ரிச்சர்ட்கியர்-கீதாஞ்சலி-சரவணா ஸ்டோர்ஸ்-ஏர் டெக்கான்
போன பதிவைப் படித்துவிட்டு என் தோழி ஒருத்தி சொன்னாள்: “ஏன் அவங்க உனக்கு செல்போன் குடுக்க மாட்டேன்னு சொன்னாங்க? தூக்கிட்டு ஓடிடுவேன்னா? உன்னப்பாத்தா திருடன் மாதிரியா இருக்கு? அதுக்கு தான் சொல்றது ஊருக்குப் போகும் போது ஒழுங்கா முடிய வெட்டிட்டுப் போன்னு!”
நான் கொஞ்சம் நீண்ட தலைமுடி வைத்திருந்தேன் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் கூட அவர்கள் செல்போன் குடுக்க மறுத்திருக்கலாம். நீண்ட தலைமுடிவைத்திருப்பவர்கள் எல்லாம் ரெமோக்கள் அல்ல.
***
ஒரு வழியாக ஸ்டேஷனை விட்டு வெளியேறி கையில் வைத்திருந்த சில நாணயங்களில் ஒரு ரூபாய் நாணயம் ஒன்றைத்தேடி கண்டுபிடித்து வீட்டுக்கு டயல் செய்து ஆறு மணியாகும் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு, ஒரு டீ சாப்பிட்டேன். மாம்பலம் ஸ்டேசனுக்கு பக்கத்தில் இருக்கும் ரைட் கட்டிங்கில் இருந்த ஒரு டீ கடையில். அதிகாலையில் சூடாக டீ சாப்பிடுவது ஒரு சுகம் தான்.
ஒரு இந்தியா டுடே வாங்கிக்கொண்டேன். ரிச்சர்ட்கியரின் முத்தத்தை அடிப்படையாக வைத்து இந்திய கலாச்சாரத்தைக் காப்பவர்களை (அல்லது அப்படி சொல்லிக்கொண்டு அட்டகாசம் செய்பவர்களை) கேள்விகள் கேட்டிருந்தனர்.
ரிச்சர்ட்கியர் செய்தது தவறா அல்லது BigBrother அம்மணி சிரித்துக்கொண்டே ரசித்தது (உணமையில் ரசித்தாரா என்பது அவர் மட்டுமே அறிந்த உண்மை!) தவறா என்பது சாலமன் பாப்பையாவால் தீர்ப்பு சொல்லப்படவேண்டிய ஒன்று. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். ரிச்சர்ட்கியர் மகா ரசிகன். நான் ஆபீஸில் இருக்கும் போது எனக்கு இந்த கிளிப்பிங் ஈமெயிலில் வந்தது. பார்த்தவுடன் எனக்கு ஏனோ எரிச்சல் எரிச்சலாக வந்தது. மாஸ்டர் ஆம்லேட்! (இது நான் காலேஜ் படிக்கும் போது famous dialogue. பசங்க யாராவது கடலை போடறதப் பாத்தா, நமக்கு சூடா வயித்துல ஒரு அனல் எழும்பும் பாருங்க, அந்த ஹீட்டில் ஒரு முட்டைய உடச்சு ஊத்தினா அது உடனே ஆம்லேட் ஆயிடுமாம்! அவ்ளோ ஹீட்!)
Viewers Envy! Kissers Pride! What about Kissie?
***
கீதாஞ்சலியில் என்ன ஸ்பெஷல் என்று தெரியவில்லை. அதிகாலை நான்கு நாற்பதுக்கு receptionistஐ எழுப்பிய போது, வேண்டா வெறுப்பாக அவர் ரூம் போட்டுக்கொடுத்தது கூட இருக்கலாம். அல்லது ஏசி ரூம் புக் பண்ணியும் துண்டு, சோப்பு கூட குடுக்காது இருக்கலாம். கதவைத் திறந்தவுடன் ஓடிய கரப்பான்பூச்சிகளாக இருக்கலாம். இல்லை ஏசி ரூமில் எவ்வளவு நேரம் ஓடியும் கொஞ்சமும் குளிராத ஏசியாக இருக்கலாம். டீவி ரிமோட் காலை ஏழு மணிக்கு கேட்டு, கீழே ரிசப்ஷனில் மறுமுறை ஞாபகப்படுத்தியும் நாங்கள் கிளம்பும் வரை ரிமோட் கொடுக்காதது கூட இருக்கலாம். டீ சொல்லுவதற்காக ரிசப்ஷனுக்கு கால் செய்து, “சார் ஒரு டீ..” என்று சொல்லி முடிப்பதற்குள் “ஏழுக்கு கால் பண்ணுங்க” என்று சொல்லி டப்பென்று வைத்ததாக இருக்கலாம். நாங்கள் கேட்டிருந்த சுமோ வருகிறது வருகிறது என்று சொல்லி ஒரு மணி நேரம் வீணடித்து கடைசியில் கூலாக “வராதாம்” என்று சொன்னது கூட இருக்கலாம்.
கீதாஞ்சலி fast foods இல் நாலு இட்லி ஒரு தோசை சொல்லிவிட்டு அரைமணி நேரமாக நின்று கொண்டிருந்தேன். இத்தனைக்கும் கூட்டம் அதிகம் இல்லை. பொறுமையிழந்து அங்கே காபி போட்டுக்கொண்டிருந்த பையனிடம் சென்று “ஹலோ. நான் நான்கு இட்லி ஒரு தோசை சொல்லிருந்தேன். இன்னும் வரல என்னாச்சு” பதில்லில்லை. அவன் நிமிர்ந்து கூட பார்க்கவில்லை. “ஹலோ” பதிலில்லை. “தம்பி” பதிலில்லை. நிமிர்ந்துகூட பார்க்கவில்லை. உன் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையாடா? “தம்பி” நிமிர்ந்து பார்த்தான் “என்ன?” you see, just என்ன. (நான் தம்பி என்று மரியாதையாக கூப்பிட்டேன். நான் கண்டிப்பாக அவனை விட வயதில் மூத்தவனாகத்தான் இருப்பேன்.) “நான் நாலு இட்லி ஒரு தோசை பார்சல் சொல்லிருந்தேன்..” என்று நான் சொல்லிமுடிப்பதற்குள், அவன் “சொல்ட்டேல்ல. கொடுப்பாங்க. போ” என்றான். எனக்கு பளார் என்று ஒன்று விடலாமா என்று தோன்றியது. பிறகும் அவன் கையில் கொதித்துக்கொண்டிருந்த பால் என்னை அச்சப்படுத்தியது. முகத்தில ஊத்தினாலும் ஊத்திருவான். நகர்ந்து safeஆக நின்று கொண்டேன்.
***
சரவணா ஸ்டோர்ஸ் கண்டிப்பாக போயே ஆக வேண்டும் என்று என் அக்கா அடம் பிடிக்கவே, வேறு வழியில்லாமல் சென்றோம். கூட்டமோ கூட்டம். எனக்கு பிரமிப்பாக இருந்தது. இன்று வரை அந்த பிரமிப்பு அகலவில்லை. அடேயப்பா எவ்வளவு items. எத்தனை salespersons. எத்தனை மக்கள் கூட்டம். எப்படி சமாளிப்பார்கள்? சமாளிக்கிறார்கள்? விலையும் குறைவு என்று என் அக்கா சொன்னார். கூட்டத்திலும் இரைச்சலிலும் தள்ளுமுள்ளுவிலும் என்னால் நிற்க முடியவில்லை. ஆனால் நாள் முழுதும் நின்று கொண்டு, வாடிக்கையாளர்களின் “இதே ஸ்கூல் பேக் வேணும் ஆனா முன் பக்கம் ஜிப் இல்லாம ராமர் பச்சை கலர்ல வேணும். இருக்கா?” போன்ற stupid கேள்விகளுக்கு சலைக்காமல் முகத்தில் சிரிப்புடன் பதில் சொல்லிக்கொண்டிருக்கும் அந்த salespersonகளுக்கு ஒரு பெரிய சல்யூட்.
***
சரவணா ஸ்டோர்ஸில் purchase கூட பண்ணிவிடலாம் ஆனால் லிப்ட் கிடைப்பது தான் கஷ்டம். சிங்கப்பூரில் வீடு கிடைப்பதை விட கஷ்டமானதாகத் தோன்றியது எனக்கு. சரி படிகளில் இறங்கிவிடலாம் என்று நினைத்தபோது அம்மா எப்படி இறங்குவார்கள் என்ற எண்ணம் தோன்றியது.
காத்திருந்தோம். லிப்ட் வந்தது. எங்கள் floorஇல் இருந்து கொஞ்சம் பேர் மட்டுமே ஏற முடிந்தது. நாங்கள் ஏறவில்லை. லீப்ட் overload. பூட்ட முடியவில்லை. லிப்ட் ஆபரேட் செய்யும் பையன் “please யாராவது ரெண்டு பேர் இறங்குங்க.” என்றான். எங்களுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லாத மாதிரி நின்றிருந்தனர் மக்கள். “ரெண்டு பேர் இறங்குங்க. அப்பத்தான் லிப்ட் போகும்” ஒரு அசைவும் இல்லை. முன்னாள் சில க்கேரி பேக்குகளுடன் நின்றிருந்த நடுத்தர வயது நபரின் முகம் எனக்கு இன்னும் நன்றாக ஞாபகம் இருக்கிறது. அவரது முகமும் எனக்கென்ன வந்தது என்ற அந்த noexpression-expressionம். வாவ்.
அப்புறம் என் அண்ணன் இறங்குங்களேன் ன்னு ஒரு சவுண்ட் கொடுத்ததற்கப்புறம் தான் இறங்கினர். ஏன் இறங்கமறுத்தனர்? லிப்ட் ஓவர் லோட் என்று தெரியாதா? அதுதான் ஆபரேட்டர் சொல்கிறாரே. அப்புறமும் தைரியமாக எப்படி நிற்கின்றனர். லிப்ட் overloadஇல் எங்காவது பாதியிலே நின்று விட்டால்? அப்பொழுது என்ன செய்வது?
எனக்கு ஓவர்லோடாக சென்ற ஷேர் ஆட்டோ ரயில்வே க்ராஸிங்கில் மாட்டிக்கொண்டு ஆக்ஸிடென்ட் ஆன சம்பவம் ஏனோ நினைவுக்கு வந்தது. அதில் பயணம் செய்த மக்கள் கொஞ்சம் பொறுப்புணர்வோடு செயல்பட்டிருந்தால் அந்த ஆக்ஸிடென்டை தவிர்த்திருக்கலாம்.
எல்லோருக்கும் பொறுப்பிருக்கிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
***
சென்னையிலிருந்து மதுரை வருவதற்கு train tickets எல்லாமே full. எனவே நான் air-deccanஇல் எல்லோருக்கும் ticket போட்டிருந்தேன். என் நண்பன் சிவா முன்னரே சொல்லியிருந்தான் : உங்க சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மாதிரி இருக்காது. flight கிளம்புவதற்கு கொஞ்ச நேரம் முன்னர் தான் ஏசி போடுவார்கள். இறங்கிய அடுத்த நொடி ஏசி ஆப் செய்யப்பட்டு விடும். அது ஒன்றும் பெரிய பிரச்சனை இல்லை. Budget Airways என்றால் அப்படித்தான். குறைந்த கட்டணத்தில் அழைத்துச் செல்கிறார்களா இல்லையா? Gain something, you loose something.
அதிகாலையில் வேகமாகவே கிளம்பிவிட்டோம். காலை நான்கு மணி இருக்கும். எங்களுக்கு ப்ளைட் ஆறு நாற்பதுக்கு. ஏர்போர்ட்டுக்குள் நுழைந்தவுடன் எனக்கு ஷாக். அவ்ளோ கூட்டம். பெரிய க்யூ. அப்பாவையும் அம்மாவையும் ஒரு இடத்தில் அமரச்செய்து விட்டு, நானும் அண்ணனும் luggageஉடன் க்யூவில் நின்றோம். நீண்ட நேரம் கழித்து, security check அருகில் சென்றவுடன், அங்கிருந்த பையன் சொன்னான் “மதுரை செல்லும் ப்ளைட்டுக்கான கவுண்ட்டர் இன்னும் ஓபன் செய்யப்படவில்லை. கொஞ்ச நேரம் நில்லுங்கள்” என்றான்.
நான் சுற்றும் முற்றும் பார்த்தேன். மணி 5:15. கொஞ்ச தூரத்தில் ஏதோ சலசலப்பு கேட்கவே என்வென்று பார்க்கப் போனேன். அங்கே ஒரு வடக்கத்திய குடும்பம் அங்கிருந்த ஏர் டெக்கான் ஆபிசருடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். அவர்கள் flightக்கு இன்னும் அரைமணி நேரம் இருக்கிறது. இவர்களை செக்கின் செய்ய மறுக்கிறார்கள். அந்த கும்பலில் இருந்த பெண்மணி தாம்தூம் என்று குதித்துக்கொண்டிருந்தார்.அதிகாரி என்னால் ஏதும் செய்ய முடியாது என்று சொல்லிவிட்டார்.
உள்ளேயும் போக முடியாது. டிக்கெட் பணமும் திரும்பக்கிடைக்காது. ஆனால் வெளியே போகலாம்! என்றார் அதிகாரி. என்னை போல வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஒரு நபர் சொன்னார்: உங்களுக்கு தெரியுமா டெக்கான் ஏர்வேஸில் பயணம் செய்ய வேண்டுமானால் மூன்று மணி நேரத்துக்கு முன்னர் வரணும்.
(மூணு மணி நேரமா? பிறகு எதுக்கு flightல போவானேன்? மதுரைக்கு போறோம்னு வெச்சுக்கோங்க. மதியம் 12:30 வைகையை பிடிச்சொம்னா கரெக்டா 8 மணி சுமாருக்கு மதுரைக்கு கொண்டுபோய் விட்டுடுவான். Travelling time just 7:30 hrs. இந்த ப்ளைட்ல போறதுக்கு வீட்ல இருந்து ஏர்போர்ட் வருவதற்கு ஒரு மணி நேரம். மூணு மணிக்கு முன்னர் வரணும். அப்புறம் travelling time 45 நிமிஷம். அப்புறம் லக்கேஜ்க்காக வெயிட் பண்றது ஒரு 45 நிமிஷம்னு இதுவே 5 மணி நேரம் கணக்கு வந்திருது. மிச்சமென்ன? trainல போனா லக்கேஜ் செக்கின் பண்ற தலைவலி இருக்காது.)
அவர்களைப் பத்திக் கவலையில்லை. என்னோட கவலை இப்போ அதிகமாயிடுச்சு. மணி 5:30 ஆகிருச்சு. 6:40க்கு flight. இன்னும் கவுண்ட்டரே ஓபன் பண்ணல. அதே அதிகாரியிடம் போய் “அண்ணே மணி 5:30 இன்னும் மதுரை ப்ளைட் கவுண்ட்டர் ஓபன் பண்ணவேயில்ல. தயவு செஞ்சு ஓபன் பண்ணிடுங்க. பிறகு இந்தமாதிரி ஆக்கிவிட்டுடாதீங்க” ன்னு சொன்னேன். அதற்கப்புறம் தான் அவர் பார்த்து கோயம்புத்தூர் கவுண்டரில போடறேன் நீங்க போங்க சார்ன்னு சொன்னார்.
***
கோயம்புத்தூர் செல்லும் விமானத்துக்கும் மதுரை செல்லும் விமானத்திற்கும் boarding pass வாங்குவதற்கு ஒரே க்யூ தான். போர்டிங் பாஸ் வாங்கறதுக்கு க்யூவுல நிக்கறதுக்குள்ள பெரியபாடாயிருச்சு. அப்படி அப்படியே இடைச்செறுகலா மக்கள் வந்து ஒட்டிக்கறாங்க. எப்படி முடியுது? அவங்களை எல்லாம் அப்புறப்படுத்தி க்யூ இது, பின்னாடி போங்கன்னு சொல்ற வேலையை நான் எடுத்துக்கிட்டென்.
அங்க கவுண்ட்டர்ல ஒரு foreign lady சண்டை போட்டிட்டிருந்தாங்க. over luggage fine கட்டுங்கன்னு air-deccan சொல்லுது. அந்த அம்மணி கூலாக என்கிட்ட பணம் இல்லன்னு சொல்றாங்க. பணமில்லை என்னால fine கட்ட முடியாது. இந்த இடத்தை விட்டும் போக மாட்டேன். Mangerஅ இங்க வரச்சொல்லுன்னு சொல்லிட்டிருந்தாங்க. அப்படி போடு!
இந்த குழப்பத்தில் நான் சென்று என் டிக்கெட்டைக் காட்டினேன். அங்கிருந்த செக் இன் செய்யும் நபர் foreign ladyஐ திட்டிக்கொண்டே, என்னுடைய luggageக்கு கோயம்புத்தூர் ஸ்டிக்கர் ஒட்டினார். அடப்பாவி நான் மதுரைக்கு போகும் போது என் luggage மட்டும் எப்படி கோயம்புத்தூர் போகும்?
நல்லவேளை நான் கவனித்தேன். இல்லையேல் மதுரை சென்று எங்கடா இன்னும் பேக் வந்து சேரலைன்னு பேக்கு மாதிரி முழிச்சிட்டு இருந்திருப்பேன்.
***
கீதாஞ்சலியில செவுட்டு ரூம் பாயை சந்திச்சீங்களா ?ரூம் ப்ரஷ்னர் கூட தரமாட்டானுங்க…இருந்தாலும் வேற ஆப்ஷன் கிடையாது நம்ம பர்ச்சேசிங் மக்களுக்கு…நாந்தான் அப்பவே சொன்னேன்ல..நீங்க நல்லா எழுதறீங்கன்னு…:::
LikeLike
நம்ப ஊர பொறுத்த வரைக்கும் கன்சுயுமர் ரைட்ஸ்ங்கறது லக்ஸூரி ஜட்டம் முத்து.இதெல்லாம் பெரிசா எடுத்துக்காதிங்க,கலாச்சாரங்கறத பெட்ரூம் சம்பந்த பட்ட பொருள்ல மட்டும் வச்சுகிட்டு அது இதுனு வாய் கிழியும், ஆனால் சிவில் ரைட்ஸ், கன்சுயுமர் ரைட்ஸ்னா அது கலாச்சார கணக்கில வராது
LikeLike
செந்தழல் ரவி: வாங்க சார். செவிட்டு ரூம் பாயை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஒரே ஒரு நாள் தான் தங்கினோம். நல்லா எழுதறேனா? ஹி ஹி. தாங்க்ஸ்.நிர்மல்: லக்ஸ¥ரி ஐட்டம் தான். மக்களும் கண்டுகொள்வதில்லை. அவர்களும் கண்டுகொள்வதில்லை. என்னுடைய அண்ணன் (lawyer) ttcக்கு எதிராக வழக்கு தொடர்ந்து பதினைந்தாயிரம் ரூபாய் இழப்பீடாக வாங்கினார். இது நடந்தது 1999இல். ரைட்ஸை விட்டுக்கொடுக்காதவர்கள் இருக்கவே செய்கிறார்கள். சிலர் ஏன் வீண் தலைவலி என்று கண்டுகொள்வதில்லை.
LikeLike
🙂 – mm
LikeLike