(தொடர்கதை)
5
“ராக்கு எந்திரிடி” என்கிற வார்த்தைகள் அவளது மனதில் எழுந்து தொண்டையிலே நின்று கொண்டது. கைகள் மிக வேகமாக இழுத்துக்கொள்ள ஆரம்பித்தன. அவள் படுக்கைக்குப் பக்கத்தில் இருந்த தண்ணீர் செம்பு அவளது ஆக்ரோஷமான கைகள் பட்டு உருண்டோடியது. சத்தம் கேட்டு ராக்கு பதறி விழித்தாள்.
“அண்ணி என்னண்ணி ஆச்சு? ஐயோ கடவுளே” என்று அடித்துக்கொண்டு எழுந்தாள். சத்தத்தில் முழித்த செந்தில் ஏதும் புரியாமல் அழ ஆரம்பித்தான். ராக்கு செய்வது தெரியாமல் இரும்புக்கம்பி ஏதும் கிடக்கிறதா என்று தேடினாள். சாவியைத் தேடினாள். ஒன்றுமில்லாத வீட்டிற்கு சாவி எதற்கு? வெளியே ஓடிப்போய் எதிர் வீட்டு கிழவியின் பாக்கு இடிக்கும் சிறிய உரலை வாங்கி வந்தாள்.
“செந்தில் ஓடிப்போய் தெக்குவீட்டுக் கிழவிய கூட்டிட்டு வாடா” என்றாள். செந்தில் வெளியேறி ஓடினான். தெக்குவீட்டுக்கிழவியை போய் கூப்பிடவேண்டும் என்பது மட்டும் தான் அவனுக்கு தெரிந்தது. நடக்கப்போவது பற்றி அவன் எதையுமே அறிந்திருக்கவில்லை. யார் தான் அறிவார்?
மழை விட்டேனா பார் என்று சுழற்றி சுழற்றி அடித்துக்கொண்டிருந்தது. செந்திலின் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தெருவெங்கும் இருந்தது. மழை வராதா என்று காத்துக்கிடந்த மக்கள் மழை வந்ததும் வீடுகளுக்குள் சென்று ஒளிந்து கொண்டனர். மழை மக்களைக் காணாமல் தெருவெங்கும் ஓடித்திரிந்தது.
“ர்ர்ர்..ர்ர்ர்…க்க்க்க்கு..க்க்..க்க்…க்க்..கா..க்கா…ள்ள்ள்..ளி..ய்ய்” செல்லம்மாவின் பற்கள் கிட்டித்துக்கொண்டன. நாக்கு எழவில்லை. கைகள் எதையோ விடாபிடியாக பிடித்துக்கொண்டிருப்பதைப் போல இருந்தது. அவள் கண்கள் உறக்கத்திலிருக்கும் காளியையே பார்த்துக்கொண்டிருந்தது. கண்களில் நீர்த்துளி பெறுக்கெடுத்தது. கால்கள் இழுத்துக்கொள்வதை நிறுத்திக்கொண்டன.
சட்டென்று அனைத்தும் இளகியது. கண்கள் குத்திட்டு நின்றன. அவை கூரையின் இடுக்கில் தெரிந்த சிறிய துவாரத்தையே உற்றுப் பார்த்தவாறு இருந்தன.
“ஐயோ அண்ணி..” என்ற சத்தம் ஊரெங்கும் ஒலித்தது. எதிர் வீட்டுக் கிழவி அசையாமல் உட்கார்ந்திருந்தாள். சிறையில் மாணிக்கம் திடுக்கென்று விழித்தான். அவன் முகம் வியர்வையால் நனைந்திருந்தது.
***
“டேய் என்னடா அழுதிட்டேயிருக்க? என் செல்லம்ல கண்ணுல பால குடிச்சிடு ராசா” என்று சங்கில் பாலை ஊற்றி காளிக்கு குடுத்துவிட முயற்சிசெய்து கொண்டிருந்தாள் ராக்காம்மா. செந்திலும், குமாரும் வெளியே விளையாடச்சென்றிருந்தனர். பக்கத்தில் ராணி உட்கார்ந்தவாறு காளியையும் ராக்குவையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தாள். ராக்குவின் வீட்டுக்காரன் ரங்கன் அடுப்பில் எதையோ கொதிக்கவிட்டுக்கொண்டிருந்தான். அவன் காளியை சமாதானப் படுத்த அங்கிருந்தவாரே ஏதேதோ விசித்திரமான ஒலி எழுப்பிக்கொண்டிருந்தான். ரங்கனுக்கு காளி என்றால் உயிர். செல்லம்மா இறந்துவிட்ட பிறகு இவர்கள் அனைவரும் தங்களது கிராமத்துக்கு திரும்பிவிட்டிருந்தனர். வாழ்க்கை மெல்ல பிடிபடத்தொடங்கியது. ராக்கு குழந்தைகளை சமாளிக்கக் கற்றுக்கொண்டாள். குமாரும், செந்திலும் சொன்னதையெல்லாம் கேட்டு சமர்த்தாக இருந்தனர். அவர்களுக்கு எல்லாமே புரிந்தது போலவும் எதுவுமே புரியாதது போலவும் இருந்தது.
வாசலில் நிழலடவே ராக்கு யார் என்று நிமிர்ந்து பார்த்தாள். “அண்ணே….வாண்ணே..எப்பண்ணே வந்த” காளியை அனைத்தவாறு பதற்றம்கலந்த மகிழ்ச்சியுடன் எழுந்தாள். சங்கு உருண்டோடியது.
***
“ஏண்ணே போற போறங்கற? எங்களோடவே இருந்திடவேண்டியது தானண்ணே. இந்த குழந்தைகள வெச்சுக்கிட்டு எங்கண்ணே போவ? எப்படி காப்பாத்துவ?” ராக்குவின் குரல் தழுதழுத்தது. பேசமுடியாமல் கேவிகேவி அழுதாள். “மாமா சொல்றேனேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க. சம்பந்தகாரர் வீட்டில இருக்கம்னு நினைக்காதீங்க. நான் உங்களை அப்படி நினைக்கல. உங்க குழந்தைகளையும் நான் அப்படி நினைக்கல. நாம ரெண்டு பேருமே சேர்ந்து விவசாயம் செய்யுவோம். வாரத வெச்சு சாப்டுவோம். எங்கள விட்டுட்டு குழந்தைகள கூட்டிட்டு போகாதீங்க மாமா” என்றான் ரங்கன். ரங்கனின் ஆத்தாகிழவி “அட ஆமாப்பா இரப்பா இங்கனயே..எங்க போயிட்டு என்ன பண்ணுவ?” என்றாள். ஆனால் இவை எதையுமே கேட்கும் மனநிலையில் இல்லை மாணிக்கம்.
“இல்லத்தா நான் போறேன். ஆந்திராப்பக்கம் எங்கிட்டாவது போய் பொழச்சுக்கறேன். உன் வாழ்க்கை உன்னோட. நீ ஏன் தேவையில்லாத பாரத்த தூக்கி சுமக்கற. கிடைக்கறது எதுவோ அது எங்களோடயே இருக்கட்டும். நீ கஷ்டப்படாத ஆத்தா” என்றான். “அண்ணே உன் குழந்தைகள் எனக்கு பாரம்மாண்ணே. ஏண்ணே இப்படி பேசுற?” “இல்லத்தா நான் போறேன். நீங்க பாத்து பிழச்சுக்கிடுங்க” “அண்ணே காளிய மட்டுமாவது எங்கிட்ட விட்டுட்டு போண்ணே. இந்த சின்ன பயல வெச்சுக்கிட்டு என்ன பண்ணுவ நீ? அவனுக்கு கஷ்டம் உனக்கும் கஷ்டம். அண்ணே தயவு செஞ்சு காளிய எங்கிட்ட கொடுத்துடுண்ணே” ரங்கன் காளியை அனைத்தவாறு இருந்தான். அவன் கண்களில் ஏனோ நீர்துளி ஒன்று தோன்றியது.
***
“ஆம். உதித்துவிட்டது. கடைசியில் உதித்தேவிட்டது. குமுறும் எரிமலையாய். கொந்தளிக்கும் கடலாய். உறுமும் புலியாய் உப்பரிகைத்தீயாய் கடைசியில் எழுந்தேவிட்டது செஞ்சுடர். இந்த சுடர் ஏழைகளின் வீடுகளிலே சூழ்ந்திருக்கும் இருளை என்றைக்குமாக அகற்றும். நமது தளபதி தமிழ் இருக்கும் வரையிலும் அன்புத் தொண்டர்கள் உக்கிரமாக இயங்கும்வரையிலும், மக்களான உங்களது மகத்தான ஆதரவு இருக்கும் வரையிலும் இந்த சுடர் அநீதிக்கு எதிராக எரிந்துகொண்டேயிருக்கும். இனி யாரும் எம்மக்களை சுரண்டவிடமாட்டோம்” மகிழன், தமிழின் காதுகளில் ஏதோ கிசுகிசுத்தார். தமிழ் தன்க்குள் சிரித்துக்கொண்டார். “..இன்று உதித்த மறுமலர்ச்சி கழகம் மேன்மேலும் வளரட்டும் என்று கூறி தளபதி தமிழ் அவர்களை பேசவருமாறு அழைக்கிறேன்” என்று முடித்தார் ம.கவின் நிறுவனர் மறைமலை. அவர் வாயில் வழிந்தோடிய வெற்றிலைச் சாற்றை துடைத்துக்கொண்டே இரு கைகளை நீட்டி தமிழை அழைத்தார்.
தமிழ் கம்பீரமாக எழுந்து மறைமலையை நோக்கி நடந்து வந்து அவரது அகன்ற கைகளில் அடங்கிக்கொண்டார். இருவரும் ஆரத்தழுவிக்கொண்டனர். மறை தமிழின் முதுகைத் தட்டிக்கொடுத்தார். கூட்டம் கட்டுக்கடங்காமல் கரகோஷம் எழுப்பியது.
மறைமலை மெதுவாக நடந்து சென்று மகிழனின் பக்கத்தில் இருந்த காலியான இடத்திற்கு சென்றார். மகிழன் பவ்யமாக எழுந்து நின்று கும்பிட்டார். “அட உக்காருங்க தம்பி. எப்ப வந்தீங்க?” “கொடியேத்தும் போது வந்தேண்ணே. ஷ¥ட்டிங்கில கொஞ்சம் நேரமாயிடுச்சு. மன்னிக்கனும்.” என்றார் மகிழன். “அட அதனால என்ன தம்பி. என் காலம் முடிஞ்சது. இனி என் அன்புத் தம்பிங்க நீங்க ரெண்டுபேரும் இருக்கீங்க. இது உங்க கட்சி இனிமேல். அடுத்து நீங்க தான் பேசனும்” என்றார் மறைமலை.
மகிழன் சிரித்துவிட்டு கூட்டத்தை நோக்கி ஆழ்ந்த பார்வையை வீசினார். கூட்டம் முழுதும் மகிழனையே பார்த்துக்கொண்டிருந்தது. பேசிக்கொண்டிருந்த தமிழ் நிறுத்திவிட்டு மகிழனைப் பார்த்தார். பின் சிரித்துவிட்டு மீண்டும் விட்ட இடத்திலிருந்து திருக்குறளைச் சொல்ல ஆரம்பித்தார்.
***
நீண்ட செம்மன் சாலை கண்ணுக்கெட்டியதூரம் வரை வரண்டு கிடந்தது. ஆங்காங்கே பணை மரங்கள் சிலைபோல அசையாமல் நின்று கொண்டிருந்தன. “போதும்மா நீ உன் வீட்டுக்கு போ. இனி நான் போய்க்கிறேன்.” என்று சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தார் மாணிக்கம். தோளில் ராணி தூங்கிக்கொண்டிருந்தாள். இடக்கையில் செந்திலும். செந்தில் கையை குமாரும் பிடித்தவாறு அவர்கள் சென்றனர். சூரியன் உதிக்கத் தொடங்கியிருந்தது. செம்மனின் நிறம் சூரிய கதிர்களால் மேலும் பொன்னாக மின்னின. காலை குளிரில் மண் நடப்பதுக்கு இதமாக இருந்தது. நேரம் போக போக இதே மணல் சுட்டு பொசுக்க ஆரம்பித்துவிடும். செந்திலும், குமாரும் தாங்குவார்களா? அவர்களது பிஞ்சுக் கால்கள் இவை எதையும் அறியாமல் அப்பாவின் நிழலில் நடந்துகொண்டிருந்தனர்.
கொஞ்ச தூரம் நடந்ததும் மாணிக்கம் நின்றார். குமாரையும் செந்திலையும் அங்கேயே விட்டு விட்டு, ராணியை தோளில் சுமந்தபடி ராக்குவை நோக்கி திரும்பி வந்தார். தன் கழுத்தில் கிடந்த புலி நகம் கொண்ட கருப்புக் கயிறை கழற்றி ராக்குவின் கைகளில் சுகமாக கண் மூடி ஆழந்த உறக்கத்திலிருந்த காளியின் கழுத்தில் போட்டார். கீழே குணிந்து காளியின் சின்ன கண்ணத்தில் முத்தமிட்டார். “நீ நல்லாயிருப்படா” என்று தழுதழுப்பான குரலில் சொல்லிவிட்டு திரும்பிப்பார்க்காமல் நடக்கத்துடங்கினார்.
சூரியன் கிட்டத்தட்ட உதித்துவிட்டது.
***
(தொடரும்)