எழுதுவதற்கு கொஞ்சமும் நேரம் கிடைப்பதில்லை, இப்பொழுதெல்லாம். அப்படியே கிடைத்தாலும் என்ன எழுதுவது என்றும் தெரிவதில்லை. திரும்பத்திரும்ப, படித்த புத்தகங்களைப் பற்றியும், பார்த்த படங்களைப் பற்றியும் எத்தனை முறைதான் எழுதுவது. ஆனால் இதையும் எழுதாவிட்டால் பிறகு எதைத்தான் எழுதுவது. இவற்றைத் தவிர்த்து வேறு ஏதாவது எழுதினால் அது கண்டிப்பாக மொக்கைப் பதிவாகிவிடுகிறது.
***
போன வாரம் இந்தியா சென்றிருந்தேன். ஒரு வார அவசர விஸிட். பல்லேலக்கா பல்லேலக்கா காவிரியாரும் கைக்குத்தல் அரிசியும் மறந்து போகுமா ன்னு பாட்டு பாடிட்டே போகலாம்னு நினைச்சேன். ஆனா அதெல்லாம் அமேரிக்கால இருந்து வற்ரவங்கதான் பாடனுமாமே? இங்கனக்குள்ள இருக்கற சிங்கப்பூர்ல இருந்து வந்துட்டு இந்த அலும்பான்னு கேக்கறாங்க. சரி விடுங்க. இன்னோரு மேட்டர் சொல்றேன். சூரியனோ சந்திரனோ யாரிவனோ சட்டென சொல்லு, பாட்டக்கேக்கும் போது எனக்கு ஒன்னு தோணுச்சு.
ஒரு ஊர்ல சூரியன், சந்திரன் அப்படீன்னு ரெண்டு twins இருந்திருக்காங்க. சூரியன் ரொம்ப குண்டு. சந்திரன் ரொம்ப ஒல்லி. சூரியன் நல்லாவே படிக்கமாட்டான். சந்திரன் நல்லா படிப்பான். சூரியன் இந்தியாவிலே இருந்திட்டான். சந்திரன் சாப்ட்வேர் இஞ்சினியர்யாகி அமெரிக்கா போயிட்டான். (நல்லா படிச்சாத்தான் அமெரிக்கா போகமுடியும் அப்படிங்கற அர்த்தம் இல்ல!) நம்ப சந்திரன் அமெரிக்கா போன பிறகு நல்லா அங்க மாட்டுக்கறி பன்றிக்கறின்னு ஏதேதோ சாப்டு நல்லா தொந்தியும் தொப்பையுமா குண்டாகிட்டான். பின்ன ரொம்ப நாள் கழிச்சு லீவுல இந்தியா வந்திருக்கான். வீட்டுக்கு பல்லேலக்கா பல்லேலக்கான்னு பாட்டு பாடிட்டே வந்திருக்கான். அவங்க அப்பத்தா நிமிந்து பாத்திட்டு “பல்லு வெளக்கல. எனக்கு தான் பொக்கைவாய்ல” ன்னு சொல்லிருக்கு. பாரு கெழவிக்கு எம்புட்டு திமிருன்னு நெனச்சிருக்கான். அப்புறம் தான் அப்பத்தா சொல்லிருக்கு “சூரியனோ சந்திரனோ யாரிவனோ சட்டென சொல்லு” ஏன்னா ரெண்டு பயலுவலும் குண்டாத்தான இருக்காய்ங்க? இதுல யாரு சூரியன் யாரு சந்திரன்னு குழப்பம் வரத்தான செய்யும்?
அப்புறம் “அண்ணன் வந்தா தமிழ்நாடும் அமெரிக்கா” ன்னு சந்திரன் பாடிட்டேயிருந்திருக்கான். சந்திரன் வந்துட்டான்ல இனிமே நம்ப வீட்ட அவனோட அமெரிக்கா வீடு மாதிரி நல்லா hitechஆ மாத்திருவான்னு கெழவி நெனச்சது. பாத்த காலைல இருந்து ராத்திரி வரைக்கு அவன் தூங்கிட்டே கெடந்திருக்கான். அப்பத்தான் அப்பத்தா கேட்டுச்சு, “ஏண்டா சூரியா, இந்த சந்திரன், ‘அண்ணன் வந்தா தமிழ்நாடும் அமெரிக்கா அமெரிக்கா’ ன்னு பாடிட்டு கெடந்தானே? என்ன இப்படி தூங்கிட்டு கெடக்கான்” ன்னுச்சு. அதுக்கு சூரியன் சொல்லிருக்கான்: “உனக்கு விசயம் தெரியாதா அப்பத்தா. நம்பளுக்கு பகல்ன்னா அமெரிக்காவில ராத்திரி. அதானால தான் அவன் சொன்னான், தமிழ்நாடும் அமெரிக்கான்னு. இங்க வந்து பகல்லையும் நல்லா தலையோட பொத்திக்கிட்டு தூங்கறதுக்குத்தான் இந்த பில்டப்பு” ன்னுருக்கான்.
“காவிரியாறும் கைக்குத்தல் அரிசியும் மறந்து போகுமான்னு” பாடிட்டேயிருந்திருக்கான். அப்பத்தா அவன் கிட்ட கேட்டுச்சு, “ஏண்டா கோர்ட்டு கர்நாடகாவ எத்தன டிஎம்சி தண்ணி தெறந்து விடச்சொல்லுச்சு, அதுக்கு அவிங்க எத்தன டிஎம்சி தொறந்து விட்டாய்ங்கன்னு தெரியுமா?” அவன் முழிச்சான். பிறகு சொன்னான், “வாஜ்பாய்க்கு வந்த selective memmory disorder மாதிரி எனக்கு situation memmory disorder இருக்கு. அதனால இந்த situationla மறந்து போயிருச்சு. பின்னால ஞாபகம் வரும்போது சொல்றேன் கெழவி” ன்னு சொன்னான். மனசுக்குள்ளே “கெழவி எப்படி கோர்த்துவிடுதுபாரு” ன்னு நெனச்சுக்கிட்டான்.
***
இந்த முறை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ¤ம் ஒன் ஹவர் டிலே.யாரோ பேஸஞ்சர் கடைசி நிமிடத்தில வரலையாம். அதனால அவரோட செக்-இன் பண்ணின பேக்கேஜ்ஜையெல்லாம் திரும்ப எடுத்திட்டு இருந்தாங்க. அதனால லேட். ஆனா வழக்கத்துக்கு மாறா வேகமாக போச்சு. கடைசியில லேண்ட் ஆகும் போது பத்து நிமிசம் தான் லேட். நாம வேகமா போய் ஒன்னும் மில்லியன் டாலர் ஒப்பந்தத்தில கையெழுத்து போடப் போறதில்லதான், ஆனா அப்படி கையெழுத்து போடறவங்களும் இருக்காங்களே!
***
விமானத்தில் என் சீட்டுக்கு பக்கத்தில் இருந்தவர் ஆஸ்திரேலியாவிலிருந்து வருகிறவர். என் வயது அல்லது கொஞ்சம் அதிகம் இருக்கும். சிங்கப்பூரில் transitஇல் நண்பர்கள் வீட்டில் சொஜ்ஜி பஜ்ஜியெல்லாம் சாப்பிட்டுவிட்டு ஹாயாக வந்திருந்தார். நான் தமிழ் தான் என்றவுடன் அவருடைய முகத்தில் ரொம்ப சந்தோஷம். நிறைய பேசனும்னு நினைச்சார். பொன்னியின் செல்வனை முப்பது தடவைக்கும் மேல் படித்திருப்பதாகச் சொன்னார். முப்பது தடவையா? கொஞ்சம் கஷ்டம் தான். மதனிடம் ஒரு முறை ஒருவர் கேள்வி கேட்டிருந்தார் : ” நீங்கள் அதிக முறை படித்த புத்தகம் எது” என்று. அவர் பொன்னியின் செல்வன் என்று சொல்லிவிட்டு பிறகு சொன்னார் “இப்பொழுதெல்லாம் ஒரு புத்தகத்தை ஒரு முறைக்கு மேல் படிப்பதில்லை. ஏனென்றால் அதே புத்தகத்தை மறுமுறை படிக்கும் அந்த நேரத்தில் வேறொரு புத்தகத்தை படித்துவிடலாமே” என்றார்.
நானும் மதன் கட்சிதான். இது வரையில் நான் எந்த ஒரு புத்தகத்தையும் ஒரு முறைக்கு மேல் படித்ததில்லை. பொன்னியின் செல்வன் உட்பட.
***
சுயவிளம்பரம் எனக்கு பிடிக்காது! (ம்ம்…சொன்னாங்க. சொன்னாங்க!) ஆனாலும் புத்தகத்தைப்பத்தி பேசிட்டிருந்தப்போ நான் ஒரு bloggerன்னு சொல்லியிருக்கக்கூடாதுதான். ஒரு நிமிஷம் யோசிச்ச அவர், “நான் ஒரு blogger” ன்னு அவர்க்குள்ளே சொல்லிக்கொண்டார், பிறகு “அது என்ன புக்? கொஞ்சம் சொல்லுங்களேன்” ன்னு சொன்னார்.
***
சென்னையில் தாஜ் கோரமண்டலில் சாப்பிட்டோம். ரெஸ்டாரெண்ட் பெயர்: Match Point. பசங்ககிட்ட அஞ்சப்பர் போகலாம்டான்னு சொன்னா வித்தியாசமா பாக்கறாய்ங்க. இப்பெல்லாம் சோழா செராட்டான், லீ ராயல் மெரிடியன், அப்புறம் ஏதோ கார்னர் (அதுவும் buffet தான்), பார்க் இன் அப்படீன்னு தான் சாப்படறாங்களாம்.
அப்புறம் வேளச்சேரில டபுள் பெட்ரூம் ப்ளாட் வாடகை ஏன் பணிரெண்டாயிரம் ரூபாய் இருக்காது? நான் முதன் முதலில் சென்னைக்கு வேலை தேடி வந்த போது, இப்ப இருக்கற 100 ft ரோடெல்லாம் வெறும் காடுதான். அதிகமில்லை ஜென்டில்மேன் just before six years!
இப்போ அதே இடத்தில் வாடகை : பணிரெண்டாயிரம்! எப்பொழுதும் current போகவேபோகாதாம். மொட்டை மாடியிலிருந்து அந்த ப்ளாட்டையே பார்த்துக்கொண்டு சொன்னார்கள் என் நண்பர்கள்.
இரவு மொட்டைமாடியில் தான் தூங்கினேன். கொசுக்கடி. ஆனா நாள் பூரா வெயில்ல அலைஞ்சு திரிஞ்சதுக்கு இரவு குளிர் இதமாக இருந்தது.
Match Point-ல் கொஞ்சம் காஸ்ட்லி தான் ஆனால் உணவு எனக்கு பிடித்திருந்தது. அங்கு சாப்பிட வந்திருந்த girlsம். நாங்கள் சாப்பிட்ட இடம் : pool view.
***
காலையில் எழுந்து டி.நகரில் கீதாஞ்சலியில் ரூம் போட்டுவிட்டு, மாம்பழம் ரயில் நிலையத்திற்கு குடும்பத்தினரை வரவேற்கச்சென்றேன். என்னிடம் செல் போன் இல்லை. என் நண்பன் நவனீதனின் செல் போனைத்தான் உபயோகித்துக்கொண்டிருந்தேன். அதிகாலையில் அவனிடமிருந்து வாங்கிவரவில்லை.
என் அண்ணன் நெல்லை எக்ஸ்பிரஸ் மாம்பழத்துக்கு, காலையில 5 மணிக்கெல்லாம் வந்திடும்டான்னு சொல்லியிருந்தார். நான் ஸ்டேஷன் போனதென்னவோ 5:10. எனக்கு சந்தேகம். டிடீயாரிடம் விசாரித்ததில் அவர் 5:30க்குத்தான் வரும்ன்னு சொன்னார். பிறகு போர்ட்டரிடம் விசாரித்ததில், எப்படியும் காலை ஆறு மணி ஆகிவிடும்ன்னு சொன்னார்.
எனக்கு குழப்பம். பசிக்கவேறு செய்கிறது. செல்போன் இருந்தால் வசதியாக இருக்கும். அண்ணனுக்கு கால் பண்ணி exactly எங்க வந்திட்டிருக்காங்கன்னு தெரிஞ்சுக்கலாம்.
பக்கத்து இருக்கையில் கோயம்புத்தூர் எக்ஸ்பிரஸ¤க்கு மூன்று இளைஞர்கள் காத்துக்கொண்டிருந்தனர். சாப்ட்வேர் மக்கள் என்பது அவர்களது பேச்சிலிருந்து தெரிந்தது. தமிழிலும் ஆங்கிலத்திலும் பேசிக்கொண்டிருந்தனர்.
அவர்களிடம் செல்போன் வாங்கி ஒரு கால் செய்யலாமா என்று யோசித்தேன். ஆனால் கொஞ்சம் தயக்கம் இருந்தது. சிறுது நேரம் மௌனமாக உட்கார்ந்திருந்தேன். ஒரு டீ சாப்பிடனும் போல இருந்தது. எங்கிருக்கிறார்கள் என்று தெரிந்தால் வெளியே போய் நிம்மதியாக டீ சாப்பிட்டு விட்டு வரலாம். முடிவாக அவர்களிடம் செல்போன் கேட்பது என்று முடிவு செய்தேன்.
எழுந்து சென்று “ஹலோ. எக்ஸ்க்யூஸ் மீ. உங்களிடம் செல்போன் இருக்கிறதா? அவசரமா ஒரு கால் செய்யனும். ப்ளீஸ்” என்றேன். அதில் கண்ணாடி அணிந்திருந்த வளர்த்தியாக இருந்த ஒரு நபர் சட்டென்று சொன்னார் : “இல்லை”. நான் ஒரு நிமிடம் தடுமாறிவிட்டேன். “yeah sure” என்ற பதிலைத்தான் நான் எதிர்ப்பார்த்திருந்தேன். என் வாய் தானாக “இல்லையா?” என்று கேட்டது. மீண்டும் திட்டவட்டமாக அவர் “ஆமாம். எங்களிடம் இல்லை” என்றார். “ஓகே. தாங்க்ஸ்” என்று சொல்லிவிட்டு மீண்டும் என் இடத்தில் – அவர்கள் பக்கத்தில் இருந்த இருக்கையில் – வந்து அமர்ந்து கொண்டேன்.
Embarrased. என்னால் அவர்களைப் பார்க்கவே முடியவில்லை. so அவர்கள் அமர்ந்திருக்கும் எதிர் திசையிலே பார்த்துக்கொண்டிருந்தேன். அவர்கள் பேச்சை சுத்தமாக நிறுத்தி விட்டிருந்தனர். அவர்களுக்குள் பேசவே இல்லை. நீண்ட மௌனம்.
கோயம்புத்தூர் train வந்தபிறகு அவர்கள் சத்தமில்லாமல் ஏறிச்சென்றனர். அதற்கப்புறம் தான் என்னால் அவர்கள் அமர்ந்திருந்த திசையை நோக்கி பார்க்கவே முடிந்தது.
***