(தொடர்கதை)
(இதற்கு முந்தய பகுதிகளை sidemenuவில் பார்க்கவும்)
முன்னும் பின்னும்.
2
டன்டடகட டன்டடகட டன்டடகட டன்டடகட டன்டடகட டன்டடகட டன்டன்டன்டன்டன் டன்டடகடடன்டடகடடன்டடகட பிபீபிபீபிபீபீ………டன்டடகட டன்டடகட டன்டடகடடன்டடகட டன் டன் டன் பிபீபிபீபிபீபீ..
“சங்கு சேகண்டி முழங்கவே
சலங்கைச் சத்தம் கேட்கவே
வீச்சருவா தூக்கிக்கிட்டு
வெள்ளக் குதிரை மேலே
ஆடி வாரான் பாடிவாரான்
எங்க பெரிய கருப்பன் தானே“
“ம்ம்ம்ம்.ம்ம்ம்ம்..பாட்டு மறந்துபோச்சுடா…அப்புறம் என்னடா வரும்?”
“போதும். போதும். நீ என்னிக்கு ஒழுங்கா பாடிருக்க? சாமிக்கு அருள் வந்திடுச்சு.”
காளி தன் வெட்டப்படாத சடைமுடியை இங்கும் அங்கும் ஆட்டியபடி முழியைப் பிதுக்கி, நாக்கை வெளியே மடக்கி வைத்து, கையில் அருவா பிடித்திருப்பதைப் போல ஒரு வாழை மட்டையை பிடித்துக்கொண்டு அங்கும் இங்கும் குதித்துக்கொண்டிருந்தான். காளிக்கு பணிரெண்டு வயது. காளி கொஞ்சம் வளர்ந்திருந்தான். பிறந்த பொழுது எப்படி இருந்தானோ அதே கரிய நிறம், ஒல்லியான தேகம். ஆனால் அந்த சிறிய கண்களின் வசீகரம் சற்று கூடி இருப்பது போல இருந்தது. கருப்பு நிற கால்சட்டை அணிந்திருந்தான். மேலே சட்டை ஏதும் போட்டிருக்கவில்லை. கழுத்தில் அப்பாவின் புலிநகம் அதே மினுக்கோடு இருந்தது.
விலா எழும்பு தெரிய வயிற்றை எக்கி அடித்தொண்டையிலிருந்து காளி கர்ஜித்தான், “டேய் கருப்பன் வந்திருக்கன்டா” “கருப்பா”..அருகிலிருந்த குமார் காளியின் கைகளை இறுக்கமாக பற்றிக்கொண்டான் “கருப்பா எங்களயெல்லாம் காப்பாத்தி கொடுப்பா” “ம்ம்..காப்பாத்தறேன்டா..காப்பாத்தறேன்” காளியின் டவுசர் இடுப்பில் நிற்காமல் கீழிறங்கியது. அருகிலிருந்த சிறுமிகள் சிரித்தனர். “கருப்பா டவுசர் அவுறுது பார்” காளி கையிலிருந்த வாழை மட்டையை கீழே போட்டுவிட்டு டவுசரை இருக்கிப் பிடித்து முடிச்சு போட்டான். பிறகு மீண்டும் கீழே போட்ட வாழை மட்டையை குனிந்து எடுத்து கையில் அருவா போல வைத்துக்கொண்டான். இதையெல்லாம் செல்வி பார்த்திருப்பாளோ என்ற சந்தேகம் வர ஓரக்கண்ணால் அவளை பார்த்தான். ஒரு ஓரத்தில் கத்தரிப்பூ நிறத்தில் பூப்போட்ட சீட்டி பாவாடை அணிந்து சோகமே உருவாக ஓரத்தில் நின்று கொண்டிருந்தாள் செல்வி.
“ம்ம்..ஒவ்வொருத்தரா வாங்கப்பா” பூசாரி பக்தர்களை அழைத்தார். சிறுவர்கள் முட்டிமோதிக்கொண்டனர். எல்லோரும் உட்கார்ந்து கொண்டனர். யாரும் எழுந்திருக்கவில்லை. “ம்ம்..அருள் வாக்கு வாங்க ஒவ்வொரு ஆளா வாங்கப்பா” ம்ம்..ஹ¥ம்..ஒருத்தன் கூட எழுந்திருக்கவில்லை. “டேய்……….” காளி மறுபடியும் கத்தவே, ஒரு சிறுவன் எழுந்தான்.
ஏன்டா பாடபொஸ்தகத்திலெல்லாம் ஆறு ஏரின்னு ஏதேதோ சொல்றாய்ங்கல்ல அதெல்லாம்
எங்கடா இருக்கு?
மெதுவாக நடந்து காளியின் அருகே வந்தான். “காளி..” சட்டென்று இயல்பு நிலைக்கு வந்த காளி, வாழை மட்டையை வைத்து அவனை நங்கென்று தலையில் தட்டினான், “அண்ணேன்னு சொல்றா” பிறகு மீண்டும் “ம்ம்ம்ம்ம்” என்று ஆடத்துடங்கினான். அந்த சிறுவன் தலையை தடவிக்கொண்டே “காளியண்ணே..” என்றான். இப்பொழுது பூசாரி போல பக்கத்தில் நின்றிருந்த குமார் காளியிடமிருந்து வாழைமட்டையை பிடுங்கி சிறுவனின் தலையில் மீண்டும் ஒருமுறை நங்கென்று அடித்தான் “அண்ணனா, மூஞ்சப்பாரு..கருப்பான்னு சொல்லுடா சடத்தலையா”. கடுப்பான சிறுவன் தலையை தடவிக்கொண்டே “வோய் குமாரு கொமாரு ஓந்தலை மட்டும் நல்ல தலையா..போடா முட்டைத் தலையா” குமாரின் தலை முட்டை அகலவாக்கில் வைத்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும், பின்னால் வீங்கியது போல. சமாதன முயற்சியில் இறங்கிய கருப்பசாமி சாந்தமாக “பக்தா என்ன வேண்டும் கேள்” என்றது.
“ம்ம்…சாமி..சாமி..இந்த சேகர் இருக்கியான்ல சேகர்..அவென் எம் பம்பரத்த..ம்ம்..ஆக்கர் ஆடிச்சு ஆக்கர் அடிச்சு ஒடச்சுபுடறயான்..நீ அவென் பம்பரத்த..ம்ம்..ம்…ம்…ஒளிச்சுவெச்சுடு..”
“ம்ம்..காப்பாத்தி கொடுக்கறனப்பா..உம் பம்பரத்த காப்பாத்தி கொடுக்கறனப்பா.” என்று காளி கண்களை மூடிக்கொண்டு ஒரு ஆட்டம் போட்டு, குமார் பிள்ளையார் கோயிலிருந்து ஆட்டயபோட்டுட்டு வந்து கையில் வைத்திருந்த திருநீரை எடுத்து, அந்த சிறுவனின் நெற்றியில் பூசினான். காளி “ம்ம்ம்ம்ம்ம்..” என்று உடலை குலுக்கினான். சிறுவனும் தன் பங்குக்கு ஆடத்தொடங்க, குமார் அவனை நிறுத்தி, நீயெல்லாம் ஆடக்கூடாது, போ போய் உக்கார் இல்லீண்ணா சேகர விட்டு ஆக்கர் அடிக்க சொல்லுவேன் என்றதும் அவன் சத்தம் போடாமல் தன் இடத்தில் சென்று உட்கார்ந்து கொண்டான்.
அடுத்து ஒவ்வொருத்தராய் வந்து அருள் வாக்கு வாங்கிக்கொண்டனர். காளி இன்னும் விட்டபாடில்லை, விடாமல் ஆடிக்கொண்டிருந்தான் குமார் “போதும் சாமி போதும்” என்றும் கேட்காமல் சங்மங் என்று குதித்துக்கொண்டிருந்தான். “டேய்..யாராவது கத்தரிப்பூ கலர்ல பாவாட சட்ட போட்டவங்க இருந்தா வரச்சொல்லுடா” என்றான். குமார், சுற்றும் முற்றும் பார்த்தான், பிறகு செல்வியைப் பார்த்தான். புரிந்து கொண்டவன், காளியிடம் திரும்பி “அடியேய்..உனக்கு ரப்பு தான்டி..” என்று சொல்லிவிட்டு, “ஏத்தா கெழவி”..”டேய் செல்விடா” “ம்ம்க்கும் தெரியுது தெரியுது..ஏத்தா செலவி..இங்க வா..சாமி கூப்பிடுது பாரு”
முதலில் வரமாட்டேன் என்று மறுத்தவள் பிறகு என்ன நினைத்தாளோ மிக மெதுவாக எழுந்து வந்தாள். ஆடிக்கொண்டிருந்த காளியின் முன்னர் வந்து நின்றாள். குமார், “ஏன் சோகமா இருக்க? எதுவா இருந்தாலும் நம்ப கருப்பன் கிட்ட சொல்லு, தீத்து வெச்சுடும்” என்றான். காளி சிரித்தபடி ஆடிக்கொண்டிருந்தான்.
தயங்கியபடிக்கு நின்று கொண்டிருந்தவள், பிறகு மெதுவாக “காளி.காளி.. என்ன என்ன அந்த கணக்கு வாத்தியார் அடிச்சிட்டாருடா. இங்கபாரு..” என்று உள்ளங்கையை விரித்துக்காட்டினாள். உள்ளங்கையில் வரிகள். காளி மிகக்கடுமையாக முகத்தை வைத்துக்கொண்டான். “டேய் வாத்தி..” என்று கத்தினான், பிறகு செல்வியிடம் திரும்பி “எதுக்கு உன்ன அந்த வாத்தி அடிச்சான்?” என்றான். செல்வி அழத்தொடங்கினாள். அவளது கண்களில் சிறு சிறு துளிகள் துளிர்த்தன. காளி இப்பொழுது ஆடவில்லை. அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். “என் கணக்கு நோட்டு தொலஞ்சுபோச்சு..வேற நோட்டு வாங்க ஐயா துட்டு கொடுக்கல..இன்னிக்கு கூட வாத்தியார் அடிச்சாரு தெரியுமா?” என்றாள் கேவியபடி. காளி இந்த உலகத்திலே இல்லை.
“டேய் குமாரு அந்த வாத்தியானா நாளைக்கு..வேணா வேணாம் இன்னிக்கே ஒருவழி பண்ணிடுவோம்டா.. செல்வி அதுக்குமுன்ன உனக்கொரு வழி சொல்லட்டா” என்றான் காளி. செல்வி அழுவதை நிறுத்துவிட்டு, “என்னடா?” என்றாள். “பக்கத்துல வா காதில சொல்றேன்” “ம்ம்” செல்வி கண்ணீரைத்துடைத்துக்கொண்டே காளியின் அருகில் சென்றாள். காளி அவளது காதுகளுக்கு அருகில் சென்றான், செல்வி கண்ணத்தில் வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டே காத்திருந்தாள், காளி பச்சக் என்று செல்வியின் கண்ணத்தில் ஒரு முத்தம் வைத்தான். பிறகு திரும்பிப்பார்க்காமல் தலைதெறிக்க ஓட்டம் பிடித்தான். ஏற்கனவே குமார் காளியின் முன்னால் ஓடிக்கொண்டிருந்தான்.
செல்வி கீழே விழுந்து மண்ணில் புரண்டு அழ ஆரம்பித்தாள். போடா காளி தக்காளி என்றாள் மிகச்சத்தமாக.
***
“டேய் காளி அங்க ஒன்னு இருக்கு பாருடா” என்றான் குமார். காளி பாய்ந்து சென்று அதை எடுத்து தன் டவுசர் பையில் போட்டுக்கொண்டான். குமார் தரையில் ஒரு இடம் பாக்கியில்லாமல் தவழ்ந்தபடி தேடினான். காளி அவனுக்கு அருகில் நின்று கொண்டு பரவலாக நோட்டம் விட்டுக்கொண்டிருந்தான். பிறகு ஏதும் கிடைக்காமல் “டேய் குமார் நாம சாவடிக்கு போவோம்டா. பெரிசுக எல்லாம் தூங்கிருக்குங்க” என்று காளி சொல்ல இருவரும் மந்ததையை விட்டு சாவடிக்கு நடையைக் கட்டினர்.
சாவடியில் அந்த காலை பதினோரு மணி வெயிலையும் பொருட்படுத்தாமல் நாலைந்து வழுக்கைத் தலை பெரிசுகள் தூங்கிக்கொண்டிருந்தனர். பிள்ளையார் சத்தமில்லாமல் உட்கார்ந்திருந்தார். காளியும் குமாரும் படிகளிலும் சாவடிக்கு கீழேயும் தெடினர். நல்ல வேட்டை. நிறைய கிடைத்தது. இருவரும் சிரித்துக்கொண்டனர். பிறகு வேகவேகமாக நடக்கத்தொடங்கினர். ஊரணியைக் கடந்து மொட்டைமலையில் ஏறி, கோவிலுக்கு பின்னால் சென்று அங்கிருந்த திண்டில் குத்தவைத்து உட்கார்ந்து கொண்டனர்.
காளி பையில் கைவிட்டு சேகரித்ததில் ஒன்றை எடுத்து வாயில் வைத்துக்கொண்டான். துண்டு பீடி. குமாரும் ஒன்றை எடுத்து வாயில் வைத்துக்கொண்டான். காளி டவுசர் பையில் கைவிட்டு ஒரு தீப்பெட்டியை எடுத்து அதில் மீதமிருந்த இரண்டு தீக்குச்சிகளில் ஒன்றை எடுத்தான். வாயில் துண்டுபீடியை வைத்துக்கொண்டு குமார் காளிக்கு ஏதோ சமிக்ஞை காட்டினான். காளி என்னவென்று கேட்க, காத்தடிக்குது அந்தப்பக்கம் திரும்பி பத்தவை என்றான். காளி குமாரின் மதிநுட்பத்தை வியந்தவாறு சுவற்றுப்பக்கம் திரும்பி தனது பீடியைப் பற்றவைத்துக்கொண்டான். அவனது பீடி மிகவும் சிறியதாக இருந்தது. கஞ்சப்பிசினாரி பயலுக கடைசிவரைக்கும் இழுத்துட்டுத்தான் போடறாய்ங்க என்றான் புகையை வெளியே விட்டுக்கொண்டே. பிறகு குமாரின் பீடியைப் பற்றவைத்தான். இருவரும் ரசித்து புகைக்க ஆரம்பித்தனர்.
காற்று பீடியைக் கரைத்துக்கொண்டிருந்தது. காளியின் முன்னந்தலையில் விழுந்த அவனது நீண்ட தலைமுடி காற்றில் இங்கும் அங்கும் அலைந்து கொண்டிருந்தது. அவன் அருகிலிருந்த சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டான். அங்கிருந்து பார்க்கும் போது அருகிலிருந்த நிறைய கிராமங்கள் தெரிந்தன. கடினமான வெயில் எங்கும் படர்ந்திருந்தது. கண்ணுக்கெட்டிய தூரம் வரையிலும் பொட்டக்காடு மட்டுமே தெரிந்தது. தூரத்தில் யாரோ வெடிவைத்து பாறையைத் தகர்க்கும் சத்தம் கேட்டது.
காளி ஏதோ நினைவு வந்தவனாக திரும்பி குமாரிடம் கேட்டான் “ஏன்டா பாடபொஸ்தகத்திலெல்லாம் ஆறு ஏரின்னு ஏதேதோ சொல்றாய்ங்கல்ல அதெல்லாம் எங்கடா இருக்கு?” குமார் தனக்கு-எதுவும்-தெரியாது-தான்-எதையும்-ஒளித்தும்வைக்கவில்லை என்பதைப் போல ஒரு பாவனை காட்டிவிட்டு அடுத்த துண்டுபீடியை எடுத்து வாயில் வைத்து அணையப்போகும் பீடியின் நெருப்பில் அதைப் பற்றவைத்துக்கொண்டான்.
காளி ஏதும் பேசாமல் வெயிலையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். பீடிப்புகை காற்றில் எழும்பி கரைந்து கொண்டிருந்தது.
***
இருள் பூச்சியின் சத்தம் கனமாக கேட்டது. அது நிலவின் ஒளி போல தூங்கும் பொழுது வருகிறது. காலையில் எழுந்தால் நிலவைப் போலவே காணாமல் போய்விடுகிறது என்று யோசித்துக்கொண்டே காளி ஒரு பக்கமாக சாய்ந்து கால்களை மடக்கி கைகளை கால்களுக்கும் முகத்துகும் நடுவை வைத்துக்கொண்டு கண்களை மூடிப் படுத்திருந்தான். ராக்கம்மா அவனுக்கு அருகில் படுத்திருந்தாள். கதவு திறக்கும் சத்தம் கேட்டு முழித்துக்கொண்டு எழுந்தாள். ரங்கன் வந்தான். ராக்கம்மாவின் தலைமுடியை முடிந்துகொண்டு “சாப்படறியா?” என்றாள். “ம்ம்..இருக்கறத போடு” என்றவாரே உட்கார்ந்தான். பிறகு “எங்க உன் செல்ல மருமவன் தூங்கிட்டானா? இன்னிக்கு அவன் மொட்டமலையில் உட்கார்ந்து பீடி குடிச்சத எங்கூட்டாளிக பாத்திருக்காய்ங்க. காலையில் எந்திரிக்கட்டும் அவனுக்கு இருக்கு” என்றான். ராக்கு ஒரு சட்டி நிறைய கூழ் போன்ற ஏதோ ஒன்றையும் மிளகாய் இரண்டும் எடுத்து வந்து அவனருகில் வைத்துவிட்டு, அவன் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டாள். “இந்தா பேசாம சாப்பிடு. நீ பண்ணாத சேட்டையையா உன் மருமவன் செய்யறான்?”
***
காளி எழுந்து பார்த்தான். அனைவரும் தூங்கிவிட்டிருந்தனர். ராக்குவும் ரங்கனும் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தனர். காளி மெதுவாக எழுந்து ஓசைப்படாமல் கதவைத்திறந்து கொண்டு வெளியே வந்தான். வெம்மையான காற்று அவன் முகத்தில் அறைந்தது. மெதுவாக நடக்க ஆரம்பித்தான். குமார் வீட்டைக்கடக்கும் போது உதட்டைக்குவித்து மெதுவாக ஒரு விசில் அடித்தான். இரண்டு மூன்று நிமிடங்களில் குமார் வெளியே வந்தான்.
இருவரும் நடக்க ஆரம்பித்தனர். கொஞ்சம் தூரம் சென்றதும், இன்னும் சில பையன்கள் சேர்ந்துகொண்டனர். சிலர் கைகளில் சாக்குகளும் கிழிந்து நைந்து போன பழைய போர்வைகளும் இருந்தன. அவர்கள் ஊரணியை நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.
“காளி இன்னிக்கு என்ன படம்டா?” என்றான் கொஞ்சம் குட்டையாக இருந்தவன்.
***
(காந்தம் ஈர்க்கும்)
ஓவியம்: ராம்கி