இன்சிடென்ட்ஸ்-8

(இதற்கு முந்தைய பகுதிகளை sidemenuவில் பார்க்கவும்! யாரும் பாக்கமாட்டிங்கன்னு எனக்கு தெரியும், ஆனா சொல்றது என் கடமை இல்லியா?)

இந்தமுறை ஊருக்கு சென்றிருந்த பொழுது, ஒரு ஹாட்டான மதிய நேரத்தில், நல்லா மூக்குபிடிக்க வெறால் மீன் குழம்பை ஒரு கட்டுகட்டிவிட்டு, வெத்தலை பாக்கு போட்டுகொண்டே அனந்தசயனத்தில், மேலே “எனக்கு கொஞ்சம் ரெஸ்ட் கொடுங்களேன்டா, ப்ளீஸ்!” என்று கதறி அழுது கொண்டிருந்த ·பேனிலிருந்து கீழே மிக மெதுவாய், மிக மிக மெதுவாய், ஸ்டுபிட் ஹாட் ஏர் என்னை நோக்கி இறங்கிக்கொண்டிருந்த பொழுது, என் மருமகள் (அக்காவின் மகள்) ஒரு சூட்கேஸை தூக்கமுடியாமல் தூக்கிகொண்டு வந்து என் முன்னால் வைத்தாள், கிட்டத்தட்ட தடால் என்று கீழே போட்டாள். போட்டுவிட்டு, ஆச்சி முழிச்சுக்கப்போறாங்க,ஐயோ என்று வேகவேகமாக என் அருகில் உட்கார்ந்துகொண்டாள். ஆச்சி முழித்தார் என்றால், தூங்கச்சொல்லுவாரே என்ற பயம் அவளூக்கு. நான் சிறுவனாய் இருந்த பொழுது எனக்கிருந்த அதே பயம். மதியம் விளையாடாமல் தூங்க வேண்டுமே என்கிற பயம். (இப்போ தூக்கம் வராமல் இரவு ரெண்டு மணிக்கு கூட கொட்டக்கொட்ட முழித்துக்கொண்டிருப்பது வேறு விசயம்!! சித்தி என்ற படத்தில் தூக்கத்தைப் பற்றிய பாடல் ஒன்று உண்டு! அந்த பாடல் நிதர்சன உண்மை. அது ஏதோ பெண்ணைக் குறித்து பாடப்பட்டது போல தோன்றினாலும், ஆணுக்கும் கச்சிதமாக பொருந்தும். ஆணுக்கும் பெண்ணுக்கும் அதே அளவு கவலைகளும் மனச்சுமைகளும் உண்டு. வகைகள் மட்டுமே வேறு!).

கீழே விழுந்த சூட்கேஸில் இருந்து தூசி சிறிய புகையாக எழும்பிக்கொண்டிருந்தது. பக்கத்தில், தோட்டத்தைப் பார்த்திருந்த ஜன்னலில் இருந்து வழிந்துகொண்டிருந்த பளீர் வெயிலில், தூசி பெரும் புகையாக மாறிவிட்டது போல இருந்தது. பார்த்திருக்கிறீர்களா? நான் சிறுவனாக இருந்த பொழுது, ஜன்னல் பக்கத்தில் மட்டுமே தூசிகள் இருக்கின்றன என்று நினைத்து, அந்த ஒளிக்கீற்றில் மின்னும் தூசிகளை கைகளால் அந்தப்பக்கம் தள்ளிவிட முயற்சித்திருக்கிறேன்.ம்ம்ஹ¥ம். நான் தள்ளிவிட தள்ளிவிட, எங்கிருந்தோ தூசி வந்து அதே இடத்தில் ஒட்டிக்கொள்ளும், நாம் எவ்வளவு துரத்தினாலும் மீண்டும் அதேவேகத்தில் நம்மில் வந்து ஒட்டிக்கொள்ளும் ஒரு சில நினைவுகளைப் போல.

அந்த சூட்கேஸில்தான் போட்டோக்கள் இருக்கின்றன. சூட்கேஸ் நிறைய போட்டோக்கள் இருக்கின்றன. விருந்தினர்கள் யாராவது தெரியாத்தனமாய் போட்டோக்கள் என்று கேட்டுவிட்டால் அவ்வளவுதான் தொலைந்தார்கள். போதுமடா சாமி என்று சொல்லும்வரை நாங்கள் எடுத்துகொடுத்து கொண்டேயிருப்போம். சன் டீவியின் சீரியல்கள் போல இது முடியவே முடியாதா என்று சொல்லும் அளவுக்கு தொடர்ந்து கொடுத்துக்கொண்டேயிருப்போம். வந்திருந்த உறவினர்கள் வீட்டுக்கு சென்றபின், வராத அவர்கள் வீட்டாரிடம், “நல்லாத்தான் இருக்காய்ங்க, ஆனா நீ போனீனா கண்டிப்பா போட்டோ பத்தி மட்டும் பேச்சு எடுத்திடாத. போட்டோ கேட்ட தொலஞ்சடிமாப்ள” என்று சொல்லுவார்களோ என்று சில சமயம் நான் சிரியஸாக யோசித்திருக்கிறேன். நமக்கு வேண்டுமென்றால் போட்டோக்கள் -ஒரு கட்டத்தில்- சலித்து விடும், ஆனால் இந்த வாண்டுகளுக்கு அதில் என்னதான் இருக்கிறதோ தெரியவில்லை. எத்தனை முறைதான் அதே போட்டோக்களை திரும்பத்திரும்ப பார்த்துக்கொண்டிருக்குங்களோ தெரியவில்லை. “மாமா இங்க இருக்காங்க பாத்தியா? அம்மா குட்டிப்பிள்ளையா இருக்கும் போது எடுத்தது தெரியுமா? தாத்தா மீட்டிங்கில பேசறாங்க பார்” என்று பார்த்த போட்டோக்களையே மீண்டும் பார்த்து, அதே அளவு fresh ஆச்சரியத்துடன் கேட்டுக்கொண்டிருங்குங்கள். இன்றும் அதே சூட்கேஸை தூக்கிகொண்டு என் அருகில் கூட்டமாக உட்கார்ந்து கொண்டதுகள். எங்கள் வீட்டில் வாண்டுகள் அதிகம்.

எல்லா குட்டீஸ்களையும் ஒன்றாக அமைதியாக உட்காரவைக்க வேண்டும் என்றால் இரண்டு வழிகள் இருக்கின்றன, ஒன்று: கில்லி அல்லது சந்திரமுகி படத்தை டிவீடியில் போட்டுவிடுவது. இரண்டு: போட்டோ பார்க்கலாம் வாங்க என்று சொல்வது. இதில் ·பர்ஸ்ட் ஐடியா ஈசி. டிவீடிக்களைக் கிழிக்க முடியாது.

உட்காரவைக்கவில்லை என்றால் வரிசையாக இங்கிட்டும் அங்கிட்டும் ஓடிக்கொண்டே இருக்குங்க. வீட்டுக்கு முன்னாடியும், பிறகு பின்னாடியும், பிறகு மீண்டும் முன்னாடியும், பிறகு மீண்டும் பின்னாடியும் ஓடி ஓடி, இரவு மொட்டை மாடியில் படுக்கும் வரைக்கும் அப்படி என்னதான் விளையாடுங்களோ தெரியவில்லை! ஒரு முறை நானும் மற்ற எல்லோரும் வீட்டின் வாசல் படிகள் உட்கார்ந்து ஒரு சாயங்காலம் கதை அடித்துக்கொண்டிருந்தோம், குட்டீஸ்கள் வரிசையாக மேலும் கீழும் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்துச்சுங்க. என்னுடைய வக்கீல் அண்ணன் “எப்பவுமே லெவல் க்ராஸிங்கல உட்கார்ந்திருக்கறமாதிரியே இருக்குடா! ஒரு ட்ரெயின் க்ராஸ் பண்றமாதிரியே இருக்குல்ல!” என்று ஒரு கமெண்ட் அடித்து எல்லோரையும் சிரிக்க வைத்தார். உண்மைதான். என்ஜினை மட்டும் ஆப் செய்தால் போதும், ட்ரெயின் நின்றுவிடும் என்றார். இன்ஜின், அக்காவின் இரண்டாவது மகள்.

ஒவ்வொரு போட்டோ ஆல்பமாக பார்த்துகொண்டுவந்தோம். அக்காபெண்களின் பள்ளிக்கூட நண்பர்கள். அவர்கள் போட்ட சண்டைகள். பள்ளிக்கூடத்து நிகழ்ச்சிகள். ஆடிய டான்ஸ். பேசிய பேச்சுப்போட்டி என்று ஒவ்வொன்றாக கேட்டுக்கொண்டுவந்தேன். என்னுடைய பள்ளிக்கூட போட்டோ ஆல்பம் வந்தது.

***

ஒருமுறை, என்னோட பள்ளிக்கூட ஆல்பத்தை பள்ளிக்கு எடுத்துச்சென்றிருந்தேன். ஆலபம் என்றால் அதில் என்னுடைய எல்லா வயது போட்டோக்களும் இருக்கும், எல் கே ஜி யிலிருந்து பணிரெண்டாம் வகுப்பு வரை. நான் மூன்றாவது படித்துக்கொண்டிருந்த பொழுது – என்று நினைக்கிறேன் – குன்றக்குடி அடிகளாரிடம், திருமங்கலம் (மதுரை) இலக்கிய பேரவையில், மாலை வாங்கியதும் ஒரு போட்டோவில் இருக்கிறது. மாலை போட்டுக்கொண்டு, ஒரு சேரில், மாலையையே குனிந்து பார்த்துக்கொண்டு, ஒரு டார்க் ப்ளூ டீசர்ட்-டவுசரில், அமைதியாக என் தனி உலகத்தில், கற்பனையில், ஆழ்ந்திருப்பேன். அன்று என்ன யோசித்துக் கொண்டிருந்திருப்பேன்?

இலக்கிய பேரவையில் மாலை வாங்கிருக்கியா? அதுவும் மூன்றாவது படிக்கும் போதா? என்று என் இலக்கிய பெருமைகளை எண்ணி நீங்கள் வியந்து, வாவ் முத்து, யூ ஆர் ராக்கிங்! என்று சொல்வதற்கு முன்னர், உண்மையைச் சொல்லிவிடுகிறேன். அன்று நான் கூட்டத்தில் எதுவுமே செய்யவில்லை. அப்பாவுடன் சும்மா சென்றிருந்தேன். அப்பா இலக்கிய பேச்சாளர். புலவர். பட்டிமன்றப்பேச்சாளர். கவிஞர். (இரண்டு கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார்). என்னை மேடையில் பார்த்த குன்றக்குடி அடிகளார், எல்லோருக்கும் மாலை போடுவதையே வெறித்து வெறித்து பார்க்கிறானே -கண்டிப்பாக வெறித்துப் பார்த்திருப்பேன் – என்று பாவப்பட்டு அவருக்கு போட்ட மாலையைக் கழட்டி எனக்கு அணிவித்தார்.

இப்படியாக குன்றக்குடி அடிகளாரிடம் மாலை வாங்கிய பெருமை எனக்கிருக்கிறது. சும்மானாச்சுகாவது வாங்கிருக்கம்ல! பிற்பாடு பத்தாவது படிக்கும் பொழுது அவர் கையால், கேடையம் வாங்கியிருக்க வேண்டியது மிஸ் ஆகிப்போனது வேறு விசயம். இன்னோரு “இன்சிடென்டில்” அதை சொல்கிறேன்.

சரி மேட்டருக்கு வருகிறேன். என் போட்டோக்களை ஆர்வமாக என் பள்ளி ·ப்ரண்ட்ஸ் பார்த்தார்கள். பார்த்துவிட்டு, ஒரு
ப்ரண்ட் சொன்னாள்: “முத்து, நீ குழந்தையாக இருக்கறப்போ அழகாத்தான் இருந்திருக்க போல?

***

பள்ளிக்கூட நாட்களில் நான் நடித்த நாடகங்களில் – அல்லது பொதுவாக stageperformance- எனக்கு மிகவும் பிடித்தது, அல்லது இன்று வரை நான் மறக்காமல் இருப்பது: வேடன்-புறா கதையை, நான் மோனோஆக்ட்(MonoAct) செய்தது. அது வெறும் நாடகம் இல்லை. அது ஒரு பாட்டு-நாடகம். (பாட்டுமன்றம் போல!). என்னுடைய அப்பா அதை எழுதித்தந்திருந்தார். அந்த நாடகத்தில் வசனங்களே இல்லை. வெறும் பாடல்கள் தான். பாடல்கள் என்றால்? சினிமா மெட்டுக்களில் அமைந்த வசன-பாடல்கள். அனைத்துப் பாடல்களையும் சினிமா மெட்டுக்களில் எழுதியிருந்தார் என் அப்பா. அது எங்கள் பள்ளியில் மிகப்பெரிய ஹிட்.

அந்தப்பாடல்களில் இரண்டு பாடல்களை நான் இன்று வரை முனுமுனுப்பதுண்டு. வேடன்-புறா கதை உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். (அந்த கதையையும் சொல்லி -எழுதி- மேலும் மொக்க போட நான் விரும்பவில்லை!)

சீன்: வேடன் வலையை விரித்துவிட்டான். அதில் சில தாணியங்களையும் வைத்துவிட்டான் (as bait). புறாக்கூட்டங்கள் தாணியங்களைப் பார்த்ததும் அருகில் உட்கார்ந்துவிட்டன. ஆனால் தலைமைப்புறா “இவ்வளவு தாணியங்களை ஒரு சேர நான் என் வாழ்க்கையில் பார்த்ததில்லை, இதில் ஏதோ சூது இருக்கிறது” என்கிறது. ஆனால் பெரிசுக சொல்றதை என்னிக்கு வெடலப்புள்ளைக கேட்டிருக்கு?

பெரிச எதிர்த்து ஒரு வெடலை பாடுது இப்படி:

அட குவிஞ்சிருக்கு இங்க நெல்லு,
உனக்கு வேண்டானா தள்ளி நில்லு!

இனி உங்க பேச்சு
கேக்க மாட்டோம் சூச்சு

வந்தா வாங்க
வராட்டி போங்க
நாங்க போறமுங்க.

வந்தா வாங்க
வராட்டி போங்க
நாங்க போறமுங்க!”

இதற்கு தளபதியில் வரும் “ராக்கம்மா கையத்தட்டு” பாடலின் மெட்டை உபயோகிக்க வேண்டும்.

“ஜாங்கு ஜக்கு ஜஜக்கு ஜக்கு
ஜாங்கு ஜாங்கு ஜக்கு ஜா”

” வந்தா வாங்க
வராட்டி போங்க
நாங்க போறமுங்க.”

அப்புறம் வேறு ஒரு குருவி பாடும் பாட்டு:

பசிக்குது வயிறு
ருசிக்குது பயறு

(இப்பவும், எனக்கு பசிக்கும்போது இந்த வரிகள் தான் ஞாபகம் வருகின்றன! வாய் ஆட்டோமேட்டிக்கா முனுமுனுக்குது!)

என்னபாட்டு தெரியுதா? “அடிக்குது குளிரு”

இந்த மோனோ ஆக்ட்டைக் கேள்விப்பட்ட +2 மாணவர்கள் (மற்றும் மாணவியர்கள்!) – அவர்கள் அன்று போட்டியைப் பார்க்கவில்லை, ஏதோ பரிட்சையோ என்னவோ- ரொம்பவும் ஆர்வமாகி, என்னை அழைத்து தனியாக -பிர்த்தியேக ஷோ- அவர்களுக்காக மீண்டும் மோனோஆக்ட் செய்யச்சொன்னர்.

After the performance, தேவியும், தீபாவும் என் கண்ணத்தை கிள்ளி so sweet, well done! என்று சொன்னது, இன்னும் எனக்கு பசுமையாக ஞாபகம் இருக்கிறது. (இருக்கனும்ல! நான் அப்பொழுது ஒன்பதாவது படித்துக்கொண்டிருந்தேன் என்பதை சொல்ல மறந்துவிட்டேன்!)

இன்னொரு முறை – வீட்டுக்கு போகும் போது கண்டிப்பாக தேடிப்பிடித்து – முழு பாடல்களையும் பதிவு செய்கிறேன்.

***

(தொடரும்)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s