யார் முழித்திருக்கப் போகிறார்கள் – 5

ஏப்ரல் 8 1985

ஏப்ரல் 8 1985 அன்று இந்திய அரசாங்கம் யூனியன் கார்பைடு கார்ப்பரேஷனுக்கு எதிராக நியுயார்க் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்தது. அந்த வழக்கில் நடந்த பேரிடருக்கு UCC -யே காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டது. குற்றம் நான்கு அம்சங்களைக்கொண்டது : உருப்படாத திட்டம், பழுதடைந்த தொழில்நுட்பம், பயிற்சியின்மை மற்றும் தொழிற்சாலையில் முறையான மேற்பார்வையின்மை.

அமேரிக்காவுக்கு இந்த வழக்கை எடுத்துச்சென்றதில் உள்நோக்கம் இல்லாமல் இல்லை – அமேரிக்காவவுக்கு இதேபோல் பேரிடர்களில் இருக்கும் அனுபவம். இவ்வாறான சுற்றுச்சூழல் அழிவுக்கு வழிவகுத்த பேரிடர்களுக்கு எதிராக அவர்களது சட்டம் கடுமையாக இருப்பதும், இதைப் பயன்படுத்தி ஒரு நல்ல மிகப் பெரிய இழப்பீட்டுத் தொகையைப் பெறலாம் என்ற எண்ணமும் ஒரு காரணம் என்பதை மறுக்கமுடியாது. மேலும் போப்பால் பேரிடர் உலகம் முழுதும் பாதிப்புகள் ஏற்படுத்தக்கூடிய சர்வதேசவிஷயமாக கருதப்பட்டது, அதனால் ஒரு சர்வதேசச்சந்தை இந்தியாவுக்கு தேவைப்பட்டது. வாரன் ஆன்டர்சன் (Warren Anderson) கூட ஒரு சந்தர்ப்பத்தில் “போப்பால் உலகத்தையே மாற்றிவிட்டது, அமேரிக்காவையும் வேறு தொழிற்சாலைகளும் இனி தானகவே மாறிவிடும்” என்று ஒத்துக்கொண்டார். இது இனி அமெரிக்கா இரட்டை தரம் (நியதி) – முதல் நியதி அவர்களுக்கு, இரண்டாவது அவர்கள் அல்லாத ஆனால் அவர்கள் தொழிற்தொடங்கியிருக்கும் மற்ற நாடுகளில், சொல்லப்போனால் இன்னும் முன்னேறாத நாடுகளில் – வைத்துக்கொள்ள முடியாதபடி பார்த்துக்கொள்வதற்கு – உறுதிசெய்துகொள்ள – ஒரு வாய்ப்பளித்தாய் இருந்தது.

ஒரு நல்ல சிறந்த தீர்ப்பையே அனைவரும் எதிர்பார்த்தனர். எது நடந்ததோ அது நடந்து விட்டது அதை மாற்ற முடியாது, ஆனால் குறைந்தபட்சம் இதன் மூலம் கண்டறியப்பட்ட படிப்பினைகளை உலகத்தின் கவனத்துக் கொண்டுவரும் முயற்சியாக இந்த வழக்கு இருக்கும் என்று நம்பப்பட்டது. அமேரிக்க மக்களின் கவனத்துக்கு இந்த வழக்கை கொண்டுவருவதன் மூலம் அவர்களது வாழ்க்கையும் எவ்வளவு அபாயங்களுக்கு மத்தியில் இருக்கிறது -போப்பால் மக்களைப் போல- என்பதையும் அவர்களுக்கு உணரச்செய்யலாம்.

ஆனால் UCC -யின் எதிர்வினையோ இந்த நீதிமன்றம் வசதியற்றதாய் இருக்கிறது என்பதாய் இருந்தது. அமெரிக்கர்களின் வரிப்பணமும் பொன்னான நேரமும் தேவையில்லாத ஒரு வழக்கில் -அதுவும் எங்கோ இருக்கும் ஒரு நாட்டில் ஏற்பட்டதொரு பேரிடரை- அநியாயத்துக்கு வீணடிக்கப்படுகிறது என்று கூறினர். மேலும் அவர்கள் சாட்சிகள் அனைத்தும் இந்தியாவில் இருக்கிறார்கள் என்றும் அவர்களுக்கு ஆங்கிலமும் தெரியாது என்றும் சாட்சியங்களோ போப்பாலில் இருக்கிறது என்பதால் வழக்கை தள்ளுபடி செய்ய அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

இறந்த 20000 மக்கள் சார்பாகவோ, நிரந்தரமாக வாழ்க்கைமுழுதும் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாகவும், அதிகாரபூர்வமாக எந்த நினைவுச்சின்னமும் வைக்கப்படவில்லை. தாயும் சேயும் இருக்கிற இந்த சிலை ருத் வாட்டர்மேன் (Ruth Watermann) என்பவரால் போப்பாலில் இருக்கும் கார்ப்பைடு தொழிற்சாலையின் வாசலில் வைக்கப்பட்டது.

டிசம்பர் 3 1985

ஒரு வருடம் கழித்து. நகரமே மிகுந்த கோபத்தில் இருந்தது. காலையில் மக்கள் கோவிலிலும், மசூதியிலும், தேவாலையங்களிலும் வணங்கினர். ஆனால் பிறகு பல தொண்டு நிறுவனங்களும் பாதிக்கப்பட்ட மக்களும் கண்டன ஆர்ப்பட்டங்களிலும் தர்னாவிலும் ஈடுபட்டனர். வாரன் ஆன்டர்சனின் உருவபொம்மைகள் தெருவெங்கும் கொழுத்தப்பட்டன. தொழிற்சாலையை சூறையாடவும் தீவைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இந்த ஆர்ப்பாட்டங்களும் தர்னாக்களும் ஒரு குறியீடாக மட்டுமே இருந்தன, இதனால் அவர்கள் பெரிதாக எந்த லாபத்தையும் அடையவில்லை.

ஆனால், இந்த நாள், இதை விட ஒரு முக்கியமான சம்பவத்தை தன்னுள்ளே அடக்கிக்கொண்டிருந்தது. கடைசியாக 1.8 மில்லியன் டாலர் இழப்பீட்டுத்தொகை கொடுப்பது என்று முடிவு -UCIL- செய்யப்பட்டது. மேலும் அட்குறைப்பு செய்யப்பட்டது, தொடர்ந்து தொழிற்சாலையே மூடப்பட்டது.

ஒரு தொழிற்சாலையில் விபத்து நடந்தால் அதனால் பாதிக்கப்பட்டவர்கள் வெவ்வேறு வகையைச் சார்ந்தவர்களாக இருப்பர். வேலையிழந்தவர்கள். வேலை செய்யமுடியாதவர்கள். வாயு கசவுக்குப்பின் வேலையிழந்தவர்கள் இருந்தனர். இன்னும் சிலர், காயங்கள் அவர்களை ஊனப்படுத்தி இனி வாழ்க்கையிலே என்றும் கடினமான வேலை செய்யமுடியாதவாறு செய்திருப்பதை, நாளடைவில் கண்டனர்.

யாரைக்குறை சொல்வது என்பதைக்கூட இந்தமாதிரியான பேரிடர்கள் குழப்பிவிடுகின்றன. பாதிக்கப்பட்டவர்களை எல்லோரும் கைவிட்டபிறகு, அவர்கள் யார்மீது கோபப்படுவார்கள்? ஆண்டுகள் பறந்து கொண்டிருந்தன, ஒவ்வொரு ஆண்டு நினைவின் போதும், பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையில் யாரும் எந்த முன்னேற்றமும் ஏற்படுத்தாமல் -ஏற்படுத்த முயற்சிக்காமல்- இருக்கும் போது, அவர்களுடைய கோபம் வாரன் ஆன்டர்சன் மேலிருந்து முதலமைச்சர், மருத்துவர்கள், வக்கீல்கள் மற்றும் நீதிபதிகள் மேல் திரும்பியது.

அதேசமயத்தில் மாநில அரசு பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்காக என்ன செய்துகொண்டிருந்தது? மறுவாழ்வுக்கான போர்டுகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்தன. ஒவ்வொரு தெருமுனையிலும், விளம்பர போர்டுகளில், அன்று பிரதமமந்திரியாக இருந்த ராஜீவ்காந்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கே முதலுரிமை என்று சொல்லியவாறு கையசைத்து சிரித்துக்கொண்டிருந்தார். அரசு தயாரித்த திட்டங்கள், விளம்பரங்கள் மூலம் தினசரிகளில் திணிக்கப்பட்டன.

பாதிக்கப்பட்டவர்கள் மேலிருந்த பார்வை நாளடைவில் மாறத்தொடங்கியது. பாதிக்கப்பட்டவர்களை எதிரிகளாக பொதுமக்கள் பார்க்கத்தொடங்கினர். அவர்கள் தான் இழப்பீட்டு தொகை கேட்டு சுரண்டுகிறார்கள் என்று குற்றம்சாட்டப்பட்டனர். இழப்பீட்டு தொகை வழங்கப்படும் இடங்களில் இருக்கும் அதிகாரிகள் மக்களுக்கு ஆதரவாக இல்லாமல் அவர்களை குற்றம்சாட்டுபவர்களாக இருந்தனர்.

கிட்டத்தட்ட எல்லா சட்டபத்திரிக்கைகளிலும் இழப்பீட்டுத் தொகை என்பது ஒரு அசிங்கமான வார்த்தையாக உருப்பெற்றது, இழப்பீட்டுத்தொகையை வழங்கப்போவது என்னவோ வேறுயாரோ. இழப்பீட்டுத் தொகை வழங்கப்போவது UCC தான் என்பதை அனைவரும் மறந்திருந்தனர் -மறக்கடிப்பட்டிருந்தனர். 20000 மக்கள் UCC-யின் கவனக்குறைவால் கொல்லப்பட்டிருந்த உண்மையை அனைவரும் மறந்திருந்தனர். 300,000 போப்பால் மக்கள் மீண்டு வரமுடியாத துயரங்களில் சிக்கிக் தவித்துக்கொண்டிருப்பதை அனைவரும் சிறிது சிறிதாக மறந்து கொண்டிருந்தனர்.

(தொடரும். அதிவிரைவில்!)

மற்ற பாகங்கள் : தொடர்கள் தலைப்புக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

Making Of ஆவியும் பாவியும்.

எழுதின டுபாக்கூர் கதைக்கு மேக்கிங் வேறயா? இதெல்லாம் டூ மச். ரொம்ப ஓவர்ன்னு ஏம்ப்பா நெனக்கறீங்க. நான் எழுதின எல்லா கதையுமே உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டதுதான் (ஆமா இவரு பெரிய ஆர்.கே.செல்வமணி!). ஆனா இந்த கதை கொஞ்சம் ஸ்பெஷல். ஏன்னா என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கிய இரண்டு செய்திகளை -தினமலரில் வெளிவந்தது – அடிப்படையாகக் கொண்டது. நிர்மல் வேறு, முத்து ஆவி மேட்டர வெச்சு கண்டிப்பா ஒரு கதை எழுதுங்கன்னு சொல்லியிருந்தார் (பாவம் அவர விட்டுருங்க. சொன்னது தப்பாய்யா!) ஆனால் உண்மையிலே பலசரக்கு கடை சமாச்சாரம் அதிர்ச்சிதான். என்னத்த சொல்றது. ஆனா சிலர், என்ன இப்படி எழுதறீங்க நம்புறமாதிரி இல்லியேன்னு சொன்னதால, சில அதாரங்களை (?!) சமர்ப்பிக்கிறேன். ஆதாரங்கள் தினமலரில் வெளிவந்த செய்திகள்.

ஆவி ஜோதிடம் பற்றிய செய்தி:

பலசரக்கு கடை சீடி பற்றிய செய்தி:

அப்புறம், இந்த கதைக்காக நான் போட்ட flowchart இது. (அடப்பாவி இதுவேறையா!) ம்ம்..என்ன பண்றது, இந்த கதை நான் readers கண்டிப்பா guess பண்ணக்கூடாதுங்கறதுல கண்டிப்பா இருந்தேன். எத்தன பேரு கண்டுபிடிச்சீங்கன்னு தெரியல.

இப்ப போறேன். Next meet பண்றேன்.

 

யார் முழித்திருக்கப் போகிறார்கள் – 4

டிசம்பர் 16 1984

டாங்க் E16 -ல் இருந்த பதினைந்து டன் மிக் (MIC) இன்னும் திகிலூட்டவே செய்தது. அதை எப்படி விட்டொழிப்பது என்பதை பற்றி பலரும் பலவாறு யோசனை கூறினர். அதை மிகப் பெரிய ட்ரம்களில் அடைத்து அதன் தாய் கம்பெனிக்கே அனுப்பிடலாம். இல்லையேல், பெரிய குழாய்வழியாக காஸ்டிக் சோடா வாயுவை பயன்படுத்தி அதை நீர்த்தப்படுத்தலாம். இல்லையேல் அதை எரித்து (சோதனைக்கு உட்பட்டு) அதிகம் தீங்கில்லாத வேறொரு வாயுவாக மாற்றலாம். ஒருவழியாக இறுதியாக மிக்கை நீர்த்தப்படுத்தி செவின் (Sevin) என்ற பூச்சிகொல்லி மருந்தாக உருமாற்றம் செய்யலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

இதை செய்யவிருக்கிற பல நிபுணர்கள் கொண்ட குழுவின் தலைமை விஞ்ஞானி, இதில் கிடைக்கும் பொருளாதார இலாபத்தை பற்றி ஒரு பத்திரிக்கை சந்திப்பில் இவ்வாறு மக்களுக்கு எடுத்துக்கூறினார்: “இந்த விசயத்தை மொத்தமாக பொருளாதார இலாபத்தை மனதில் வைத்து அனுகவேண்டும். எந்த ஒரு தொழில் நுட்ப சோதனையிலும் ஆபத்து கண்டிப்பாக இருக்கத்தான் செய்யும். நாம் ஆபத்தில்லாமல் எந்த ஒரு தொழில்நுட்ப முன்னேற்றத்தையும் அடையமுடியாது. நாம் அபாயங்களை குறைக்க மட்டுமே முடியும்”. பீகாரின் முதலமைச்சர் ரேடியோவில் இந்த முறை – மிக்கை செவினாக மாற்றுவது – மிகவும் பாதுகாப்பனதும், மற்றும் சாத்தியமான ஒன்று என்று மக்களுக்கு நம்பிக்கையளித்துக்கொண்டிருந்தார். ஏனென்றால் இந்த செயல் மிகவும் பாதுகாப்பான வழிமுறைகளை பயன்படுத்தி எந்தவித பக்கவிளைவுகளும் சேதமும் தீங்கும் இல்லாமல் மிகவும் கவனமாக செயல்படுத்தப்படும் என்று உறுதியளித்தார்.

பாதுகாப்பு வழிமுறைகள் என்று சொல்லப்படுவது ஆறு வெவ்வேறான பாதுகாப்பு திட்டங்களை உள்ளடக்கியது. இந்த ஆறு பாதுகாப்பு அம்சங்களில் ஐந்து பாதுகாப்பு அம்சங்கள் டிசம்பர் மூன்றாம் தேதி வேலைசெய்யவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆனால் இந்த முறை அவை ஆறும் நன்றாக வேலை செய்கின்றன -தொடர்ந்து வேலை செய்யும் – என்று உறுதிப்படுத்தப்பட்டது. ஆனால் இவை எப்பொழுதும் -டிசம்பர் மூன்றாம் தேதிகூட – ஒழுங்காக வேலை செய்துகொண்டுதான் இருந்திருக்கும், இதற்கு பொறுப்பானவர்கள் நினைத்திருந்தால். அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளையும் கட்டுக்குள் கொண்டுவர, ஒழுங்காக வேலை செய்யவைக்க அவர்களுக்கு கொஞ்சநாட்கள் தான் பிடித்தது. இந்த ஐந்து பாதுகாப்பு அம்சங்களுடன், ஆறாவது அம்சமாக ஒன்று சேர்க்கப்பட்டது, அது : இவை அனைத்தையும் மீறி இதை செயல்படுத்தும் நாளன்று ஏதேனும் தவறு ஏற்பட்டால், தண்ணீர் தெளிக்க ஹெலிகாப்டர்கள் தயாராக நிறுத்தப்படும்.

டிசம்பர் பதினாறாம் தேதி, மிக்கை நீர்த்தப்படுத்தும் முயற்சிக்கு உறுதுனையாகவும், தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கமும், இதற்கு முன்னர் கைது செய்யப்பட்ட UCIL -ன் ஐந்து சீனியர் அலுவலர்கள் விடுவிக்கப்பட்டனர். அமெரிக்க தொழில்நுட்ப ஆலோசர்கள் தொழிற்சாலைக்குள் நுழைய தடைவிதிக்கப்பட்டது, ஏனென்றால் அவர்கள் சாட்சியங்களை கலைத்து விடக்கூடும். ஆனால் அவர்களில் ஒருவர், அலோசனைகள் வழங்குவதற்கு, ஆபரேசன் ·பெயித் (Operation Faith) குழுவில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.

இந்த முறை எந்த தவறும் நடக்கவில்லை. மிக் வெற்றிகரமாக நீர்த்தப்படுத்தப்பட்ட பின்னர் மக்கள் போப்பாலுக்கு திரும்பி வரத் துடங்கினர். ஆனால் பொது மக்களின் தலைகளில் பல கேள்விகள் இருந்து கொண்டுதான் இருந்தன. இந்த நீர்த்தப்படுத்தும் செயல் மூலம் தயாரிக்கப்பட்ட செவினின் ரூபாய் மதிப்பு இரண்டரைக் கோடி. ஆனால் உற்பத்தி செய்யப்பட்ட செவின் என்னவாயிற்று என்பது யாருக்கும் தெரியவில்லை. அது பரிமுதல் செய்யப்பட்டதா இல்லை சந்தையில் விற்கப்பட்டதா? ஆபரேஷன் ·பெயித் செய்லபடுத்தப்படுவதற்கு பொதுப் பணம் உபயோகப்படுத்தப்பட்டிருக்கும் பட்சத்தில், இதன் மூலம் அடையப்பெற்ற இலாபம் என்ன ஆனது? அந்த இரண்டரைக்கோடி எங்கே சென்றது?

ஆபரேஷன் ·பெயித் நிறைய நிறைய நோக்கங்களைக் கொண்டது. அது மாநில அரசின் மக்களைக்-காக்கும் வேஷத்தை செவ்வனே பூர்த்தி செய்தது. மிகப்பெரிய வேலையை நாங்கள் எந்த விளைவுகளும் இன்றி செய்து விட்டோம் என்று தம்பட்டம் அடிக்க வழி செய்தது. பாருங்கள் எங்கள் தொழிற்சாலையில் எந்தவித கோளாறும் இல்லை என்று UCC சொல்வதற்கு இது வாய்ப்பளித்தது. இந்த தொழிற்சாலை செவின் உற்பத்தி செய்வதற்காக கட்டப்பட்டது. அது எந்தவித பிரச்சனையும் இன்றி செய்யமுடிகிறது. நீங்களே பார்த்தீர்கள். தவறு எங்கே நடந்தது என்றால் இயந்திரங்களை இயக்குவதில் தான் இருக்கிறது. இயந்திரங்களை இயக்குவது இந்திய அதிகாரிகள் (UCIL) கையில் இருக்கிறது – என்று UCC கூறுவதற்கு இந்த செயல் வாய்ப்பளித்தது. மேலும் மத்திய அரசு, மற்ற பன்னாட்டு கம்பெனிகளுக்கு இதன் மூலம் நல்ல சமிக்ஞை அளிக்க முடிந்தது. இந்திய அரசு வெளிநாட்டு முதலீட்டை எந்தக்காரணம் கொண்டும் இழக்கத் தயாராக இல்லை.

கடைசியில் இந்த செயல் அனைவருக்கும் ஒரு திடமளித்தது – அரசுக்கு, தொழிற்சாலைகளுக்கு, அதிகாரிகளுக்கு. ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதனால் ஒரு துளி இலாபம் கூட கிடையாது. வேறு வழியில், மற்றுமொறு துயர சம்பம், இதே போல், பின்னாளில் நடந்தேறுவதற்கு அடித்தளமாக இந்த செயல் அமைந்தது.


பாதிக்கப்பட்ட மக்களில் கிட்டத்தட்ட 90 விழுக்காடு மக்கள் மிக ஏழை குடும்பத்திலிருந்து வந்தவர்கள், அவர்கள் தொழிற்சாலைக்கு மிக அருகில் வசித்தவர்கள். கிட்டத்தட்ட எல்லா குடும்பங்களிலும், இந்தப் படத்தில் இருப்பதைப் போல, வாழ்க்கை முழுவதும் ஊனமாக இருக்கப்போகிற ஏதேனும் ஒருவர் இருக்கிறார்.

மார்ச் 29 1985

ந்த துயரச்சம்பவம் நடந்தேறிய உடனே, போப்பல் பல பணம்பறிக்கும் கும்பல்களுக்கு புகழிடமாக அமைந்தது. அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு, உலகத்தின் மிகப்பெரிய வழக்கில், மிகப்பெரிய ஒரு இழப்பீட்டுத் தொகையை பெற்றுத்தர வந்திருக்கும், வழக்கறிஞ்கர்களை சந்திக்க போப்பால் தயாராகவே இல்லை. பெற்றுத்தரும் இழப்பீட்டுத் தொகையில் 33 விழுக்காடு சம்பளம். அயிரக்கணக்கான பெருவிரல் ரேகைகளை கையில் வைத்துக்கொண்டு, அவர்கள் 186,000 வழக்குகளை, பல அமெரிக்க மாவட்டங்களில் பதிவு செய்தனர்.

பாதிக்கப்பட்ட மக்களை இந்த “ambulance chasers” -களிடமிருந்து (ஆம். இந்த வழக்கறிஞர்கள் அமெரிக்காவில் இப்படித்தான் அழைக்கப்பட்டனர்!) காப்பாற்ற இந்திய அரசு 29 மார்ச் அன்று ஒரு சட்டம் இயற்றியது. அது Bhopal Gas Leak Disaster (Processing of Claims) Act என்பதாகும். இந்த சட்டம் பாதிக்கப்பட்ட ஏழை மக்களின் -மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனத்திற்கு எதிறாக ஒன்றும் செய்ய இயலாதவர்கள் – சார்பாக அரசு வாதாட -வழக்கு பதிவு செய்ய – வாய்ப்பளித்தது.

(தொடரும். அதிவிரைவில்!)

மற்ற பாகங்கள் : தொடர்கள் தலைப்புக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

காந்தம் – 6

6

இரண்டாம் அத்தியாயம்.
முன்னும். பின்னும்.

1

2006. டிசம்பர் 31. லக்சம்பர்க்.

ஹோட்டல் சோ·பிடெல். அதிகாலை நான்கு மணி.

மிக மெல்லிய மஞ்சள் வெளிச்சம் அந்தப் பெரிய அறை முழுதும் அப்பிக்கிடந்தது. ஹீட்டரின் மெல்லிய சூடு கனத்த தரை விரிப்புகளுக்குள் ஒளிந்து கொண்டிருந்த கடைசி குளிர் காற்றையும் விரட்டிக்கொண்டிருந்தது. கனத்த மௌனம் வெளியே பரவிக்கிடந்த குளிர் போல அறையை சூழ்ந்திருந்தது. அறையின் ஓரத்தில் விலைஉயர்ந்த சீலைகளை உடுத்தியிருந்த ஜன்னல், அங்கிருந்த மிகப்பெரிய கட்டிலில் கனத்த கம்பளிக்குள் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த அந்த மனிதனையே பொறாமையாகப் பார்த்தது. கட்டிலுக்கு அருகிலிருந்த மேஜையிலிருந்த டிஜிட்டல் கடிகாரம் 4:01 என்று காட்டியது. ரெடியோ உயிர்பெற்றது. கம்பளிக்குள் சிறு அசைவுகள் தென்பட்டன.

ட்ரிங். ட்ரிங். ட்ரிங். ட்ரிங்.
கம்பளிக்குள்ளிருந்து ஒல்லியான நீண்ட கை ஒன்று மிக மெதுவாக வெளியே வந்து கூவிக்கொண்டிருந்து டெலிபோனை எடுத்தது. “குட்மார்னிங் மிஸ்டர்.சிவா. திஸ் இஸ் யுவர் வேக் அப் கால். பான்ஜோயர்..” டொக். மறுபடியும் கை கம்பளிக்குள் சென்றுகொண்டது.

கனத்த மௌனம். அடுத்த இரண்டு நொடிகளில் அந்த உருவம் கம்பளியை விலக்கிக்கொண்டு எழுந்தது. அவர் ஐம்பது வயது மதிக்கத்தக்கவராக இருந்தார். முன் தலை வழுக்கை. பின்னால் நிறைய வெள்ளை முடி. கருப்பாய் இருந்தார். அடர்ந்த வெள்ளை மீசையும், பத்து நாள் கூர்மையான தாடியும் கொண்டிருந்தார். கண்களைத் திறக்காமல் மேஜை மேல் இருந்த தனது பிடிஏ வை எடுத்தது, ஆன் செய்தார். திரையில் ஒரு பெண்ணின் படம் இருந்தது. 13 அல்லது 14 வயது இருக்கும். கண்களைத் திறந்தார்.வைத்த கண் வாங்காமல் சில நொடிகள் அந்தப் பெண்ணையே பார்த்துக்கொண்டிருந்தார்.

ஷவரின் இளஞ்சூடான நீர் நெற்றியை நனைத்து அவரது கூர்மையான மூக்கில் இறங்கி, கழுத்தில் இருந்த புலி நகக் கயிற்றை சுத்தமாக நனைத்தது. ஒல்லியான ஆனால் திடகாத்திரமான தேகம்.

அடுத்த சில நிமிடங்களில் அவர் பளீர் வெள்ளை நிற சட்டைக்கும், பூட் கட் அடர் நீல கார்ப்பென்டர் ஜீன்ஸ¤க்கும் மாறியிருந்தார். தான் வைத்திருந்த ஒரு சாக்லேட் ரோலர் ஹஸ்பப்பீஸ் பேக்கேஜை நிமிர்த்திவைத்துவிட்டு, தனது சந்தன க்ரம்ப்ளரை திறந்து உள்ளே பாஸ்போர்ட் மற்றும் அத்தியாவசிய டாக்குமண்ட்ஸ்களை சரிபார்த்துக்கொண்டார். கருப்பு நிற ஐபாட் ஸ்·புள் ஒன்றை எடுத்து உயிரூட்டினார். அதன் கியூட் இயர் ஸ்பீக்கர்ஸை எடுத்து காதுகளுக்கு கொடுத்தார். ஐபாட் கார்ப்பென்டர் ஜீன்ஸின் முன் பாக்கெட்டில் தஞ்சம் அடைந்தது. மணி பார்த்துக்கொண்டார். ·ப்ளைட் 6:45 க்குத்தான். இன்னும் நிறைய நேரம் இருக்கிறது.

ஐபாடில் டிஎம்எஸ் “அழகென்ற சொல்லுக்கு முருகா” என்று உருகிக்கொண்டிருந்தார். கீழே சென்று, விமான நிலையத்திற்கு செல்வதற்கு, ஸட்டில் பஸ் வருவதற்குள் ஒரு காபி சாப்பிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டார்.

***

காலை மணி 9:00 ப்ராங்க்பர்ட் விமானநிலையம். அல்·ப்ரெடோ எஸ்ப்ரஸோ பார்.

லக்ஸம்பர்க்கிலிருந்து ப்ராங்க்பர்ட்டுக்கு கனெக்டிங் ·ப்ளைட். இனி சென்னை செல்வதற்கான அடுத்த ப்ளைட்டுக்கு இன்னும் இரண்டு மணி நேரம் இருக்கிறது. சூடான எஸ்ப்ரஸோ டேபிளில் நுரை ததும்பிக்கொண்டிருந்தது. சிவா தனது க்ரம்ப்ளரைத் திறந்து உள்ளிருந்து தனது மடிக்கணினியை எடுத்து வை-·பையோடு கனெக்ட் செய்தார். தனது பேங்கின் இணையதளத்திற்கு சென்று கடைசியாக வயர் செய்யப்பட்ட தொகையை சரிபார்த்தார். தனது வாழ்நாளின் மொத்த சொத்து. பெருமூச்சு விட்டுக்கொண்டார். ஹாட்மெயில் லாக் இன் செய்தார். ஒரு புதிய மெயில். மெசேஜ் டைட்டில்: “தலைவா. ஏற்பாடுகள் தயார்.”

கணினியை மூடிவைத்தார். எஸ்ப்ரஸோவை எடுத்து மிக மெதுவாக நுரையை பருகினார்.

மேலே ·ப்ளைட் சார்ட்டில் எழுத்துக்கள் வேகமாக மாறியது. லுப்தான்சா. எம்.ஏ.ஏ. கவுண்டர் 4. 11:45.

***

புகை மூட்டமாக இருக்கிறது. அல்லது பனி மூட்டமா? இது என்ன இடம். நான் எங்கிருக்கிறேன். ·ப்ளைட் இன்னும் வரவில்லையா? அல்லது ·ப்ளைட் நடுவானத்தில் சிதறிவிட்டதா? நான் மேக கூட்டத்தில் நடக்கிறேனா? யார் அது? அதோ. அங்கே. இந்த பனி மூட்டத்தில் எனக்கு எதுவுமே தெரியவில்லை. யாரோ அங்கு நிற்பது போலத்தான் தெரிகிறது. நிழலாடுகிறது. ஹலோ யார் நீங்க? நான் அவனையே பின் தொடர்கிறேன். இல்லை அவளா? இல்லையில்லை அவன் தான். கிட்டே நெருங்கிவிட்டேன். பனி விலகுகிறது. அவன் சிரித்தவாறு நின்று கொண்டிருக்கிறான். வசீகரமான புன்னகை. என்னுடைய அதே கூர்மையான மூக்கு. முகத்தில் சுருக்கங்கள் இல்லை. சிறிய கண்கள். ஆம் எல்லோரும் சொல்லும் பவர்புள் ஐய்ஸ். பட் வெரி டிபரண்ட் ·பேஸ். சார்.

·ப்ளைட்டின் மிக மெல்லிய ஆனால் அழுத்தமான சத்தம். காதுகள் அடைத்துக்கொள்ளும் சுகமான அனுபவம். கண் திரையை விலக்கினேன். விமானப்பணிப் பெண். அழகாகச் சிரித்தாள். எனி சா·ப்ட் டிரிங்ஸ் சார்.ம்ம். எஸ். ஒன் க்ளாஸ் ஆப் ஆரஞ்ச் ஜூஸ் ப்ளீஸ். பக்கத்தில் உட்கார்ந்திருந்தவர் ஹாய் என்றார்.

“ஐயாம் அபிஜித் சர்க்கார் ப்ரம் வெஸ்ட் பெங்கால்.” “க்ளாட் டூ மீட் யூ. ஐயாம் சிவா.” “நைஸ் டு மீட் யூ டூ” “சிவா. வாட் யூ டூ இன் ஜெர்மனி?” “ஐ வாஸ் ஹியர் ·பார் க்வயட் எ லாங் டைம். ·பார் தர்ட்டி இயர்ஸ். ஐ வ்வோன் ·ப்யூ ஸ்டீல் ப்ளான்ட்ஸ் ஹியர். ஜஸ்ட் அ விசிட் டு இன்டியா” “ஒ. ரியலி க்ரேட். ஐ ஜஸ்ட் கேம் ·பார் எ டூர்” “ஒ. தாட்ஸ் நைஸ் மிஸ்டர். அபிஜித்”

சிவா ஆரஞ்சு ஜீஸை சிறிது பருகினார். மறுபடியும் புகை மூட்டம்.

***

இமிக்ரேசன் பாரத்தை பூர்த்தி செய்து எதிரே இருந்த வலையில் வைத்தார் சிவா. பாத்ரூம் போவதற்கு எழுந்தார். “மிஸ்டர். அபிஜித், இ·ப் யூ குட் ப்ளீஸ்” “ய்யா. ஸ்யூர்” அபிஜித் எழுந்து வழிவிட்டார்.
அபிஜித் சிவா நடந்து செல்வதையே சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்தார். பிறகு தனது சீட்டில் அமர்ந்து கொண்டார். சிவாவின் இருக்கைக்கு நேரே இருந்த வலைப்பவுச்சில் சிவாவின் இமிக்ரேசன் கார்ட் இருந்தது. சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு சட்டென்று எடுத்தார். பிரித்தார். மேலே பெயருக்குப் பக்கத்தில் : காளி மாணிக்கம் என்றிருந்தது. அபிஜித் சத்தம் போடாமல் இமிக்ரேசன் கார்ட்டை இருந்த இடத்தில் வைத்தார்.

***

“யூ லுக்ட் வெரி டிஸ்டர்ப்ட் வைல் யூ வேர் ஸ்லீப்பிங். எனி ப்ராப்ளம் மிஸ்டர். சிவா?” யோகர்ட்டின் கடைசி துளிகளையும் பருகிக்கொண்டே அபிஜித் கேட்டார். “நோ நோ. ஐயாம் பெர்பெ·க்ட்லி ஆல்ரைட். ஜஸ்ட் நாட் இன·ப் ஸ்லீப். தாங்க்ஸ் அபிஜித்” சிவா தனது ஸ்பூனில் கனிசமான ப்ரைட் ரைஸ்ஸை எடுத்துக்கொண்டிருந்தார். “எனிவே ஐ வில் கெட்டவுன் அட் பாம்பே. இட்ஸ் ரியலி எ ப்ளஸர் டு மீட் யூ சிவா” “மீ டூ அபிஜித்”

வெளியே வானம் மிகவும் பிரகாசமாக இருந்தது. சுத்தமாக. சிவாவுக்கு பிடித்தமான மெல்லிய நீல நிறத்தில்.

***
சென்னை. இரவு மணி பதினொன்று நாற்பது.

“அண்ணா ஏர்ப்போர்ட் உங்களை அன்புடன் வரவேற்கிறது” அழகிய தமிழ் குரல் பயணிகளை வரவேற்றுக்கொண்டிருந்தது. சிவா இமிக்ரேசன் க்யூவில் நின்று கொண்டிருந்தார். அலுவலர் சிவாவின் பாஸ்போர்ட்டை வாங்கி பார்த்தார். மெதுவாக பக்கத்தில் இருந்த மற்றொரு அலுவலரிடம் பேசிக்கொண்டே எழுந்து நின்றார். பிறகு ஏதும் பேசாமல் சிவாவையே பார்த்துக்கொண்டிருந்தார். பிறகு “வெல்க்கம் ஹோம் சார்” என்று சொல்லி சிரித்தார், பிறகு பாஸ்ப்போர்ட்டில் ச்சாப் அடித்துக் கொடுத்தார்.

சிவா பாஸ்போர்ட்டை வாங்கிக்கொண்டு சிரித்து விட்டு வெளியே வந்தார். பாஸ்போர்ட்டை பிரித்து உள்ளேயிருந்த சிறிய பேப்பரை எடுத்தார். அதில் “தலைவா வருக” என்றிருந்தது. சிவா சட்டென்று அந்த பேப்பரை எடுத்து கசக்கி சுக்கலாக கிழித்து அருகில் இருந்த குப்பைத் தொட்டியில் போட்டார். திரும்பி அந்த அலுவலரைப் பார்த்தார். அந்த அலுவலர் இன்னும் சிவாவையே பார்த்துக்கொண்டிருந்தார். சல்யூட் அடித்தார்.

***

வெளியேறியவுடன் சிவா என்ற பெயர்பலகையைப் பார்த்தார். கூலிங் க்ளாஸை எடுத்து அணிந்து கொண்டார். வேகமாக நடந்தார்.
பெயர் பலகையை வைத்திருந்த ட்ரைவர் சிவாவிடமிருந்து ஒரு லக்கேஜை வாங்கிக்கொண்டு அவரோடு ஓட்டமும் நடையுமாக சென்றார்.சிறிது தூரத்தில் பார்க் செய்யப்பட்டிருந்த வெள்ளை ப்ரீமியர் பத்மினியில் சென்று ஏறிக்கொண்டார். ட்ரைவர் லக்கேஜை பின்னால் வைத்துவிட்டு ஓடோடி வந்து முன் சீட்டில் ஏறிக்கொண்டார். கதவை மூடினார். தொப்பியைக் கழற்றி சீட்டில் வைத்துவிட்டு, திரும்பி சிவாவைப் பார்த்தார். ட்ரைவரின் கண்கள் கலங்கியிருந்தன. நா தழுதழுத்தது. தலைவா என்றார். சிவா ஒன்றும் பேசாமல் கிளம்பலாம் என்று ஜாடை காட்டினார். ப்ரீமியர் ஸ்டார்ட் ஆனது.

காருக்குள் கண்ணாடிக்கு மேல் சூர்யா என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. சிவா சிரித்துக்கொண்டே, “இன்னும் இந்த பெயரை தமிழ்நாட்டில் யார் ஞாபகம் வெச்சிருக்காங்க சத்யா?” என்றார். “நிறைய பேர் இருக்காங்க தலைவா. உங்கமேல உண்மையான பாசமும் நன்றியும் இருக்கிற நிறைய பேர் இன்னும் தமிழ்நாட்டில இருக்காங்க தலைவா.”

தாம்பரம் மெயின் ரோட்டில் நுழைந்த ப்ரீமியர் பத்மினி வேகம் பிடித்தது.

***

(தொடரும்)

இன்சிடென்ட்ஸ்-7

பார்த்த ஞாபகம் இல்லையோ?

சிங்கப்பூர். ரா·பிள்ஸ் பிளேஸ். ·பிட்னஸ் பர்ஸ்ட்.

வாடா வாடா வாங்கிடா
வாய்ல பீடா போட்டுக்கடா
போடா போடா பொழச்சுப்போடா
புடவ வாங்கி கட்டிக்கோடா

என்று பாடிக்கொண்டே வியர்வை வழிய ட்ரெட்மில்லிலிருந்து இறங்கினேன். அவர் என்னைப் பார்ப்பதைப் போல உணர்ந்தேன். என்ன “அப்படி குர்ருன்னு பாக்குற” என்று வடிவேலு போல கேட்கவேண்டும் என்று நினைத்தேன். கேட்கவில்லை. அப்புறம் நாமாச்சு நம்ப ஐபாட் ஆச்சு நம்ப வொர்க் அவுட் ஆச்சுன்னு கொஞ்ச நேரம் இருந்துட்டு, சரி கிளம்பலாம்னு நினைக்கறப்போ, “ஹலோ” ன்னு ஒரு குரல். திரும்பிப்பாத்தா அதே நபர். நானும் ஹலோ என்று சொன்னேன். அவர் கொஞ்ச நேரம் தயங்கி பிறகு “நீங்க முத்து” தானே என்றார். ஆமா “நீங்க” என்றேன். “என்னைத்தெரியலையா. **** you man” என்று சொல்லி அப்போத்தான் டம்பிள்ஸ் அடிச்சிருந்த கையை மடக்கி ஒங்கி வயித்துல ஒரு குத்து விட்டார். ஹெஹே..நாங்களும் சிக்ஸ் பேக்ஸ் வர்றதுக்கு இப்பத்தான வொர்க் அவுட் முடிச்சோம்..அவர் விரல்கள் ஒன்னு ரெண்டு க்ராக் ஆயிருந்தாலும் ஆயிருக்கும்..சொல்லமுடியாது.”அடப்பாவி. இந்த குத்து குத்தறான். கெட்டவார்த்தையில வேறு திட்டறான். ரொம்ப தெரிஞ்சவனா இருப்பானோ” ன்னு நானும் என் மூளையில் கூகிள் செய்தும் அது MSN செர்ச் போல முற்றிலும் சம்பந்தமில்லாத ரிஸல்ட்களையே கொண்டுவந்து கொடுத்தது. ” இன்னும் தெரியலையா. ஐ வில் கில் யூ மேன்” என்று சொல்லி கழுத்தைப் பிடித்து “நான் தான் ப்ரகாஷ். மலேஷியா ப்ரகாஷ். ஏர் ஏசியா. கே எல் எக்ஸ்ப்ரஸ். சித்ரா” “ஓ எஸ். ஹவ் ஸ்டூப்பிட் ஆம் ஐ. நௌ ஐ ரிமெம்பர் யூ. ஓ மை ப்ரகாஷ். யூ லுக் சோ வெரி ****ing changed. யூ லுக் சோ டிபரென்ட்.” அப்புறம் கட்டிக்கொண்டோம்.

***

மலேஷியா. கோலாலம்பூர். கே.எல்.எக்ஸ்பிரஸ். டாசிக் செலாடான் ஸ்டேஷன்.

ன்று சனிக்கிழமை. த வெரி சேம் ஸ்டூபிட் சாட்டர்டே. நான் அந்த ஸ்டேஷனில் ட்ரெயினுக்காக காத்துக்கொண்டிருந்தேன். ஒரு தமிழ் குடும்பம் வந்தது. ஒரு தாத்தா (அல்லது தாத்தா போல தோற்றமளித்தவர்) ஒரு அம்மா அப்புறம் ஒரு பெண். நேச்சுரலி, நான் அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தேன். அங்கிருந்த ஒரு அலுவலர் அவர்களுக்கு புத்ரஜெயாவில் இறங்கி சைபர்ஜெயாவுக்கு செல்வது எப்படி என்று பாடம் எடுத்துக்கொண்டிருந்தார். அந்த தாத்தாவும் விடாமல் கேள்விகேட்டுக்கொண்டேயிருந்தார். நான் புத்ரஜெயாவில் தான் இறங்கவேண்டும். சைபர்ஜெயாவுக்கு செல்லும் பஸ்ஸ¤ம் அங்கு தான் வரும். எனவே நான் தாத்தாவிடம் சென்று நான் உங்களை சைபர்ஜெயாவுக்கு பஸ் ஏற்றி விடுகிறேன். எனக்கு தெரிந்த நண்பர்கள் சிலர் இருந்தால் உங்களை பத்திரமாக இறக்கிவிட சொல்கிறேன் கவலைப்படாதீர்கள் என்றேன்.

அவருக்கு புத்ரஜெயாவில் வேலை கிடைத்திருக்கிறது என்றும் திங்கட்கிழமை வேலையில் சேரவேண்டும் என்றும் அதற்காகத்தான் இன்று சும்மா இடத்தைப் பார்த்துவிட்டு வரலாம் என்று போகிறேன் என்றார். மேலும் ரயிலில் செல்லும் போது எக்கச்சக்கமாக கேள்விகள் (எனக்கு பதில் தெரியுதோ இல்லியோ) கேட்டுக்கொண்டே வந்தார் அந்த தாத்தா. அந்த அம்மாவும் பெண்ணும் அமைதியாக அமர்ந்திருந்தனர். எனக்கு எப்படா புத்ரஜெயா வரும் என்றாகிவிட்டது. பத்து நிமிஷம். எப்பவும் சைபர்ஜெயாவுக்கு செல்லும் பஸ்தான் ரெடியாக நிற்கும். எங்கள் ஆபிஸ¤க்கு செல்லும் பஸ் கொஞ்சம் லேட்டாத்தான் வரும். எனவே வேகமாக அவரைக் கழட்டிவிட்டுவிடலாம் என்று நினைத்துக்கொண்டேன்.

ஆனால் அன்று சைபர்ஜெயாவுக்கு போகும் பஸ் ரொம்ப நேரமாக வரவில்லை. டைம். ரொம்ப நேரம் கழித்து வந்த பஸ் ஒன்றில் அவர்களை ஏற்றிவிட்டு நான் என் ஆபிஸ¤க்கு சென்றேன்.

***

புதன்கிழமை. புத்ரஜெயா கே.எல்.எக்ஸ்பிரஸ் ஸ்டேஷன்.

நான் வழக்கம்போல ட்ரெயினுக்கு வெயிட்டிங். சைபர்ஜெயா மக்கள் வந்தார்கள். கூடவே அந்த பெண். எந்த பெண்? அந்த தாத்தா வந்தாரே, அவரோடு வந்ததே அந்த பெண். அந்த பெண் என்னைப் பார்த்ததும் என்னை அடையாளம் கண்டு கொண்டாள்.(ஷீ மஸ்ட் பி சோ கிளவர் டு ரிமெம்பர் சச் எ ஸ்டூபிட் ·பேஸ்) ஆனால் சிரிக்கவில்லை டப்பென்று முகத்தை தொங்கப்போட்டுக்கொண்டாள். நான் அவளிடம் சென்று ஹாய் என்றேன். அவளும் ஹாய் என்றாள். பிறகு “நீங்க இங்க எங்க” என்றேன். அவள் கொஞ்ச நேரம் தயங்கிவிட்டு பிறகு “சாரிப்பா. அன்னிக்கு வந்தது என்னோட அப்பாதான். அவர் சொன்னமாதிரி அவருக்கு வேலை கிடைக்கல்ல, எனக்கு தான் வேலை கிடச்சது. நான் தான் திங்கட்கிழமை ஜாயின் பண்ணனும். அதுக்குதான் அவர் என்னக்கூட்டிட்டு இடத்த பாக்க வந்தார். அவர் ஏன் பொய் சொன்னார்னு தெரியல ஆனா சாரி” என்றாள். அவர் பொண்ணுக்குத்தான் வேலை கிடச்சிருக்குன்னு சொன்னா நூல் விட்ருவோம்னு நினைச்சிட்டாரோ? இல்லாட்டினா நூல் விடமாட்டோமா என்ன? “உங்க பேர்” “சித்ரா” “வாவ். நைஸ் நேம்”

அன்று ஆரம்பித்து எங்கள் நட்பு கே.எல்.எக்ஸ்பிரஸின் வேகத்தைவிட இன்னும் அதிவேகமாக சென்றது.

***

கே.எல். எக்ஸ்பிரஸ்.

க்ஸ்பிரஸ் அதிரடியாக சென்று கொண்டிருந்தது. ஐ லைக் திஸ் ட்ரெயின். ஒரு காரணம் இது நல்ல வேகம். இரண்டாவது இதன் அழகு. நல்ல spacious கூட. அன்று நான் கொஞ்சம் லேட்.

என்னருகில் வந்து அவர் உட்கார்ந்தார். ஹாய். ஹாய். ஐயாம் ப்ராகாஷ். ஓ. நைஸ் டு மீட் யூ. ஐயாம் முத்து. ஷேக் ஹேண்ட்ஸ். மௌனம். ஐயாம் வொர்க்கிங் அஸ் சம் டுபாகூர் மானேஜர் இன் ஏர் ஏசியா பசிபிக். ஓ தாட்ஸ் கிரேட். உங்களுக்கு சம்பளம் எப்படி பட்ஜெட் சம்பளமா இல்ல முழு சம்பளமா? அன்ட் பைதவே ஐயாம் வொர்க்கிங் அஸ் எ ஸ்டூபிட் புரோகிராமர் ·பார் ஹைடெக். ஐயாம் ·ப்ரம் கோயம்புத்தூர். ஐயாம் ·ப்ரம் மதுரை. ஓ மதுரையா நீங்க. பாத்தா அப்படித்தெரியல. (பின்ன எப்படித்தெரியுது பான் ஷாப்பில கல்லாக்கு பின்னாடி உக்காந்திருக்கிற ஷேட்டு மாதிரி தெரியுதா?)

நட்பு பற்றிக்கொண்டது. அவர் தமிழ்நாட்டிலிருந்து வந்திருக்கிறார். கே. எல் -லில் ஏர் ஏசியா பசிபிக்ல ஏதோ மானேஜரா வேலை பாத்துக்கொண்டிருந்தார். அங்கு ஒரு மலேஷிய தமிழ் பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டு, அங்கேயே செட்டிலாகி, ஒரு குழந்தையும் பெற்றுக்கொண்டார். அவருக்கு இருந்த ஓரிரு இந்திய தமிழ் நண்பர்களில் நானும் எனது நண்பர் சரவணனும் இருவர்.

ஒரு நாள் திடீரென்று அவரது மகனுக்கு பிறந்தநாள் அதனால் கண்டிப்பாக வரவேண்டும் என்றார். முதலில் பிகு பண்ணிவிட்டு பிறகு சரி என்று போவதற்கு ஒத்துக்கொண்டோம்.

***

கோலாலம்பூர். செராஸ். மாலை எட்டு மணி.

ப்ராகாஷ் மகனின் பிறந்தநாள் விழா. விழா என்று சொல்லமுடியாது ஜஸ்ட் எ கொண்டாட்டம். தெரிந்த நபர்கள் சிலர் மட்டுமே வந்திருந்தனர். நானும் சரவணனும் ஆஜர். கொண்டுபோயிருந்த கேக் மற்றும் கிப்ட்டைக் கொடுத்துவிட்டு உள்ளே நின்று கொண்டிருந்தோம். வந்திருந்த அனைவரும் மலேஷியாவில் குடியேறியிருந்த தமிழ் மக்கள். எங்களிடம் விடாமல் இந்தியாவைப்பற்றியும் தமிழகத்தைப் பற்றியும் நிறைய விசயங்கள் கேட்டுக்கொண்டேயிருந்தனர். அவர்களில் நிறைய பேர் இந்தியாவுக்கு சென்றதில்லை. ஆனால் தமிழகத்திற்கு ஒரு முறையாவது சென்றுவிடவேண்டும் என்கிற ஆர்வம் அவர்களிடம் நிறைய இருக்கிறது.

அதோ அங்கிருக்கும் கும்பலில் அந்த தாத்தாவும் இருக்கிறார். என்னை ஏமாற்றிய தாத்தா. அப்புறம் அந்த அம்மா. இவர்கள் இங்கே என்ன செய்கிறார்கள் என்று நினைக்கும் போதே “ஹாய் முத்து. வாட் எ சர்ப்ரைஸ். நீ என்ன இங்க” என்றொரு ஸ்வீட்டான குரல். சித்ரா. “சித்ரா நீ இங்க?” “இது என்னோட அக்கா வீடு. குழந்தை அக்காவோடது”

ப்ராகாஷ் வந்தார். சித்ராவையும் அவளுடைய பேமிலியையும் அறிமுகப்படுத்தி வைத்தார். தாத்தா ப்ராகாஷினின் மாமனார். தாத்தாவுக்கு என்னைப் பார்க்கவேமுடியவில்லை.

மறுமுறை இந்த வாழ்க்கையில் என்னை சந்திக்கவே போவதில்லை என்று நினைத்து அவர் அன்று அந்த பொய்யை சொல்லியிருக்கலாம். ஆனா உலகம் ரொம்ப -இப்ப ரொம்ம்ம்ம்ம்ம்ப- சின்னது.

***

நான் சிங்கப்பூர் வந்தது ப்ராகஷ¤க்கு தெரியாது. நான் புத்ரஜெயாவிலிருந்து ஐமோக்கா என்ற இங்கிலாந்து பேஸ்ட் கம்பெனியில் வேலை பார்த்துக்கொண்டிருந்த பொழுது அவரிடமும் அவர் குடும்பத்திடமும் தொடர்பு விட்டுப்போய்விட்டது. நடுவில் நான் சிம் கார்ட் தொலைத்து வேறு வாங்கினேன்.

நீண்ட நாட்கள் கழித்து அவரை இங்கு ஜிம்மில் சந்திப்பேன் என்று நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. திடீரென்று சந்தித்த பொழுது அவரை சட்டென நினைவுக்கு கொண்டுவரமுடியவில்லை. அவர் நிறைய மெலிந்திருந்தது காரணமாக இருக்கலாம். இல்லை எனது ஞாபக சக்தி மழுங்கிவிட்டது கூட காரணமாக இருக்கலாம்.

***

* பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

(மற்ற இன்சிடென்ட்ஸ் பகுதிகள் தொடர்கள் தலைப்புக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளன.)

கண்டிப்பாக படிக்க வேண்டிய இருபது புத்தகங்கள்.
Thanks: August.

இந்த பட்டியல் “ஆகஸ்ட்” என்கிற மாத இதழ் வெளியிட்டிருந்தது. இவைதான் வேறு புத்தகங்கள் இல்லை என்பது இல்லை. ஆனால் இந்த இருபது புத்தகங்களும் நல்ல புத்தகங்கள் என்பது தான் உண்மை.

இவற்றில் நான் மூன்று மட்டுமே படித்திருக்கிறேன். Catcher In The Rye, Midnights Chidren and Fountain Head. இவை மூன்றுமே மிக அருமையான Novels.

பின் குறிப்பு:அனானியின் பின்னூட்டம் மிகச்சரி. “கண்டிப்பாக படிக்க வேண்டிய இருபது ஆங்கில புனைவுகள்” என்று இந்த இடுகைக்கு தலைப்பு கொடுத்திருந்தேன். பல மொழிபெயர்ப்பு புத்தகங்கள் இருப்பதால் அவற்றை ஆங்கில புனைவுகள் என்று சொல்வது சரியில்லை (அபத்தம்!). எனவே தலைப்பை மாற்றிவிட்டேன்.

ஆவியும் பாவியும்

(சிறுகதை)

“நானும் கேள்விப்பட்டிருக்கேன்யா. எங்க ஊர்ல கூட பேசிப்பாய்ங்க. நான் ஒரு தடவ நேர்லயே பாத்திருக்கேன்.” என்றார் இன்ஸ்பெக்டர். “நீங்க நேர்ல பாத்திருக்கீங்களா? நான் ஆவிகளோட பேசவேசெஞ்சிருக்கேன்” என்றார் ஏட்டையா பெருமையாக. “அப்படியா? சும்மா ரீல் சுத்தாதயா” “இல்ல இன்ஸ்பெக்டர் சார். உண்மை நான் பேசிருக்கேன். சில ஆவிங்க என் கூட பேசும். இப்ப வேணும்னா செஞ்சு பாக்கலாமா?” இன்ஸ்பெக்டர் ஆழ்ந்து யோசித்தார். பிறகு “ம்ம்..செஞ்சு பாக்கலாம்”

டேபிளில் இருந்த பொருட்கள் யாவும் தங்கள் இருப்பிடத்தை தற்காலிகமாக இழந்தன. பூமிபந்து உட்பட. ஏட்டையா ஒரு சாக்பீஸை எடுத்துவந்து டேபிளில் கோடுகள் போட்டார். பிறகு அழகாக A B C என்று Z வரைப் போட்டார். பிறகு 1 2 3 என்று ஒன்பது வரை எண்கள் எழுதினார். லைட்கள் ஆப் செய்யப்பட்டன. இரண்டு மெழுகுவர்த்திகள் மட்டும் ஏற்றப்பட்டன. இன்ஸ்பெக்டருக்கு வேர்த்து விட்டது.

ஒரு தடித்த இரண்டு ரூபாய் நாணயம் ஒன்றை எடுத்து ஒரு கட்டத்தில் வைத்தார் ஏட்டையா. ஒரு முனையை அவர் பிடித்துக்கொள்ள மறுமுனையை இன்ஸ்பெக்டர் பிடித்துக்கொண்டார். இருவரும் மவுனமாக அமர்ந்திருந்தனர்.

திடீரென்று நாணயம் HA HA HA HA என்று நகர்ந்த்து. “பாத்தீங்களா சார், எப்படி சிரிக்குதுன்னு” என்றார் ஏட்டையா.”யாருய்யா சிரிக்கிறா?” என்றார் இன்ஸ்பெக்டர் அப்பாவியாய். முறைத்த ஏட்டைய்யா, பின்னர் சற்று பவ்யமாக “காட்டேரி சார்” என்றார். “என்னது” என்று கிட்டத்தட்ட விழுந்தேவிட்டார் இன்ஸ்பெக்டர்.ஏட்டையா யார் நீ என்று கேட்டதற்கு நாணயம் K A T E R I என்று நகர்ந்தது. அதிர்ந்து போன ஏட்டையா “சாரி நாங்க உன்ன கூப்பிடல. நீ போயிடு” என்றார். நாணயம் N O என்று நகர்ந்தது. ஏட்டையா “தயவுசெஞ்சு போயிடு” என்றார்.

டேபிளுக்கு மேலிருந்த குண்டு பல்ப் சட்டென்று உடைந்தது. சுவரில் மாட்டப்பட்டிருந்த கடிகாரம் கீழே விழுந்து சுக்கல் சுக்கலாக உடைந்தது. இன்ஸ்பெக்டர் அரண்டு போய்விட்டார். ஒரே ஒட்டமாக ஓடி வெளியே சென்று நின்று கொண்டார். ஏட்டையாவும் பிற காண்ஸ்டபிள்களும் என்ன செய்வதென்று தெரியாமல் இங்கும் அங்கும் ஓடினர். பிறகு சுதாரித்து லைட்களைப் போட்டனர். ஸ்டேசனுக்கு உயிர் வந்தது.

வெளியே ஒரு ஸ்கூட்டர் வந்து நின்றது. அதிலிருந்து ஒரு முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒரு ஆள் இறங்கினார். நேரே, வெளியே விதிர்விதிர்த்து நின்று கொண்டிருந்த இன்ஸ்பெக்டரிடம் வந்து “சார்” என்றார். இன்ஸ்பெக்டர் திரும்பி தன் பயத்தை மறைக்கும் பொருட்டு எரிச்சலாக : யாருய்யா நீ என்றார். “சார் என் பேரு மாணிக்கம் சார்” என்றார் வந்தவர்.

***

“உங்களுக்கு எத்தனவாட்டிடா சொல்றது? வேலைசெய்யுற பொண்ணுங்க மேல கையவெக்காதீங்கன்னு? அப்படியா கொழுத்து போய் அலயறீங்க? இந்ததடவ உங்களுக்கு மன்னிப்பே கிடையாது. யார் சொன்னாலும் நான் கேட்கப்போவது இல்ல. உங்க மூனு பேரையும் நான் டிஸ்மிஸ் செய்யறேன். உங்க சம்பளபாக்கிய அக்கவுண்ட்ஸ் டிப்பார்ட்மெண்ட்ல போய் வாங்கிக்கோங்க. இப்ப நீங்க போகலாம்.”

“இல்ல சார். இந்த தடவ..”

“என்னால ஒன்னும் செய்ய முடியாது சுந்தர். கெட் அவுட் நௌவ்”

மானேஜர் மாணிக்கத்தின் அறைக்கதவு படீரென்று சாத்தப்பட்டது. சுவர் ஒருமுறை அதிர்ந்து அடங்கியது போல இருந்தது. நெற்றியில் தோன்றிய வியர்வையை கர்சீப்பை எடுத்து துடைத்துக்கொண்டார். வெள்ளை வெளேர் என்ற கர்சீப். முனையில் அழகாக G என்று எம்ப்ராய்ட் செய்யப்பட்டிருந்தது. ட்ரிங் ட்ரிங் ட்ரிங்
“ஹலோ சார். ம்ம். சொல்லுங்க சார்” “ம்ம் அனுப்சுட்டேன் சார்” “இது நல்ல சந்தர்ப்பம். அவிங்களா வந்து மாட்னாய்ங்க. ஒன்னும் பிரச்சனை இருக்காது சார்.” “பொண்ணுங்க விசயம்ங்கறதனால யூனியனும் ஒன்னும் கண்டுக்காது.” “பாத்துக்கலாம் சார்” “ஓகே சார்” டொக். நீல நிற ரிசீவர் பத்திரமாக தன் இருக்கையில் சென்று சமர்த்தாக அமர்ந்துகொண்டது.

மாணிக்கம் சேரில் சாய்ந்து விட்டத்தை பார்த்தான். பேன் மிக மெதுவாக சுழன்றுகொண்டிருந்தது. எழுந்து சென்று பேனின் வேகத்தை அதிகப்படுத்தினான். மேஜையிலிருந்த ஓரிரு பேப்பர்கள் பறந்தன. AAA மோட்டார்ஸின் வவுச்சர் இவன் காலடிக்கு வந்தது.

சில நம்பர்கள் டயல் செய்து ரிசீவரை காதுக்கு கொடுத்தான். ரிங். ரிங். ரிங். ரிங். ரிங். ரிங். ரிசீவரை படீரென்று சாத்தினான். அறையின் மூலையில் இருந்த மண்பானையில் கொஞ்சம் தண்ணீர் குடித்துக்கொண்டான். குளிர்ச்சியாகவே இல்லை. மண்பானையில் கூட டூப்ளிகேட் செய்வாய்ங்களோ என்று நினைத்துக்கொண்டான். மீண்டும் வந்து டயல் செய்தான். ரிங். ரிங். ரிங். ரிங். ரிங். “எங்கடி போன?” “அடுப்பில வேலையா இருந்தேங்க” “ம்ம்..ஏன் இப்படி மூச்சு வாங்குது உனக்கு..ஓடி வந்தியா?” “ஆமாங்க. நீங்க கிளம்பிட்டீங்களா?” “இல்லடி. இன்னும் நேரமாகும். இன்னைக்கு கொஞ்சம் லேட்டாத்தான் வருவேன். நீ சாப்பிட்டு படு. எனக்கு எடுத்துவெக்க வேணாம்” “ம்ம்..சரிங்க. நான் பக்கத்து கோயிலுக்கு போயிட்டு வாரேன்” “ம்ம்.”

***

குளிர்ந்த காற்று முகத்தை இதமாக வருடிக்கொண்டிருந்தது. பின்னிரவில் சாலையில் ஸ்கூட்டர் ஓட்டிச்செல்வது என்பது மிகவும் ரசிக்கத்தகுந்த ஒன்று. யாரைப்பற்றியும் கவலைப்படத்தேவையில்லை. தெருவிலும் ரோட்டிலும் ஈ காக்கா இருக்காது. அதுவும் டிசம்பர் மாசத்து இரவு என்றால் பனிக்காற்று மேலும் அழகு சேர்க்கிறது. தனது வீடு இருக்கும் தெருவுக்கு திரும்பினான். தங்கம் பலசரக்கு கடைக்கு அருகிலே இருக்கும் பெட்டிக்கடை திறந்திருந்தது. வண்டியை நிறுத்திவிட்டு ஒரு டீ சொல்லிவிட்டு காலியாக இருந்த பெஞ்சில் உட்கார்ந்தான். தெருவில் இரண்டொரு குடிமகன்களைத்தவிர யாரும் இல்லை. ஆங்காங்கே தெருநாய்கள். இந்த தெருநாய்களுக்கு விவஸ்தையே கிடையாது என்று மனதுக்குள் திட்டிக்கொண்டே டீயை வாங்கிக்கொண்டான். டீயின் இளஞ்சூடு உள்ளங்கையில் மிகவும் இதமாக படிந்தது. டீ மாஸ்டர் தன்னை கூர்ந்து பார்ப்பதைப் போல உணர்ந்தான்.

ஸ்கூட்டரை நிறுத்தி ஸ்டாண்ட் போட்டுவிட்டு. பின்னால் வைத்திருந்த கவரை எடுத்து முழுதுமாக ஸ்கூட்டரை மூடினான்.. கேட்டின் கொண்டியை விடுவித்துக்கொண்டு உள்ளே சென்றான். இரும்பு கேட் மிகுந்த அபஸ்வரமாய் ஒலி எழுப்பியது. குளிருக்கு கேட்டுக்கு அருகே முடங்கிக்கிடந்த பூனை எழுந்து சலிப்பாக நெட்டிமுறித்துக்கொண்டது. பிறகு இவனை தீர்க்கமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டும் படுத்துக்கொண்டது.

கங்கா இந்நேரம் எழுந்து லைட்டப்போட்டிருப்பாளே? கதவைத்தட்டினான்.

இனி தட்டி பிரயோஜனம் இல்லை என்று பையில் வைத்திருந்த மாற்றுச்சாவியை சிகரெட் லைட்டரை வைத்து தேடி எடுத்து திறக்கமுயன்றான். பூனை இவனையே முறைத்துக்கொண்டிருந்தது.

வீடு இருட்டாக இருந்தது. சுவற்றைத்தடவி சுவிட்சை ஆன் செய்தான். இரண்டு சினுங்களுக்குப் பிறகு டியூப் லைட் உயிர் பெற்றது. கங்கா என்றழைத்தான். பதிலில்லை. செருப்பைக் கழற்றாமலே படுக்கையறைக்குச் சென்றான். அங்கு யாரும் இல்லை. சமயலறை. சமைத்து வைத்தவை வைத்தபடி அப்படியே இருந்தன. கங்கா என்று மிகச் சன்னமாக முனங்கினான்.

வெளியே வந்து படியில் உட்கார்ந்தான். அவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. வியர்வை அரும்பியது. கைகள் நடுங்கியபடியே இருந்தன. மணி இரவு ரெண்டு. எங்கே போயிருப்பாள்? அவளது பழைய செருப்புக்கள் ஒரு மூலையில் இங்கொன்றும் அங்கொன்றுமாக கிடந்தன, கவனிக்கப்படாமல், தூசி படிந்து.

***
“யாருய்யா நீ” என்றார் இன்ஸ்பெக்டர் தனது பயத்தை மறைக்கும் பொருட்டு எரிச்சலாக. “சார் என் பேரு மாணிக்கம் ” என்றார் வந்தவர்.

“என்ன பேரு சொன்ன? கங்காவா? ஒரு கம்ப்ளயண்ட் எழுதிக்கொடுத்திட்டு போ. நாளைக்கு காலையில பாக்கலாம்.” என்று சொல்லிவிட்டு இன்ஸ்பெக்டர் ஏட்டையாவைக் கைகாட்டினார். ஏட்டையா கொடுத்த பேப்பரில், எழுதமுடியாமல் மாணிக்கத்தின் கைகள் உதறல் எடுத்துக்கொண்டேயிருந்தன. மாணிக்கம் டேபிளில் உடைந்து கிடக்கும் பல்பையும், கிழே சுக்கலாக கிடக்கும் கெடிகாரத்தையும் வினோதமாக பார்த்துக்கொண்டேயிருந்தான்.

***

கங்கா ஓடாத. நில். இங்க வா. எங்க போற. போகாதடி. ட்ரிங்.ட்ரிங்.ட்ரிங்.ட்ரிங்.ட்ரிங். டக்கென்று முழித்தான் மாணிக்கம். ஓ எல்லாம் கனவா? என்று நினைத்தான்.கங்கா போன் அடிக்குது பார். வந்து எடுடி. ட்ரிங். ட்ரிங். பாதித்தூக்கத்தில் சென்று போனை எடுத்தான். ஹலோ. ட்ரிங். ட்ரிங்.ட்ரிங். ஹலோ.ஹலோ. அது தான் எடுத்தட்டன்ல. ட்ரிங்.ட்ரிங்.ட்ரிங். ஓ. காலிங்பெல்லா. சட்டென்று முழு நினைவுக்கு வந்தான். ஹாலைத்திரும்பிப் பார்த்தான். சுத்தம். கங்கா. ஓட்டமும் நடையுமாக போய் கதவைத்திறந்தான்.

ஏட்டையாவும். கான்ஸ்டபிளும் நின்றிருந்தார்கள். “சட்டைய போட்டுட்டு என் கூட வா” என்றார் ஏட்டையா. மாணிக்கம் அதிர்ந்தான். “எ..எ…எ..என்ன” “போய்..சட்டைய போட்டுட்டு வா.. சொல்றேன்”

“கோயிலுக்கு பின்னால இருக்கிற ஆத்துப்பாலத்தில உன் பொண்டாட்டி செத்துக்கிடக்குறா” என்றார் ஏட்டையா. சுசுகி இன்னும் வேகமெடுத்தது. மாணிக்கத்தின் உலகம் தலைகீழாக சுழன்றது. காண்ஸ்டபிளின் தோள்களை இறுக்கமாக பற்றிக்கொண்டான். ரோட்டில் வாகனங்கள் அனைத்தும் சத்தமின்றி நிசப்தமாக சென்றுகொண்டிருந்தன.

***

இரவு மணி ஏழு இருக்கும். சுசுகி மெதுவாக வந்து டீக்கடையின் முன்னால் நின்றது. இன்ஸ்பெக்டர் சுசுகியிலிருந்து இறங்கி ஸ்டாண்டிட்டு அதில் சாய்ந்து நின்றுகொண்டு ஸ்டைலாக ஒரு சிகரெட் எடுத்து பற்றவைத்துக்கொண்டார். ஏட்டையா டீக்கடைக்குள் சென்று எதையோ வாங்கி பையில் வைத்துக்கொண்டு பேசிக்கொண்டிருந்தார்.

இண்ஸ்பெக்டர் தங்கம் பலசரக்குக் கடையை நோட்டம் விட்டார். கங்கா ஏதோ வாங்கிக்கொண்டிருந்தாள். கடைக்காரர் கொடுத்த ஏதோ ஒன்றை சட்டென்று அவசரமாக வாங்கி பையில் போட்டுக்கொண்டாள். கொடுக்கும்போது கடைக்காரர் கங்காவின் கைகளில் கிள்ளியதை இண்ஸ்பெக்டர் கவனிக்காமல் இல்லை.

கங்கா கடையை விட்டு இறங்கி வேகவேகமாக பின்னால் திரும்பிப் பார்க்காமல் நடந்து சென்றாள். இன்ஸ்பெக்டர் மெதுவாக நடந்து பலசரக்குக் கடையில் ஏறினார். இன்ஸ்பெக்டரை பார்த்த பலசரக்கு கடைக்காரர் அதிர்ந்தார். இன்ஸ்பெக்டர் சிரிக்கவே. பலசரக்கு கடைக்காரரும் சிரித்தார். இன்ஸ்பெக்டர் என்ன என்றார் சிரித்துக்கொண்டே. “என்ன நடக்குது”. “ஒன்னும் இல்லீங் சார்” என்றார் கடைக்காரர் இன்னும் சிரிப்பை நிறுத்தாமல். உள்ளே திரும்பி “டேய் பையா சாருக்கு ஒரு சேர் போடுடா” என்றார்.

இன்ஸ்பெக்டர் உட்கார ஏட்டையா வந்து நின்றார். ஏட்டையா கடைக்காரரிடம் கையை நீட்ட. கடைக்காரர் “நேத்துதானே சார் கொடுத்தேன்” என்றார். “நேத்து கொடுத்தா இன்னைக்கு நீ சீடி கொடுக்கலையா” என்றார் இன்ஸ்பெக்டர் சற்று கடுமையாக. “எங்க சார்.. முன்ன மாதிரி இல்ல சார். காலெஜ் கேர்ல்ஸ் தான் கொஞ்சம் வருதுங்க. அப்புறம் இந்த மாதிரி சில பேமிலி பொண்ணுங்க” என்று கங்கா சென்ற திசையை நோக்கி கையைக் காட்டினார்.

“சரி நாளைக்கு சேர்த்து வித்துக்கோ இன்னைக்கு பணத்த குடு” என்று சொல்லிக்கொண்டே கீழிறங்கி சுசுகிக்கு வந்து டீக்கடைக்காரன் கொடுத்த டீயை வாங்கி சுவராஸ்யமாய் உறிஞ்சிக்கொண்டே கங்கா சென்ற திசையை நோக்கி பார்த்துக்கொண்டேயிருந்தார்.

***

காலிங்பெல் அடிக்கும் சத்தம் கேட்டு கங்கா முதலில் பயந்தாள். பிறகு பார்த்துக்கொண்டிருந்த சீடியை நிறுத்திவிட்டு சீடியை எடுத்து கீழே இருந்த புத்தகத்துக்குள்ளே மறைத்து வைத்தாள். டீவியை ஆப் செய்து விட்டு, மெதுவாக சென்று கதவைத்திறந்தாள். இன்ஸ்பெக்டர்.

எதிர்பாராத சமயத்தில் இன்ஸ்பெக்டர் அவளை உள்ளே தள்ளிக்கொண்டு நுழைந்தார். இங்க அந்த மாதிரி சீடி நிறைய இருக்காமே என்று சொல்லிக்கொண்டே வீட்டை தேடுவது போல பாவனை செய்தார். பிறகு கதவைப் பூட்டி தாழ் போட்டார்.

“இல்ல சார் வந்து சார்..” என்று கங்கா முனகியதை அவர் கேட்கவேயில்லை.

***

காலிங்பெல் சத்தம் கேட்டு கங்கா திடுக்கிடவே செய்தாள். இன்ஸ்பெக்டர் அவசர அவசரமாக பேண்டை மாட்டிக்கொண்டார். கங்கா சேலையை சரிசெய்து கொண்டு வேறு வழியில்லாமல் கதவைத்திறக்க போனாள். இன்ஸ்பெக்டர் ஒளிவதற்கு இடம் தேடிக்கொண்டிருந்தார்.

கதவைத் திறந்தாள் கங்கா. நின்று கொண்டிருந்தது ஏட்டையா. “அம்மா. இன்ஸ்பெக்டர் இருக்காராமா? கொஞ்சம் வரச்சொல்லுங்கம்மா. அவசர கேஸ் ஒன்னு” என்றார் ஏட்டையா.

***

“ஏன்யா ஏட்டையா இவ்வளவு நாளாச்சு இந்த கேசில ஒன்னுமே பிடிபட மாட்டீங்குதே. கங்கா செத்து ஒரு மாசமாகுது. இன்னும் ஒரு லீட் கூட கிடைக்கலியேயா. எந்தப்பக்கம் போனாலும் ஒரே முட்டுச்சந்தா இருக்கே. நமக்கு வேண்டப்பட்ட பொண்ணு வேற” என்று சொல்லி இன்ஸ்பெக்டர் சற்று சீரியஸானார். ‘ஒருவேளை விசயம் தெரிஞ்சு கங்காவோட வீட்டுக்காரன் போட்ருப்பானோ” என்றார். ஏட்டையா “இருக்கலாம் சார். ஆனா தெரியறதுக்கு வாய்ப்பில்லையே. தெரிஞ்சாமாதிரியும் தெரியலையே. தெரிஞ்சிருந்தா அவன் எதுக்கு ராத்திரியோட ராத்திரியா கம்ப்ளயின்ட் பண்ண வரான்? அதுவும் உங்ககிட்ட” என்றார். முறைத்த இன்ஸ்பெக்டர் “அதுவும் சரிதான். எனக்கு மண்டைய குழப்புதுய்யா. ஒரு பீடி இருந்தா குடு” என்றார்.

ஏட்டையா “ஆவி ஜோதிடம் பத்தி கேள்விப்பட்டிருக்கீங்களா சார்” என்றார். கொஞ்சம் அதிர்ந்த இன்ஸ்பெக்டர் “என்னது ஆவி ஜோதிடமா. அன்னிக்கு பட்டதே போதும்யா இனிமே ஆவிகளோட சங்காத்தமே வேணாம்” என்றாஎ இன்ஸ்பெக்டர். “ஆவி ஜோசியம் பாக்கலாம் சார் எங்கேயாவது லீட் கிடைக்க வாய்ப்பிருக்கு” என்றார் ஏட்டையா.

***

மீடியம் அமைதியாக இருந்தார். ஏதும் வந்ததற்கான அறிகுறிகள் அவ்வளவாக இல்லை. இன்ஸ்பெக்டரும் ஏட்டையாவும் ஒன்றும் பேசிக்கொள்ளவில்லை. திடிரென்று ஏதோ தெலுங்கில் ஏதோ பேசினார் மீடியம். வேங்கஒலிபேசுரா கொடுக்கா என்றார். பிறகு அமைதியானார். பிறகு ஏதோ சட்சட்சட்சட்சட்சட்சட்சட் என்றார். உண்மையிலே அது ஏதோ மொழி தான் என்று நினைத்து இன்ஸ்பெக்டர் பரிதாபமாக ஏட்டையாவைப் பார்த்தார். ஏட்டையாவுக்கும் ஏதும் புரிந்திருக்கவில்லை என்று அவரது குழம்பிய முகம் காட்டியது.

நீண்ட அமைதிக்குப் பிறகு மீடியம் சாந்தமானார். பிறகு இன்ஸ்பெக்டரும் ஏட்டையாவும் ஒன்றும் தேராது என்று நினைத்து எழுந்திருக்கையில் “இன்ஸ்பெக்டர்” என்ற பெண்குரல் அமைதியாக ஒலித்தது. இன்ஸ்பெக்டருக்கு புல்லரித்து விட்டது. திரும்பிப் பார்த்தார். “நான் தான் கங்கா வந்திருக்கிறேன்” என்றார் மீடியம்.

***

“என் புருஷனுக்கு என் மேல சந்தேகம் எப்பவுமே. உங்க கூட இருந்தப்பவும். இல்லாதப்பவும். நீங்க வந்து போக ஆரம்பிச்ச பிறகு இன்னும் அதிகமாகிருச்சு. எப்பப்பாத்தாலும் என் மேல சந்தேகம் சந்தேகம். நிறைய தடவ போட்டு அடிஅடின்னு அடிச்சிருக்கார். அழுது அழுது என் கண்ணீரே வத்திப்போச்சு. அன்னைக்கு கோயிலுக்கு போறேன்னு சொன்னப்ப சரின்னு சொன்னவர். நான் கோவிலுக்கு போனப்பிறகு என்னை கண்காணிக்க வந்தார். நான் கோவிலைச்சுற்றி விட்டு நீண்ட நேரமாக பாலத்தில் உட்கார்ந்திருந்தேன். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. பாலத்திலிருந்து குதித்து விடலாம் என்று கூட யோசித்துக்கொண்டிருந்தேன். ஆனால் பாலத்தின் அடியில் ஓடிக்கொண்டிருந்த -இல்லை இல்லை நகர்ந்து கொண்டிருந்த- ஆற்றின் தாங்கமுடியாத துர்நாற்றத்தால் அந்த முடிவை தற்காலிகமாக நிறுத்து வைத்திருந்த போதுதான், அவர் வந்தார். யார எதிர்பார்த்து இங்க உட்கார்ந்திருக்க என்று கேட்டார். நான் ஒன்றும் இல்லை சும்மாதான் உட்கார்ந்திருக்கேன்னு சொல்லியும் அவர் கேட்கவில்லை. என் மீது அபாண்டமாக வார்த்தைகள் அள்ளி வீசினார். என் குடும்பத்தை கேவலமாக பேசினார். என் குடும்பத்தை அவருக்கு பிடிக்கவே பிடிக்காது..ஹக்..ஹக்..ஹக்..ஹக்..”

டஸ்ஸ்ஸ்ஸ்ஸ். சோடா உடைக்கப்பட்டது. மீடியம் சோடாவைக் குடித்தார். “டொரினோ இல்லையா?” என்றார். இன்ஸ்பெக்டர் வெளியில் நின்று கொண்டிருந்த காண்ஸ்டபிளை கூப்பிட்டு வாங்கிவரச்சொன்னார். நீண்ட நேரம் மவுனமாக உட்கார்ந்திருந்தார் மீடியம். இன்ஸ்பெக்டர் அவரையே வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தார். மீடியத்தின் கைகள் இழுத்துக்கொண்டன. விரல்கள் பிணைந்துகொண்டன. அவர் உடல் விரைத்தது. நாடி கட்டிக்கொண்டது. வார்த்தை வருவதற்கு மிகவும் கடினப்பட்டது. டஸ். டஸ். மஸ். கஸ். மஸ். கஸ். புர்..சர்..மங்.சங்.டஸ் டஸ் டஸ் புங்.. என்று வினோதமான ஒலியை எழுப்பிக்கொண்டிருந்தவர் சட்டென்று மென்மையான பெண் குரலுக்கு மாறினார்.

“என் குடும்பத்தை அவருக்கு பிடிக்கவே பிடிக்காது. அதனால் தான் அவர் எனக்கு உறவினர் யாரும் இல்லாத இந்த ஊருக்கு அழைத்து வந்தார். எங்களுக்கு இங்கே யாரையும் தெரியாது. அது ஒரு வகையில் வசதியும் கூட. என் குடும்பத்தை தரக்குறைவாக பேசிய பொழுது என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை அவரை விலக்கி நடக்க முற்பட்டேன். அவர் என்னைப்பிடித்து இழுக்கவே நான் திமிறினேன். என்னை இறுக்கமாக பிடித்துக்கொண்ட அவர் என்னை மிகுந்த கோபத்தோடு கீழே தள்ளி விட்டார். எதிர்பாராமல் கீழே விழுந்த நான் அருகில் இருந்த கல்லில் மோதி பாதி நினைவை இழந்தேன். அருகில் கிடந்த ஒரு கல்லை எடுத்து அவர்..அவர் அவர்..ஹக் ஹக் ஹக் ஹக் ஹக்”

டஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ். டொரினோ உடைக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் எழுந்திருத்தார். “ஏட்டையா வண்டியஎடு.”

***

மாணிக்கம் கைது செய்யப்பட்டான். “நான் கொல்லவில்லை நான் கொல்லவில்லை” என்று அவன் கோர்ட்டில் கதறிக்கொண்டேயிருந்தான். சாட்சியங்கள் அவனுக்கு எதிராகவே இருந்தது.

***

epilogue.
———–

அந்த தெரு மிகவும் அமைதியாக இருந்தது. மிகவும் குறுகலாகவும் இருந்தது. நாய்கள் வழியிலே படுத்துக்கொண்டிருந்தன. கவனிக்காமல் விட்டால் மிதித்துவிட வாய்ப்பிருக்கிறது. மிதித்தால் அவைகளுக்கு கோபம் தலைக்குமேல் ஏன் காதுக்கு மேலேயே வரும். ஏட்டையா மிகவும் கவனமாக கடந்து சென்றார். ஒரு வீட்டின் முன் சென்று நின்றார். அந்த வீட்டின் சுவரில் காவி பூசப்பட்டிருந்தது. பிறகு மெதுவாக தட்டினார். சரியாக மூன்று தட்டுகளுக்குப் பிறகு கதவு திறக்கப்பட்டது. மீடியம். சபாஷ் என்று சொல்லிவிட்டு கைகளில் ரூபாய் நோட்டுக் கத்தை ஒன்றைத் திணித்தார். மீடியம் வாங்கிக்கொண்டு மிக மெதுவாக சிரித்தார். பிறகு ஹக் ஹக் ஹக் ஹக் என்றார்

கங்கா கோயிலைச் சுற்றி வந்தாள். மனதுக்கு ஏதோ போல இருந்தது. ஒரு புறம் நீண்ட துக்கமாக இருந்தது. ஏன் இந்த தவறை செய்ய ஆரம்பித்தோம் என்று வருந்தினாள். ஆற்றுப்பாலத்துக்கு அருகே சென்று அமர்ந்தாள். ஆற்றின் துர்நாற்றம் அவளது நிலையை மிஞ்சிவிட்டிருந்தது. ஏதும் பேசாமல் பாலத்திலே உட்கார்ந்திருந்தாள். ஆள் நடமாட்டம் ஏதும் இல்லாதது கொஞ்சம் வசதியாக இருந்தது. நீண்ட நேரம் தனிமையில் உட்காந்திருக்கவே விரும்பினாள். தன்னை முழுதாக அழித்துவிட விரும்பினாள். கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தன்னை கண்டதுண்டமாக வெட்டிப்போட்டுவிட மாணிக்கத்திடம் சொல்லவேண்டும். மாணிக்கம் மிகவும் நல்லவன். மாணிக்கம் என்னை மன்னிப்பியா? என்றாள் மனசுக்குள். தோளில் கைவிழ திரும்பிப்பார்த்தாள். ஏட்டையா. சிரித்துக்கொண்டே நின்று கொண்டிருந்தார். வாயில் சாராய நெடி.

***