லைன்ஸ்மாருங்க

(சிறுகதை)

நாங்க அப்பவெல்லாம் எங்க அப்பா தங்கியிருந்த க்வார்ட்டர்ஸ்க்குப் போவோம் தெரியுமா? எப்பவெல்லாம்டி? ம்ம்..படிச்சிட்டிருக்கப்போ. என்ன படிச்சிட்டிருந்த? குமுதமா? ம்ம்..உன் மூஞ்சி..ஸ்கூல் படிச்சிட்டிருந்தப்போ. ஓ நீ ஸ்கூல் எல்லாம் போயிருக்கியா? பரவாயில்லையே. ம்ம்..நாங்க போயிருக்கமே. சர்டிப்பிக்கேட் கூட வெச்சிருக்கேன் தெரியுமா? ம்ம்..குட்..வெரிகுட்..அதுசரி உங்க அப்பா ஏன் குவார்டர்ஸ்ல போய் தங்கினாரு? உங்க கூட எல்லாம் சண்டையா? போடா பொறுக்கி. அவர் அங்க வேலை செஞ்சாருடா. எங்க? குவார்ட்டர்ஸ்லயா? ஐயோ..என்ன ஒழுங்கா சொல்லவிடறயா? இப்போ தான் எனக்கு ப்ளாஷ்பேக் மூடே வந்திருக்கு..கொஞ்ச நேரம் சும்மா இரேன்.. நீ உன் டுபாகூர் கேர்ள்ப்ரண்ட்ஸ் பத்தி அள்ளிவிட்ட ரீல் எல்லாம் நான் பொறுமையா கேட்டேன்ல..மரியாதையா என் டீ எஸ்டேட் ப்ளாஷ்பேக்க கேக்கற புரியுதா? என்னம்மா? தோ வாரேன்..அப்படியே லைன்ல இரு..அம்மா கூப்பிடறாங்க..வாரேன்..

ஹலோ..ஹலோ..எங்கடாபோய்ட்ட? ஸ்டுபிட்..இடியட்..ம்கும் ம்க்கும்..ஐயோ வாயேன்டா..ஹலோ..ஹாங்..யாரு? ய்யாழு? ஹை..கௌசல்யாவா? உங்க மாமா எங்கடி போனாரு? மா..மா..அ..ங்..க.. யா..ன.(கீச் கீச் என்று கத்துகிறாள் சிரிக்கிறாள்)..டக் டொக் ..டொக்..ஹலோ..யாராச்சும் எடுங்களேன்..தடியா..டக் டொக்..காது வலிக்குது..கட் பண்ணப்போறேன்டா..ஹலோ..தடியா..என்னடி? எங்கடா போன? உனக்கு ஒன்னு தெரியுமா? நான் யான பாத்தனே? எங்க தெருவுக்குள்ள வந்துச்சு..ம்ம்க்கும்..ஐயோ பப்பு யானைய பாத்துச்சா..ஜுஜுஜு..எருமமாடு..யானை பாக்கறதா இருந்த கண்ணாடி முன்ன போய் பாக்கறதுதான? நல்லா பன்னிக்குட்டி மாதிரி இருந்துக்கிட்டு யான பாத்தேன்னு கொஞ்சரதபாரு..வோய்..யாரப்பாத்துடி பன்னிக்குட்டின்னு சொன்ன..நீ பன்னிக்குட்டி..உன்….போதும் போதும்..அத்தோட நிப்பாட்டிக்கடா..அப்புறம் நான் பத்ரகாளியாயிடுவேன்டா..ஆகா இப்ப மட்டும் என்னவாம்..அப்படித்தான இருக்க? போடா நீ தான்டா எரும..யான..எல்லாமே..நீ தான்..போடா நான் காத பொத்திக்கிட்டேன்..நீ தான்.. நான் கேக்கல..கேக்கல..கேக்கல..என்னம்மா வேணும் உனக்கு இப்போ? ஏன் தொனதொனன்ட்டு இருக்க? அடியேய்..காலைல இருந்து ரெண்டு பேரும் பேசிட்டு தான இருக்கீங்க..கல்யாணம் செஞ்சிட்டு பேசத்தான போறீங்க..அது எங்களுக்கு தெரியும்..உனக்கு என்ன வேணும் அத மட்டும் சொல்லு? மூஞ்சிய கீஞ்சிய கழுவிட்டு வந்து வெளக்க பொறுத்தி வைடி..அதுக்கப்புறம் பேசுடி..வேணாம்னா சொல்றேன்..சரிடா..நான் அப்புறமா பேசறேன்..அடப்பாவி..எஸ்கேப் ஆயிட்டான்..

***

வீடெல்லாம் பெருசு பெருசா இருக்கும் தெரியுமா? ஒவ்வொரு ரூமும் ரொம்ப பெருசா இருக்கும். வீட்டுக்கு கடைசில கிச்சன் இருக்கும். வீட்டுக்கு பின்னாடி சின்ன தோட்டம் இருக்கும். நான் மொத மொத போனப்போ..கிச்சன் கதவத் திறந்தனா..ஹையோ..எப்படி இருந்துச்சு தெரியுமா? பின்னால பூராம் மலை..பூராம் பச்சை பச்சையா இருந்துச்சு..எனக்கு அப்படியே ஹையோன்னு இருந்துச்சு..நானும் எங்க அக்காவும் கீழ இறங்கி புல் தரையில நல்லா சத்தம் போட்டு கத்திக்கிட்டு குதி குதின்னு குதிச்சோம்.. நிறைய குட்டி குட்டி குருவியா..குருவியா என்னன்னு தெரியல..இருந்துச்சு..அத வெரட்டிக்கிட்டே போனோம்..அங்க க்யூட்டா ஒரு செம்பருத்தி செடி இருக்கும் தெரியுமா? செடி பூராம் செம்பருத்தியா பூத்திருக்கும்..அப்புறம் கீழ கூட விழுந்திருக்கும்..நாங்க எடுத்து தலைக்கு வெச்சிக்குவோம்..அப்புறம் அதக் காயவெச்சு அரச்சு..அம்மா என்ன என்னவோ போடுவாங்க..தலைக்கு ஷாம்புவா யூஸ் பன்னுவோம்…வீட்டுக்கு முன்னாடி குட்டி குட்டியா புல் மொளச்சிருக்கும்..எல்லாம் ஒரே ஹைட்ல இருக்கும் தெரியுமா..நாங்க நல்லா படுத்து உருளுவோம்..முன்னால இருக்குற அந்த தோட்டம்..நல்லா பெருசா ப ஷேப்புல இருக்கும்..சுத்தி வேலி போட்டிருப்பாங்க..அங்க அங்க பாறையா இருக்கும்..நானும் எங்க அக்காவும் டேவிட்டும் குட்டனும் அதில தான் ஏறி நின்னு மீட்டிங்ல பேசுற மாதிரி பேசுவோம்..யாரு? டேவிட்டா? சொல்லவேயில்ல..பொறுடா..கதைய மட்டும் கேளு..ம்ம்..சரிங்க மேடம்..அப்பவெல்லாம் எங்க அக்கா பெரிய வாயாடி..இப்ப மட்டும் என்னவாம்? பொறுக்கி..வாய மூடு.. இங்கிலீஷ்ல பேசுதுகளாம்..மேல ஏறி நின்னுக்கிட்டு..கைய மைக் மாதிரி வெச்சுக்கிட்டு..லேடீஸ் அன்ட் ஜென்டில்மேன் அப்படீன்னு ஆரம்பிக்குங்க…அப்புறம் என்ன பேசறதுன்னு தெரியாது..அஸ¤புஸ¤இவிஸ்குவிஸ்..ன்னு ஏதோ உளருவோம்..நீ இப்ப வரைக்கும் அப்படித்தானடி இங்கிலீஸ் பேசற? இருடா உன்ன வந்து கவனிச்சுக்கறேன்..யாரு இங்கிலீஸ் ஒழுங்கா பேசமாட்டா? நான் ஹிந்தியே நல்லா பேசுவனே? ஹிந்தியா? சொல்லவேயில்ல? ம்ம்ம்..தீவாளிக்கு துணி எடுத்தாச்சா படம் பாத்துதான் நான் மொதோ ஹிந்தியே கத்துக்கிட்டேன்..என்னது தீவாளிக்கு துணி எடுத்தாச்சாவா? பொங்கலே வரப்போகுதுடி.. அது என்ன தீவாளிக்கு துணி எடுத்தாச்சா படம்?..ம்ம்ம்..சொல்லமாட்டேன் கண்டுபிடிடா பாப்போம் ..

***

டேவிட்டோட அப்பாவும் எங்க அப்பாவும் ஆபிஸரா இருந்தாங்க..நீ பாக்கனுமே..எங்க அப்பா வீட்டுக்கு வர்றப்போ, பின்னாலயே ப்யூன் பைல எடுத்துட்டு வர்றத..ஏன் உங்க அப்பா ஆபிஸ்ல வேலை செய்யாமா தூங்குவாரோ? வோய்..உன்ன மாதிரின்னு நினைச்சியா..அவ்ளோ வேலை பொறுக்கி..ம்ம்..டேவிட்டும் குட்டனும் அண்ணன் தம்பிங்க. ம்ம்..அப்புறம் என்ன அக்கா தங்கச்சியாவா இருப்பாய்ங்க..கதைய சொல்லுடி..சும்மா..சன் டீவி நாடகம் மாதிரி இழுத்துக்கிட்டு இருக்க…உனக்கு நக்கல் ஜாஸ்தியாகிடுச்சுடா..வந்து கவனிச்சுக்கறேன்..டேவிட் பத்தி சொல்லுடி..ம்ம்..டேவிட் நல்ல குண்டு குண்டுன்னு குண்டு பூசனி மாதிரி இருப்பான்..நல்லா ஹைட்டா..கண்ணு பூனக்கண்ணு..உன் கண்ணு மாதிரி..இல்ல அதவிட பூனக்கண்ணு..எங்க கேங்கலயே அவனுக்கு மட்டும் தான் மலையாளம் தெரியும்..அதுனால அவனுக்கு திமிரு ஜாஸ்தி..ரொம்ப பண்ணிக்குவான்..குட்டன் அமைதியானவன்..திக்கு வாய்…அதனால ரொம்ப பேசமாட்டான்.. குட்டனுக்கு மலையாளம் தெரியாதா? பேரு மலையாளப்பேரு மாதிரிதான இருக்கு? ஐயே பேரு அதில்ல..நாங்க குட்டன் குட்டன்னு தான் கூப்பிடுவோம்..உண்மையான பேரு என்னன்னு எனக்கு தெரியல..தெரியலயா? எத்தானாப்பு படிச்சிட்டிருந்த அப்போ? ம்ம்..ஒரு ஆறவது இருக்கும்னு நினைக்கிறேன்..

***

நீ குட்டன் வீட்ட பாக்கனுமே..அவ்ளோ டெக்கரேட் பண்ணி வெச்சிருப்பாங்க..எனக்கு தெரிஞ்சு அவ்ளோ அழகா டெக்கரேட் யாரும் செஞ்சது இல்ல..பெரிய இவ..உலகம் பூராம் சுத்திருக்கா..வோய் டுபுக்கு அதான் எனக்கு தெரிஞ்சளவுக்குன்னு சொல்றோம்ல..மரத்தோட அடிப்பாகத்த வேரோட அறுத்திட்டு வந்து..அதுக்கு அழகா வார்ணீஷ் பெயின்ட் எல்லாம் அடிச்சு வெச்சிருப்பாங்க..நல்லா வேர் வேரா பிண்ணிக்கிட்டு இருக்கறமாதிரி எல்லாம் என்னவோ செஞ்சிருப்பாங்க..அழகா பெயிண்ட் அடிச்சிருப்பாங்க..அப்ப எல்லாம் டியூப் லைட் இல்லன்னு நினைக்கிறேன்…நீ இருக்கற கிராமத்துல இப்பவரைக்கும் டியூம் லைட் இல்லலடி..உத வாங்குவ..நாங்க கிராமத்துல இருக்கமா? சென்னைடா..செம்பட்ட தலையா..என்னாது? செம்பட்ட தலையா? உனக்கு திமிராயிடுச்சுடி..உஷ்..கதைய கேளு..அப்போ எல்லாம் குண்டு பல்ப் தான்..உன் சைஸ்க்கு ஏத்தமாதிரியே உங்க அப்பா பல்ப் வெச்சிருந்திருக்காருடி..கொஞ்சநேரம் அமைதியா இருக்கியா? குண்டு பல்ப் எல்லாம் கம்பெனிலையே கொடுத்திடுவாங்க.. உங்க அப்பா என்ன கிழக்கிந்திய கம்பனிலையா வேலை பாத்தாரு? வந்தேன் அடி பிச்சிருவேன்..டீ எஸ்டேட் டா..டீ எஸ்டேட்..அது என்னவோ பேரு..க்ளன்மேரி..ம்ம்..அதான்..கொடுவால கூட வேலைபாத்திருக்காரு..கொடுவாவா? என்ன வாயில ஓடுமே அதுவா? ஐயோ..அது ஒரு எஸ்டேட்..பாம்பனார் பக்கத்துல இருக்கு..என்னது பாம்பன் பாலமா? ஐயோ..

***

பாம்பனார் தெரியாதா? குமிளிக்கு அடுத்து இருக்கு..ஓ..நான் குமிளியே போனதில்ல தெரியுமா? ரொம்ப முக்கியம்….அடிப்பாவி..ஒரு நாள் காலையில நல்லா பொங்கல ஒரு கட்டு கட்டிட்டு..ஒரு முயல் குட்டிகூட விளையாடிட்டு இருந்தமா..ஐ..ஒரு முயல் குட்டி இன்னொரு முயல்குட்டியிடம் விளையாடுகிறது..டேய்..அக்காவும் விளையாண்டாடா..ஓ அப்படியா..ரைட்டு விடு..மேல சொல்லு..அப்பதான் டேவிட் வேகவேகமா மூச்சிரைக்க ஓடிவந்தான்..வந்து ஒரு யானை செத்துப்போச்சு..பாக்க வர்றீங்களான்னு கேட்டான். உடனே சரின்னு சொல்லிட்டோம்..நாங்க முயல் குட்டிய கூண்டில விட்டுட்டு அவன் கூட கிளம்பினோம்..வீட்ல கூட எங்க போறோம்னு சொல்லல..

***

அன்னிக்கின்னு பாத்து வெயிலு கொளுத்துச்சு பாத்துக்க..ஓ அந்த வெயில்ல தான் நீ கருப்பாயிட்டயோ..ஆமா இவரு பெரிய சிவப்புன்னு நினைப்பு..டேவிட் தான் லீடர்..அவனுக்கு தான் வழி தெரியும்..மலையாளமும் தெரியும்..நான், குட்டன்,அக்கா எல்லாரும் போனோம்..வழி பூராம் தார் ரோட்டுக்கு அந்தப்பக்கமும் இந்தப்பக்கமும் ஒரே மரம்…என்னது ஒரு மரம் தானா? ஒரேஏஏஏஏஏஏஏ மரமா இருந்துச்சு..என்ன மரம் தெரியுமா? தெரியாது..ஐயோ அவ்ளோ அழகா இருக்கும்..அது செடி மாதிரியும் இருக்காது..மரம் மாதிரியும் இருக்காது..செடிமரம்னு வெச்சுக்க..ம்ம்..சரி வெச்சுக்கறேன்..இலை எப்படி தெரியுமா இருக்கும்? நடுவுல ஒரு வெயின் மாதிரி, மீனுக்கு இருக்கும்ல நடுவுல எலும்பு..நல்லா திம்பா போல தெரியுதே..எலும்பு மாதிரி இருக்கும்..அதுல இருந்து இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் அடர்த்தியா நெருக்கமா ரொம்ப மெல்லிசா நீளமா பச்சை பச்சையா இலை இருக்கும்..மரம் பூராம் அந்த இலை தான் இருக்கும்..அடர்த்தியா…பாக்கவே அவ்ளோ அழகா இருக்கும்…ரோட்டுக்கு இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் டீ எஸ்டேட் இருக்கும்..அங்க லைன்ஸ்மார் எல்லாம் தேயிலை பரிச்சிட்டு இருப்பாங்க…

***

லைன்ஸ்மாருங்களா? அது என்ன லைன்ஸ்மாருங்க? ஹா ஹா அது ஒரு விசித்திரமான பேரு..எனக்கே அத யாரவது சொல்லக்கேட்டா சிரிப்பு வரும்…லைன்ஸ்மாருங்கன்னா லைன் வீட்டில குடியிருக்கவங்கன்னு அர்த்தம்..அவங்க தோட்டத்தில வேலை செய்யறவங்க..லைனா அவங்க வீடு இருக்கும்..பூராம் மஞ்சள் பெயின்ட் அடிச்சிருக்கும் தெரியுமா..பாக்கறதுக்கு ஒரே மாதிரி சின்னச்சின்னதா அழகா இருக்கும்..அங்க குடியிருக்கவங்களத்தான் லைன்ஸ்மாருங்கன்னு சொல்லுவாங்க..ஆனா எனக்கு அந்தப் பேரு பிடிக்கவே பிடிக்காது..அது என்ன இங்கிலீஸ¤ம் தமிழும் கலந்த பேரு..ஒன்னு இங்கிலீஷ்ல சொல்லனும் இல்லைன்னா தமிழ்ல சொல்லனும்..சை..நான் மெட்ராஸ்க்கு வந்ததுக்கப்புறம் இதே போல ஒரு வார்த்தை கேட்டேன்..இன்ன வரைக்கும் அந்த வார்த்தை கேக்கறப்பவெல்லாம் எனக்கு சிரிப்பா வரும்..என்ன வார்த்தைடி? அரஅவரு.. எவரு அவரு? ச்சி..லூஸ¥..அரை ஹவர்..half an hour அப்படிங்கறததான் இப்படி சுருக்கிட்டானுங்க..

***

ரொம்ப தூரம் நடந்தோம்..டேவிட் இந்தா வந்திருச்சு இந்தா வந்திருச்சுன்னே எங்கள ரொம்பதூரம் நடக்கவெச்சிட்டான்..உனக்கு ஒன்னு தெரியுமா? நடுவுல சுடுகாடு ஒன்னு இருந்துச்சு..ஐயோ நான் சொல்லல..எனக்கு பயமா இருக்குடா…சொல்லுடி..இல்ல நான் சொல்லல..அந்த லூசுங்களுக்கு பேய்க்கதை சொல்றதுக்கு வேற நேரமே கிடைக்கலையா? அப்ப போய் சொல்லுச்சுங்க..ரோட்ல யாருமே இல்ல.. ரோட்டுக்கு சைட்ல சமாதி சமாதியா இருந்துச்சு..மேல சிலுவை.. எனக்கு பயமா போயிருச்சு..நான் சைடு பக்கமே திரும்பல..கைய இருக்கமா மூடிக்கிட்டு வேகவேகமா அவங்க கூடவே நடந்தேன்..திடீர்னு என்ன பண்ணுச்சுங்க தெரியுமா..என்ன விட்டுட்டு திடுதிடுன்னு ஓட ஆரம்பிச்சிருச்சுங்க..நான் அலறி அடிச்சுக்கிட்டு பின்னாலையே ஓடினேன்..

***

கொஞ்ச நேரம் கழிச்சு அதோ அங்கதான் யான செத்துக்கெடக்குன்னு காமிச்சான் டேவிட். அங்க கொஞ்சம் கூட்டமா இருந்துச்சு..எனக்கு என்னவோ மாதிரி ஆகிடுச்சு..நடந்து வந்த டயர்ட் வேற..வந்திருக்கவே கூடாதோன்னு தோணிச்சு..அங்க கொஞ்சம் பேர் நின்னுட்டிருந்தாங்க..எல்லாம் ஒல்லியா..கைலியும் பனியனும் போட்டுட்டு..யாரும் டேவிட் அளவுக்கு குண்டு இல்ல..ஐயாமாரு வீட்டு பிள்ளைங்களான்னு அவுங்க கேட்டாங்க..நான் யானையப் பாக்கவே இல்ல கொஞ்ச நேரம் வரைக்கும்..யானையத் தவிர வேற எல்லா இடத்தையும் பாத்திட்டிருந்தேன்..யூக்கலிப்டஸ் மரம்..அதோட ஸ்மெல்..உன்னி செடி..உன்னிப் பூ..ஆனா அத்தன ஸ்மலையும் தாண்டி ஒரு வேண்டாத ஸ்மல் அந்த இடத்தில் இருக்குற மாதிரி இருந்துச்சு..

***

யானையப் பாக்க பாவமா இருந்துச்சு தெரியுமா..தந்தமே இல்லை..யானை அவ்ளோ பெருசா இருந்துச்சு..துதிக்கை நல்லா சுருண்டு இருந்துச்சு..அதோட உடம்பு சைஸ¤க்கு துதிக்கை ரொம்ப சிறுசா தோனிச்சு..கண்ணு பளிச்சுன்னு திறந்திருந்துச்சு.. அதுல பூராம் ஈயா மொச்சிக்கிட்டு இருந்துச்சு..வாய்க்கு பக்கமும் ஈயா இருந்துச்சு..தந்தம் இருந்திருக்க வேண்டிய இடத்துல இன்னும் அதிகமா ஈ இருந்துச்சு..யானை அப்படியே ஹான்னு படுத்திருந்துச்சு..கால் நகம் எல்லாம் ரொம்ப பெரிசா இருந்துச்சு..தோல் நாங்க நடந்து வந்த தார் ரோடு மாதிரி கரடு முரடா இருந்துச்சு..ஏதேதோ பறவை சத்தம் கேட்டிட்டே இருந்துச்சு..கொஞ்சம் ஒரு மாதிரிதான் இருந்தது அந்த இடமே..யானை செத்து கிடந்த அந்த இடத்துக்கு பக்கத்தில அங்கிருந்த ஆட்கள் சிலர் பெரிய குழி தோண்டிட்டு இருந்தாங்க..நான் டேவிட் கிட்ட இந்த யானைய அந்த குழில போடுவாங்களான்னு கேட்டேன்..ஆமா பின்ன உன்னையா போடுவாங்கன்னு கேட்டான்..எவ்ளோ திமிர் அவனுக்கு..எப்படி தூக்குவாங்க அவ்ளோ பெரிய யானையன்னு நான் யோசிச்சிக்கிடே வந்தேன்..அவன் கிட்ட கேக்கல..அந்த திமிர் பிடிச்சவன் கிட்ட கேக்கனுங்கற அவசியம் இல்லன்னு நினைச்சுக்கிட்டேன்..இப்ப நினைச்சா சிரிப்பா வருது..

***

வரும்போது இன்னும் வெயில் ஜாஸ்திஆகிடுச்சு..எங்களால நடக்கவே முடியல..டேவிட் மட்டும் ஜாலியா இருந்தான்..குட்டன் தண்ணி வேணும் தண்ணிவேனும்னு வர்ற வழி எல்லாம் கேட்டுக்கிட்டே வந்தான்..சின்ன பையன் இல்லையா..அவன் எத்தனாப்புடி படிச்சான்? ம்ம்..அஞ்சாவதுன்னு நினைக்கிறேன்..ஆமா நீ ரொம்ப பெரிய பிள்ளையா இருந்தியாக்கும்? நாங்களும் எங்கயாச்சும் பைப் இருக்கான்னு தேடிகிட்டே இருந்தோம்..இல்லவே இல்ல..அவன் தண்ணி தண்ணின்னு கேக்கறதப் பாத்ததும் எனக்கும் தண்ணி தவிக்க ஆரம்பிச்சிடுச்சு..ஆனா வர்ற வழி எல்லாம் உன்னி பூ நிறைய இருந்தது..நீ உன்னிப்பூ பாத்திருக்கையா? இல்லையேடி.. அவ்ளோ க்யூட்டா இருக்கும்..குட்டி குட்டியா சிவப்பு கலர்ல பூ எல்லாம் ஒரே இடத்துல குவிஞ்சு அழகா ஒரே பூவா இருக்கும்..பூ வெளில சிவப்பு கலர்ல இருக்கும்..நடுவில மஞ்சள் கலரில இருக்கும்..சூப்பரா இருக்கும்..அதுல உன்னிப்பழம் கூட இருக்கும் தெரியுமா? ரொம்ப டேஸ்டா இருக்கும்..நம்ப குட்டித்தக்காளி இருக்கும்ல அது மாதிரி இருக்கும்..குட்டன் புலம்பல் ரொம்ப ஜாஸ்தி ஆகிடுச்சு..

***

ஒரு வழியா தேயிலை பறிச்சுக்கிட்டு இருந்த லைன்ஸ்மாருங்கல பாத்துட்டோம்..எவ்ளோ அழகா பறிப்பாங்க தெரியுமா? சிஸர்ஸ் மாதிரி ஒன்ன வெச்சுக்கிட்டு..கச்சக் கச்சக் கச்சக்ன்னு..எப்படிடி? ம்ம்..கச்சக் கச்சக் கச்சக்ன்னு..ஹ்..ஹா..ஹ்..ஹா..ஹா.ரொம்ப சிரிக்காதடா..பல்லு சுழிச்சுக்கப் போகுது..ம்ம்..அது சிஸர்ஸ் மாதிரி ஒரு பக்கம் தான் இருக்கும்..இன்னொரு சைட் வெட்டின இலைகள சேகரிக்கிற பை மாதிரி இருக்கும்..டப் டப்ன்னு வெட்டிட்டு..பின்னால தோள்ல போட்டிருக்கற பைல ஸ்டைல ரஜினி சிகரட்ட தூக்கிப்போடற மாதிரி போடுவாங்க..அதுவும் சிகரெட் கரெக்டா போய் உக்கார்ற மாதிரி பின்னால பையில போய் விழும்..எனக்கென்னவோ அவங்கள பாக்கும் போது கங்காருவோட ரிவர்ஸ் சைட் மாதிரி இருக்கும்..அழகா…வரிசையா நடந்து போவாங்க..

***

லைன்ஸ்காரங்க கிட்ட தண்ணி இருந்துச்சு..நான் டேவிட் அக்கா மூனு பேரும் தண்ணி நல்லா குடிச்சுக்கிட்டோம்..அந்த குட்டன் பயல் மட்டும் குடிக்கவேயில்ல தெரியுமா? அக்சுவலா அவன் தான் தண்ணி தண்ணின்னு கேட்டுட்டே வந்தான்..அவன் புலம்பல் தாங்க மாட்டாம தான் நாங்க லைன்ஸ்மாருங்க கிட்ட கேட்டோம்..அவன் கடைசிவரைக்கும் குடிக்கவேயில்ல..அவன் முகம் ஏதோ கோபமா இருக்குற மாதிரியே இருந்துச்சு..திக்கி திக்கி வேணாம் வேணாம்னு சொன்னான்..அவன் அண்ணன் டேவிட் குடிச்சான்..அப்பக்கூட அவன் கையப்புடிச்சு இழுத்து..எதோ திக்கி திக்கி சொன்னான்..அவன் பேசாம இருடா..அப்படியெல்லாம் சொல்லக்கூடாதுன்னு சொன்னான்..நான் என்னன்னு கேட்டேன்..சொல்லமாட்டேன்னுட்டான்..எனக்கு கோபம் கோபமா வந்திருச்சு..டேய் தண்ணி கேட்டலடா..தண்ணி கொடுக்கறாங்கல்லடா..வாங்கி குடிக்கவேண்டியதுதானடான்னு கேட்டேன்..நான் குடிக்கமாட்டேன்னு பிடிவாதமா இருந்துட்டான்..தலைய இங்கிட்டும் அங்கிட்டும் ஆட்டிக்கிட்டு அவன் அண்ணன முறைச்சுக்கிட்டு இருந்தான்..

***

அதுக்கப்புறம் அண்ணனும் தம்பியும் பேசிக்கவேயில்ல..குட்டன் ஏனோ எங்க பக்கதுலையே வர மாட்டென்னுட்டான்..உர்ன்னு வந்தான்..எங்களால நடக்கவேமுடியல..டேவிட்டுக்கு தான் மலையாளம் தெரியுமே..அவன்..அந்தப்பக்கம் போன டிராக்டர் ஒன்ன கை காமிச்சு ஏதோ அவிட இவிடன்னு பேசி எங்கள ஏத்திவிட்டுட்டான்..டிராக்டர்ல உக்காந்துட்டு வீடு வந்து சேர்ந்தோம்.. இனிமே இது மாதிரி யான செத்துச்சு..பூன செத்துச்சுன்னு பாக்க போகக்கூடாதுன்னு முடிவு செஞ்சோம்…

***

அவ்ளோ தான் கத. டேய்.. டேய்..தூங்கிட்டியா..ஸ்டுபிட்..
சரி தூங்குமூஞ்சி போய் தூங்கு….ம்ம்ம்ம்..என்னடா யோசிக்கற?
ம்ம்ம்..குட்டனப் பத்திதான்..

ஆமா அது என்ன ஹிந்திப்படம்டி? தீபாவளிக்கு துணி எடுத்தாச்சா? சொல்லுடி..
அடப்பாவி இன்னும் நீ கண்டுபிடிகக்லையா? டியூப் லைட்டா நீ.
தில்வாலே துல்கானியா லேஜாயேங்கே..அதுதான் தீவாளிக்கு துணி எடுத்தாச்சா!

ஒகே பை. தூங்கு. குட் நைட். குட் நைட்.

**

(நைட் ரொம்பநேரம் கண்ணுமுழிச்சு தன் ·பியான்ஸியுடன் பேசிக்கிட்டிருந்த அவன், அவள் கதை சொன்ன போது கீழே வரும் இந்த இடத்தில் மட்டும் தூங்கிவிட்டான்:)

குட்டன் ஏன் தண்ணி குடிக்கல தெரியுமா? எனக்கு அதுக்கப்புறம் தான் தெரியும்..டேவிட் சொன்னான்..நாங்க ரொம்ப அதட்டி கேட்டதுக்கப்புறம்..ஆட்டைக்கு சேத்துக்கமாட்டோம்டான்னு சொன்னதுக்கப்புறம் தான் அவனே சொன்னான்..எங்களுக்கு கோபம் கோபமா வந்துச்சு..எவ்ளோ திமிர் அந்த குட்டன் பயலுக்கு..இந்த வயசில அவனுக்கு எப்படி இதெல்லாம் தெரிஞ்சதுன்னு இப்போ நான் யோசிக்கறேன்..

இப்போ நான் குட்டனப் பாத்தேனா சப்பு சப்புன்னு நாலு அறை அவனுக்கு கொடுப்பேன்..ஏன்டா அவங்ககிட்ட தண்ணி வாங்கிக்குடிச்சா எந்தப்பக்கம்டா குறஞ்சு போயிடுவன்னு..

ஆனா அவன் சொல்லிருக்கான் : ஒரு ஆபிஸர் வீட்டு பையன், எப்படி லைன்ஸ்மாருங்க கிட்ட தண்ணி வாங்கிக்குடிக்கிறது?

***

3 thoughts on “லைன்ஸ்மாருங்க

  1. * very nice story.* sirukathai nu sollitu periyaaaaaaaa kathaiya irukae?* Vazhakamana twist Illayae?* Muthu thriller story eludurada vittutara?(marriage agiducho?)* Any way good story* Keep posting Muthu.

    Like

  2. Anu: Thanks for the comment.*thanks* ezhutha ezhutha vanthiduchu. descriptive! enna panrathu, tried differently.*twist mattumae mukiyam alla?!*thriller story theernthu pochupa, unkitta iruntha sollen, pls*again thanks*you know, i will post.dhana: incidents?! yes, its real.

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s