவடை சாமியார் ஜட்டி சாமியார் என்று ஏதோ ஒரு சாமியாரிடம் ஆசி பெற காத்து ஏமாறுவது) அல்லது அரசியல் தலைவர்களை குறை சொல்லுவதா? முதலில் இவர்களுக்கு தலைவர்கள் தேவையா? உங்களையெல்லாம் தௌஸன்ட் பெரியார் வந்தாக்கூட திருத்த முடியாதுடா என்று சொல்வது தான் சரியோ?

மற்றபடி படம் மிக மிக அருமை. ஒவ்வொரு காட்சியும் அருமையாக கிராமத்தை அச்சு அசலாக நம்மிடையே கொண்டுவந்திருக்கிறார். ஏதோ ஒரு கிராமத்தில் வாழ்ந்தது போன்றே ஒரு எண்ணம். எவ்வளவு விசயங்களை இந்த தலைமுறை குழந்தைகள் இழக்கப்போகிறார்கள் என்று தெரியவில்லை. படத்தில் சிறுமி முத்தழகு சிறுவன் வீரனிடம் “டேய் டேய் நான் உங்கூட சீட்டிடா (பழம்)” என்று சொல்வது அழகாக இருக்கிறது. கண்டிப்பாக இந்த ஜெனரேசன் குழந்தைகள் என்னவென்று கேட்ப்பார்கள். அப்பத்தாக்களை விட்டு, அம்மாச்சிகளை விட்டு, அம்மாவை, அப்பாவை, சித்திகளை விட்டு, அண்னன்களை அக்காக்களை விட்டு நாம் எதைத் தேடிக்கொண்டிருக்கிறோம்? ஈமெயிலில் வந்த சாப்ட்வேர்மக்களைப் பற்றிய கவிதையின் ஒரு வரி ஞாபகம் வருகிறது : நம் ஒவ்வொருவரின் வீட்டு திண்ணையிலும் வாழப்படாமல் வாழ்க்கை மீந்து கிடக்கிறது.

ப்ரியாமணிக்கு தேசிய விருது கிடைக்கலாம். முத்தழகுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் மற்றும் கண்ணீர் துளிகள். நான் வேறு என்ன செய்ய முடியும்? ப்ளீஸ் அமீர் இது போல படங்கள் தொடர்ந்து எடுங்கள், ஆனால் க்ளைமாக்ஸ் இவ்வளவு சோகமாக வைக்காதீர்கள். எனது பணிவான வேண்டுகோள்.

28 thoughts on “பருத்தி வீரன்

  1. முத்து, விமரிசனம் ரொம்ப உணர்ச்சிபூர்வமா இருக்கு. உடம்ப பாத்துக்குங்க. முன்னாள் “யீசூன்வாசி”

    Like

  2. விமர்சனத்தில் சமுதாயதின் மீதான கோபம் அதிகமாக தெரிகிறது…. ரொம்ப பீல் பண்ணி பார்த்திருப்பீஙக போல..

    Like

  3. எவ்வளவு தூரம் இப்படம் உங்களைப் பாதித்திருக்கிறது என்பது பதிவின் மூலம் தெரிகிறது.அமீர் ஒரு பேட்டியில் சொன்னது போல, இதுவும் எங்காவது நிகழ்ந்துதான் இருக்கணும்.பெண்கள் விபாசாரத்திற்கு உடன்படுவது, தேவையாலா, இல்லை திணிக்கப்படுவதாலா?சமூகத்தின், அரசியல்வாதிகளின், நன்மனம் கொண்ட நல்லோரின் பதில் இதற்கு என்ன?

    Like

  4. விமர்சனம் படிச்சதுக்கே மனம் இவ்வளவு பதறுது..படத்த பார்க்கலாமா வேண்டாமானு யோசிக்க வேண்டி இருக்கு..சில வழக்கமான வலைத்தளங்கள்ல பட விமர்சனம் வந்தாலும் முடிவின் சோகம், தாக்கம் குறித்து யாரும் இவ்வளவு எழுத வில்லை..ம்ம்..பட விமர்சனத்தை விட நீங்கள் கோடிட்டுக் காட்டியிருக்கும் சமூகக் கேடுகள் கவலைக்குரியவை

    Like

  5. நல்ல விமர்சனம் முத்து. உங்கள் மீதான இந்த படத்தின் தாக்கமே பட இயக்குனருக்கு நிறைவானதொரு விஷயம்.

    Like

  6. மூக்கு சுந்தர்: நல்லா இருக்கேன் சுந்தர். McD போய் sausage muffin and cappucino (இப்போ புதுசா கொடுக்கறாங்க. நல்லாயிருக்கு!) சாப்பிட்டேன். நம்ப வருத்தம் எல்லாம் அவ்வளவு தான் :(. இப்பவும் யூசினில் தான் இருக்கீங்களா? நான் பொத்தோங் பசிரில் இருக்கிறேன்.அப்பாவி: ஆமா அப்பாவி. ரொம்ப feel பண்ணித்தான் பார்த்தேன். அது தான் தப்பு!sk: விபச்சாரம் தான் படத்தில் இந்தப் பெண் (முத்தழகு) கற்பழிக்கப்பட்டதற்கு காரணம். தேவையாலும் திணிக்கப்படுவதாலும் தான் பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபடுகின்றனர். இரண்டுமே இருக்கிறது. மனிதர்கள் நமக்கு கொஞ்சம் மனிதாபிமானம் தேவை.ரவிசங்கர்: வருகைக்கு நன்றி.மொந்தமூக்கி: 😦

    Like

  7. நிர்மல்: கண்டிப்பாக டைரக்டர் ஜெயித்துவிட்டார். அது நாங்கள் நான்கு பேரும் பேயரைந்தது போல் (மேலும் பல பெண்கள் படம் முடிந்து வெகு நேரம் ஆகியும் எழுந்திருக்காமல் இருக்கையிலே உட்கார்ந்திருந்ததைப் பார்க்க முடிந்தது) உட்கார்ந்திருந்ததே சாட்சி. அருமையான டைரக்சன். பாரதிராஜாவை விட அழகாக நவீன கிராமத்தை கொண்டுவந்திருக்கிறார். எவ்வளவு முன்னேறாத கிராமங்களாக இருந்தாலும் விஜயும் அஜித்தும் முதலில் போய்விடுகின்றனர். எங்க அக்காவை ஒரு குக்கிராமத்தில் கட்டிக்கொடுத்தோம். இப்ப அவங்க சிட்டிக்கு வந்திட்டாங்கன்றது வேற விசயம். அந்த கிராமத்துக்கு இரண்டு தடவ நான் போயிருக்கிறேன். வழியில் நிறைய மிகச்சிறிய குக்கிராமங்கள் இருக்கின்றன. எது இருக்கிறதோ இல்லையோ, அந்த கிராமங்களின் பஸ் ஸ்டாண்டில் ஏதாவது ஒரு நடிகரின் ரசிகர் மன்ற பேனர் இருக்கிறது. நம்மில் நடிகர்கள் நீக்கமற நிரைந்து விட்டனர். அவர்களது தாக்கங்களும் தான்.

    Like

  8. இப்படிப்பட்ட சமுதாய உணர்வைக் கேள்வி கேட்கும் பதிவுகளுக்கு அதிகம் பின்னூட்டம் வராதது நம் தரத்தைக் காட்டுகிறது!

    Like

  9. முத்து!!! கலங்கிவிட்டீர்கள். அதனால் எங்களையும் சேர்த்து கலங்கடித்துவிட்டீர்கள். படத்தை இன்றே பார்த்துவிடுகிறேன். யாராவது விமர்சனம் போட்ட பிறகு பார்க்கலாம் என்று நினைத்திருந்தேன்.

    Like

  10. முத்து, இப்போது யீசூனில் இல்லை. 1999-2000 ல் இருந்தேன். 857ல் தான் பணிக்கு செல்வது வழக்கம். முதலில் பொதாங் பாசிரில் மெய்யப்ப்செட்டியார் தெருவில் ( சிவன்கோவில் இருக்குமே) இருந்தேன். திருமணத்துக்குப் பின் ஈசூன். இப்போது சாக்ரமண்டோ/அமெரிக்கா(கடந்த ஆறு வருடங்களாக). சிங்கப்பூர் நினைவுகள் சுகமானவை. இந்தியாவை விட்டு வெளியே வந்ததும் பார்த்த/வசித்த முதல் வெளிநாடு. :-)உங்கள் பதிவுகள் யதார்த்தமாக இருக்கின்றன. தொடர்ந்து எழுதுங்கள்.

    Like

  11. படம் பார்க்கணும்னு ஆவலா இருக்கு!உங்க விமர்சனமும் அருமை. கொஞ்சம் அதிகமா பீல் பண்ணிட்டிங்கன்னு நினைக்கிறேன் ஒருவேளை படத்தை பார்க்காததால் சொல்றேனா என்னவோ தெரில.இங்க வீராசாமியவே ஒரு வாரம் ஓட்டுனானுங்க இந்த படத்தை எப்ப கொண்டு வரானுங்களோ தெரில.

    Like

  12. //லிட்டில் இன்டியாவிலிருந்து யூசூன் போவதற்கு 857 பஸ் எடுத்தால் கண்டிப்பாக முக்கால் மணி நேரம் ஆகும்//857 பஸ் எடுத்தால் கண்டிப்பா முக்கால் மணி நேரம் என்ன மூணு நாளே கூட ஆகலாம். ஒழுங்க ஒரு பஸ்ல போயிட்டு வரலாமல. :)))எங்கருந்துதான் வர்றானுங்களோ தெரியல சீரியஸ் பதிவிலயும் காமெடி பண்றதுக்கு அப்படிதான நினைக்கறிங்க.

    Like

  13. sk: உங்கள் பின்னூட்டத்தைப் பார்க்கும் போது ரொம்ப நாட்களுக்கு முன் வந்த ஒரு பதிவு ஞாபகம் வருகிறது: பின்னூட்டம் இல்லாவிட்டாலும் இன்னும் இருக்கிறது ஆகாயம்!! ஆனால் எனக்கு 10 பின்னூட்டங்களே அதிகம்!சுந்தர்: நன்றி சுந்தர்! நான் இப்பொழுது மெய்யப்ப செட்டியார் தெருவில் தான் இருக்கிறேன். :)தம்பி: ஆமா ரொம்ப அதிகம்னு நினைக்கிறேன். வீராசாமியைப் பற்றிய பதிவு கலக்கலோ கலக்கல்!தம்பி(2)(?!) : GOOD TIMING! ரசித்து சிரித்தேன்! வருகைக்கு நன்றி!

    Like

  14. உணர்ச்சிகரமான வி(மர்)சனம் ..நன்றாயிருந்தது. இந்த அளவு உலுக்கியிருந்தால் எவ்வளவு நல்ல படமாக இருக்க வேண்டும்!நன்றி

    Like

  15. கண்டிப்பா படம் பாக்க மாட்டேன். 15 ஆண்டுகள் முன்பாக மகாநதி படம் பார்த்த அதிர்ச்சியை இன்னொரு முறைஎதிர்கொள்ளத் தயாராயில்லை. :-(( முன்னறிவிப்புக்கு நன்றி

    Like

  16. ரொம்ப உணர்ச்சிவசப்பட வைத்துவிட்டதா இந்த படம். இது உண்மையில் நடந்த கதை. எனது நண்பர் பருத்திவீரனின் குடும்பத்தாரை சந்தித்திருக்கிறார். வீரனின் குடும்பத்தாருக்கும் அமீருக்கும் இடையில் இருந்த மனக்கசப்பினால்தான் படம் வெளிவர தாமதமானது. அற்புதமாக எழுதியிருக்கிறீர்கள், வாழ்த்துக்கள். என்னுடைய கருத்துக்களுக்கு இங்கே பார்க்கவும் http://naanengiranaan.blogspot.com/2007/02/blog-post_25.html, உங்களின் கருத்துக்களையும் சொல்லுங்கள்.

    Like

  17. மிக அருமையான பதிவு….படம் பார்க்கும் ஆர்வம் சூடேறிவிட்டது….நல்ல படைப்புகலை நிச்சயம் ஆதரிக்க வேண்டும்.

    Like

  18. தருமி: படம் மிக அருமை except climax. கண்டிப்பாக பார்க்கவும்.ஹரிஹரன்: கடைசி 10 நிமிடத்திற்காக இரண்டு மணி நேர நகைச்சுவையை இழக்காதீர்கள். படம் பாருங்கள். வேண்டுமானால் climax எழுந்து வந்து விடுங்கள்!ஜோ: பாத்தீங்களா ஜோ?

    Like

  19. நான்: உண்மையிலே நடந்ததா? விகடன் “உக்கிரமாக இருக்கவேண்டியது வக்கிரமாக மாறி விட்டது” என்று விமர்சனம் போடுகிறது. இருப்பதைத்தானே காட்டியிருக்கிறார் அமீர். இவர்களுக்கு ஏன் பொத்துக்கொண்டு வருகிறதோ தெரியவில்லை. ரைம்மிங்கா வரனும்ங்கறதுனால என்னத்தையாவது எழுதிட வேண்டியது கண்றாவி.Four D: கண்டிப்பாக. படத்தை தியேட்டரில் பார்த்து உங்களது ஆதரவைத் தெரிவியுங்கள்!

    Like

  20. நல்ல படத்திற்க்கான நல்ல விமர்சனம்.” வீரா நீயெல்லாம் என்னடா சண்டியர், பார்தியா உன் பாவத்தையெல்லாம் என் மேலே இரக்கி வெச்சுட்டாங்க பார்தியா”. கதாநாயகி கடைசியில் பேசும் வசனம்.சண்டியரா திரியுர எல்லோருக்கும் முடிவு ஒரு சம்மட்டி அடி. கார்த்திக் சிறப்பா பண்ணியிருந்தாலும் ப்ரியா மணி வியக்க வைத்தார், நூறு படம் வேண்டாம் இந்த ஒரு படம் போதும் ப்ரியா மணிக்கு. வாழ்த்துக்கள் அமீர் எல்லோரையும் சிறப்பாக பயன்படுத்தியிருகிறார்.முடிவு ஏற்படுத்தும் அதிர்வு நிச்சயம் தேவை, எனினும் இன்னும் பலமுறை பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தாலும் நிச்சயமாக கடைசி 20 நிமிடங்களை இனி ஒருமுறை பார்க்க மாட்டேன்.ஆனந்த விகடன் வக்கிரம் என்று குறிப்பிட்டிருக்கக்கூடாது. இயக்குனரின் மனநிலையை நேரடியாக கேட்டரியாமல் வக்கிரமாக சித்தரிப்பது கண்டனத்திற்க்குரியது. தினம் பத்திரிக்கையில் கற்பழிப்பு செய்திகளை சாதரணமாக கடந்து போகும் யாரும் இனி அந்த பெண்ணிற்க்காக வருத்தப்படமல் இருக்க முடியாது. வேட்டையாடு விளையாடு , குருதிப்புணல் போன்ற படங்களில் வரும் காட்சிகளைவிடவா?

    Like

  21. முத்து..விமர்சனம் நல்லா இருந்தது.. இன்னமும் நான் படம் பார்க்கவில்லை.. பார்த்த சில காட்சிகள் (சன்) படத்தின் தரத்தை காட்டியது. ஆயுள் தண்டனை என்பது நம்மூரில் 15 வருடங்கள் (+/-) தான். அதையும் இம்மாதிரி கற்பழிப்பு மற்றும் பாலியல் பலாத்காரம் செய்பவருக்கு,மேலை நாடுகள் மாதிரி 30 அல்லது 40 வருடங்களாக்கினால் தான் தகும். இல்லையென்றால், காந்தி/நேரு என தலைவர்கள் பேரை சொல்லி 2/3 வருடம் குறைத்து விட்டுடறாங்க.. இன்னும் 2/3 வருடம் போனால், பிரேமானந்தா வெளியே வந்து பழைய படி தரிசனம் தருவார்! என்னத்தை சொல்ல.

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s