(இதற்கு முந்தைய பகுதிகளை sidemenuவில் பார்க்கவும்)
மே 12 1986
மே 12 1986 அன்று யூனியன் கார்பைடு கேட்டுக் கொண்டதற்கிணங்க, நீதிபதி ஜான் F கீனன் (John F Keenan), வழக்கை தள்ளுபடி செய்ய மறுத்துவிட்டார். ஆனால், வழக்கை அமெரிக்காவில் வைத்து விசாரிக்க முடியாது என்ற அவர்களின் கோரிக்கையை நீதிபதி ஏற்றுக்கொண்டு, வழக்கை இந்தியாவுக்கு மாற்றுமாறு தீர்ப்பு வழங்கினார். மேலோட்டமாக பார்க்கும் போது, நீதிமன்றம் இந்தியாவிற்கு சாதமாக பாரபட்சமாக நடந்து கொண்டது போல் தெரியும். பாதிக்கப்பட்ட தன் மக்களுக்கு சரியான நீதி வாங்கித்தர இந்தியாவுக்கு இது சரியான சந்தர்ப்பமாக அமையும் என்றும் நீதிபதி கூறினார். இது ஒருவகையில் UCCக்கு சாதகமே. வளர்ந்துவரும் நாடான இந்தியாவில் வாழ்க்கைத்தரம் தாழ்ந்திருப்பதால், இந்திய நீதிமன்றம் வழங்கும் பாதிப்பிற்கான இழப்பிடு -அமெரிக்காவை ஒப்பிட்டுப் பார்க்கும் போது- மிகவும் குறைவாக இருக்கும் என்று அவர்கள் நினைத்தார்கள்.
நீதிபதி கீனனின் தீர்ப்பு இந்த வழக்கில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்பார்த்து காத்திராமல், தாமே ஒரு இழப்பீட்டு தொகைக்கு, பேச்சுவார்த்தையின் மூலம் வந்தடைவதற்கு இந்த தீர்ப்பு அடித்தளமாக அமைந்தது. இதற்கு அவர்கள் சொன்ன காரணம்: UCCயின் அமெரிக்க அலுவலகத்தின் மேல் குற்றம் சுமத்தி நிரூபிப்பது மிகவும் கடினம். நடந்த பேரிழப்புக்கு UCIL தான் காரணம் ஏனென்றால் UCIL, முற்றிலும் இந்தியர்களால் நடத்தப்பட்டு வருகிறது என்றார்கள். UCILஇன் மொத்த தொழிலாளர்களில் ஒரு மிகச்சிறிய விழுக்காட்டினருக்கே அமெரிக்காவில் பயிற்சி அளிக்கப்பட்டது என்றும், UCCக்கு UCILஇன் மீது முழுக்கட்டுப்பாடு இருந்தாலும், அது இந்தியாவின் சட்டதிட்டத்துக் கட்டுப்பட்டதே என்றும் அவர்கள் கூறினார்கள்.
எனவே பேச்சுவார்த்தையே மிக வேகமான ஒரு தீர்வுக்கு வழிவகுக்கும் என்ற ஒரு பிம்பம் அவர்களால் தோற்றுவிக்கப்பட்டது. இரு தரப்பினருக்கு இடையே சுமூகமான ஒரு தீர்வை ஏற்படுத்துவதற்கு நீதிமன்றம் போராடியிருக்கிறது என்று நீதிபதி கூறினார். ஆனால், என்ன ஆனாலும், UCC, 350 மில்லியன் டாலர்களுக்கு மேல் ஒரு பைசா கூட கொடுக்கத் தயாராக இல்லை என்பதை அவர் கூறவில்லை. அது என்ன 350 மில்லியன் டாலர் கணக்கு, வேறொன்றுமில்லை, அது UCCக்கு கிடைக்கும் இன்சூரன்ஸ் தொகை. ஒரு செட்டில்மெண்ட் தொகை மட்டும் தானா என்ற கோஷம் யாராலும் எங்கும் எழுப்பப்படவேயில்லை. நீதி என்ற வார்த்தை சிறிது சிறிதாக பின்னுக்கு தள்ளப்பட்டு மறக்கடிக்கப்பட்டது.
ஆரம்பத்திலிருந்தே, இந்த போப்பால் வழக்கில், ஒரு வெளிநாட்டு நீதிமன்றம் இன்னொரு நாட்டின் பாதுகாப்பு அம்சத்தை எப்படி கணக்கிடமுடியும், என்ற ஆட்சேபத்திற்குறிய வாதம் இருந்துவந்தது. இந்தியா ஒரு ஏழை நாடாக இருப்பதால், இங்கு வாழ்க்கைத் தரம்; சொத்து; வளம்; உடல்நலம் மற்றும் நம்பிக்கை சார்ந்த விசயங்கள்; கண்டிப்பாக மிகுந்த வேறுபாட்டுடன் -அமெரிக்காவுடன் ஒப்பிடும் போது- இருக்கும். “இந்த வேறுபாடுகளையெல்லாம் மீறி நாம் நமது வாழ்க்கைத்தரம் மற்றும் நமக்கிருக்கும் கொள்கைகளை அவர்கள் மீது திணிக்கவேண்டுமா?” என்று கேள்வி எழுப்பினார் நீதிபதி.
ஆனால் இந்த வேறுபாடுகளை மனதில் கொண்டுதான் UCC போப்பாலில் பாதுகாப்பு வியூகத்தை கவனக்குறைவாக தரம் குறைந்ததாக அமைத்ததா? ஆனால் இவ்வாறான கேள்வி எழும் என்பதை நீதிபதி நன்கு உணர்ந்திருந்தவர் போல ,”இந்த பூச்சிக்கொல்லி தொழிற்சாலை மிகுந்த ஆபத்தை விளைவிக்கக்கூடியது என்பதை இந்தியா உணர்ந்திருந்தும் இது கொடுக்கும் வருவாய் அவர்களுக்கு தேவையானதாக இருந்த பட்சத்திலே அவர்கள் இந்த தொழிற்சாலையை நிறுவ ஒப்புக்கொண்டார்கள்” என்றார். அவர் சொன்னதற்கான அர்த்தம் என்னவென்றால்: “வளர்ந்து வரும் நாடான இந்தியா, ஒரு வல்லரசின் ஆபத்தான் தொழில்நுட்பத்தை அரவணைத்துக்கொள்ள தயாராக இருக்கும் பட்சத்தில், அந்த தொழில்நுட்பம் ஏற்படுத்தும் இழப்பிற்கும் இந்தியாவே பொறுப்பு ஆகும்“
இந்த தீர்ப்பின் அதிர்ச்சியான் விசயம் என்னவென்றால், தீர்ப்பு UCCயின் தனிப்பட்ட பிரச்சனைக்கு ஆதராவாக இருந்தது என்பதே. ஆனால் உலக நாடுகளின் துணையுடன் உலகநாடுகளுக்கு எல்லாம் ஏற்படவிருக்கும் ஒரு பொதுப்பிரச்சனையை மனதில் கொண்டு இந்தியா முன் வைத்த வாதம் கண்டுகொள்ளப்படவில்லை. நீதிபதி இந்த பிரச்சனையை ஒரு தனிப்பட்ட கம்பெனியின் பிரச்சனையாக மட்டுமே அனுகினார். இது மொத்த மனித இனத்திற்கும் தீங்கு விளைவிக்கக் கூடிய பொதுபிரச்சனையாக அவர் அறிய தவறினார்.
தீடிரென்று, இழப்பின் தீவிரமும் எண்ணிக்கையும், மிக அதிகமாக இருந்த பொழுதிலும், போப்பால் பிரச்சனை ஒரு உள்ளூர் பிரச்சனையாக மாறிப்போனது. இனிமேல் அந்த கம்பெனியாச்சு மக்களாச்சு என்றே எல்லோரும் நினைத்தனர். உலகின் மிகப் பயங்கரமான ஒரு பேரிடர், உலகமக்களையெல்லம் பாதிக்கக்கூடிய பின்விளைவுகளைக் கொண்ட பேரிடர், உலகம் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஏற்படவிருக்கும் மாற்றங்கள், பல்லாயிரம் மக்களை பலிவாங்கியும், இன்னும் பல்லாயிரம் மக்களை பாதித்திருக்கும் இந்தப் பேரிடர், அமெரிக்காவின் மிகப்பெரிய வர்த்தகத்தின் முன் தனது முக்கியத்துவத்தை இழந்தது. வேறு வார்த்தைகளில் சொல்வதாக இருந்தால், அமெரிக்க நீதிபதியின் பார்வையில், வர்த்தகம் மனித உரிமையை வென்றுவிட்டது.
ஏழைக்கு மனித உரிமையாவது? மண்ணாங்கட்டியாவது?!
ஹமிதியா (Hamidia) மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் சத்பதி (Dr.A.Satpathy, forensic expert) கையில் பிடித்திருக்கும் இந்த பெரிய புகைப்படம், இன்னும் அடையாளம் காணப்படாத மற்றும் யாராலும் சொந்தம் என்று ஏற்றுக்கொள்ளப்படாத மக்களின் புகைப்படங்களைக் காட்டுகிறது. டாக்டர் சத்பதி விஷவாயுவினால் பாதிக்கப்பட்ட இருபதினாயிரத்துக்கும் மேற்பட்ட பிரேதங்களைப் பரிசோதனை செய்திருக்கிறார். அவர் பாதிக்கப்பட்டவர்கள் 27 விதமான வேறு வேறு விஷ இரசாயனப் பொருட்களால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்று கண்டறிந்தார். அவர்கள் விஷத்தன்மை மிகுந்த நச்சு வாயுக்களால் -அவற்றை சுவாசித்ததால் – தான் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றார். ஆனால் இவ்வளவு இரசாயனப் பொருட்கள் எப்படி வந்தன என்பதனை விளக்குவதற்கு யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.
செப்டம்பர் 5 1986
செப்டம்பர் 5 1986 அன்று இந்தியா நியூயார்க் நகரிலிருந்து வழக்கை போப்பால் மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றிக்கொண்டது.
வழக்கம்போல, UCC, தனது சட்ட தந்திரங்களால், நீதிமன்றத்தை “மறுப்பு” கணைகளால் தாக்கியவன்னம் இருந்தது. ஒரு பூச்சிக்கொல்லி தொழிற்சாலை நிறுவுவதன் மூலம் ஏற்படவிருக்கும் ஆபத்தை தாங்கள் எந்தக் காலத்திலும் மாநில ஆரசிடமிருந்தோ அல்லது மத்திய அரசிடமிருந்தோ மறைத்ததில்லை என்று UCC சத்தியம் செய்யாத குறையாக சொன்னது. மேலும் MIC அப்படியொன்றும் மிகப்பயங்கரமானது அல்ல என்றும் கூறியது. மக்கள் தொகை அதிகம் இருக்கும் இடத்தில் தொழிற்சாலை நிறுவியதை மறுத்தது. நான்காவது ஐந்தாண்டு திட்டத்தில் (1969-1974) விதிக்கப்பட்ட பன்நாட்டு ஒருங்கிணைப்பு விதிகளை மீறியதை மறுத்தது. விசவாயு கசிந்ததை மறுத்தது. அது ஒரு தொழிலாளியிம் நாசவேலை என்று தடாலடியாக பல்டி அடித்தது.
கடைசியாக, அவர்களில் இருப்பையே அவர்கள் நிராகரித்தார்கள்!! இந்திய வழக்கறிஞர்கள் UCCஐப் பற்றிக்குறிப்பிடும் போது,”மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனம்” என்று கூறியிருந்தார்கள். இதைப் பயன்படுத்திய UCC அப்படியாருமே இல்லை என்றது. ஒரு சொல்லை எடுத்துக்கொண்டு அதற்கு வேறுவேறு அர்த்தங்கள் கற்பித்து வழக்கை திசைதிருப்புவது வழக்கறிஞர்களுக்கு கைவந்த கலை. ஆனால் இது சிலேடையின் உச்சக்கட்டம். UCC கண்ணுக்குப்புலப்படாத ஒரு அமெரிக்க வர்த்தகம். அவர்கள் மற்ற நாடுகளில் இருக்கும் சில பெரிய நிறுவனங்களில் சில பங்குகளை மட்டுமே வைத்திருந்தனர். அவ்வாறான வேற்று நாட்டு நிறுவனங்களில் ஒன்று தான் UCIL என்று கூத்தடித்தனர்.
போப்பால் தொழிற்சாலையில் தினமும் நடக்கும் விசயங்களுக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை காட்டிக்கொள்ள விரும்பியது UCC. அப்படியிருக்க நேர்ந்த இந்த பேரிடருக்கு எப்படி UCC பொறுப்பாகமுடியும் என்று பாவமாக கேட்டது UCC. ஆனால் எவ்வளவு பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு சொன்னாலும் உண்மை அதுவல்ல. UCILஇன் எந்த ஒரு பாலிசியும், செலவுதிட்டமும், செலவும், நிறுவனத்தின் எந்த ஒரு அறிக்கையும், டான்பரியில் (Danbury) இருக்கும் UCCயின் தலைமை அலுவலகத்தின் ஒப்புதல் வாங்கவேண்டும். இதை நீதிமன்றத்தில் நிரூபிப்பது மிகவும் கடினமான வேலை.
(தொடரும்)
thanks : swaroopa mukarjee
யூனியன் கார்பைட் , போபால் சம்பவத்த்தையே எல்லோரும் மறந்து விட்ட சூழலில் உங்கள் பதிவு நினைவுபடுத்துகிறது, இன்னும் நஷ்ட ஈடு வரவில்லையா, சில ஆண்டுகளுக்கு முன்னரே இறுதி தீர்ப்பு வந்ததே! ஆனாலும் அந்த இழப்பீடு வெகு குறைவே! நல்லப்பதிவு!
LikeLike
வவ்வால்: மறுபடியும் அவர்கள் இந்தியாவில் தொழில் ஆரம்பிக்கப்பார்க்கிறார்கள், இந்த முறை நாம் உஷாராக இருக்கவேண்டும்! நான் எழுதியிருப்பது, மே 1986இல் நடந்தது! வருகைக்கும் கமெண்டுக்கும் நன்றி!
LikeLike