காந்தம்-8

(இதற்கு முந்தைய பகுதிகளை sidemenuவில் பார்க்கவும்)

முன்னும் பின்னும்.
3

சென்னை. எழும்பூர் ரயில் நிலையம்.

“…திருநெல்வேலி செல்லும் நெல்லை எக்ஸ்ப்ரஸ் இன்னும் சிறிது நேரத்தில் முதலாவது ப்ளாட்பாரத்திலிருந்து புறப்படும்” இதே வரிகளை மீண்டும் அந்தப்பெண் ஹிந்தியில் சொல்ல ஆரம்பித்தார். அந்த இடமே மிகவும் நெருக்கடியாக இருந்தது. பயணிகளும் பயணிகளை வழியனுப்ப வந்தவர்களும் ப்ளாட்பாரத்தை ஆக்கரமிப்பு செய்து கொண்டிருந்தனர். கோவர்த்தன் அந்த சிறிய புத்தகக்கடையில் நுழைந்து அங்கிருந்த சொற்ப புத்தகங்களை புரட்டிக்கொண்டிருந்தார். நக்கீரன், ரிப்போர்ட்டர், ஆனந்த விகடன், துக்ளக், குமுதம், ஜூவி, அவுட்லுக், ·ப்ரண்ட் லைன், த வீக், பிஸினஸ் வேர்ல்ட் என்று சிக்கின அனைத்தையும் எடுத்துக்கொண்டார். கவுண்டரில் வந்து பில் கட்டியபொழுது கவுண்டரில் இருந்த அந்த பையன் இவரை அடையாளம் கண்டுகொண்டான். “கோ. சார்” என்றான். கோவர்த்தன் சிரித்து தலையாட்டிவிட்டு “நம்ப பத்திரிக்கை வந்திருக்குமே” என்றார். “ஆமா சார் இப்போ தான் வந்தது. இன்னும் பண்டில் பிரிக்கல. வேணுமா சார்?” “ம்ம் ஒன்னு கொடு” அந்த பையன் கீழே குனிந்து இன்னும் பிரிக்கப்படாத பண்டலைப் பிரித்து “நான்காவது தூண்” என்ற கவர்ச்சிகரமான பத்திரிக்கையை எடுத்து நீட்டினான். கோவர்த்தன் அதை வாங்கிக்கொண்டு அதற்கும் சேர்த்து பில் கட்டினார். கோவர்த்தன் அந்த “நான்காவது தூண்” பத்திரிக்கையை உற்றுப்பார்த்தார். “அணி மாறும் கட்சிகள். ஜெயிக்கப்போவது யார்?” – அரசியல் வித்தகர் கோ வின் பிரத்தியேக கட்டுரை என்ற தலைப்பு கனத்த செந்நிரத்தில் பிரிண்ட் செய்யப்பட்டிருந்தது. கோ தனக்குள் சிரித்துக்கொண்டார். கல்லாவிலிருந்த அந்த பையன் கேட்டான் “சார் இது உங்க பத்திரிக்கை. நீங்களே வாங்கறீங்களே சார்?”. “என் பத்திரிக்கையை நானே வாங்கலீனா வேற யார் வாங்குவா?” என்று தனது பானியில் சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டு “அதில்லப்பா, எப்பொழுதும் கொண்டுவருவேன். இன்னிக்கு மறந்துட்டேன். நெல்லைய பிடிக்கனும் வரட்டா” என்று சொல்லிவிட்டு கீழிறங்கி தனது கோச்சுக்கு சென்றார்.A3.

2 டயர் ஏசி கோச்சில் அவ்வளவாக கூட்டம் இல்லை. இரண்டு மூன்று பேர் மட்டுமே இருந்தனர். இவருக்கு எதிரே உட்கார்ந்திருந்தவர் வந்தவுடன் இவரைக் கண்டுகொண்டு சிரித்தார். கோ தனது பெட்டியிலிருந்து ஒரு ப்ளாஸ்டிக் தலையணையை எடுத்து காற்று ஊதி பெரிதாக்கினார். பிறகு அதை தனது முதுகுக்கு கொடுத்து நன்றாக சாய்ந்து உட்கார்ந்து கொண்டார். வாங்கின புத்தகங்களை ஒவ்வொன்றாக வேகமாக திருப்ப ஆரம்பித்தார். இன்னும் பரிட்சைக்கு இரண்டு நிமிடங்களே இருக்கிறது என்கிற பொழுது ஒரு மாணவன் எப்படி திருப்புவானோ அப்படி திருப்பினார் அவர். ஒரு கால் மணி நேரத்தில் அத்தனை பத்திரிக்கைகளையும் ஒரு சுற்று படித்திருந்தார். தனது மிகப்பெரிய கண்ணாடியைக் கழட்டி வைத்துவிட்டு, மௌனமாக சிறிது நேரம் உட்கார்ந்திருந்தார். பிறகு தனது பேக்கைத் திறந்து அதிலிருந்து பார்சல் ஒன்றை எடுத்து பிரித்தார். இட்லியின் வாடை மூக்கைத் துளைக்க, எதிரே உட்கார்ந்திருந்தவரைப் பார்த்தார். அவர் ஏதோ புத்தகத்தில் மூழ்கியிருந்தார்.

இட்லியின் வாசனை அவரையும் சென்றடைந்திருக்க வேண்டும். அவர் நிமிர்ந்து பார்த்தார். ஐம்பது வயது மதிக்கத்தக்கவராக இருந்தார். தலை நிறைய முடி. சுருள் சுருளாக. பெரிய கண்ணாடி. இறங்கு மீசை. முள் முள்ளாக மூன்று நாள் தாடி. கூர்மையான மூக்கு. ஒள்ளியான ஆனால் திடகாத்திரமான தேகம். வெள்ளை சட்டையின் மேல் இரண்டு பட்டன்களை கழட்டிவிட்டிருந்ததால், கழுத்தில் இருந்த புலிநகம் அழகாக தெரிந்தது. கோ-வைப் பார்த்து புன்னகைத்தார்.

“இட்லி சாப்படறீங்களா?” “இல்ல Mr.கோ. நான் வீட்டிலேயே சாப்பிட்டேன். நீங்க சாப்பிடுங்க” “இதுவும் வீட்ல பண்ணதுதான். என் பெண்டாட்டி எப்பவுமே அதிகமாத்தான் வெச்சுவிடுவா. உங்களுக்கும் இருக்கு. ரெண்டு இட்லி சாப்பிடுங்களேன்” “பரவாயில்ல கோ சார். எனக்கு பசி இல்ல. நான் பேசிட்டிருக்கேன். நீங்க சாப்பிடுங்க. பைதவே, என் பெயர் சிவா.” சிவா தான் படித்துக்கொண்டிருந்த புத்தகத்தை மூடி பக்கத்தில் வைத்தார். கோ தன் தலையை திருப்பி சாய்வாக வைத்துக்கொண்டு அந்த புத்தகத்தின் பெயரைப் படிக்க முயற்சித்தார் “இன்டர் லிங்கிங் ஆப் ரிவர்ஸ்.”.சற்று வியப்பாக சிவாவைப் பார்த்தார். சிவா புத்தகத்தை எடுத்து கோ-விடம் கொடுத்தார். “இப்போ தான் படிக்க ஆரம்பித்திருக்கிறேன்” என்றார்.

கடைசி இட்லியை சாப்பிட்டு முடிக்கும் போது “சோ, நீங்க இந்திய ஆறுகளையெல்லாம் ஒன்றாக சேர்க்க முடியும்னு நினைக்கிறீங்க?” “முடியும். முடியாதென்பது எதுவும் இல்லை. ஆனால் உங்க அளவுக்கு இதில் எனக்கு விசயம் தெரியாது. just reading. thats it”

***

ரயில் சீரான வேகத்தோடு சென்று கொண்டிருந்தது. ரயிலின் தாலாட்டலில் அனைவரும் தூங்கிப்போயிருந்தனர். கோவர்த்தனுக்கு அடிவயிறு முட்டிக்கொண்டு வந்தது. ரயிலின் குலுங்களில் மேலும் அது அதிகமானது. சரி எழுந்துவிடுவோம் என்ற முடிவுக்கு வந்தவராய் தனது கண்ணாடியைத் தேடி எடுத்து அணிந்து கொண்டார். எழுந்து உட்கார்ந்தார். எதிரே, சிவா ஒரு சின்ன டேபிள் லேம்பின் துணையுடன் ஏதோ ஒரு புத்தகத்தில் மூழ்கியிருந்தார். கோ எழுந்த சத்தம் கேட்டு திரும்பிப்பார்த்து சிரித்தார். கோ வெறுமனே சிரித்துவிட்டு எழுந்து சென்றார்.

***

“என்ன சிவா சார், பெரிய படிப்பாளியா இருப்பீங்க போல இருக்கு? இப்போ என்ன புத்தகம்? அதே interliking of rivers தானா?” என்று கேட்டக்கொண்டே மீண்டும் தன் படுக்கைக்கு வந்தார் கோ. சிவா தன் கையில் வைத்திருந்த அழகான போர்ஸீலியன் கோப்பையிலிருந்து காபியை உறிஞ்சிக்கொண்டே, “ம்ம்..very intersting” என்றார். “என்ன சொல்றாங்க அந்த புத்தகத்தில?” “ம்ம் இன்னவரைக்கும் ஒன்னும் பெரிசா இல்ல. ஆனா ஒரு லட்சத்து அறுபதினாயிரம் கோடி ரூபாய் செலவாகும்ங்கறது மட்டும் புரியுது..காபி சாப்படறீங்களா?” “இல்ல. நீங்க சாப்பிடுங்க. பரவாயில்ல” “நான் travel பண்ணும் போது எப்பவுமே flaskல காபி எடுத்துட்டு போவேன். நைட்ல இப்பவெல்லாம் எனக்கு தூக்கம் வற்ரதேயில்ல. இன்னும் காபி நிறைய இருக்கு. உங்களுக்கு வேணும்னா சொல்லுங்க. dont be shy” “குளிருக்கு சூடா காபி குடிச்சா நல்லா தான் இருக்கும். ம்ம்ம்..கொடுங்க”

flaskஐ திறந்து அதன் மூடியில் கொஞ்சம் காபியை ஊற்றி கோவிடம் கொடுத்தார் சிவா. “நான் எப்போதுமே ப்ளாக் காபி தான். நீங்களும் டயாபடீஸ் பேஷண்ட் தான். உங்களுக்கும் தேவைப்படாதுன்னு நினைக்கிறேன்” “வாவ். நான் டயாபடீஸ் பேஷண்ட்ங்கறதுகூட உங்களுக்கு தெரிஞ்சிருக்கு..ம்ம்” “என்ன சார் இப்படி கேட்டுட்டிங்க? எவ்வளவு பெரிய எழுத்தாளர் நீங்க? எவ்வளவு அரசியல் ஞானம். எவ்வளவு ராஜதந்திரம். கிட்டத்தட்ட ஒரு கிங்மேக்கர் நீங்க. உங்களப்பத்தி தெரியாம இருக்குமா?” “என்ன சிவா என்ன ரொம்ப புகழறீங்க” கோ காபியை முகர்ந்து விட்டு, முதல் மடக்கை ரசித்து விழுங்கினார்.

ரயில் வேறொரு ரயிலுக்காக காத்திருந்தது.

***

பணம் ஒரு பிரச்சனை தான் என்றாலும் நதிகளை இணைக்கறதில வேறு சில ஜியோகரபிகள் பிரச்சனைகள் இருக்குங்கறத நிறைய பேர் மறந்திடறாங்க” காபியைக் குடித்துமுடித்து flaskக்கின் மூடியை சிவாவிடம் கொடுத்தார் கோவர்த்தன். சிவா மூடியை வாங்கி மெதுவாக flaskஐ மூடினார். கண்ணாடியைக் கழற்றினார்.

“உன்ன மாதிரி ஆட்கள் இருக்கறவரைக்கும் எதுவுமே பிரச்சனை தான் கோ” கோ சட்டென நிமிர்ந்து பார்த்தார். “வாட்?” “50 கோடி நீ வாழ்க்கையில பாக்காத பணம் இல்ல?” “என்ன சொல்ற?” “என்ன சொல்றனா? ஹ¤ம்..50 கோடி கோவர்த்தன். 50 கோடி.” “யார் நீ?” “செல்வி ஞாபகம் இருக்கா?” “ய்ய்ய்யாய்யார் ந்நீ” “ரொம்ப சின்ன பொண்ணுல்ல அவ? நல்லாயிருந்துச்சா அன்னிக்கு? அங்கிள் அங்கிள்ன்னு உன்மேல எவ்ளோ பாசமா இருந்தா அவ?” “நீ நீ” கோ கையை தூக்க முயற்சித்தார் முடியவில்லை. “என்ன பாக்குற? உன்னால இனிமே கையையோ காலையோ அசைக்க முடியாது. எங்க try பண்ணு” “த் த் த் த் ..ன்..ன்..ன்” கோவின் கண்கள் பிதுங்கின. “ம்ம்..இப்போ எப்படி இருக்கு? Are you alright?” “த் த் த் த் த் த்” சிவா தனது சுருள் முடியை கழற்றி கீழே வைத்தார். முன் தலை வழுக்கை, ஜன்னலில் வழிந்து கொண்டிருந்த வெளிச்சத்தில் மின்னியது. “சூ.. சூ.. சூ..” “பரவாயில்லையே..இன்னும் என்ன நீ மறக்கல. yes. the same old stupid surya” “நீ.. நீ..” “உன்னால பேச முடியாது கண்ணா. என்கிட்ட காபி வாங்கி குடிக்கறதுக்கு முன்ன நீ யோசிச்சிருக்கனும். நல்ல ஜாலியா என்ஜாய் பண்ணு. உன் கூட்டாளிகள உனக்கு துணைக்கு அனுப்பி வெக்கறேன். Goodbye.”

கோ-வுக்கு ரத்தகுழாய்கள் வெடித்துவிடுவது போல இருந்தது. வாயில் சூடாக செக்கச்சிவப்பாய் ஒரு திரவம் வெளியேறியது. கண்கள் செருகின. “டாடி என்ன காப்பாதுங்க டாடி. ப்ளீஸ் அங்கிள் வேண்டாம் அங்கிள். வேண்டாம் அங்கிள். எனக்கு பயமா இருக்கு அங்கிள்.டாடி.டாடி.டாடி..” என்று ஒரு சிறுமி அழும் சத்தம் மட்டும் அவர் காதில் ரீங்காராமய் ஒலித்துக்கொண்டிருந்தது. கண்கள் நிலைகுத்தின.

ரயில் சிவப்புவிளக்கைப் பார்த்ததும் நின்றது.

***

சிவா கீழிறங்கினார். கையில் வைத்திருந்த மிகச்சிரிய டார்ச் லைட்டை உபயோகித்து தண்டவாளத்தை கடந்தார். கடும் இருட்டு. சிறிது தூரம் நடந்து சென்று முட் புதர்களைக் கடந்தார். நடந்து கொண்டேயிருந்தார். மேலே நிமிர்ந்து நிலாவைப் பார்த்தார். சிரித்துக்கொண்டார். செல்போனை எடுத்து மெஸேஜ் கொடுத்தார். காத்திருந்தார்.

சிறிது நேரத்தில் மோட்டார் பைக் ஒன்று வந்து நின்றது. மோட்டார் பைக்கில் வந்தவன் வேகவேகமாக ஹெல்மெட்டைக் கழற்றிவிட்டு, கீழிறங்கி, சிவாவின் கைகளை குலுக்கி கட்டியணைத்துக்கொண்டான், அவன் நா தழுதழுத்தது, “வணக்கம் தலைவா. என் பெயர் ஜீவா. போகலாம்” என்றான்.

அந்த அமைதியான இரவின் ரம்மியத்தை குத்தி கிழித்துக்கொண்டு சென்றது அந்த மோட்டார் பைக்.

***

One thought on “காந்தம்-8

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s