ஹலோ அஸ்விக்குட்டி

(சிறுகதை)

சென்னை. சோழா செராட்டன். ஜூன் 2000. 02.

“நீயெல்லாம் எதுக்குடா பேச்சிலர்ஸ் பார்ட்டிக்கு வர்ற? தம் அடிக்க மாட்ட, தண்ணியடிக்க மாட்ட, பப்ல கொஞ்சம் அப்படி இப்படி ஆட கூட மாட்ட, சும்மா உக்காந்து சிக்கன் சாப்டறதுக்கு வரணுமாடா?” ராஜா சொல்வதை சிவா கண்டுகொள்ளவேயில்லை. காதில் போட்டுக்கொள்ளவேயில்லை. அவன் தனக்கு முன்னால் வைக்கப்பட்டிருந்த பெப்பர் சிக்கனை எடுத்து மீண்டும் ரசித்து ருசித்து சாப்பிடத் தொடங்கினான். “நீயெல்லாம்..ஹ்ம்ம்” என்று ராஜா சலித்துக்கொண்டு வேறு விசயத்துக்கு தாவினான். “டேய் மச்சான்” “டேய் மச்சான்” “டேய் டோப்பாத்தலையா” “ம்ம் என்னடாமச்சி” “அங்க பாரு” “எங்க் எங்கடா” “அங்கடா.உனக்கு லெப்ட்ல. அந்த பிங்க் டாப்ஸ்ல சும்மா…ஹ்ம்ம்ம்” “ஆ ஆ ஆ..உன்னத்தான்டா பாக்குறாடா. ராஜா நீ மச்சக்காரன்டா” “டேய் சிவா டொப்பாத்தலையன கூட்டிட்டு போக முடியாது நீ வர்றியா. போய் கொஞ்சம் வறுத்துட்டு வரலாம்” “போடாங்..எனக்கு வேற வேலையில்லையா? உன்னமாதிரின்னு நெனச்சயா? எனக்கு என் தேவதை இருக்கா. நீ போ எக்கேடோ கெட்டு தொலை!” ராஜா சிறிது நேரம் முறைத்து விட்டு, பின் தன் தலையில அடித்துக்கொண்டான். “உன்ன திருத்தவே முடியாதுடா. பெரிய ராமசந்திரமூர்த்தி. உன் அஸ்வி பாரு உன்ன விட்டுட்டு போக போறாளா இல்லையான்னு” “நெவர்!” ராஜா எழுந்து நெஞ்சை நிமிர்த்திக்கொண்டான். ரொம்ப ஸ்டைலாக நடப்பதாக நினைத்துக்கொண்டு ரொம்ப கேவலமாக நடந்தான். பெண்களின் எதிரில் சென்று அமர்ந்தான். “ஹே ய்யா..” அந்த பெண்கள் கொஞ்சம் அதிகமாகவே சிரித்தனர்.

சிவா தனக்குள் சிரித்துக்கொண்டான். செல்போனை எடுத்தான். ஸ்க்ரீனில் பளிச்சென்று ஒரு பெண்ணின் புகைப்படம் இருந்தது. பின்னர் பச்சை பட்டனை அழுத்தினான். அஸ்வினி என்று திரையில் தோன்றியது.

ரிங். ரிங். ரிங். ரிங். ரிங். ரிங்.
“ஹலோ தடியா..” பேரிரைச்சல். “ஹலோ அஸ்வி” “ஹலோ அஸ்வி” “ஹலோ அஸ்விக்குட்டி” “டேய் செல்லம்”. கால் துண்டிக்கப்பட்டது.

மீண்டும் டயல் செய்தான். “நீங்கள் டயல் செய்த எண் தற்சமயம் உபயோகத்தில் இல்லை”. மீண்டும். “நீங்கள் டயல் செய்த எண் தற்சமயம் உபயோகத்தில் இல்லை”. மீண்டும். “நீங்கள் டயல் செய்த எண் தற்சமயம் உபயோகத்தில் இல்லை”. மீண்டும். “நீங்கள் டயல் செய்த எண் தற்சமயம் உபயோகத்தில் இல்லை”.

“ஸ்டுபிட் அஸ்வி. என்னைக்குத்தான் நீ பேட்டரிய ஒழுங்கா சார்ஜ் பண்ணிவெக்கப்போறியோ!”

ராப் மியூசிக் காதைப்பிளந்தது. ராஜா ஒரு பெண்ணோடு ஆடிக்கொண்டிருந்தான். அவளது இடுப்பில் ஒரு கை. மற்றொரு கை..சிவா “டிஸ்கஸ்டிங்” என்று முனுமுனுத்தான்.

***

காரியாபட்டி. டிசம்பர். 2000.

இரவு மணி 9:30. எங்கும் இருள் சூழந்திருந்தது. எங்கும் பேரமைதி. காற்று கொஞ்சம் கூட இல்லை. அந்த வீட்டின் முன்னால் இருந்த தென்னை மரம் ஆடாது அசையாது சிவனின் பாட்டை கேட்டது போல இருந்தது. வீட்டினுள் மிக மங்கலான விளக்கு ஒன்று எரிந்து கொண்டிருந்தது. உள்ளே யாரோ இருமும் சத்தம் கேட்டது. “சிவா. டேய் சிவா” வயதான ஒரு பெண்ணின் குரல் மிக சன்னமாக கேட்டது. படிக்கட்டில் நிழல் ஆட அந்த பெண்மனி உள்ளிருந்து வெளியே வந்தார்.

படிக்கட்டில் நின்றவாறு இங்கும் அங்கும் பார்த்தார். பின்னர் வீட்டின் வலது பக்கத்தில் இருந்த படிக்கட்டை நோக்கி சென்றார். படி ஏறப் போனவார் அதிர்ச்சியில் உரைந்தார். அங்கே ஒரு கரிய உருவம் அசையாமல் உட்கார்ந்திருந்தது. சுற்றிலும் புகைமூட்டம். தடுமாறிய அந்த பெண்மணி, எட்டி, விளக்கைப் போட்டார். மிகவும் மங்காலான வெளிச்சம் உட்கார்ந்திருந்த அந்த உருவத்தின் மீது படர்ந்தது. அந்த உருவம் அசைந்து கொடுக்கவில்லை. கண்கள் எங்கோ சொருகியிருந்தன.

“டேய். சிவா. ஏண்டா இப்படி பண்ற? எத்தன தடவடா சொல்லிருக்கேன். ஐயோ. இப்படி கொஞ்சம் கொஞ்சமா உன்ன நீயே அழிச்சிக்கறீயடா? உங்க அப்பனுக்கு நான் என்ன பதில் சொல்லுவேன். சிவா. டேய் சிவா.” “என்னத்த?” “உள்ளவாடா. மாமா வற்ரதுக்குள்ள சாப்பிட்டுட்டு போயிடுடா. அந்த மனுசன் வந்தா கத்துவாரு. வாடா எந்திரிடா” சிவா தடுமாறி எழுந்திருக்கிறான். சிறிய கல் இடறி தொப்பென்று கீழே விழுகிறான்.

“ஐயோ. சிவா. என் கண்ணா. ஏன்டா இப்படி ஆயிட்ட.” அந்த பெண்மணிக்கு கண்களில் நீர் வழிந்துகொண்டேயிருக்கிறது.

***

காரியாபட்டி. டிசம்பர். 12. 2011.

“ஆரத்தி எடுங்கம்மா” “ம்ம்” குலவைசத்தம் கேட்டது ஆங்காங்கே. புதுமணத்தம்பதியினர் அந்த வீட்டுக்குள் நுழைந்தனர். வாசலில் செக்கச்செவப்பாய் ஆரத்தி. மணமகள் கால்கள் அழகாக செந்நிரத்தில் தடம் பதித்திருந்தது. இருவரும் ஹாலில் சென்று அமர்ந்தனர். மணமகன் மணமகளைப் பார்த்தி ரகசியமாக சிரித்தான். “அஸ்வினி. நீ ரொம்ப அழகா இருக்க தெரியுமா?” மிகவும் சிவந்திருந்த அவளது கண்ணங்கள் மேலும் சிவப்பாயின. அவள் பதிலேதும் கூறாமல் தலையை தாழ்த்திக்கொண்டாள். “டேய். சுரேஷ். ரொம்பத்தான் வழியாத. இந்தா கர்சீப் தொடச்சுக்கோ” என்று சுரேஷின் மாமா கர்சீப்பை எடுத்து நீட்ட, இப்பொழுது சிவந்ததென்னவோ சுரெஷின் கண்ணங்கள். மிகச்சத்தமாக ஒரு சிரிப்பலை எழுந்து அடங்கியது.

***

காரியாபட்டி டிசம்பர். 15. 2011.

ம்ம்க்கும் ம்ம்க்கும். சுரேஷ் தொண்டை கமறல் எடுக்கவே, தூக்கத்திலிருந்து விழித்து கண்களைத் திறந்தான். இருட்டு லேசாக படர்ந்திருந்தது. கதவு திறந்திருந்தது. பக்கத்தில் அஸ்வினி இல்லை. தூரத்தில் ஏதோ ஒரு பூச்சியின் ஓசை ரீங்காரமாக கேட்டுக்கொண்டிருந்தது. அஸ்வினி. அஸ்வினி. பதில் இல்லை. பக்கத்திலிருந்த மேசையின் மேலிருந்த கெடிகாரத்தை எடுத்து மணி பார்த்தான். மணி 12:10. ஜன்னல் வழி நிலாவின் மிக மெல்லிய வெளிச்சம் அடித்துக்கொண்டிருந்தது. தூரத்தில் ஏதோ ஒரு நாய் மிகச் சன்னமாக உளையிட்டது.

சுரேஷ் எழுந்தான். கைலி அவிழ்ந்துவிடவே இறுக்கமாக கட்டிக்கொண்டான். மெதுவாக லைட்டைப் போடாமல் ருமை விட்டு வெளியேறி ஹாலுக்கு வந்தான். ஹால் அமைதியாக இருந்தது. அம்மாவின் ரூமைப் பார்த்தான் பூட்டியிருந்தது. திரும்பி வெளிக்கதவைப் பார்த்தான். கதவு திறந்திருந்தது. மிக மங்கலான வெளிச்சம் பரவிக்கொண்டிருந்து. ஏனோ ஹாலின் அந்த கெடிகாரத்தின் டக் டக் என்ற சத்தம் அவனை அச்சுறுத்துவதாகவே இருந்தது. அஸ்வினி. வேகமாக நடந்து வெளியே சென்றான். ஹாலைக் கடப்பதற்குள் மிகவும் வேர்த்து விட்டது. யாரோ பின் தொடர்வதைப் போல இருக்கவே, சட்டென் திரும்பிப் பார்த்தான். ஒருவரும் இல்லை. வெளி வராண்டவில் ஜன்னல்களுக்கு போடப்பட்டிருந்த திரைச்சீலைகள் மிக மெதுவாக காற்றில் அலைந்து கொண்டிருந்தது.

வெளிக்கதவை அடைந்து படியில் நின்றான். அஸ்வினி என்றான். ஒரு நாயின் மெல்லிய முனகல் கேட்டது. வலதுபக்கம் திரும்பிப் பார்த்த சுரெஷ் திடுகிட்டான். அங்கே மொட்டை மாடிக்கு செல்லும் படிக்கட்டுக்கு முன்னால் நாலைந்து நாய்கள் மிகவும் மவுனமாக அமர்ந்து படியை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தன. நாய்களின் வாய்யில் எச்சில் வழிந்தோடிக்கொண்டிருந்தது. அவ்வப்போது நீண்ட நாக்கு வெளியேறி பின் மீண்டும் உள் சென்றது.

சுரேஷ் சூ சூ என்றான். ஒரு நாயும் அசைந்து கொடுக்கவில்லை. பின் மிக மெதுவாக படி இருக்கும் இடத்தை நோக்கி சென்றான். நாய்கள் மிக மெதுவாக ஊளையிடத் தொடங்கின. சுரேஷ் நெருங்க நெருங்க அவை மிகப் பயங்கரமாக ஊளையிட்டன. படிக்கு அருகில் வந்த சுரேஷ் திடுக்கிட்டான். அங்கே மேல் படியில் அஸ்வினி உட்கார்ந்திருந்தாள். மிக அமைதியாக. சுரேஷ் சத்தமாக அஸ்வினி என்றான். நாய்கள் இப்பொழுது தான் முழித்துக்கொண்டதைப் போல மிக பயங்கரமாக உறுமின. அஸ்வினி அங்க என்ன பண்ற இறங்கிவா. பதிலில்லை. அஸ்வினி இறங்குமா. பதிலில்லை. அஸ்வினி.

சுரேஷ் படிகளில் வேகவேகமாக ஏறினான். அஸ்வினி வாம்மா. நாய்க்கு பயந்து இங்கயே உட்கார்ந்திட்டியா? வா. பதிலில்லை. சுரேஷ் அவள் கையை பிடித்தான். கை மிகவும் சில்லென்றிருந்தது. டக்கென்று அஸ்வினி திரும்பினாள். அவளது பெரிய கண்கள் வழக்கத்தை விட மிகவும் பெரியதாக இருந்தன. கண்களின் சீற்றத்தைக் கண்டு சுரேஷ் தடுமாறினான். பிறகு சுதாரித்துக்கொண்டு “இந்நேரம் இங்க எங்கம்மா வந்து உட்கார்ந்திருக்க. வா அஸ்வினி. வீட்டுக்குள்ள போகலாம்” “டேய். யாருடா அஸ்வினி? நான் அஸ்வினி இல்லடா. சிவா. இது என்னோட இடம். இங்கதான் நான் இருப்பேன்.” என்று மிக பயங்கரமாக பற்களை நறநறவென்று கடித்துக்கொண்டு சொன்னாள் அஸ்வினி.

***

தஞ்சாவூர். டிசம்பர் 1999.

அது ஒரு திருவிழா. ஐந்து வருடத்திற்கு ஒரு முறை கொண்டாடப்படும். சாமி இந்த வீட்டுக்குள்ளேயே இருக்கிறது. இந்த வீட்டின் சொந்த பந்தங்கள் எல்லாம் இந்த திருவிழாவை தவறவிட்டதே இல்லை. என்றைக்குமே. சாமி கும்பிடுவது முக்கியம் என்றாலும் விட்டுப்போன சொந்தத்தை தொடர்வதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும். சிவாவும், அவனுடைய அப்பாவும் அம்மாவும், அவனது தங்கையும் சென்னையிலிருந்து வந்திருக்கின்றனர்.

மேளச்சத்தம் ஒலித்துக்கொண்டேயிருந்தது. சங்கும் சேகண்டி ஓசையும் அந்த சூழ்நிலையில் பக்தியை அதிகப்படுத்தவே செய்தன. சிவா கண்களை மூடி இறைவனை வேண்டிக்கொண்டிருந்தான். சூடதீபாரதனை காட்டப்பட்டதும் கையை மேலே தூக்கினான்.

பக்கத்தில் யாரோ அழும் சத்தம் கேட்டு திரும்பிப்பர்த்தான். அழகான மருதாணி அணிந்த நீண்ட விரல்கள் மூக்கையும் இதழ்களையும் மறைத்துக்கொண்டிருந்தன. மிக அழகாக செதுக்கப்பட்ட புருவம். இரு புருவங்களுக்கு மத்தியில் மோட்சம் அடைந்து விட்ட கருப்பு பொட்டு. நெற்றியின் ஓரத்தில் கூட முடி. அழகான கழுத்து. கையில் சிறிது சிறிதான பூனை முடி. அவள் அழுவதை நிறுத்தவேயில்லை. சிவா அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான். அவள் கைகளை பிரித்தாள். ஆ. கைக்குள்ள வெச்சு செர்ரி பழம் சாப்பிட்டுட்டு இருந்திருக்காளோ? இல்லை இல்லை செர்ரி பழம் எப்படி கீழே விழாமல் இருக்கும். ஓ. இதழ்களா? ஹ்ஹ்ஹ்ஹ்ம்ம். அளவான கூர்மையான மூக்கு. மூக்கு வலப்புரத்தில் சிறிய மூக்குத்தி. கண்ணீரின் ஒற்றைத் துளி அவளது மூக்கின் மேல் ஏறுவதற்கு சிரமப்பட்டுக்கொண்டிருந்தது. கண்களை திறந்தாள். இரண்டு முறை கண்களை திறந்து மூடினாள். இந்த உலகத்தை இருள் சூழ்ந்து வெளிச்சம் மீண்டும் வந்தது. பிறகு சிவாவைப் பார்த்தாள். வேகமாக கண்களைத் துடைத்துக்கொண்டாள். சொர்கத்திலிருந்து விடை வருத்தத்தில் இருந்த கண்ணீர் துளி, அவள் புறங்கை பட்டு மோட்சம் அடைந்தது. இவனைப் பார்த்தது போல காட்டிக்கொள்ளாமல் கூட்டத்திலிருந்து பிரிந்து சென்று விட்டாள்.

“ஏய் யாரவது போய் கத்தரிப்பான் எடுத்துட்டு வாங்கப்பா” சிவாதான் நின்றுகொண்டிருக்கிறான். அவன் தான் போக வேண்டும். அவன் பேசாமல் நின்றான். “சொல்றாங்கல்ல யாராவது போய் எடுத்திட்டு வாங்க. சிவா போடா அந்த ரூமில இருக்கு போய் எடுத்திட்டு வா” என்றார் சிவாவின் சித்தி. சிவா வேகவேகமாக அருகிலிருந்த ருமிற்குள் சென்றான். எங்கே கத்தரிப்பான் இருக்கிறது என்று தெரியவில்லை. இங்கும் அங்கும் மனதில் படாமல் தேடிக்கொண்டிருந்தான். சரி இல்லையென்று சொல்லிவிடுவோம் என்று நினைத்துகொண்டிருந்த பொழுது, ஒரு தென்றல் உள்ளே நுழைந்தது. கூடவே நூறு சாம்பிரானி, பத்தியின் நறுமனம். பின்னாலேயே அவள் வந்தாள்.

நேரே சிவாவிடம் வந்தாள். சிவாவுக்கு மிக அருகில் இருந்த ஷெல்பில் அழகாக பெரிதாக உட்கார்ந்திருந்தது கத்தரிப்பான். “அதோ அங்கே இருக்கு பாருங்க அதுக்கு பேர் தான் கத்தரிப்பான். அதத்தான் கேக்கறாங்க. கொஞ்சம் எடுத்துக்கொடுங்க” சிவா சற்றும் அசையவில்லை. அவளது கண்கள் மிக மெல்லிதாக திறந்து மூடின. இதழ்கள் சிறிய ரோஜாவைப் போல சுழித்துக்கொண்டன. ரோஜாக்கள் கூட சுழிக்குமா? ஹ்ஹ்ஹ்ம்ம்ம். “எடுக்கறீங்களா இல்லையா?” என்று அவள் தனது சிறிய உள்ளங்கையை விரித்தாள். சிவா பதில் பேசாமல் எடுத்தான். மருதாணி அணிந்த அவளது கைவிரல்கள் மிகவும் அழகாக இருந்தன. உள்ளங்கையில் அழகான மருதாணி கோலங்கள். பூக்களுக்கு கூட கோலங்கள் தேவைப்படுகின்றனவா? பூவின் மீது கத்தரிப்பானை வைக்க மணமில்லாது, அவனே எடுத்து வெளியே சென்றான். பின்னால் அவள் அவனை திட்டுவது மெதுவாக காதில் கேட்டது. என்ன ராகத்தில் பாடுகிறாள் என்று நினைத்துக்கொண்டே வெளியே சென்றான் சிவா.

“டேய் சிவா. நாளைக்கு வீட்டவிட்டு எங்கயும் வெளியில போயிடாத.” “ஏன் சித்தி” சிவா அம்மாவின் மடியில் பருத்துக்கொண்டிருந்தான். அம்மா அவனது தலையை கோதிவிட்டுக்கொண்டிருந்தார். சமையல் அறைக்கு வெளியே உட்கார்ந்திருந்தார்கள். “என்னடா தெரியாத மாதிரி கேக்கற? உன்னத்தான் தெக்குவீட்டு பொண்ணுங்க எல்லாம் கட்டம் கட்டி வெச்சுறுக்காளுக” சிவா எனக்கு ஒன்னும் தெரியாதுங்கற மாதிரி அம்மாவைப் பார்த்தான். “நாளைக்கு மஞ்சத்தண்ணி ஊத்தறதுடா. உனக்குத்தான் இங்க நெறைய மொறப்பொண்ணுங்க இருக்குதுங்களே. உன்மேலத்தான் வெரட்டி வெரட்டி ஊத்தப்போறாளுக. ஜாக்கிரதையா இருந்துக்கோ” என்றார் இன்னொரு சித்தி “அப்படியா” என்று பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு சொன்னான் சிவா. “ஆஹா. ஒன்னுமே தெரியாதமாதிரி மூஞ்ச வெச்சுக்கிறான் பாரு. அக்கா உம்மகன மட்டும் நம்பிடாத. அன்னைக்கு அஸ்வினியை கண் கொட்டாம சைட் அடிச்சத நான் மட்டும் தான பார்த்தேன். அவளும் அப்பப்போ பாத்துக்கிறா? டேய் சிவா. என்னடா நடக்குது” என்றார் சித்தி. “யாரு சித்தி அஸ்வினி?” “நடிகர் திலகம் தோத்தார்க்கா. எப்படி நடிக்கறான் பாருக்கா? நீயும் தான பாத்த? இனி மேல் உன் பேரு செவாலியர்டா. இன்னைக்கு ரோஸ் சுடில, வைட் துப்பட்டால ஒரு தேவதை உனக்கு சாம்பார் ஊத்துச்சுல்ல, நீ கூட போதும் போதும்ன்னு உன் முகத்துல லிட்டர் கணக்கா ஜொள்ளு வழிய விட்டயே..அவ பேரு தான் அஸ்வினி” “சரி சரி சித்தி. போதும் மானத்த வாங்காத” “ஏண்டா உனக்கு அஸ்வினிய புடிச்சிருக்குதான?” “அடியே நீ பேசாம இருக்கமாட்டியா?” “நீ சும்மாஇருக்கா. முறைப்பையன் தான். இதுல என்ன இருக்கு” “ஏண்டா உனக்கு புடிச்சிருக்கு தான?” “ம்ம்” “எவ்ளோ” “ரொம்ப.” “எவ்ளோ ரொம்ப” “ரொம்ப ரொம்ப ரொம்ப” “அண்ணன் முகத்தில வெக்கத்த பாரு. இரு நான் அஸ்வினி கிட்ட சொல்றேன்” என்று எழுந்து ஓடினாள் சத்யா, சித்தியின் மகள்.

இரவு நிலா மிகவும் அழகாக இருந்தது. மொட்டைமாடியில் சிவா, சிவாவின் அம்மா, சித்தி, இன்னொரு சித்தி, சித்தியின் மகன்கள், மகள்கள் என்று ஒரு பெரிய பட்டாளமே உட்கார்ந்திருந்தார்கள். ஏதேதோ கதை ஓடிக்கொண்டிருந்தது. “அண்ணா. எனக்கு இந்த கம்ப்யூட்ட சயின்ஸ் புரியவே மாட்டேங்குதுண்ணா. அது என்ன ஒன்னையும் ஜீரோவையும் மட்டுமே வெச்சுக்கிட்டு கூட்டிக்கிட்டு திரியுராய்ங்க? இதத்தான் நீங்களும் செய்யறீங்களா? இதுக்கு பேரு சாப்ட்வேர் இஞ்சினியராக்கும்?” “ஆடி போட்டன்னா. நாங்க எல்லாம் ப்ரோகிராம் செய்யறோம்டி. சித்தி உன் மகளுக்கு ரொம்பத்தான் வாய்” “ம்ம்..சரி. ஒழுங்கா லெவன்த் பாஸ் பண்ணிருவியாடி?” “என்னண்ணா இப்படி கேட்டுட்ட, உன்னோட ஸ்டுபிட் கம்யூட்டர் சயின்ஸ் தவர எல்லாம் நமக்கு கைவந்தது. அண்ணா அண்ணா அங்க பாரு” அங்கே கொஞ்ச தூரத்தில் மூலையில் இருந்த புகைக்கூண்டின் அருகே கைகளை நெஞ்சுக்கு குறுக்காக கட்டிக்கொண்டு அவள் நின்றிருந்தாள்.

நிலவின் ரம்மியமான வெளிச்சத்தில் அவளது ஒரு பகுதி முகம் மட்டும் அழகாக தெரிந்தது. நிலவை விட மிகவும் பிரகாசமாக இருந்தது. (?!) ஒரு முறை அவள் திரும்பிப் பார்த்தாள். நெஞ்சின் ஊடாக கூர்மையான ஈட்டி ஒன்று பாய்ச்சப்பட்டது போல இருந்தது. வேல் விழியாள். முன் தலையின் கேசம் மெதுவாக காற்றில் ஆடியது. இருமுறை உள்ளங்கைகளை அழகாக கண்ணத்தில் வைத்துக்கொண்டாள்.

“அண்ணா ஜொள்ளு விட்ட்து போதும். ஏண்ணா இப்படி அலையுற? நான் கூப்படறேன் பாரு.”ஏய் அஸ்வினி இங்கவாடி.” “சத்யா. வாடி போடின்னெல்லாம் கூப்பிடக்கூடாது. என்ன இருந்தாலும் உனக்கு அண்ணியில்லையா?” என்றார் சித்தி தன் பங்குக்கு. சத்யா என்னை திரும்பி ஒரு முறை முறைத்துவிட்டு, மீண்டும் அஸ்வி இங்க வாடி. அம்மா கூப்பிடறாங்க பார். அவளும் அவளுடைய அம்மாவும் வந்தார்கள். சிவா அவள் மேல் வைத்திருந்த கண்களை எடுக்கவேயில்லை. அவள் அம்மா, சிவாவின் அம்மாவிடம் அண்ணி எப்படியிருக்கீங்க என்றார் சிரித்துக்கொண்டே. கூட்டத்துடன் ஐக்கியமானார். பிறகு தம்பிதான் மெட்ராஸ்ல வொர்க் பண்ணுதோ என்றார் சிவாவைப் பார்த்தபடி. அஸ்வினி கூட சென்னைல தான் வொர்க் பண்றா. சிவா அஸ்வினியின் பாதி தாழ்ந்திருந்த இரு முட்டைக்கண்களை விடாமல் பார்த்துக்கொண்டேயிருந்தான். “நீங்க மெட்ராஸ்ல முன்ன இருந்த அதே மாம்பழம் தண்டவாளத்துக்கு பக்கத்துல இருக்குற குவார்ட்டர்ஸ்ல தான இருக்கீங்க?” என்றார் சிவாவின் அம்மா. “ஆமா அண்ணி. ஆனா வீடு மாத்தனும். அவருக்கு சர்வீஸ் முடியப்போது” என்றார் சிரித்துக்கொண்டே. சிறிது நேரத்தில் பாதிதாழ்ந்திருந்த கண்கள் முழுதும் திறந்தன. சிவாவைப் பார்த்தன. சிறிய அதிர்ச்சியை உள்வாங்கிக்கொண்டன. பிறகு மீண்டும் தாழ்ந்து கொண்டன. அடுத்த வினாடி மீண்டும் முழுதும் திறந்தன. இந்த முறை சில வினாடிகள் நிலைத்து நின்று சிவாவைப் பார்த்தன. உதடுகள் மட்டுமா சிரிக்கும்? கண்களும் கூட பல சமயங்களில் சிரிக்கும்.

“அஸ்வி, டு யூ லவ் மீ?” “ஸ்டுபிட். என்ன கொஸ்டின் இது? ஐ லவ் யூ சோ மச்” “எவ்ளோ?” “ரொம்ப” “எவ்ளோ ரொம்ப?” “ரொம்ப ரொம்ப” “எவ்ளோ ரொம்ப ரொம்ப” “மடையா. தடியா. என் க்யூட் சீஸ் கேக். என் செல்ல டெடி பியர். என் புஜ்ஜு கண்ணா. இந்த பீச்ல எவ்ளோ மணல் இருக்கு? அவ்ளோ உன்ன நான் லவ் பண்றேன்” சிவா அவளது இரு உள்ளங்கைகளை எடுத்து தன் கண்ணத்தில் வைத்துக்கொண்டான். “என்னடா கண்ணா? சோ செண்டி டுடே? எதுவும் ஸ்டுபிட் தமிழ் மூவி பாத்தியா?” “இல்லடி. லவ் யூ” “லவ் யூ டூ”

***

சென்னை. ராயல் பப். ஜூலை 2000.

சிவா மிதந்து கொண்டிருந்தான். இசை அவனை செலுத்திக்கொண்டிருந்தது. அவனது கால்கள் நிற்பதேயில்லை. கைகள் எதிரே தன்னுடன் ஆடிக்கொண்டிருந்தவளின் இடையை கெட்டியாகப்பிடித்துக்கொண்டிருந்தான். “உன்னக்கூட்டிக்கிட்டு கடைக்கு போறேன் உனக்கு வேண்டியத வாங்கித்தாரேன்” அவள் மிகக்குறைந்த அளவே உடைகள் உடுத்தியிருந்தாள். “என் வீட்டுக்குத்தான் கூட வாடி எங்கு போனாலும் கூட வா நி” மங்கிய வெளிச்சம் மிகவும் போதையேற்றியது. “நேத்து உன்ன பாக்கலையே
அட இன்னைக்கின்னம் தூங்கலையே
” அவளின் பாடிஸ்ப்ரே கிறங்கடித்தது. “அஸ்வினி” “அஸ்வினி ஐ லவ் யூ” “ஹே பேப். நான் அஸ்வினி இல்ல. ஹேமா. கமான் டேக் இட் ஈசி” அவள் அவனின் கழுத்தை சுற்றி இறுக்கிக்கொண்டாள். “காலையில் என்னாகும் அட கல்யாணம் யாருக்காகும்? காலையில் என்னாகும் அட கல்யாணம் யாருக்காகும்?” சிவாவுக்கு பூமி அதிர்ந்தது. தள்ளாடியது. கண்கள் மிகவும் மங்கலாக தெரிந்தது. அவளது கழுத்தில் மெதுவாக உதடு பதித்தான். “போதையில் புத்திமாறுமா வட்ட நிலாவும் சதுரமாகுமா?” நெஞ்சு வலித்தது. கண்கள் கசிந்தன. அவள் அவனை நெஞ்சோடு சேர்த்துக்கொண்டாள். இசையின் சத்தம் அதிகரித்தது. சிவா விலகினான். அஸ்வினி பக்கத்தில் நின்றுகொண்டிருந்தாள். “என் வீட்டுக்குத்தான் கூட வாடி எங்கு போனாலும் கூட வா நி” ப்ப்ப்ப்பாபாபாய்ய்ய் ஒன் ம்ம்ம்ம்ம்மோர். அஅஅஸ்ஸ்ஸ்ஸ்வ்வ்வ்வி. கம் ஹியர். ஐ யாம் ய்ய்ய்ய்யுவ்வர் ஸ்ஸ்வ்வவீட் ஹ்ஹ்ஹ்ஹ்ஹார்ட். “போதையில் புத்திமாறுமா வட்ட நிலாவும் சதுரமாகுமா?” ஹே..ஹ¥..ஆர் யூ மேன்? ஹக் ஹக் ..ஹக்..டான்ஸிங் வித் மை ஸ்ஸ்வ்வீட்டி. ஓங்கி ஒரு அறை கன்னத்தில் விழுந்தது. சிவா நிலைதடுமாறி கீழே விழுந்தான். ஹேமா தாங்கிப் பிடித்தாள். ஹே சிவா. அஸ்வினி இங்க இல்ல. சி இஸ் சம் அதர் ஸ்டுபிட் கேர்ல். “அஸ்வினி” “ஸ்டாப் இட் சிவா” அதற்குள்ளாக பம்பர்ஸ் சிவாவை அலேக்காக தூக்கி வெளியே எறிந்தனர். சிவா தடுமாறி எழுந்து நின்றான். இன்னக்கு கொஞ்சம் ஸ்பீடா எர்த் ரொட்டேட் ஆகுதுன்னு நினச்சுக்கிட்டான். ஒரு பெண் அருகே வந்தாள். ஹேமாவை விட குறைவான டிரஸ் அனிந்திருந்தாள். ஹாய் ஸ்வீட்டி என்று அவனுடைய சட்டையைபிடித்து இழுத்தாள். சிவா அவளது முகத்துக்கு அருகே இழுக்கப்பட்டான். “அஸ்வினி.” “அஸ்வினி.ஹ¥ இஸ் தாட்? வான கோ ஹோம் பையா?” “ய்யா. ய்யா” அந்தப்பெண் அவனை இழுத்து அனைத்துக்கொண்டாள். ஒரு டாக்ஸியை அழைத்தாள். அஸ்வினி கிட்ட இருந்தும் இப்படித்தான் ஸ்மெல் வரும். “போதையில் புத்திமாறுமா வட்ட நிலாவும் சதுரமாகுமா?” க்ரேட். அவளது கழுத்தில் தஞ்சம் புகுந்தான். ஐ லவ் யூ. “கெட்டப்பின் ஞானம் ஏனம்மா அட கட்டிலில் நியாய தர்மமா?

ஆகஸ்ட் 2000.

“சிவா. உன்ன மானேஜர் கூப்பிடறார்.” “ஐ நோ மேன். வாட் இட் இஸ் அபவுட்” சிவாவின் கண்கள் சிவந்திருந்தன. சட்டை கலைந்திருந்தது. “ஐ யாம் பீயிங் ·பயர்ட்? இஸின்ட் இட்?” அவன் மௌனமாக இருந்தான். “ஐ நோ” சிவா வருத்தப்படாத. என்னோட கன்ஸல்டண்ட் கிட்ட உன்னோட ரெஸ்யூம் ·பார்வேர்ட் பண்றேன். யூ வில் கெட் எ ஜாப் சூன். ஹவ் ஹோப் மேன்” ஹக் ஹக் ஹக் ஹக். சிவா தன் டிராயரில் தேடி செல்போனையும், இன்னும் சில பேப்பர்களையும் எடுத்துக்கொண்டான். செல்போனை ஆன் செய்தான், ஸ்கிரீனில் அஸ்வினி அழகாக சிரித்துக்கொண்டிருந்தாள். ஹக் ஹக் ஹக் ஹக் ஹக் ஹக்.

அக்டோபர் 2000

“ஆண்ட்டி. சாரி என்ன மன்னிசிடுங்க. அதோ அந்த கட்டுமரம் இருக்கு பாருங்க அதுக்கு பக்கத்துல தான் எப்பவுமே படுத்துக்கிடப்பான். எந்த ஒரு நாளும் அவன் என்ன செஞ்சாலும் செய்யாடினாலும் எங்க போனாலும் போகாட்டினாலும் இந்த பீச்சுக்கு இந்த இடத்துக்கு வராம இருக்க மாட்டான். இது தான் அவங்க ரெண்டு பேரும் கடைசியா சந்திச்ச இடம். சாரி என்னால எதுவும் செய்யமுடியல ஆண்ட்டி. அவன் என்ன மீறி போயிட்டான் ஆண்ட்டி” என்று ராஜா அழ ஆரம்பித்தான். “பெத்தவங்க எங்க பேச்சையே கேக்கறதில்ல. நீ சொன்ன எப்படிப்பா கேப்பான். நாங்க வெயிட் பண்றோம். அவன் இங்க வருவான்ல?”

நவம்பர் 2000

“ஏங்க இவன் இப்படியே இருந்தான்னா சென்னையில் கெட்டு சீரழிஞ்சு போயிடுவாங்க. காரியாபட்டில இருக்குற உங்க தங்கச்சி வீட்டுக்கு அனுப்பிடுங்க. அங்க கொஞ்சம் நால் இருந்தான்னா சரியாயிடுவான். அதுக்குள்ளயும் ஒரு நல்ல சம்பந்தமா நாமும் பார்த்தடலாம்”

***

காரியாபட்டி டிசம்பர் 2000.

சிவாவின் மாமா முழித்துப்பார்த்தார். மிகவும் நிசப்தமாக இருந்தது. குளிர்ந்த காற்று மெல்லிசாக வீசியது. ஏனோ அவருக்கு மிகவும் வேர்த்தது. அருகில் இருந்த கெடிகார்த்தில் மணி பார்த்தார். மணி 12:10. அருகில் அவருடைய மனைவி தூங்கிக்கொண்டிருந்தார். நிமிர்ந்து சிவாவின் ரூமைப் பார்த்தார். திறந்திருந்ததைப் போல இருந்தது. மெதுவாக தட்டினார். திறந்திருந்தது. திறந்தார். சிவா. பதில் இல்லை. லைட் போட்டார். யாரும் இல்லை. திரும்பிப் பார்த்தார். வெளிக்கதவு திறந்திருந்தது. ஏனோ பயம் அவரைக் கவ்விக்கொண்டது. மெதுவாக வெளியே வந்தார். சிவா. படிகளில் இறங்கி நின்றார். வலது பக்கம் திரும்பிப் பார்த்தவர். அதிர்ந்தார். அங்கே படிக்கட்டுக்குப் பக்கத்தில் நாலைந்து நாய்கள் முன்னங்கால்களை தாங்கி உட்கார்ந்திருந்தன. அவைகளில் வாயில் எச்சில் வழிந்தோடிக்கொண்டிருந்தது. அவை யாவும் நிசப்தமாக உட்கார்ந்திருந்தன. சிவாவின் மாமா அதிர்ந்தார். மெதுவாக நடந்தார். சூ. சூ. அவை அசைந்து கொடுக்கவில்லை. சூ சூ. மெதுவாக நடந்தார். ஒரு நாய் மெதுவாக ஊளையிடத்தொடங்கியது. மற்ற நாய்களும் சேர்ந்துகொண்டன. சிவாவின் மாமா மெதுவாக நடந்து படிக்கட்டைப் பார்த்தார். படிகளின் மேலே சிவா அசையாமல் உட்கார்ந்திருந்தான். சிவாவின் மாமா படிகள் ஏறிச்சென்றார். நாய்கள் பயங்கரமாக குறைக்க ஆரம்பித்தன. சிவா. சிவா. டேய் சிவா. சிவாவின் மாமா தொட அவன் சாய்ந்து விழுந்தான். வாயில் நுரை. சிவாவாவாவா. நாய்கள் குரைப்பதை நிறுத்திவிட்டு அமைதியாக வெறித்தன. “ஐயோ சிவா”

***

காரியாபட்டி. டிசம்பர் 14. 2011.

“சொல்லுப்பா உனக்கு என்ன வேணும். ஏன் இந்த சின்ன புள்ள மேல ஏறிகிட்டிருக்க? போயிடுப்பா. அவ வாழவேண்டிய குறுத்து. விட்டுட்டு போயிடுப்பா” பூசாரி அஸ்வினியைப் பார்த்து கெஞ்சிக்கொண்டிருந்தார். அஸ்வினி நிலை குத்திய பார்வையோடு உட்கார்ந்திருந்தாள். “போகமாட்டேன். நான் போகமாட்டேன்” அஸ்வினி ஆண் குரலில் பேசிக்கொண்டிருந்தாள். “உனக்கு வேண்டியத கேள் தந்திடரோம். போயிடு. சொல்லு என்ன வேண்டும்” “சொல்லப்போறியா இல்லையா” அஸ்வினி அழ ஆரம்பித்தாள். “எனக்கு என் அம்மாவ பாக்கனும். எனக்கு என் அம்மாவ பாக்கனும். எனக்கு என் அம்மாகூட பேசனும். மன்னிப்பு கேக்கனும். அம்மா வேணும். அம்மா வேணும்” சிவா அழுதுகொண்டிருந்தான். அழுதுகொண்டேயிருந்தான்.

காரியாபட்டி. டிசம்பர் 16. 2011.

சிவாவின் அம்மா நிலைகுத்தி நின்றார். அஸ்வினி. நீ என்னோட மருமக அஸ்வினி மாதிரியே இருக்கம்மா. அச்சு அசல் அதே மாதிரி இருக்க. அதே பேர். எப்படி சாத்தியம்? அதுவும் இதே வீட்டுக்கு நீ வந்திருக்க பாரு. ம்ம்ம்ம்..இந்த வீடு என்னோட நாத்தனாரும் அவருடைய வீட்டுக்காரரும் காலம் காலமா இருந்த வீடு. சிவா போயிட்ட பிறகு அவங்களுக்கு இங்க இருக்கவே பிடிக்கல. வீட்ட வித்துட்டு போயிட்டாங்க. அதுக்கப்புறம் நிறைய பேர் இருந்திருக்காங்க. இப்ப நீங்க வந்திருக்கீங்க. இது வரைக்கு யாரையும் தொந்தரவு செய்யாம இருந்தவன், உன்ன பாத்த பிறகு உன்ன எனக்கு காமிக்கனும்னு நினைச்சிருக்கான். அது தான் என்ன கூப்பிட்டுருக்கான். தைரியமா இரும்மா. இனி அவன் வரமாட்டான். சிவா வரமாட்டான். என் வீட்டுக்கு ஒரு தடவ வந்துட்டு போம்மா. நீ என் மருமக.

***

சென்னை. ஜூன் 02. 2000.

எலக்ட்ரிக் ட்ரெயினை விட்டு கீழே இறங்கினாள் அஸ்வினி. ரிங் ரிங் ரிங் ரிங். நடந்து கொண்டே தனது பையில் துலாவி செல்போனை எடுத்தாள். “ம்ம் சரிடி. ச்சீ போடி. அதெல்லாம் கிடையாது. நாங்க உங்கள மாதிரியெல்லாம் கிடையாது. சரி. ஓகெ..பை பை.” செல் போனை உள்ளே போட்டுவிட்டு, தண்டவாளத்தில் இறங்கி நடந்தாள். இரு தண்டவாளங்களைக் கடந்தால் அந்தப்பக்கம் போய் விடலாம். ரிங். ரிங். ரிங். சிவா தடியன் கால் பண்றான். இவ்ளோ நேரம் எங்க போனானாம்? நின்று கைப்பையில் தேடி செல்போனை எடுத்தாள். ஏ ஏ ஏ பொண்ணு சத்தம் கேட்டது. யாரோ கூப்பிட்டார்கள். கால் ஆன்சர் பண்ணினாள். “தடியா..” சொல்லிக்கொண்டே திரும்பினாள். எதிரே மிக ருகில் எலக்ட்ரிக் ட்ரெயின். மிகுந்த இரைச்சலுடன்.

செல்போன் தூக்கியெறியப்பட்டு ஒரு முள்ளுச்செடிக்கு அருகே சென்று விழுந்தது.உலகம் சுழன்றுகொண்டுதான் இருந்தது.

“ஹலோ அஸ்வி” “ஹலோ அஸ்வி” “ஹலோ அஸ்விக்குட்டி” “டேய் செல்லம்”. கால் துண்டிக்கப்பட்டது.

மீண்டும் டயல் செய்தான். “நீங்கள் டயல் செய்த எண் தற்சமயம் உபயோகத்தில் இல்லை”. மீண்டும். “நீங்கள் டயல் செய்த எண் தற்சமயம் உபயோகத்தில் இல்லை”. மீண்டும். “நீங்கள் டயல் செய்த எண் தற்சமயம் உபயோகத்தில் இல்லை”. மீண்டும். “நீங்கள் டயல் செய்த எண் தற்சமயம் உபயோகத்தில் இல்லை”.

ஸ்டுபிட் அஸ்வி. என்னைக்குத்தான் நீ பேட்டரிய ஒழுங்கா சார்ஜ் பண்ணிவெக்கப்போறியோ!”

***

8 thoughts on “ஹலோ அஸ்விக்குட்டி

 1. முத்து,கதைப்பின்னல் அருமை!பேயைப்பற்றி சொன்னவிதம் மட்டும் கொஞ்சம் பழயபாணியாக இருந்தது.

  Like

 2. தல, (பழைய டயலாக் தான், இருந்தாலும்) கலக்கிட்டீங்க.கதை கொஞ்சம் பெருருருசா இருந்தாலும், சுவாரஸியம். ஸ்டோரி போர்ட் போட்டு எழுதினீங்களா? நல்லா வந்திருக்கு. உங்களுக்கு மர்மம்னா ரொம்ப புடிக்குமோ?- லக்ஷ்மண்

  Like

 3. இளவஞ்சி: வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி! அடுத்தமுறை புதிதாக சொல்ல முயற்சிக்கிறேன்.நவநீத்: கதை நிறையவே நீளமாக இருக்கிறது இல்லையா? ஆனால் இந்த நீளம் இல்லையென்றால் சுவராஸ்யம் இருக்காது. இது மூன்று வெவ்வேறு நிகழ்வுகள். ஆனால் ஒன்றுக்கொன்று நிறைய தொடர்புடையவை. எனவே தான் நீளம் தேவைப்பட்டது. பொறுமையாக படிப்பவர்களுக்கே கடைசி ட்விஸ்ட் இனிக்கும்.லக்ஷ்மண்: வாங்க சார்! கதை நல்லாயிருந்துச்சா? மர்மம்? ம்ம் ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்.சூர்யா: Thanks for the honest comment!

  Like

 4. வினையூக்கி: வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி. பேய் பயம் அந்த introவில் மட்டும் தான். மற்றபடி இது ஒரு காதல் tragedy தான். முழுதாக படித்ததற்கு நன்றி.

  Like

Leave a Reply to இளவஞ்சி Cancel reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s