காந்தம்


(தொடர்கதை)

4

காலையில் இருந்த பரபரப்பும் எதிர்பார்ப்பும் முற்றிலும் கிராமத்தை விட்டு விலகி, அங்கிருந்த மொட்டை மலையில் ஏறி உட்கார்ந்து கொண்டது. ஏதோ நடக்கப்போகிறது என்று ஆசையோடு காத்திருந்த குழந்தைகள், வழக்கம் போல ஏமாற்றத்துடன் வீட்டினுள் அமைதியாக உட்கார்ந்திருந்தனர். கிழவிகள் இன்னும் காளியம்மாவை அழைத்துக்கொண்டிருந்தனர். மேகங்கள் நிறைய தூரம் போயிருக்காது என்பது அவர்களுடைய எண்ணம். அழைத்து அழைத்து காளியம்மாவைக் காணாத கிழவிகள், அவளை நிந்திக்கத் தொடங்கினர். இந்த மழைக்காக எவ்வளவு வருடங்கள் காத்திருந்தாயிற்று? இன்னும் மழையை கடவுளாகத் தான் எண்ணிக்கொண்டிருக்க வேண்டுமா? அவர்களைப் பொருத்தவரை கப்பைக்கிழங்கு தான் கடவுள்.

வீட்டினுள் குமார், அத்தை ராக்கம்மா கொண்டுவந்திருந்த கொய்யா பழத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான். அவன் வாயில் முறுக்கு சில்லுசில்லாக உடைந்து கொண்டிருந்தது. அத்தையின் மேல் மிகுந்த பாசம் உண்டானது போல இருந்தது. செந்தில் தூங்கிப்போயிருந்தான். ராணி அவள் வைத்திருந்த எப்பொழுதோ வாங்கின உடைந்த மர பொம்மையை வைத்து ஏதோ அவளுக்கு மட்டும் புரிகிற மொழியில் பொம்மையை கொஞ்சிக்கொண்டிருந்தாள். ராக்கம்மா அடுப்பில் கொதித்துக்கொண்டிருந்த சோற்றில் ஒரு சில பருக்கைகளை எடுத்து வெந்திருக்கிறதா என்று சோதித்துப் பார்த்தாள். இன்னும் கொஞ்ச நேரம் பிடிக்கவேண்டும். பக்கத்தில் ஒரு காலை நீட்டி மறு காலை மடக்கி புளி கரைத்துக் கொண்டிருந்தாள் செல்லம்மா. செல்லம்மாவின் முகத்தில் சோகமும் பயமும் அப்பிக்கிடந்தன. மிகவும் சோர்வாக இருந்தாள். எனினும் ராக்கம்மாவின் வருகை கொஞ்சம் ஆறுதல் அளிக்கவே செய்தது. மாணிக்கம் இன்னும் வீட்டிற்கு வந்திருக்கவில்லை.

வெளியே அடித்துக்கொண்டிருந்த காற்றின் ஓசை குடிசையின் சிறிய துவாரங்களின் ஊடாக புகுந்து மிகுந்த இரைச்சலைக் குடுத்துக்கொண்டிருந்தது. “ஏன் இப்படி பேய்க்காத்தா அடிக்குது?” என்றாள் ராக்கம்மா சலித்துக்கொண்டே. நறுக்கி வைத்திருந்த வெண்டைக்காயை எடுத்து கொதித்துக் கொண்டிருந்த நீரில் போட்டாள்.கையில் தெரித்து விழுந்த ஒரு சில துளிகளை சேலை தலைப்பில் துடைத்துக்கொண்டாள்.ஏதும் பேசாமல் இருந்த செல்லம்மா ,”ராக்கு, பயமா இருக்குடி” என்றாள்.

ராக்கம்மா தனது அண்ணியின் மீது மிகுந்த பாசமும் மரியாதையும் வைத்திருப்பவள். அவளைப் போல தைரியசாலியை அவள் பார்த்ததில்லை. மிகுந்த சிரமப்பட்ட நேரத்தில் கூட அவளுடைய தைரியம் எல்லோருக்கும் தெம்பைக்கொடுக்கும். ராக்கம்மாவின் திருமணத்திற்கு செல்லம்மா எடுத்துக்கொண்ட சிரத்தைகள் ரொம்ப பெரியவை. வேறு குடும்பத்திலிருந்து வந்திருந்தாலும் ஒரு தாயைப் போல இருந்து ராக்கம்மா விரும்பிய -ஏன அதற்கு மேலானதொரு- வாழ்க்கையை அமைத்துக் கொடுத்திருந்தாள். திருமணம் செய்து வந்த நாளிலிருந்து ராக்கம்மா மணமுடித்து செல்லும் வரை இருவரும் நெருங்கிய தோழிகள் போலவே இருந்தனர். இன்றளவும் அந்த நட்பு சிறு கீரல் கூட விழாமல் அப்படியே இருக்கிறது.

செல்லம்மாவின் பயத்தை அறிந்தவளாக ராக்கம்மா: “ஒன்னும் பயப்படாதீங்க அண்ணி. அண்ணனுக்கு ஒன்னும் ஆகாது. அவர் ஜம்முன்னு நாளைக்கு காலையில சாப்பிட ஏதாவது குடுடி பசிக்குதுன்னு வந்து நிப்பாரு பாருங்க” என்றாள். செல்லம்மா சிரித்துக்கொண்டாள். “ஏண்ணி விரக்தியா சிரிக்கிறீங்க. எல்லாம் நல்லபடியா நடக்கும். முருகன் இருக்கான். பாத்துப்பான்” என்றாள்.

அடுப்பின் மிக மங்கிய வெளிச்சத்திலும், முருகனின் சிரிப்பில் தெரிந்த சாந்தம், அவர்களை கவ்விக்கொள்வதாக இருந்தது.

***

ந்த நிமிடமும் திரிவிளக்கு அனைந்து விடலாம் என்று தோன்றியது. மெல்லிய காற்றில் அது இங்கேயும் அங்கேயும் என்ன செய்வதென்று தெரியாமல் ஆடிக்கொண்டிருந்தது. சில சமயம் இதோ மங்கிவிட்டேன் அணையப்போகிறேன் என்று சொல்வது போல கூனி குறுகும். அடுத்த நொடியிலே என்னை யாரும் ஒன்றும் செய்துவிட முடியாது என்பது போல ஒரே சீராய் நேர் கோட்டில் கம்பீரமாக நின்று ஒளிவிடும். விதியின் கைகளில் சிக்கிய மனிதர்களைப் போல, அடுத்த நொடியின் தீவிரத்தையும் திருப்பத்தையும் அறியாமல் அது இருந்தது.

“ராக்கு” “ராக்கு” என்று, தூங்கிவிடும் குழந்தைகளை எழுப்பிவிடாமல், மிக அமைதியாக ராக்குவை எழுப்ப முயற்சித்துக்கொண்டிருந்தாள் செல்லம்மா. அயர்ந்த தூக்கத்திலிருந்த ராக்கு இரண்டு மூன்று முறை அழைத்தபிறகு, வாரி சுருட்டிக்கொண்டு எழுந்தாள். “என்ன அண்ணி தூங்கலையா?” என்றாள் தூக்கம் கலையாத கண்களை இடுக்கிக்கொண்டு. “இல்லடி. வலிக்குதுடி” என்றாள் செல்லம்மா. “கொஞ்சம் தண்னி கொடுடி” என்றாள். ராக்கு சட்டென்று எழுந்து ஓட்டமாக நடந்து, பானையை இருட்டில் தேடி அடிமட்டத்தில் கிடந்த தண்ணீரை எடுத்துக்கொண்டு வந்து கொடுத்து விட்டு, என்ன செய்வதென்று தெரியாமல், அருகிலிருந்த மரக்கட்டையில் சாய்ந்து பயமாய் அண்ணியைப் பார்த்துக்கொண்டிருந்தாள். “அண்ணி, நான் தெக்குவீட்டு கிழவிய போய் கூட்டிட்டு வரவா?” என்றாள் ராக்கு.

செல்லம்மா, “ம்..ம்..வேகமா போடி. அப்படியே செந்திலையும், குமாரையும் தூக்கிட்டு போய் கவிஅக்கா வீட்ல படுக்கபோட்டுடி” “ராணி?” “ராணி முழிச்சா அழுவா. இங்கேயே இருக்கட்டும்” என்றாள் செல்லம்மா.

ராக்கு குமாரை எழுப்பி கையைப்பிடித்துக்கொண்டு, செந்திலை தோளில் போட்டுக்கொண்டு கதவுக்கொண்டியை விடுவித்துக்கொண்டு மெதுவாக வெளியே வந்தாள். குளிர்ந்த காற்று அவள் முகத்தை தாக்கியது. சில்லிட்டவள் வானத்தைப் பார்த்தாள். மிகுந்த நிசப்தத்துடன் நட்சத்திரங்கள் ஏதுமின்றி கரிய போர்வையை போர்த்தியது போல மர்மமாய் அவளைப் பார்த்தது வானம்.

தூரத்தில் நாய் குளிரில் முனகும் ஓசை கேட்டது. எதிர் குடிசையில், கிழவி கொட்ட கொட்ட விழித்துக்கொண்டு இவர்கள் வீட்டையே பார்த்துக்கொண்டு குத்தவைத்து உட்கார்ந்திருந்தாள். அவளுடைய விழிகள் இமைக்காமல் இருந்தன.

ராக்கு வேகவேகமாக நடந்தாள். அரை தூக்கத்தில் குமார் “அத்தை எங்க போறோம்?” என்றான். கல் தடுக்கி கீழே விழுந்தான். பின் எழுந்து கொண்டு ஒன்றும் பேசாமல் நடந்தான்.

***

மின்னல் அங்கொன்றும் இங்கொன்றுமாக கிராமத்தை ரசித்து ரசித்து படம் பிடித்துக்கொண்டிருந்தது. அவ்வப்போது இடி ஓசையும் மிகச் சன்னமாக கேட்டது. குளிர்ந்த காற்று மிக மெதுவாய் வீசிக்கொண்டிருந்தது. எதிர்வீட்டு கிழவி வானத்தையும் செல்லம்மாவின் வீட்டையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தாள். அவளது மகன் கூரையை ஒரு கையில் பிடித்தவாறு நின்று பீடிப் புகையை விட்டுக்கொண்டிருந்தான். அவனது மனைவி செல்லம்மாவின் வீட்டு திண்ணையில் உட்கார்ந்திருந்தாள். மேலும் சில பெண்களும் இருந்தனர். அவர்கள் எதற்காகவோ இறைவனை வேண்டிக்கொண்டிருந்தனர்.

தெக்கு வீட்டு கிழவி செல்லம்மாவின் பாதங்களை தேய்த்துவிட்டுக்கொண்டிருந்தாள். ராக்கு செல்லம்மாவின் கைகளை நீவிவிட்டுக்கொண்டிருந்தாள். செல்லம்மா ராக்குவையே பார்த்துக்கொண்டிருந்தாள். செல்லம்மா அனுபவிக்கும் வலி அவளது கண்களின் வழியாக ராக்குவை அடைந்தது. ராக்குவின் வாய் ஏதோ முனுமுனுத்துக் கொண்டிருந்தது. “கட்டு கட்டு கதறிடக்கட்டு” என்ற வரிகள் தெக்கு வீட்டு கிழவிக்கு கேட்டது. ராணி அங்கிருந்த ஏதோ ஒரு பெண்ணின் மடியில் தூங்கிக்கொண்டிருந்தாள். அவள் இதை ஏதும் அறிந்திருக்கவில்லை.

ஒரு சில வீடுகள் முழித்துக்கொண்டன. மின்னலையும் இடியையும், குடிசைகளை விட்டு வெளியேறி, ஆர்வமாய் பார்த்தனர். வெகு சிலர் காளியம்மன் கோவிலை நோக்கி கை உயர்த்திகும்பிட்டனர். வெகு சிலர் குத்துக்காலிட்டு அவரவர் வாசல் படியிலே உட்கார்ந்து கொண்டனர். இப்பொழுது காற்று சுத்தமாக நின்றுவிட்டிருந்தது. எங்கும் நிசப்தம்.

செல்லம்மாவின் எதிர்வீட்டு வாசலில் மவுனமாக வெறித்துக்கொண்டிருந்த கிழவியின் கோடுகள் நிறைந்த முகம் சற்றே விரிந்தது. கோடுகள் பெரிதானது போல இருந்தது. அவளது உளர்ந்த விரிந்த உதடுகள் லேசாக புண்முறுவல் பூத்தன. பின் சத்தமாக சிரிக்க ஆரம்பித்தாள். புகைப்பதை நிறுத்தி விட்டு, அவளது மகன், அவளை விசித்திரமாக சற்றே பயத்துடன் பார்த்தான். சில்லென்ற மழைத்துளி ஒன்று அவனது புறங்கையில் விழுந்தது. அவன் சிலிர்த்து வானத்தைப் பார்த்தான். மேலும் சில மழைத்துளிகள் அவனது நெற்றியில் இறங்கின.

செல்லம்மாவின் வீட்டினுள் மிகுந்த சத்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து ஒரு குழந்தையின் அழுகுரல் அந்த தெருவெங்கும் ஒலித்தது. கிழவி மிகுந்த சந்தோஷத்துடன் குதித்துக்கொண்டே “ராசா” என்று கதறிக்கொண்டே செல்லம்மாவின் வீட்டுக்குள் நுழைந்தாள். மண்ணின் ஈர வாசனை அவர்களது நாசிகள் எங்கும் நிறைந்திருந்தது.

***

ழை நின்றபாடில்லை. இடியும் மின்னலுமாக மழை மொத்தமாக சேர்த்து வைத்து அடித்தது. ஆழ்ந்த ஓசையுடன் காற்று விடாமல் அடித்துக்கொண்டேயிருந்தது. எப்பொழுது கூரை பிய்த்துக்கொள்ளும் என்று பயங்கொள்ளும் அளவுக்கு கூரை சத்தமிட்டுக்கொண்டிருந்தது. கூரையில் இருந்த சில ஓட்டைகள் வழியாக மழை நீர் வழிந்து கொண்டிருந்தது. குமார் பேயரைந்தது போல ஒரு மூலையில் குத்துக்காலிட்டு அமர்ந்திருந்தான். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. மழையும். புயலும். மின்னலும். இடியும்.

அவ்வப்போது சில துளிகள் செல்லம்மாவின் வலது கண்ணத்தில் தெரித்தது. செல்லம்மா தனது குழந்தையை வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள். ராக்கு கீழே படுத்து காற்றின் இரைச்சலை கவனிப்பது போல கிடக்கும் தனது புது மருமகனின் தலையை கோதிக்கொண்டிருந்தாள். பழைய சேலையில் சுற்றப்பட்டிருந்தவனை அள்ளி எடுத்தாள். “என் ராசா” என்று அழுத்தமாக அவனது பிஞ்சுக் கண்ணத்தில் முத்தம் பதித்தாள். “அண்ணி நான் இவனுக்கு முன்னவே பேர் வெச்சுட்டேன்.” “என்ன பேருடி வெச்சுருக்க உன் ஆச மருமவனுக்கு” “ம்ம்..ஆச மருமவன் தான்..தெக்குவீட்டு கெழவிய கூப்பிட்டு வரும்போதே காளியம்மாவ கும்பிட்டுதான் வந்தேன். மருமக பொறந்தா காளியம்மான்னு வெக்கிறேன். மருமகன் பொறந்தா காளின்னு வெக்கிறேன்னு. அதனால இவன் பேரு காளி. கா…ளி..” என்றாள். குமாரும் சேர்ந்து கொண்டு “கா…..ளி…” என்றான்.

காளி கருப்பாக, ஒடிசலாக இருந்தான். ஆனால் அவன் முழித்து வீரிட்டு அழுகும் போது அவனது கண்கள் பளபளப்பாக கூர்மையாக இருந்தது. அழுகையால் கூட கண்களில் பளபளப்பு வந்திருக்கலாம்.

***

ழை வலுத்துக்கொண்டே போனது. குளிர் அதிகரித்தது. வீட்டில் யாவரும் உறங்கியிருந்தனர். ராக்கம்மாவும் தான். மருமகனைக் கொஞ்சி கொஞ்சி அலுத்துப் போயிருந்தாள். குமார் வெறும் தரையில் படுத்திருந்தான். ராணி நன்றாக ஆழ்ந்த உறக்கத்திலிருந்தாள். செல்லம்மாவின் உடல் சில்லிட்டிருந்தது. கைவிரல்கள் மிகவும் குளிராயிருந்தது. அவளுக்கு உடலெங்கும் நடுக்கமெடுப்பதைப் போன்று இருந்தது. கால்கள் இழுத்துக்கொண்டன. அவள் மிகுந்த பயத்துடன் கூரையிலிருந்து வழியும் மழைத்துளிகளை வெறித்த வண்ணம் இருந்தாள்.ராக்குவை அழைக்க நினைத்தாள். வார்த்தை தொண்டையிலே நின்று கொண்டது. ராக்கு ஆழ்ந்த உறக்கத்திலிருந்தாள்.

திடீரென்று, செல்லம்மாவின் கைகள் ஒரே சீராக இழுத்துக்கொள்ள ஆரம்பித்தன.

***

(தொடரும்)

முந்தைய பகுதிகள்:

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s