இன்சிடென்ட்ஸ்-9

(இதற்கு முந்தைய பகுதிகளை சைடு மெனுவில் பார்க்கவும்!)

(இன்சிடென்ட்ஸ்-6 இன் தொடர்ச்சி. )

ஸ்ஸில் ஏறக்குறைய மரண ஓலங்கள் தான். அந்த சத்தத்திலேயே மிகவும் சத்தமாக இருந்தது எங்களது ஹிஸ்டரி மேடத்தின் குரல் தான். ஜீஸஸ் ஜீஸஸ் என்கிற அவரது பிரார்த்தனை பஸ்ஸின் கம்பிகளில் பட்டு எதிரொலித்து மூடியிருந்த கண்ணாடி ஜன்னலில் மீதமிருந்த கொஞ்சம் இடைவெளியில் விழுந்தடித்துக்கொண்டு ஓடியது. முதலில் எங்களுக்கு – பின்னால் கடைசி சீட்டில் அமர்ந்திருந்த எங்களுக்கு – ஒன்றுமே புரியவில்லை. (எப்பதான்டா உனக்கு முதல்லயே புரிஞ்சிருக்கு, சொல்லு?)

ஏதோ மிகப்பெரிய கல்லில் தான் பஸ் மோதிவிட்டது என்று நாங்கள் நினைத்தோம். அப்புறம் பின் கண்ணாடியின் வழியாகப் பார்த்தபோது தான், எங்க பஸ் மோதியதால் உடைபட்டு பாதி மட்டுமே நின்று கொண்டிருந்த அந்த அரசு டவுன் பஸ் தெரிந்தது. “ஐயோ ஆக்ஸிடென்ட்டா” என்று நாங்கள் ஒரு சேர கத்துவதற்குள், பஸ்ஸிலிருந்து கூக்குரல்கள் கேட்க ஆரம்பித்துவிட்டன. ஒரு அமில வாசனை, தகரம் எரியும் வாசனை, மெசின்களின் வாசனை பஸ் முழுவதும் நிறைந்திருந்தது.

பஸ் நிலை தடுமாறி ரோட்டை விட்டு இறங்கப் பார்த்தது. ரோட்டுக்கு அந்த பக்கமும் இந்த பக்கமும் கரடு முரடான குழிகள். குழிகள் தோறும் முட்புதர்கள். குழிகள் மிகுந்த ஆழமாக இருந்ததைப் போன்று தோன்றியது. எங்களது டிரைவர், பஸ்ஸை கவிழ்த்துவிடாமல், எதிரே இருந்த அந்த பெரிய மரத்தில் மோதிவிடாமல், மிகுந்த சாமர்த்தியத்தோடு ஒருவழியாக நிறுத்திவிட்டார். ஆனால் பஸ் ஒரு பக்கம் சாய்ந்து கொண்டு நிற்பது மட்டும் நன்றாகத் தெரிந்தது.(கண்ணாடிய ஒழுங்கா போடு!) இல்லீன்னா என் ப்ரண்ட் கணேஷ் ஏன் கோணலா நிக்கனும்? பஸ் நின்று விட்ட பிறகு பெட்ரோல் லீக் ஆகி பஸ் வெடித்துவிடுமோ என்கிற பயம் என்னை சூழ்ந்து கொண்டது.(நீ படம் பாக்கறத கொஞ்சம் குறைக்கிறது பெட்டர்!) எனக்கு வியர்க்க ஆரம்பித்தது. (பயம் வந்துவிட்டது என்று சொன்னவுடன், வியர்க்க ஆரம்பித்து விட்டது என்கிற வாக்கியம் தானகவே வந்து தொற்றிக்கொள்கிறது. என்ன செய்ய!) பஸ் முழுவதும் கேர்ல்ஸ் வாய்ஸ் பல தெய்வங்களையும் அழைத்துக் கொண்டிருந்தது. (பாய்ஸ் எல்லாம் என்னப்பா செஞ்சிக்கிட்டு இருந்தாய்ங்க? ஆமா ஆமா நீ எங்க அவிங்களப் பாத்திருக்கபோற?!) என் ப்ரண்ட் யாரை அழைத்துக்கொண்டிருக்கிறாள் என்று தேடினேன். (சொன்னனா?) எட்டி எட்டி பார்த்து, கடைசியில் அவளை ஸ்பாட் செய்த பொழுது, அவள் தன் சீட்டில் அமைதியாக உட்கார்ந்து, எங்கள் பக்கம் பார்த்துக்கொண்டிருந்தாள். (எங்கள் பக்கமா? என் பக்கம்னு தானா சொல்ல வந்த? ஒழுங்கா சொல்லிடு!) (பிற்பாடு என்னைத் தானே தேடிக்கொண்டிருந்தாய் என்று கேட்ட பொழுது திட்டவட்டமாக மறுத்து விட்டாள்)

கொஞ்சம் கூக்குரல்கள் எல்லாம் அடங்கிய பிறகு, வெளியேறுவது எப்படி என்கிற சிந்தனை வந்தது.(ஆமா பெரிய சிந்தனை சிற்பி இவரு!) ஸ்டூடண்ட்ஸ் யாருக்கும் அபாயமான பெரிய அடி ஒன்றும் இல்லை. முன்னால் உட்கார்ந்திருந்த +1 மாணவர்கள் சிலரின் மண்டை மட்டுமே உடைந்திருந்தது.(சந்தோஷமா இருந்திருப்பியே!) அந்த ரணகளத்தில் கூட என் ப்ரண்ட் செல்வக்குமார் கமெண்ட் அடித்தான் : இப்ப proove பண்ணிடலாம்டா அவிங்க மண்டையில களிமண் தான் இருக்குன்னு. டிரைவருக்கு பலத்த அடி. அவர் ஸ்டியரிங்கில் மாட்டிக்கொண்டார். (பிறகு நாங்க பஸ்ஸை விட்டு இறங்கி, டிரைவரை ஆம்புலனஸ் வந்து தூக்கி சென்றவுடன் தான், ஸ்டியரிங் ஒரு டிசைனா நெளிஞ்சிருந்ததைப் பார்த்தோம்.) டிரைவர் உட்கார்ந்திருந்த பகுதி ஏறக்குறைய முழுவதும் சிதைந்திருந்தது. மிஸ்ட் போன்ற ஒரு புகை கியர் பாக்ஸிலிருந்து வெளியேறிக் கொண்டிருந்தது. கொஞ்ச நேரத்துக்கு முன்னர் வரை, நானும் சூரியாவும் உட்கார்ந்திருந்த அந்த கதவை, இப்பொழுது, தள்ளி திறக்க முயன்றோம். முடியவில்லை. கதவு மண்ணுக்கு அடியில் புதைந்திருக்கிறது. நிறைய பேர் கதவுக்கு அருகில் குழும, பஸ் மேலும் கவிழ்வது போன்ற பிரமை உண்டாகியது.(மன பிராந்தி!) என்ன செய்தாலும் கதவு திறக்கவில்லை. வெளியே எட்டிப்பார்த்தால், கருவேல முட் புதர் சரிவு.(எட்டிப்பாக்காத! ஏன் பாக்குற?) கதவில் ஏறி அந்தப்பக்கம் குதித்துவிடலாம் என்று நினைத்த போது, முட்கள் எங்களை கடுமையாக பயமுறுத்தின.

அதிகாலை என்பதால் அந்த இடத்தில் மக்கள் அதிகம் இல்லை. விபத்துக்கு காரணமான அந்த அரசுப் பேருந்திலும் அந்த அதிகாலையில் பெரிய மக்கள் கூட்டம் ஒன்றும் இருந்திருக்கவில்லை. அதனால் தான் உயிர் இழப்பு அதிகமாக இல்லை. ஆனால், கொஞ்ச தூரத்தில், தங்களது நிலங்களில் ஏதேதோ வேலைகள் செய்து கொண்டிருந்த சிலர், வித்தியாசமாக பார்க் செய்யப்பட்டிருக்கும் எங்கள் பஸ்ஸை நோக்கி, அதிவேகமாக ஓடி வர தொடங்கினர்.

எங்கள் பிரின்ஸியின் கண்ணாடி உடைந்திருந்தது. அந்த உடைந்த கண்ணாடியையும் போட்டுக்கொண்டு, என்ன செய்வதென்று தெரியாமல், இங்கு அங்கும் பேந்த பேந்த விழித்துக்கொண்டிருந்தார். எனக்கு பாவமாக இருந்தது. உடைந்த கன்ணாடியைப் போட்டுக்கொண்டு அவர் என்னதான் செய்வார்? நல்லவேளை, என் கண்ணாடி உடையவில்லை.(தப்பிச்சடி) நாங்கல்லாம் கருஞ்சிறுத்தைப்பு.

என் கண்ணாடி மட்டும் அன்று உடைந்து போயிருந்தால், நான் தைரியமாக கதவை தாண்டி, முட்புதர்களுக்குள் குதித்திருப்பேன். (கீழே என்ன கிடக்கிறது என்று தெரிந்தால் தானே பயம் வரும்!) சிலர் அந்தப்பக்கம் இருக்கும் ஜன்னல் கண்ணாடியின் வழி இறங்கிவிட முயற்சித்துக் கொண்டிருந்தனர். என் ப்ரண்ட் ஒருத்தன் ஜன்னல் கண்ணாடியின் வழியே தலையை விட்டு எப்படியாவது இறங்கிவிட வேண்டும் என்று முயற்சிசெய்து கொண்டிருந்தான். அது அவனுக்கே கொஞ்சம் ஓவர் தான். டிரைவரின் wind shieldஐயே உடைத்தால் கூட அவனுக்கு கொஞ்சம் டைட்டாகத்தான் இருக்கும், இதில இவரு ஜன்னல் கண்ணாடி வழியாக, அதுவும் push கண்ணாடி, பாதிதான் கேப் இருக்கும், இறங்கப்பார்த்தால், எங்களுக்கு சிரிப்பு வருமா வராதா? (திமிருடா)

அப்பொழுதுதான், மிகச்சத்தமாக ஹிஸ்டரி மேடத்தின் குரல் கேட்டது. ஹே பாய் கெட் டவுன் யூ இடியட் என்று கண்ணாடியின் வழியாக தலையை விட்டுக் கொண்டிருந்தவனைப் பார்த்து ஒரு சவுண்ட் கொடுத்தார்.ஹிஸ்டரி மேடத்தின் மண்டை உடைந்திருந்தது. அந்தப் பெரிய முகத்தை, கணிசமான அளவு, இரத்தம் மூடியிருந்தது. எனக்கு சட்டென்று, இவர் எப்படி வெளியே குதிக்கப் போகிறார் என்ற விபரீத எண்ணம் தோன்றியது. சான்சே இல்லை.

இதற்குள் என் நண்பர்கள் சிலர் பின் சீட்டு கண்ணாடிகளை உடைக்க முயன்றனர். நாங்கள் கதவைத் திறக்க முயன்றோம். மண்ணில் மாட்டிக்கொண்டிருந்த கதவு, நாங்கள் விட்ட ஒவ்வொரு உதைக்கும், பதில் சொல்லாது உம்மென்றிருந்தது, என் நண்பன் சூரியாவைப் போல. கதவும் எங்களைப் போல பயந்துகொண்டிருந்திருக்க வேண்டும்.

கொஞ்ச நேரத்திற்குள், அக்கம் பக்கம் ஆட்கள் கூடிவிட்டனர். அந்த அதி காலையில், ஆட்டுக்கும் மாட்டுக்கும் புல் அறுக்க சென்ற மக்கள், சத்தத்தைக்கேட்டு அடித்துப்பிடித்து ஓடி வந்து, கருவேல முட்களை முடிந்த அளவிற்கு அகற்றி, எங்களை இறக்கி விட்டனர். சிலருக்கு முட்கள் வெகுவாக குத்தத்தான் செய்தது.(முள்ளுன்னா குத்தத்தான் செய்யும், பின்ன கொஞ்சவா செய்யும்?) எங்கள் மேடம்களை கீழிறக்குவது தான் கொஞ்சம் கஷ்டமாக போய்விட்டது.

முதலில் இறங்கிய நாங்கள் பஸ்ஸின் அந்தப்பக்கம் போய், பெட்டிகளை ஜன்னல் வழியாக, உள்ளிருக்கும் நண்பர்கள் கொடுக்க, வாங்கி கீழே அடுக்கி வைத்தோம். கொஞ்ச நேரத்தில் அனைவரும் இறங்கிவிட, டிரைவர் மட்டும் இறங்கமுடியாமல் அப்படியே இருந்தார். பிறகு ஆம்புலனஸ் அழைக்கப்பட்டு, அவர்கள் வந்து டிரைவரை ஸ்ட்ரச்சரில் தூக்கிக் கொண்டு சென்றனர். டிரைவர் பலத்த காயங்களுடன் பிழைத்துவிட்டார் என்று பிற்பாடு அறிந்துகொண்டோம்.

காலையில் நடு ரோட்டில் நாங்கள் எங்கு போவது என்று தெரியாமல் நின்று கொண்டிருந்தோம். பசி வேறு. பிறகு எங்கள் பிரின்ஸியின் உறவினர் ஒருவரின் உதவியால், ஒரு அரசு பேருந்தை வாடகைக்கு அமர்த்தி நேரடியாக கண்ணியாகுமரி வந்தடைந்தோம். உறவினர், போலீஸ் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது. (நோ கமென்ட்ஸ்)

பாதி டூரில் வீட்டுக்கு திரும்பிச் சென்றால் பள்ளியின் பெயர் கெட்டுவிடும் என்கிற காரணத்தாலோ என்னவோ டூரை கேன்சல் செய்யவில்லை. (ஆமா பெரிய ஊட்டி கான்வென்ட்ல படிச்சாரு) எப்படி பிரின்ஸி, அந்த காட்டுக்குள் (அதாவது பெரிய நகரம் ஏன் சின்ன கிராமம் கூட, ஏதும் அருகில் கிடையாது) தனி ஒரு பெண்ணாக இருந்து நிலைமையை சமாளித்தார் என்பது இன்றளவும் எனக்கு ஆச்சரியம் தான். யார் யாரை எப்படி தொடர்பு கொண்டார்? அப்பொழுது நான் ஒன்பதாவது படித்துக்கொண்டிருந்தேன். 1994. (ம்ம்..பிடிஏ வெச்சு வயர்லெஸ் லான்ல பிலெகேட்சுக்கு மெயில் அனுப்பிச்சார்)

கண்ணியாகுமரி எங்கள் டூர் ப்ளானில் இருந்தது தான். ஆனால் நடந்த ஆக்ஸிடென்டால் அங்கு புக் செய்திருந்த ஹோட்டலுக்கு ஒரு நாள் முன்னரே சென்று விட்டோம். அந்த ஹோட்டல் ஹவுஸ்புல். பிறகு நான், சூரியா, தர்மர் அண்ணன் (எங்கள் ப்யூன்) ஒரு டீமாகவும், மணிகண்டன் மற்றும் வெகு சில +1 மாணவர்களும் மற்றொரு டீமாகவும் சென்று ஹோட்டல்களில் ரூம் தேடினோம். எந்த ஒரு ஹோட்டலிலும் அவ்வளவு ரூம்கள் காலியாக இருக்கவில்லை. பிறகு நாடார் மேன்சனில் ஒரு பெரிய ஹால் கிடைக்கவே, அதையே வாடகைக்கு எடுத்துக்கொண்டோம்.

எங்க ப்ளான் படி, அன்று குற்றாலத்தில் குளித்திருக்க வேண்டியது. ஆனால் நாடார் மேன்சனின் இத்துப்போன பக்கெட் தண்ணீரில் குளிக்க வேண்டியதாகிற்று. இப்படியாக எனது முதல் குற்றால டூர் சிதைந்து போனது. அன்று சிதைந்த என் குற்றால பயணம், இன்று வரை நிறைவேறவேயில்லை.

அதற்கப்புறம், கண்ணியாகுமரியில் சுற்றிவிட்டு, முக்கூடலில் குளித்து விட்டு, வேறு பிரைவேட் பஸ் பிடித்துக்கொண்டு, மார்த்தாண்டம் வழியாக திருவணந்தபுரம் வந்தடைந்தோம். வருஷம்16 படம் ஷ¥ட்டிங் செய்யப்பட்ட பத்மநாபபுரம் பேலஸ் (அவ்ளோ வரலாற்று சிறப்புமிக்க அரண்மனைக்கு ஒரு திரைப்படத்தை வைத்து அடையாளம் சொல்வதா என்றால் என்ன சொல்வது? திருவிதாங்கூர் அரண்மனை என்று சொன்னால் நிறைய பேருக்கு ஏதும் தெரிந்திருக்காது என்பது உண்மை. ஆனால், வருஷம்16 அரண்மனை என்று சொல்வதால், ஓ அந்த அரண்மனையா என்று கேட்க வாய்ப்பிருக்கிறது இல்லியா?) வழியில் பார்த்தோம்.

எனக்கு இன்னும் அந்த பிரமிப்பு அப்படியே இருக்கிறது எனலாம். பிரமிப்பு இல்லை, கொஞ்சம் பயம் தான். ஏனென்றால் எங்களுடன் வந்த ஒரு guide உள்ளே தனியாக போய் மாட்டிக்கொண்டால் வெளியேறுவது கஷ்டம் என்று பயமுறுத்திவிட்டார். அரண்மனையும் அப்படித்தான் இருந்தது. ஹாவென்று. எனக்கு இன்னும் பளீரென்று ஞாபகம் இருப்பது, ராணியவர்கள் சபையைப் பார்க்க, உட்காரும் இடம். அந்த இடம் சுத்தமாக மறைக்கப்பட்டு இருக்கும். உள்ளே உட்கார்ந்திருக்கும் ராணி (அல்லது ராணிகள்!) சபையைப் பார்ப்பதற்கு சிறு சிறு துளைகள் மட்டுமே போடப்பட்டிருக்கும்.(எப்படி பாத்தீங்களா?)

ராணிய யாரும் சைட் அடிக்க முடியாது, ஆனா அவர் யாரை வேணும்னாலும் சைட் அடிக்கலாம், யாருக்கும் தெரியாமலே. நிறைய அறைகள் இருக்கின்றன, பூட்டப்பட்டு.

ராஜாக்களின் கம்பீரமும் அவர்களின் ரகசிய புலம்பல்களும் அந்த அறைகளுக்குள்ளேயே அடைந்துகிடக்கின்றன. அரண்மனை தோறும் ஒரு ஈர வாடை அடித்துக்கொண்டேயிருந்தது.


பிகு: பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன

தமிழ் சினிமா : என் பரிந்துரை

சாம்பார் வடையின் இந்தப் பதிவைப் பார்த்ததும், நாமும் எழுதினால் என்ன என்று நினைத்தேன். எவ்ளோ படம் வாழ்க்கையில் பார்த்திருப்போம்? அதற்கு எவ்ளோ நேரம் செலவழித்திருப்போம்? மொத்தம்?

ஒரு மூன்றாவது வகுப்பு படிக்கும்போதிருந்து படம் பார்க்கத் தொடங்கியிருப்பேன் என்று வைத்துக்கொள்வோம், இப்போ எத்தனை வருடங்கள் ஆச்சு? கிட்டத்தட்ட 20 வருஷம் ஆச்சு. (முத்து வயசாயிடுச்சுடா உனக்கு!) ஒரு வருசத்துக்கு averageஆ 52 வாரங்கள்ன்னு வெச்சுக்கோங்க..மொத்தம் எத்தனை வாரங்கள் ஆச்சு? 20*52 = 1040 வாரங்கள் ஆச்சு. ஒரு வாரத்துக்கு ஒரு படம்ன்னு வெச்சுக்கிட்டாக்க மொத்தம் 1040 படங்கள் ஆச்சு. ஒரு படம் குறைந்தபட்சம் இரண்டு மணி நேரம் ஓடுதுன்னு வெச்சுக்கோங்க, மொத்தம் 2080 மணி நேரம் படத்துக்காக செலவழிச்சிருக்கேன். மொத்தம் 87 நாட்கள். இது minimum amount of time. அடேங்கப்பா!

இவ்ளோ நேரம் படம் பார்க்க செலவழிச்சுட்டு, வருங்கால மக்களுக்கு படம் சிபாரிசு பண்ணலைன்னா என்ன அர்த்தம், நீங்களே சொல்லுங்க? சினிமாவும் இசையும் (முக்கியமா குத்துப்பாட்டு!) இந்தியர்களின் இதயத்தில் இருக்கிறது. சினிமா நடிகர்கள்? அரியணையிலிருக்கிறார்கள்.

ஆனால் பிடித்த படங்கள் என்பது வேறு, வருங்கால சந்ததியனருக்கு சிபாரிசு செய்வது என்பது முற்றிலும் வேறு. எடுத்துக்காட்டாக, 7G ரெயின்போ காலனி எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று. ஆனால் அதை என் சந்ததியினருக்கு நான் சிபாரிசு செய்வேனா என்பது சந்தேகம் தான். செய்யமாட்டேன் என்றே நினைக்கிறேன்.

நான் சிபாரிசு செய்யும் படங்கள் இவைதான்:

எம்ஜிஆர்
நாடோடி மன்னன்
ஆயிரத்தில் ஒருவன்
மலைக்கள்ளன்
எங்க வீட்டுப் பிள்ளை
உலகம் சுற்றும் வாலிபன்

சிவாஜி
உத்தம புத்திரன்
மனோகரா
பராசக்தி
அந்த நாள்
புதிய பறவை
பாச மலர்
பாவமன்னிப்பு
பலே பாண்டியா
ஆலயமணி
பாரதவிலாஸ்
வீரபாண்டியகட்டபொம்மன்
கப்பலோட்டிய தமிழன்

முட்டக்கண் ராமச்சந்திரன்
சாரங்கதாரா
சபாபதி
அடுத்த வீட்டு பெண்

ஸ்ரீதர்
நெஞ்சம் மறப்பதில்லை
நெஞ்சில் ஓரு ஆலயம்
தேனிலவு
காதலிக்க நேரமில்லை

ஜெய்சங்கர்,ரவிச்சந்திரன்
அதே கண்கள்
மூன்றெழுத்து
வல்லவன் ஒருவன்

பாலச்சந்தர்
நினைத்தாலே இனிக்கும்
எதிர் நீச்சல்
சர்வர் சுந்தரம்
சாது மிரண்டால்
மேஜர் சந்திரகாந்த்
அவர்கள்
வறுமையின் நிறம் சிவப்பு
மனதில் உறுதி வேண்டும்
சிந்து பைரவி
உன்னால் முடியும் தம்பி.

ரஜினி

முல்லும் மலரும்
பில்லா
ஜானி
தில்லு முல்லு
படிக்காதவன்
குரு சிஷ்யன்
தம்பிக்கு எந்த ஊரு
மன்னன்
தளபதி
அண்ணாமலை
பாட்ஷா
சந்திரமுகி

பாரதிராஜா
பதினாறு வயதினிலே
நிழல்கள்
ஒரு கைதியின் டைரி
முதல் மரியாதை
சிகப்பு ரோஜாக்கள்
டிக் டிக் டிக்

மோகன்
விதி
நூறாவது நாள்

கமல்
விக்ரம்
வாழ்வேமாயம்
மூன்றாம்பிறை
சலங்கை ஒலி
சத்யா
அபூர்வ சகோதரர்கள்
சாணக்யன்
வெற்றிவிழா
நாயகன்
மைக்கேல் மதன காமராஜன்
குணா
சதிலீலாவதி
குருதிப்புனல்
காதலா காதலா
பஞ்சதந்திரம்
வசூல்ராஜா
விருமாண்டி
அன்பே சிவம்
வேட்டையாடு விளையாடு

மணிரத்னம்
மௌனராகம்
அஞ்சலி
இருவர்
அலைபாயுதே

பாக்யராஜ்
அந்த 7 நாட்கள்
இன்று போய் நாளை வா
தூரல் நின்னு போச்சு
இது நம்ம ஆளு

விசு
சம்சாரம் அது மின்சாரம்

விஜயகாந்த்
ஊமை விழிகள்
அம்மன் கோவில் கிழக்காலே
வைதேகி காத்திருந்தாள்
கேப்டன் பிரபாகரன்
புலன்விசாரனை

பிறபடங்கள்
ஓர் இரவு
பஞ்சவர்ணக்கிளி
பாமா விஜயம்
சாந்தி நிலையம்

வருஷம் 16
என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு
பூவிழி வாசலிலே
பூவே பூச்சூடவா
அக்னி நட்சத்திரம்
அரங்கேற்றவேளை
ஆண்பாவம்

கரும்புள்ளி (“என் உயிர் தோழன்” பாபு)
பாரதி
உதயம் (நாகார்ஜூன், அமலா, ரகுவரன்)

சூரியன்
நாட்டாமை

ஜென்டில் மேன்
இந்தியன்
ஜீன்ஸ்
முதல்வன்

அழகி
புதியபாதை
ஹவுஸ்புல்

காக்க காக்க
மௌனம் பேசியதே
நந்தா
கஜினி
கில்லி
காதல் மன்னன் (அஜீத்)
ஆசை
சேது
தில்
மொழி
காதல்
பருத்தி வீரன்
ராம்
காதலுக்கு மரியாதை

கனா கண்டேன்
கண்ட நாள் முதல்

ஜீவா (சத்யராஜ், அமலா)
நடிகன்

பாதாள உலகம்
மாயாபஜார்

மைடியர் குட்டிச்சாத்தான்
ஜெகன்மோகினி
பதிமூனாம் நம்பர் வீடு
உருவம்
48 மணி நேரம் (ரேவதி)
ஷாக்

இன்னும் நிறைய படங்கள் இருக்கு லிஸ்ட்ல, இன்னொரு தடவை சொல்றேன்.

வாரிசுகள், இராவணகாவியம், கலர்டீவி மற்றும் பொன்னியின் செல்வன்

வாரிசு அரசியல் என்பது சரியா? தவறா? (உனக்கு இது ரொம்ப முக்கியமா? உன்கிட்ட யாராச்சும் கேட்டாங்களா?) ரொம்ப நாளைக்கு முன்னர் முடியாட்சி இருந்தது. Like தசரதன் ஆட்சி செய்தார் என்றால், அவருக்கு அப்புறம் ஸ்ரீ ஸ்ரீ இராமபிரான் ஆட்சி செய்வது போல. அவர் காட்டுக்கு சென்றாலும், மக்கள் அவர் திரும்ப வரும் வரை வெயிட் செய்வாங்க. அப்புறம் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி வந்தது. பிறகு குடியாட்சி முறை வந்தது. குடியாட்சி முறையா என்றால், atleast பெயரளவில். ஆனால் நடப்பது உண்மையில் குடியாட்சியா? ஓட்டு போடுகிறோம் ஆனால் ஆட்சியில் அமர்வது யார்?

நடுவில் இருந்த கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியில் மட்டுமே வாரிசு அரசியல் இல்லை எனலாம். காம்ரேட்கள் ஆட்சி செய்யும் சில மாநிலங்களைத் தவிர மற்ற எல்லா இடங்களிலும் வாரிசு அரசியலே -முடியாட்சியே- நடைபெறுகிறது. வாரிசு என்பது சொந்த மகனாகவோ, அல்லது மகளாகவோ தான் இருக்கவேண்டும் என்பதில்லை. சித்தப்பா மகனாகக் கூட இருக்கலாம். அல்லது மனைவியாகவோகூட இருக்கலாம், இல்லையேல் – எனக்கு ஒன்றும் தெரியாதுப்பா- எப்படி வேண்டுமென்றாலும் இருக்கலாம். வாரிசு என்று அறிவிக்கும் அவருக்கும், வாரிசானவருக்கும், இல்லையேல் வாரிசாக தன்னை அறிவித்துக்கொண்டவருக்கும் கண்டிப்பாக நெருங்கிய தொடர்பு இருந்திருக்கிறது. இருக்கும். இந்திய அரசியலை – ஏன் உலக அரசியலை கூட- உற்று, இல்லை இல்லை சும்மாகாச்சுக்கும் பார்த்தால் கூட, வாரிசு அரசியல் எங்கும் நிறைந்திருப்பது புலப்படும்.

இதற்கும் இன்று (21/11/2007) இந்தியா வந்த அமேரிக்காவின் ஜெஸ்ஸி எல் ஜாக்ஸன் என்ற சிவில் ரைட்ஸ் ஆக்டிவிஸ்ட் ராகுல் காந்தியைச் சந்தித்ததற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா.

***

இராமாயணம் என்னை கடந்த சில நாட்களாகவே ரொம்பவும் பாதித்து விட்டது. இதற்கு முன்னர் எனக்கு இராமாயணத்தில் அவ்வளவாக நம்பிக்கை இல்லை. இப்பவும் தான். ஆனால் நடந்து முடிந்த விவாதங்கள் என்னை இராமாயணத்தை பற்றி அறிந்துகொள்ளத் தூண்டின.

ரொம்ப நாட்களுக்கு முன்னால் இருந்தே எனக்கிருந்த சந்தேகங்கள் இவை தான்:
1. இராமர் இராமெஸ்வரத்தில் பாலம் அமைத்து இலங்கையை அடைந்திருந்தால், அங்கிருக்கும் லோக்கல் மக்களின் உதவி இல்லாமல் செய்திருக்க முடியாது. இப்படி ஒரு மிகப்பெரிய விசயம் தமிழ்நாட்டில் நடந்திருக்கும் பொழுது, இதை எப்படி நம் இலக்கியவதிகள், வரலாற்று மக்கள் தீவிரமாக பதிவு செய்யாமல் விட்டனர்?

2. இராமரைப் பற்றிய குறிப்புகள் தமிழ் இலக்கியத்தில் ஏன் அவ்வளவாக இல்லை? அழிக்கப்பட்டதா? அழிக்கப்பட்டது என்றால், வரலாறு மறைக்கப்பட்டிருக்கிறது என்று தானே அர்த்தம்? அப்பொழுது, வரலாறு என்பதே பொய் என்றாகிவிடுமே? (ofcourse, அது தான் உண்மையும் கூட!)

விகடனில் மதனிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது:
கேள்வி: பெண்களைப் பற்றிய வரலாறு பெரிதும் இல்லையே ஏன்?
பதில்: இதுவரை பெண்கள் பெரிதாக எங்கும் ஆட்சி செய்யவில்லை. இனிமேல் ஆட்சிசெய்யலாம். வரலாறு எழுதப்படலாம்.

ஆட்சியில் இருப்பவர்கள் தங்களைப் பற்றி பெரிதாக எழுதிக்கொள்வது இயல்புதான். தங்களைத் தாங்களே புகழ்ந்துகொள்வதை கூட ஒரு வழியில் ஏற்றுக்கொள்ளலாம் ஆனால் தாங்கள் நல்லவனாக வல்லவனாக இருக்கவேண்டும் என்பதற்காக, மற்றவர்களை கேவலமாக சித்தரிப்பதை எப்படி ஒப்புக்கொள்ள முடியும்?

இராவணன் தீவிர சிவபக்தன் என்பதற்கான ஆதாரங்கள் தமிழ் இலக்கியத்தில் நிறைய இருக்கின்றன. ஆனால் அவன் சீதையைக் கவர்ந்து சென்றான் என்பதற்கான ஆதாரங்கள் தமிழில் அதிகம் இல்லையே? கம்பராயணம் என்பது இலக்கியம். அது வால்மிகியின் நாவலைத் தழுவி எழுதுவதைப் போன்று. புதுமைப்பித்தன் ருஷ்ய நாவல்களைத் தழுவி எழுதியது போல. ஹருகி முராகமி எழுதிய ஜப்பானிய நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதைப் போல அவ்வளவே. அதை வரலாற்று தடயமாக ஏற்றுக்கொள்ள முடியாது.

இராமபிரானின் பராக்கிரமங்களை நிரூபிக்க ஒரு வில்லன் தேவையென்றால், மகாபாரதம் போலவே, அவர்களுக்குள் ஒரு வில்லனை தேடிக்கொள்வது தானே? ஏன் அங்கிருந்து இவ்ளோ தூரம் வந்து ஒரு சிவபக்தனான தமிழ் மன்னனை வில்லனாக பிடிப்பானேன்? இப்பொழுதிருக்கும் தமிழ் படங்களுக்கு, ஹிந்தி பேசும் வில்லன்களை நாம் தேடிப்பிடிப்பது போல. இராவணனைப் பற்றி வான்மீகி எழுதியதற்கு என்ன காரணம் இருந்திருக்க முடியும்?

எனக்கு இராமபிரானைப் பற்றி கவலை இல்லை, I really dont care. இராவணன் தீயவன் தானா? ஆதாரம் இருக்கிறதா?

Proof of concept?

***

இம்மாதிரியான ஒரு சூழலில் தான், நான் நூலகத்தில் சும்மா சுற்றிக்கொண்டிருந்த பொழுது, இராவணகாவியம் என்ற நூலைப் பார்த்தேன். அதன் முதல் சில பக்கங்களில், கதைச்சுருக்கம் கொடுக்கப்பட்டிருந்தது. நாற்பதுகளில் வெளிவந்த இந்த நூல் அப்பொழுது தடை செய்யப்பட்டிருந்திருக்கிறது. பின்னர் திராவிட ஆட்சி வந்ததற்கு அப்புறம் தான் தடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

இராமபிரானைப் பற்றி கேலியாக பேசினால், மக்கள் மனம் புண்படுமோ என்று யோசிக்கும் வருத்தப்படும், நம் தலைவர்கள் (சில நடிகர்களும் கூட!), இராவணனைப் பற்றி இழிவாக (கவனிக்கு இழிவாக, கேலியாக அல்ல!) பேசும் போது ஒரு சமூகத்தின் மனம் புண்படுமே என்று ஏன் நினைப்பதில்லை?

இராவண காவியத்தில் ஒரு கேள்வி கேட்கப்படிருந்தது:
அதாவது அவ்வளவு பெரிய மன்னனான, சீதையை தூக்கிவரத் துணிவிருந்த இராவணனுக்கு, சீதையை அடைவது அவ்வளவு கடினமாகவா இருந்திருக்கும்? அதுவும் தனது எல்லைக்குள்? ஆனால் அவன் சீதையின் மீது ஒரு விரலைக் கூட வைக்கவில்லை என்பது தான் உண்மை. (வைக்கமுடியவில்லை என்பதெல்லாம் சும்மா கதை!) இராவணன் சீதையை தங்கையாகத்தான் தூக்கிவந்திருக்கிறான். அது தான் உண்மை. தன் தங்கையின் மூக்கை அறுத்தவர்களுக்கு நல்ல பாடம் புகட்ட வேண்டும் என்பதற்காகத்தான் தூக்கிவந்திருக்கிறான், என்று சொல்கிறது இராவண காவியம்.

யோசிக்க வேண்டிய விசயம் தான்.

ஆரியர்கள் திராவிடர்களை மட்டம் தட்ட இப்படியெல்லாம் எழுதினார்கள் எனபதையும் மறுத்து விட முடியாது. ஏனென்றால் கம்பராமயணம் சோழர்கள் காலத்தில் வெளிவந்தது, சோழர்கள் திராவிட மன்னர்கள் அல்லர்.

இராவண காவியம் கதைச் சுருக்கத்தை செராக்ஸ் செய்து வைத்திருக்கிறேன், வெளியிடலாம் என்று தான் நினைத்தேன், ஆனால் என் நோக்கம் இராமபிரானைப் பற்றி அவதூறு சொல்ல வேண்டும் என்பதல்ல, இராவணன் நல்லவனாக இருந்திருப்பானோ என்கிற நப்பாசை தான்.

ஏனென்றால், இந்திய சட்டத்தின் படி, ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம், ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது, என்பது தானே? 🙂

அரசே முன் வந்து, இதை ஆராய்ச்சி செய்ய முன்வரலாம். ஆராய்ச்சி செய்ய நிதி ஒதுக்கலாம். மற்ற நாடுகளில் என்னென்னவோ ஆராய்ச்சி செய்கிறார்கள். ஒரே ஒரு அகல்வாராய்ச்சியில் தோண்டியெடுக்கப்பட்ட கல்லில் எழுதப்பட்ட எகிப்திய மெசபட்டோமிய சொற்களை வைத்துக்கொண்டு பல வருடங்களாக பொழுதைக் கழிப்பவர்கள் இருக்கிறார்கள் இல்லியா? இந்த ஆராய்ச்சி projectஇன் மூலமாவது, தமிழை முறையாக விரும்பிப் படித்தவர்களுக்கு, தமிழ் கற்றவர்களுக்கு நிறைய வேலை வாய்ப்பை வழங்கலாம்.

இது ரொம்ப முக்கியமா என்று கேட்பவர்களுக்கு: 750கோடி ரூபாய் செலவில் (ஒரு பகுதி செலவுதான், மொத்த செலவு இல்லை) கலர்டீவி கொடுப்பதையும், சிவாஜி போன்ற மிகப்பெரிய பட்ஜெட் படங்களுக்கு கூட தமிழில் பெயர் வைத்தனர் என்கிற ஒரே ஒரு காரணத்துக்காக, வரிசலுகை வழங்குவதையும், ஒப்பிடும் போது இது முக்கியமானதாகத்தான் படுகிறது.

செய்வார்களா திராவிடர்கள்?

***

Lord Of The Rings இன் மூன்று பாகங்களையும் மூன்றாவது முறையாக பார்த்து முடித்தேன். இந்த முறை என் மனைவியுடன். இரண்டு பாகங்கள் பார்த்து முடித்த அவருக்கு, மூன்றாவது பாகத்தைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. மூன்றாவது பாகம் பார்த்து முடித்த பின், நான்காவது பாகம் இருந்தால் நன்றாக இருக்குமே என்றார்.

எனக்கு தெரிந்தவரையில், இதேபோன்றதோரு படம், இனிமேல் எடுக்கமுடியுமா என்பது சந்தேகமே. பீட்டர் ஜாக்சன் நம்மை அவர்களின் காலத்திற்கே அழைத்துச் சென்றிருப்பார். ஒவ்வொருமுறை பார்க்கும் பொழுதும் எனக்கு, ஒரே மாதிரியான அதே மாதிரியான நெகிழ்ச்சியே கிடைக்கிறது. Fresh always. Faromir போருக்கு செல்லும் பொழுது, Pipin பாடும் அந்த பாடல் மனதை உருக்கிவிடுகிறது. நான் பார்த்த அத்தனை தடவையும். அதே போல sam மற்றும் Frodoவின் நட்பு எப்பொழுதும் அழகாகவே, நெகிழ்ச்சியாகவே இருக்கிறது. Smegolஐப் பார்க்கும் பொழுது எல்லாம் எப்பொழுதும் போலவே கோபமும், இரக்கமும் ஒரு சேர வருகிறது. Aragorn மற்றும் Gandalfஐப் பார்க்கும் போது வியப்பு மற்றும் மரியாதை ஏற்படுகிறது. legolas, எப்பொழுதும் போல fantastic.

பிற்காலத்தில் தொழில் நுட்ப வளர்ச்சியால், இதை விட அருமையாக படங்கள் எடுக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் அந்தப்படங்கள் LOTR நம் மனதில் ஏற்படுத்திய தாக்கதை ஏற்படுத்துமா என்பது சந்தேகம் தான்.

***

எனக்கு LOTR பார்க்கும் பொழுதெல்லாம், ஒரு விசயம் ஞாபகத்துக்கு வந்துவிடும். ஒரு விசயத்துக்காக ஏங்குவேன், நான். அது பொன்னியின் செல்வனை திரைப்படமாக எடுப்பது. எவ்வளவு அழகான கதை அது? எவ்வளவு அருமையான Aragornஐப் போல வீர மன்னர்களை உடைய கதை அது? பொன்னியின் செல்வன் தமிழ் வரலாற்று புனைவு நாவல்களின் தலைசிறந்த ஒன்று, என்பதை மறுக்கஇயலாது. புதுமைப்பித்தனுக்கு கல்கியின் மீது வேறு விதமான எண்ணம் இருந்தாலும், பொன்னியின் செல்வன் is epic.

எனக்கு பொன்னியில் செல்வனை திரைப்படமாக ஆக்க வேண்டும் என்பது நீண்ட நாள் விருப்பம். மணிரத்னம் பொன்னியின் செல்வன் கதையை திரைக்கதையாக மாற்றி விட்டார், 80 சீன்களிள் அழகாக எழுதிவிட்டார் என்று செய்திகள் அவ்வப்போது வரும். உண்மையாகவே இருந்துவிட வேண்டும் என்று நினைப்பேன்.

பொன்னியின் செல்வனை திரைப்படமாக உருவாக்க ரைட்ஸ் முன்பு சிவாஜி அவர்கள் வைத்திருந்ததாகவும், பின்னர் அது எம்ஜிஆர் அவர்களின் கைக்கு மாறியது என்றும், இப்பொழுது கமலஹாசனிடம் இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.

என்னுடைய ஆசை:
நடிகர்கள்:

ராஜராஜ சோழன் : கமலஹாசன்
வல்லவராயன் வந்தியத்தேவன் – ரஜினிகாந்த்
ராஜெந்திரசோழன் – கமலஹாசன் (அல்லது அஜித்குமார்)
பெரிய பலுவேட்டரையர் – சத்யராஜ் (அல்லது ப்ரகாஷ்ராஜ்)
சின்ன பழுவேட்டரையர் – நெப்போலியன்

மணிரத்னம் டைரகட் செய்யவேண்டும். இளையராஜா இசையமைக்கவேண்டும். ஏவிஎம் தயாரிக்க வேண்டும். மூன்று பாகங்களாகக் கூட எடுக்கலாம். ஆனால் கண்டிப்பாக ஒரு பாகமாக எடுக்கக் கூடாது. மருதநாயகத்துக்கு முன்னர் கமல் இதைச் செய்யலாம்.

நடக்குமா?
***

லைன்ஸ்மாருங்க

(சிறுகதை)

நாங்க அப்பவெல்லாம் எங்க அப்பா தங்கியிருந்த க்வார்ட்டர்ஸ்க்குப் போவோம் தெரியுமா? எப்பவெல்லாம்டி? ம்ம்..படிச்சிட்டிருக்கப்போ. என்ன படிச்சிட்டிருந்த? குமுதமா? ம்ம்..உன் மூஞ்சி..ஸ்கூல் படிச்சிட்டிருந்தப்போ. ஓ நீ ஸ்கூல் எல்லாம் போயிருக்கியா? பரவாயில்லையே. ம்ம்..நாங்க போயிருக்கமே. சர்டிப்பிக்கேட் கூட வெச்சிருக்கேன் தெரியுமா? ம்ம்..குட்..வெரிகுட்..அதுசரி உங்க அப்பா ஏன் குவார்டர்ஸ்ல போய் தங்கினாரு? உங்க கூட எல்லாம் சண்டையா? போடா பொறுக்கி. அவர் அங்க வேலை செஞ்சாருடா. எங்க? குவார்ட்டர்ஸ்லயா? ஐயோ..என்ன ஒழுங்கா சொல்லவிடறயா? இப்போ தான் எனக்கு ப்ளாஷ்பேக் மூடே வந்திருக்கு..கொஞ்ச நேரம் சும்மா இரேன்.. நீ உன் டுபாகூர் கேர்ள்ப்ரண்ட்ஸ் பத்தி அள்ளிவிட்ட ரீல் எல்லாம் நான் பொறுமையா கேட்டேன்ல..மரியாதையா என் டீ எஸ்டேட் ப்ளாஷ்பேக்க கேக்கற புரியுதா? என்னம்மா? தோ வாரேன்..அப்படியே லைன்ல இரு..அம்மா கூப்பிடறாங்க..வாரேன்..

ஹலோ..ஹலோ..எங்கடாபோய்ட்ட? ஸ்டுபிட்..இடியட்..ம்கும் ம்க்கும்..ஐயோ வாயேன்டா..ஹலோ..ஹாங்..யாரு? ய்யாழு? ஹை..கௌசல்யாவா? உங்க மாமா எங்கடி போனாரு? மா..மா..அ..ங்..க.. யா..ன.(கீச் கீச் என்று கத்துகிறாள் சிரிக்கிறாள்)..டக் டொக் ..டொக்..ஹலோ..யாராச்சும் எடுங்களேன்..தடியா..டக் டொக்..காது வலிக்குது..கட் பண்ணப்போறேன்டா..ஹலோ..தடியா..என்னடி? எங்கடா போன? உனக்கு ஒன்னு தெரியுமா? நான் யான பாத்தனே? எங்க தெருவுக்குள்ள வந்துச்சு..ம்ம்க்கும்..ஐயோ பப்பு யானைய பாத்துச்சா..ஜுஜுஜு..எருமமாடு..யானை பாக்கறதா இருந்த கண்ணாடி முன்ன போய் பாக்கறதுதான? நல்லா பன்னிக்குட்டி மாதிரி இருந்துக்கிட்டு யான பாத்தேன்னு கொஞ்சரதபாரு..வோய்..யாரப்பாத்துடி பன்னிக்குட்டின்னு சொன்ன..நீ பன்னிக்குட்டி..உன்….போதும் போதும்..அத்தோட நிப்பாட்டிக்கடா..அப்புறம் நான் பத்ரகாளியாயிடுவேன்டா..ஆகா இப்ப மட்டும் என்னவாம்..அப்படித்தான இருக்க? போடா நீ தான்டா எரும..யான..எல்லாமே..நீ தான்..போடா நான் காத பொத்திக்கிட்டேன்..நீ தான்.. நான் கேக்கல..கேக்கல..கேக்கல..என்னம்மா வேணும் உனக்கு இப்போ? ஏன் தொனதொனன்ட்டு இருக்க? அடியேய்..காலைல இருந்து ரெண்டு பேரும் பேசிட்டு தான இருக்கீங்க..கல்யாணம் செஞ்சிட்டு பேசத்தான போறீங்க..அது எங்களுக்கு தெரியும்..உனக்கு என்ன வேணும் அத மட்டும் சொல்லு? மூஞ்சிய கீஞ்சிய கழுவிட்டு வந்து வெளக்க பொறுத்தி வைடி..அதுக்கப்புறம் பேசுடி..வேணாம்னா சொல்றேன்..சரிடா..நான் அப்புறமா பேசறேன்..அடப்பாவி..எஸ்கேப் ஆயிட்டான்..

***

வீடெல்லாம் பெருசு பெருசா இருக்கும் தெரியுமா? ஒவ்வொரு ரூமும் ரொம்ப பெருசா இருக்கும். வீட்டுக்கு கடைசில கிச்சன் இருக்கும். வீட்டுக்கு பின்னாடி சின்ன தோட்டம் இருக்கும். நான் மொத மொத போனப்போ..கிச்சன் கதவத் திறந்தனா..ஹையோ..எப்படி இருந்துச்சு தெரியுமா? பின்னால பூராம் மலை..பூராம் பச்சை பச்சையா இருந்துச்சு..எனக்கு அப்படியே ஹையோன்னு இருந்துச்சு..நானும் எங்க அக்காவும் கீழ இறங்கி புல் தரையில நல்லா சத்தம் போட்டு கத்திக்கிட்டு குதி குதின்னு குதிச்சோம்.. நிறைய குட்டி குட்டி குருவியா..குருவியா என்னன்னு தெரியல..இருந்துச்சு..அத வெரட்டிக்கிட்டே போனோம்..அங்க க்யூட்டா ஒரு செம்பருத்தி செடி இருக்கும் தெரியுமா? செடி பூராம் செம்பருத்தியா பூத்திருக்கும்..அப்புறம் கீழ கூட விழுந்திருக்கும்..நாங்க எடுத்து தலைக்கு வெச்சிக்குவோம்..அப்புறம் அதக் காயவெச்சு அரச்சு..அம்மா என்ன என்னவோ போடுவாங்க..தலைக்கு ஷாம்புவா யூஸ் பன்னுவோம்…வீட்டுக்கு முன்னாடி குட்டி குட்டியா புல் மொளச்சிருக்கும்..எல்லாம் ஒரே ஹைட்ல இருக்கும் தெரியுமா..நாங்க நல்லா படுத்து உருளுவோம்..முன்னால இருக்குற அந்த தோட்டம்..நல்லா பெருசா ப ஷேப்புல இருக்கும்..சுத்தி வேலி போட்டிருப்பாங்க..அங்க அங்க பாறையா இருக்கும்..நானும் எங்க அக்காவும் டேவிட்டும் குட்டனும் அதில தான் ஏறி நின்னு மீட்டிங்ல பேசுற மாதிரி பேசுவோம்..யாரு? டேவிட்டா? சொல்லவேயில்ல..பொறுடா..கதைய மட்டும் கேளு..ம்ம்..சரிங்க மேடம்..அப்பவெல்லாம் எங்க அக்கா பெரிய வாயாடி..இப்ப மட்டும் என்னவாம்? பொறுக்கி..வாய மூடு.. இங்கிலீஷ்ல பேசுதுகளாம்..மேல ஏறி நின்னுக்கிட்டு..கைய மைக் மாதிரி வெச்சுக்கிட்டு..லேடீஸ் அன்ட் ஜென்டில்மேன் அப்படீன்னு ஆரம்பிக்குங்க…அப்புறம் என்ன பேசறதுன்னு தெரியாது..அஸ¤புஸ¤இவிஸ்குவிஸ்..ன்னு ஏதோ உளருவோம்..நீ இப்ப வரைக்கும் அப்படித்தானடி இங்கிலீஸ் பேசற? இருடா உன்ன வந்து கவனிச்சுக்கறேன்..யாரு இங்கிலீஸ் ஒழுங்கா பேசமாட்டா? நான் ஹிந்தியே நல்லா பேசுவனே? ஹிந்தியா? சொல்லவேயில்ல? ம்ம்ம்..தீவாளிக்கு துணி எடுத்தாச்சா படம் பாத்துதான் நான் மொதோ ஹிந்தியே கத்துக்கிட்டேன்..என்னது தீவாளிக்கு துணி எடுத்தாச்சாவா? பொங்கலே வரப்போகுதுடி.. அது என்ன தீவாளிக்கு துணி எடுத்தாச்சா படம்?..ம்ம்ம்..சொல்லமாட்டேன் கண்டுபிடிடா பாப்போம் ..

***

டேவிட்டோட அப்பாவும் எங்க அப்பாவும் ஆபிஸரா இருந்தாங்க..நீ பாக்கனுமே..எங்க அப்பா வீட்டுக்கு வர்றப்போ, பின்னாலயே ப்யூன் பைல எடுத்துட்டு வர்றத..ஏன் உங்க அப்பா ஆபிஸ்ல வேலை செய்யாமா தூங்குவாரோ? வோய்..உன்ன மாதிரின்னு நினைச்சியா..அவ்ளோ வேலை பொறுக்கி..ம்ம்..டேவிட்டும் குட்டனும் அண்ணன் தம்பிங்க. ம்ம்..அப்புறம் என்ன அக்கா தங்கச்சியாவா இருப்பாய்ங்க..கதைய சொல்லுடி..சும்மா..சன் டீவி நாடகம் மாதிரி இழுத்துக்கிட்டு இருக்க…உனக்கு நக்கல் ஜாஸ்தியாகிடுச்சுடா..வந்து கவனிச்சுக்கறேன்..டேவிட் பத்தி சொல்லுடி..ம்ம்..டேவிட் நல்ல குண்டு குண்டுன்னு குண்டு பூசனி மாதிரி இருப்பான்..நல்லா ஹைட்டா..கண்ணு பூனக்கண்ணு..உன் கண்ணு மாதிரி..இல்ல அதவிட பூனக்கண்ணு..எங்க கேங்கலயே அவனுக்கு மட்டும் தான் மலையாளம் தெரியும்..அதுனால அவனுக்கு திமிரு ஜாஸ்தி..ரொம்ப பண்ணிக்குவான்..குட்டன் அமைதியானவன்..திக்கு வாய்…அதனால ரொம்ப பேசமாட்டான்.. குட்டனுக்கு மலையாளம் தெரியாதா? பேரு மலையாளப்பேரு மாதிரிதான இருக்கு? ஐயே பேரு அதில்ல..நாங்க குட்டன் குட்டன்னு தான் கூப்பிடுவோம்..உண்மையான பேரு என்னன்னு எனக்கு தெரியல..தெரியலயா? எத்தானாப்பு படிச்சிட்டிருந்த அப்போ? ம்ம்..ஒரு ஆறவது இருக்கும்னு நினைக்கிறேன்..

***

நீ குட்டன் வீட்ட பாக்கனுமே..அவ்ளோ டெக்கரேட் பண்ணி வெச்சிருப்பாங்க..எனக்கு தெரிஞ்சு அவ்ளோ அழகா டெக்கரேட் யாரும் செஞ்சது இல்ல..பெரிய இவ..உலகம் பூராம் சுத்திருக்கா..வோய் டுபுக்கு அதான் எனக்கு தெரிஞ்சளவுக்குன்னு சொல்றோம்ல..மரத்தோட அடிப்பாகத்த வேரோட அறுத்திட்டு வந்து..அதுக்கு அழகா வார்ணீஷ் பெயின்ட் எல்லாம் அடிச்சு வெச்சிருப்பாங்க..நல்லா வேர் வேரா பிண்ணிக்கிட்டு இருக்கறமாதிரி எல்லாம் என்னவோ செஞ்சிருப்பாங்க..அழகா பெயிண்ட் அடிச்சிருப்பாங்க..அப்ப எல்லாம் டியூப் லைட் இல்லன்னு நினைக்கிறேன்…நீ இருக்கற கிராமத்துல இப்பவரைக்கும் டியூம் லைட் இல்லலடி..உத வாங்குவ..நாங்க கிராமத்துல இருக்கமா? சென்னைடா..செம்பட்ட தலையா..என்னாது? செம்பட்ட தலையா? உனக்கு திமிராயிடுச்சுடி..உஷ்..கதைய கேளு..அப்போ எல்லாம் குண்டு பல்ப் தான்..உன் சைஸ்க்கு ஏத்தமாதிரியே உங்க அப்பா பல்ப் வெச்சிருந்திருக்காருடி..கொஞ்சநேரம் அமைதியா இருக்கியா? குண்டு பல்ப் எல்லாம் கம்பெனிலையே கொடுத்திடுவாங்க.. உங்க அப்பா என்ன கிழக்கிந்திய கம்பனிலையா வேலை பாத்தாரு? வந்தேன் அடி பிச்சிருவேன்..டீ எஸ்டேட் டா..டீ எஸ்டேட்..அது என்னவோ பேரு..க்ளன்மேரி..ம்ம்..அதான்..கொடுவால கூட வேலைபாத்திருக்காரு..கொடுவாவா? என்ன வாயில ஓடுமே அதுவா? ஐயோ..அது ஒரு எஸ்டேட்..பாம்பனார் பக்கத்துல இருக்கு..என்னது பாம்பன் பாலமா? ஐயோ..

***

பாம்பனார் தெரியாதா? குமிளிக்கு அடுத்து இருக்கு..ஓ..நான் குமிளியே போனதில்ல தெரியுமா? ரொம்ப முக்கியம்….அடிப்பாவி..ஒரு நாள் காலையில நல்லா பொங்கல ஒரு கட்டு கட்டிட்டு..ஒரு முயல் குட்டிகூட விளையாடிட்டு இருந்தமா..ஐ..ஒரு முயல் குட்டி இன்னொரு முயல்குட்டியிடம் விளையாடுகிறது..டேய்..அக்காவும் விளையாண்டாடா..ஓ அப்படியா..ரைட்டு விடு..மேல சொல்லு..அப்பதான் டேவிட் வேகவேகமா மூச்சிரைக்க ஓடிவந்தான்..வந்து ஒரு யானை செத்துப்போச்சு..பாக்க வர்றீங்களான்னு கேட்டான். உடனே சரின்னு சொல்லிட்டோம்..நாங்க முயல் குட்டிய கூண்டில விட்டுட்டு அவன் கூட கிளம்பினோம்..வீட்ல கூட எங்க போறோம்னு சொல்லல..

***

அன்னிக்கின்னு பாத்து வெயிலு கொளுத்துச்சு பாத்துக்க..ஓ அந்த வெயில்ல தான் நீ கருப்பாயிட்டயோ..ஆமா இவரு பெரிய சிவப்புன்னு நினைப்பு..டேவிட் தான் லீடர்..அவனுக்கு தான் வழி தெரியும்..மலையாளமும் தெரியும்..நான், குட்டன்,அக்கா எல்லாரும் போனோம்..வழி பூராம் தார் ரோட்டுக்கு அந்தப்பக்கமும் இந்தப்பக்கமும் ஒரே மரம்…என்னது ஒரு மரம் தானா? ஒரேஏஏஏஏஏஏஏ மரமா இருந்துச்சு..என்ன மரம் தெரியுமா? தெரியாது..ஐயோ அவ்ளோ அழகா இருக்கும்..அது செடி மாதிரியும் இருக்காது..மரம் மாதிரியும் இருக்காது..செடிமரம்னு வெச்சுக்க..ம்ம்..சரி வெச்சுக்கறேன்..இலை எப்படி தெரியுமா இருக்கும்? நடுவுல ஒரு வெயின் மாதிரி, மீனுக்கு இருக்கும்ல நடுவுல எலும்பு..நல்லா திம்பா போல தெரியுதே..எலும்பு மாதிரி இருக்கும்..அதுல இருந்து இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் அடர்த்தியா நெருக்கமா ரொம்ப மெல்லிசா நீளமா பச்சை பச்சையா இலை இருக்கும்..மரம் பூராம் அந்த இலை தான் இருக்கும்..அடர்த்தியா…பாக்கவே அவ்ளோ அழகா இருக்கும்…ரோட்டுக்கு இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் டீ எஸ்டேட் இருக்கும்..அங்க லைன்ஸ்மார் எல்லாம் தேயிலை பரிச்சிட்டு இருப்பாங்க…

***

லைன்ஸ்மாருங்களா? அது என்ன லைன்ஸ்மாருங்க? ஹா ஹா அது ஒரு விசித்திரமான பேரு..எனக்கே அத யாரவது சொல்லக்கேட்டா சிரிப்பு வரும்…லைன்ஸ்மாருங்கன்னா லைன் வீட்டில குடியிருக்கவங்கன்னு அர்த்தம்..அவங்க தோட்டத்தில வேலை செய்யறவங்க..லைனா அவங்க வீடு இருக்கும்..பூராம் மஞ்சள் பெயின்ட் அடிச்சிருக்கும் தெரியுமா..பாக்கறதுக்கு ஒரே மாதிரி சின்னச்சின்னதா அழகா இருக்கும்..அங்க குடியிருக்கவங்களத்தான் லைன்ஸ்மாருங்கன்னு சொல்லுவாங்க..ஆனா எனக்கு அந்தப் பேரு பிடிக்கவே பிடிக்காது..அது என்ன இங்கிலீஸ¤ம் தமிழும் கலந்த பேரு..ஒன்னு இங்கிலீஷ்ல சொல்லனும் இல்லைன்னா தமிழ்ல சொல்லனும்..சை..நான் மெட்ராஸ்க்கு வந்ததுக்கப்புறம் இதே போல ஒரு வார்த்தை கேட்டேன்..இன்ன வரைக்கும் அந்த வார்த்தை கேக்கறப்பவெல்லாம் எனக்கு சிரிப்பா வரும்..என்ன வார்த்தைடி? அரஅவரு.. எவரு அவரு? ச்சி..லூஸ¥..அரை ஹவர்..half an hour அப்படிங்கறததான் இப்படி சுருக்கிட்டானுங்க..

***

ரொம்ப தூரம் நடந்தோம்..டேவிட் இந்தா வந்திருச்சு இந்தா வந்திருச்சுன்னே எங்கள ரொம்பதூரம் நடக்கவெச்சிட்டான்..உனக்கு ஒன்னு தெரியுமா? நடுவுல சுடுகாடு ஒன்னு இருந்துச்சு..ஐயோ நான் சொல்லல..எனக்கு பயமா இருக்குடா…சொல்லுடி..இல்ல நான் சொல்லல..அந்த லூசுங்களுக்கு பேய்க்கதை சொல்றதுக்கு வேற நேரமே கிடைக்கலையா? அப்ப போய் சொல்லுச்சுங்க..ரோட்ல யாருமே இல்ல.. ரோட்டுக்கு சைட்ல சமாதி சமாதியா இருந்துச்சு..மேல சிலுவை.. எனக்கு பயமா போயிருச்சு..நான் சைடு பக்கமே திரும்பல..கைய இருக்கமா மூடிக்கிட்டு வேகவேகமா அவங்க கூடவே நடந்தேன்..திடீர்னு என்ன பண்ணுச்சுங்க தெரியுமா..என்ன விட்டுட்டு திடுதிடுன்னு ஓட ஆரம்பிச்சிருச்சுங்க..நான் அலறி அடிச்சுக்கிட்டு பின்னாலையே ஓடினேன்..

***

கொஞ்ச நேரம் கழிச்சு அதோ அங்கதான் யான செத்துக்கெடக்குன்னு காமிச்சான் டேவிட். அங்க கொஞ்சம் கூட்டமா இருந்துச்சு..எனக்கு என்னவோ மாதிரி ஆகிடுச்சு..நடந்து வந்த டயர்ட் வேற..வந்திருக்கவே கூடாதோன்னு தோணிச்சு..அங்க கொஞ்சம் பேர் நின்னுட்டிருந்தாங்க..எல்லாம் ஒல்லியா..கைலியும் பனியனும் போட்டுட்டு..யாரும் டேவிட் அளவுக்கு குண்டு இல்ல..ஐயாமாரு வீட்டு பிள்ளைங்களான்னு அவுங்க கேட்டாங்க..நான் யானையப் பாக்கவே இல்ல கொஞ்ச நேரம் வரைக்கும்..யானையத் தவிர வேற எல்லா இடத்தையும் பாத்திட்டிருந்தேன்..யூக்கலிப்டஸ் மரம்..அதோட ஸ்மெல்..உன்னி செடி..உன்னிப் பூ..ஆனா அத்தன ஸ்மலையும் தாண்டி ஒரு வேண்டாத ஸ்மல் அந்த இடத்தில் இருக்குற மாதிரி இருந்துச்சு..

***

யானையப் பாக்க பாவமா இருந்துச்சு தெரியுமா..தந்தமே இல்லை..யானை அவ்ளோ பெருசா இருந்துச்சு..துதிக்கை நல்லா சுருண்டு இருந்துச்சு..அதோட உடம்பு சைஸ¤க்கு துதிக்கை ரொம்ப சிறுசா தோனிச்சு..கண்ணு பளிச்சுன்னு திறந்திருந்துச்சு.. அதுல பூராம் ஈயா மொச்சிக்கிட்டு இருந்துச்சு..வாய்க்கு பக்கமும் ஈயா இருந்துச்சு..தந்தம் இருந்திருக்க வேண்டிய இடத்துல இன்னும் அதிகமா ஈ இருந்துச்சு..யானை அப்படியே ஹான்னு படுத்திருந்துச்சு..கால் நகம் எல்லாம் ரொம்ப பெரிசா இருந்துச்சு..தோல் நாங்க நடந்து வந்த தார் ரோடு மாதிரி கரடு முரடா இருந்துச்சு..ஏதேதோ பறவை சத்தம் கேட்டிட்டே இருந்துச்சு..கொஞ்சம் ஒரு மாதிரிதான் இருந்தது அந்த இடமே..யானை செத்து கிடந்த அந்த இடத்துக்கு பக்கத்தில அங்கிருந்த ஆட்கள் சிலர் பெரிய குழி தோண்டிட்டு இருந்தாங்க..நான் டேவிட் கிட்ட இந்த யானைய அந்த குழில போடுவாங்களான்னு கேட்டேன்..ஆமா பின்ன உன்னையா போடுவாங்கன்னு கேட்டான்..எவ்ளோ திமிர் அவனுக்கு..எப்படி தூக்குவாங்க அவ்ளோ பெரிய யானையன்னு நான் யோசிச்சிக்கிடே வந்தேன்..அவன் கிட்ட கேக்கல..அந்த திமிர் பிடிச்சவன் கிட்ட கேக்கனுங்கற அவசியம் இல்லன்னு நினைச்சுக்கிட்டேன்..இப்ப நினைச்சா சிரிப்பா வருது..

***

வரும்போது இன்னும் வெயில் ஜாஸ்திஆகிடுச்சு..எங்களால நடக்கவே முடியல..டேவிட் மட்டும் ஜாலியா இருந்தான்..குட்டன் தண்ணி வேணும் தண்ணிவேனும்னு வர்ற வழி எல்லாம் கேட்டுக்கிட்டே வந்தான்..சின்ன பையன் இல்லையா..அவன் எத்தனாப்புடி படிச்சான்? ம்ம்..அஞ்சாவதுன்னு நினைக்கிறேன்..ஆமா நீ ரொம்ப பெரிய பிள்ளையா இருந்தியாக்கும்? நாங்களும் எங்கயாச்சும் பைப் இருக்கான்னு தேடிகிட்டே இருந்தோம்..இல்லவே இல்ல..அவன் தண்ணி தண்ணின்னு கேக்கறதப் பாத்ததும் எனக்கும் தண்ணி தவிக்க ஆரம்பிச்சிடுச்சு..ஆனா வர்ற வழி எல்லாம் உன்னி பூ நிறைய இருந்தது..நீ உன்னிப்பூ பாத்திருக்கையா? இல்லையேடி.. அவ்ளோ க்யூட்டா இருக்கும்..குட்டி குட்டியா சிவப்பு கலர்ல பூ எல்லாம் ஒரே இடத்துல குவிஞ்சு அழகா ஒரே பூவா இருக்கும்..பூ வெளில சிவப்பு கலர்ல இருக்கும்..நடுவில மஞ்சள் கலரில இருக்கும்..சூப்பரா இருக்கும்..அதுல உன்னிப்பழம் கூட இருக்கும் தெரியுமா? ரொம்ப டேஸ்டா இருக்கும்..நம்ப குட்டித்தக்காளி இருக்கும்ல அது மாதிரி இருக்கும்..குட்டன் புலம்பல் ரொம்ப ஜாஸ்தி ஆகிடுச்சு..

***

ஒரு வழியா தேயிலை பறிச்சுக்கிட்டு இருந்த லைன்ஸ்மாருங்கல பாத்துட்டோம்..எவ்ளோ அழகா பறிப்பாங்க தெரியுமா? சிஸர்ஸ் மாதிரி ஒன்ன வெச்சுக்கிட்டு..கச்சக் கச்சக் கச்சக்ன்னு..எப்படிடி? ம்ம்..கச்சக் கச்சக் கச்சக்ன்னு..ஹ்..ஹா..ஹ்..ஹா..ஹா.ரொம்ப சிரிக்காதடா..பல்லு சுழிச்சுக்கப் போகுது..ம்ம்..அது சிஸர்ஸ் மாதிரி ஒரு பக்கம் தான் இருக்கும்..இன்னொரு சைட் வெட்டின இலைகள சேகரிக்கிற பை மாதிரி இருக்கும்..டப் டப்ன்னு வெட்டிட்டு..பின்னால தோள்ல போட்டிருக்கற பைல ஸ்டைல ரஜினி சிகரட்ட தூக்கிப்போடற மாதிரி போடுவாங்க..அதுவும் சிகரெட் கரெக்டா போய் உக்கார்ற மாதிரி பின்னால பையில போய் விழும்..எனக்கென்னவோ அவங்கள பாக்கும் போது கங்காருவோட ரிவர்ஸ் சைட் மாதிரி இருக்கும்..அழகா…வரிசையா நடந்து போவாங்க..

***

லைன்ஸ்காரங்க கிட்ட தண்ணி இருந்துச்சு..நான் டேவிட் அக்கா மூனு பேரும் தண்ணி நல்லா குடிச்சுக்கிட்டோம்..அந்த குட்டன் பயல் மட்டும் குடிக்கவேயில்ல தெரியுமா? அக்சுவலா அவன் தான் தண்ணி தண்ணின்னு கேட்டுட்டே வந்தான்..அவன் புலம்பல் தாங்க மாட்டாம தான் நாங்க லைன்ஸ்மாருங்க கிட்ட கேட்டோம்..அவன் கடைசிவரைக்கும் குடிக்கவேயில்ல..அவன் முகம் ஏதோ கோபமா இருக்குற மாதிரியே இருந்துச்சு..திக்கி திக்கி வேணாம் வேணாம்னு சொன்னான்..அவன் அண்ணன் டேவிட் குடிச்சான்..அப்பக்கூட அவன் கையப்புடிச்சு இழுத்து..எதோ திக்கி திக்கி சொன்னான்..அவன் பேசாம இருடா..அப்படியெல்லாம் சொல்லக்கூடாதுன்னு சொன்னான்..நான் என்னன்னு கேட்டேன்..சொல்லமாட்டேன்னுட்டான்..எனக்கு கோபம் கோபமா வந்திருச்சு..டேய் தண்ணி கேட்டலடா..தண்ணி கொடுக்கறாங்கல்லடா..வாங்கி குடிக்கவேண்டியதுதானடான்னு கேட்டேன்..நான் குடிக்கமாட்டேன்னு பிடிவாதமா இருந்துட்டான்..தலைய இங்கிட்டும் அங்கிட்டும் ஆட்டிக்கிட்டு அவன் அண்ணன முறைச்சுக்கிட்டு இருந்தான்..

***

அதுக்கப்புறம் அண்ணனும் தம்பியும் பேசிக்கவேயில்ல..குட்டன் ஏனோ எங்க பக்கதுலையே வர மாட்டென்னுட்டான்..உர்ன்னு வந்தான்..எங்களால நடக்கவேமுடியல..டேவிட்டுக்கு தான் மலையாளம் தெரியுமே..அவன்..அந்தப்பக்கம் போன டிராக்டர் ஒன்ன கை காமிச்சு ஏதோ அவிட இவிடன்னு பேசி எங்கள ஏத்திவிட்டுட்டான்..டிராக்டர்ல உக்காந்துட்டு வீடு வந்து சேர்ந்தோம்.. இனிமே இது மாதிரி யான செத்துச்சு..பூன செத்துச்சுன்னு பாக்க போகக்கூடாதுன்னு முடிவு செஞ்சோம்…

***

அவ்ளோ தான் கத. டேய்.. டேய்..தூங்கிட்டியா..ஸ்டுபிட்..
சரி தூங்குமூஞ்சி போய் தூங்கு….ம்ம்ம்ம்..என்னடா யோசிக்கற?
ம்ம்ம்..குட்டனப் பத்திதான்..

ஆமா அது என்ன ஹிந்திப்படம்டி? தீபாவளிக்கு துணி எடுத்தாச்சா? சொல்லுடி..
அடப்பாவி இன்னும் நீ கண்டுபிடிகக்லையா? டியூப் லைட்டா நீ.
தில்வாலே துல்கானியா லேஜாயேங்கே..அதுதான் தீவாளிக்கு துணி எடுத்தாச்சா!

ஒகே பை. தூங்கு. குட் நைட். குட் நைட்.

**

(நைட் ரொம்பநேரம் கண்ணுமுழிச்சு தன் ·பியான்ஸியுடன் பேசிக்கிட்டிருந்த அவன், அவள் கதை சொன்ன போது கீழே வரும் இந்த இடத்தில் மட்டும் தூங்கிவிட்டான்:)

குட்டன் ஏன் தண்ணி குடிக்கல தெரியுமா? எனக்கு அதுக்கப்புறம் தான் தெரியும்..டேவிட் சொன்னான்..நாங்க ரொம்ப அதட்டி கேட்டதுக்கப்புறம்..ஆட்டைக்கு சேத்துக்கமாட்டோம்டான்னு சொன்னதுக்கப்புறம் தான் அவனே சொன்னான்..எங்களுக்கு கோபம் கோபமா வந்துச்சு..எவ்ளோ திமிர் அந்த குட்டன் பயலுக்கு..இந்த வயசில அவனுக்கு எப்படி இதெல்லாம் தெரிஞ்சதுன்னு இப்போ நான் யோசிக்கறேன்..

இப்போ நான் குட்டனப் பாத்தேனா சப்பு சப்புன்னு நாலு அறை அவனுக்கு கொடுப்பேன்..ஏன்டா அவங்ககிட்ட தண்ணி வாங்கிக்குடிச்சா எந்தப்பக்கம்டா குறஞ்சு போயிடுவன்னு..

ஆனா அவன் சொல்லிருக்கான் : ஒரு ஆபிஸர் வீட்டு பையன், எப்படி லைன்ஸ்மாருங்க கிட்ட தண்ணி வாங்கிக்குடிக்கிறது?

***