ஆயிரம்கால் இலக்கியம் – 7

சாரு நிவேதிதாவை எனக்கு பிடிக்கவே செய்கிறது. தொடர்ந்து அவர் மதுவைப் பற்றியும், பெண்களைப் பற்றியும், தனது சொந்த கதைகளைப் பற்றியும் எழுதிக்கொண்டிருந்தாலும், எனக்கு பிடிக்கவே செய்கிறது. எனக்கு பிடிக்காவிட்டால் தான் என்ன? சாருவுக்கு என்ன நேர்ந்து விடப் போகிறது? அவர் தொடர்ந்து எழுதிக்கொண்டே தான் இருக்கப்போகிறார். அவருக்கான வாசகர் வட்டம் -mostly NRIs என்று நினைக்கிறேன்!- வளர்ந்து கொண்டே தான் இருக்கிறது. எனக்கு பிடிக்காமல் பிடிக்கிறது! ரசிக்காமல் ரசிக்கிறேன். பல இடங்களில் சிரிக்காமல் சிரிக்கிறேன். ஏன் என்று யோசித்தால், அவரது எழுத்து தான் என்று தோன்றுகிறது. ஒரு நெருங்கிய நண்பனிடம் உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பதைப் போன்ற உணர்வு. பாசாங்கோ வேஷமோ இல்லாமல், இதைத் தான் சொல்லவேண்டும், இதைச் சொல்லக்கூடாது என்ற ஏற்கனவே எழுதி தயாரித்து வைத்துக்கொண்டு பேசுவதைப்போல அல்லாமல், யதார்த்தமாக பேசுவதனால் கூட இருக்கலாம். மேலும் நாம் அறிந்திடாத பல புதிய விசயங்களை கட்டுரைகள் தோறும் தெளித்துவிட்டிருப்பதால் கூட இருக்கலாம். knowledge is wealth இல்லியா?

மந்தையிலிருந்து வேறுபடுபவர்களுடைய கனவுகள் தான் சமுதாயத்தை மாற்ற முடியும். மேன்மையடையச் செய்ய முடியும்.
-ஆதவன் [காகித மலர்கள்]

கோணல் பக்கங்களிலே இடம் பெற்ற கவிதை இது:

தெறித்து விழுந்த ஒரு கணல் துண்டாய்
தோப்பை விட்டு
விலத்தி நிற்கும் ஒற்றைக் கரும்பனையாய்
குழு தவிர்த்து
தனித்தே அலையும் ஒரு கரும்புலியாய்
ஒரு உதிரித் தமிழனாய்
நான் மட்டுமேனும்
உமது தலைமையை
மறுத்து நிற்பேன்

– சக்கரவர்த்தி

அவர் மதுவைப் பற்றி அதிகமாக பேசுகிறார் என்ற குற்றச்சாட்டுக்கு அவரே பதில் சொல்லியிருந்தார், அது:
எவ்வளவு எழுத்தாளர்களையும் எவ்வளவு சினிமாக்களையும், எவ்வளவு பத்திரிக்கைகளையும், எவ்வளவு இசைக்கலைஞர்களையும் அறிமுகப்படுத்தியிருக்கிறேன், அவர்களையெல்லாம் படித்தீர்களா, கேட்டீர்களா? பின் இதை மட்டும் ஏன் பெரிதாக சொல்கிறீகள்? அவற்றைப் போலவே இதையும் மறந்துவிட்ங்கள்!

[கருத்து(?!) மட்டுமே சொல்லியிருக்கிறேன்.original words மறந்துவிட்டது. புத்தகத்தை நூலகத்தில் return செய்து விட்டேன்!]

மிகச்சரி! உண்மை.
நான் அவரது கட்டுரைகளை revisit செய்ததில், இதையெல்லாம் வாய்ப்பு கிடைத்தால் படிக்கவேண்டும் என்றோ, கேட்கவேண்டும் என்றோ குறித்து வைத்துக்கொண்டேன். அவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

1. Status Quo எழுத்துக்களைப் பற்றி.
Antonio Gramsci என்ற மார்க்ஸிஸ்டைப் பற்றி.

2. Joseph Heller எழுதிய Catch 22 என்ற நாவல். Catch-22 என்றால் என்ன என்று தேடிய பொழுது, ஒரு மனிதன் இரண்டு செயல்களைச் செய்யவேண்டும். ஆனால் இரண்டும் ஒன்று ஒன்று தொடர்புடையவை. ஒன்றையொன்று சார்ந்திருப்பவை. ஒரு செயல் செய்யாமல் மற்றொரு செயலைச் செய்ய முடியாது. dead lock. அதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக விக்கிபீடியாவில் இதைப் பார்க்க நேர்ந்தது: படித்து முடித்து விட்டு வேலை தேடுவது. வேலையில் சேர்வதற்கு அனுபவம் தேவை. வேலையில் அனுபவம் பெருவதற்கு வேலை தேவை. கிட்டத்தட்ட முட்டையிலிருந்து கோழியா. கோழியிலிருந்து முட்டையா என்பதைப் போல! நாவல் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை, ஆனால் concept நன்றாக இருக்கிறது.

3.Memories Of Underdevelopment என்ற படம்.

4. அழகிய பெரியவன் என்ற எழுத்தாளர். இணையத்தில் தேடியவரைக்கும் இவரது நான்கு புத்தகங்களைப் பற்றிய அறிமுகம் எனக்கு கிடைத்தது.
அ. அழகிய பெரியவன் கதைகள்
ஆ. தகப்பன் கொடி
இ. தீட்டு
ஈ. நெரிக்கட்டு
இதில் எந்த புத்தகமும் நான் படித்ததில்லை. சாரு கொடுத்த அறிமுகமே எனக்கு முதல் அறிமுகம்.

5. Art Foundation Of Michigan வெளியிடும் sulphur என்ற magazine. link கிடைக்கவில்லை.

6. Pier Paolo Pasolini என்ற இத்தாலிய இயக்குனர்.

7. Julio Cortazar எழுதிய Hopscotch என்ற நாவல். Hopscotch என்பது சிறுவர்கள் விளையாடும் விளையாட்டு [வேறு வேறு படங்கள் வரைந்து, வேறு வேறு விதிமுறைகளில்] என்று பின்னர் தெரிந்து கொண்டேன். Base நம்முடைய சில்லாக்கைப் போலத்தான். சில்லாக்கைத் தூக்கிப் போட்டு நொண்டியடிப்போமே ஞாபகம் இருக்கா?

8. Donald Barthelme எழுதிய
the dead father என்ற நாவல்.

***

தீராநதியில் வெளிவந்த பூமா ஈஸ்வரமூர்த்தியின் கவிதை (ஆச்சரியமாக, உரைநடை வடிவில் இருந்தது. எப்பொழுதும் புதுக்கவிதை மரபாகிவிட்ட ஒன்றன் கீழ் ஒன்றாக எழுதும் முறை தூக்கியெறியப்படுவதற்கான முதல் முயற்சியோ? இருக்கலாம். அட்லீஸ்ட் பேப்பராவது மிச்சப்படும் இல்லையா?) ஒன்று வெளிவந்திருந்தது, எனக்கு பிடித்த சில:

சூர்யன் தோன்றுகிறது. பிறிதொரு நேரத்தில் நிலாவும் நட்சத்திரங்களும் தோன்றுகிறது. அன்பும் பிரியமும் தோன்றுகிறது. வெறுப்பும் கசப்பும் தோன்றுகின்றன. மழை தோன்றுகிறது. கண்ணுக்கு தெரியா காற்றும் தோன்றுகிறது. பிறப்பும் சொல்லிவைத்தார் போல சாவும் தோன்றுகிறது. வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் கரைந்துபோதல் தோன்றுகிறது.

தோன்றுகிறது. தோன்றுவது மட்டுமே தோன்றுகிறது

(?!) 😦 😦

நீ இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறாய். நானும் நாமும் இப்போது ஒரு சைக்கிளில் பயணம் செய்து கொண்டிருக்கிறோம். நீ இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறாய். நானும் நாமும் இப்போது ஒரு பூவைப் பறித்துக்கொண்டிருக்கிறோம். நீ இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறாய். நானும் நாமும் இப்போது சாவை நோக்கி மேலும் ஒரு அடி எடுத்து வைக்கிறோம்.

எப்போது கொஞ்சம் புரிந்து நிறைய புரியாமல் இருக்குமே, அது போல ஒன்று:

வெறுப்பின் வீர்யமிக்க விதைதேடி, வீர்யமிக்க நிலம் தேடி, விதைத்தாயிற்று. கண் இமைக்கும் நேரத்தில் நிலம் கீறி வெளிவந்த நதி கிளைகளுடனும் பேரிரைச்சலுடன் ஓடத்துவங்கியது.

நிரந்தரமான படகில் நிரந்தரமான நாற்காலியில் அமர்ந்திருக்கிறேன். சடலங்கள் மிதந்து வந்து கொண்டேயிருக்க நதி செல்லும் வழியெல்லாம் சரிதம் ஆகிறது.

இந்த கவிதைகள் என்றைக்குத் தான் எனக்கு முழுதாக விளங்கப்போகிறதோ தெரியவில்லை. ஒரு வகையில் முழுதும் விளங்காமல் இருப்பது தான் அழகு இல்லையா?

***

சோகமித்திரனின் நேர்காணல் ஒன்றில் நான் நிர்மலுக்கு கேட்ட கேள்வியின் சாராம்சம் கொண்ட ஒரு கேள்வியை நிருபர் கேட்டிருந்தார், அதற்கு அசோகமித்திரனின் பதில்:

தீராநதி: புது எழுத்து என்ற உத்வேகத்தோடு நிறைய பிரதிகள் எழுதப்படுகின்றன. தமிழுக்குப் புதிய வளம் சேர்க்கும் கோட்பாடுகளில் பரிசோதனைகள் செய்கிறார்கள். பிரேம்-ரமேஷ், எம்.ஜி.சுரேஷ், சுரேஷ்குமார், இந்திரஜித், சாருநிவேதிதா..இவ்வாறு நிறைய. இதையெல்லாம் படிக்கிறீர்களா? சாருநிவேதிதாவுக்கு வழங்கிய முன்னுரையில் கூட தனக்கு உவப்பாகாத எழுத்து என்பது மாதிரி எழுதி இருந்தீர்கள்?

(தீராநதி குறிப்பிட்ட எழுத்தாளர்களில் பிரேம்-ரமேஷ் மற்றும் சாருநிவேதிதாவின் எழுத்துகளை மட்டுமே நான் படித்திருக்கிறேன். அதில் பிரேம்-ரமேஷ் அவர்களின் ஒரு கதையை இதே தீராநதியில் படிக்க நேர்ந்தது. ஹோமோ செக்ஷ¤வல்ஸ் பற்றிய கதை அது. மிக வெளிப்படையாக எழுதியிருந்தார்கள் பிரேம்-ரமேஷ். எனக்கு டோட்டல் ஷாக். இதைப்பற்றி “யாத்ரா” ரவீந்தரன் அவர்களிடம் விவாதித்த பொழுது அவருடைய வாதம் வேறு மாதிரி இருந்தது. பிடிக்கவில்லையென்றால் படிக்காதே. குமுதம் படி. உனக்கு ஏற்றார் போல இருக்கும் என்றார். சாருவைப்பற்றி நான் சொல்லத்தேவையில்லை. அவருடைய “நேநோ” வை படிக்க வைத்திருக்கிறேன். என்ன ஷாக் இருக்கிறதோ தெரியவில்லை!)

அசோகமித்திரன்: ஒரு ஷாக் கொடுக்கறதுக்காக இப்படியெல்லாம் எழுதறாங்ளோன்னு தோணும். ரியாலிட்டியில இல்லையான்னு கேட்கலாம். தமிழ் பழைய இலக்கியத்திலும் இருக்கு. சிலப்பதிகாரத்தை எடுத்துகிட்டா அதுவும் இந்த மாதிரியான உறவைப் பத்தினதுதான். என்ன ஒரு மென்மையோட சொல்லப்பட்டிருக்குன்னு பார்க்கனும். மேன்மை இல்லாதபடி இதுக்காகதான்னு நாம் எழுதறது இருக்கே, அதுல எனக்கு பெரிய உவப்பு இல்லை. இந்த கோட்பாடெல்லாம் விமர்சனத்துக்குச் சொல்லக்கூடியதா இருக்கலாம். ஆனா படைப்புக்குத் தேவையில்லைன்னு நினைக்கிறேன். நான் நினைக்கிறேன். அவ்வளவுதான். அவங்க வேறு மாதிரி சொல்லலாம். அதுல தப்பு கிடையாது. இப்ப நோபல் பரிசு வாங்கி இருக்கிறாரே பாமுக். அவரு பாக்கறச்சே எதிர்ப்புகளைக் காண்பிக்கிற மாதிரிதான் எழுதி இருக்கிறாரே ஒழிய..இந்த மாதிரியெல்லாம் எழுதல. “டாக்டர் ஷிவாக்கோ”ன்னு ஒரு ரைட்டர். சோவியத் புரட்சி பற்றி ஒரு நாவல் எழுதினார். அதுக்கு நோபல் பரிசு கொடுத்தா வாங்கிக்க கூடாதுன்னு சோவியத் அரசே சொல்லிடுச்சு. அவரும் நான் வாங்கமாட்டேன்னு சொல்லிட்டார். அவருக்கு உள்ளுக்குள என்ன பயம்னா அவரை நாடு கடத்திட போறாங்கன்னு பயம். ஆனால் நாவல் மிகவும் சிறந்தது.

Boris Leonidovich Pasternak http://en.wikipedia.org/wiki/Boris_Pasternak எழுதிய
Doctor Zhivago என்ற நாவல் பற்றி எனக்குத் தெரியும். Amitav Gosh எழுதிய The Glass Palace புத்தகத்தில் ஒரு blurb: “A Dr zhivago for middle east” ஐ படித்துவிட்டு Dr zhivago ஐ இணையத்தில் தேடிக் கண்டுபிடித்தேன். ஆனால் Dr zhivago ஒரு ரைட்டரா? மேலும் pasternak க்குதான் நோபல் பரிசு வழங்கப்பட்டது அவர் தான் வாங்கிக்கொள்வதற்கு மறுத்தார்.

***

சோகமித்திரனின் “அழிவற்றது” சிறுகதைத் தொகுதியில் படித்த சிறுகதை ஒன்று. கர்ணபரம்பரைக் கதை என்று இதை வகைப்படுத்தியிருந்தார். கதையின் பெயர் : தலையெழுத்து.

ஒரு குரு இருக்கிறார். அவருக்கு ஒரு சிஷயர் இருக்கிறார். குருவும் அவரது மனைவியும், சிஷ்யரும் நகரத்துக்கு வெளியே குடில் அமைத்து வாழ்ந்து வருகின்றனர். குருவின் மனைவிக்கு குழந்தை பிறக்கப்போகிறது. சிஷ்யன் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருக்கிறான். அப்பொழுது யாரோ ஒரு வயதானவர் வீட்டிற்குள் செல்ல முயற்சித்துக்கொண்டிருப்பதைப் பார்க்கிறான் சிஷ்யன். ஓடிச்சென்று அவரது கைகளைப் பிடிக்கிறான். “நீங்கள் யார். குழந்தை பிறக்கும் இந்த நேரத்தில் உள்ளே செல்கிறீர்கள்? உங்களுக்கு என்ன வேண்டும்” என்கிறான். கிழவர் பயத்தால் உரைகிறார். “நான் தான் பிரம்மா. நான் யார் கண்ணுக்கும் தெரிவதில்லை. எப்படி உன் கண்ணுக்கு தெரிந்தேன் என்று வியப்பாக இருக்கிறது” என்கிறார். சிஷ்யன் அதிரிந்து”இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்” என்று கேட்க “நான் பிறந்து விட்ட இந்த குழந்தையின் தலையெழுத்தை எழுத வந்திருக்கிறேன்” என்கிறார் பிரம்மா. சிஷ்யன் “என்ன எழுதப் போகிறீகள். என்னிடம் சொல்லுங்கள்”என்கிறான். முதலில் மறுத்த பிரம்மா பிறகு சிஷ்யனிடம் யாரிடமும் சொல்லக்கூடாது என்று சத்தியம் வாங்கிக்கொண்டு “இவ்வளவு உயர்ந்த குருவுக்குப் பிறந்த இந்தப் பெண் விபச்சாரியாக வரப்போகிறாள்” என்கிறார்.

சில வருடங்கள் செல்கிறது. மறுபடியும் குருவின் மனைவிக்கு குழந்தை பிறக்கப்போகிறது. சிஷ்யன் பிரம்மாவின் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கிறான். குழந்தை பிறந்து அழும் சத்தம் கேட்டவுடன் பிரம்மா அங்கு வருகிறார். இந்த முறை “குருவுக்கு பிறந்திருக்கும் இந்த மகன் ஒரு திருடனாக வருவான்” என்கிறார்.

உயர்ந்த இடத்தில் இருக்கும் குருவுக்கு பிறந்த இரு குழந்தைகளும் திருடனாகவும் விபச்சாரியாகவும் உருவாகப்போகின்றன என்பதை சிஷ்யன் நம்பியிருக்கவில்லை. ஏதோ பிரம்மா கப்சா விட்டிருக்கிறார் என்று நினைத்துக்கொள்கிறார். வருடங்கள் உருண்டோடுகின்றன. சிஷ்யரும் தனது பாடத்தை முடித்துக்கொண்டு குருவிடம் விடைபெற்றுச் சென்று விடுகிறார்.

சிஷ்யரும் குருவாகிவிடுகிறார். நீண்ட நாட்களுக்குப் பின்னர் தனது குருவை சந்திக்க அவரது குடிசைக்கு செல்கிறார். அங்கு யாரும் இல்லை. எப்போதோ வந்த வெள்ளத்தில் குடிசை அடித்துச் செல்லப்பட்டுவிட்டது என்றும், குருவும் குழந்தைகளையும் அதற்கு பிறகு காணவில்லை என்றும் அங்கிருக்கும் மக்கள் சொல்கின்றனர்.

மிகுந்த வருத்தத்தோடு சென்று விடுகிறார் சிஷ்யர். ஒரு நாள் கங்கையில் குளித்துக்கொண்டிருக்கும் போது கால் தடுக்கி விழ இருந்தவரை ஒரு வாலிபன் தாங்கிப்பிடிக்கிறான். அவனது முகத்தைப் பார்த்த குரு ஒரு கனம் ஸ்தம்பிக்கிறார். குருவின் அதே முகம். பிறகு விசாரிக்கும் போது அவன் தான் குருவின் மகன் தான் என்று ஒத்துக்கொள்கிறான். பிறகு பிழைக்க வேலை இல்லாததால் தான் திருடனாக மாறிவிட்டதாக கூறுகிறான். சிஷ்யர் அவனது அக்காவைப் பற்றிக் கேட்க அவன் “அவளைப் பற்றிக் கேட்காதீர்கள். இங்கு தான் கேவலமான தொழிலைச் செய்து கொண்டிருக்கிறாள்” என்று கோபத்துடன் சொல்கிறான்.

சிஷ்யர் அவளைப் பார்க்க செல்கிறார். அவள் தான் செய்தது தவறு தான் என்றும் எனினும் வாழ்வதற்கு வேறு வழி தெரியவில்லை என்றும் சொல்கிறாள். சிஷ்யர் அவளுக்கு ஒரு வழி சொல்கிறார் : நீ தினமும் உன்னிடம் வரும் ஆண்களிடம் நூறு முத்துக்கள் கொடுக்க வேண்டும் என்று கேள் என்கிறார். ஆனால் அவ்வாறு கிடைக்கும் முத்துக்களை நீ மறுநாளே செலவழித்து விட வேண்டும் என்றும் கூறுகிறார். அவளும் அப்படியே செய்கிறாள். யாரும் அவளிடம் வரவில்லை. மணி இரவு பணிரெண்டு நெருங்கிக்கொண்டுருக்கிறது. இவள் பதட்டமடைகிறாள். மணி பணிரெண்டு அடிக்கப்போகும் போது ஒரு மனிதன் தலையில் துண்டைப் போட்டு முகத்தை மறைத்துக்கொண்டு நூறு முத்துக்கள் கொடுத்து விட்டுப் போகிறான். மறுநாளும் யாரும் வராமல் இருக்க சரியாக பணிரெண்டு மணிக்கு ஒரு மனிதன் முகத்தை மறைத்துக் கொண்டு முத்துக்களைக் கொடுத்துவிட்டுப் போய்விடுகிறான். அவள் சந்தோஷமாக சிஷ்யரிடம் வந்து நடந்ததைக் கூறி நன்றி சொல்கிறாள்.

சிறுது நாட்களுக்குப் பிறகு சிஷ்யர் திருச்செந்தூரின் கடலில் குளித்துக்கொண்டிருக்கிறார். அப்போது ஒரு வயதான கிழவன் கடலுக்குள் சென்று ஏதோ எடுத்துக்கொண்டு வந்து கரையில் இருந்த ஒரு குழியில் போட்டு விட்டு மீண்டும் கடலுக்குள் சென்று விடுகிறார். குழிக்குள் முத்துக்கள் இருப்பதைப் பார்க்கிறார் சிஷ்யர். கிழவர் யார் என்று பார்க்க, நம்ப பிரம்மா.

பிரம்மா சிஷ்யரைக் கண்டுகொண்டு “நீ பாட்டுக்கு அவ கிட்ட நூறு முத்துக்கள் கொடுத்தாதான் ஆச்சுன்னு சொல்லசொல்லிட்ட, யாரு அவளுக்கு நூறு முத்துக்கள் கொடுப்பதாம்?” என்று சொல்லிவிட்டு, மீண்டும் கடலுக்குள் முத்தெடுக்க சென்றுவிட்டாராம்.
அவர் தலையெழுத்து அம்புட்டுதேன் என்பதோடு முடிகிறது கதை.

***

தன் எழுதிய கவிதை ஒன்று : பிப்ரவரி 14 ஸ்பெஷல்

என் உதடுகள்
இப்போது
குளிர்கிறது
போர்த்தக்
கிடைக்குமா
உன் இதழ்கள்!

***

(தொடரும்)

 

5 thoughts on “ஆயிரம்கால் இலக்கியம் – 7

  1. முத்து, கவிதை அனுபவத்தில்தான் இருக்கின்றது. மடக்கி எழுதுவதோ, மடக்காமல் எழுதுவதோ வசதிக்குதான்.நல்ல பதிவு

    Like

  2. முத்து,வழக்கம் போலவே அருமையான கதம்ப சாத விருந்து! :)நீங்க சொல்லறதையும் மத்தவங்க சொல்வதை மேற்கோள் காட்டுவதையும் வேற வேற கலர்ல போடுங்களேன். தொடர்சியா படிக்கறப்ப லேசா கொழம்பிருது! ( இரண்டும் ஒரே தரத்தில் வேறு இருக்கிறது! (அட்டாக் நம்பர் 1) :)))

    Like

  3. நிர்மல்: கரெக்ட். அப்படியானால் உரைநடை வடிவிலே எழுதுவது தானே, ஏன் எல்லோரும் மடக்கி மடக்கி ஒரு வரிக்கு கீழே ஒரு வரி (பல சமயம் அங்கே வரி இருக்காது, ஒரே ஒரு சொல் தான் இருக்கும். ஒரு வரியில் நிறைய சொற்கள் எழுதினால் வரியா விதிக்கிறார்கள்?!) என்று எழுதவேண்டும்? மதனின் கவிதையைக் கூட பாருங்கள். மதனுக்கு அனுபவம் இல்லையா என்ன? கவிதை என்றால் ஒன்றன் கீழ் ஒன்றாகத்தான் எழுத வேண்டும் என்பது வழக்கமாகி இப்போது பழக்கமாகி விட்டது. மேலும் தீராநதியில் தலைப்பில் கவிதை என்று போட்டிருந்ததால் தான் நான் கவிதை என்று கண்டுபிடித்தேன், இல்லையேல் உரைநடை என்று தான் நினைத்திருப்பேன்.இளவஞ்சி: எங்களுக்கே அட்டாக்கா? சரி. வரும் பதிவுகளில் நீங்கள் சொன்னது போல செய்கிறேன். இல்லையேல் (எனது எழுத்து!) தரத்தை(எழுத்தாளர்களின் தரத்தை விட?!) உயர்த்த முயற்சிக்கிறேன்! (Defence No 1!) :)))))

    Like

Leave a comment