பின் தொடரும் நிழலின் குரல் : தருமம் மறுபடி வெல்லும்!

There are annoying misprints in history, but the truth will prevail!
—Nikolai Ivanovich Bukharin (1937)

“மிஞ்சும் சொற்கள்” என்ற கடைசி அத்தியாயத்தில் இவ்வாறு சொல்கிறார் அருணாச்சலம்:

ஆனால் ஒன்று மட்டும் நிபந்தனை விதித்தேன். தலைப்பு நான் சூட்டுவதுதான். ‘பின் தொடரும் நிழலின் குரல்’- புகாரினை, வீரபத்ரபிள்ளையை, என்னைப் பின் தொடர்ந்தது எங்கள் நிழல்கள் தாம். நிழலை ஒருவன் ஒரு போதும் தவிர்க்கமுடியாது. அது மறுபாதி. அது நம்முடன் இடைவிடாது உரையாடுகிறது. ஒளியைத் தன்முன் கண்டு நடக்கும் ஒவ்வொருவர் பின்னாலும் நிழல் தொடருகிறது. நிழலின் குரலை ஒரு போதும் நாம் புறக்கணித்துவிடக்கூடாது.

***

ஜெயமோகன் என்ற எழுத்தாளரை யார் எனக்கு அறிமுகம் செய்தது என்று எனக்கு நினைவில்லை. எஸ். ராமகிருஷ்ணன் எனக்கு விகடன் மூலம் அறிமுகமானார். ஆனால் ஜெயமோகன் எனக்கு எதேச்சையாக நூலகத்தில் சும்மா படிப்பதற்கு தமிழ் நூல் தேடிக்கொண்டிருந்த போது அறிமுகமாகியிருப்பார் என்று நினைக்கிறேன். குறிப்பாக ‘காடு’ நாவல். அதற்கப்புறம் ஜெயமொகனின் சிறுகதைத் தொகுப்பு. காடு நாவலில் தான் பின் தொடரும் நிழலின் குரல் பற்றிய அறிமுகம் கிடைத்தது. அன்றிலிருந்து இந்த நாவலைப் படித்துவிடவேண்டும் என்று தீர்மானமாய் இருந்தேன். ஏன் என்று எனக்கு தெரியாது. அதற்கப்புறம் மதுரை இலக்கியபண்ணையில் இந்தமுறை ஜெயமோகன் நாவல்கலைத் தேடியபோது எனக்கு கிடைத்தது ஒன்றே ஒன்று தான்: விஷ்ணுபுரம். ஏன் என்று யோசித்தேன். ஒருவேளை நிறைய மக்கள் ஜெயமோகனைப் படிக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டேன். அப்புறம் விஷ்ணுபுரத்தை வீட்டில் கொடுத்த போது, யாவரும் புத்தகத்தின் பக்கங்களின் எண்ணிக்கையைப் பார்த்து சற்று மிரளவே செய்தனர். அப்புறமும் தைரியமாக எடுத்து படித்தவர்களில் என் அப்பாவும் என் அண்ணனும். அதில் நூறு பக்கத்தைத் தாண்டியவர் என் அண்ணன் ஒருவரே. (என் அப்பாவும் அண்ணனும் நிறைய நாவல்கள் படிப்பவர்கள். என் அப்பா தமிழாசிரியர். என் அண்ணன் வழக்கறிஞர்). நான் இதற்கு முன்பு எழுதிய ஆயிரம் கால் இலக்கியம்-7 -ல் அசோகமித்திரன் அவர்களின் நேர்காணலில் அவர் ஒரு கேள்விக்கு அளித்த ஒரு பதிலில் : ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் போன்றோர் நிறைய எழுதுகின்றனர். ஆனால் யார் படிக்கிறார்கள் என்று கேட்டிருந்தார். மிகச்சரியான கேள்வி. நியாயமான கேள்வி. இல்லையா?

இன்றைய பாம்ப்லட்(pamplet) உலகில் யார் எழுநூறு பக்க நாவல்களை படிக்க தயாரக இருக்கின்றனர்? அப்படியும் சொல்லிவிட முடியாது. பொன்னியின் செல்வனை மீண்டும் மீண்டும் பலமுறை படித்த -படிக்கின்ற! என் நண்பர் ஒருவர் சாப்ட்வேர் துறையில் இருப்பவர் தான்; பொன்னியின் செல்வனை, அதுவும் ஈ-புக், விடாமல் லேப்டாப்பைத் தூக்கிக்கொண்டே; படுக்கும் போது, உட்காரும் போது பாத்ரூமுக்கு தவிர; என்று எல்லாஇடங்களிலும் தூக்கிசென்று படித்து முடித்தார் – மக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் பொன்னியின் செல்வன் வேறு மாதிரி. பின் தொடரும் நிழலின் குரல் (பி.நி.கு) வேறு மாதிரி. இரு நாவலையும் ஒப்பிடுதென்பதே அபத்தம். ஆனால் பக்கங்களின் எண்ணிக்கையில் மட்டுமே ஒப்பிடலாம். பொன்னியின் செல்வனில் ஒரு முடிச்சு எப்பொழுதும் இருந்து கொண்டேயிருக்கும். பிறகு காதல், நகைச்சுவை, வீரம் என்று சரியான அளவில் கலந்திருக்கும். ஆனால் பி.நி.கு தத்துவம் சார்ந்தது. தருக்கம் செய்வது. வாதடுவது. உண்மைகளை பொய்களை எடுத்து ஆராய்வது. அல்லது சிலர் சொல்லுவது போல ஒரு சார்பாக நின்று – அப்பொழுது வாதாடுவது. அலசுவது. இது சரி என்று சொல்வது. பிறகு இது சரியில்லை என்று சொல்லிவிடுவது. பிறகு அதுதான் சரி என்று சொல்வது. கடைசியில் அதுவும் சரியில்லை இதுவும் சரியில்லை இது தான் சரி என்று முடிவு சொல்லாமல் சொல்வது. சாலமன் பாப்பையாவின் பட்டிமன்றம் போல அல்ல.

வாதங்கள். வாதங்கள். பின்னர் மேலும் வாதங்கள். பின்னர் மேலும் மேலும் வாதங்கள். நம்மை குழப்பும் வாதங்கள். (பிறர் சொல்வது போல: குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் வாதங்கள்.!) சில இடங்களில் ஏன் இப்படி-போதுமைய்யா போதும் என்று மூடிவைத்துவிட தூண்டும் வாதங்கள். பிறகு நாமே யோசித்துப் பார்த்து வேறு என்ன வாதங்கள் இருக்கின்றன என்ற எதிர்பார்ப்பில் அதே பக்கத்துக்குப் போகவைக்கும் வாதங்கள். தெளிந்த வாசகன் மட்டுமே கடைசிவரை செல்ல முடியும். படிக்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவனை மட்டுமே கடைசி வரை கூட்டிச்செல்லும். படிக்க முடியவில்லையா? பிடிக்கவில்லையா? குழப்பமாக இருக்கிறதா? தயவு செய்து விலகிக்கொள். என்னுடைய ஆள் இல்லை நீ. உன்னை கண்டிப்பாக படிக்கவைக்கவேண்டும் என்ற ஆதங்கம் எனக்கு ஏதும் இல்லை. அதற்காக அத்தியாயங்கள் தோறும் முடிச்சுகள் வைக்க என்னால் முடியாது. முடிந்தால் படித்துக்கொள் என்று சவால் விடும் வாதங்கள்.

நான் நாவலை நூலகத்திலிருந்து எடுத்து ஒரு வாரம் வரையில் முன்னுரையிலேதான் இருந்தேன். நாவலின் முதல் அட்டையுடன் சேர்த்த பக்கத்தில் (வேறு பதிப்புகளில் எப்படி இருக்கிறது என்று தெரியாது. நான் படித்தது தமிழினி வெளியீடு!) பிட்ஸ்பர்க்கின் புகைப்படம் இருந்தது. எனக்கு அது பிட்ஸ்பர்க் தான் என்று என்னுடைய மேலாளர் சொல்லும்வரை தெரியாது. அப்படித்தான் இருக்கிறது எனது கம்யூனிச அறிவு. எனது பள்ளி நாட்களில் கொஞ்ச நாட்கள் (மாதம்!) நான் த.மு.எ.ச வின் உறுப்பினராக இருந்திருக்கிறேன். அவர்களது நூலகத்தில் (அவர்களது நூலகங்கள் அழகாக இருக்கும். அங்கு தான் எனக்கு முதன் முதலில் கணையாழியின் அறிமுகம் கிடைத்தது. மேலும் பல கம்யூனிச புத்தகங்களின் அறிமுகமும் கிடைத்தது. ஒன்றைக்கூட படித்ததில்லை என்பது வேறு விசயம். அனால் எனக்கு குமுதம் ஆனந்த விகடன் இல்லையே என்று ஏக்கமாக இருக்கும்!) இரண்டு திருக்குறள்கலோடு ஆரம்பிக்கிறது நாவல். அருமையான குறள்கள்.

அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை.

அறத்தாறிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.

***

தை வீரபத்ரபிள்ளை என்பவரைச்சுற்றியே சுழல்கிறது. வீரபத்ரபிள்ளை மிகப்பெரிய படிப்பாளி. உலக இலக்கியங்களைப் படித்தவர். டிபிஎல்யு என்ற தொழிற்சங்கத்தில் உறுபினராக இருக்கிறார். அதை நிறுவிய கே.கே.எம் என்றவருடைய வலதுகரமாக இருக்கிறார். தொழிற்சங்கம் ஸ்டாலினை மையமாகக்கொண்டு இயங்கிவருகிறது. ஸ்டாலினால்காந்த இயக்கம் கம்யூனிசத்தை சார்ந்திருக்கிறது. வீரபத்ரபிள்ளைக்கு இருக்கும் வெளி உலகத்தொடர்பால் (குறிப்பாக ரஷ்யா) அவருக்கு புகாரின் என்பவரைப் பற்றிய உண்மைகள் கிடைக்கிறது. கார்பச்சேவ் காலத்தில்.

புகாரின் ஸ்டாலிக்கு வலதுகரமாக இருந்தவர். ஸ்டாலினின், குளக்குகள் என்ற ரஷ்ய விவசாய பெருங்குடிகளுக்கு, எதிரான நிலைப்பாடு புகாரினை கிளர்த் தெழச்செய்கிறது. ஸ்டாலினுடன் மாறுபட்ட கருத்து கொண்டவராகிறார். ஸ்டாலின் புகாரினை தேசத்துரோகி என்று பழி சுமத்துகிறார். புகாரின் தனது இளம் மனைவியான அன்னாவை விட்டுவிடவேண்டும் என்ற நிபந்தனையின் பெயரில் குற்றங்களை ஒப்புக்கொள்கிறார். ஸ்டாலின் புகாரினுக்கு மரண தண்டனை விதிக்கிறார். புகாரினின் மனைவி சைபீரியாவின் வதைமுகாம்களில் சிறைப்படுத்தப்படுகிறாள். அவள் ஐம்பது வருடங்கள் கழித்து புகாரின் சொல்லியிருந்த வாக்குமூலத்தை கார்ப்பச்சேவ் விசாரணையில் கூறி கதறுகிறாள். புகாரின் நிரபராதி என்று தீர்ப்புவழங்கப்படுகிறது.

இதை அறிந்துகொள்ளும் வீரபத்ரபிள்ளைக்கு ஸ்டாலின் மேல் மிகுந்த கோபம் உண்டாகிறது. ஸ்டாலிக்கு எதிராக குரல் கொடுக்க முயல்கிறார். கட்சி மறுக்கிறது. அவரிடம் உண்மைகளை மறைக்கும் படி மன்றாடுகிறது. பலனில்லை. வீரபத்ரப்பிள்ளையின் படித்த அகங்காரம் முந்திக்கொண்டுவிட்டது. புகாரின் ஒன்றும் சதியில் சலைத்தவர் அல்ல. பணியாத வீரபத்ரப்பிள்ளை கட்சியை விட்டு துரோகிப் பட்டம் சுமத்தப்பட்டு தூக்கியெறியப்படுகிறார். வீரபத்ரபிள்ளை தனிமரமாகிறார். மொத்த கட்சியும் அவர் மீது புழுதி வாரியிரைக்கிறது. வீரபத்ரபிள்ளை குடிக்க ஆரம்பிக்கிறார். மனம் தடுமாறுகிறார். கடைசியில் அனாதையாக உயிர்விடுகிறார்.

கேகேஎம் என்பவர் கட்சியின் நிறுவனர். அவர் தான் கட்சியை வளர்த்தவர். பின்னர் சமீபகாலத்தில் பழைய கொள்கைகளை விட்டுக்கொடுக்காமல் -விட்டுக்கொடுக்கமுடியாமல்- ஒட்டாத தண்ணீராக கட்சியென்ற தாமரை இலையில் இருக்கிறார். அவரை தூக்கியெறிய விரும்பிய கட்சி மேலிடம், அவருடைய வலது கரமாக அருணாசலம் என்பவரை பயன்படுத்திக்கொள்கிறது. அருணாசலம் தேர்ந்தெடுக்கப்பட, கேகேஎம் வெளியேறுகிறார். பிறகு அவரும் கட்சியால் தூற்றப்படுகிறார்.

அருணாசலத்துக்கு மன இறுக்கம். ஆனால் வேறு வழியில்லை. இந்த சமயத்தில் தான் வீரபத்ரபிள்ளையின் மகனைச் சந்திக்கிறார் அருணாசலம். வீரபத்ரபிள்ளை எழுதிய ஒரு சிறுகதைத் தொகுப்பு அவருக்கு கிடைக்கிறது. அதற்குப்பிறகு அவரைப் பற்றி விசாரிக்கும் பொழுது கட்சியில் வீரபத்ரபிள்ளை என்ற ஒருவர் இருந்ததற்கான அத்தாட்சியே இல்லாமல் இருக்கிறது. கேகேஎம் தனக்கு எதுவும் தெரியாது என்று கூறிவிடுகிறார் (கேகேஎம் க்கு வலது கரமாக இருந்தவர் வீரபத்ரபிள்ளை). பிறகு வீரபத்ரபிள்ளை எழுதிய சிறுகதைக்கு முன்னுரை எழுதிய ஒருவரை பிடித்து அவருடைய தொடர்பு என்று கோர்த்து வீரபத்ரபிள்ளை என்பவரது உண்மையான அடையாளத்தை கண்டுபிடிக்கிறார்.

வீரபத்ரபிள்ளையின் நிழல் அருணாச்சலத்தை தொடருகிறது. அருணாச்சலம் கட்சி சவனியரில் வீரபத்ரபிள்ளை பற்றி எழுத மிகுந்த முனைப்போடு இருக்கிறார். கட்சி மோப்பம் பிடிக்கிறது. அருணாச்சலத்தை எச்சரிக்கிறது. அருணாச்சலம் மனம் பிறழ்கிறார். பைத்தியமாகிறார். அவரது மனைவி மற்றும் குழந்தையின் மீது கொண்ட பற்றின் காரணமாக அவர் மீண்டு வருகிறார். உண்மையைச் சொல்லப்போனால் மனைவி நாகம்மையின் மீது அவர் கொண்ட காதல் தான் அவரை மீட்டுகொண்டுவந்தது என்று எண்ணிக்கொள்ளலாம். (நான் எண்ணிக்கொண்டது!). இந்த பிரச்சனையில் முக்கிய புள்ளியாக இருப்பவர் ராமசாமி என்பவர். ராமசாமி என்பவர் தான் அருணாச்சலத்திற்கு வீரபத்ரப்பிள்ளை பற்றி சொன்னவர். வீரபத்ரபிள்ளையின் தீவிர அனுதாபி அவர். ராமசாமியின் வீட்டில் ஜெயமோகன் இருக்கும் போது அருணாச்சலம் முதன் முறையாக ராமசாமியை சந்திக்கிறார். முழுகதையையும் கேட்ட ஜெயமோகன் இதை நாவலாக தொகுத்து நமக்கு அருளியிருக்கிறார்.

இது தான் நாவலின் சாரம்சம். அடிச்சரடு. மல்லிகை இல்லாத நார். இதை சுற்றிலும் மல்லிகையாக ஜெயமோகனின் தத்துவம் மற்றும் தருக்கம். இங்கியல் மற்றும் மார்க்ஸிசம். ஸ்டாலின் மற்றும் லெனின். ட்ராட்ஸ்கி மற்றும் புகாரின். நான் மற்றும் எனது நிழல்.

***

னால் நிழல் என்று ஏன் பெயரிட்டார் என்று தான் எனக்கு விளங்கவில்லை. நிழல் நம்மை எதிர்த்து குரல் கொடுக்காது. நிழல் நம்மை கேள்வியும் கேட்காது. நிழல் நாம் செய்வதை மட்டுமே செய்யும். மிகுந்த இருட்டான இடங்களுக்கு சென்று விட்டால் நம்மை விட்டு அகன்று விடும். ஜெயமோகன் சொல்வதைப் போல “தன் முன் வெளிச்சத்தைக் கண்டு நடப்பவர்களை எப்பொழுதுமே நிழல் பின் தொடர்ந்து கொண்டிருக்கிறது” என்பது மட்டும் முற்றிலும் உண்மை. ஆனால் எப்போதும் நம்மை விட்டு அகலாத ஒன்று மனசாட்சி மட்டும் தான். மனசாட்சி தான் எப்பொழுதும் நம்மை கேள்வி கேட்டுகொண்டேயிருக்கும். நிழல் என்பது வேறொன்றும் இல்லை மனசாட்சியே என்று வைத்துக்கொள்ளலாமா? இல்லை நிழல் என்பது வரலாறா? நாம் ஒவ்வொருவரின் பின்னேயும் வரலாறு பாலைவன மணல் போல காற்றால் மாற்றப்பட்டுக்கொண்டேயிருக்கிறது. அந்த வரலாறு கூறும் உண்மைகளை உணர வேண்டுமா?

***

நாவல் எழுதப்பட்ட விதமே அற்புதம். எனக்கு இந்த முறை புதிது. அதாவது நாவல் முழுதையும் ஒரே கதையாகக் கூறாமல். கதையாக, கட்டுரையாக, கடிதமாக, கவிதையாக, நாடகமாக கூறியிருப்பதுதான் சிறப்பு. வீரபத்ரபிள்ளையின் ஆளுமைகள் அனைத்தும் நாவலில் அப்படியே இடம்பெறுகின்றன. வீரபத்ரபிள்ளை கட்சித்தலைமைக்கு கடிதம் எழுதுகிறார். கட்சித்தலைமை அவருக்கு பதில் கடிதம் எழுதுகிறது. இந்த இரு கடிதங்களிலும் ஸ்டாலினின் சிறப்பு மற்றும் வெறுப்பு அலசப்படுகிறது. வீரபத்ரப்பிள்ளையின் பிரசுரிக்கப்படாத கட்டுரைகள் கதைக்கு மேலும் பலம் சேர்க்கின்றன. வாதத்தை பலப்படுத்துகின்றன. கதையினூடாக ஜெயமோகன் வருவது யதார்த்தத்தை கொண்டுவருகிறது. நாவலின் பின் புலத்தைக் காட்டுகிறது.

***

ம்யூனிசம் தோன்றி இத்தனையாண்டுகள் ஆகிவிட்டிருந்தும் அவர்களது கனவான பொன்னுலகம் அவர்களுக்கு கிடைத்ததா? ஸ்டாலின் என்னதான் சாதித்தார்?

ஸ்டாலினால கம்யூனிசத்துக்க அடிப்படையான நிலச் சீர்திருத்தத்தையே நடைமுறைப் படுத்த முடியல. ஒன்றரைக் கோடி விவசாயிகளைக் கொண்ணுபோட்டு விவசாய அமைப்பையே நாசம் பண்ணினது தான் பலன். அவர் காலத்தில தான் உலகத்திலேயே பெரிய தானியக் களஞ்சியங்களில ஒண்ணான உக்ரேய்னில பஞ்சம் வந்து பல லட்சம் பேர் இறந்தாங்க. இன்னைக்கும் உக்ரேன் மீளலை.

இன்றைக்கிருக்கின்ற கம்யூனிசத்தின் மீது பல கேள்விகள் தொடுக்கப்படுகின்றன. பழைய கம்யூனிசத்துக்கு ஆதரவாகவும் கேகேஎம் பேசுகிறார். அவரை இன்றைய கம்யூனிசத் தொண்டர்கள் பழமைவாதி என்று முத்திரைக் குத்தி வெளியே அனுப்புகின்றனர். நிறுவனருக்கே இந்த நிலைமை. கட்சியும், தலைவர்களும் தங்களை மாறும் சமுதாயத்திற்கேற்ப மாற்றிக்கொள்ளவேண்டும் இல்லியா? தலைவர்கள் படிப்படியாக தரகு வேலை செய்யக் கற்றுக்கொள்கின்றனர்.

நம்ப சங்கத்தில இன்னிக்கு எந்த கிளைலடே தத்துவமும் வரலாறும் அரசியலும்
சொல்லித்தாறம்? இங்க கூடியிருக்குத கிளைச் செயலாளர்களில் எவனாவது ஒருத்தன் எந்திருச்சு இங்கியல்னா என்னன்னு ஒரு பத்து நிமிஷம் பேச முடியுமாடே? என்னடே எவனாவது இருக்கியளா?

சரித்திரம் முழுக்க மக்கள் முட்டாக் கும்பலாகத்தான் இருந்திருக்காங்க. அவங்களுக்கு எது நல்லதுண்ணு ஒருநாளும் அவங்களுக்கு தெரியாது. தொழிலாளி வர்க்க சர்வாதிகாரம்னு சொன்னவன் மடையன் இல்லை. தொழிலாளி வர்க்க ஜனநாயகம்னு சொல்ல அவனுக்கு தெரியாமலும் இல்லை. ஜனங்களால ஒரு மேலான அரசாங்கத்தை உண்டு பண்ணிக்க முடியாது. தனித்தனியா ஒவ்வொருத்தனும் யோக்கியமானவனாத்தான் இருப்பான். கூட்டாச்சேர்ந்தா அறிவு கெட்ட மந்தயா ஆயிடுவான். புத்தியுள்ளவன் இழுத்த இழுப்புக்கு போற மந்தை. ஜனங்களுக்கு அறிவு கிடையாது. அறிவுள்ள புரலட்டேரியந்தான் அவங்களை வழி நடத்தனும். கட்சியைத் தலைமை வழி நடத்தனும். தலைமையை தத்துவம் வழி நடத்தனும். அது ப்ளேட்டோ கண்ட கனவு. அதை நடைமுறைப் படுத்தியது கம்யூனிசம் மட்டும் தான்.

சிலவங்க கேட்கிறாங்க, முதலாளிகிட்டயிருந்து நம்ம சொத்த நாம எடுத்துக்கிட்டா
என்ன தப்பு எண்ணு. அத நாம போராடி எடுப்போம். அது நம்ம உரிமை. திருடினோம்னா அது முதலாளிக்க சொத்து, அவனுக்க உரிமை எண்ணு நாமளே சம்மதிக்கற மாதிரியாக்கும். பிறவு வர்க்கப் போராட்டம் இல்லை. திருட்டு போட்டிதான். அவன் நம்மைத் திருடுவான். நாம் அவனைத் திருடுவோம். யாரு சாமர்த்தியமா திருடுறானோ அவனுக்கு அதிகாரம். கடைசில தொழிலாளி ஜெயிச்சிட்டான்னு வச்சுக்க இன்னொரு திருடனுக்க ஆட்சிதானே வரும்? இன்னும்
பெரிய திருடனுக்க ஆட்சி. அதுதான் கம்யூனிசமா? சித்தாந்தம் படிச்சவன் தானேடே நீ? சொல்லு?

நாம் இப்ப எதுக்கு சங்கம் வெச்சிருக்கோம்? மனதைத் தொட்டுச் சொல்லு.
நாம தொழிலாளிக்கு உரிமைகளையா கத்துக் கொடுக்கறோம்? வர்க்கப் போராட்டத்துக்காவா அணி திரட்டறோம்? பாதிநாள் திருட்டுத் தொழிலாளிக்காக முதலாளி கிட்ட வக்காலத்து வாங்கிட்டிருக்கோம். இல்லன்னு சொல்லு பாக்கலாம்?

நீ தொழிலாளிக்க சம்பளம் வாங்கிட்டு சேவகம் செய்றவன் மாதிரி பேசுறே. நான் தொழிலாளியை வழிநடத்திட்டுப் போறவன் மாதிரி பேசுறேன்

நெஞ்சில தீ வெணும்டே அருணாச்சலம். அதை அணைய விட்டிரப்பிடாது. நீ இப்பம் செய்யிற ஆள் பிடிக்குத வேலைய எல்.ஐ.சி க்கு செய்தா இன்னைக்கு உனக்கு எத்தனை லட்சம் தேறியிருக்கும், சொல்லுடே. தீ வேணும்டே. பேச்சில
அதுக்கச் சூடு வேணும். அந்த சூடுதான் தொழிலாளிக்கு நம்மமேல நம்பிக்கையும்
மரியாதையும் உண்டாக்குது. அது நம்ம ஆசான்கள்கிட்டேயிருந்து நாம எடுத்துக்கிட்ட தீ. அறுபத்து மூணில இந்த சங்கில உள்ள தீயை நம்பித்தான் எனக்க பின்னால அறுபதினாயிரம் தொழிலாளர்கள் போராட்டத்துக்கு வந்தாங்க. பதினெட்டு பேர் குண்டடிபட்டு செத்தாங்க. பதினேழு மாசம் பட்டினி கிடந்தாங்க. தீ வேணும்டே. அதை அணைய விட்டுடாதே.

கதிர் என்ற இன்றைய கம்யூனிசத்தின் இளைஞர் சமுதாயத்தில் ஒருத்தர் இவ்வாறு வினா எழுப்புகிறார்:

மார்க்ஸியம் மதம் இல்லை. அருளுரையும் இல்லை. நாம் அதை வழிபட வேண்டிய அவசியம் இல்லை. மார்க்ஸியம் வந்து இப்ப நூறு வருஷம் ஆயாச்சு. அதோட பரிசோதனைக் காலம் முடிஞ்சாச்சு. இன்னமும் அது பூமிமேல அற்புதங்களை நடத்தும்னு நம்பிட்டிருக்கிறது மூடத்தனம். அதனால என்ன செய்யமுடியும் என்ன செய்யமுடியாதுன்னு இந்த நூறு வருஷ வரலாற்றிலிருந்து நாம படிக்கணும். மார்க்ஸியம் உருவாக்கின அரசாங்கங்களெல்லாம் பழைய சக்கரவர்த்திகளோட
அரசாங்கங்களைவிட மோசமானவைன்னு அப்பட்டமா தெளிவாயாச்சு. மார்க்ஸியத்தால ஒரு புதிய சமூக அமைப்பையோ, பொருளாதார அமைப்பையோ, கலாச்சார அமைப்பையோ உருவாக்க முடியாது. அப்படி அது உண்டு பண்ணிக் காட்டிய அமைப்புகளெல்லாம் ஏற்கனவே இருந்த அமைப்புகளை விட
மோசமானவை மட்டுமல்ல, அவை மோசமான பழைய அமைப்புகளோட நகல்கள். இனிமே இம்மாதிரிக் கனவுகளை ஒருத்தன் வெச்சிட்டிருந்தானா அவன் தொண்டனா கொடிபிடிகக்த்தான் லாயக்கு. ஆனா மார்க்ஸியம் உலகம் முழுக்க பல வெற்றிகரமான மாற்றங்களை உண்டு பண்ணியிருக்கு. ஒரு ஜனநாயக அமைப்பில, சுதந்திரப் பொருளாதார அமைப்பில, முக்கியமான ஒரு சக்தியா அது செயல்பட முடியும். முழுமையான மாற்று சமூகத்தை அது உருவாக்க முயலறப்பதான் பிரச்சனை
வருது. ஏன்னா மார்க்ஸியத்துக்கு அதுக்கான சக்தி இல்லை. எந்த சித்தாந்தத்துக்கும்
அந்த சக்தி கிடையாது. தெரிஞ்சும் தெரியாமலும் இயங்கக்கூடிய பல்லாயிரம், ஏன் பல கொடி சக்திகள் இணைஞ்சு சமூகமும் கலாச்சாரமும் பொருளாதார அமைப்பும் உருவாகுது. அதை எந்த சித்தாந்தமும் முழுமையா அணுகிட முடியாது. அதன் ஒரு பகுதியை மட்டும் தான் ஒரு சித்தாந்தம் தொட முடியும். அப்படி ஆய்வு செய்து அது முழுமையா நிரூபிச்ச உண்மைகளை முழு அபத்தமா ஆக்கக்கூடிய பல நூறு தளங்கள் மீதி இருக்கும். மார்க்ஸியம் தான் மானுடம் உண்டாக்கின சித்தாங்களிலேயே உபயோகமான சித்தாந்தமும் அதுதான். ஒரு பேச்சு வார்த்தை மேஜையில மார்க்ஸியம் ஏழைகளோட பிரதினிதியா உக்காந்து பேச முடியும்.
இன்னைக்கு தொழிலாளி வர்க்கம் அடைஞ்சிருக்கிற எல்லா லாபங்களும் மார்க்ஸியம் வழியா கிடச்சதுதான். மார்க்ஸியம் இல்லீன்னா உலகத்தில இருக்கிற எந்த வெல்பேர் ஸ்டேட்டும் கருணையோட இருக்க முடியாது. சமூக அமைப்பில சுரண்டப்பட்ட வர்க்கம் மார்க்ஸியக் கருத்தியலின் அடிப்படையில்தான் ஒன்று சேர்ந்து போராட முடியும். மார்க்ஸியத்தோட பணி இங்க தான். ஒன்று சேர்ந்து போராடரதுக்குத் தவிர்க்க முடியாத பெரும் கனவை அது உண்டு பண்ணித்தருது. அந்த கனவை தருக்கபூர்வமானதா மாத்தற தத்துவ அடிபப்டைகளை உருவாக்கிக்
காட்டுது. அந்த தருக்கம் தான் பேச்சு வார்த்தையில் தொழிலாளி வர்க்கத்தின்
மிகப்பெரிய துருப்புசீட்டு. எந்த தொழிலாளியும் பேச்சுவார்த்தைக்காக சாக மாட்டான். பெரிய கனவுகளுக்காத்தான் சாவான். தொழிலாளி சாகத்தயாரா இருந்தாதான் பேச்சுவார்த்தையில் ஏதாவது சாதிக்க முடியும். மார்க்ஸியத்தோட இடம் இதுதான்.

கொள்கை வேறு நடைமுறை வேறு. மேலே மத்தியில ஜகஜித்சிங் வருஷா வருஷம் அதை நடத்திக் காட்டுறாரே!

முற்றிலும் உண்மை. கட்சிகள் கொள்கை என்ற ஒன்றை எப்பொழுதோ உதறிவிட்டனர். இப்பொழுது இருப்பது survival of the fittest. அரசியல் பெரும் வியாபாரம். அதனால் தான் ஒரே கட்சி மாநிலங்களுக்கு மாநிலங்கள் வேறு வேறு கொள்கைகளை வைத்துக்கொண்டிருக்கின்றன. பல்வேறு கொள்கைகளை வைத்துக்கொண்டு அவர்களுக்கு மக்களைச் சந்திப்பதில் கூச்சம் ஏதும் இருப்பதில்லை. ஏனெனில் மக்களும் அப்படித்தானே? மக்கள் தானே கட்சி!

அருணாச்சலம் ஜெயமோகனை சந்திக்கும் போது நடைபெறும் உரையாடலில் ராமசாமி ஜெயமோகனை இவ்வாறு அறிமுகப்படுத்துகிறார்:

இவரு முக்கியமான தமிழ் எழுத்தாளர். சமீபமா இவர்தான் ஸ்டார். பேரு ஜெயமோகன் தருமபுரியில் டெலிபோன்ல வேலை பார்க்கிறார்.ரப்பர்னு ஒரு நாவலும் திசைகளின் நடுவேன்னு ஒரு சிறுகதைத் தொகுப்பும் வந்திருக்கு. புதிசா பெரிசா ஒரு நாவல் எழுதிட்டிருக்கார் விஷ்ணுபுரம்னு பேரு

அப்படியா?! நிறைய நபர்களுக்கு ஜெயமோகன் யார் என்றே தெரியவில்லை என்பது தான் உண்மை. பாலாவின் நான் கடவும் என்ற படத்துக்கு வசனம் எழுதுவதனால் அவர் இனி பிரபலமாகக்கூடும். இந்த நாவல் வெளிவந்தது 99 என்று நினைக்கிறேன். அந்த சமயத்தில் எவ்வளவு பேருக்கு ஜெயமோகன் தெரிந்திருக்கும் என்று சொல்லத்தேவையில்லை. மேலும் எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை: இவ்வளவு அழகாக எழுதப்பட்ட இந்தப் புத்தகம் ஏன் பிரபலமாகவில்லை? ஏன் ஜெயமோகனோ ராமகிருஷ்ணனோ சாமன்ய இலக்கியத்தில் ஒரு இடத்தை பிடிக்க முடியவில்லை? கல்கியைப் போல. பிரபஞ்சனைப் போல. ஜானகிராமனைப் போல. பார்த்தசாரதியைப் போல. இனிமேல் கிடைக்குமோ?

ஜெயமோகனைப் பற்றி அருணாச்சலம் கொண்டிருக்கும் கணிப்பு:

பிறரை எடுத்த எடுப்பிலே குறைத்து மதிப்பிடும் அந்த அகங்காரம் முதிர்ச்சியின்மையின் விளைவு என்று பட்டது. இந்த இளைஞன் தன்னைப் பற்றிய மிதமிஞ்சிய சுயமதிப்பு கொண்டவனாக இருக்ககூடும்.

நான் ஜெயமோகனை ஒரு முறை சந்திருக்கிறேன். அப்பொழுது அவர் நாங்கள் வைத்திருக்கும் கேமரா போனைப் பற்றி கேட்பதில் ஆர்வமாக இருந்தார். என் நண்பர் ஒருவர் மிகவும் கூச்சப்பட்டார்: இவ்வளவு புத்தகங்கள் எழுதிய இவரை விட நம்மிடம் நிறைய வசதிகள் இருக்கிறதே. ஜெயமோகனை படத்திலோ அல்லது நேரிலோ பார்ப்பவர்கள் கண்டிப்பாக இவர் தான் கொற்றவையை எழுதினார் என்றால் தலையில் அடித்து சத்தியம் செய்தால் கூட நம்ப மாட்டார்கள். ஏனெனில் அவரிடம் சித்தர் வேஷம் கிடையாது!

அருணாச்சலத்திடம் தோழர் தீர்த்தமலை கட்சியின் விதிகளைப் பற்றி வாதாடும் போது:

அம்பதுகளில் ரணதிவேதீஸிஸ் வந்தப்ப குமரி மாவட்டத்தில மட்டும் ஆயிரம் பேர் கட்சியை விட்டுப் போயிருக்காங்க. பயங்கரமான அடக்குமுறைகளில் கூட கட்சிக்காக ரத்தம் சிந்தின முன்னூறு பேர் நம்ம கட்சி ஜனநாயகத்தை ஏத்துக்கிட்டப்ப விட்டுட்டு போனாங்க. கட்சியைவிட்டுப் போனவங்களில சிலர்தான் தேறினாங்க. மீதியெல்லாம் ஆளுமை கெட்டு, குடிகாரர்களாகி உதவாக்கரைகளாகி, சீரழிஞ்சு போனாங்க. சிலர் பூர்ஷ¤வாக்களாகக்கூட ஆனாங்க. ஏன், இப்ப நக்சலைட் இயக்கம் வெடிச்சப்ப கட்சிய விட்டு எண்ணூறு பேர் விலகிப் போகலையா? அதில வேணுகோபாலனை எனக்கு நல்லாத் தெரியும். நாலு வருஷம் நானும் அவனும் ஒரே
ரூம்ல தங்கியிருக்கோம். என் நிழலா இருந்தான். அவன் படிச்ச புஸ்தகங்களுக்க பின்
அட்டை படிச்சவங்களே நம்ம கட்சியில குறைவு. பெரிய அளவில தேசிய அளவில போகப் போறான்னு நம்பினோம். இப்ப பேச்சிப்பாறை டாம் பக்கமா பிச்சை எடுக்கறான். என்னைப் போன வருஷம் செமினார் சமயத்தில் வழி மறிச்சு, ‘குட்மாரிங் தோழர், புரட்சி ஓங்குக. ஒரு அம்பது ரூபா கொடுங்க’ ன்னு கேட்டான். மனசுக்குள்ள நொறுங்கிப் போயிட்டேன். ஆனா என்ன செய்யமுடியும் சொல்லுங்க?

கட்சி முன்னகருறப்ப சிலர் உதிர்ந்தே ஆகணும். திரிபுவாதிகள், கோழைகள், சுயநலவாதிகள் உதிருவாங்க. சில சமயம் கட்சியைவிடப் பெரிசா தங்களோட ஈகோவை வைச்சிருக்கிற படிப்பாளிகளும், திறமைசாலிகளும் உதிர்ந்திடலாம். ஆனா
யாரா இருந்தாலும் உதிர்ந்தா உதிர்ந்தது தான். ஏன்னா கட்சிங்கறது புராணங்களில
சொல்றது போல ஒரு விராட புருஷன். நாமெல்லாம் அதன் உறுப்புகள். நாம அதை விட்டுப் பிரிஞ்சுட்டோம்னா அழுகி மட்கி இல்லாமப் போக வேண்டியதுதான்.

தருக்கம் தார்மீகத்தின் முன்பு மட்டுமே தோற்கும்.

வீரபத்ரபிள்ளை எழுதிய ஏகப்பட்ட கடிதங்களில் எனக்கு மிகவும் பிடித்தமான கடிதம் இது தான்:

ஜன்னலைத்திறந்து, பாதையில் போகும் பொறுக்கியை வேடிக்கை பார்க்கும் வீட்டு மனிதா, இது உனக்கு. வீடு உனக்கு பாதுகாப்பல்ல. ஏனெனில் உன்னிடம் என்ன உள்ளது? அர்த்தமற்ற பயங்களும், அசட்டு உணர்ச்சிகளும், கணந்தோறும் பழமைகொள்ளும் சில பொருட்களும், மலச்சிக்களும் தவிர? தெரு மனிதர்களை இகழாதே. உன்னால ஒரு போதும் அவர்களைப் புரிந்து கொள்ள முடியாது. எல்லை வகுக்கப்படாத எதையும் பார்க்கவோ உணரவோ உனக்கு அனுமதி இல்லை.
உனக்கு அத்தனையும் ரேசனில் வழங்கப்படுகின்றன. காலம், வெளி, ஒளி, நீர் எல்லாமெ. குடும்ப அட்டையை கையில் வைத்தபடி -குடும்பத்தலைவன் என்று குறிப்பிட்டிருப்பதன் அபத்தமான பெருமிதத்துடன் -மகிழ்ந்துபோன அத்மாவாக உன் வீட்டுக்குள் வாழ்கிறாய். கதவிடுக்கில் பீரிடுகிறது தெருவின் திறந்த காற்று. உன் ஆஸ்துமாவிற்கு அது எமன். மூடுடா கதவை.

என்னை மிகவும் பாதித்த கவிதை:

இன்னும் வாழ்பவன் அல்ல, ஆவியும் அல்ல,
இழிந்த விலங்கும் அல்ல, மனிதனும் அல்ல
இனம்காண முடியாத ஏதோ ஒன்றாய்…

-புஷ்கின் என்ற ரஷ்ய கவிஞர் எழுதிய கவிதை

புகாரின் ட்ராட்ஸ்கி ஸ்டாலின் ஆகிய மூவரைப் பற்றிய செய்திகள். புகாரின் சதியால் கொல்லப்பட்டார் என்று கேள்விப்பட்டுதான் வீரபத்ரபிள்ளையின் நிழல் கேள்வி கேட்க ஆரம்பித்தது என்றால், புகாரின் ஒன்றும் சதியில் சலைத்தவர் இல்லையே! புகாரின் லெனினுக்குப் பிறகு ட்ராட்ஸ்கி வந்துவிடக்கூடாது என்ற காரணத்தினால் தான் ஸ்டாலினை ஆதரித்தார். பிறகு பல கொலைகளை அவரும் ஸ்டாலினோடு சேர்ந்து நிகழ்த்தியிருக்கிறார். மிகில்னாய் ரயில் நிலயத்தில் சைபீரியாவின் கட்டாய வதை முகாம்களுக்கு சென்று கொண்டிருக்கும் விவசாயிகளைப் பார்க்கும் வரை அவரது நிழல் தூங்கிக்கொண்டுதான் இருந்தது. பிறகு ஸ்டாலினோடு எதிர்ப்பு வலுத்தபின்னர் அவரது ஈகோ முந்திக்கொண்டது. நிழல் விழித்துக்கொண்டது. அவரால் பின்வாங்க இயலவில்லை.

அதே நிலைதான் வீரபத்ரபிள்ளைக்கும். வீரபத்ரபிள்ளைக்கு தெரியும் புகாரின் ஒன்றும் மிக நல்லவர் இல்லை என்பது. ஸ்டாலினும் புகாரினும் சேர்ந்து நடத்திய அரசியல் படுகொலைகளை அவரும் அறிந்தவர் தான். எனினும் ஏதோ ஒன்று அவரது மனதுக்குள் புகுந்து கொண்டுள்ளது. அது ஈகோ மட்டுமே. வேற எதுவாகவும் இருக்க வாய்ப்பு இல்லை.

கீழே ட்ராட்ஸ்கி மற்றும் புகாரின் செய்த சதிகள் கூறப்படுகின்றன:

பிலிப்குஸ்மிச் மிரானோவ் செம்படையின் மகத்தான தளபதிகளில் ஒருவர். எட்டு வருடம் ட்ராட்ஸ்கியின் உயிர் நண்பராக இருந்தார். மிக எளிய கசாக்கு குடும்பத்தில் பிறந்து, ஜாரின் ராணுவத்தில் படைவீரராக இருந்தவர். ட்ராட்ஸ்கியால் செம்படையில் சேர்க்கப்பட்டார். அக்டோபர் புரட்சியில் கிரெம்ளினில் நுழைந்த முதல் படைப்பிரிவை நடத்தினார். 1921-ல் கசாக்குகளின் கிளர்ச்சியை அடக்கும்படி தென்முனைக்கு அனுப்பப்பட்டார். அங்கு எளிய கசாக்கு குலப் பொதுமக்களை செம்படை சூறையாடியதைக் கண்டு மனம் பொறாது ட்ராட்ஸ்கியிடம் வாதாடினார். செம்படையின் தளபதிகளை கட்டுப்படுத்த வேண்டும் இல்லையேல் கசாக்குகளை மொத்தமாக வெண்படை ஆதரவாளர்களாக மாற்றிவிடவே இம்மாதிரி நடவடிக்கைகள் உதவும் என்று முறையிட்டார். ட்ராட்ஸ்கி அதை ஏற்கவில்லை.
மிரானோவ் துரோகம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு சாரணைக்குட்படுத்தப்பட்டார். சுட்டுக் கொல்லப்பட்டார். அதற்கு உத்தரவிட்டது ட்ராட்ஸ்கிதான். இன்று ட்ராட்ஸ்கியின் இடத்தில் ஸ்டாலின். மிரானோவின் இடத்தில் புகாரின்.

ஏப்ரலில் மிகில்னாய் ரயில் நிலயத்தில் புகைவண்டி சிறிது நேரம் நின்றது. வெளியே
எட்டிப்பார்த்தேன். திறந்த வெளியில் கிழிசல் உடைகள் அணிந்த பல்லாயிரம் விவசாயிகள் படுத்துக்கிடந்தார்கள். அவர்களைச் சுற்றி கவச வண்டிகளினாலான வேலி. துப்பாக்கி ஏந்திய காவலர்கள். பனி அவர்கள்மீது திரையிட்டிருந்தது. காற்றில் அது விலகும் போது ஒட்டி உலர்ந்த உடல்கள் தெரிந்தன. மூட்டை முடிச்சுகள். ஊடாக…குழந்தைகள்; குளிரில் விறைத்து, நீலம் பாரித்த குழந்தைகள்! அவர்கள் சைபீரியாவிற்குப் போகும் குளக்குகள். பெரும்பாலானவர்கள் அங்கு திரட்டப்படுவதற்கு முன்பே இறந்துவிட்டிருப்பார்கள்.
ரயிலுக்காக வெட்டவெளியில் காத்திருக்கையில் மீதிப்பேர் சாவார்கள். சைபீரியாவுக்கு எத்தனை பேர் போய்ச்சேர்வார்கள் என்று கூற முடியாது. இதுவரை ஒன்றரை கோடி விவசாயிகள் கொல்லப்பட்டிருப்பார்கள். ஒன்றரைக்கோடி உடல்களை குவித்துப் போட்டால் பீட்டர்ஸ்பர்க்கிலும் மாஸ்கோவிலும் உள்ள அனைத்து கட்டிடங்களையும்விட பெரிய பிணமலைகளாக இருக்கும்.

வீரபத்ரபிள்ளை எழுதிய கவிதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் எனக்கு பிடித்த இரண்டு கவிதைகள்.

கடிதங்கள்

தபால் வசதி அனுமதிக்கப்படாத ஊர்களில்
பலநூறு கடிதங்கள் தினம்
எழுதப்படுகின்றன.
அவை காற்றில் குளிர்போல
கனத்து தொங்குகின்றன.
சிறு
காற்றில் வருடலில்
மழையாகி அவர்கள் மீதே விழுகின்றன.
குளிர்ந்து அவர்களைச்
சுற்றி இறுகிவிடுகின்றன.
கடிதங்களின் கடுங்குளிரில் அவர்கள் தூங்குகிறார்கள்.
அப்போது வெப்பமான காற்றை
அவர்கள் கனவு காண்கிறார்கள்
வானில் ஒளியாக
சொற்கள் பரவ
ஆத்மாக்கள் அவற்றை உண்ணும்
ஒரு மகத்தான தினத்தைக்
காண்கிறார்கள்
பின்பு விழித்தெழுந்து கண்ணீர் விடுகிறார்கள்
மறுநாள்
மீண்டும்
இறுகும் பனியை உடைத்தெழுந்து
கடிதங்களை எழுதத் தொடங்குகிறார்கள்.

இந்த கவிதை கண்டிப்பாக சைபீரிய வதைமுகாம்களில் பழி சுமத்தப்பட்டு தண்டனைகளை (பெரும்பாலும் மரண தண்டனை!) எதிர் நோக்கி காத்திருக்கும் மக்களை நினைத்து எழுதப்பட்டதாகத்தான் இருக்க வேண்டும். கடிதங்கள் என்பவை அவர்களது தாகங்கள். விடுதலைத் தாகங்கள். ஆனால் யாரிடமிருந்து விடுதலை? விடுதலை வேண்டு புரட்சி செய்தவர்கள், புரட்சிக்கு தலைமைதாங்கியவர்கள் தான் விடுதலையை எண்ணி கனவு காண்கின்றனர். வெப்பமான காற்று சர்வாதிகாரம் இல்லாத பொன்னுலகம். ஆம் பொன்னுலகம். கம்யூனிசம் தோன்றி நூற்றாண்டாகிவிட்டபோதும் இன்னும் எங்கும் காணக்கிடைக்காத பொன்னுலகம். மகத்தான் தினமும் பொன்னுலகைக் காணும் தினமே! இங்கு அவர்களை மூடிக்கொள்ளும் பனி என்பது சர்வாதிகாரம். மீண்டும் மீண்டும் அடக்குமுறைகளை அவர்கள் உடைத்துக்கொண்டேயிருக்கிறார்கள். அடக்குமுறைகளை கட்டுகளை அவிழ்த்தெரிந்துகொண்டேயிருக்கிறார்கள், மீண்டும் வேறு புதிய கயிறால் கட்டப்படும் வரை.

யாருக்காக

யாருக்காக எழுதப்படுகின்றன கவிதைகள்?
இன்னும் சூரியன்
உதிக்கிறது
ஒளிபட்ட பனிப்பாறை போல
அவ்வளவு கடும் குளிருடன்.
எலும்பைத்
துளைக்கும் அதன் புன்னகை
மலர்கள் மலர்கின்றன.
தொடும்போதே உதிர்கின்றன.
இன்னும் மிச்சமிருக்கின்றன என நான்
அள்ளியள்ளித் திரட்டும் நம்பிக்கைகளை
உடைக்கிறது தூரத்து ஓலம்.
கையேந்தி நின்று ரொட்டிக்காக மன்றாடும்
இந்தச் சிறுகுழந்தை கேட்கவில்லை
யாருக்காக எழுதிக்கொண்டிருக்கிறேன்
இக்
கவிதைகளை என்று.

கேரள தலித் தலைவர் ஐயன்காளியும் காந்தியும் சந்தித்திக்கொண்டதாக சொல்லப்படுகிற கதை ஒன்றும் இடம்பெறுகிறது. காந்தியின் அகிம்சை நன்றாக அலசப்படுகிறது.

ஸ்டாலின் செய்தது தவறு என்றால் எங்கே தவறு நடந்தது?

மார்க்ஸின் தத்துவப்படி பொருளாதாரக் காரணிகளால இயல்பா புரட்சி வரணும். லெனின் அரசியல் நடவடிக்கை மூலம் புரட்சியைக் கொண்டுவந்தார். லெனின் ரஷ்யாவில நடத்தினது அதுதான். விழிப்புற்ற ஒரு சிறுபான்மையினர் அரசியல் நடவடிக்கை மூலமா புரட்சியைக் கொண்டுவந்து, பொதுவுடைமை சமூகத்தை உருவாக்க ஆரம்பிச்சாங்க. இது வால் நாயை ஆட்டிவைக்கிற மாதிரி. ரஷ்யாவில நடந்த சகல குளறுபடிகளுக்கும் காரணம் தடியால அடிச்சு பழுக்கவைக்க லெனின் செஞ்ச முயற்சிதான்.

இன்னைக்கு சுரண்டல் பிரம்மாண்ட வல்லமையா மாறியிருக்கு. அதுகிட்ட சாட்டையும் துப்பாக்கியும் இல்ல. அணுகுண்டும் கம்ப்யூட்டரும் இருக்கு. நம்மை ஏகாதிபத்தியம் அழிச்சிட்டிருக்கு. நம்ம வளங்கள் அழியுது. நம்ம உடல்கள் கெடுது. நம்ம கலாச்சாரம் சீரழியுது. ஏகாதிபத்தியம் இன்னைக்கு நம்மை பயமுறுத்தல. நம்மை அது மனோவசியம் பண்ணுது. நாம அதை விரும்பி வரவேற்றுத்
தலைமேலே தூக்கி வெச்சிட்டிருக்கோம். நீங்களும் நானும் சிந்திக்கிறதில கூட
ஏகாதிபத்திய விஷம் கலந்திருக்கு.

மார்க்ஸிசத்தில குறைகள் இருக்கலாம். அந்த குறைகளுக்காக நாம அதை நிராகரிச்சா பிறகு என்ன மிஞ்சும்? போராடத் தெரியாத மக்களா, அடிமைச் சவங்களா மண்மேல வாழறதா? மார்க்ஸிசத்தவிட தீவிரமான ஒரு போராட்ட ஆயுதம்
கிடைக்கிற வரை மார்க்ஸிசத்தை உலகம் கைவிட முடியாது. ஏன்னா மார்க்ஸிசம் ஒரு
எதிர்ப்பு சக்தி.

ஓநாயும் மனிதனும் சேர்ந்து வாழ்வது எப்படி? என்ற நாடகம் மிகவும் நன்றாக இருந்தது. மொத்த நாவலையுன் ஒரு நாடகத்தில் அடக்கி parody செய்தது போல இருந்தது. மகாபாரதம், வேதங்கள், கிறிஸ்தவம் என்று அனைத்தையும் ஜெயமோகன் ரஷ்ய கம்யூனிசத்தோடு ஒப்பிடுகிறார். நான் சிரித்ததைப் பார்த்து என் நண்பர் ஒருவர் எனக்கு வாசித்துக்காட்டு என்று சொல்லிவிட்டார். நாவல் படிக்க நேரமில்லை என்றால் கண்டிப்பாக இந்த ஒரு நாடகத்தை மட்டுமாவது படியுங்கள்! நாடகத்தில் வரும் கோழி கூட “ரிபப்ளிக்கோ! ரிபப்ளிக்கோ!” என்று கூவுகிறது.

***

னக்கு கம்யூனிசம் தெரியாது. நான் கட்சி சார்ந்தவனும் அல்ல. ஆனால் இந்த நாவல் எனக்கு கம்யூனிசத்தின் வேர்களை அறிய உதவியிருக்கிறது. கம்யூனிசத்தைப் பற்றிய நன்மைதீமைகளை அறிந்து கொள்ள உதவியிருக்கிறது. என் மனமும் புத்தியும் திறந்தேயிருக்கிறது. நான் கம்யூனிசத்தை சார்ந்தவனும் அல்லன். முதலாளித்துவத்தை சார்ந்தவனும் அல்லன். நான் கிடைக்கும் தகவல்களை சேகரித்துக் கொண்டிருக்கிறேன். படித்துக்கொண்டிருக்கிறேன். என்னால் எந்த நிலைப்பாடுக்கும் வரமுடியவில்லை. இந்த நாவலைப் படித்த கம்யூனிஸ்ட் எவரும் கண்டிப்பாக கடும் கோபம் கொள்வார்கள். இல்லையேல் கோபம் கொள்வதைப் போன்று நடிக்கவாவது செய்வார்கள். வேறு என்ன செய்ய முடியும்? கம்யூனிசமும் கட்சிதானே? அதை நம்பியும் மக்கள் இருக்கிறார்களே? அரசியல் தொழிலாக ஆகிவிட்டது இல்லையா? கொள்கை என்ற ஒன்றை அனைத்து கட்சிகளும் தார்மீக உரிமையுடன் உடைத்து எறிந்து விட்டனரே! இந்த ஒரு விஷயத்தில் அனைத்துக் கட்சிகளுக்கும் ஒரே கொள்கை. இதில் கம்யூனிசம் மட்டும் எப்படி விதிவிலக்காகும்? கட்சியை விட்டுத்தள்ளுங்கள். அது ஒரு பெரிய இயக்கம். நம்மிடம் கொள்கைகள் இருக்கிறதா? கொள்கைகளுக்காக நாம் நமக்கு மிகவும் தேவையான ஒன்றை இலக்கத் தயராக இருக்கிறோமா? அப்படி இழக்கத்தான் வேண்டுமா? இழந்தால் மட்டும் நாம் என்ன சாதித்து விட முடியும்? இழக்காமல் என்ன சாதிக்கிறோம்? வரலாறு நாம் இழந்தாலும் இழக்காவிட்டாலும் இயங்கிக்கொண்டேதான் இருக்கிறது. எண்ணற்ற உயிர்களை தனி மனித கொள்கைகளுக்காக பலிவாங்கிக்கொண்டேதான் இருக்கிறது.

சைபீரியா வதை முகாம்களுக்கு அனுப்பப்பட்ட குளக்குகள் பற்றி ஒரு கம்யூனிஸ்ட் சொல்லும் போது: “அவர்களை கட்டாய உழைப்புக்கு அனுப்பி வைத்தோம். உழைக்கச்சொன்னால் யாவருக்கும் கஷ்டம் தான்” என்று வாதிடுகிறார். ஒரு விஷயத்தில் இரு வேறு விதமான பார்வைகள் எப்பொழுதுமே இருக்கின்றன. ஒருமுகமாக அல்லது ஒருசார்பாக ஒரு விஷயத்தை அனுகினால் அதன் உண்மையை நாம் அறியமுடியாமல் போய் விடும். Have an un-biased-view!

***

மேலும் படிப்பதற்கு வேறு சுட்டிகள்:

புகாரின்:
http://en.wikipedia.org/wiki/Nikolai_Bukharin
http://art-bin.com/art/obukharin.html
http://www.marxists.org/archive/bukharin/works/1938/trial/index.htm
http://www.fee.org/publications/the-freeman/article.asp?aid=545

புகாரினின் மனைவி:
http://en.wikipedia.org/wiki/Anna_Larina

ஸ்டாலின்:
http://en.wikipedia.org/wiki/Stalin

குளக்குகளும் சைபீரியா வதைமுகாம்களும்:
http://en.wikipedia.org/wiki/Kulak
http://www.economicexpert.com/a/Kulak.htm

கேரளாவின் அய்யன்காளி:
http://en.wikipedia.org/wiki/Ayyankali

ரணதிவே:
http://www.citu.org.in/btr%20.htm

கவிஞர் புஷ்கின்:
http://en.wikipedia.org/wiki/Aleksandr_Pushkin

எழுத்தாளர் குப்ரின்:
http://en.wikipedia.org/wiki/Alexander_Kuprin

தச்ஸ்தோய்:
http://en.wikipedia.org/wiki/Tolstoy

8 thoughts on “பின் தொடரும் நிழலின் குரல் : தருமம் மறுபடி வெல்லும்!

  1. முத்து உங்களுக்கு என்ன ஒரு இருபத்து அஞ்சு வயசு இருக்குமா? இன்னும் நாலஞ்சு வருஷம் கழிச்சு , இதே நாவலை நீங்க வாசிச்சீங்கன்னா, உங்க பார்வையில் மாற்றம் ஏற்பட்டிருக்கும். இதை நான் என்னுடைய அனுபவத்திலேர்ந்து சொல்றேன். நான் உங்க வலைப்பதிவின் தீவிரமான வாசகன் என்கிற அடிப்படையிலே. சில அட்வைஸ் பண்றேன். எடுத்துக்கறதும், எடுத்துக்காததும், உங்க விருப்பம்.1. வெகு சன ஊடகத்திலே இயங்குகிற எல்லோருக்கும் ஒரு அரசியல் உண்டு. “இவன் ரொம்ப நல்லவன்….” என்று வடிவேலு பாணியிலே யாரையும் அணுகாதீர்கள்.2. மார்க்ஸிசம், கம்யூனிசம் பெரியாரியம் போன்ற எளிய மனங்களால், லேசில் புரிந்து கொள்ள இயலாத விஷயங்களை, நமக்கு interpret ( அச்சு/ஒலி/ஒளி/ இணைய ஊடகங்களில்) செய்து தருவதாக பாவ்லா காட்டும் யாரையும் நம்பாதீர்கள். எல்லாருமே ஏமாற்றுக்காரர்கள். முடிந்தால், மூலப்பிரதிகளை வாசிக்கவும். முடியவில்லை என்றால் போக்கிரி படத்தை மூன்றாவது முறையாகப் பார்க்கவும்.3. ஜெயமோகனின் நாவலை வைத்து நீங்கள் ஸ்டாலினிசத்தைப் புரிந்து கொள்ள முயலுவதில் என்ன ஆகும் என்றால், நாளை பின்னே, யாராவது யாராவது கம்யூனிசம், ஸ்டாலினிசம் என்று பேசினால், ” நம்ம ஜெமோ, கிண்டடிச்சு ஒரு நாவல் எழுதினாரே.. அந்த மேட்டர்தானே?” என்று குறிப்பிடப்படும் லெவலுக்கு வந்து விடும். எப்படி அக்கிரகாரத்தில் கழுதை, ஜான் ஆபிரகாமின் சினிமாவாக அறியப்படாமல், வெங்கட் சாமிநாதன் எழுதின புஸ்தகமாகக் கருதப்படுகிறதோ அப்படி..4.கிறங்க வைப்பது போல, தர்க்க ரீதியாக எழுதுவது என்பது ஒரு மோசமான வலை. நான் உள்பட, அதிலே விழுந்தவர்கள் ஏராளம். நல்லா எழுதற யாரையுமே சந்தேகத்தோடு பார்க்கணும். தமிழ்நாட்டு அரசியல் கலாசாரத்திலே பேச்சுக்கு எப்போதுமே தனி மரியாதை. அதே போல அறிவுஜீவிக் கலாசாரத்திலே எழுத்துக்கு எப்போதும் தனி மரியாதை. ஆகவே…ஏமாறாதீர்கள்.

    Like

  2. ப்ரகாஷ், என் வயதை குறைத்து மதிப்பிட்டதுக்கு ரொம்ப நன்றி. I am 28! கிட்டத்தட்ட நீங்க சொன்ன வயதில தான் நான் இப்ப இந்த நாவலைப் படிச்சிருக்கேன். என்னக்கொன்னும் வித்தியாசமாத் தெரியலீங்கண்ணா. ஜெயமோகன் அவருடைய வாதத்தை எடுத்துக்கூறியிருக்கிறார். அதிலே வாதமும் உண்டு எதிர்வாதமும் உண்டு. நான் அதை ஆதரிக்கவும் இல்லை எதிர்க்கவும் இல்லையே. எனக்குத் தான் கம்யூனிசம் தெரியாது என்று சொல்லிவிட்டேனே. ஆனால் ஒன்றை நீங்கள் கவனிக்க வேண்டும். நான் கொடுத்திருக்கும் சுட்டிகளை நீங்கள் பார்த்தீர்களா? நான் ஜெயமோகன் சொன்னதை அப்படியே ஏற்றுக்கொண்டிருந்தால் இணையத்தில் அவர் சொன்ன விசயங்களை தேடியிருக்கமாட்டேன். குளாக்குள் இருந்ததும் உண்மை. அவர்களை சைபீரியா வதை முகாம்களுக்கு அனுப்பியதும் உண்மை. ஒன்றரைக்கோடி விவசாயிகள் கொல்லப்பட்டதும் உண்மை. புகாரின் சதியால் சிறைப்பிடிக்கப்பட்டது வேண்டுமானால் முதலாளித்துவ வாதம் என்று நீங்கள் எண்ணலாம். ஏன் உண்மையாகவே இருக்கலாம். மற்றவைகளை உங்களால் மறுக்க முடியுமா? கடைசியில் என்ன எழுதியிருக்கிறேன் என்று பார்த்தீர்களா? ஒரு முகமாகப் பார்க்காதீர்கள் என்று எழுதியிருக்கிறேன். அலசி பாருங்கள். ஆராய்ந்து பாருங்கள். முடிவை நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள். நாவலைப் படிக்கும் வரையில் இது கமியூனிசத்தைச் சார்ந்த நாவல் என்று எனக்கு சத்தியமாகத் தெரியாது. தெரிந்த பிறகு ஜெயமோகன அரசியல் சார்ந்து எழுதியிருப்பாரா என்று யோசிக்க முடியாது. கொடுத்ததைப் படித்தேன். படித்ததைச் சொன்னேன். நீங்கள் பின் தொடரும் நிழலின் குரல் படித்திருக்கிறீர்களா? ஓநாயுடன் மனிதன் சேர்ந்து வாழ்வது எப்படி என்ற நாடகத்தைப் படித்திருக்கிறீர்களா? parody is everywhere. அந்த நையாண்டி ரசிக்கத் தகுந்ததாய் இருந்ததா இல்லையா? There is no ideal system in the world. உங்களால் ideal system இது என்று எதையாவது காட்ட முடியுமா? எல்லாவற்றிலும் குறைகள் இருக்கின்றன. நிறைகளும் இருக்கின்றன. அதுதான் கடைசி பேராவில் உள்ளது. மார்க்ஸிசம் பற்றியது. தயவுசெய்து கடைசி பகுதியை மீண்டும் ஒரு முறை படிக்கவும். அதற்கு முந்தைய பகுதியையும் மீண்டும் ஒரு முறை படிக்கவும்.ஜெயமோகனின் நாவலின் வாயிலாக நாம் மார்க்ஸிசத்தையும் லெனினிசத்தையும் கம்யூனிசத்தையும் புரிந்து கொள்ள முயலவில்லை. அப்படி எங்கேயும் நான் சொல்லவும் இல்லை. அதன் வேர்களை அறிவதற்கு வாய்ப்பு கிட்டியது என்று தான் சொன்னேன். இனி வாய்ப்பு கிடைத்தால் மூல நூல்களை படிப்பேன். கண்டிப்பாக. ஏற்கனவே எனது லிஸ்டில் மூலதனம் இருக்கிறது. நீங்கள் சொல்வதை நான் முற்றிலுமாக ஒப்புக்கொள்கிறேன்: சந்தேகத்தோட பார்க்கனும் என்பது சரி. ஆனால் சந்தேகப்பட்டு முற்றிலும் ஒதுக்கிவிடக்கூடாது என்பதும் உண்மை. சந்தேகம் ஒரு பேய் என்பதை தாங்கள் அறியவில்லையா என்ன?நீங்கள் என் வலைப்பதிவுக்கு ரசிகராக இருக்கலாம், அதற்காக போக்கிரி படத்தை மூன்றாவது முறையாக பார்க்கச் சொல்லும் தார்மீக உரிமை (அதுவும் தண்டிக்கும் உரிமை!) தங்களுக்கு இல்லை என்பதை பணிவன்புடன் கூறிக்கொள்கிறேன்.அது சரி, நீங்கள் மூல நூலகள் எல்லாவற்றையும் படித்தாயிற்றா?

    Like

  3. i have read this twice.. even i don’t feel any difference.. the questions raised against Stainlism sounds to logical to me…communisms failed to adopt new upcoming

    Like

  4. nice post. i liked the portions in the book about veerabhatrapillai’s letters and diaries.. and the ‘resurrection’ story towards the end of the book.

    Like

  5. Though i haven’t read much novels i think this novel should be the most important one in tamil literature.Also Jayamohan’s novel Ezham uzhagam is equally important.It describes about an world which i had not seen and heard before.The end will really disturb any person atleast for some days.It is a real pain.As far as Pinthodarum nizhalyin Kural is concerned it is not only about communism its raise and fall,it is much more.Like KKM , Arunachalam leaving the faith on communism and Arunachalam Praying in an temple.Also the end where Christ comes and all of them go with the chirst.Eveyone needs some faith to survive.A very important novel.Thanks,Sarwothaman.S

    Like

  6. 5 வருடங்களாகியும் இன்னும் நினைவிலிருந்து அகலாத நாவல் , அருமையான விமர்சனம் , நாகம்மையின் பாத்திரம் மிக இயல்பானது , தர்க்கம் எனும் விஷயத்தை மிக ஆழமாக அலசிய நாவல் ,

    Like

Leave a reply to Baraka Cancel reply