மனிதன் – அல்லது வேறு எந்த உயிரினமானாலும் – வாழ்வைத் தொடங்கும் நேரத்திலே முடித்துக்கொள்ள நினைப்பதில்லை. தன் முகத்தில் தானே காறி உமிழ்வதில்லை. ஏன் இந்த வாழ்க்கை என்று நினைப்பதில்லை. வாழ்வு ஒரு சாபம் என்றும் எண்ணுவதில்லை. அதற்கு நிறைய கால அவகாசம் தேவைப்படுகிறது. நிறைய தவறுகள் நடக்கவேண்டியிருக்கிறது. கால அவகாசமும் தவறுகளின் வீரியமும் மனிதனுக்கு மனிதன் வேறுபடும். சுமைகளின் முதல் அழுத்தத்திலே சிலர் நம்பிக்கை இழந்துவிடுகின்றனர். விட்டுக் கொடுத்துவிடுகின்றனர். வேறு சிலர் வாழ்வின் இரக்கமில்லாத துர்கனவுகளில் சிக்கி, அவை கனவுகள் என்றே நினைத்து, தங்களுக்குள் இருக்கும் கடைசி ஜுவாலையையும் இழக்கின்றனர். இவர்களுக்கு வாழ்க்கையை எங்கே இழந்தோம், எப்படி இழந்தோம் என்று எப்பொழுதுமே தெரிவதில்லை. வாழ்க்கை, எண்ணிக்கை இல்லா நம் மூதாதயர்களின் குழப்பமான இருண்ட அனுபங்களில் சிக்கி வெளிவரமுடியாத – இயலாத – ஒளியாகவே இருக்கிறது. “அனுபவம்: சுயபுத்தியை இழந்தால்தான் கிடைக்கும், பாதுகாப்பு: சுயகௌரவத்தையும் தன்மானத்தையும் இழந்தால் மட்டுமே கிட்டும், சுயகௌவரவம்: நடைமுறைக்கு சாத்தியமே இல்லை” என்று நம் முன்-அனுபவ “முத்தண்ணாக்கள்” தவறாமல், இடைவிடாமல் திரும்ப திரும்ப எச்சரித்துக் கொண்டேயிருக்கின்றனர்.
எனினும் சிலர் பிடிப்பை விட்டுவிடுவதில்லை, முன்னேற தவறுவதுமில்லை. அவர்கள் தங்களுக்குள் எரிந்து கொண்டிருக்கும் தீயை அணையவிடுவதில்லை. அவர்கள் அந்த தீ தரும் ஒளியை வளர்க்கிறார்கள். அதற்கு வடிவம் கொடுக்கிறார்கள். தீயின் நோக்கத்தை அறிந்து கொள்கிறார்கள். அந்த நோக்கத்திற்கு ஒரு திட்டம் அளிக்கிறார்கள். அந்த திட்டத்தை உண்மையாக்குகிறார்கள். அதன்பின்னர் உள்ளுக்குள் இருக்கும் தீயும் உண்மையாகிறது. வலுப்பெறுகிறது. தன் முழு சக்தியை அடைகிறது.
எதிர்காலம் எவ்வாறு இருப்பினும், ஒவ்வொரு மனிதனும், தன் வாழ்வின் உதயத்தில், ஒரு மேன்மையான தொலைநோக்கு சிந்தனையுடன் தான் இருக்கிறான். தன் வாழ்வின் முழு அர்த்தத்தையும் புரிந்துவிட துடிக்கிறான். தன் உள்ளார்ந்த சக்தியை முழுமையாக உபயோகித்து, வாழ்வின் முழு பயனையும் அடைந்துவிட தவிக்கிறான்.
***
—The Fountain Head இல் Ayn Rand எழுதிய முன்னுரையில் இருந்து ஒரு பகுதி மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.
Thanks: Ayn Rand and Signet.
***
பி.கு: இதில் சொல்லப்பட்டிருக்கின்ற “முத்தண்ணா” கண்டிப்பாக நான் இல்லை.