உயிர் உடைவதை உணர்கிறேன். தலையெழுத்தை தலைகீழாய் எழுதினேன். தலைகீழாய் எழுதியதைப் படிக்கமுடியாமல் மாய்ந்துபோகிறேன். தலையெழுத்தைப் படிக்கத்தெரிந்த நட்சத்திரம் ஒன்று மேக இதயத்துக்குள் மறைந்துகொண்டது. இதயங்கள் காற்றில் அலைக்கழிக்கப்படுகின்றன. வடிவங்கள் மாறியவாறு இருக்கின்றன. ஒவ்வொரு வடிவத்திலும் நான் தொலைத்த நட்சத்திரத்தை தேடித்தேடி அலைகிறேன். மேகங்கள் என்னை கடத்திச்செல்கின்றன. குயிலொன்று என்னை மேகத்திலிருந்து மீட்டெடுக்கிறது. அந்த குயிலின் பாடல் என்னைப் பற்றிக்கொள்கிறது. குயில் அசையாமல் நின்று கொண்டிருக்கும் அந்த ஆலமரத்திலேறி அமர்ந்துகொண்டது. ஆல இலைகள் குயிலின் பாடலை சுவாசித்தன. குயில் பாடுவதை நிறுத்திக் கொண்டது. பாடல்களைத் தேடி வேர்களில் நெடுந்தூரம் பயணம் செய்தேன். அந்த மரத்தின் இலைகளின் நரம்புகளில் அந்தப் பாடல்களைத் தேடித்திரிந்தேன். இலைகள் காற்றில் உதிர்ந்தன. பாடப்பட்ட பாடல்கள் காற்றில் கலந்திருக்கின்றன. காற்றிலிருந்து குரலை மட்டும் பிரிக்கத் தெரிந்த பறவை ஒன்று வேண்டும். இறைவனிடம் கேட்டேன். பிறகு, பறவை வேண்டாம், இந்த இரவை மட்டும் எப்படியேனும் கடத்திவிடு, என்று மீண்டும் வேண்டிக் கொண்டேன். இரவு கனக்கிறது. இறைவன் என்னை மௌனமாக பார்த்துக்கொண்டிருந்தார். இரவு கனவுகளில் மெதுவாக ஊர்ந்துகொண்டிருந்தது. கனவு, இரவின் கரிய இருளில், சிக்கிக்கொண்டிருந்தது. கனவுகளினூடே பறவை ஒன்று பறந்துவந்தது. அது நான் இழந்த பாடல்களை மீட்டுத்தந்தது. பாடல்கள் அருவியில் நனைந்தன. அருவியின் சத்தம் பாடல்களை நினைவிழக்கச்செய்தது. கனவுகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. இரவு உப்புக்கரித்தது. உப்புக்கரித்த நினைவுகள் கணங்களை நிறுத்துகின்றன. கடந்துவிட்ட கணங்களிலிருந்து நினைவுகளை சேகரிக்க முயல்கிறேன். சேகரிக்கப்படாத நினைவுகள் ரயில் நிலையங்களில் சுற்றித்திரிகின்றன. அனாதையான அந்த நினைவுகள் ரயில் நிலையங்களில் மணி காட்டும் டிஜிட்டல் கடிகாரங்களில் சென்று ஒளிந்து கொண்டன. புள்ளிகளாய் தேய்ந்தன. நினைவிடங்களை விட்டகலாத மூச்சுக்காற்று அங்கேயே சுற்றித்திரிந்தது. ஜான்சன்ஸ் பேபி பவுடரின் மணம் என் மூச்சுக்காற்றை இறுகப்பிடிக்கிறது. என் இதயத்தில் உன்னைக் கண்டதும் அது அங்கேயே ஒழிந்துகொண்டது. என் சிவப்பனுக்கள் பவுடரின் மணத்தை உறிஞ்சிக்கொள்கின்றன. நினைவுகள் என் ரத்தக்குழாய்களுக்குள் இங்கும் அங்கும் திக்குத்தெரியாமல் அலைந்து கொண்டிருக்கின்றன. அவை உறைந்து போகும் நாட்களை எண்ணி காத்துக்கிடக்கின்றன.