ரமேஷ்-பிரேம் எழுதிய ஒரு ஓரினச்சேர்க்கையைப் பற்றிய கதையை பற்றி நான் முன்னரே குறிப்பிட்டிருந்தேன். அந்த கதையில் எனக்கு உடன்பாடு இருக்கிறதா இல்லையா எனபதெல்லாம் வேறு விசயம். அந்த கதையைப் படித்துவிட்டு என் வீட்டுக்கு வந்திருந்த திரு. யாத்ரா ரவீந்திரன் அவர்களிடம் விவாதித்த பொழுது, அவர் என்னை விசித்திரமாகவே பார்த்தார். இதில் என்ன இருக்கிறது முத்து என்றார். ஆனால் என்னால் ஏனோ ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. அவர் சொன்னார், எழுத்தாளர் என்பவர் சமூகத்தைப் பிரதிபலிப்பவர்கள். அவர்களின் நோக்கம் சமூகத்தை திருத்த வேண்டும் என்பதல்ல. மேலும் எது குற்றம் என்பது யாருக்குமே தெரியாது. அப்படியிருக்கும் போது திருத்துவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார். யோசிக்கவேண்டிய விசயம் தான். ஆனால் ஓரினச்சேர்க்கை தவறா சரியா என்று பார்த்தால், தவறு தான். நான் ஓரினச்சேர்க்கையை கடுமையாக எதிர்ப்பவன். அதைச் சட்டப்பூர்வமாக்குவதையும் கடுமையாக எதிர்ப்பவன். யார் என்ன சொன்னாலும் சரி. எனக்கு எத்தனை கெட்டவார்த்தைகளில் பின்னூட்டம் வந்தாலும் சரி. என் நிலைப்பாடு இதுதான்.
பிரேம்-ரமேஷ் எழுதிய மற்றொரு கதையைப் படிக்க நேர்ந்தது. தீராநதி டிசம்பர் 2006 இதழில் வெளிவந்தது. கதையில் பெயர். பன்றி.
பன்றி என்ற தலைப்பைப் பார்த்ததும் எனக்கு ஏதோ யாரையோ கடுமையாக சாடியிருக்கிறார்(கள்) என்று நினைத்தேன். அதுவும் ஒரு வகையில் சரிதான். கதை முடியும் போது உணர்ந்து கொண்டேன். ஆனால் இதை சிறுகதை என்று சொல்லமுடியுமா என்ற யோசனை கதையைப் படித்தபின்னர் தோன்றியது. ஆனால் சிறுகதை என்ற வடிவம் காலந்தோறும் மாறி வந்து கொண்டேயிருந்திருக்கிறது. ஒரு சிறு சம்பவமும் கதையாகிறது. ஆனால் அதுவல்ல விசயம். கதையில் நிறைய வரலாற்று facts இருக்கும் போது அது கட்டுரையோ என்ற எண்ணம் வருகிறது. தீராநதியிலிருந்து ரமேஷ்-பிரேமிடம் கதை கேட்ட போது, அவர்களிடம் சிறுகதை ஏது இருந்திருக்காது, அப்பொழுது எழுதிக்கொண்டிருந்த கட்டுரையை அப்படியே சிறுகதையாக்கி கொடுத்துவிட்டனரோ என்று கூட நினைத்தேன். இருக்கலாம். வாய்ப்பிருக்கிறது.
***
சில நாட்களுக்கு – மாதங்களுக்கு- முன்னர் விகடனில் எஸ்.ராமகிருஷ்ணனின் சிறுகதை ஒன்றைப் படித்தேன். கதையின் பெயர் என்னவென்று வழக்கம்போல் ஞாபகம் இல்லை. கதையைச் சொல்வது ஒரு சிறுவன். பணிரெண்டு அல்லது பதிமூன்று வயதிருக்கும். அவனும் அவனுடைய தாயாரும், அவனது தகப்பன் வேலை பார்க்கும் ஊருக்கு ஒவ்வொரு மாதமும் முதல் தேதி சென்று காத்துக்கிடந்து அவர் கொடுக்கும் பணத்தை வாங்கிவருவார்கள். இது ஒரு சிறுவனின் பார்வையில் விளக்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் அவனது தந்தை மிகவும் தாமதமாக வருகிறார். ஒரு சில் நாட்கள் இரவு வெகுநேரமாகி விடுகிறது. ஆனால் அவனது தாயார் ஒரு போதும் அவர் காத்திருக்க சொன்ன இடத்தை – பேருந்து நிலையத்தில் ஒரு இடம்- விட்டு வெளியேறினதில்லை. சில சமயங்களில் அவர் மிகவும் தாமதாக வந்து விட்டு, அம்மாவை கண்டபடி திட்டுவதை அவன் புரியாமல் பார்த்துக்கொண்டிருந்திருக்கிறான். அவனுக்கு புரியவே புரியாது. தாமதமாக வந்தவர் அப்பாதானே, பிறகு அவரே அம்மாவைத் திட்டுவானேன் என்று நினைப்பான். ஆனால் எந்தவொரு சமயத்திலும் அவனுடைய அம்மா, அப்பாவை எதிர்த்து பேசியதோ அல்லது நேரமாகிவிட்டால் அவரது அலுவலகத்திற்கோ சென்றதில்லை. இது அவனுக்கு மிகுந்த எரிச்சலைத் தந்தாலும் ஏனென்றும் புரியவில்லை. ஒரு நாள் அம்மா இறந்து போகிறாள். ஏனென்று அவனுக்கு தெரியவில்லை.
சில நாட்கள் கழித்து அவனது அப்பா வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்துக்கொள்கிறார். மீண்டும் ஒரு நாள் தனது புது சித்தியுடம் அந்த சிறுவன் அப்பா வேலை பார்க்கும் ஊருக்கு மாசத்தின் முதல் தேதியில் பணம் வாங்குவதற்குப் போகிறான். அவனது சித்தி அவனுக்கு சாப்பிடுவதற்கு சாக்லேட் வாங்கித்தருகிறாள். பிறகு வழக்கம்போல அவனது அப்பா இன்னும் வந்திருக்கவில்லை. அவனது சித்தி அவனிடம் இப்படித்தான் லேட்டாவருவாராடா உங்க அப்பா என்று கேட்கிறாள். அவன் ஆமாம் என்பது போல தலையசைக்கிறான்.பிறகு அவனது சித்தி எழுந்து சென்று தனது கைப்பையில் சிறிய நோட்டைப்போன்ற ஒன்றை எடுத்து அதில் ஒரு பக்கத்தில் எண்ணைக்கண்டுபிடித்து, அப்பாவுக்கு போன் செய்கிறார். பிறகு இன்னும் சிறிது நேரத்தில் வந்துவிடுவார் என்கிறாள். ஆனால் அவர் வரவில்லை.
பொறுமையிழந்த சித்தி, இவனிடம் டேய் உங்க அப்பா வேலைசெய்யுற ஆபீஸ் உனக்கு தெரியுமா? என்கிறாள். இவன் தெரியும் என்பது போல தலையாட்டியவுடன், ஒரு ரிக்ஷா அமர்த்தி, இருவரும் அப்பா வேலைசெய்யும் ஆபீஸ¤க்குப் போகின்றனர். அவனது அப்பா ஓட்டமும் நடையுமாக வந்து சித்தியையும், அவனையும் கேன்டீனுக்கு அழைத்து சென்று சாப்பிட வாங்கித்தந்து பணத்தைக் கொடுத்து அனுப்புகிறார். அவனுக்கு அப்பா சித்தியுடன் மிகவும் பாசமாக இருப்பது போல இருக்கிறது.
வரும் வழியில் எங்கும் அவன் தன் அம்மா இது போல எல்லாம் ரிக்ஷா அமர்த்தி அப்பாவின் அலுவலகத்துக்கு சென்றதேயில்லையே என்பதைப் பற்றியே நினைத்துக்கொண்டு வருகிறான்.அவனுக்கு ஏனோ சித்தியைப் பிடிக்கவில்லை என்று முடியும் கதை.
திடீர் திருப்பங்களை எதிர்பார்க்கும் வாசகர்களுக்கு இந்த கதை சப்பென்று உப்புச்சப்பில்லாமல் இருக்கும். ஆனால் நிதானமாக வாசிக்கும் சீரியஸ் ரீடர்ஸ்க்கு இந்த கதை நிறைய சிந்தனைகளைக் கிளரிவிடும். நிறைய கேள்விகளை எழுப்பும். ஒரு சிறுகதையையோ, கதையையோ படித்த முடித்தபின்னர் அதைப் பற்றி சிந்திக்க ஏதும் இல்லையெனில் அது வருந்தத்தக்க விசயம்.
***
பன்றியும் அது போலவே தான். ரமேஷ்-பிரேம் பன்றிகளைப் பற்றி நிறைய சொல்கின்றனர். இந்த கதையில் வாக்கியங்கள் முக்கியமானதொரு இடத்தைப் பிடிக்கின்றனர். எனவே கதையை சொல்வதால் எந்த பிரயோஜனமும் இல்லை. ஏனெனில் கதை என்ற ஒன்றே இல்லை. வெறும் ஒரு சம்பவம் தான். அந்த சம்பவம் என்னவென்றால் : ஒரு பன்றிக் குடும்பம், அதாவது, பன்றியும், அதன் குட்டிகளும் ஒரு லாரியால் நசுக்கப்பட்டு இறக்கின்றன. இதை பார்த்துக்கொண்டிருந்த ஒருவர் தனது பத்திரிக்கை நண்பருக்கு ஒரு கட்டுரை எழுதி செய்தியாக வெளியிடும் படி கேட்டுக்கொள்கிறார். அந்த செய்தி வெளியிடப்படவேயில்லை. மறுமுறை அந்த நண்பரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்த பொழுது, அவர் தனது நண்பரிடம் ஏன் அந்த செய்தி வெளியிடப்படவில்லை என்று கேட்கும் போது அவர், ” இதை எந்த வகையில் வெளியிடுவது என்று தெரியவில்லை, அதனால் வெளியிடவில்லை” என்கிறார். அதோடு முடிகிறது கதை.
பிரேம்-நரேஷின் நடை மிகவும் நன்றாக இருந்தது. நான் ரசித்த சில பகுதிகளை அப்படியே இங்கு தருகிறேன்.
“கைது நடவடிக்கைகளிலிருந்து தப்பிய பன்றிகள் தலைமறைவாகி விட்டனவா என்று நினைத்தேன்“
“பன்றிகள், நாய்கள், ஆடுகள், மாடுகள், காகங்கள் இவை எல்லாம் மனித நடமாட்டமுள்ள தெருக்களில் குறுக்கும் நெடுக்குமாக தென்படவேண்டும். விலங்கினங்கள், பறவையினங்கள் சூழ்ந்திராத போது நம்மை பெருவெறுமை சூழ்ந்துவிடுகிறது. போக்குவரத்திற்கு இடையூறாக நிற்கும் எருமைகளைக் காணும்தோறும் மனதில் உவகை பொங்குகிறது. நான் இன்னும் இயற்கையோடு வாழ்ந்து கொண்டிருப்பதின் பாதுகாப்புணர்வை இவை தருகின்றன“
என்னது உவகை பொங்குகிறதா? ஒரு டர்னிங்கில் ஸ்ப்லன்டரில் வேகமாக வருகிறீர்கள், திரும்பியவுடன் அங்கே நமது எருமையார் ஹாயாக நின்று கொண்டு ஷகீலாவின் போஸ்டரையோ அல்லது கம்யூனிஸ்டுகளின் செவிமெடுக்கப்படாத அல்லது சொற்றுக்கு உதவாத கோஷங்கள் கொண்ட போஸ்டரையோ தின்று கொண்டிருக்கின்றன, தின்றதோடு மட்டுமில்லாமல், ஷாக்கில் சடன் பிரேக் அடித்து வியர்த்து விறுவிறுத்து நிற்கும் நம்மை, மெதுவாக மிக மெதுவாக திரும்பிப்பார்த்துவிட்டு, மீண்டும் அதே ஸ்பீடில் போஸ்டரை தின்ன ஆரம்பித்தது என்று வைத்துக்கொள்ளுங்கள், அப்பொழுது உவகை பொங்குமோ? பொங்காது என்று சொல்லிவிட்டால், நம்மை பின்நவீனத்துவத்தில் சேர்க்கமாட்டார்களோ என்ற கவலையும் உடன் வருகிறது. (இதில் பின்நவீனத்துவம் எங்கிருந்து வந்தது என்று நிர்மல் அடித்த ஜெர்க்கை என்னால் பார்க்க முடிகிறது!)
“ஆட்டுக்குட்டி, நாய்க்குட்டி, பூனைக்குட்டிகளில் ஒன்று வழிதவறியிருந்தால் அதை வீட்டுக்கு எடுத்துச்செல்ல துணியும் மனம், இப்பன்றிக்குட்டியிடம் மட்டும் ஏன் கருணை காட்ட மறுக்கிறது“
“கொட்டும் மழையில் அசையாமல் நடுத்தெருவில் தீவிரமான ஒரு மனோநிலையில் நிற்கும் தனித்த பன்றியைப் பார்த்திருக்கிறேன். நாய்களால் குதறப்பட்டு காது கிழிந்து ரத்தக்காயங்களோடு ஓடிய பன்றியைப் பார்த்திருக்கிறேன். காதுகளில் துளையிட்டோ அல்லது காதுகளில் இரும்பு ஆணியால் ரிவீட் அடிக்கப்பட்டோ உரிமையாளரின் அடையாளம் பொறிக்கப்பட்ட பன்றியைப் பார்த்திருக்கிறேன். யாரோ ஒரு போக்கிரிப் பயலால், உடம்பில் மண்ணென்ணெய் ஊற்றப்பட்டு கொளுத்தப்பட்ட பன்றி எரிந்தபடி, போக்குவரத்து நெரிசலூடாக முக்கியச் சாலையில் ஓடியதைப் பார்த்திருக்கிறேன். சாராயக்கடைகளில் திரியும் பன்றிகளில் ஒன்றைப் பிடித்து அதன் வாயில் சாரயத்தைப் புகட்டியதைப் பார்த்திருக்கிறேன். அதே சாரயக்கடையில் மலம் வழிய பிரக்ஞையற்றுக் கிடந்த ஒருவனின் பின்புறத்தை நக்கி சுத்தம் செய்த பன்றியைப் பார்த்திருக்கிறேன். தெருவில் என்னைப் பார்த்தால் மரியாதையோடு விலகிச்செல்லும் ஒரு பன்றியை எனக்குத் தெரியும். பன்றி ஒரு ஒடுக்கப்பட்ட விலங்கு.”
இது கதை மட்டுமே என்று எடுத்துக்கொள்ளலாம். அல்லது இதனை ஒரு உவமையாக பாவித்து ஏதாவது ஒரு சமூக அவலத்தின் மீதும் ஏற்றிப்பார்க்கலாம். சமீப கால சிறுகதைகளில் வாசகர்களின் பங்கு அதிகம். சிறுகதைகள் எழுத்தாளருடன் முடிவடையக்கூடாது, வாசகர்களிடமும் தொடரவேண்டும்.
***
குமுதத்தில் (02 ஜூன்,07) ஒரு கேள்வி கேட்கப்பட்டிருந்தது, அரசு பதில்கள் பகுதியில்:
கே: தமிழில் சிறுகதை நாவல் வடிவம் காலாவதியானது ஏன்?
பதில்: உலக இலக்கியங்களைப் படிக்காமல் சும்மா படித்தது போல சில பிரபல எழுத்தாளர்கள் ரீல் விட்டதும் மக்களைப் பாதிக்கும் அரசியலைத் தொடாமலேயே அறிவு ஜீவி போல நடித்ததும் ஒரு காரணம்.
பதிலளித்த “அரசு” அறிவுஜீவியோ? சொல்லவேயில்ல!
***
“மல்லிகைக்கிழமைகளில்” ஜெ.பிரான்ஸிஸ் கிருபா எழுதி விகடனில் வெளிவந்து கொண்டிருக்கும் தொடரில் வந்த ஒரு கவிதை:
தீயாகவா, புயலாகவா
திருக்கை மீன் வாலாகவா
பூவாகவா, புன்னகையாகவா
புத்தம்புது விஷமாகவா
உன் கோபம் எப்படி வருமென்று
எனக்கு தெரியாது.
எங்கிருந்து வரும்
எப்போது வரும்
எவ்வளவு வரும்
உனக்கும் தெரியாது.
அன்பே என்றுதான் சொன்னேன்
கோபித்துக்கொண்டாய்
பேரழகே என்றேன்
கோபம் பெரிசாகிவிட்டது
ஆருயிரே என்றேன்
கோபமே நீயாகிவிட்டாய்.
வெண்ணெய்க் கட்டியாக
அனலில் விழுந்து
உருகித் தொலைத்தேன்
பொல்லாத செல்லக் கள்ளியென்று
மனசுக்குள் முணுமுணுத்தேன்
உற்றுக் கேட்டதும்
உயிர் துள்ளிக் குதித்தது
உன் கண்களில்.
இரண்டாயிரத்து ஏழாவது
முறையாக மீண்டும் பிறந்தேன்.
ஒரு நாளுக்கு என்னை இப்படி
எத்தனை முறை
தொலைக்கிறாய் என்பதை
எண்ணிக்கை வைப்பதில்லை நீ.
ஒருபோதும் மன்னிப்பும் கேட்பதில்லை.
வீட்டிலோ, வெளியிலோ
சாலையிலோ, கோயிலிலோ
திரைச்சாலையிலோ
இந்தியாவிலோ ஜப்பானிலோ
உலகின் எந்த மூலையில்
என்னை நீ தொலைத்தாலும்
கண்டுபிடித்துத் தருவது
என் கடமையாக இருக்க
உனக்கென்ன கவலை?
இந்த கவிதைக்கு அர்த்தம் எழுதலாம் அல்லது விளக்கம் எழுதலாம் என்று நினைத்தேன். பிறகு வேண்டாம் என்று விட்டுவிட்டேன். எனென்றால் அவரது மல்லிகைக் கிழமைகள் தொடரில் ஓரளவேனும் எனக்கு புரிந்த கவிதை இது மட்டுமே. (போனவாரமெல்லாம் ஒன்றுமே புரியவில்லை.!) இதுக்கும் அர்த்தம் எழுதி யாராவது, டேய் டுபாக்கூர் அது இல்லை அர்த்தம், ஸ்டுபிட் மாதிரி பேசாத, இதுதானாக்கும் அர்த்தம் என்று எதையாவது சொன்னால் அப்புறம் எனக்கு கவிதை படிப்பதற்கு கான்பிடன்ஸே போய்விடும். (ஆ! இதுவே கவிதை மாதிரித்தான இருக்கு. “கவிதை படிக்க கான்·பிடன்ஸ்”!)
இன்னொரு விசயம். என் நண்பன் (கோனபாட்டில் கோவிந்தன்!) என்றைக்குமே புத்தகத்தை தூக்கி படித்ததேயில்லை. நான் பார்த்ததேயில்லை. குமுதம் ஆனந்த விகடன் வாங்கிவந்தவுடனே, அதில் உள்ள கேர்ல்ஸ் பிக்சர்ஸ் எல்லாம் பார்த்துவிட்டு மொத்தமாக புத்தகத்திற்கு மார்க் போடுவான். அவ்வளவே. ஆனால் சமீபகாலமாக அவன் விகடன் வந்தவுடன் மல்லிகைக்கிழமையைத் தான் படிக்கிறான். திரும்பத்திரும்ப படிக்கிறான். நான் வேண்டாம்டா இந்த விசபரிட்சை என்று சொல்லுயும் கேட்க்காமல் படித்தான். இப்பொழுது ஏதோ பத்தாவது ரிசல்ட் பாத்து பெயிலாகிவிட்ட மாணவன் போல மிகவும் சோகமாக அழைகிறான். போன வாரம் திடீரென்று என்னை கூப்பிட்டு, மல்லிகைக்கிழமை கவிதையை காட்டி, உனக்கு புரிகிறதா பார் என்றான். நான் ஒரு ஐந்து முறைபடித்தும், புரியவில்லை. கடைசியில் நான் புரியவில்லை என்று சொன்னவுடன் தான் அவனுக்கு நிம்மதி. அவன் மொத்தம் பதினாறு முறை அந்த கவிதையைப் படித்திருக்கிறான். அவனுக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயமாகியது என்பது போனஸ் தகவல். புரிந்துகொள்ள முயற்சி செய் பின்னால் உதவியாக இருக்கும் என்றேன்.
புரியாமல் இருப்பதால் தான் கவிதைகள், கேர்ல்ஸைப் போல, அழகாக இருக்கின்றனவோ?
***
ச.இ.பா. (சங்க இலக்கிய பாடல்)
நற்றினையில் ஒரு பாடல்:
“சாதல் அஞ்சேன் அஞ்சுவல் சாவேன்
பிறப்புப் பிறிது ஆகுவ தாயின்
மறக்குவேன் கொல்என் காதலன் எனவே.”
“தோழி, நான் சாவுக்கு அஞ்சவில்லை. ஆனால் வேறொன்றிற்காக அஞ்சுகிறேன். நான் இறந்துவிட்டால், பிறகு வேறு பிறப்பும் பிறந்தால் அந்த மறுபிறப்பில் என் காதலனை மறந்து விடுவேனோ என்றுதான் அஞ்சுகிறேன்” என்றாளாம்.
***
பிகு: முந்தைய பகுதிகளை side menuவில் பார்க்கவும்.
// யார் என்ன சொன்னாலும் சரி. எனக்கு எத்தனை கெட்டவார்த்தைகளில் பின்னூட்டம் வந்தாலும் சரி. என் நிலைப்பாடு இதுதான்.//முத்து,உங்கள் நிலைப்பாடு நீங்கள் சரியென நினைக்கும் கோட்பாடுகளினாலும் உங்களூக்கு என இருக்கும் ஆழமான நம்பிக்கைகளாலும் உண்டானதாக இருக்கலாம். அவர்களுக்கும் அதே! யாருடைய நம்பிக்கைகளும் யார்மீதும் வலுக்கட்டாயமாக திணிக்கப்படாத வரையிலும் யாருக்கும் பிரச்சனையில்லை! :))மற்றபடி, வழக்கம்போலவே மிகச்சுவாரசியமான நடை!
LikeLike
மிகவும் சரி. நான் ஒத்துக்கொள்கிறேன். ரைட். Absolutely Correct! என்றெல்லாம் கண்டிப்பாக சொல்லமாட்டேன்.யாரும் யார் மீதும் கருத்துக்களைத் திணிக்காமல் சும்மாவே இருந்திருந்தால் இன்றுவரை மனிதன் விலங்காகவே இருந்திருப்பான். கருத்துக்கள் சில சமயங்களில் விதிகள் ஆகின்றன. விதிகள் மனிதனை கட்டிப்போடுகின்றன. அதே சமயத்தில் காக்கவும் செய்கின்றன. எனக்கென்ன வந்தது, என் வரையில் தவறு, ஆனால் ஒன்றும் செய்யமாட்டேன், நீ செய்வதை செய்துவிட்டுப்போ என்று இருக்கமுடியுமா? ஒரு குடும்பத்தின் தலைவர் (அல்லது தலைவி!) தன்னுடைய பையன் பரிட்சைக்குப் படிக்காமல் கிரிக்கெட் ஆடிக்கொண்டிருக்கிறான், அதைப் பார்த்து அவர் “உன் கருத்து கிரிக்கெட் ஆடுவது. என் வரையில் அது தவறு. ஆனால் நான் என் கருத்தை திணிக்க மாட்டேன். நீ விளையாடுடா செல்லம்” என்பாரா? (ஒரு படத்தில் விசு இதே போலத்தான் இருப்பார். பேப்பர் படிப்பது மட்டுமே அவர் வேலை! எதையும் கண்டுகிட மாட்டார்) அதற்குப்பெயர் தான் கருத்துச் சுதந்திரமா? மனித உரிமையா? நீங்கள் உங்கள் வலைப்பதிவில் வைத்திருக்கும் Motto இதுதான், with power comes responsibility. அதையேதான் நானும் சொல்கிறேன். நாம் நம் குழந்தைகளுக்கு இந்த உலகத்தை எப்படித் தரப்போகிறோம் என்பதை முடிவு செய்யவேண்டும். எதிர்க்க வேண்டியவைகளை எதிர்க்கத்தான் வேண்டும். கருத்துசுதந்திரம் என்று சொல்லிவிட்டு சும்மா உட்கார்ந்திருக்கக்கூடாது. விளைவுகள் நமக்கும் தான்! ஆதரித்தாலும். எதிர்த்தாலும்.
LikeLike
ஏன் முத்து பின்நவீனத்துமா எழுதிருக்கிங்கவார்ட்பிரஸ்ல எழுதிகிட்டு இருக்கேன் இப்போ.
LikeLike
நிர்மல்: வாசகர் விருப்பம் படிச்சேன். ஏன் நிறைய பேர் wordpress க்கு மாறிட்டிருக்கீங்க? any special?
LikeLike