இன்சிடென்ட்ஸ்-9

(இதற்கு முந்தைய பகுதிகளை சைடு மெனுவில் பார்க்கவும்!)

(இன்சிடென்ட்ஸ்-6 இன் தொடர்ச்சி. )

ஸ்ஸில் ஏறக்குறைய மரண ஓலங்கள் தான். அந்த சத்தத்திலேயே மிகவும் சத்தமாக இருந்தது எங்களது ஹிஸ்டரி மேடத்தின் குரல் தான். ஜீஸஸ் ஜீஸஸ் என்கிற அவரது பிரார்த்தனை பஸ்ஸின் கம்பிகளில் பட்டு எதிரொலித்து மூடியிருந்த கண்ணாடி ஜன்னலில் மீதமிருந்த கொஞ்சம் இடைவெளியில் விழுந்தடித்துக்கொண்டு ஓடியது. முதலில் எங்களுக்கு – பின்னால் கடைசி சீட்டில் அமர்ந்திருந்த எங்களுக்கு – ஒன்றுமே புரியவில்லை. (எப்பதான்டா உனக்கு முதல்லயே புரிஞ்சிருக்கு, சொல்லு?)

ஏதோ மிகப்பெரிய கல்லில் தான் பஸ் மோதிவிட்டது என்று நாங்கள் நினைத்தோம். அப்புறம் பின் கண்ணாடியின் வழியாகப் பார்த்தபோது தான், எங்க பஸ் மோதியதால் உடைபட்டு பாதி மட்டுமே நின்று கொண்டிருந்த அந்த அரசு டவுன் பஸ் தெரிந்தது. “ஐயோ ஆக்ஸிடென்ட்டா” என்று நாங்கள் ஒரு சேர கத்துவதற்குள், பஸ்ஸிலிருந்து கூக்குரல்கள் கேட்க ஆரம்பித்துவிட்டன. ஒரு அமில வாசனை, தகரம் எரியும் வாசனை, மெசின்களின் வாசனை பஸ் முழுவதும் நிறைந்திருந்தது.

பஸ் நிலை தடுமாறி ரோட்டை விட்டு இறங்கப் பார்த்தது. ரோட்டுக்கு அந்த பக்கமும் இந்த பக்கமும் கரடு முரடான குழிகள். குழிகள் தோறும் முட்புதர்கள். குழிகள் மிகுந்த ஆழமாக இருந்ததைப் போன்று தோன்றியது. எங்களது டிரைவர், பஸ்ஸை கவிழ்த்துவிடாமல், எதிரே இருந்த அந்த பெரிய மரத்தில் மோதிவிடாமல், மிகுந்த சாமர்த்தியத்தோடு ஒருவழியாக நிறுத்திவிட்டார். ஆனால் பஸ் ஒரு பக்கம் சாய்ந்து கொண்டு நிற்பது மட்டும் நன்றாகத் தெரிந்தது.(கண்ணாடிய ஒழுங்கா போடு!) இல்லீன்னா என் ப்ரண்ட் கணேஷ் ஏன் கோணலா நிக்கனும்? பஸ் நின்று விட்ட பிறகு பெட்ரோல் லீக் ஆகி பஸ் வெடித்துவிடுமோ என்கிற பயம் என்னை சூழ்ந்து கொண்டது.(நீ படம் பாக்கறத கொஞ்சம் குறைக்கிறது பெட்டர்!) எனக்கு வியர்க்க ஆரம்பித்தது. (பயம் வந்துவிட்டது என்று சொன்னவுடன், வியர்க்க ஆரம்பித்து விட்டது என்கிற வாக்கியம் தானகவே வந்து தொற்றிக்கொள்கிறது. என்ன செய்ய!) பஸ் முழுவதும் கேர்ல்ஸ் வாய்ஸ் பல தெய்வங்களையும் அழைத்துக் கொண்டிருந்தது. (பாய்ஸ் எல்லாம் என்னப்பா செஞ்சிக்கிட்டு இருந்தாய்ங்க? ஆமா ஆமா நீ எங்க அவிங்களப் பாத்திருக்கபோற?!) என் ப்ரண்ட் யாரை அழைத்துக்கொண்டிருக்கிறாள் என்று தேடினேன். (சொன்னனா?) எட்டி எட்டி பார்த்து, கடைசியில் அவளை ஸ்பாட் செய்த பொழுது, அவள் தன் சீட்டில் அமைதியாக உட்கார்ந்து, எங்கள் பக்கம் பார்த்துக்கொண்டிருந்தாள். (எங்கள் பக்கமா? என் பக்கம்னு தானா சொல்ல வந்த? ஒழுங்கா சொல்லிடு!) (பிற்பாடு என்னைத் தானே தேடிக்கொண்டிருந்தாய் என்று கேட்ட பொழுது திட்டவட்டமாக மறுத்து விட்டாள்)

கொஞ்சம் கூக்குரல்கள் எல்லாம் அடங்கிய பிறகு, வெளியேறுவது எப்படி என்கிற சிந்தனை வந்தது.(ஆமா பெரிய சிந்தனை சிற்பி இவரு!) ஸ்டூடண்ட்ஸ் யாருக்கும் அபாயமான பெரிய அடி ஒன்றும் இல்லை. முன்னால் உட்கார்ந்திருந்த +1 மாணவர்கள் சிலரின் மண்டை மட்டுமே உடைந்திருந்தது.(சந்தோஷமா இருந்திருப்பியே!) அந்த ரணகளத்தில் கூட என் ப்ரண்ட் செல்வக்குமார் கமெண்ட் அடித்தான் : இப்ப proove பண்ணிடலாம்டா அவிங்க மண்டையில களிமண் தான் இருக்குன்னு. டிரைவருக்கு பலத்த அடி. அவர் ஸ்டியரிங்கில் மாட்டிக்கொண்டார். (பிறகு நாங்க பஸ்ஸை விட்டு இறங்கி, டிரைவரை ஆம்புலனஸ் வந்து தூக்கி சென்றவுடன் தான், ஸ்டியரிங் ஒரு டிசைனா நெளிஞ்சிருந்ததைப் பார்த்தோம்.) டிரைவர் உட்கார்ந்திருந்த பகுதி ஏறக்குறைய முழுவதும் சிதைந்திருந்தது. மிஸ்ட் போன்ற ஒரு புகை கியர் பாக்ஸிலிருந்து வெளியேறிக் கொண்டிருந்தது. கொஞ்ச நேரத்துக்கு முன்னர் வரை, நானும் சூரியாவும் உட்கார்ந்திருந்த அந்த கதவை, இப்பொழுது, தள்ளி திறக்க முயன்றோம். முடியவில்லை. கதவு மண்ணுக்கு அடியில் புதைந்திருக்கிறது. நிறைய பேர் கதவுக்கு அருகில் குழும, பஸ் மேலும் கவிழ்வது போன்ற பிரமை உண்டாகியது.(மன பிராந்தி!) என்ன செய்தாலும் கதவு திறக்கவில்லை. வெளியே எட்டிப்பார்த்தால், கருவேல முட் புதர் சரிவு.(எட்டிப்பாக்காத! ஏன் பாக்குற?) கதவில் ஏறி அந்தப்பக்கம் குதித்துவிடலாம் என்று நினைத்த போது, முட்கள் எங்களை கடுமையாக பயமுறுத்தின.

அதிகாலை என்பதால் அந்த இடத்தில் மக்கள் அதிகம் இல்லை. விபத்துக்கு காரணமான அந்த அரசுப் பேருந்திலும் அந்த அதிகாலையில் பெரிய மக்கள் கூட்டம் ஒன்றும் இருந்திருக்கவில்லை. அதனால் தான் உயிர் இழப்பு அதிகமாக இல்லை. ஆனால், கொஞ்ச தூரத்தில், தங்களது நிலங்களில் ஏதேதோ வேலைகள் செய்து கொண்டிருந்த சிலர், வித்தியாசமாக பார்க் செய்யப்பட்டிருக்கும் எங்கள் பஸ்ஸை நோக்கி, அதிவேகமாக ஓடி வர தொடங்கினர்.

எங்கள் பிரின்ஸியின் கண்ணாடி உடைந்திருந்தது. அந்த உடைந்த கண்ணாடியையும் போட்டுக்கொண்டு, என்ன செய்வதென்று தெரியாமல், இங்கு அங்கும் பேந்த பேந்த விழித்துக்கொண்டிருந்தார். எனக்கு பாவமாக இருந்தது. உடைந்த கன்ணாடியைப் போட்டுக்கொண்டு அவர் என்னதான் செய்வார்? நல்லவேளை, என் கண்ணாடி உடையவில்லை.(தப்பிச்சடி) நாங்கல்லாம் கருஞ்சிறுத்தைப்பு.

என் கண்ணாடி மட்டும் அன்று உடைந்து போயிருந்தால், நான் தைரியமாக கதவை தாண்டி, முட்புதர்களுக்குள் குதித்திருப்பேன். (கீழே என்ன கிடக்கிறது என்று தெரிந்தால் தானே பயம் வரும்!) சிலர் அந்தப்பக்கம் இருக்கும் ஜன்னல் கண்ணாடியின் வழி இறங்கிவிட முயற்சித்துக் கொண்டிருந்தனர். என் ப்ரண்ட் ஒருத்தன் ஜன்னல் கண்ணாடியின் வழியே தலையை விட்டு எப்படியாவது இறங்கிவிட வேண்டும் என்று முயற்சிசெய்து கொண்டிருந்தான். அது அவனுக்கே கொஞ்சம் ஓவர் தான். டிரைவரின் wind shieldஐயே உடைத்தால் கூட அவனுக்கு கொஞ்சம் டைட்டாகத்தான் இருக்கும், இதில இவரு ஜன்னல் கண்ணாடி வழியாக, அதுவும் push கண்ணாடி, பாதிதான் கேப் இருக்கும், இறங்கப்பார்த்தால், எங்களுக்கு சிரிப்பு வருமா வராதா? (திமிருடா)

அப்பொழுதுதான், மிகச்சத்தமாக ஹிஸ்டரி மேடத்தின் குரல் கேட்டது. ஹே பாய் கெட் டவுன் யூ இடியட் என்று கண்ணாடியின் வழியாக தலையை விட்டுக் கொண்டிருந்தவனைப் பார்த்து ஒரு சவுண்ட் கொடுத்தார்.ஹிஸ்டரி மேடத்தின் மண்டை உடைந்திருந்தது. அந்தப் பெரிய முகத்தை, கணிசமான அளவு, இரத்தம் மூடியிருந்தது. எனக்கு சட்டென்று, இவர் எப்படி வெளியே குதிக்கப் போகிறார் என்ற விபரீத எண்ணம் தோன்றியது. சான்சே இல்லை.

இதற்குள் என் நண்பர்கள் சிலர் பின் சீட்டு கண்ணாடிகளை உடைக்க முயன்றனர். நாங்கள் கதவைத் திறக்க முயன்றோம். மண்ணில் மாட்டிக்கொண்டிருந்த கதவு, நாங்கள் விட்ட ஒவ்வொரு உதைக்கும், பதில் சொல்லாது உம்மென்றிருந்தது, என் நண்பன் சூரியாவைப் போல. கதவும் எங்களைப் போல பயந்துகொண்டிருந்திருக்க வேண்டும்.

கொஞ்ச நேரத்திற்குள், அக்கம் பக்கம் ஆட்கள் கூடிவிட்டனர். அந்த அதி காலையில், ஆட்டுக்கும் மாட்டுக்கும் புல் அறுக்க சென்ற மக்கள், சத்தத்தைக்கேட்டு அடித்துப்பிடித்து ஓடி வந்து, கருவேல முட்களை முடிந்த அளவிற்கு அகற்றி, எங்களை இறக்கி விட்டனர். சிலருக்கு முட்கள் வெகுவாக குத்தத்தான் செய்தது.(முள்ளுன்னா குத்தத்தான் செய்யும், பின்ன கொஞ்சவா செய்யும்?) எங்கள் மேடம்களை கீழிறக்குவது தான் கொஞ்சம் கஷ்டமாக போய்விட்டது.

முதலில் இறங்கிய நாங்கள் பஸ்ஸின் அந்தப்பக்கம் போய், பெட்டிகளை ஜன்னல் வழியாக, உள்ளிருக்கும் நண்பர்கள் கொடுக்க, வாங்கி கீழே அடுக்கி வைத்தோம். கொஞ்ச நேரத்தில் அனைவரும் இறங்கிவிட, டிரைவர் மட்டும் இறங்கமுடியாமல் அப்படியே இருந்தார். பிறகு ஆம்புலனஸ் அழைக்கப்பட்டு, அவர்கள் வந்து டிரைவரை ஸ்ட்ரச்சரில் தூக்கிக் கொண்டு சென்றனர். டிரைவர் பலத்த காயங்களுடன் பிழைத்துவிட்டார் என்று பிற்பாடு அறிந்துகொண்டோம்.

காலையில் நடு ரோட்டில் நாங்கள் எங்கு போவது என்று தெரியாமல் நின்று கொண்டிருந்தோம். பசி வேறு. பிறகு எங்கள் பிரின்ஸியின் உறவினர் ஒருவரின் உதவியால், ஒரு அரசு பேருந்தை வாடகைக்கு அமர்த்தி நேரடியாக கண்ணியாகுமரி வந்தடைந்தோம். உறவினர், போலீஸ் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது. (நோ கமென்ட்ஸ்)

பாதி டூரில் வீட்டுக்கு திரும்பிச் சென்றால் பள்ளியின் பெயர் கெட்டுவிடும் என்கிற காரணத்தாலோ என்னவோ டூரை கேன்சல் செய்யவில்லை. (ஆமா பெரிய ஊட்டி கான்வென்ட்ல படிச்சாரு) எப்படி பிரின்ஸி, அந்த காட்டுக்குள் (அதாவது பெரிய நகரம் ஏன் சின்ன கிராமம் கூட, ஏதும் அருகில் கிடையாது) தனி ஒரு பெண்ணாக இருந்து நிலைமையை சமாளித்தார் என்பது இன்றளவும் எனக்கு ஆச்சரியம் தான். யார் யாரை எப்படி தொடர்பு கொண்டார்? அப்பொழுது நான் ஒன்பதாவது படித்துக்கொண்டிருந்தேன். 1994. (ம்ம்..பிடிஏ வெச்சு வயர்லெஸ் லான்ல பிலெகேட்சுக்கு மெயில் அனுப்பிச்சார்)

கண்ணியாகுமரி எங்கள் டூர் ப்ளானில் இருந்தது தான். ஆனால் நடந்த ஆக்ஸிடென்டால் அங்கு புக் செய்திருந்த ஹோட்டலுக்கு ஒரு நாள் முன்னரே சென்று விட்டோம். அந்த ஹோட்டல் ஹவுஸ்புல். பிறகு நான், சூரியா, தர்மர் அண்ணன் (எங்கள் ப்யூன்) ஒரு டீமாகவும், மணிகண்டன் மற்றும் வெகு சில +1 மாணவர்களும் மற்றொரு டீமாகவும் சென்று ஹோட்டல்களில் ரூம் தேடினோம். எந்த ஒரு ஹோட்டலிலும் அவ்வளவு ரூம்கள் காலியாக இருக்கவில்லை. பிறகு நாடார் மேன்சனில் ஒரு பெரிய ஹால் கிடைக்கவே, அதையே வாடகைக்கு எடுத்துக்கொண்டோம்.

எங்க ப்ளான் படி, அன்று குற்றாலத்தில் குளித்திருக்க வேண்டியது. ஆனால் நாடார் மேன்சனின் இத்துப்போன பக்கெட் தண்ணீரில் குளிக்க வேண்டியதாகிற்று. இப்படியாக எனது முதல் குற்றால டூர் சிதைந்து போனது. அன்று சிதைந்த என் குற்றால பயணம், இன்று வரை நிறைவேறவேயில்லை.

அதற்கப்புறம், கண்ணியாகுமரியில் சுற்றிவிட்டு, முக்கூடலில் குளித்து விட்டு, வேறு பிரைவேட் பஸ் பிடித்துக்கொண்டு, மார்த்தாண்டம் வழியாக திருவணந்தபுரம் வந்தடைந்தோம். வருஷம்16 படம் ஷ¥ட்டிங் செய்யப்பட்ட பத்மநாபபுரம் பேலஸ் (அவ்ளோ வரலாற்று சிறப்புமிக்க அரண்மனைக்கு ஒரு திரைப்படத்தை வைத்து அடையாளம் சொல்வதா என்றால் என்ன சொல்வது? திருவிதாங்கூர் அரண்மனை என்று சொன்னால் நிறைய பேருக்கு ஏதும் தெரிந்திருக்காது என்பது உண்மை. ஆனால், வருஷம்16 அரண்மனை என்று சொல்வதால், ஓ அந்த அரண்மனையா என்று கேட்க வாய்ப்பிருக்கிறது இல்லியா?) வழியில் பார்த்தோம்.

எனக்கு இன்னும் அந்த பிரமிப்பு அப்படியே இருக்கிறது எனலாம். பிரமிப்பு இல்லை, கொஞ்சம் பயம் தான். ஏனென்றால் எங்களுடன் வந்த ஒரு guide உள்ளே தனியாக போய் மாட்டிக்கொண்டால் வெளியேறுவது கஷ்டம் என்று பயமுறுத்திவிட்டார். அரண்மனையும் அப்படித்தான் இருந்தது. ஹாவென்று. எனக்கு இன்னும் பளீரென்று ஞாபகம் இருப்பது, ராணியவர்கள் சபையைப் பார்க்க, உட்காரும் இடம். அந்த இடம் சுத்தமாக மறைக்கப்பட்டு இருக்கும். உள்ளே உட்கார்ந்திருக்கும் ராணி (அல்லது ராணிகள்!) சபையைப் பார்ப்பதற்கு சிறு சிறு துளைகள் மட்டுமே போடப்பட்டிருக்கும்.(எப்படி பாத்தீங்களா?)

ராணிய யாரும் சைட் அடிக்க முடியாது, ஆனா அவர் யாரை வேணும்னாலும் சைட் அடிக்கலாம், யாருக்கும் தெரியாமலே. நிறைய அறைகள் இருக்கின்றன, பூட்டப்பட்டு.

ராஜாக்களின் கம்பீரமும் அவர்களின் ரகசிய புலம்பல்களும் அந்த அறைகளுக்குள்ளேயே அடைந்துகிடக்கின்றன. அரண்மனை தோறும் ஒரு ஈர வாடை அடித்துக்கொண்டேயிருந்தது.


பிகு: பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன

3 thoughts on “இன்சிடென்ட்ஸ்-9

  1. Anon1 (surya) : Yes. I know that da. I just wanted to avoid it. I have to say that: names are changed. :)Anon2 (Anu) : Girl Friend?! not like that.. you can have like this: a friend whos a girl 🙂 anyway, you know her!

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s